சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குறு நாவல் படித்தேன். ஆசிரியர் பெயரைக் கவனிக்கவில்லை. அது போலவே நாவலின் தலைப்பையும் கவனிக்கவில்லை. ஆனால் பிளாட் மட்டும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து அதில் பல நாட்கள் தூக்கம் தொலைத்தேன். அதன் பிளாட் பின்வருமாறு.
கதாநாயகனின் தாய் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் மனம் பேதலிக்கிறாள். அதற்கு ஒரு சோக பின்னணி உண்டு. திருவாங்கூர் மன்னர் (ரவிவர்மாவோ ஸ்வாதி திருநாளோ) தனக்கு எதிராக சதி செய்த பல உயர்குலத்தவரை கழுவேற்றி, அவர்களது மனைவிகளை செம்படவர்களுக்கு தர அந்த குல ஸ்த்ரீக்கள் தற்கொலை செய்ய, அந்த வம்சத்து பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதில் மனம் பேதலிக்க என கதை போகிறது.
இது இரா. முருகன் அவர்கள் எழுதியது என பலகாலம் நினைத்து கொண்டிருந்தேன். பிறகு அவரிடமே இது பற்றி கேட்டபோது இது ஜெயமோகன் அவர்கள் வேறு பெயரில் எழுதியது என்றார். ஆக அது ஒன்றுதான் நான் படித்த ஒரே ஜெயமோகன் புத்தகம். மற்றப்படி அவரைப் பற்றி பல செய்திகள், பல வம்புகள். ஜெயமோகன் அவர்களுக்கு மின்னஞ்சலிட்டு அது பற்றி கேட்க, அவர் அக்கதையின் தலைப்பு அம்மன் மரம் என்றும், அதை தன் அண்ணாவின் பெயரில் எழுதினதாகவும் கூறினார்.
திடீரென ஒரு நாள் எதேச்சையாக அவரது வலைப்பூவை பார்க்க நேர்ந்தது. அடேங்கப்பா, மனிதர் என்னமாதிரி எழுதுகிறார்! ஃபிரெஞ்சு எழுத்தாளர் ஃப்ரான்ஸ்வா கவன்னா (François Cavanna) எனது அபிமான எழுத்தாளர். மனிதரிடம் ஃபிரெஞ்சு மொழி அப்படி விளையாடும். அதே ஆளுமையை ஜெயமோகனின் தமிழில் பார்க்கிறேன். பல சுவைகளில் எழுதுகிறார். அவற்றில் என்னைக் கவர்ந்தது நகைச்சுவையே. அதற்கெனவே தனி லேபல் வேறு வைத்திருக்கிறார். அதிலிருந்து நான் ரசித்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தருவதுதான் இப்பதிவு. சும்மா சொல்லப்படாது. தேர்ந்தெடுப்பதில் எதை எடுக்க எதை விட என்று நான் திண்டாடியது நிஜம். எல்லாவற்றையும் எடுக்க ஆசைதான், ஆனால் அது நடக்கும் காரியமா? எது எப்படியானாலும் இம்மாதிரி பல சாய்ஸ்கள் கொடுத்து என்னை அலைய விட்டீர்களே, இதெல்லாம் நியாயமா ஜெயமோகன்?
1. தமிழாசான் ஏசுஞானமரியதாசன் யாப்பிலக்கணம் சொல்லித் தந்த முறை
//தமிழய்யா ஏசுஞானமரியதாசன் அவர்கள் இடைவேளையில் மோதகம் தின்று டீ குடித்துவிட்டு புன்னகையுடன் வகுப்புக்கு வந்து சாக்குக்கட்டியால் கரும்பலகையில் “யாப்பு” என்று எழுதி அடிக்கோடிட்டதுமே சிரிப்பு ஆரம்பம். எங்கள் பள்ளியில் இயல்பாகப் புழங்கி வந்த ஒரு சொல்லுக்கும் அதற்கும் அரைக்கணமே வேறுபாடு.
“லேய் என்னலே சிரிப்பு, மயிராண்டி. செருப்பால அடிச்சி தோல உரிச்சிருவேன்.சிரிப்பு… சிரிக்கப்பட்ட மோரைகளை பாரு…ஏலே உனக்க அம்மைக்க ஆமக்கன் இஞ்ச துணியில்லாம நிக்கானேலே? வாய மூடுங்கலேநாறப்பயக்கலே… வெவரமும் கூறும்கெட்ட இந்த ஊருல என்னைய வேலைக்குப்போட்ட தாயளிய மொதல்ல போயி மண்டையில அடிக்கணும்…காலையில எந்திரிச்சு வந்திருதானுக வாயையும் களுவாம…” என்று ஏசுஞானமரியதாசன் முன்னுரைவழங்கிவிட்டு நேராக பாடத்திற்குள் புகுந்தார்.
“ஓரோ பயக்களும் கண்டிப்பாட்டு யாப்பு அறிஞ்சிருக்கணும்…” என்றார் ஏசுஞானமரியதாசன். “ஓம் சார்!” என்றான் தங்கச்சன். “என்னலே ஓமு?” “சார் சொன்னது உள்ளதாக்கும்” ஏசுஞானமரியதாசன் தலைசரித்து அவனைப்பார்த்தபின் “என்னத்துக்கு?” “நாளைய தலைமுறைக்கு சார்!” தங்கச்சன் எஸ்எ·ப்ஐ உறுப்பினர். சகாவு ஹேமச்சந்திரன் நாயராலேயே பெயர்சொல்லி அழைக்கபப்படும் தகுதி கொண்டவன். “இரிடே தங்கச்சா…அப்பம் சங்கதி அதாக்கும். நாளைய தலைமுறையை உருவாக்குததுக்கு யாப்பு அத்தியாவிசியமாக்கும்.கேட்டுதால மயிராண்டிமாரே…இருந்து பாக்கானுக பாரு…இவனுக கண்ணைக்கண்டாலே எனக்கு ஒருமாதிரி கேறிவருதே…”
அடுத்த சொல்லாக “அசை” என்று எழுதியதுமே நான் அதை என் நோட்டில் அவசரமாக எழுதினேன். “…ஆகா எளுதிப்போட்டாம்லே…கரடிக்க மகன் எளுதிப்போட்டாம்லே..என்னலே எளுதினே… ?” “அசை” “அசைண்ணா என்னலே அர்த்தம்?” “துணிகாயப்போடுத கயிறு சார்” “அய்யட, உடுத்தா வேட்டி கிளிச்சா கௌபீனம்னு சொல்லுத மாதிரி…. வந்து சேருதானுக…ஏல மலையாளத்து மயிரான்லாம் வந்து தமிளு படிக்கல்லேண்ணு இஞ்ச எவன்லே கேட்டான்? இங்கிணயுள்ளவன் படிச்ச தமிளுக்கே நாடு நாறிட்டு கெடக்கு… ஏலே அசைண்ணா….”
“மாடு அச போடுகது சார்” என்றான் ஸ்டீபன். வகுப்பில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஏசுஞானமரியதாசன் ஸ்டீபனை உற்றுபார்த்து சில நிமிடங்கள் நின்ற பின் மென்மையான குரலில் “லே மக்கா, உனக்க அப்பன் ஞானதாஸ¤ கள்ளுக்கடையிலவடைண்ணு நெனைச்சு வேதக்கண்ணுக்க மூக்குபொடிக்குப்பிய எடுத்துக் கடிச்சவனாக்கும். நீ அதைச் சொல்லல்லேண்ணாத்தான் நான் நிண்ணு பாக்கணும். வித்தில உள்ளதுல்லா கொத்துல நிக்கும்?…” பெருமூச்சுவிட்டு “ஆரும் தோக்குக்கு உள்ள கேறி வெடி வைச்ச வேண்டாம். பூர்வஜென்ம பாவத்தினாலே ஒருத்தன் இஞ்ச கெடந்து மூச்சறுக்குத எளவ கேட்டு மனசிலாக்கிப் படிச்சாப்போரும்…” என்றபின் “அசைண்ணா வார்த்தைக்க ஒரு துண்டாக்கும்.இப்பம் இந்த ஆயிரங்காலட்டய நாம நாலஞ்சா வெட்டினாக்க ஓரோ துண்டும் ஒத்தைக்கு ஊர்ந்து போவும்லலே, அதைமாதிரி ஒரு வார்த்தைய நாம வெட்டினாக்கதனியாட்டுபோற துண்டுகளாக்கும் அசைண்ணு சொல்லுதது…”
எனக்கு பளீரென்று மின்னியது. ஏசுஞானமரியதாசன் “… ஆனா போற போக்குல பீடிக்கடையில தடம் போயில நறுக்குதது மாதிரி போட்டு வெட்டப்பிடாது. அதுக்கொரு கணக்கு இருக்கு. அந்தக் கணக்கயெல்லாம் அந்தக்காலத்திலசோலிமயிருகெட்ட பண்டிதனுங்க தேமா புளிமாண்ணு வாயி புளிச்சா மாங்கா புளிச்சாண்ணு தெரியாம எளுதி வச்சிருக்கானுக. அத இப்பம் உங்ககிட்ட சொன்னா அதவச்சுகிட்டு புதிசாட்டு நாலஞ்சு கெட்டவார்த்தைய உருட்டி வைப்பிய…அதனால நான் ஒரு கணக்காட்டு சொல்லுதேன்…லே சாம்ராஜு அங்க என்னலே முளிக்கே…முளி செரியில்லியே..”
சட்டென்று ஒரே வகுப்பில் பாடல்களை அசைபிரிக்கும் கணக்கை இலகுவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டார் ஏசுஞானமரியதாசன். அந்த ஒரு மணிநேரத்தில் கற்ற கணக்கு இந்தநாள் வரை செய்யுட்களைப் படிப்பதற்கு கை கொடுக்கிறது. யாப்பை முதலில் அசைபிரிக்கக் கற்றுக்கொடுத்தபடி தொடங்கவேண்டும் என்பது பழைய கவிராய மரபின் வழிமுறை. அசைபிரிக்கத் தெரிந்ததுமே பழந்தமிழ்பாடல்கள் பிசுக்கு நீக்கப்பட்ட கண்ணாடி வழியாகத் தெரிவதுபோலத் தெளிவடைகின்றன.கண்ணில் பட்ட அனைத்துச் சொற்சேர்க்கைகளையும் பாடல்களையும் அசைபிரிக்க ஆரம்பித்தோம். ‘ஐந்து கரத்தனை யானைமுகத்தனை’ முதல் ‘சும்மா இருந்தா அம்மைதாலி அறுப்பேன்..’ போன்ற நாட்டுப்புற இலக்கியங்கள் வரை//.
நாட்டியப் "பேர்வழி" பத்மினியைப் பற்றி:
//(சைதன்யாவிடம்) நான் நிதானமாக விளக்கினேன் ”நீ இப்ப பெரிய பொண்ணுல்ல? பெரிய பொண்ணுங்கல்லாம் ஸ்டைலா, ஒருமாதிரி பந்தாவா நடந்துவரணும்.. சினிமால வாறதுமாதிரி…”
”போப்பா. அதுக்குண்ணு நாட்டியப்பேர்வழி மாதிரி கைல சொப்பு வச்சுக்கிட்டு ஆட்டிட்டே வரணுமா?” என்று சொல்லி தொற்றி ஜன்னல்மேல் ஏற நான் அவளைப்பிடித்து உட்காரவைத்து விசாரிக்கத்தலைப்பட்டேன். ”அதென்னதுடீ நாட்டியப்பேர்வழி?”
”அஜிதான் சொன்னான்….அந்த மாமிக்கு அப்டி ஒரு பேரு உண்டுண்ணுட்டு” ”எந்தமாமி?” ”புருவத்திலே கசவு ஒட்டி வச்சுகிட்டு அதை ஆட்டி ஆட்டி கண்ணெமைய இப்டி படபடாண்ணு மூடிமூடி பேசுவாங்களே? வாயி கூட சின்னதா டப்பி மாதிரி இருக்குமே…”
எனக்குப் பிடிகிடைக்கவில்லை ”ஆருடீ?” அவள் கண்களை நாகப்பழம் போல உருட்டி ” மூஞ்சியிலே செவப்பா பெயிண்டு அடிச்சிருப்பாங்களே? மூக்குத்தியும் போட்டிருப்பாங்க…தோளை இப்டி பயில்வான் மாதிரி தூக்கிட்டு நடப்பாங்க…” சைதன்யா செய்யுள் தெரியாமல் பெஞ்சுமேலேறி நிற்க நேரிட்ட முகபாவனைகளைக் காட்டி சட்டென்று தெளிந்து ”ஆ! அவுங்க பத்துமணிக்கு…இல்ல..அவங்க பேரு வந்து பத்துமணி…இல்ல அது அஜி சொல்றது. அவுங்கே…–”
நாட்டியப்பேரொளி பத்மினி என்னுடைய அப்பாவின் கனவுக்கன்னியாக இருந்திருக்கிறார்கள் என்று அவரது பாலியநண்பர் நாராயணன் போற்றி சொன்னார். அப்பாவுக்கு நாயர் ஸ்திரீகளை மட்டுமே கனவுக்கன்னிகளாக ஏற்க முடியும். பத்மினிக்குப் பின்னால் அவர் கனவு காண்பது குறைந்துவிட்டாலும் ஒரே ஒருமுறை அப்பு அண்ணனிடம் அம்பிகா படத்தைக் காட்டி ”ஆருடே இது?” என்று கேட்டார். நாயர்தான் என்றும் உறுதிசெய்துகொண்டார்.
ஆகவே நான் பள்ளி நாட்களிலேயே பத்மினியை ஒரு சித்தி அந்தஸ்து கொடுத்துத்தான் வைத்திருந்தேன். கறுப்புவெள்ளைப் படமொன்றில் அவர்களின் குட்டைப்பாவாடை குடையாகச் சுழன்றெழுந்தபோது தலைகுனிந்து மேப்புறத்து பகவதியிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தேன்.’நீலவண்ண கண்ணா வாடா’ என்று அவர்கள், பக்கத்துவீட்டிலிருந்து தூக்கிக் கொண்டுவரப்பட்டமையால் திருதிருவென விழிக்கும் குண்டுக் குழந்தையை கொஞ்சியபடி, பாடும் பாட்டைப் பார்த்து மனமுருகியும் இருக்கிறேன்.
அப்படியானால் சைதன்யாவுக்கு பாட்டி முறைதானே?”..அப்டில்லாம் சொல்லப்பிடாது…அவுங்கள பத்மினிப் பாட்டீண்ணுதான் சொல்லணும்… என்ன?” .”அப்ப நாட்டியப்பேர்வழிண்ணு அஜி சொல்றான்?” என்று புருவத்தைச் சுளித்தாள். பொறுமையை சேமித்து ”அப்டீல்லாம் சொல்லப்படாது பாப்பா. அவங்க எவ்ளவு கஷ்டப்பட்டு டான்ஸெல்லாம் ஆடறாங்க… பத்மினிப்பாட்டீண்ணுதான் சொல்லணும்” பத்மினி நாயர்தானே, ஏன் அம்மச்சி என்றே சொல்லிவிடக்கூடாது? ஆனால் அஜிதனை அப்படிச் சொல்லவைப்பது கஷ்டம் என்று உணர்ந்தேன். அவனுக்கு பத்மினி என்றாலே சிரிப்பு. சிவாஜியுடன் அவர் சேர்ந்து நிற்பதைக் கண்டாலே அவன் வயிறு அதிரும்.
”செக்கச் சிவந்திருக்கும் முகத்தில்ல்ல்ல் புளிரசமும்…” என்று பாடி அறுபது பாகை சாய்ந்து முகத்தில் விரல்களை சரசரவென பரவ விட்டு புருவத்தை நெளிந்தாடச் செய்து ஆடிக்காட்டினான். எனக்கே தாங்க முடியவில்லை. முன்கோபக்காரரான அப்பா இருந்திருந்தால் உடனே குடையை எடுத்துக் கொண்டு நிரந்தரமாக வீட்டைவிட்டுக் கிளம்பி சென்றிருப்பார்– குடை இல்லாமல் அப்பா எங்கும் போவதில்லை.//
தன் மனைவி, குழந்தைகள் சகிதம் அவர் தனது வேட்டகத்துக்கு சென்ற அனுபவம்
//பேருந்து கிளம்பியதும் மலரும் நினைவுகள். ”திருச்சியிலே ஹாஸ்டலிலே இருந்து கெளம்பறப்ப நான் ·போன் பண்ணுவேன்…அப்பல்லாம் செல் கெடையாதுல்ல? போன் பண்றப்பவே எங்கம்மா ஒரே சத்தமா பேசுவாங்க. பாப்பா பத்திரமா வா பத்திரமா வான்னு ஒரு பத்துவாட்டி சொல்லுவாங்க…”
மெல்லமெல்ல பேருந்தின் வேகத்துக்கு ஏற்ப உள்ளே ஆள் மாறிக் கோண்டிருப்பதை நான் அறிவென். அங்கே இறங்கியதும் நான் பார்த்து பழகியிராத புதிய பெண் ஒருத்தி பஸ்ஸை விட்டு இறங்கி ”என்னங்க… பாத்து எறங்குங்க…அஜி அப்பா பைய வாங்கிக்கோ”.சட்டென்று என்னை மாற்றிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான், பழகிவிட்டது. ”கெளம்பறது வரைக்கும் இவங்களுக்கு லீவு கெடைக்குமாண்ணு ஒரே டென்ஷன்பா… அம்மா நல்லாஇருக்கியா? ஏன் எளைச்சு போயிட்டே?”
அதைப்புரிந்துகொள்ளலாம், பயணம் முழுக்க ஒருகணம் கூட கண்விழிக்காமல் வந்த சைதன்யா மாறியிருப்பதை அறிவது திகிலூட்டும் அனுபவம். ”பாத்தி..எனக்கூ இங்க அரிக்குது பாத்தீ..இவேன் எம்மேல சாஞ்சு கனமா இருந்தான் தெரீமா?” பதினொருவயது கைக்குழந்தையின் மழலை. ”இங்கியா பாப்பா? பாட்டி தடவி விடுவேனாம்…எஞ்செல்லக்குட்டி நல்லா தூங்கிச்சா? எங்க பாப்பா நல்ல எச்சி மணமா இருக்கே…ம்ம்ம்” ”அப்பா இவ ஏம்பா இப்டி மாறியிருக்கா?”என்று சகிக்க முடியாமல் அஜிதன் என் தோளைப்பிடிக்க ”விடுடா…லேடீஸ்லாம் அப்டித்தான்”
ஆனால் வீட்டுக்குள் சென்று சேர்வதற்குள் அருண்மொழியும் மாறி மழலைபேச ஆரம்பிப்பதை என்னாலும் தாங்க முடியாது. ”ஆபீஸ்லே ஒரே வே…லைம்மா…எப்ப பா…த்தாலும் ஒரே மா…திரி….போ”. இரு பாப்பாக்களும் மாறி மாறி கொஞ்சுகின்றன. பெரிய பாப்பா ”அம்மா காபிய இங்க கொண்டாயேன். காலு வலிக்குது…” சின்ன பாப்பா ”பாத்தீ எனக்கு காப்பி வேணாம். ஆர்லிக்ஸ் குதுப்பியா?”. ”அப்டியே சாப்பிடுவேன்னு சொல்லுடீ போடி…நாயி நாயி, மழலை பேசுறா பாரு…”. ”போடா அப்டித்தான் பேசுவேன்.உங்கிட்டயா பேசறேன்? பாத்தீ அடிக்கான்…”. ”அஜீ பாப்பாவ அடிக்காதே அவ கொழைந்தைதானே?”. ”அப்பா நான் இப்பவே இந்த வீட்ட விட்டு போறேன்.இனி ஒரு நிமிஷம் இங்க இருக்க முடியாது”. ”டேய் விடுடா. லேடீஸ்லாம் அந்த மாதிரித்தான்…எல்லாத்தையும் தாங்கித்தானே ஆகணும்? இப்பவே பழகிக்கோ” ”போப்பா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்..”
வந்து அரைமணிநேரத்துக்குள் நான் என்னையறியாமலேயே கடும்சினமும் கொல்வேலும் கொண்ட கொற்றவனாக உருமாறியிருப்பதை அரைமணிநேரம் கழித்துத்தான் உணர்வேன்.”அஜீ இந்த லுங்கியக் கொண்டாந்து உங்கப்பாவுக்கு குடு…இருங்க இந்தா காப்பி கொண்டறேன்…கோவிச்சுக்காதீங்க…” உள்ளே குரல்கள் ”காலைல எந்திரிச்சா உடனே காப்பி வேணும். இலெலெண்ணா சிங்கம்புலி கணக்கா நிப்பாங்க… காலம்பற நான் ஓடுற ஓட்டத்துக்கு என்ன பண்றது, எட்டு கையா இருக்கு?”
எங்கள் வீட்டில் நானேதான் எழுந்து முகம் கழுவி பாலில்லா டீ போட்டு குடிப்பேன். ”எப்டியும் அடுப்பு பத்தவச்சு டீ போட்டாச்சுல்ல? அப்டியே எனக்கும் ஒண்ணு போட்டா என்ன?”.ஆகவே அதையும் போட்டு தர ”சக்கரை அளவா போட எண்ணைக்குத்தான் கத்துக்குவியோ?” என்று சொல்லி குடிப்பாள். இங்கே பால்கனக்கும் காபிதான். ”சும்மா இரு. பாலில்லா டீண்ணா எங்கம்மா தரித்திரம்ணு நெனைச்சுக்கபோறாங்க. இங்க அதெல்லாம் யாரும் குடிக்கமாட்டாங்க. ஏற்கனவே எங்கம்மா மலையாளத்தாளுங்க கஞ்சித்தண்ணிய குடிக்கிறாங்கன்னு கேவலமா நெனைச்சிட்டிருக்கு…”//
அவர் நண்பர் இசைவிமரிசகர் பற்றி எழுதியதில் நான் ரசித்த பத்திகள்
//இசைவிமரிசகர் காதலித்து மணம்புரிந்துகொண்டவர். மலரினும் மெல்லிய உணர்வுகள் கொண்டவர். ஜெஸ்ஸியைக் கண்டதுமே நேரில் போய் முகத்தைப்பார்த்து 'பச்சை மலையாளத்தில்' "நான் உன்னை கட்ட விரும்புகிறேன். நீ ரெடி என்றால் நாளைக்குச் சொல்' என்று மயிலறகு போல மிருதுவாக காதலை தெரிவிக்க அவர் பதறியடித்து லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடி உயிர்தப்பியதாக கூறப்படுகிறது. அவரது அறைத்தோழி "ஆசாமி பெரிய மீசை வைச்சு ஆறடி உயரமா இருந்தானா?" என்று கேட்க இவர் "ஆமாம் "என்று கண்கலங்க "பயமே வேண்டாம். இதெல்லாம் ஹென்பெக்டாகவே டிசைன் பண்ணி மேலேருந்து கீழே அனுப்பப்பட்ட உயிர்கள். கழுத்தில் ஒரு சங்கிலி போட்டு சோபா காலில் கட்டிப்போடலாம் "என்று அனுபவசாலி சொல்லியதாகவும் மறுநாளே காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//
//மனைவியடிமைகளாக இருப்பவர்களை இசைவிமரிசகர் கடுமையாக விமரிசனம் செய்வது வழக்கம். காரணம் அவர்களின் சகல ரகசியங்களும் இவருக்கு ஐயம் திரிபறத் தெரியும். செல் சிணுங்கியதுமே முதல் ஒலித்துளிக்குள்ளாகவே பாய்ந்து எடுத்து பதற்றத்தில் நாலைந்து பித்தான்களை அழுத்தி காதில் வைத்து அறைமூலைக்கு ஓடி ஒருகையால் செல் வாயை மூடி சற்றே பவ்யமாகக் குனிந்து பரிதாபமாக "ஆ ஜெஸ்ஸி" என்று இவர் சொல்லும்போது பார்க்கும் எவருக்கும் நெக்குருகும். பின்னர் எல்லா சொற்களும் சமாதானங்கள், சாக்குகள், அசட்டுச்சிரிப்புகள். இசைவிமரிசகர் பல்லவி மீண்டும் மீண்டும் பாடப்படுவதில் ஆர்வமுள்ளவர். பேசிமுடித்து வரும்போது இவரில் தெரியும் விடுதலை உணர்வு ஆன்மீகமானது.//
//இசைவிமரிசகர் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். இவர் அமர்ந்து எழுதும் நாற்காலி சற்று பெரிதாகையால் அறைக்கதவை திறக்க முடியவில்லை என அறிந்ததும் அதை வேலைக்காரிக்குக் கொடுத்துவிட்டு உடனே போய் சிறிய ஒன்றை வாங்கிவந்து போட்டு அதில் கால்மடக்கி அமரவே முடியவில்லை என்று கண்டு, வேலைக்காரிக்குக் கொடுத்தது போலவே வேறு ஒன்றை அதே நிறத்தில் அதே வடிவில் வாங்கி வந்து போட்டுக் கொண்டு வேலைக்காரியால் விசித்திரமாகப் பார்க்கப்பட்டவர்.//
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வப்போது சமய சந்தர்ப்பம் தெரியாமல் யாரோ எதையோ எங்கேயோ சொல்லப் போக எனக்கு அவரது நகைச்சுவை எழுத்துக்கள் ஹைப்பர் லிங்காக நினைவுக்கு வர சிரிப்பை அடக்குவது கஷ்டமாகப் போக, இதெல்லாம் நியாயமா ஜெயமோகன்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
தீராநதி நேர்காணல்- 2006
-
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை.
இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய
ஒரு படை...
7 hours ago
5 comments:
அவரது எழுத்துக்களை படித்து சில நேரங்களில் விலாநோக நிமிடக்கணக்கில் சிரித்திருக்கிறேன். அவரது நகைச்சுவை எளியவை. இயல்பான நடை.
பி.கு. 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும்' உங்கள் சாமர்த்தியம் தலைப்பில் ;)
he has written about morarji vayiththiyam also. Very hilarious
என் எண்ணத்தில்!!
எழுதுகிறவர்கள் அனைவரும் இலக்கியவாதிகள் அல்ல.
சொற்களை யாரும் உருவாக்கி எழுதுவதில்லை, அது ஏற்கனவே இருக்கிறது.
அதில் கவர முடியாததை பேச்சு தமிழில் எழுதி கவரமுடியுமா!
என்னை பொறுத்தவரை பலமுறை படித்தாலும் சலிப்பு தராத எழுத்துகளே இலக்கியம்
அதை எழுதியது ஜெயமோகனாக இருந்தாலும் சரி, டோண்டுவாக இருந்தாலும் சரி
வால்பையன்
www.charuonline.com -il oru pinnottam ulladhu, Jeya Mohana-i kindal sithu. I do not think Charu is anywhere close to Jeya Mohan's level.
மிகுந்த நன்றி டோண்டு சார்.
அவரது " மேதைகள் நடமாட்டம் " மற்றும் " அறிவுஜீவிக்குரங்கும் ஆப்பும் " படிக்கவும். பல நாள் இதை எண்ணி எண்ணி மீண்டும் மீண்டும் நம் சமுதாயத்தின் பிம்பம் குறித்து வருத்தத்தோடு சிரித்து வருகிறேன்.
அபராமன் நகைச்சுவை உணர்வு சார்.
விலாவரியாக பெரிய வ்யாபகத்தோடு பலதும் படித்து கிரஹித்தால் சோ, ஜெயமோகன், நீங்கள் மாதிரி " இடுக்கண் வாருங்கள் நகும் " நகைச்சுவை உணர்வு தானாகவே பொங்கி புரளும் போலிருக்கு சார்.
மிகுந்த நன்றி.
நமஸ்காரம்.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்.
Post a Comment