போன டோண்டு பதில்கள் பதிவில் ராம்ஜி யாஹூ கேட்ட கேள்வியையும் அதற்கான எனது பதிலையும் முதலில் பாருங்கள். பிறகு இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன்.
ராம்ஜி_யாஹூ
கேள்வி-11. டோண்டு அவர்களால் இணையத்தில், பதிவுகளில் நேர ஒழுங்கை கடைபிடிக்க முடிகிறதா அல்லது இணைய அடிமையா? உதாரணத்துக்கு, இன்று ஒரு மணி நேரம் மட்டுமே இணையம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கினால், ஒரு மணி நேரம் முடிந்ததும் கணினியை அணைத்து விடும் பழக்கம்/சுய கட்டுப்பாடு இருக்கிறதா?
பதில்: ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கு குறையாமல் கணினியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. கணினி திறந்தால் இணையத்தைத் திறப்பது டீஃபால்ட்டான செயல். எனது வேலை அப்படிப்பட்டது. ஆன்லைன் அகராதிகள் திறந்து வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
கூடவே கூகள் டாக். வேலை செய்து க்ண்டிருக்கும்போது வரும் மின்னஞ்சல்கள் பற்றிய அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே அவ்வப்போது அவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே கணினியும் இணையமும் மாறிவிட்ட நிலையில் நீங்கள் சொல்வது போல கணினியை அணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
என்ன, மொழிபெயர்ப்பு வேலைகள் வேணமட்டும் இருக்கும் நிலையில் தமிழ்மணம், வலைப்பூக்கள் ஆகியவற்றை பாவிப்பது தன்னாலேயே கட்டுப்படுகிறது. அவ்வளவே.
உண்மை கூறப்போனால் இடமின்மை மற்றும் நேரமின்மை காரணமாக நான் பதிலை மிகவும் சுருக்கியிருந்தேன். அக்கேள்வி ஒரு தனிப்பதிவாக கையாளப்பட வேண்டியது, அதைத்தான் நான் இப்போது செய்கிறேன்.
என்னைப் பொருத்தவரை ஒரு விஷயம் கூறுவேன். எதிர்ப்புகள் வரவர எனது வைராக்கியம் அதிகரிக்கும். அதிலும் நான் சரி என நினைத்திருப்பதையே கேள்விக்கு உட்படுத்தி என்னை அவநம்பிக்கை கொள்ளச் செய்ய முயல்பவர்களை நான் ஒரு போதும் லட்சியம் செய்ததில்லை. உதாரணத்துக்கு, வகுப்பில் ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கக்கூட பலர் அஞ்சுவர். எங்காவது ஆசிரியர் நமது அறியாமையை கேலி செய்வாரோ, சக மாணவர்கள் சிரிப்பார்களோ என்றெல்லாம் அச்சம் வெளியாகி பலரை வாய்மூடி மௌனியாக்கி விடுகிறது.
ஆனால் நான் அப்படியில்லை. சந்தேகம் என வந்து விட்டால் கேட்காமல் விடுவதில்லை. ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் ஆசிரியர்களிடமும் சிலரிடம் சந்தேகத்தை பிடிக்காத குணம் உள்ளதுதான். நான் சமீபத்தில் அறுபதுகளில் பொறியியற் கல்லூரியில் படிக்கும் தருணம் எங்களது இயற்பியல் ஆசிரியர் போண்டா (திரு. சுவாமிநாதன்) அவர்கள் அருவி மாதிரி லெக்சர் தரும்போது நான் நடுவே பொசுக்கென எழுந்து ராபணா என ஒரு சந்தேகம் கேட்டு வைப்பேன். துரதிர்ஷ்டவசமாக அவருக்கே முக்கால்வாசி நேரம் அதே சந்தேகம் இருந்து தொலைத்திருக்கும். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என நம்பி வந்த அவரை நான் கழுத்தை அறுப்பது போல கேள்வி கேட்க அவருக்கு என்னைப் பிடிக்காமல் போயிற்று.
அக்கல கட்டத்திலும் எனது சக மாணவர்கள் என்னை சந்தேகம் கேட்பதைத் தவிர்க்குமாறு பல முறை ஆலோசனை கூறியுள்ளனர். அதையெல்லாமா நான் கேட்பேன்?
சரி, அதெல்லாம் முடிந்து போன கதை. இப்போது வலைப்பூக்களில் மட்டும் என்ன வாழ்கிறதாம். போலிப் பிரச்சினையின் போது அவனை வெளிப்படையாக எதிர்க்காமல் இருக்குமாறு பலர் நல்லெண்ணத்தினாலே கூட கூறியுள்ளனர். [இதில் போலியின் நாடறிந்த அல்லக்கைகளை நான் சேர்க்கவில்லை]. இருப்பினும் அவன் என்னை இணையத்திலிருந்து துரத்தும் முயற்சி செய்தான் என்பதற்காகவே அவனை எதிர்த்து போராடினேன். வெற்றியும் கிடைத்தது. ஆனால் அது பற்றி வேண மட்டும் எழுதி விட்டதால் அது பற்றி மேலே இங்கு பேச்சு இல்லை.
இருப்பினும் எந்தப் பழக்கமானாலும் அதற்கு இரையாகாமல் இருப்பது முக்கியமே. ஆகவே எனது வலைப்பூ நடவடிக்கைகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் உள்ளேன். முதலில் செய்த காரியம் அனானி பின்னூட்டங்களை மறுக்கும் செட்டிங்ஸை செய்ததுதான். அடுத்தபடியாக எனது ஹிட் கவுண்டரை தாட்சணியம் இன்றி நீக்கினேன். அது இருந்ததால் தேவையின்றி ஹிட்களின் என்ணிக்கையை மெயின்டெயின் செய்வதற்காக பல பதிவுகள் போட வேண்டியிருந்தது, அப்போதுதானே பதிவர்கள் பார்வையில் இருக்கலாம், ஹிட்களும் ஏறும்.
திடீரென ஒரு ஞானோதயம், அவ்வாறு வரும் ஹிட்களை வைத்துக் கொண்டு நாக்கைக் கூட வழிக்க முடியாது என்று. ஆகவே அதைத் தூக்குவதில் ரொம்பத் தயக்கமெல்லாம் இல்லை. தமிழ்மண விருத்துக்குக் கூட 3 பதிவுகளை சப்மிட் செய்திருந்தேன். ஆனால் அவற்றை கேன்வாஸ் செய்து ஒரு சிறு கோடிகூட எங்குமே காட்டவில்லை. இருந்தும் மூன்றுமே முதற் சுற்றைத் தாண்டின. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த மூன்று பதிவுகளில் ஒன்றான பள்ளிகளில் தர்ம ஹிந்தி பற்றி நானே மறந்து விட்டதால் எனது ஓட்டைக் கூட அதற்கு போடவில்லை. திருநங்கைகள் சம்பந்தமான ஒரே ஒரு பதிவு இரண்டாம் சுற்றையும் தாண்டி தமிழ்மண ஜூரியிடம் சென்ற்து. கடைசி தேர்வில் அது வரவில்லை. இருந்தாலும் இவ்வளவு தூரம் சென்றதே அதிகம். பை தி வே மூன்றாம் பதிவு அமிதாப்பின் பாஆஆ படம் குறித்து.
இப்போது எனக்கு நானே வைத்துக் கொண்ட சில சுயக்கட்டுப்பாடுகள் பற்றிக் கூறுவேன்.
பதிவுலகுக்கு வந்ததன் முக்கிய நோக்கமே எனது தமிழை மேம்படுத்தி, தமிழ் மொழிபெயர்ப்பு விஷயங்களில் நல்ல பலன் பெறுவது. அது நிறைவேறி விட்டது. இனிமேல் பதிவுக்காகவே பதிவு என்ற நிலை எனக்கு இல்லை. ஏதாவது கூற வேண்டிய விஷயம் இருந்தால் மட்டும் பதிவிட்டால் போதும். முக்கியமான விஷயங்களாக இருக்க வேண்டும், அதாகப்பட்டது, இஸ்ரேல், சோ, துக்ளக் பத்திரிகை, வலதுசாரி ஆதரவு, ஈவேராவை கட்டுடைத்தல் முதலியன. மொக்கைகளும் அவ்வப்போது வரும்.
இருக்கவே இருக்கின்றன கேள்வி பதில் பதிவுகள். அவற்றிலும் ஒரு சிறிய மாற்றம். அவை வியாழனன்றுதான் வரும், முப்பது கேள்விகளுக்கு மிகாமல் இருக்கும். அதிகப்படியான கேள்விகள் அடுத்த பதிவின் வரைவுக்கு சென்று விடும், ஆகியவையே அந்த மாற்றங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
7 hours ago