9/22/2011

டோண்டு பதில்கள் - 22.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி:1. உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டி: கருணாநிதி

பதில்: திமுக இப்போதிருக்கும் மோசமான நிலையில் அதனுடன் கூட்டு வைக்க தைரியம் தேவைப்படும். அது எக்கட்சியிடம் உள்ளது?

அது தெரிந்து கருணாநிதி இவ்வாறு கூறுவதை ஒரு டேமேஜை குறைக்கும் செயலாகவே (மீசையில் மண் ஒட்டவில்லை) பார்க்கிறேன்.

கேள்வி:2. தயாநிதி, கலாநிதியிடம் சி.பி.ஐ. விசாரணை
பதில்: முதலில் தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்னும் ரேஞ்சில் சொன்ன சிபிஐ இப்போது இவ்வாறு நடப்பது ஐயங்களை உருவாக்குகிறது. ஏதோ பெரிய ஆப்பு யாருக்கோ உறுதி எனத் தோன்றுகிறது.

கேள்வி:3. அரசு ஊழியர் மாதச் சம்பளத்துக்கு ரூ.25,751 கோடி: நிதியமைச்சர்
பதில்: புள்ளி விவரங்கள், புள்ளி விவரங்கள். அதைக் கட்டுப்படுத்த ஏதும் முயற்சி கூட இல்லையே.

கேள்வி:4. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 உயரும்?
பதில்: லிட்ட்ருக்கு 4 ரூபாய் உயரவில்லையே என சந்தோஷப்பட்டுக் கொல்ள வேண்டியதுதான்.

கேள்வி:5. சிறந்த நிர்வாகத்துக்கு குஜராத் உதாரணம்
பதில்: இதில் என்ன சந்தேகம்?

கேள்வி:6. நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்றநிலை: பிரதமர் கவலை
பதில்: பொறுப்பற்ற பிரதமர் இருக்கும் நிலையை எண்ணி, எண்ணி அதே பொறுப்பற்ற பிரதமர் வருந்துகிறாரா, பேஷ்.

கேள்வி:7. பிரதமர் வேட்பாளராக மோடி: அமெரிக்க அறிக்கைக்கு அத்வானி ஆதரவு
பதில்: பாஜகாவில் உள்ள பொறாமையாளர்களது வயிறெரியுமே.

கேள்வி:8. கனிமொழி, சரத்குமார் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல்: சி.பி.ஐ. எதிர்ப்பு
பதில்: இன்னும் கொஞ்சம் நாட்கள்தான் களி தின்னட்டுமே.

கேள்வி:9. வெளிச்சந்தைக்கு சவால் விடும் அரசின் இலவசப் பொருள்கள்
பதில்: அப்படி கொடுக்கப்பட்ட இலவச பொருட்களும் வெளிச்சந்தைக்கு வந்த பிறகு சவாலாவது ஒன்றாவது.

கேள்வி:10. கூடங்குளம் குறித்து அச்சம் வேண்டாம்: ஜெயலலிதா
பதில்: பொறுப்பற்ற பேச்சு. அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.


ரமணா
கேள்வி:11. முன்னாள் முதல்வரின் இலவச திட்டம் இன்னாள் முதல்வரின் விலை இல்லாத் திட்டம் என்ன வேறுபாடு?
பதில்: லேபலில்தான் வேறுபாடு. இரண்டுமே சோம்பேறிகளை உருவாக்கும் திட்டமே.

கேள்வி:12. பெரியவர் கருணாநிதியை தேர்தலில் கைவிட்ட இலவச‌ டீவி யின் கதையை பார்த்த பிறகும் தமிழக் அரசின் விலை இல்லாத்திட்டம் ஜெயிக்க வைக்குமா அதிமுகாவை?
பதில்: திமுக பதவியில் இருக்கும் வரைக்கும் அதிமுகாவை பதவிக்கு கொண்டுவர வைக்க வேண்டும் என்ற ரேஞ்சுக்கு கருணாநிதி முயன்று வென்றார். இப்போது ஜெயலலிதாவின் முறை.

கேள்வி:13. ஒரு வேளை உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றால் என்ன வாகும் இந்த விலை இல்லாத்திட்டம்?
பதில்: அவ்வ்வ்வ்வ்.

கேள்வி:14. இதில் செலவளிக்கப் படும் 10,000 கோடியை அடிப்படை கட்டுமானத்திற்கு செல்வளித்தால் தமிழகம் இன்னுமொரு குஜராத் மாறுமே?
பதில்: அந்த அறிவு இருந்தால்தானே.

கேள்வி:15 .உங்கள் மோடி பிரதமரானால்?
பதில்: நாட்டுக்கு நல்லது.

கேள்வி:16. ஜான் பாண்டியன் விசயத்தில் சிபிஐ விசாரணை கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டம் சரியா?
பதில்: இன்னுமா மக்கள் சிபிஐ பற்றி நம்பிக்கை கொண்டுள்ளனர்?

கேள்வி:17. மதிமுகவின் மாநாடு பற்றி?
பதில்: அக்கட்சியும் தனது இருத்தலை அவ்வப்போது அவ்வாறு காட்டிக் கொள்வது அவசியம்தானே.

கேள்வி:18. பெட்ரோல் விலை உயர்வு லிட்டர் ரூ. 100 ஆகிவிடும் போலுள்ளதே?
பதில்: அது உருவாக்கும் விலை உயர்வு விஷச்சக்கரம் கவலையை வரவழைக்கிறது.

கேள்வி:19. சொத்து குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தால்?
பதில்: பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர்?

கேள்வி:20. அஜித்தின் மங்காத்தா பார்த்தீர்களா எப்படி உங்கள் பார்வையில்?
பதில்: பார்க்கவில்லை, ஆகவே கருத்தேதுமில்லை.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/21/2011

பாரதியாரும் கிருஷ்ணசாமி ஐயரும்

Explain with reference to context பற்றி நான் இட்ட இடுகையின் தொடர்ச்சியாகவும் இதை வைத்துக் கொள்ளலாம்.

சில நாட்கள் முன்னால் எதேச்சையாக பல புதையல்கள் கிடைத்தன. தி நகரில் பனகல் பூங்கா அருகில் உள்ள நியூ புக்லேண்ட் என்னும் புத்தகக் கடையில் நான் பல நாட்களாக தேடி வந்த உவேசா, பம்மல் சம்பந்த முதலியார், அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார், நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை, தொ.மு. பாஸ்கர தொண்டைமான் ஆகியோரது நூல்கள் கிடைத்தன.

இப்போது தமிழ் தாத்தா உவேசா அவர்களது உரைநடை நூல்களின் தொகுப்புகளை பார்த்து வருகிறேன். அவற்றில் நான் கண்டதின் ஒரு சிறு பகுதியை இங்கு இடுகையாக பதிப்பேன்.

மயிலை வடமொழிக் கல்லூரி, வெங்கடரமணா வைத்தியசாலை ஆகியவர்றின் தோற்றத்தில் பெரும் பங்கேற்றவர் திரு. வி. கிருஷ்ணசாமி ஐயர். வக்கீல், நீதிபதி ஆகிய பதவிகளில் செயலாக்கம் பெற்றவர். ஆங்கிலம் மற்றும் வடமொழிகளிலும் தமிழிலும் தேர்ச்சி பெர்றவர்.

அக்கால கட்டத்தில் ஒரு நிலை இருந்தது. ஆங்கிலம் நன்கு கற்றவர்கள், வடமொழி மீது அபிமானம் வைப்பவர்கள் ஆகியோர் தமிழை மதிக்க மாட்டார்கள் என்னும் பொது புத்தியைத்தான் குறிப்பிடுகிறேன் (இப்போது மட்டும் என்ன வாழுதாம் என முணுமுணுக்கிறான் முரளி மனோகர், லூசுல விடப்பா எனக் கூறுவது டோண்டு ராகவன்).

கிருஷ்ணசாமி ஐயர் ஒரு முறை சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்சங்கத்தின் கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்தார். மேலே கூற்ப்பட்ட பொது புத்தியை ஒட்டி, இவர் என்ன பெரிதாக தமிழ் பற்றி பேசிவிடப் போகிறார் என்றிருந்தனர் பலர். அக்கூட்டத்திற்கு வந்தவர்களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியும் ஒருவர்.

கிருஷ்ணசாமி ஐயர் தமிழில் உள்ள பெருமை வாய்ந்த நூல்களை அநாயாசமாக பட்டியலிடுவதுடன் பேச்சைத் துவங்கினார். திருக்குறளை திருவள்ளுவர் இயற்றியது இம்மொழியிலே, கம்ப ராமாயணமும் இம்மொழியிலே, நாயன்மார்களது தேவாரம், மாணிக்கவாசகரது திருவாசகம், ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தம் ஆகியவையும் இம்மொழியிலேதான். இம்மாதிரியே தமிழின் பெருமையை அப்பெரியவர் அனாயாசமாக அடுக்கினார்.

கேட்டவர் எல்லோரும் பிரமித்தனர், சுப்பிரமணியா பாரதியார் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு ஒரு தருணத்தில் இக்கருத்துக்களை வைத்து பாரதியார் இயற்றினார், எளிய நடைத் தமிழில் ஒரு பாடலை. அப்பாடல் இதோ,

செந்தமிழ் நாடென்னும் போதினிலே - எங்கள்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு
உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு
இளம் காதல் புரியம் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு - உயர்
வேதம் நிறைந்த தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு
கல்வி சிறந்த தமிழ்நாடு
பல்விதமாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் - நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை
மாலவன் குன்றம் இவற்றிடையே - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு - புகழ்
மண்டிக் கிடக்கும் நம் தமிழ்நாடு

இப்பாடலைக் கேட்டு, அதில் தனது கருத்துகள் பொதிந்திருப்பதையும் கண்டு திரு கிருஷ்ணசாமி ஐயர் மிக மகிழ்ந்தார். அப்பாடலுடன் பாரதியாரின் மர்றப்பட்டல்களையும் தொகுத்து அச்சிடச் செய்து இலவசமாக வினியோகம் செய்தார். பாரதியாரை ஆதரித்தவர்களில் இவரும் ஒரு முக்கியமானவர்.


ஆதாரம்: டாக்டர் உவேசா அவர்களின் உரைநடைத் தொகுதி - (முதல் தொகுதி), பக்கங்கள் 107, 108 & 109.

அன்புடன்,
டோண்டு ராகவன்
டிஸ்கி: இந்த இடுகைக்கும் இது போன்று பின் வரக்கூடிய இடுகைகளுக்கும் “தமிழினிமை” என்னும் புது சுட்டியை உருவாக்குகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/20/2011

Higher principles

சமீபத்தில் 1961-ஆம் ஆண்டில் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு திரைப்பட விழாவில் இந்தப் படம் செக்கோஸ்லாவிக்கியா நாட்டின் தரப்பிலிருந்து திரையிடப்பட்டது. அண்ணாசாலை அண்ணா சிலைக்கருகே இருந்த நியூ எல்ஃபின்ஸ்டன் தியேட்டரில் அதை அக்கால கட்டத்தில் பார்த்த போது எனக்கு வயது கிட்டத்தட்ட 15. டிக்கெட் விலை 84 பைசா.

அப்படத்தின் பின்னணியில் இருந்த சரித்திர விவரங்கள் எனக்கு அப்போது தெரியாது. ஒரு முன்முடிவும் இன்றித்தான் அப்படத்தைப் பார்த்தேன். படம் முழுக்க செக் மொழியிலும் ஜெர்மானிய மொழியிலும் இருந்தது. ஆங்கிலத் துணை தலைப்புகளால்தான் கதைப் போக்கை நிர்ணயிக்க முடிந்தது. அப்படத்தின் யூ ட்யூப் சுட்டி கீழே.



அப்படத்தை இத்தனை ஆண்டுகளாக நினைவில் வைத்திருந்ததற்கு முக்கியக் காரணமே செக் மற்றும் ஜெர்மானிய மொழி வசனங்களைக் கேட்டதுதான். அத்தருணத்தில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை மட்டும் அறிந்திருந்த நான், முதன் தடவையாக ஜெர்மன் மற்றும் செக் மொழிகளை அவற்றைத் தாய்மொழியாக கொண்டவர்கள் மூலம் கேட்டேன். அவற்றில் ஜெர்மன் பேசும்போது ஏதோ சம்ஸ்கிருதம் கேட்பது போல இருந்தது.

இப்போது படத்துக்கு போவோம். இன்றுதான் (20.09.2011) முழு படத்தையும் யூ ட்யூப்பில் பார்த்தேன். முதலில் பார்த்த பல புரியாத விஷயங்கள், பின்னணிகள் இப்போது புரிந்தன. Reinhard Heydrich என்பவன் ஹிட்லரால் நியமிக்கப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் முழு அதிகாரம் பெற்ற தலைவன். அவன் சொல்வதுதான் சட்டம். அவனை மே 1942 இறுதியில் கொல்ல முயற்சிக்கின்றனர் செக் போராளிகள். அதில் காயமுற்று அவன் ஜூன் 4-ஆம் தேதி இறந்து போகிறான். அந்தக் கொலைக்கு நாஜிக்கள் கொடூரமான முறையில் பழிதீர்க்கின்றனர். ஜூன் 3, 4 மற்றும் ஐந்தாம் தேதி நடந்த நிகழ்வுகளில் பள்ளியிறுதித் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் 3 மாணவர்களும் பலியாகின்றனர். அதுதான் கதை.

அந்த சில நாட்களின் நிகழ்வுதான் படம் முழுக்க வருகிறது. பரீட்சைநேர ஜுரங்கள், காப்பி அடிப்பது ஆகியவை சகஜமாகவே காட்டப்ப்டுகின்றன. லாண்டிரி நடத்திப் பிழைக்கும் ஒரு பெண்மணி, அவள் மகன் (மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மூவரில் ஒருவன், அந்த மகனின் வகுப்புத் தோழி, அவளது தந்தை (ஒரு வழக்கறிஞர்) ஆகியோர் மிக இயல்காக கதைக்குள் இணைக்கப்படுகின்றனர்.

ஹெய்ட்ரிச்சுக்கு பதிலாக நியமிக்கப்படுபவன் செக் மொழி, லத்தீன மொழிகள் ஆகியவற்றை நன்றாகவே பேசுகிறான். தங்க மீனை உயிருடன் பிடிக்கும் தனது சிறு மகனிடம், அந்த மீனை கொல்லாமல் குளத்தில் விடுமாறும் கூறுகிறான். மொத்தத்தில் நாம் அன்றாடம் காணும் சாதாரண மனிதன் மட்டுமே. இருப்பினும் ஒரு அல்ப காரணத்துக்காக மரணதண்டனை பெற்ற அந்த மூன்று மாணவர்கள் விஷயத்தில் கருணை காட்ட மறுத்து அவர்களும் இறக்கின்றனர்.

நேரம் இருந்தால் அப்படத்தை நிச்சயம் பார்க்கவும். அது கம்யூனிச பிரசாரம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அது என்னமோ உண்மையாக இருப்பதாகத்தான் எனக்கு படுகிறது. ஸ்டாலின், சோவியத் ஒன்றிய அரசு அதிகாரிகள் செய்விக்காத கொலைகளா? இருப்பினும் அதையெல்லாம் மறந்து இப்படத்தைப் பார்க்குமாறு சிபாரிசு செய்கிறேன்.

ஐம்பது ஆண்டுகள் கழித்து பார்த்த அப்படத்தில் பல காட்சிகளை அவை வருவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்னால் அவற்றுக்கான துணைத் தலைப்புகள் சேர்த்து என்னால் ஊகிக்க முடிந்தது. நான் 14 ஆண்டுகளுக்கு பின்னால் பார்த்த சபாஷ் மீனா, பத்துக் கட்டளைகள் ஆகிய படங்கள் விஷயத்தில் நடந்தது போலத்தான் இங்கும் நடந்தது. அதைக் குறிப்பிட்ட எனது ஜெயா டிவியின் நேர்காணல் இதோ.



அந்த ஜெயா டிவி பேட்டிக்கான மீதி வீடியோக்களை பார்க்க எனது இந்த இடுகைக்கு செல்லவும்,

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/17/2011

தமிழ் மணத்தில் சில பக்ஸ் (bugs)

சாதாரணமாக தமிழ் மணத்தில் ஒரு பதிவை இணைத்து அதைத் தமிழ்மணமும் ஏற்றுக்கொண்டால் அதன் முகப்பில் அப்பதிவின் விவரம் சுட்டியுடன் வரும். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அது பின்னால் வந்து கொண்டேயிருக்கும் புதிய பதிவுகளால் முகப்பிலிருந்து காணாமல் போகும்.

அதே சமயம் அப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் வர வர அவையும் இற்றைப்படுத்தப்படும் ஆனால் மறுமொழிகள் என்னும் தலைப்பில் வரும்.

இப்போது நான் குறிப்பிடுவது இப்பதிவை. இது மட்டும் இம்மாதம் 6-ஆம் தேதியிலிருந்து தினமும் முதல் பக்கத்தில் வந்து கொண்டேயிருக்கிறது. இது ஒன்றும் அப்படியெல்லாம் கட்டணச் சேவையில் வருவதாகவும் தெரியவில்லை. பின்னூட்டம் எனப் பார்த்தாலும் நான் இட்ட ஒரே பின்னூட்டம் மட்டுமே காணப்படுகிறது. அது இதோ:

“dondu(#11168674346665545885) said...
அதென்ன உங்களது இந்தப் பதிவு மட்டும் விடாது தமிழ்மணத்தில் முதல் பக்கத்தில் இவ்வளவு நாட்களாக வருகிறது?

என்ன மந்திரம் போட்டீர்கள்”?

பதிவருக்கே விடை தெரியவில்லை என நினைக்கிறேன் அல்லது அது எப்படி எனக்கூறிவிட்டால் ஏல்லோரும் அவ்வாறே செய்கிறார்கள் என நினைக்கிறாரோ எனத் தெரியவில்லை.

சந்தடி சாக்கில் தமிழ்மணத்தில் காணும் இக்குறையையும் கூறிவிடுகிறேன். மறுமொழிகளை இற்றைப்படுத்துவதில் சில சமயம் லாஜிக் ஏதும் இல்லாமல் இருக்கிறது. எல்லா மறுமொழிக்களுமே உடனுக்குடன் இற்றைப்படுத்தப்பட்டது என்று கூறிட இயலாது. அதே சமயம் சிறிது சம்பந்தமே இன்றி பல நாட்களுக்கு முன்னால் இட்ட பின்னூட்டம் இற்றை படுத்தப்படுகிறது. இது பற்றி நான் தமிழ்மண நிர்வாகி ஒருவரிடமே கேள்வி வைத்தேன், பதில் கிடைக்கவில்லை.

அப்பதிவில் நான் இவ்வாறு குறிப்பிட்டேன், “பின்னூட்ட உயரெல்லை மீண்டும் வேண்டும் என லக்கிலுக் கூறினார். தற்காலிகமாகத்தான் அது நீக்கப்பட்டிருப்பதாக பதில் கூறப்பட்டது. ஏனெனில் 40 ப்ளஸ், 40 வரை என்றெல்லாம் வைப்பதால் தமிழ்மணப் பக்கம் திறக்க நேரமாகிறது என்று கூறப்பட்டது. இம்மாதிரி உயரெல்லையெல்லாம் காரியத்துக்காகாது என்று நான் கருத்து தெரிவித்தேன். மறுமொழியப்பட்ட பதிவுகள் இற்றைப்படுவது ஒரு ரெகுலரான செய்கையாக இல்லை என்றும், சில சமயம் எனது மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் சம்பந்தமேயின்றி சில நாட்களுக்கு பிறகு இற்றைப்படுவதை நானே கண்டதையும் கூறினேன். அதையும் கவனிப்பதாகக் கூறப்பட்டது”.

இன்னும் அதை கவனித்ததாகத் தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது