6/11/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 89, 90 & 91

பகுதி - 89 (08.09.2009): (முதல் விளம்பர இடைவேளைக்கு பிறகுதான் டேப் ஆரம்பிக்கிறது)
திருமணப் பதிவர் அலுவலகத்தில் உமா ரமேஷ் திருமணம் பதிவு செய்யப்பட இருக்கிறது. இருவரது பெற்றோர்களும் ஆஜர். கூடவே வந்திருப்பது நாதன் வசுமதி குடும்பத்தினர். உமா தனது சார்பாக சாட்சிக் கையெழுத்து போட அசோக்கை கேட்டுக் கொண்டுள்ளதால் அவனும் வந்திருக்கிறான். உமா, ரமேஷ் மாலை மாற்றிக் கொள்ள, ரிஜிஸ்தரிலும் கையெழுத்து போடுகின்றனர். சாட்சிக் கையெழுத்துக்கு அசோக்க்கை அழைக்க, அவன் முகத்தில் சில குழப்ப ரேகைகள் ஓடுகின்றன. “இல்லை, என்னால் கையெழுத்திட இயலாது” எனக்கூறிவிட்டு, அவன் வெளியே சென்று விடுகிறான். உமாவுக்கு ஒரே திகைப்பு. மற்றவர்களும் செய்வதறியாது விழிக்கின்றனர்.

சுதாரித்து கொண்டு நாதன் அந்த சாட்சிக் கையெழுத்தைப் போடுகிறார். திருமணமும் நடந்தேறுகிறது. வெளியே வந்து நாதனும் வசுமதியும் அவனைச் சாடுகின்றனர். அவன் இல்லாமலேயே திருமணம் நடந்து முடிந்ததாகவும் அவர் கூறுகிறார். “விளையாட்டு முடிந்ததா, அல்லது இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறதா எனத் தெரியவில்லை” என அசோக் சொல்கிறான்.

டாக்டர் கைலாசமும், சாரியாரும் தங்களால் முடிந்தவரை நடேச முதலியாரிடம் பெருமாள் சோபனாவின் கல்யாணம் பற்றி பேசி அவரை சம்மதிக்க வைக்க முயலுகின்றனர். எல்லாமே வியர்த்தமாகப் போகிறது. ராமானுஜர் பற்றி சாரியார் பேசி அவருக்கும் ஒரு ஹரிஜனப் பெண்ணுக்கும் இடையில் நடந்த விவாதம் பற்றிக் கூறுகிறார். “இதே மாதிரி சங்கரரது வாழ்விலும் நடந்ததல்லவா” என சோவின் நண்பர் கேட்கிறார். அதை ஆமோதித்த சோ அவர்கள் மேலும் பேசுகிறார். அவரது சீடன் உறங்காவில்லி தாசன் என்பவன் தாழ்ந்த சாதி என அழைக்கப்படும் பிரிவைச் சார்ந்தவன். அவனது மனைவியும் ராமானுஜரின் சிஷ்யைதான். உறங்காவில்லி மேல் ராமானுஜருக்கு அதிக பிரியம் உண்டு. அதைப் பார்த்த ஏனைய சிஷ்யர்களுக்கு அவன் மேல் பொறாமை. அதை தனது சாதுர்யமான நடவடிக்கையால் ராமானுஜர் தவிடு பொடியாக்குகிறார் என்பதையும் சோ கூறுகிறார். சங்கரர் ஜாதியில்லை எனக் கூறுவது, ஞானிகளுக்கு மட்டுமே என்றும், ஆனால் ராமானுஜரோ எல்லோருக்குமே இதைப் பொதுவாக வைக்கிறார் என்றும் சோ கூறுகிறார்.

ராமானுஜர் பற்றி பேசியதையும் நடேச முதலியார் ஒத்துக் கொள்ள மறுக்கிறார். ஜாதி இல்லையென்றால் அவை எப்படி முதலில் எழும்பின என அவர் கேட்க, டாக்டர் கைலாசம் எளிமையான உதாரணங்களால் அதை விளக்குகிறார். அதையும் ஒத்துக் கொள்ளாத நடேச முதலியார் அவரவர் தர்மத்தில் இருப்பதே நல்லது என்பதையும் புராணங்கள் கூறுவதை எடுத்துரைக்கிறார். நான்கு வர்ணங்களையும் தானே உருவாக்கியதாக கண்ணனே கீதையில் சொன்னதை சாரியார் எடுத்துரைக்கிறார்.

அப்படியா என சோவின் நண்பர் கேட்க, வர்ணம் வேறு ஜாதி வேறு என சோ விளக்குகிறார். தான் செயல்படும் தன்மையை வைத்தே வர்ணம் நிச்சயிக்கப் படுகிறது எனவும் அவர் கூறுகிறார். பிறப்பால் ஒருவர் பிராம்மணனாக ஆக மாட்டான் என்பதை யட்சப் பிரஸ்னம் நிகழ்ச்சி, நகுஷனின் சாப விமோசன நிகழ்ச்சி ஆகிய மகாபாரத உதாரணங்களால் விளக்குகிறார்.

சாரியார் தனது நிலையில் இருந்தால், தனது மகனுக்கு வேறு ஜாதியில் சம்பந்தம் வைத்து கொள்வாரா என நடேச முதலியார் கேட்க, சாரியாரின் மகன் என்றால் தன் பெண்ணைத் தர நடேச முதலியார் ஒத்து கொள்வாரா என டாக்டர் கைலாசம் கேட்கிறார். அதையும் செய்ய மாட்டேன் என மூர்த்தண்யமாக மறுக்கிறார். பிராமண சம்பந்தமும் தனக்கு தேவையில்லை எனவும் கூறிவிடுகிறார்.

பிறகு இன்னொரு ஆயுதத்தை எடுக்கிறார் டாக்டர். நடேச முதலியாருக்கு உதவிய மருந்தை உருவாக்கியது ஒரு ஹரிஜன், அவரது மகள் சோபனாவுக்கு விபத்தில் அடிப்பட்டு ரத்தம் தேவைப்பட்டபோது ஒரு ஹரிஜனின் ரத்தம்தான் அவள் உயிரைக் காப்பாற்றியது என்பதையும் டாக்டர் கூறுகிறார். “அடேடே அதனால்தான் இப்பெண் ஹரிஜனை விரும்பினாளா” என புலம்ப ஆரம்பிக்கிறார் நடேச முதலியார். இருந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன் எனவும் அவர் கூறுகிறார்.

பதிவு - 90 (09.06.2009)
ரமேஷ் வீட்டில் எல்லோரும் இருக்கின்றனர். உள்ளே ரமேஷ் மூட்டை கட்டிக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவனுடன் பேச உள்ளே உமா செல்கிறாள். பல விஷயங்களைப் பற்றி பேசியதும் ரமேஷ் அசோக் பற்றிய பேச்சை எடுத்து, அவனை தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறுகிறான். அவனை உமா இனிமேல் பார்க்கக் கூடாது, அவனுடன் பேசவும் கூடாது எனவும் கூறுகிறான். ஏன்ம் என உமா கேட்க, “எனக்கு அவனை பிடிக்கவில்லை. யூஸ்லெஸ் ஃபெல்லோ, a jerk என கடுமையாகவே கூறுகிறான். சரி என அவள் ஒத்துக் கொள்ள, அவள் அப்படியே பேசினாலும் அவனுக்கு தெரிய வந்து விடும் எனவும் தனக்கு இங்கே பல இன்ஃபார்மர்ஸ்கள் உண்டு எனவும் கூற்கிறான். திடுக்கிடும் உமா “You are a doubting Thomas" என உமா கூறுகிறாள்.

இம்மாதிரி doubting Thomas எனக் கூறுவதை கேட்டுள்ளதாகவும், யார் அது என சோவின் நண்பர் கேட்க, அது ஏசுபிரானின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் எனக்கூறிய சோ, சிலுவையில் அறையப்பட்ட தேவ குமாரன் மூன்றாம் நாள் உயிர்த்தெழ, அவர்தான் அது என நம்பாத தோமா என்னும் தாமஸ் ஏசுபிரானின் உடலில் இருந்த காயங்களைத் தொட்டுப் பார்த்ததாகவும் ஆகவே அவர் doubting Thomas என அழைக்கப்பட்டதையும் கூறுகிறார்.

யார் அந்த doubting Thomas என ரமேஷ் கேட்க, “You" என்கிறாள் உமா. கடகடவென சிரிக்கும் ரமேஷ், தன் அப்பா அம்மாவை அழைத்து தான் அவர்களிடம் சொன்னது போலவே உமாவை மிரட்டியதாகக் கூற, எல்லோரும் சிரிக்கின்றனர். பிறகு அவன் உமாவிடம் ஒன்றையும் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், அவள் அசோக்கை பார்ப்பதையோ, அவனுடன் பேசுவதையோ தான் ஆட்சேபிக்கவில்லை எனவும் கூறி வெளிநாடு கிளம்புகிறான்.

சோபனா தனது பைக்கில் ஏறிக் கிளம்புகிறாள். அவளையே பார்த்த வண்ணம் நிற்கும் சாரியாரின் மகன் பாச்சா எனப்படும் பார்த்தசாரதியை கண்டு புன்னகை செய்த வண்ணம் செல்கிறாள். அங்கு அப்பக்கமாக வரும் பார்வதியின் காதலனான வட இந்திய சேட்டுப் பியன்,. சோபனா பெருமாளை காதலிப்பதைக் கூறுகிறான். அதனாலெல்லாம் அசராத பாச்சா தான் சோபனாவை காதலிப்பதை அழுத்தந்திருத்தமாக கூறுகிறான்.

உமாவின் பதிவுத் திருமணத்துக்காக ஒரு சிறு பார்ட்டி நீலகண்டன் தருகிறார். வைதீக திருமணம் முடிந்ததும் இன்னமும் பெரிய பார்ட்டியாகவே தருவதாக நீலகண்டன் கூறுகிறார்.

டாக்டரும் பார்வதியும் சோபனா திருமண விஷயமாக நடேச முதலியார் இன்னும் பிடிவாதம் பிடிப்பது பற்றி பேசுகின்றனர். தனது தங்கைக்கு ஹரிஜன் ஒருவனின் ரத்தம் ஏற்றப்பட்டதாக நடேச முதலியார் சஞ்சலம் அடைய, அதைக் காணப் பொறுக்காத பார்வதி அவரிடம் டாக்டர் சொன்னது பொய்யென கூறிவிட்டதாக பார்வதி சொல்ல, டாக்டர் அலுத்து கொள்கிறார். ஆனால் சாரியார் அப்படியெல்லாம் குழம்பக் கூடியவர் அல்ல என பார்வதி கூறுகிறாள்.

அசோக் உமாவிடம் ரமேஷ் பற்றி விசாரிக்கிறான். அவள் திருமணத்துக்கு இருவரின் ஜாதகமும் பார்க்கப்பட்டதா என அவன் கேட்க, உமா அப்படியெல்லாம் இல்லை என மறுக்கிறாள். அசோக்கின் முகம் தீவிரமாகிறது. அதைப் பார்த்த உமா அதனால் தனது மணவாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினை வருமா என கேட்க, அப்படியெல்லாம் இல்லை என அசோக் கூறுகிறான்.

ஜோசியம் பார்ப்பது பற்றி சோவும் அவர் நண்பரும் விவாதிக்கின்றனர். இது சம்பந்தமாக இரு தரப்பிலும் கருத்துகள் ஆழமாக உள்ளன என சோ கூறுகிறார். திருமலாச்சாரியார் என்பவர் தந்து கலிவிடம்பனம் என்னும் நூலில் வேடிக்கையாக ஜோஸ்யர்களுக்கு கூறிய அறிவுரைகள் சிலவற்றைக் கூறுகிறார். உதாரணத்துக்கு ஒரு தம்பதியினர் குழந்தையை எதிர்நோக்கி இருக்கும் நேரத்தில் கணவனிடம் பிள்ளை குழந்தைதான் பிறக்குமெனவும், மனைவியிடத்தில் பெண் குழந்தைதான் பிறக்கும் எனக் கூற வேண்டும். ஏனெனில் ஏதேனும் ஒன்று நிச்சயம் பலிக்கும். அதே போல யார் வந்து தன்னிடம் தனது ஆயுள் பற்றி கேட்டால் அவர் தீர்க்க ஆயுளுடன் இருப்பார் எனக் கூற வேண்டும். அப்படியே அது பலித்தால் ஜோசியனுக்கு நல்ல பேர், பலிக்கவில்லையெனினும் இறந்தவன் வந்து கேட்கவா போகிறான்?

பிறகு ஏன் அசோக் தனது திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்து போட கடைசி நிமிடத்தில் மறுத்தான் எனக் கேட்க, அதற்கு அவன் “எனது இன்னர் கைடன்ஸ் அவ்வாறு கூறியது. Or maybe I am a jerk" என கூறிட, அதே ஜெர்க் என்ற வார்த்தையை ரமேஷ் அசோக்கை குறிக்க பயன்படுத்தியதை நினைவு கூறும் உமா திகைப்படைகிறாள்.

பார்வதி சாரியாரின் தெளிவான மனநிலை பற்றிக் கூறியதை கேட்ட டாக்டர் கைலாசம் அவரையும் தான் சோதிக்கப் போவதாகக் கூறுகிறார். அவளிடம் முன்னாலேயே பேசி வைத்து கொண்டு சாரியார் அவரைப் பார்க்க வரும் நேரம் பார்த்து அவளிடம் 25 ஆண்டுகளுக்கு முன்னால் அவரது கிளினிக்கில் ஒரே நாளில் பிறந்த சாரியார் மற்றும் வையாபுரியின் குழந்தைகள் இடம் மாறியதாக கூறுகிறார். சாரியார் அதைக் கேட்டு திடுக்கிடுகிறார்.

அவர் கேட்டுக் கொண்டிருப்பதை முழுதும் உணர்ந்த நிலையில் சாரியார் மற்றவர்களை போல இதற்கெல்லாம் தன்னுடன் சண்டை போட மாட்டார் எனவும் கூறுகிறார் டாக்டர். இப்போது கூட அவர் வந்து தான் வெளிநாடு செல்வதை பாராட்டி வாழ்த்தி மயிலை கேசவ பெருமாள் கோவில் பிரசாதத்தை தந்து விட்டு செல்வார் என்றும் கூறுகிறார்.

“சாரியாருக்கு கேசவப் பெருமாள் கோவில் பிடிக்குமா”? எனக் கேட்கிறார் சோவின் நண்பர்.

பகுதி - 91 (10.06.2009)
சாரியாருக்கு மட்டுமில்லை, ஒவ்வொருவருக்கும் அவரவரது இஷ்டக் கோவில்கள் உண்டு என சோ அவர்கள் கூறிவிடுகிறார். பிறகு கேசவப் பெருமாள் கோவிலின் பெருமைகளைக் கூறுகிறார். அதன் தலப்புராணம், வைணவத்துக்கு பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரது பங்களிப்பு, கடவுளை கண்டு அவர்கள் பாடுவது எல்லாவற்றையும் விளக்குகிறார்.

சாரியார் வெளியில் நிற்பதை தெரிந்து கொண்டே டாக்டர் அவரை புகழ்ந்து பேசி, தான் கூறியதையெல்லாம் கேட்டது போல பாவிக்காமல் இருப்பார் என கூறுகிறார். அதே போல சாரியாரும் அவரிடம் வந்து, பொதுப்படையாக பேசி விட்டு செல்கிறார்.

தன் வீட்டுக்கு திரும்பி வந்த சாரியார் தான் இத்தனை ஆண்டுகள் அன்புடன் வளர்த்த பாச்சா வையாபுரியின் குழந்தை, தனது சொந்த மகன் வையாபுரியின் வீட்டில் பெருமாளாக வளர்ந்திருக்கிறான் என்பதை தான் எப்படி எதிர்க்கொள்ளப் போகிறார் என்பதை எண்ணி கலங்குகிறார். பிறகு சமாளிக்கத்தான் வேண்டும் என திரும்பத் திருமப தனக்குள்ளேயே கூறிக் கொள்கிறார்.
அசோக் நாதனை அணுகி சாம்பு சாஸ்திரிகள் ஆரம்பிக்க எண்ணியிருக்கும் வேதபாடசாலைக்கு அவர் உதவ வேண்டும் எனக் கேட்க நாதன் ஒரேயடியாக மறுத்து விடுகிறார். ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் என பாரதியார் பாடியதை எடுத்து காட்டுகிறான் அசோக்.

இது பற்றி சோவின் நண்பர் அவரைக் கேட்க, அவர் பாரதியார் இதற்கு மேலும் கூறியுள்ளார் என குறிப்பிடுகிறார். “இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவ பெயர்விளங்கி யொளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்” என்றும் கூறியுள்ளார் பாரதியார் என்கிறார் சோ.

இவ்வளவு நல்ல காரியத்தை செய்ய நாதன் ஏன் தனது செல்வத்தைப் பயன்படுத்தலாகாது என அசோக் கேட்க அவர் கோபப்படுகிறார். வசுமதியும் தன் பங்குக்கு அசோக்கை சாடுகிறாள். தெரிஞ்சும் தெரியாமலும் நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக ஏதேனும் செய்யலாமே என அசோக் கூறுகிறான்.

“அதென்ன தெரியாமல் செய்யும் பாவம்”? என சோவின் நண்பர் கேட்க, நாம் மூச்சு விடும்போதே பல சிறிய ஜீவராசிகள் இறக்கின்றன. தெருவில் போகும்பூது பூச்சிகள் புழுக்கள் ஆகியவற்றை மிதிக்கிறோம். அதெல்லாம்தான் தெரியாமல் செய்யும் பாவங்கள் என கூறுகிறார். அவற்றுக்கு பரிகாரம் செய்வது பூத யக்யம் என்னும் பெயரால் அறியப்படுகிறது எனவும் கூறுகிறார். அதே சமயம் தான் தவறு செய்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாது செய்யும் சில காரியங்கள் பல பாவங்களுக்கு இடமளிக்கின்றன என்றும் சோ கூறுகிறார்.

தான் அம்மாதிரி ஒரு பாவமும் செய்யவில்லை எனவும், ஆகவே தனக்கு இம்மாதிரி பரிகாரம் எல்லாம் செய்யத் தேவையில்லை என நாதன் கூறிவிட, அசோக் ஒன்றும் பேசாமல் நகர்கிறான். அப்பக்கமாக சாம்பு சாஸ்திரிகள் வேறு நாதன் வசுமதியிடம் டோஸ் வாங்குகிறார். அசோக் ஏற்கனவே மூளை குழம்பிய நிலையில் இருப்பதாகவும், அவர் வேறு வந்து அவனை மேலும் குழப்பக் கூடாது என அவரிடம் ஸ்ட்ரிக்டாக நாதன் கூறிவிடுகிறார்.

நடேச முதலியார் வீட்டுக்கு அவரது தம்பி சிகாமணியின் மருமகள் ஜயந்தி வருகிறாள். அவரது மனைவி அவளை உற்சாகமாக வரவேர்றாலும், நடேச முதலியார் அவளை கோபமாக பேசி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். போகிற போக்கில் ஜயந்தி சோபனாவை பார்த்து புன்னகை செய்கிறாள்.

உமா தன் மாமியாரை பார்க்க வருகிறாள். அவளை அன்புடன் வரவேற்ற அவளது மாமியார் தன்னுடன் வந்து ஏன் இருக்கலாகாது என கேகிறாள். பிறகு தனது பிள்ளையின் சாப்பாட்டு ருசி பற்றி பேசுகிறாள். நிஜமான கல்யாணத்துக்குள் அவள் சமையல் செய்ய கற்றுக் கொள்வது நல்லது எனக் கூறுகிறாள். மாடியில் ரமேஷின் அறைக்கு செல்லும் உமா அங்கு தற்செயலாக ரமேஷின் ஜாதகத்தை பார்க்கிறாள். அதன் கணிப்பை படித்து விட்டு அவள் திடுக்கிடுகிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

ரவிஷா said...

ஒரு கேள்வி: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மஹாத்மா கையில் எடுத்த அஹிம்சை முறையை நீங்கள் ஒத்துக்கொள்வதாக இல்லை என்று தெரிகிறது! அப்படியானால் எல்.டி.டி.ஈ.யின் நிலைப்பாடைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

dondu(#11168674346665545885) said...

@ரவிஷா
என்னைப் பற்றி எனக்கே தெரியாத செய்தியை எங்கிருந்து பெற்றீர்கள்?

விடுதலைப் புலிகள் செய்ததை எக்காலத்திலும் ஒத்து கொள்ள இயலாது. அவர்களது நோக்கம் தமிழ் ஈழம் அல்ல, தங்களது அதிகாரத்தின் கீழ் கட்டற்ற ஆட்சியே. அதற்காக அவர்கள் பொதுமக்களையே பலி கொடுக்க துணிந்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அடுத்த வார கேள்வி பதில் பதிவுக்கு

1.தலைவர் கலைஞரின் காலத்திற்கு பின்னால் திமுக இரண்டு அல்லது மூன்றாய் உடையுமா?
2.அழகிரி/தயாநிதி/ஸ்டாலின்/கனிமொழி யார் கை ஓங்கும்?
3.ராகுலின் சாணக்கியம் தமிழ்நாட்டில் செல்லுமா?
4. ஜெ க்கு எதிர்காலம்?
5.பெரியவர் சிவகெங்கை சிதம்பரத்தின் நூலிழை வெற்றி பற்றி?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது