தற்சமயம் நண்பர் இரா. முருகனால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை படித்து கொண்டிருக்கிறேன். ஆனால் இப்பதிவு அப்புத்தகத்தின் மதிப்புரை அல்ல. அது பற்றி பிறகு எழுதுவேன். அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பத்தி, அது கிளறி விட்ட எனது நினைவுகள் ஆகியவைதான் இப்பதிவு. அப்பத்தியைப் பார்ப்போமா?
"என்னளவிலே சாகித்யம்னா கவிதை... சங்கீதம்னா இசை... அம்புட்டுத்தான்... முத்துசாமி தீட்சிதர் கிருதி எல்லாம் அவசரத்துக்கு பிடிச்ச கொழுக்கட்டை.ஏதாவது ஊருக்குப் போக வேண்டியது. அங்கே நிச்சயம் கோவில் இருக்கும். உடனே பாடு. இந்த ஊர்... இந்த திசையில் இருக்கு... அம்பாள் பெயர் அது. இத்தனை கை... இந்தக் கையிலே இந்த ஆயுதம். இந்தப் பூ... இந்த நிற உடுப்பு... இந்த ராட்சஸனை வதம் பண்ணினாள். இவளைப் பூஜித்தால் இந்த தோஷம் போகும். இப்படி அடுக்கி குருகுஹான்னு சாப்பா வச்சு முடிச்சுட்டு அடுத்த ஊருக்கு கிளம்பிடுவார்."
அதாவது அவரது கிருதிகளின் ஒரு மேக்ரோ கண்ணோட்டம்தான் அது. என்ன, ஒரே ஒரு விஷயம் விட்டு விட்டார். எல்லா கிருதிகளுக்கும் அவரே ராகம் போட்டிருப்பார், அந்த ராகத்தின் பெயரும் கிருதியில் வந்து விடும். அப்படித்தான் "மாயே" என ஆரம்பிக்கும் கிருதி தரங்கிணி ராகம் என தெரிந்து கொள்ளலாம். மற்றப்படி இதை விட சுருக்கமாக யாரும் எழுத இயலாது. இதைப் போலவே ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களுக்கும் இம்முறையிலேயே பாட்டு போட்டிருப்பார்களோ? உதாரணத்துக்கு திருமங்கை ஆழ்வார் திருவல்லிக்கேணி வந்த சமயம் கோவில் தல புராணத்தை அறிந்து பாடல்கள் இயற்றியிருப்பார் என கொள்ளலாமோ?
மேலே சொன்ன பத்தியை எனது மைத்துனியிடம் படித்து காட்டியபோது, சென்னை தொலைக்காட்சியில் தயாரிப்பளராக பணி புரியும் அவர் தீட்சிதர் பற்றி மேலும் கூறினார். அவர் சென்னையில்தான் வாசம் செய்தாராம், பத்தொன்பதாம் நூற்றாண்டில். வெள்ளையர்களுடன் ஏற்பட்ட பழக்கம் ஆங்கில இசையின் தாக்கமும் அவருக்கு ஏற்பட்டதாம். அவர் போட்ட இங்கிலீஷ் நோட்ஸ்களைத்தான் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் வாசிக்க, வெள்ளையர்கள் நடனம் ஆடுவதாக காட்சி அப்படத்தில் அமைத்திருப்பார்கள். கூர்ந்து கவனித்தால் சி.ஐ.டி. சகுந்தலா குரூப் டான்சர்களில் ஒருவராக வந்திருப்பதை பார்க்கலாம். அப்பாடல் கீழே.
சரி, அதை இப்போதைக்கு விடுங்கள். முத்துசாமி தீட்சிதர் பற்றியும் இப்பதிவு இல்லை. "பின்னே எதை பற்றி எழுத நினைத்துள்ளாய் என்பதை சொல்லித் தொலை" என சலிப்புடன் கூறுவது முரளி மனோஹர். சொல்லாமலா போகிறேன், சொல்வேன்.
அதாவது சிச்சுவேஷனுக்கு தகுந்து பாடல்கள் இயற்றுவது என்பதுதான். இயக்குனர் பாடலாசிரியருக்கு சிச்சுவேஷனைக் கூற கவிஞரும் விறுவிறுவென வரிகளை எழுதித் தர, இது சரியில்லை எனக்கூற உடனேயே வேறு சில வரிகளை எழுதித் தர என தமாஷாக பொழுது போகும். சில சமயங்களில் வரிகள் ரொம்ப யதார்த்தமாக தாங்களே வந்து புகும். உதாரணத்துக்கு சமீபத்தில் 1970-ல் வந்த ஆன் மிலோ சஜ்னா என்னும் படத்தில், மியூசிக் டைரக்டர் கவிஞரிடம் “ஓக்கே, இப்போது செல்கிறேன்” எனக் கூற, அவர் பதிலுக்கு “பிறகு எப்போது சந்திக்கலாம்” என யதார்த்தமாகக் கேட்க அதற்கு பின்னால் வந்த வார்த்தை பரிமாற்றங்களே அந்த சிச்சுவேஷனுக்கு பாடலாக வந்தது என்பதை அக்கால ரேடியோ பேட்டி ஒன்றில் கேட்டிருக்கிறேன். அதுதான் அச்சா தோ ஹம் சல்தே ஹைன் என்னும் பாடல். ராஜேஷ் கன்னாவும் ஆஷா பரேக்கும் விடை கூறி பிரியும் காட்சியில் சேர்த்தார்கள். அப்பாடலில் வந்த வரிகள் தானாகவே வந்து விழுந்தனவாம். அப்பாடலையும் கீழே பார்த்து விடுங்களேன்.
அதே சமயம் சில பாடல் சிச்சுவேஷன்கள் பலமடங்குக்கு வேலை வாங்கும். ஜெமினி கதை இலாக்காவில் வாசனுக்கு வலதுகையாக செயல்பட்டவர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள். தில்லானா மோகனாம்பாள் கதையை அவர்தான் விகடனில் தொடர் கதையாக எழுதியவர். அவரைப் பற்றி அசோக மித்திரன் அவர்கள் ஒரு இடத்தில் இப்படி வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
வாசன் ஒரு சிச்சுவேஷனை விவரிக்கிறார். அதாகப்பட்டது ஒரு எலி ஒன்று புலியை கொன்று விட்டதாம். ஆகவே புலிக்குட்டிகள் அனாதைகளாகப் போக அந்த எலியே அவற்றை எடுத்து வளர்த்ததாம். இந்த சிச்சுவேஷனை கூறி, அந்த எலி அப்புலிக் குட்டிகளை எவ்வாறு தாலாட்டு பாடி தூங்க வைக்கும் என கேட்க, கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் நான்கு வெர்ஷன்களில் பாடல் தருவாராம்.
நிஜமாகவே சினிமாவுக்கு பாட்டு எழுதறதுங்கிறது கஷ்டம்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
7 hours ago