6/27/2010

எங்கே பிராமணன் சீரியலில் அசோக்காக நடிக்கும் அஃப்சரின் பேட்டி

தினமலர் 27.06.10 தேதியிட்ட வாரமலரில் வந்த இச்செய்தி/பேட்டியை அப்படியே எடுத்துப் போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி தினமலர்.

ஜெயா, "டிவி'யில் திங்கள் முதல் வியாழன் வரை, இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும், "எங்கே பிராமணன்?' தொடரை, பெரும்பாலானோர் பார்த்திருக்கலாம். வேதங்களில் சொல்லப்படும் வகையில், முழுமையாக வாழும் பிராமணன் எங்கு இருக்கிறார் என்று, இத்தொடரின் முதல் பாகத்தில் தன் தேடலை நடத்தும் அசோக் என்ற அந்த இளைஞன், இரண்டாம் பாகத்தில், முழு பிராமணனாக தானே வாழ்ந்து காட்டினால் என்ன என்ற சவாலை ஏற்று, அதன்படி வாழ்கிறார்.

இந்துக்கள் மட்டுமின்றி, எல்லா சமயத்தினரும் தொடர்ந்து, இந்த தொடரைப் பார்த்து, ரசித்து வருகின்றனர். "அசோக்' பாத்திரத்தில் ஒன்றி, எந்தவித அலட்டல், ஓவர் ஆக்டிங் இல்லாமல், அந்த தனித்தன்மை வாய்ந்த பாத்திரத்திற்கு சிறப்பு செய்கிறார். அசோக்காகவே மாறி விட்ட நடிகர் அப்சர், ஒரு இஸ்லாமிய இளைஞர். பேட்டியிலிருந்து:

திருநெல்வேலியைச் சேர்ந்த என் தந்தை ஷாகுல் ஹமீது, தமிழக அரசில் இன்ஜினியராகப் பணியாற்றினார். தமிழ் மீது அவருக்கு அபார பற்று. தாய் மொழியில் ஞானம் இருந்தால் தான், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதில், முழு நம்பிக்கை கொண்டவர். எனவேதான், ஓரளவு வசதி இருந்தும், கான்வென்ட் பள்ளிகளில் எங்களை சேர்க்காமல், தமிழ் மீடியத்தில் தான் நாங்கள் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

பள்ளி, கல்லூரி மாணவராக இருக்கும் போதே நடிகனாக, கலைத்துறையைச் சேர்ந்தவனாகத்தான் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளியில் படிக்கும் போதே, தூர்தர்ஷனில் அங்கீகரிக்கப்பட்ட நடிகனாக, ஆண்டுக்கு ஓரிரு, "டிவி' நாடகத்தில் நடித்தேன்.

பிரபல நடிகர் வி.கோபால கிருஷ்ணனின் கோபி தியேட்டர்ஸ்காக நாடகங்கள் எழுதும் பிரபல நாடக ஆசிரியர் விவேக் சங்கரின், "நித்தம் ஒரு யுத்தம்' மேடை நாடகத்தில் நடித்தேன். அந்த நாடகத் தின் அரங்கேற்றத்திற்கு வந்திருந்த நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, "வேதம் புதிது' கண்ணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் என்னைப்பற்றி சொல்ல, ஏவி.எம்.,மின், "நிம்மதி உங்கள் சாய்ஸ்' தொடரில், கதாநாயகியின் தம்பி மணி பாரதி பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அடுத்து, 2000த்தில், இயக்குனர் வெங்கட் இயக்கத்தில், ஏவி.எம்., மின், "சொந்தம்' 260 எபி சோடுகள் தொடரில், அண்ணிக்கு (மோனிகா) சப்போர்ட் பண்ணும், "பிரபா' என்ற பாத்திரத்தில் நடித்தேன். விகடன் டெலிவிஸ்டாசின், சுந்தர் கே. விஜயன் இயக்கிய, "அலைகள்' ஹிட் தொடரில், 400 எபிசோடுகளுக்கு மேல் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

"எங்கே பிராமணன்?' தொடரில் எனக்கு நடிக்க சான்ஸ் எப்படி கிடைத்தது என்பதற்கு என்னை விட, இயக்குனர் வெங்கட் பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

"எங்கே பிராமணன்?' தொடரில், அசோக் பாத்திரத்தில் நடிக்க, அப்சரை எப்படி செலக்ட் செய்தீர்கள்? என்று டைரக்டர் வெங்கட்டை கேட்டபோது...

அசோக் ஒரு அசாதாரணமான இளைஞன். இளம் வயதிலிருந்தே, ஒரு குறிக்கோளோடு வேதங்களில் குறிப்பிட்டிருப்பது போன்று, எல்லா நியதிகளையும் கடைபிடித்து, முழு பிராமணனாக வாழ முயற்சிப்பவன். சாந்தமான முகம்; அலட்டிக் கொள்ளாத சுபாவம் கொண்ட இளைஞன்தான் அந்த காரெக்டருக்கு பொருத்தமாக இருக் கும். அப்சரின் முகம், குறிப்பாக அவரது கண்கள் ரொம்ப பவர்புல் லாக, பொருத்தமாக இருந்ததால், அவரை செலக்ட் செய்தேன்.

தன்னுடைய பாத்திரத்தை நன்கு உணர்ந்து, சீரியல் முழுவதும் நன்றாக நடித்திருக்கிறார். நிறைய ஹோம் ஒர்க் பண்ணினார். ஓவர் ஆக்டிங் செய்யாமல், கச்சிதமாக நடித்திருக்கிறார். வசனங்களை எளிதில் மனப்பாடம் செய்து, காட்சிக்கு ஏற்ப குரல் மாடுலேஷனோடு, தேவையான எக்ஸ் பிரஷனோடு பேசியிருக்கிறார். நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவர் அப்சர்.
இந்த தொடரின் மற்றொரு ப்ளஸ் பாயின்ட் - ஒவ்வொரு எபிசோட்டிலும் சோ தோன்றி அளிக்கும் விளக்கங்கள்... வேதங்கள், உபநிஷத்துக் கள், ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை மற்றும் தமிழில் தெய்வீகப் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து ஸ்லோகங்களை சொல்லி, விளக்கம் தருகிறார்.

இந்து கலாசாரத்தில் கடைபிடிக்கப்படும் பல வழக்கங்கள், விரதங்கள், சடங்குகள், பூஜை முறைகள், நம்பிக்கைகள் உள்பட பல விஷயங் களுக்கு கேள்வி பதில் பாணியில், பலருக்கும் தெரியாத விளக்கங்களை எளிய நடையில் தருகிறார்.

சோவை சந்தித்து பேசியிருக்கிறீர்களா? என்று அப்சரை கேட்டதற்கு, "நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை. டைரக்டர் வெங்கட், தொடருக்கான படப் பிடிப்பு ஆரம்பிக்கும் போது, தொலைபேசியில் சோவை அழைத்து, அவரோடு என்னை பேசச் சொன்னார். "உங்க ஆசிர்வாதம் வேணும் சார்!' என்றேன். "ஆல் தி பெஸ்ட்; நல்லா பண்ணுபா...' என்று, வாழ்த்தினார். "உன் காரெக்டருக்கு வேஷ்டியை, கணுக்காலுக்கு மேலே தூக்கி கட்டணும்; தழைய, தழைய கட்டறது மரியாதை இல்லை...' என்றார். ஒரு டயலாக்கை அவர் எடுத்துச் சொல்லி, எப்படி குரலை மாடுலேட் பண்ணி, ஏற்றி இறக்கி பேசணும்ன்னு சொல்லிக் கொடுத்தார்.

மிகவும் தூய்மையான, வியக்கத்தக்க இளம் பிராமணராக நீங்கள் நடித்திருப்பது பற்றி, உங்கள் சமுதாயத்தினரின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது?

"இஸ்லாம்' என்ற சொல்லுக்கு சமாதானம், சகோதரத்துவம் என்று தான் அர்த்தம். 2008ல் இருந்து இரண்டு ஆண்டுகளாக எங்கே பிராமணன் முதல் பாகம், இரண்டாம் பாகங்களில் நடித்து வருகிறேன். எந்த ஒரு முஸ்லிம் சகோதரரோ, சகோதரியோ இந்த தொடரில் நான் நடித்ததற்கு ஆட்சேபம் தெரிவிக்க வில்லை; மாறாக, ஏராளமான முஸ்லிம் நண்பர்கள், சகோதரிகள் என் நடிப்பை, மனதார பாராட்டியிருக்கின்றனர்.

சகிப்புத் தன்மை, இஸ்லாமின் முக்கிய அங்கம். 99.99 சதவீதம் இஸ்லாமியர்கள் அப்படித்தான் வாழ்கின்றனர்; நினைக்கின்றனர். 0.01 சதவீதத்தினர் மாற்றுக் கருத்து கொண்ட வர்களாக இருக்கலாம்; வாழலாம். அதை வைத்து, முஸ்லிம் சமுதாயத்து மக்கள் எல்லாரும் அப்படித் தான் என்று நினைப்பது, வருந்தத்தக்க விஷயம்.

இந்த தொடரில் நடிப்பதன் மூலம், இந்து, இஸ்லாம் இரு மதங்களிலும், பொதுவாக எவ்வளவு விஷயம் இருக்கிறது என்று பார்க்க முடிகிறது.

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே; வெற்றி வரும் போது பெருமகிழ்ச்சியும், தோல்வி ஏற்படும் போது துவண்டு போகவும் கூடாது என்று வேதங்களும், உபநிஷத்துக்களும் சொல்கின்றன. நடப்ப தெல்லாம், இறைவன் நாட்டப்படி தான் நடக்கிறது என்கிறது இஸ்லாம். "ஒருமித்த கருத்துக்கள், வேறு வேறு வார்த்தைகளிலே இந்து மதத்திலும், இஸ்லாமியத்திலும் சொல்லப்படுகின்றன.

பிரார்த்தனைகள், ஹோமங்களில், "ஓம் சாந்தி, ஓம் சாந்தி!' என்று சொல்கின்றனர். "சலாம் அலைக்கும்' என்று இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவரை வரவேற்கும் போதும், முகமன் கூறும் போதும் சொல்கின்றனர்; அதற்கு சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும் என்று அர்த்தம்.
நம் சொந்த மதத்தையும், பிற மதங்களைப் பற்றியும் அக்கறையாக தெரிந்து கொண்டால், மக்களிடையே வேறுபாடுகளே இருக்காது.

இந்த தொடரில் நடித்ததன் மூலம் நீங்கள் கற்றது என்ன?நிஷ்காம கர்மா. வேலையையும் சரி, வேறு எதையும் சரி... எமோஷன் இல்லாமல், பற்று இல்லாமல் செய்யணும். வாழ்க்கையில் தினமும் செய்யும் வேலைகளில் இந்த சிந்தனையை நான் கடைபிடிக்கிறேன்; டென்ஷன் இல்லாமல், ரிலாக்ஸ்டாக இருக்கிறேன்.

நாம் விரும்புகிற மாதிரி நடக்க வில்லை; அதற்கு எதிராக நடந்தாலும், கடவுளின் விருப்பம் தான் நடந் திருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. எல்லாம் நடந்தது, நான் ஒரு கருவி மட்டும் தான், நாம் இல்லை யென்றாலும் அது நடந்து விடும். நம்மால் தான் சாதிக்க முடியும் என்பதில்லை; நாம் இல்லா விட்டாலும், இன்னும் சிறப்பாக நடக்கும் என்று உணர்ந்தால், நம் ஈகோ பிரச்னை தீர்ந்துவிடும். வாழ்க்கை எளிதாகி விடுகிறது.


இந்த சீரியலில் வரும் எல்லோருக்குமே வேஷப்பொருத்தம் பிரமாதம், அதிலும் அசோக் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் அஃப்சர் அற்புதமாக நடிக்கிறார். எனது கேள்வி பதில் பதிவுகளில் ஒன்றில் இது சம்பந்தமாகக் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும் இதோ:

கேள்வி: பிராமண அசோக் வேடத்தில் (கதாநாயகன்) நடிக்கும் நடிகர் ஒரு இஸ்லாமியர். தெரியுமா?
பதில்: நடிப்புத்தானே! இதில் என்ன பிரச்சினை? சோப்ராவின் மகாபாரதத்தில் அர்ஜுனனாக நடித்தது ஒரு இசுலாமியர். அதற்கென்ன இப்போது? பம்பாய் படத்தில் இசுலாமியராக கிட்டியும் இந்துவாக நாசரும் நடித்தனர். அதற்கு என்ன கூறுவீர்கள்?


இப்போது மனப்பூர்வமாகவே கூறுகிறேன், அஃப்சரைத் தவிர இப்போது வேறு யாரையும் இந்தப் பாத்திரத்திற்கு என்னால் கற்பனை கூட செய்ய முடியாது. அவருக்கு எனது பாராட்டுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

Madhavan Srinivasagopalan said...

no doubt.. 'Absar' acts very well & sits well within the 'character'. No over action.
all the best to him.

எல் கே said...

itthukum negative votes?

இஸ்லாமியன் said...

பிராமணர்கள் மீது ஒரு இஸ்லாமியனுக்கு நல்ல அபிப்ராயம் இருந்தால், அவனைப் பற்றி விளம்பரம் செய்து உங்கள் சாதிக்கும் விளம்பரம் தேடிக் கொள்வீர்கள். அதே சமயத்தில் அடுத்த பதிவிலேயே முஸ்லீம்களைக் கொன்றொழிக்கும் மோடிக்கு ஆதரவாக எழுதுவீர்கள்.

இஸ்லாமியன் said...

//"உன் காரெக்டருக்கு வேஷ்டியை, கணுக்காலுக்கு மேலே தூக்கி கட்டணும்; தழைய, தழைய கட்டறது மரியாதை இல்லை...' என்றார் சோ ராமசாமி//

முஸ்லீம்களாகிய நாங்களும் அதே காரணத்திற்காகத்தான் எங்கள் உடைகளை கணுக்காலுக்கு கீழே வராதபடி அணிகிறோம். அவ்வாறு கீழே வருவது பெருமை அல்லது அகங்காரத்தின் அடையாளம் என்பது நபி அவர்களின் போதனை. ஆனால் அதை நாங்கள் அப்படி செய்தால், எங்களை அடிப்படைவாதி என்று சொல்லத் தலைப்படுகிறீர்கள்.

கௌதமன் said...

அஃப்சரின் நடிப்பு எ பி தொடரில் மிகவும் நன்றாக, பொருந்தி உள்ளது. வெரி குட் அஃப்சர் .

அருள் said...

இஸ்லாமியன் said...

// //முஸ்லீம்களாகிய நாங்களும் அதே காரணத்திற்காகத்தான் எங்கள் உடைகளை கணுக்காலுக்கு கீழே வராதபடி அணிகிறோம். அவ்வாறு கீழே வருவது பெருமை அல்லது அகங்காரத்தின் அடையாளம் என்பது நபி அவர்களின் போதனை. ஆனால் அதை நாங்கள் அப்படி செய்தால், எங்களை அடிப்படைவாதி என்று சொல்லத் தலைப்படுகிறீர்கள்.// //

நல்லா உறைக்கிற மாதிரி சொன்னதற்கு நன்றி.

அகங்காரத்தின் அடையாளமே பார்ப்பானின் "பூணூல்"தான். ஆனாலும், அடுத்தவங்கள குறை சொல்லும் ஒருவாய்ப்பையுமே பார்ப்பனர்கள் தவறவிடுவது இல்லை.

ரிஷபன்Meena said...

ரொம்ப பிடித்த சீரியலாகவே இருக்கட்டும் அதற்காக அதில் நடித்த நடிகரின் பேட்டி வரை எடுத்துப் போடனுமா என்று கேட்கமாட்டேன், இதெல்லாம் ரசனை சார்ந்த விஷயம்.

ராவணன் படம் பிடிக்கலைன்னு ஒரு நண்பரிடம் சொன்னேன், உடனே அது கொஞ்சம் க்ளாசிக்கல் மூவி, உங்களை மாதிரி ஆட்களுக்கு புரியாது என்றார்.

ரசனைகளை ஏன் என்று கேள்வி கேட்கமுடியாது.

Anonymous said...

Adhaana parthean. Engayya Aruva Arula kanumnu!

Anonymous said...

Hahaha.... Just seeing the 'Parpaan' Character inside ARUL!..... wherever he can relate Parpaan... he will do!!

Anony1

கோவி.கண்ணன் said...

//இப்போது மனப்பூர்வமாகவே கூறுகிறேன், அஃப்சரைத் தவிர இப்போது வேறு யாரையும் இந்தப் பாத்திரத்திற்கு என்னால் கற்பனை கூட செய்ய முடியாது. அவருக்கு எனது பாராட்டுகள்.//

நல்லது, பெரியார் படத்தில் தேவதாசிப் பெண்ணாக நடித்தார் சொர்ணமால்யா, சிறப்பான நடனம்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது