9/21/2011

பாரதியாரும் கிருஷ்ணசாமி ஐயரும்

Explain with reference to context பற்றி நான் இட்ட இடுகையின் தொடர்ச்சியாகவும் இதை வைத்துக் கொள்ளலாம்.

சில நாட்கள் முன்னால் எதேச்சையாக பல புதையல்கள் கிடைத்தன. தி நகரில் பனகல் பூங்கா அருகில் உள்ள நியூ புக்லேண்ட் என்னும் புத்தகக் கடையில் நான் பல நாட்களாக தேடி வந்த உவேசா, பம்மல் சம்பந்த முதலியார், அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார், நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை, தொ.மு. பாஸ்கர தொண்டைமான் ஆகியோரது நூல்கள் கிடைத்தன.

இப்போது தமிழ் தாத்தா உவேசா அவர்களது உரைநடை நூல்களின் தொகுப்புகளை பார்த்து வருகிறேன். அவற்றில் நான் கண்டதின் ஒரு சிறு பகுதியை இங்கு இடுகையாக பதிப்பேன்.

மயிலை வடமொழிக் கல்லூரி, வெங்கடரமணா வைத்தியசாலை ஆகியவர்றின் தோற்றத்தில் பெரும் பங்கேற்றவர் திரு. வி. கிருஷ்ணசாமி ஐயர். வக்கீல், நீதிபதி ஆகிய பதவிகளில் செயலாக்கம் பெற்றவர். ஆங்கிலம் மற்றும் வடமொழிகளிலும் தமிழிலும் தேர்ச்சி பெர்றவர்.

அக்கால கட்டத்தில் ஒரு நிலை இருந்தது. ஆங்கிலம் நன்கு கற்றவர்கள், வடமொழி மீது அபிமானம் வைப்பவர்கள் ஆகியோர் தமிழை மதிக்க மாட்டார்கள் என்னும் பொது புத்தியைத்தான் குறிப்பிடுகிறேன் (இப்போது மட்டும் என்ன வாழுதாம் என முணுமுணுக்கிறான் முரளி மனோகர், லூசுல விடப்பா எனக் கூறுவது டோண்டு ராகவன்).

கிருஷ்ணசாமி ஐயர் ஒரு முறை சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்சங்கத்தின் கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்தார். மேலே கூற்ப்பட்ட பொது புத்தியை ஒட்டி, இவர் என்ன பெரிதாக தமிழ் பற்றி பேசிவிடப் போகிறார் என்றிருந்தனர் பலர். அக்கூட்டத்திற்கு வந்தவர்களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியும் ஒருவர்.

கிருஷ்ணசாமி ஐயர் தமிழில் உள்ள பெருமை வாய்ந்த நூல்களை அநாயாசமாக பட்டியலிடுவதுடன் பேச்சைத் துவங்கினார். திருக்குறளை திருவள்ளுவர் இயற்றியது இம்மொழியிலே, கம்ப ராமாயணமும் இம்மொழியிலே, நாயன்மார்களது தேவாரம், மாணிக்கவாசகரது திருவாசகம், ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தம் ஆகியவையும் இம்மொழியிலேதான். இம்மாதிரியே தமிழின் பெருமையை அப்பெரியவர் அனாயாசமாக அடுக்கினார்.

கேட்டவர் எல்லோரும் பிரமித்தனர், சுப்பிரமணியா பாரதியார் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு ஒரு தருணத்தில் இக்கருத்துக்களை வைத்து பாரதியார் இயற்றினார், எளிய நடைத் தமிழில் ஒரு பாடலை. அப்பாடல் இதோ,

செந்தமிழ் நாடென்னும் போதினிலே - எங்கள்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு
உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு
இளம் காதல் புரியம் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு - உயர்
வேதம் நிறைந்த தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு
கல்வி சிறந்த தமிழ்நாடு
பல்விதமாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் - நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை
மாலவன் குன்றம் இவற்றிடையே - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு - புகழ்
மண்டிக் கிடக்கும் நம் தமிழ்நாடு

இப்பாடலைக் கேட்டு, அதில் தனது கருத்துகள் பொதிந்திருப்பதையும் கண்டு திரு கிருஷ்ணசாமி ஐயர் மிக மகிழ்ந்தார். அப்பாடலுடன் பாரதியாரின் மர்றப்பட்டல்களையும் தொகுத்து அச்சிடச் செய்து இலவசமாக வினியோகம் செய்தார். பாரதியாரை ஆதரித்தவர்களில் இவரும் ஒரு முக்கியமானவர்.


ஆதாரம்: டாக்டர் உவேசா அவர்களின் உரைநடைத் தொகுதி - (முதல் தொகுதி), பக்கங்கள் 107, 108 & 109.

அன்புடன்,
டோண்டு ராகவன்
டிஸ்கி: இந்த இடுகைக்கும் இது போன்று பின் வரக்கூடிய இடுகைகளுக்கும் “தமிழினிமை” என்னும் புது சுட்டியை உருவாக்குகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

aotspr said...

பாரதியார் பற்றிய தகவலுக்கு நன்றி.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

BalHanuman said...

டோண்டு ஸார்,

தொ.மு. பாஸ்கர தொண்டைமானின் நூல் பற்றி இங்கு குறிப்பிடவில்லையே?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது