2/11/2009

எங்கே பிராமணன் சீரியலை பார்க்கும்போது எழும் எண்ணங்கள்

இந்த சீரியலை பற்றி நான் எழுதிய அறிமுகப் பதிவைப் பார்த்து நண்பர் பினாத்தல் சுரேஷ் திகைப்புடன் என்னுடன் சேட்டில் வந்தார். அவர் கேட்டதின் சாராம்சம் என்னவென்றால், இந்த அறுவை சீரியலுக்கு இவ்வளவு பில்ட் அப் ஏன் என்பதுதான். அதே சமயம் புத்தகத்தை படித்துள்ளதாகவும், அது தனக்கு பிடிக்கும் எனவும் கூறினார்.

சீரியல் வந்து சில நாட்களே ஆன நிலையில் இவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வருவது சற்றே அவசரமான முடிவு என்பதே என் துணிபு.

என்ன, வெள்ளிக்கிழமை மாலை விளக்கு வைத்தவுடன் வரும் பல சீரியல்களில் “இந்தக் குடும்பத்தை அழிக்காமல் ஓய மாட்டேன்” என கண்ணை உருட்டிக் கொண்டே பேசும் வில்லி நடிகைகள் (புவனேஸ்வரி, வடிவுக்கரசி, நளினி ஆகியோர்) இந்த சீரியலில் இருக்க மாட்டார்கள். மிகைபடுத்த்தப்பட்ட காட்சிகள் இல்லாது போகலாம். தேவையற்ற சோகத்தைப் பிழைந்து படகோட்டியில் எம்ஜிஆர் வாயசைக்கும் கரை மேல் பிறக்க வைத்தான் என்னும் பாடலின் ராகத்தில் பின்னணி வாத்திய இசையெல்லாம் போட மாட்டார்கள் (கஸ்தூரி சீரியல்).

திங்கள் இரவு எபிசோடில் உதார் விடும் ஆட்டோ டிரைவரை பார்த்து அசோக் ஒரு விஷயம் சொன்னதுமே நான் ஆடிப்போய் விட்டேன். அந்த ஆட்டோ டிரைவர் உதார் விட்டு, “நாளைக்கு வாம்மா உன்னைக் கீசுடறேன்” எனக் கூற. அசோக் அவனை பரிதாபத்துடன் பார்த்த வண்ணம் “நாளையை யார் பார்த்துள்ளார்கள்” என்ற டயலாக் வரும்போதே நான் தீர்மானித்து விட்டேன், ஆட்டோ டிரைவர் காலி என்று. நேற்றைய எபிசோடில் அது ஊர்ஜிதமானது.

பூஜ்யர் நிஜாமுத்தீனை தான் தில்லி திரும்பியதும் கொன்று விடப்போவதாக தில்லி சுல்தான் Qutb ud din Mubarak Shah கூறுகிறான். அச்சமயம் தில்லிக்கு வெளியே ஒரு ஊரில் படை இறக்கியிருக்கிறான். அடுத்த நாள் தில்லி பிரவேசம். நிஜாமுத்தீனின் பக்தர் கவி அமீர் குஸ்ரு பூஜ்யரிடம் தப்பித்து ஓடுமாறு மன்றாடுகிறார். சுல்தான் தில்லிக்கு மிக அருகில் வந்து விட்டதாக மற்ற சிஷ்யர்கள் பதறுகின்றனர். நிஜாமுத்தீன் அப்போது பதறாமல் கூறுகிறார், "dilli door asth (தில்லி இன்னும் தூரத்தில்தான் உள்ளது)". அடுத்த நாள் சுல்தானின் மரணச் செய்திதான் வருகிறது. அமீர் குஸ்ரு பற்றிய ஒரு ஹிந்தி சீரியலில் இந்தக் காட்சி வருகிறது.

அப்போது அந்த சீரியலை பார்க்கும் போது இருந்த மனநிலையில்தான் சோ அவர்களது இந்த சீரியலில் இந்த காட்சியை காணும்போது இருந்தேன். அதுவும் அசோக் என்பவர் கதைப்படி வசிஷ்ட முனிவர். அவர் கூறியது பலிக்காமல் போகுமா என்பதும் நிஜம்தானே.

இந்த சீன் முடிந்ததுமே சோ மற்றும் அவரை கேள்வி கேட்கும் நண்பர் திரைக்கு வந்தனர். நண்பர் இந்த அசோக் சொல்வது எல்லாமே பலிக்கும் என சோ சொல்லுகிறாரா என கேட்க, சோ தனக்கே உரித்தான பெரிய விழிப்பார்வையுடன் “அப்படியும் சொல்லலாம்” எனக்கூறிவிட்டு மேலே பேசியது சுவாரசியமாக இருந்தது. அதாவது இதெல்லாம் பலிப்பதற்கு மகானாகவெல்லாம் இருக்கத் தேவையில்லை. ஆகவேதான் பெரியவர்கள் எப்போதுமே கூறுவார்கள், அசுபமாக பேசாதே என. அவ்வாறு பேசும்போது மேலே சஞ்சரித்து கொண்டிருக்கும் துர்தேவதைகள் “அப்படியே ஆகட்டும் (ததாஸ்து)” என்று கூறிவிடுவார்களாம்.

அமரர் டணால் தங்கவேலு அவர்களும் இதையே பலமுறை கூறியுள்ளார். ஒருமுறை என்.எஸ். கிருஷ்ணன் அவர்களிடம் இவர் கடன் கேட்க, அவரும் தந்தாராம். அப்போது “எனது லட்சுமியையே உனக்கு தருகிறேன்” என்றாராம். அதிலிருந்து அவர் பொருளாதார நிலை மோசமாகி வறுமையில் வாடினார் என தங்கவேலு அடிக்கடி கூறியுள்ளார். “பாட மாட்டேன்” என்னும் பல்லவியில் பாடிய பாடகர் சுந்தரம் (மணமகள் படத்தில் சின்னஞ்சிறு கிளியே பாட்டு பாடியவர்) பிறகு தொழிலில் சோபிக்கவில்லை என்பதயும் அவரே கூறியுள்ளார்.

நேற்றைய (10.02.2009) எபிசோடில் நான் ரசித்த காட்சி. அமாவாசை தர்ப்பணம் செய்விக்க செல்ல வேண்டிய சாஸ்திரிகள் (கம்பர் ஜெயராமன்) ஜுரத்தில் படுத்திருக்கிறார். நல்ல வேலையில் இருக்கும் அவர் மகன் (கோல்டன் சுரேஷ்) சாஸ்திரிகளுக்கு இந்த வேலையை ஒதுக்கிய வேணு சாஸ்திரிகளுக்கு ஃபோன் செய்து, தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை, ஆகவே வேறு ஏற்பாடு செய்யுமாறு கேட்க, அவர் அது இயலாது எனக் கூறிவிடுகிறார். கம்பர் ஜெயராமனும் தானே சென்று விடுவதாகக் கூற, மகன் அவரை அமர்ந்திருக்குமாறு கூறிவிட்டு தானே சாஸ்திரிகளுக்கான உடை அணிந்து சாமக்கிரியைகளுடன் செல்கிறான். அக்காட்சி மனதுக்கு மிக நிறைவாக இருந்தது. தாய் தந்தையிடம் ஆசி வாங்கி அவன் புறப்பட, பெற்றோர்களின் முகத்தில் பெருமையை மிக நன்றாகவே காட்டியிருந்தார்கள். அந்த பெருமை நிச்சயமாகவே அவன் பெரிய வேலையில் கைநிறைய சம்பாதிப்பதில் இருக்கும் பெருமையை விட அதிகமே என்றும் எனக்கு உறுதியாகப் பட்டது.

அமாவாசை தர்ப்பணம் பற்றி பிறகு சோ அதே எபிசோடில் விளக்கினார். அதில் வரும் ஒரு மந்திரத்தில் தான் இறைக்கும் எள்ளும் தண்ணீரும் தனது பித்ருக்களுக்கும் மட்டுமின்றி தங்களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடியவர்கள் இல்லாது இறந்தவர்களுக்கும், அவர் யாராயிருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் அவர்களுக்கும் பலனளிக்கக் கடவது என்ற செய்தியும் உள்ளது என்பதை அவர் விளக்கினார். அதே போல ஆவணி அவிட்டத்தில் சொல்லும் காயத்ரி மந்திரத்தால் நாட்டுக்கே நன்மை விளையும் என்ற நம்பிக்கை இந்து சமுதாயத்தில் உள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.

இப்பதிவை முடிக்கும் முன்னால், பினாத்தல் சுரேஷ் சேட்டில் கூறிய இன்னொரு விஷயத்தையும் கூறிவிடுகிறேன். அதாகப்பட்டது சோ மேல் எனக்கு உள்ள முரட்டு அபிமானமே என்னை இவ்வாறெல்லாம் பேச வைக்கிறது என்றார் அவர். உண்மைதான், சோ மேல் எனக்கு முரட்டு அபிமானம் உண்டு என்பது நிஜம்தான்.

சமீபத்தில் 1941-ல் கல்கி அவர்கள் கல்கி பத்திரிகை ஆரம்பித்தபோது தனது ராஜாஜி ஆதரவு நிலையைப் பற்றி எழுதினார். அவர் சொன்னது, “எனக்கு ராஜாஜி அவர்கள் மேல் மிகுந்த அபிமானம் இருப்பதால் அவர் சொல்வதையெல்லாம் நான் ஆமோதிக்கிறேன் என்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்வேன். எனக்கு ராஜாஜி மேல் மிகுந்த அபிமானம் உண்டு என்பது உண்மையே. அதற்காக அவர் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் ஆதரிக்கக் கூடாதா என்ன”

நானும் அதைத்தான் கூறுகிறேன். சோ மேல் அபிமானம் எனக்கு இருக்கிறது என்பதற்காக அவர் செய்வதையெல்லாம் எதிர்க்க வேண்டும் என்பதா? இதற்கு ஆங்கிலத்தில் bending backwards என கூறுவார்கள். அதாவது உருப்படாத சில இணைய தாசில்தார்களின் சான்றிதழுக்கு ஆசைப்பட்டு சில பார்ப்பனர்களே பார்ப்பனர்களைத் திட்டுவது போல என வைத்து கொள்ளலாம். நான் bending backwards எல்லாம் செய்யும் ஆள் அல்ல.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/09/2009

இன்றைய சந்திரகிரகணம் பற்றி வந்த மின்னஞ்சல்

நேற்று இரவு எனக்கு இன்றைய சந்திரகிரகணம் பற்றிய விளக்கத்துடன் வந்த மின்னஞ்சலை இது பற்றி ஆர்வம் உள்ள ஆத்திகர்களுக்காக தருகிறேன்.

“09-02-2009 அன்று இரவு சநதிர கிரஹணம் நிகழுகிறது, வழக்கமாக நிகழும் கிரஹணம் போல் இது இல்லை , அதாவது சந்திரனை முழுமையாகவோ பகுதியாகவோ இந்த கிரஹணம் மறைக்காது, சந்திரனின் கிரணங்களை மட்டுமே ஓரளவு பாதிக்கும். இதற்கு ஆங்கிலத்தில் பெனம்பரா கிரஹணம் என்று பெயர் (தமிழில் குறைநிலை கிரகணம் என மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன்).

சாஸ்திரப்படி இப்படிப்பட்ட கிரஹணம் அனுஷ்டானத்துக்கு உகந்தது அல்ல, ஆகவே ஆஸ்திகர்கள் வழக்கப்படி கிரஹணத்தில் செய்யும் ஸ்னானம் தானம் பித்ரு தர்ப்பணம் ஆகியவற்றையும் பரிஹாரங்களையும் செய்ய வேண்டாம் , மேலும் விபரங்களுக்கு போன் மூலம் கனபாடிகளை தொடர்பு கொள்ளவும்.

வைதிகஸ்ரீ போன் xxx xxxxxxxx” (நம்பர் தேவைப்படுகிறவர்கள் என்னைத் தனியாகத் தொடர்பு கொள்ளவும்)

இந்தப் பதிவைப் போட வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்தப் பதிவைப் பார்த்ததும் போடத் தோன்றியது அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/08/2009

டூ டு டூ டு டூடூ

இதுவும் மீள்பதிவே. முதலில் இப்பதிவு போட்ட தேதி 19.02.2006 விடியற்காலை 03.51-க்கு. இப்போது மீள்பதிவு செய்ய என்ன காரணம்? யூ ட்யூப்தேன். முதல்ல பதிவு போடச்ச யூட்யூப்பின் மகத்துவம் தெரியாது. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். அம்புடுத்தேன். நான் ரசிச்ச சீன்களுக்கு ஹைப்பர்லிங் தர முடியறது.

மேலும் இது எனக்கு ரொம்ப பிடிச்ச படம் வேற. கேக்கணுமா? இப்ப முதலில் போட்ட பதிவை பார்க்கலாமா?

அன்பே சிவம் பார்த்து விட்டு, நேராக வந்து ஒரு தூக்கம் போட்டேன். அவ்வளவு மனம் கனமாக இருந்தது. இப்போது விடியற்காலை (19.02.2006) 03.25-க்கு முழிப்பு வந்து இப்பதிவை போடுகிறேன்.

இப்படம் ஒரு பொங்கலன்று எங்கள் நங்கநல்லூர் வேலன் திரையரங்கில் புதிதாக ரிலீஸ் செய்யப்பட்டபோது முதல் நாள் முதல் ஷோ டிக்கட் வாங்கி பார்க்கும் தவற்றை செய்தேன். ஆம் வெறுமனே பார்த்தேன் அவ்வளவுதான். வசனம் காதில் விழாதபடி ஒரு மாணவ ரௌடி கும்பல் ஒன்று ஒவ்வொரு சீனிலும் ஓ என்று கத்தி கலாட்டா செய்தது. இருந்தாலும் காதில் அப்படியும் இப்படியுமாக விழுந்த வசனங்கள் இன்னமும் சரியாக கேட்க முடியவில்லையே என்ற விசனத்தை ஏற்படுத்தியது.

நேற்றுத்தான் ஆசை தீர படம் பார்த்தேன். உறைந்து போனேன். "அன்பே சிவம்" பாட்டு simply haunting. கமல் கமல்தான். சாதாரணமாக அவர் நிலையில் இருக்கும் எந்த பெரிய ஸ்டாரும் செய்யக்கூடிய தவற்றை அவர் செய்யவில்லை, அதாவது எல்லா காட்சிகளிலும் தானே டாமினேட் செய்வது. மாதவன் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். அவர் எரிச்சலுடன் கமலுடன் பேசும் ஒவ்வொரு வசனமும் சுபர்ப். இப்படத்திற்கு பிறகு பிறகு ரொம்ப நடிக்காமல் போய் விட்டார். நடித்திருந்தால் கமலுக்கு ஏற்ற வாரிசாக வந்திருக்கலாம்.

நாசர், சந்தானபாரதி ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை மிகக் கச்சிதமாகவே செய்தார்கள். ரயில் ஸ்டேஷனில் எத்தனை நேரம் நிற்கும் என்பதற்கு பதிலாக ஸ்டேஷன் மாஸ்டர் கூறியதுதான் மேலே தலைப்பில் உள்ளது. அதாவது 1.58 முதல் 2.02 வரைக்குமாம். மாதவன் இதை கேட்டு டென்ஷன் ஆவது சுபர்ப்.

சாதாரணமாக கதாநாயகன் எல்லா இடர்களையும் மீறி கதாநாயகியை திருமணம் செய்வதுதான் விதி என்பதை எவ்வளவு அனாயாசமாக உடைத்தெறிந்துள்ளார் கமல்! அவர் கடைசி வரை கிரணைப் பார்த்து பேசாமல் இருந்ததே இப்படத்துக்கு ஒரு கவிதை டச் கொடுத்தது. கடைசியில் சந்தான பாரதி கேட்டுக் கொண்டதற்கேற்ப தான் மறந்தும் கூட திரும்பி வந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் கமல் தன்னுடைய "வளர்ப்பு மகனுடன்" செல்ல, படம் முடிந்ததற்கு அடையாளமாக மௌனமாக கிரெடிட்ஸ் திரையில் தெரிய ஆரம்பித்தது படம் ஹைக்ளாஸ் என்பதை காட்டியது.

ஆனால் இந்த கவிதை டச்சே படத்தின் பாக்ஸ் ஆபீஸை பாதித்தது என்றாலும் மிகையாகாது. நம்மூர் ஆடியன்ஸ் எதிர்பார்ப்பதே வேறு. வீர பாண்டிய கட்டபொம்மனாக எம்.ஜி.ஆர். நடித்திருந்தால் தனக்கு தூக்கு போட விட்டிருந்திருக்கவே மாட்டார் என்று அங்கலாய்த்தாராம் ஒரு ரசிகர்!

பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் என் வீட்டம்மா வந்து காதை பிடித்து திருகும் முன்னால் கணினியை மூடி ஜூட் விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எங்கே பிராமணன் - மனதை கொள்ளை கொள்ளும் மெகா தொடர்

எனது டோண்டு பதில்கள் - 05-02-2009 பதிவுக்காக எம். கண்ணன் என்பவர் இந்த கேள்வி கேட்டிருந்தார். கேள்வியும் அதற்கு நான் தந்த பதிலும் கீழே.

“1. 'எங்கே பிராமணன்' - சோவின் கதை ஜெயா டிவியில் திங்கள் முதல் தொடராக (8pm) வருகிறதே. பார்க்கிறீர்களா?
பதில்: நீங்கள் சொல்லித்தான் அதையே நான் அறிந்தேன். உங்கள் பின்னூட்டத்தை மட்டுறுத்தக்கூட செய்யாது தொலைகாட்சிப் பெட்டிக்கு ஓடினேன். மணி சரியாக எட்டாயிற்றே. பை தி வே இன்றுதானே (02.02.2009) ஆரம்பம்? உங்களுக்கு முதற்கண் நன்றி”.

உண்மைதான். முதல் எபிசோடை பார்த்து விட்டுத்தான் பின்னூட்டத்தையே மட்டுறுத்தினேன்.

சீரியலைப் பற்றி பேசும் முன்னால் கண்ணன் அவர்கள் இது சம்பந்தமாக கேட்ட மற்ற கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் இங்கு மீண்டும் தருவேன்.

“2. ஞாயிறன்று காட்டப்பட்ட முன்னோட்டம் பார்த்தீர்களா? யாராவது கேஸ் போட்டு தடை வாங்குவார்களா? இல்லை இது பிராமணர்களை கிண்டல் செய்யும் சீரியல் என குளிர் காய்வார்களா?
பதில்: விஷயமே திங்களன்று மாலை 07.55-க்குத்தானே உங்கள் கேள்வி மூலம் அறிந்தேன். ஆகவே ஞாயிறன்று நிகழ்ச்சியை பார்க்கவில்லை. சோ அவர்களின் இக்கதையை நான் ஏற்கனவே சமீபத்தில் எழுபதுகளில் துக்ளக்கில் தொடர்கதையாக படித்துள்ளேன். பார்ப்பனரை கிண்டல் செய்து அதில் ஒன்றும் வரவில்லை. எல்லாமே யதார்த்தமாகத்தான் எழுதப்பட்டன.

3. பிராமண அசோக் வேடத்தில் (கதாநாயகன்) நடிக்கும் நடிகர் ஒரு இஸ்லாமியர். தெரியுமா?
பதில்: நடிப்புத்தானே இதில் என்ன பிரச்சினை? சோப்ராவின் மகாபாரதத்தில் அர்ஜுனனாக நடித்தது ஒரு இசுலாமியர். அதற்கென்ன இப்போது? பம்பாய் படத்தில் இசுலாமியராக கிட்டியும் இந்துவாக நாசரும் நடித்தனர். அதற்கு என்ன கூறுவீர்கள்?

5. 'எங்கே (செட்டியார் / பிள்ளைமார் / நாடார் / சைவ வேளாளர் / கவுண்டர் / தேவர்........)' என்றெல்லாம் சீரியல் எடுத்துவிடவோ தமிழ் தொலை காட்சிகளில் ஒளிபரப்பிட முடியுமா?
பதில்: அதாவது எங்கே வன்னியர் என்ற பெயரில் பாமகவின் தொலைகாட்சி சேனலில் வராது என்கிறீர்கள்?

7. சுஜாதாவின் 'சிங்கமய்யங்கார் பேரன்' நாடகம் பார்த்ததுண்டா / படித்ததுண்டா? அதில் சுஜாதா எழுப்பிய பல ஆதங்கங்கள் 'எங்கே பிராமணன்' தொடரில் சோ எழுப்பப்போவது ஏதாவது பூகம்பத்தை ஏற்படுத்துமா? (பிராமண சமூகத்தினரிடையே?)
பதில்: சுஜாதாவின் நாடகம் பார்த்ததில்லை. எங்கே பிராமணன் அற்புதமான கதை. திரைக்கதை எழுதுவது வெங்கட். ஆகவே நன்றாகவே இருக்கும்.

8. சோவின் 'எங்கே பிராமணன்' தொடர் எழுப்பும் கேள்விகள்படி - உங்களையோ உங்களைச் சுற்றியுள்ள குடும்பத்தினர் அல்லது நங்கநல்லூர் வாசிகளில் பலரை 'பிராமணர்' என இன்றைக்கு குறிப்பிடமுடியுமா?
பதில்: முடியவே முடியாது. யாருமே இப்போது உண்மையான பிராமணன் இல்லை”.

இப்போது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். அதாவது சீரியலைப் பற்றி பேசுவேன்.

நான் ஏற்கனவே கூறியபடி இது தொடராக துக்ளக்கில் சமீபத்தில் 1972-ல் வந்த போதே படித்தவன். பிறகு அதை நான் படிக்கவில்லை. ஆனால் அதில் பல நிகழ்ச்சிகள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துள்ளன.

கதை சுருக்கம்:
கைலாயத்தில் ஒரு சர்ச்சை எழுகிறது. யார் பிராமணன் என்பதே அது. அதை அறிய வசிஷ்டர் பூமியில் அவதாரம் செய்வது என தீர்மானமாகிறது. வசிஷ்டர் பிறந்து பூணூல் போட்டு காயத்ரி மந்திர உபதேசம் பெறும் வரை மிகவும் சாதாரண மனிதராகவே இருப்பார். பிறகுதான் தனது அவதார நோக்கத்தை புரிந்து நிறைவேற்றுவார் என்பதையும் கைலாயத்திலேயே முடிவு செய்து விடுகிறார்கள்.

வசிஷ்டர் அசோக் என்னும் பெயரில் தொழிலதிபர் நாதனுக்கு ஒரே மகனாகப் பிறக்கிறார். எதிலு ஆர்வமின்றி அவர் பாட்டுக்கு வளர்கிறார். நன்றாக படிப்பு எல்லாம் படிக்கிறார், இருப்பினும் ஒரு தொழிலதிபரின் ஒரே மகன் என்ற பந்தாவெல்லாம் இல்லாது, ரொம்பவுமே எளிமையாக இருக்கிறார். நாதனின் நண்பர் அவரை வேலைக்காரன் என புரிந்து கொள்ளும் அளவுக்கு இது போகிறது. பேச்செல்லாம் கூட ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆகவே அவருக்கு சித்த சுவாதீனம் இல்லை என்னும் அளவுக்கு போகிறது. நாதனுக்கு ராஜகுரு மாதிரி ஒருவர் இருக்கிறார். அவர் சொல்படிதான் நாதன் நடக்கிரார். அவர் மனைவி வசுமதி லேடீஸ் க்ளப் என்றெல்லாம் சேவை செய்கிறார்.

இதற்கு மேல் கதை என கேட்கும் முரளி மனோகருக்கு, ஆசை தோசை அப்பளாம் வடை. இப்போதைக்கு இவ்வளவுதான் என கூறுவேன். சீரியலைப் பாருங்கள். ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அவ்வப்போது சோவும் அவரை கேள்வி கேட்பவர் ஒருவருமாக வந்து கலகலப்பூட்டுகின்றனர். சீரியல் கதை முடிச்சுகளுக்கு அவ்வப்போது சோ பதில் கூறுகிறார்.

உதாரணத்துக்கு பிரும்மஸ்ரீ அமரர் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்கள் தனது காலட்சேபங்களுக்கு வரும் பெரிய மனிதர்களை காலட்சேபத்தின் நடுவிலேயே இந்திரன், சந்திரன் எல்லாம் புகழ்ந்து பலரை நெளிய வைத்து விடுவார். இதை நரஸ்துதி என்பார்கள். இந்த சீரியலில் வரும் நீலுவும் அதே மாதிரி காலட்சேபத்துக்கு வந்த நாதனை அப்படி புகழ்கிறார். அது பற்றி சோவை அவர் நண்பர் கேள்வி கேட்க சோ அவர்கள் அழகாக பதிலளிக்கிறார். அதாவது தரும சிந்தனை குறைந்து வரும் இந்த நாளில், தருமம் செய்பவர்களை அவ்வப்போது வெளிப்படையாக புகழ்ந்தால் மற்றும் சிலர் அதே மாதிரி தர்மம் செய்ய விழைவார்கள் என்பதே அது.

சரி, இப்போதுதான் முதல் ஐந்து எபிசோடுகள் முடிந்துள்ளன. இன்னும் வரவேண்டியவை நிறைய இருக்கின்றன.

நாதனாக வரும் டில்லி குமார், வசுமதியாக வரும் நளினி (ராமராஜன்), அசோக்காக வரும் கௌஸ், நாதனின் குருவாக வரும் நீலு ஆகிய எல்லோருமே அமர்க்களப்படுத்துகிறார்கள். பிராமணா பாஷை புகுந்து விளையாடறது. ரொம்ப பேஷா இருக்குன்னா. ரம்யமா இருக்கு.

வரும் எபிசோடுகளிலிருந்து என்னைப் பதிவு போடத் தூண்டும் விஷயங்கள் ஏதேனும் வந்தால் கண்டிப்பாக அதைச் செய்வேன். அதைவிட வேறு வேலை என்ன இருக்கும் எனக்கு?

மற்றப்படி நல்ல சீரியல். தவற விடாதீர்கள். அவ்வளவுதான் சொல்வேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது