9/20/2011

Higher principles

சமீபத்தில் 1961-ஆம் ஆண்டில் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு திரைப்பட விழாவில் இந்தப் படம் செக்கோஸ்லாவிக்கியா நாட்டின் தரப்பிலிருந்து திரையிடப்பட்டது. அண்ணாசாலை அண்ணா சிலைக்கருகே இருந்த நியூ எல்ஃபின்ஸ்டன் தியேட்டரில் அதை அக்கால கட்டத்தில் பார்த்த போது எனக்கு வயது கிட்டத்தட்ட 15. டிக்கெட் விலை 84 பைசா.

அப்படத்தின் பின்னணியில் இருந்த சரித்திர விவரங்கள் எனக்கு அப்போது தெரியாது. ஒரு முன்முடிவும் இன்றித்தான் அப்படத்தைப் பார்த்தேன். படம் முழுக்க செக் மொழியிலும் ஜெர்மானிய மொழியிலும் இருந்தது. ஆங்கிலத் துணை தலைப்புகளால்தான் கதைப் போக்கை நிர்ணயிக்க முடிந்தது. அப்படத்தின் யூ ட்யூப் சுட்டி கீழே.



அப்படத்தை இத்தனை ஆண்டுகளாக நினைவில் வைத்திருந்ததற்கு முக்கியக் காரணமே செக் மற்றும் ஜெர்மானிய மொழி வசனங்களைக் கேட்டதுதான். அத்தருணத்தில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை மட்டும் அறிந்திருந்த நான், முதன் தடவையாக ஜெர்மன் மற்றும் செக் மொழிகளை அவற்றைத் தாய்மொழியாக கொண்டவர்கள் மூலம் கேட்டேன். அவற்றில் ஜெர்மன் பேசும்போது ஏதோ சம்ஸ்கிருதம் கேட்பது போல இருந்தது.

இப்போது படத்துக்கு போவோம். இன்றுதான் (20.09.2011) முழு படத்தையும் யூ ட்யூப்பில் பார்த்தேன். முதலில் பார்த்த பல புரியாத விஷயங்கள், பின்னணிகள் இப்போது புரிந்தன. Reinhard Heydrich என்பவன் ஹிட்லரால் நியமிக்கப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் முழு அதிகாரம் பெற்ற தலைவன். அவன் சொல்வதுதான் சட்டம். அவனை மே 1942 இறுதியில் கொல்ல முயற்சிக்கின்றனர் செக் போராளிகள். அதில் காயமுற்று அவன் ஜூன் 4-ஆம் தேதி இறந்து போகிறான். அந்தக் கொலைக்கு நாஜிக்கள் கொடூரமான முறையில் பழிதீர்க்கின்றனர். ஜூன் 3, 4 மற்றும் ஐந்தாம் தேதி நடந்த நிகழ்வுகளில் பள்ளியிறுதித் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் 3 மாணவர்களும் பலியாகின்றனர். அதுதான் கதை.

அந்த சில நாட்களின் நிகழ்வுதான் படம் முழுக்க வருகிறது. பரீட்சைநேர ஜுரங்கள், காப்பி அடிப்பது ஆகியவை சகஜமாகவே காட்டப்ப்டுகின்றன. லாண்டிரி நடத்திப் பிழைக்கும் ஒரு பெண்மணி, அவள் மகன் (மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மூவரில் ஒருவன், அந்த மகனின் வகுப்புத் தோழி, அவளது தந்தை (ஒரு வழக்கறிஞர்) ஆகியோர் மிக இயல்காக கதைக்குள் இணைக்கப்படுகின்றனர்.

ஹெய்ட்ரிச்சுக்கு பதிலாக நியமிக்கப்படுபவன் செக் மொழி, லத்தீன மொழிகள் ஆகியவற்றை நன்றாகவே பேசுகிறான். தங்க மீனை உயிருடன் பிடிக்கும் தனது சிறு மகனிடம், அந்த மீனை கொல்லாமல் குளத்தில் விடுமாறும் கூறுகிறான். மொத்தத்தில் நாம் அன்றாடம் காணும் சாதாரண மனிதன் மட்டுமே. இருப்பினும் ஒரு அல்ப காரணத்துக்காக மரணதண்டனை பெற்ற அந்த மூன்று மாணவர்கள் விஷயத்தில் கருணை காட்ட மறுத்து அவர்களும் இறக்கின்றனர்.

நேரம் இருந்தால் அப்படத்தை நிச்சயம் பார்க்கவும். அது கம்யூனிச பிரசாரம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அது என்னமோ உண்மையாக இருப்பதாகத்தான் எனக்கு படுகிறது. ஸ்டாலின், சோவியத் ஒன்றிய அரசு அதிகாரிகள் செய்விக்காத கொலைகளா? இருப்பினும் அதையெல்லாம் மறந்து இப்படத்தைப் பார்க்குமாறு சிபாரிசு செய்கிறேன்.

ஐம்பது ஆண்டுகள் கழித்து பார்த்த அப்படத்தில் பல காட்சிகளை அவை வருவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்னால் அவற்றுக்கான துணைத் தலைப்புகள் சேர்த்து என்னால் ஊகிக்க முடிந்தது. நான் 14 ஆண்டுகளுக்கு பின்னால் பார்த்த சபாஷ் மீனா, பத்துக் கட்டளைகள் ஆகிய படங்கள் விஷயத்தில் நடந்தது போலத்தான் இங்கும் நடந்தது. அதைக் குறிப்பிட்ட எனது ஜெயா டிவியின் நேர்காணல் இதோ.



அந்த ஜெயா டிவி பேட்டிக்கான மீதி வீடியோக்களை பார்க்க எனது இந்த இடுகைக்கு செல்லவும்,

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

BalHanuman said...

டோண்டு ஸார்,

ஜெயா டிவி நேர்காணல் சூப்பர்..

உங்களுக்கு புது மொழிகளை விளையாட்டாய் கற்கும் இயல்பான ஆர்வம் இருந்திருக்கிறது....

இரண்டு கேள்விகள்....

இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கலாமா ?

Unregistered என்று ஏன் ஒரு எரிச்சலூட்டும் பட்டை நடுவில் ?

dondu(#11168674346665545885) said...

மீதி வீடியோக்களை பார்க்க எனது இந்த இடுகைக்கு செல்லவும், http://dondu.blogspot.com/2008/01/blog-post_30.html

நான் உபயோகித்த மென்பொருளுக்கு காசுதராததால் அன்ரெஜிஸ்டர்ட் என பட்டை போட்டார்கள். நேர்காணல்தானே பரவாயில்லை என நான் விட்டு விட்டேன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

aotspr said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

bala said...

டோண்டு அய்யா,

நாமம் தானே போட்டிருக்கவேண்டும்?ஏன் பட்டை போட்டார்கள்?

பாலா

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது