இந்த வார நட்சத்திரமான நிலாப்பெண்ணின் இப்பதிவு என்னை என்னுடைய இந்தப் பதிவை மறுவெளியீடு செய்யவைத்துவிட்டது.
வருடம் 1998. அப்போது டில்லியில் இருந்தேன். ப்ரிட்டிஷ் கவுன்ஸில் நூலகத்திலிருந்து மொழிபெயர்ப்புக் கலை பற்றி ஒரு புத்தகம் படிப்பதற்காக எடுத்து வந்தேன். அச்சமயம் எனக்கு 23 வருடங்கள் மொழி பெயர்ப்பு அனுபவம் இருந்தது. புத்தகத்தை படிக்கப் படிக்கத் தலை சுற்ற ஆரம்பித்தது. ஆசிரியர் எழுதுகிறார்: "மொழிபெயர்ப்பாளர்களுக்கு இன்றியமையாதத் தேவை ஒரு நல்லக் கணினி".
நான் வியந்தது: "கணினியா? அது எதற்கு?" அது வரை என் மொழிபெயர்ப்புகள் எல்லாம் கையாலேயே எழுதப்பட்டு வந்தன. வாடிக்கையாளர் விரும்பினால் சாதாரண டைப்ரைட்டரில் தட்டச்சு செய்விப்பேன், அவ்வளவுதான்.
மேலே ஆசிரியர் கூறுகிறார்: "மூலப் பிரதியைப் பார்த்ததும் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரின் விரல்கள் தன்னைப்போலவே விசைப்பலகையில் பறக்க ஆரம்பிக்கும்."
பெருமூச்சு விடுவதை விட வேறு ஒன்றும் தோன்றவில்லை எனக்கு.
வருடம் 2002. சென்னைக்கு வந்து 7 மாதங்கள் ஆகி விட்டிருந்தன. அது வரை கணினி வாங்காமல் பஜனை செய்துவந்த நான் கணினி வாங்க வேண்டியக் கட்டாயம் வந்தது. தட்டுத் தடுமாறி கணினியில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். எடுத்த எடுப்பில் ஒரு எக்ஸெல் கோப்பு வந்தது. ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. என் நண்பன் உதவியுடன் செய்து முடித்தேன். அதன் பிறகு என்னவென்றால் இத்தனை வருடம் கணினி இல்லாமல் எப்படிக் காலம் கழித்தேன் என்று பிரமிப்பாக உள்ளது. இப்பதிவை சற்றே மாற்றியமைக்கும்போது என் விரல்கள் தட்டச்சுப் பலகையில் தன்னைப்போல நடனம் செய்கின்றன என்பதைப் பார்க்கும்போது மனது பூரிக்கிறது.
கணினியைத் தொடும்போது எனக்கு வயது 56. தினம் ஒரு புதிய பாடம் கற்றதில் 30 வயது குறைந்துப் போனது என் மனதில். நான்காண்டுகளுக்குப் பிறகும், 60 வயதை தொடப்போகும் இந்த நிலையிலும் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். இதைத்தான் பெரிசுகள் அடிக்கும் லூட்டி என்று பலரும் தமிழ்மணத்தில் அலுப்புடன் என்னைப்பற்றியும், ஜோசஃப், தருமி, ஞானவெட்டியான் மற்றும் என்னார் அவர்கள் பற்றியும் கூறுகிறார்கள் என்பதையும் சந்தோஷத்துடன் பார்க்கிறேன்.
தமிழ் வலைப்பூ பதிக்க ஆரம்பித்ததில் மனமே ஜிவ்வென்று வானை நோக்கிப் பறக்கிறது. தமிழில் தட்டச்சு செய்வது எவ்வளவு சுகமாக இருக்கிறது? சவலைக் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைத்ததுப் போல் உள்ளது. தாய் மொழியின் சுகமே தனிதான். இவ்வளவு மாதங்கள் பிறகு இன்றைக்கும் அதே பிரமிப்புதான்.
இணையத்தின் உதவியும் இங்குக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. சில நாட்களுக்கு முன் நான் கார்களில் பொருத்தப்படும் ரேடியோ ஆம்ப்ளிஃபையர்கள் சம்பந்தமாக ஒரு operating manual-ஐ ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. ஒரு குறிப்பிட்ட வணிகப் பெயரைத் தாங்கிய கருவி அது.
இந்த இடத்தில் நான் மொழி பெயர்ப்பு எவ்வாறு செய்கிறேன் என்பதையும் விளக்க வேண்டியிருக்கிறது. வாடிக்கையாளர்கள் கோப்பை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்புவர். அதை என் வன்தகட்டில் இறக்கிக் கொண்டு "இப்படிச் சேமி" நகல் எடுத்துக் கொள்கிறேன். இரண்டுக் கோப்புகளையும் இரண்டு தனி ஜன்னல்களில் திறந்துக் கொள்கிறேன். அவ்விரண்டையும் ஒன்றின் மேலொன்றாய் அடுக்கிக் கொள்கிறேன். ஆரம்பத்தில் இரு கோப்புகளும் ஒரு மொழியிலேயே இருக்கும். கீழே இருக்கும் கோப்பைப் படித்துக் கொண்டே மேலே இருக்கும் கோப்பில் தேவையான மொழிக்கு மாற்றுகிறேன். அவ்வளவுதான். எல்லாம் முடிந்தப் பிறகு என் வசம் இரண்டுக் கோப்புகள் ஒரே கட்டமைப்பில், ஒரே பக்க எண்களுடன் இருக்கும். எல்லா விதத்திலும் ஒன்று போலவே இருக்கும், ஆனால் மொழிதான் வேறு. ப்ரின்ட் அவுட்டா? மூச். தேவையே இல்லை. வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல்லில் மொழிபெயர்ப்பை அனுப்ப வேண்டியதுதான்.
ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதை என்னைப் போன்றவர்கள் நேரடி மொழி பெயர்ப்பு என்று கூறுவோம். அதாவது வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்கோ அல்லது அதன் ஈடான மொழிக்கோ (ஆங்கிலம்) மொழி பெயர்ப்பதுதான் அது. அதுவே ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கொ அல்லது பிரெஞ்சுக்கோ மொழி பெயர்ப்பது ரிவர்ஸ் மொழி பெயர்ப்பு என்று ஆகிவிடும். இது உலகளாவிய நிலை. ஜெர்மனை தாய்மொழியாகக் கொண்ட ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு நிலைமை நான் எனக்கு கூறிக் கொண்டதற்கு தலைகீழ் ஆகும்.
மொழிபெயர்ப்பு உலகில் இப்போதைய நிலை என்னவென்றால் முடிந்த வரை வேறு மொழியிலிருந்து தாய்மொழிக்குத்தான் மொழி பெயர்க்க வேண்டும், ரிவர்ஸ் மொழிபெயர்ப்பைத் தவிர்க்க வேண்டும். ஆனாலும் நான் பலமுறை அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்.
இப்போது நான் மேலே குறிப்பிட்ட வேலைக்கு வருவோம். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வாக்கியத்தை பிரெஞ்சில் எழுதியதும் அது சரியா, அதாவது பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஒத்துக் கொள்வார்களா என்று பார்ப்பது முக்கியம். இல்லாவிட்டால் வாக்கியம் இலக்கண சுத்தமாக இருந்தாலும் அதற்கு உயிர் இருக்காது என்பதே உண்மை. அதற்காக இந்த இடத்தில் நான் பிரெஞ்சு கூகிளை திறந்து வைத்துக் கொண்டேன். நான் மொழி பெயர்த்த ஒரு பிரெஞ்சு வாக்கியத்தை தேடு பெட்டியில் போட்டு க்ளிக் செய்தேன். கிட்டத்தட்ட 10 hits கிடைத்தன. அதாவது நான் எழுதிய வாக்கியம் ஒத்துக் கொள்ளக் கூடியதே. ஆனால் இங்கு இன்னொரு சோதனை முக்கியம். அந்த வாக்கியம் வரும் தளங்கள் பிரெஞ்சுத் தளங்களாக இருக்க வேண்டும். ஆங்கிலத் தளங்களாக இருந்தால் அவையும் என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்த வேலையையே குறிக்கும். அவ்வளவு சிலாக்கியமானதாக அவற்றைக் கருத முடியாது. ஆகவே தளம் தளமாக அதையும் பார்க்க வேண்டியிருந்தது. என்ன ஆச்சரியம் அவற்றில் ஒன்று நான் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த கம்பெனியின் ஆம்ப்ளிபையரைப் பற்றியதே. ஆனால் என்ன பொருளின் நம்பரில் சிறிது மாற்றம் அவ்வளவே. மற்றப்படி பத்திகள் எல்லாம் அப்படியே இருந்தன. தளமும் பிரெஞ்சுத் தளமே.
பிறகு என்ன, வேலை சுலபம்தானே. அந்த சுட்டியில் குறிப்பிட்டிருந்த கட்டுரையை அப்படியே ஒரு word கோப்பில் நகலெடுத்துக் கொண்டு, நம்பர்களை மட்டும் தேவைக்கெற்ப மாற்றியதில் என் வேலைக்கான மொழிபெயர்ப்பு தயார். மூன்று நாள் எடுத்திருக்க வேண்டிய வேலை இப்போது ஒரே நாளில் முடிந்தது. சம்பந்தப்பட்ட கட்டுரை பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டவரால் செய்யப்பட்டிருந்ததுதான் இன்னும் உபயோகமான விஷயம். வாடிக்கையாளருக்கும் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி.
முன்பெல்லாம் பல நூலகங்களுக்கெல்லாம் சென்று பல நாட்கள் படிக்க வேண்டியிருந்தது. இப்போது இதையெல்லாம் வீட்டிலிருந்தே செய்ய முடிகிறது. இதற்கு கூகிள் மற்றும் இணையம் உதவுகின்றன.
இம்மாதிரி தமிழ்மணத்தில் பதிவுகள் போட்டு, பின்னூட்டங்கள் இட்டு என்று சுவாரசியமாக காலம் கழிக்கும்போது வாடிக்கையாளர் அனுப்பும் கோப்புகளைத் தாங்கி வரும் மின்னஞ்சல்கள் பற்றிய அறிவிப்பு கூகிள்டாக் கொப்புளத்தில் மேலே எழும்புகின்றன. உடனே தமிழ்மண வேலையை சற்றே ஆறப்போட்டு அந்த வேலைகளைச் செய்து திருப்பி அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் பெறும் சந்தோஷம் அவர் எனக்கு மேலும் வேலைகள் அனுப்புவதில் முடிகிறது.
வாழ்க்கை அற்புதம். ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க அனுபவிக்க, என் மனம் மிக உவகை கொள்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
16 hours ago
19 comments:
can u contact me?
எனக்கும் அதே ஃபீலிங்ஸ் தான். தாய்மொழியில் எது செய்தாலும் அது ஒரு தனி இன்பம். கணனியில் தமிழில் செய்தால் 29 வயது குறைந்து 1 வயது குழந்தையாக கையில் கிடைப்பதை தவழ்ந்து தவழ்ந்து உருட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறேன். தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை "போர் (Bore)" என்றாகிவிட்டது :-)
தலிவா.. மன்னிச்சுக்கோங்கோ...
"தலிவா.. மன்னிச்சுக்கோங்கோ... "
????????????????????????????
அன்புடன்,
டோண்டு ராகவன்
புஷ் வருகையை ஒட்டி நான் போட்ட பதிவுக்கு த்ங்களின் பெயரை.. வைத்தமைக்கு... :-s
பாலபாரதி அவர்களே,
நீங்கள் குறிப்பிடுவது இந்தப் பதிவைத்தானே? http://balabharathi.blogspot.com/2006/02/blog-post_28.html
அதை நான் காம்ப்ளிமெண்டாகவே எடுத்துக் கொண்டேன். அப்பதிவும் நன்றாகவே உள்ளது.
வாழ்க்கை அற்புதமயமானது என்பதில் என்ன சந்தேகம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
லத்தீன் அமெரிக்க நாவல்களை ஆங்கிலத்தில் படிக்கும்போது அது மொழிப் பெயர்த்ததாகவே தோன்றாது. எடித் க்ரோஸ்மன் போன்றோர் இதில் தேர்ந்தவர்கள். தங்களின் மொழிப்பெயர்ப்பு அனுபவங்களை வைத்து ப்ரெஞ்ச் படைப்புகள் சிலவற்றை தமிழில் எங்களுக்குத் தரலாமே(உங்கள் விருப்பமும், நேரமும் பொறுத்து)?
ராஜேஷ்
ராஜ் சந்திரா அவர்களே, கண்டிப்பாகச் செய்யலாம். ஆனால் இதில் பல விஷயங்கள் நடக்கவேண்டும். காப்பிரைட்ஸ் பெறுவது அவ்வளவு சுலபமில்லை. அதெல்லாம் செய்ய நிறுவன பலம் வேண்டும். தமிழில் அவ்வாறு செய்ய ஏதேனும் பதிப்பகத்தார்தான் முயற்சி செய்ய வேண்டும். பிறகு மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும். அதற்கான சன்மானம் என்று வேறு இருக்கிறது. சாதாரணமாக தொழில் நுட்ப விஷயங்களை மொழிபெயர்த்தல் வரும் வருமானம் இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்குக் கிடைக்காது என்பதே நிஜம். உதாரணத்துக்கு காலம் சென்ற எழுத்தாளர் சமுத்திரம் அவர்கள் தன்னுடைய படைப்பு "வாடாமல்லி"யை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க என்னை அணுகினார். அக்கதையைப் படித்தவன் என்ற முறையில் அதன் அளவு எனக்குப் பரிச்சயம். நிச்சயமாக அதை மொழிபெயர்க்க என்னுடைய விலை 20,000 ரூபாய்களுக்குக் குறையாமல் இருந்திருக்கும். ஆனால் அவ்ர் ஆஃபர் செய்ததோ 5000 ரூபாய்களே. ஆகவே நான் வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை.
என்ன செய்வது நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன். அப்படித்தான் சிந்திக்க முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களே,
நேரமின்மை காரணமாக இப்போதுதான் உங்கள் பதிவைப் படிக்க முடிந்தது. நல்ல பதிவு.
'வாழ்க்கை அற்புதம்' என்பதைப் படிக்கும்போதே எனக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அதனால்தான் 'மகிழ்ச்சியான மனிதர்கள் மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்க முடியும்' என்கிறார்கள்
மொழிபெயர்ப்பாளன் வேலையில் இத்தனை சுவாரஸ்யமா?
கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.
அதைவிட அதை நீங்கள் எழுதும் லாகவம் நன்றாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்..
டோண்டு அவர்களே,
நேரமின்மை காரணமாக இப்போதுதான் உங்கள் பதிவைப் படிக்க முடிந்தது. நல்ல பதிவு.
-Thanks to Nila, and to the computers! Cut-paste, avvaLavudhaan! Mr.Raghavan, very good narration and also I liked your frankness on mentioning about Professional translators! Good blog
நன்றி ஜோசஃப் அவர்களே. எழுத்துதான் வாழ்க்கை என்று ஆன பிறகு எழுதுவதில் என்ன அதிசயம் இருக்க முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி ஜெய. சந்திரசேகரன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி நிலாப்பெண் அவர்களே. உங்கள் பதிவு ஒன்றுதான் நான் இப்பதிவை மீள்பதிவு செய்யத் தூண்டியது என்பதையும் பார்த்தீர்கள்தானே.
கல்கியில் உங்கள் கதை வெளியானபோது படித்தவன் நான். அக்கதை மனதைக் கொள்ளை கொண்டது. அதன் ஆசிரியையாக உங்களை இப்போது பார்க்கும்போது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி உள்ளூர் அன்னியன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள டோண்டு,
//இதைத்தான் பெரிசுகள் அடிக்கும் லூட்டி என்று பலரும் தமிழ்மணத்தில் அலுப்புடன் என்னைப்பற்றியும்,
ஜோசஃப், தருமி, ஞானவெட்டியான் மற்றும் என்னார் அவர்கள் பற்றியும் கூறுகிறார்கள் ....//
நல்லவேளை இந்த லிஸ்ட்டிலே என் பேர் இல்லை :-))))
அருமையான பதிவு. வேலைக்கும் வேலை, காசுக்கும் காசு. அதேசமயம் தமிழ்மணத்துலே குடியிருப்பு!
ஜாலிதான் போங்க.
ஆம் துளசி அவர்களே, வாழ்க்கை ரொம்ப ரொம்ப ஜாலிதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அருமையான பதிவு. வேலைக்கும் வேலை, காசுக்கும் காசு. அதேசமயம் தமிழ்மணத்துலே குடியிருப்பு!//
பாராட்டுகள்.. வாழ்க்கை அற்புதமயமானதுதான், நாம் ஒழுங்காக
வாழும்வரை.. சந்தர்ப்பங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முன்னேறுபவர்களுக்கு வாழ்க்கை என்றுமே அற்புதமானதுதான்.. இளைய தலைமுறையினருக்கு உங்களின் இம்மாதிரியான பதிவுகள் ஒவ்வொன்றும் பாடமே, பொக்கிஷமே !!
நன்றி சோம்பேறி பையன் அவர்களே. நீங்கள் சொன்னதையே நான் வேறு வார்த்தைகளில் எங்கள் மொழிபெயர்ப்பாளர்களின் தலைவாசலில் ஒரு விவாதத்தில் குறிப்பிட்டேன். பார்க்க: http://www.proz.com/topic/22010?start=15&float=
அதில் ஒரு பகுதி இங்கே:
"Looking back, I wonder. What made me tick? Things have happened to me and fortunately all of them were favorable or I was able to turn them to my advantage. Even now I can do the translation in handwritten manuscripts. In fact I still do it now and then. There is this client who is having bunches and bunches of engineering drawings. I go to his place and start doing the translations by hand on the blueprint itself. One draughtsman is assigned to me who incorporates them with his CAD software. I charge by the hour and believe me it is a very good rate. Main thing is, both the client and I are happy with this arrangement. Here too I tell the client to place me near a computer with an internet connection, which I consult for difficult terms. I carry my dictionaries with me of course."
அதில் என் பெயர் நரசிம்மன் ராகவன் என்று வரும். அது ஒரு பிரெஞ்சு விவாதக்களம். நான் மட்டுறுத்தனரின் அனுமதி பெற்று ஆங்கிலத்திலே இட்டேன். அதில் ஒருவர் என்னை ஏன் பிரெஞ்சில் தரக்கூடாது என்று பிரெஞ்சில் கலாய்க்க, நான் தருவதற்குள் என்னுடைய பிரெஞ்சு சக மொழிபெயர்ப்பாளர் ஒருவர் நான் எழுதியதை அருமையாக பிரெஞ்சில் மொழி பெயர்த்தார். இதுதான் இணைய நட்பு என்பது. இப்போது சொல்லுங்கள் வாழ்க்கை அற்புதமயமானதுதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment