9/12/2009

சப்பைக்கட்டு கட்டும் போலியின் அல்லக்கைகள்

முத்துக்குமரன் என்னும் நபர் உண்மைத்தமிழனது இப்பதிவில் பின்னூட்டமிட்டுள்ளார். முதலில் அதை பார்ப்போம்.

“//மற்றபடி உங்களை கோவை மீட்டிங்கிக் எச்சரித்தது, போலி அனுப்பும் மின்னஞ்சல் லிஸ்டில் இருந்த அனைவரையும் சொல்லியே. அதன் பிறகு அது ஒரு பார்வேர்ட், அதில் இருக்கும் அனைவரும் அவனுடைய ஆட்கள் அல்ல என்று கண்டுகொண்டேன். மகேந்திரன் முத்துக்குமரன் கோவி கண்ணன் தவிர.//

செந்தழல் ரவி எனது பெயரை குறிப்பிட்டு இருப்பதாலும், போலியின் ஆள் என்ற தொனி இருப்பதால் மட்டுமே இந்த பின்னூட்டம். விடாது கருப்பு என்ற மூர்த்தி தன்னை பெரியார் தொண்டராக காட்டிக்கொண்டிருந்த போதிலும் அவரின் அநாகரீகமான மொழியை ஏற்றுக் கொண்டதோ அல்லது எந்த ஒரு இடத்திலும் உயர்த்திப் பிடித்ததும் கிடையாது. திராவிடர் தமிழர் குழுமத்தில் நடைபெற்ற விவாதத்திலும் இதைத் தெளிவாகவே பதிவு செய்திருக்கிறேன். தேவைப்படுபவர்கள் அதை வாசித்து தெரிந்து கொள்ளலாம். 2006ல் ஒருமுறை செந்தழல் ரவி ஐரோப்பியநாடுகளுக்கு சென்ற போது ஒரு பதிவிட்டிருந்தார். நான் ஓய்வாக இருக்கிறேன் தொலைபேசி எண்கள் கொடுங்கள் பேசுகிறேன் என்று. வலைப்பதிவர்கள் பலரோடும் பேசினார். அப்போது நானும் என் எண் கொடுத்தேன், பேசினோம், அந்தப் பேச்சிலும் குறிப்பிட்டது விடாது கருப்பு நம்பத் தகுந்தவர் அல்ல, பெரியார் பெயரை அவர் தவறாகவே பயன்படுத்துகிறார் என்பது. இன்னொரு முறை பேசியது தம்பிக்காக வேலை வாய்ப்பு தொடர்பாக சில ஆலோசனைகள் பெற. போலிக்கு எதிராக போராடியவர்கள் ஒருபுறம், அவனை நிராகரித்துவிட்டு போனவர்கள் ஒருபுறம், ஆதரித்தவர்கள் ஒருபுறம் என்று இருந்ததில் இரண்டாவதை நான் தேர்ந்தெடுத்தேன். அதனாலேயே எனக்கு வந்த ஆபாச அர்ச்சனைகளை பொதுவெளியில் வெளிப்படுத்திக்கொண்டது கிடையாது. விடாது கருப்பில் என்னை அர்ச்சித்து சூத்துகுமரன் என்றும் ஓசி பிரியாணி வாங்கி தின்கிறேன் என்றெல்லாம் சொன்னபோது கூட அவனுடைய தூண்டுதலுக்கு பலியாகி எதிர்வினை புரிவதை விட நிராகரித்தோமேயானால் காலப்போக்கில் தனிமைப்பட்டு விடுவான் என்றும் அவன் எழுத்துக்களே அவனை அம்பலப்படுத்திவிடும் என்பதையும் உறுதியாக நம்பினேன். மற்றபடி என் நேர்மையை யாரிடம் விளக்கி பட்டயம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை.

குழுமத்தில் விவாதித்திருப்பதை குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே தருகிறேன். அதற்கான கூடுதல் காரணம் போலி விசயத்தை பயன்படுத்தி திராவிடத் தமிழர்கள் எல்லோரையும் போலியின் அல்லக்கை என்று நிறுவ முனைவது இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. அன்றைய சூழலில் திராவிடத் தமிழர் குழுமத்தில் நானும் ஒரு மட்டுறுத்தினராக இருந்ததும் இது தொடர்பான நிகழ்வுகளில் எங்களில் இருந்த வெளிப்படைத் தன்மையையும் அது உணர்த்தும் என்பதாலேயே!
டிசம்பர் 8 2006 அன்று குழுமத்தில் கருப்பு தொடர்பாக எழுதிய பதிவு
Friday, September 11, 2009 3:52:00 PM

முத்துகுமரன் said...
அதிகரித்துவிட்ட பணிசூழலினால் கடந்த சிலநாட்களாக இணையத்தில் செலவிடும் நேரம்
குறைந்துவிட்டது. தமிழ்மணத்திலிருந்து விடாது கருப்பு நீக்கம், அதைத்தொடர்ந்து
குழுமத்தில் நடைபெற்ற விவாதங்களை வாசித்திருந்தேன். இந்த நேரத்தில் சில
தெளிவுகளை முன்வைக்கவேண்டும் என்பதாலே இந்த விளக்கம்.
தமிழ்மணத்திலிருந்து கருப்புவின் நீக்கம் ஒரு வருத்தமளிக்கும் செய்தி.
ஆனால் அத்தகையதொரு சூழலை அவரின் எழுத்துகள் ஏற்படுத்திவிட்டன என்பதையும்
மறுக்கமுடியாது. இது தொடர்பாக குழுமத்தில் அவரின் கருத்துகளை அறிந்த போது சில
விசயங்களை சொல்ல வேண்டும் என்ற கட்டாயமும் வந்திருக்கிறது.
திராவிட, மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர்கள் மிகவும்
கவனமாக இயங்க வேண்டியதருணம் இது. இந்த அரசியலின் தேவைகளை முக்கியத்துவத்தை
திரிப்பதில் தொடர்ந்து ஆதிக்க சக்திகள் வெற்றி பெற்று வருகின்றன. அதனால் மிக
அதிகப்படியான கவனத்தோடு இயங்க வேண்டி இருக்கிறது. நாம் சொல்லும் செய்திகளை விட
சொல்லபட்ட விதம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. செய்தியின் கணத்தைவிட
இந்த வெளிப்பாட்டிற்கு மிகுந்த முக்கியதுவம் அளிக்கப்படுகிறது. ஆகையால் வேகமாக
வார்த்தைகளை வாரியிறைப்பது என்பது விழலுக்கு இழைத்த நீராகுமே தவிர நமக்கு
எந்தவிதமான முன்னேற்றத்தையும் தாராது. நாம் போராட வேண்டியது, பயணிக்க வேண்டியது மிக நெடிய தூரம். அதில் முன்னேறி செல்வதை தடுக்க நமது சக்தியை வீணடிக்க
திசைதிருப்ப, சோர்வடையச்செய்ய எல்லாவகையான தந்தரங்களையும் நம் எதிராளிகள்
பிரயோகிக்கிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
விடாது கருப்பு விடயத்திற்கு வருகிறேன். எவ்வளவு சீரிய கருத்தாயினும் அது
முறையாக சொல்லப்படல் வேண்டும். தங்களது சமீபத்திய சில பதிவுகளின் தரம்
எப்படியிருந்தது என்பதை அமைதியாக வாசித்தீர்களாயேயானால் உணர்வீர்கள். நீங்கள்
பெரியாரின் வழி நடப்பவர் என்று சொல்லுவதால் பெரியாரைக்கொண்டே உங்களிடம்
பேசுகிறேன்.
பெரியாரின் முக்கியமான பொன்மொழி.* ''மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' *
பெரியார் நம் சமூக மக்கள் மான உணர்வோடும், அறிவு உணர்வோடும் வாழ
வேண்டுமென்பதற்காகவே தன்வாழ்வு முழுதும் உழைத்தவர். சுயமரியாதை, சமதர்மம்
என்பனவற்றை உயிர்மூச்சாக கொண்டிருந்தவர். அறிவுக்குப் புறம்பபன எந்த ஒரு
செயலையும் அவர் அனுமதித்ததில்லை.
மனிதர்க்கு மரியாதை தரப்பட வேண்டும் என்பதுதான் சுயமரியாதையின் அடிப்படைத்
தத்துவம். ஒரு பதிவரின் தாயை வேசி என்று குறீப்பிட்டு உங்கள் பதிவில்
எழுதியிருந்தீர்களே, இது எந்த வகை அறிவுணர்ச்சியில் வருகிறது???
அந்த தாயின் பெண்மையை விமர்சிக்க நீங்கள் யார்?? அந்த பெண்ணின் சுயமரியாதைக்கு
நீங்கள் தரும் மரியாதை என்ன? இந்த மாதிரி பேசமாறு எந்த இடத்தில் பெரியார்
கூறீயிருக்கிறார். சொல்ல முடியுமா?. சகமனிதனை மதிக்காதவன் எங்கனம்
சுயமரியாதைக்காரனாக இருக்க முடியும்???.
அடுத்ததாக, தீண்டாமை என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன? மனிதனை மனிதன் விலக்குவதுதான் தீண்டாமை. இது எல்லோர்க்கும் பொருந்தும். பார்ப்பனரை விலக்குவதும்
தீண்டாமைதான். பார்ப்பனர் என்பதால் அவர்கள் குறைந்த பட்ச மனிதத்தன்மையிலிருந்து
விலகிவிடுவதில்லை. குழலி அவர்கள் மாயவரத்தான் அவர்களோடு பேசுவது நட்பு கொள்வது
பற்றீ விமர்சித்து இருந்தீர்கள். பெரியாரை படித்திருப்பவன், வழிநடப்பவன்
எவனும் இதை விமர்சிக்க மாட்டான். ராஜாஜிக்கும் பெரியாருக்கும் இருந்த கருத்து
முரண்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவர்களுக்குள் ஆழமான நட்பு இருந்தது.
எப்படி சாத்தியாமானது. இருவருக்கும் அவரவர் கொள்கையின் பாலலிருந்த நம்பிக்கை.
இங்கு ஒரு பார்ப்பனிரிடம் பேசுவதாலோ, பழகுவதாலோ தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்க
கூடிய அளவிற்கு பலவீனமானவர்கள் கிடையாது. குறிப்பாக நானோ, முத்து தமிழினியோ,
குழலியோ பலவீனமானவர்கள் கிடையாது. கொள்கை என்பதும் நட்பு என்பதும் வேறு வேறு
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இன்னொன்று குழலியின் திராவிடத்தன்மையை பற்றி கேள்வி எழுப்பி இருந்தீர்கள்.
உங்களிடம்தான் எங்களின் திராவிட தன்மையை நீருபித்தாக வேண்டும் என்ற அவசியம்
இல்லை. தேவையும் இல்லை. யார் திராவிடத்தன்மையோடு இயங்குகிறார்கள் என்பதை
தீர்மானிக்கும் அதிகாரமையம் நீங்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளவும்.
Friday, September 11, 2009 3:57:00 PM

முத்துகுமரன் said...
பெரியார் விரும்பியது இந்த சமூகம் நாகரீகமடைந்த சமூகமாக வளரவேண்டும்,
அறிவுணர்ச்சியோடு வளர வேண்டும். சுயமரியாதையோடு வளரவேண்டும். அடுத்தவர்
குடும்மத்ததை விமர்சிப்பது என்பதுதான் நீங்கள் காணும் நாகரீக வளர்ச்சியோ?? மனித
நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது நீங்கள் செய்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வளவும் உங்களுக்கு சொல்வதன் காரணம் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுபவர்
என்பதால்தான். தான் வாழ்ந்த காலத்திலே தன்னைப்பற்றிய விமர்சனத்தை
ஏற்றுக்கொண்டவர், அனுமதித்தவர் பெரியார் என்பதால்தான்.அவரைப் பின்பற்ற
முயலுங்கள்.
திராவிட தமிழர் அமைப்பில் தொடர்வதும் தொடராததும் உங்கள் விருப்பம். ஆனால்
நாகரீகமற்ற செயல்களை குழுமம் ஒரு போதும் ஆதரிக்காது. அதுயாராக இருந்தாலும் சரி.
கருப்புவாக இருந்தாலும் சரி முத்துகுமரனாக இருந்தாலும் சரி.
மற்றபடிக்கு உங்கள் செய்கைகளுக்கு எல்லாம் பெரியாரை கேடயமாக பயன்படுத்தினால்
அதை அறிந்து கொள்ளமுடியாத அளவிற்கு இங்கு பகுத்தறிவற்றுப் போய்விடவில்லை.
சொல்லில் இல்லாமல் செயலில் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுபவராக வாழ முயற்சி
செய்யுங்கள்..
குறைகளை களைந்து மீண்டும் இயங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடும்,
எதிர்பார்ப்போடும் விருப்பத்தோடும் இப்போது விடைபெற்றூக்கொள்கிறேன்.
அன்புடன்
முத்துகும்ரன்
Friday, September 11, 2009 3:58:00 PM

முத்துகுமரன் said...
ஒரே பின்னூட்டமாக போட இயலாததால் மூன்றாக பிரித்து போட்டிருக்கிறேன்.
நன்றி
Friday, September 11, 2009 3:59:00 PM”


சரி மனிதர் தன் நிலையைத்தானே கூறியிருக்கிறார் இதில் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கும் முன்னால் முரளி மனோகர் விவகாரத்தில் அதே முத்துக் குமரன் தந்த எதிர்வினைக்கு அவரது போலி டோண்டு என்னும் பதிவையே பார்க்கலாமா?

“இரண்டு நாட்களாக சூடு பறக்க விற்பனையாகிக் கொண்டிருக்கும் போண்டா மஹா உற்சவத்தில் நானும் கலந்துகிறேன். இரண்டு ஆண்டுகளாக போலிப் புராணம் பாடியவர் இன்று போலியாய் அம்பலப்பட்டு நிற்கிறார். இது எதிர்பாராதது மற்றும் அல்ல பெரும் ஏமாற்றத்தை தருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்பட்டு நிற்கிறது.

தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை கட்டாயமாக்கிய போது அதை தனது வெற்றியாக அறிவித்து கொண்ட திருவாளர் டோண்டு அவர்களே, உங்கள் யுத்தத்தை உங்களிடமே வைத்துக்கொள்ளலாமே, ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.

உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டதற்காக ஆபாச அர்ச்சனைகளை பெற்றார்களே, அவர்கள் எல்லாம் எதற்காக உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டார்கள்? நீங்கள் போலித்தன்மை இல்லாது இருப்பீர்கள் என்றூ நம்பித்தானே. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என உங்க அரிப்புக்கு ஏன் தமிழ்மணம் போன்ற பொதுத்தளத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள்.

நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம் கடைந்தெடுத்த அற்பத்தனம். நீங்கள் போலித்தன்மையற்றவராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு ஆதரவளித்த எல்லா பதிவர்களுக்கும் பந்தி போட்டு மலத்தை பறிமாரிவிட்டீர்கள். பிறர் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும், மதிப்பையும் உங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, செய்தவந்த போலித்தனம் அம்பலப்பட்டு நிற்க போர்யுத்தி என்று சொல்லும் போது அருவருப்பாய் இருக்கிறது.
அம்பலப்பட்டவுடன் ஆங்கிலத்திற்கு தாவி தப்பிக்கும் உங்களுக்கு சுத்தத்தமிழில் ஒரு வாக்கியம்.
ஈரத்துணி போட்டு கழுத்தறுக்கும் வழக்கத்தை இந்த வயதிற்கு மேலாவாது விடுங்கள்.
போலி- டோண்டு என்று மிகச்சரியாக கணித்த உங்கள் புத்திக்கூர்மைக்கு என் வணக்கங்கள்”.


அவருக்கு நான் இட்ட்ப் பின்னூட்டங்களும் அவரது பதில்களும் இப்போது பார்ப்போம்.

“dondu(#11168674346665545885) said...
இந்த உதாரெல்லாம் என்னிடம் காட்டவேண்டாம் முத்துக் குமரன். நாம் மூவரும் சந்தித்ததை பதிவாகப் போட்டபோது போலி ஏதாவது திட்டுவானோ என்று பயந்துதானே நீங்கள் பின்னூட்டமிடாமல் தவிர்த்தீர்கள்?

இந்த அழகுக்கு நீங்கள் போலிக்கு பயப்படவேயில்லை என்று உதார் வேறு கடற்கரையில் கடல் சாட்சியாக விட்டீர்கள்.

//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம்.//
இதில் என்ன அற்பத்தனம் கண்டீர்கள் முத்துக் குமரன்? வேறு பெயரில் எழுதுவது அற்பத்தனமா? யார் சொன்னது? அப்படியானால் அண்ணா, கலைஞர், கல்கி, ஸ்ரீவேணுகோபாலன் போன்ற எழுத்தாளர்களெல்லாம் அற்பர்களா? அப்படி நான் அற்பன் என்றால் நீங்கள் கோழை, கடைந்தெடுத்த கோழை.
ஒரு கேடு கெட்ட பிளாக்மெயிலருக்கு பயந்து பேடியைப் போல ஒடுங்கியவர்கள்தான் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்.
ஆயினும் பலர் எனக்கு பின்னூட்டமிட வேண்டும் என்பதற்காகவே புது ஐடிக்கள் தேடிக் கொண்டனர். இதற்காகவும், சில பின்னூட்டங்களை என் சொந்தப் பெயரில் போட்டால் திசை திருப்பப்படும் என்பதாலுமே நான் ஒரு ஐ.டி. உருவாக்கிக் கொண்டேன். அது யாரையும் நகல் செய்யவில்லை. தரமான பின்னூட்டங்களையே இட்டது.
இதுவும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு போர் யுக்தியே. எனது பதிவுகளை நிலைநிறுத்த உதவி செய்தன.
இனிமேல் தேவை இல்லை என்று நான் தீர்மானம் செய்து அனானி/அதர் ஆப்ஷனை போட்டேன். நல்ல வேளையாக இதை நான் ஒரு நாள் முன்னாலேயே செய்தேன். இல்லாவிட்டால் இதற்கு கூட உங்களைப் போன்றவர்கள் ஜல்லியடித்திருப்பீர்கள்.

இதற்கு முத்துக்குமரனின் பதில்:
“நம் சந்திப்பு குறித்தான உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் போடாதது போலிக்கு பயந்து என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. அப்படி போலிக்கு பயந்தவனாக இருந்தால் தேடி அழைத்து உங்களை சந்தித்திருக்க மாட்டேன். துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது. இதை நம் ஜிடாக் உரையாடலின் போது கூட தெரிவித்து இருந்தேன்.
இந்தியா சென்று வந்தது தொடர்பான விரிவான பதிவை நான் எழுதவில்லை. அதற்கும் காரணம் போலிக்குப் பயந்தா?
உங்கள் பதிவை பார்த்தேன். அப்போதே ஜிடாக்கில் பேசி இருக்கிறோம். அதனால் அங்கு பின்னூட்டம் போடாதது மட்டுமே என் வீரம் பற்றிய முடிவை உங்களுக்குத் தந்திருக்கிறது என்றால் கோழை என்ற உங்கள் பாராட்டுப் பத்திரத்திற்கு நன்றி.
பொதுவாக தனி உரையாடலில் பேசுபவைகளை நான் வெளியே சொல்லுவதில்லை. இன்று குறீப்பிட நேர்ந்தது எனக்கு வருத்தமே.
போலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன? எந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றுதானே...
இந்த நம்பிக்கை துரோகம்தான் உங்கள் பார்வையில் யுத்தியென்றால் அது அற்பத்தனமானது என்பதில் மாற்றுகருத்து இல்லை”.

எனது பதில்:
“போலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன?
எந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றுதானே..."
இது என்னப்பா வாதம்? என்னுடனிருந்தவர்களில் பலர் நான் ஒன்றுமே செய்யாமல் உதை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சிலர் பதிவிடுவதையே நிறுத்துமாறும் ஆலோசனை கூறினர். எல்லாரின் நினைப்பையும் நான் நிறைவேற்ற வேண்டுமென்றால் வண்ணான், அவன் மகன், கழுதை கதைதான் நடந்திருக்கும்.
"துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது".
என்ன ஸ்வாமி கதையடிக்கிறீர்கள்? சுரதாப் பெட்டி என்று கேள்விப்பட்டதேயில்லையா. இல்லாவிட்டால் ஆங்கிலம் தெரியாதா? என்ன இதெல்லாம் சாக்குப் போக்கு.

//அதில் நானும் கூட வாழ்த்து தெரிவித்திருந்தேனே..//
உங்களை நான் குறைகூறவேயில்லை குழலி அவர்களே. ஒரு பதிவில் வாழ்த்து தெரிவித்ததற்குத்தான் தன்னை போலி தாக்கியதாகக் கூறினார். அப்போது கூட நான் கேட்டேன், அவரிடம் எதிர்க்கருத்தாயிருந்தாலும் பின்னூட்டமிடுங்கள் என்று. தலையை ஆட்டி விட்டுபோனவர் அப்புறம் வரவேயில்லை. ஓக்கே, அவரை நம்பியெல்லாம் நான் இல்லைதான்.
இங்கு என்னை அற்பன் என்று கூறியவரின் யோக்கியதையைத்தான் கிழிக்கிறேன். அவர் ஒரு ஆஷாடபூதி, கோழை என்று. அண்ணா, கலைஞர், கல்கி, பற்றிய குறிப்புக்கு பதில்?
இப்போது கூட பாருங்கள் குழலி அவர்களே, நான் இன்னொரு பெயரில் வந்ததைத்தான் கூறுகிறார்களே தவிர, அதற்கு ஆணிவேரான காரணம், ஒதுங்கியிருந்தவர் கோழைத்தனம் எல்லாம் பற்றி பேச வாயில்லை.
இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு”.

நடுவில் என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அதே பதிவில் நான் தந்த பதில்:
“//இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு//. "ஒதுங்கியிருந்தால் கோழைத்தனம் என்று ஜெனரலைஸ் செய்வது சரியானதாகப் படவில்லை"

மன்னிக்க வேண்டும் பாலா அவர்களே. அந்த சம்பந்தப்பட்ட பதிவர் என்னை இவ்வாறு கேட்டு கொண்டதும், நான் அவரை காரணம் கேட்டதும் தான் போலியின் மீதுள்ள பயத்தால் அவ்வாறு கூறுவதாக ஒப்பு கொண்டார். அவர் மேல் எனக்கு கோபம் இல்லை. (பை தி வே, என்னை வீட்டுக்கு வந்து சந்தித்து விட்டு அதை பதிவாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட சிங்கக் குட்டி யார் என்று விழிப்பவர்களுக்கு, அவர் பெயர் முத்து தமிழினி).
இப்போது கூட 3-ஆம் தேதி நடந்த வலைப்பதிவு சந்திப்புக்கு அவரும் வந்திருந்தார். அப்பதிவைப் பற்றி ஒரு பின்னூட்டம்கூட இல்லை. இதற்கு என்ன சொல்லுவீர்கள்?
முத்துக்குமரன் மேலும் கோபம் இல்லை. ஆனால் இப்போது வந்து என்னமோ நான் கொலை செய்து விட்டது போல பதிவு போடுவதற்கு நான் சரியான எதிர்வினை தர வேண்டும்.
//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம்.//
இப்படி அவர் உதார் விட்டதால்தான் அவர் கோழை என்பதை அழுத்தம் திருத்தமாக வெளியிட வேண்டியதாயிற்று.
முரளி மனோகர் என்ன ஆபாசமாக எழுதினார்? அப்படி அவர் மற்றவர்கள் பதிவில் எத்தனை பின்னூட்டம் இட்டு விட்டார்? இன்னொருவர் மின்னஞ்சல் போல ஐடி போல தயார் செய்து கல்யாண போட்டோக்கள், என் பெண் போட்டோக்கள் வாங்கினாரா?
டோண்டு சார் இப்படி செய்யலாமா என்று கேட்பவர்களை அவரை இவ்வாறான நிலைக்கு துரத்தியது பற்றி ஒரு வார்த்தையும் கேட்கக்கூடாதா?

//ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.//
உங்களிடம் அனானி மற்றும் அதர் ஆப்ஷன் இல்லை அல்லவா? மற்றப்படி தமிழ்மணம் மட்டுறுத்தலை கட்டாயமாக்கியது அல்லவா, அதனால் தமிழ்மணத்தில் ஆபாசங்கள் கட்டுப்பட்டன அல்லவா. போலிகளை பற்றி பேச எனக்கு யோக்கியதை இருப்பதால்தான் இதெல்லாம் நடந்தது.
மற்றப்படி ஒரு புனைப்பெயரை வைத்து கொண்டதற்காக அற்பம் என்று எல்லாம் திட்டினால் கோழை நீங்கள் என்ற எதிர்வினைதான் வரும். இந்த அழகில் சீப்பு இல்லை ஆகவே கல்யாணம் நின்றது என்ற ரேஞ்சில் இகலப்பை இல்லை என்ற அபத்ததமான சால்ஜாப்பை வைத்ததும் இதே பயம்தானே”.

ஆக டோண்டு விஷயத்தில் கோபக்கார இளைஞராக வந்த முத்துக்குமரன் போலி டோண்டு கருப்பு மூர்த்தி விஷயத்தில் எவ்வளவு அடக்கி வாசிக்கிறார் பாருங்கள்.

அதிலும் ஆச்சரியம் இல்லைதானே. ஏனெனில் அவரே கூறிவிட்டாரே ஆபாசமாக எழுதுவதை விட புனைப்பெயர் வைத்துக் கொண்டது அற்பமானது என்று.

அது சரி, மூர்த்திதான் போலி டோண்டு என்பது ஆகஸ்ட் 2007-லேயே தெளிவானது. அவனை 2008 ஜூலை மாதம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சந்தித்ததையும் போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு என்ற பதிவிலாவது மூர்த்தியை கண்டித்து ஒரு சிறு பின்னூட்டம் இட்டாரா என பார்த்தால் பெரிய ஏமாற்றம். முரளி மனோகர் விஷயத்தில் பெரிய கொம்பன் மாதிரி எகிறிக்குதித்த இவர் இங்கு காட்டியது இடிபோன்ற மௌனம். அதுவே பல புனை பெயர்கள் வைத்துக் கொண்ட மூர்த்தி விஷயத்தில் அடக்கி வாசிப்பு.

அது பற்றி அவர் சொந்தப் பதிவு போட்டதாகவும் தெரியவில்லை. வேறு எங்கும் எழுதியதாகவும் தெரியவில்லை.

இப்போதுதான் புரிகிறது அம்மாதிரி அவர் கண்டித்திருந்தால் அவரது அல்லக்கை செயல்பாடுகள் பற்றி மூர்த்தி எழுதி அவரை நார் நாராக கிழித்துவிடுவானே என்ற பயம்தான் காரணம் என்று.

முத்துக்குமரரே நீங்கள் வேறும் கோழை ஆகவே நமது மெரினா சந்திப்பு பற்றிய எனது பதிவில் பின்னூட்டமிட தயங்கினீர்கள் என. அதையே சாடியவன் நான். இப்போது அந்த குற்றச்சாட்டை மாடிஃபை செய்கிறேன். நீங்கள் முதலில் அல்லக்கை பிறகுதான் கோழை. போதுமா?

இந்தத் தருணத்தில் மூர்த்தியின் இன்னொரு அல்லக்கை பெ. மகேந்திரன் 3-4 முறை என்னுடன் கூகள் டாக் மூலம் நட்பு கேட்டு வந்தார். அப்போதே அவரை மூர்த்தியின் அல்லக்கையாக அடையாளம் கண்டு கொண்ட நான் பெ. மகேந்திரன் என்னும் பெயர் இம்மாதிரி கோரிக்கை வைத்து வரும்போதெல்லாம் ரிஜெக்ட் செய்தேன்.

லக்கிலுக்கின் சைபர் கிரைம் பற்றிய தொடர் குமுதம் ரிப்போர்டரில் முடிவடைந்தது. பாலபாரதி கூறியது போல தொடர் முடியும் வரை காத்திருந்து பார்த்தாயிற்று. போலி டோண்டு மூர்த்தி பற்றி ஒருவார்த்தையும் இல்லை. அவன் சைபர் கிரிமினல் இல்லையென இவர் தீர்மானித்து விட்டாரா அல்லது முத்துக்குமரன் போன்று இவருக்கும் அதே பயமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/11/2009

குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் கம்பெனிகள்

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஜோக் படித்திருக்கிறேன். வேலைக்கான நேர்காணல். அதற்கு வந்திருக்கும் நபர் தான் வேலை செய்த முந்தைய கம்பெனியில் தனக்கு கார், க்வார்டர்ஸ், ஓவர்டைம் அலவன்ஸ், மெடிசல் அலவன்ஸ், ஒரு ரூபாய்க்கு 5 நட்சத்திர ஹோட்டல் ரேஞ்சுக்கு கேண்டீன் சாப்பாடு, வருடத்துக்கு மூன்று மாதம் முழு சம்பளத்துடன் விடுமுறை என்றெல்லாம் கொடுத்ததாக கூறினார். அப்படிப்பட்ட கம்பெனியை விட்டு ஏன் இங்கு வருகிறார் என அவரிடம் கேட்க, அதற்கு அவர் “ஏனோ தெரியவில்லை, கம்பெனி திவாலாகி விட்டது” என்றாரே பார்க்கலாம்.

அப்போது நான் அதை ஜோக்காக பார்த்து, சிரித்துவிட்டுச் சென்றேன். ஆனால் நேற்று நான் இடைவெளிகள் வலைப்பூவில் “வேலை இல்லாமல் ஒரு வேலை” என்னும் பதிவை படித்ததும் அவ்வாறு சிரிக்கத் தோன்றவில்லை. அதில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. முதலில் அப்பதிவில் சில வரிகளைப் பார்ப்போம்.

“குஜராத்தில் ஒரு தனியார் நிறுவனமொன்றில் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டு அவருக்கு எந்த வேலை கொடுப்பது என்று தெரியாமல் தடுமாறி ஏதாவது ஒருமணி நேரம் பார்க்கும் அளவுக்கு ஒரு வேலையைத் தந்துவிட்டு மீதி நேரம் முழுவதும் அவர் அரட்டை அடித்தாலென்ன, இணையதளத்தில் புகுந்து மேய்ந்தாலென்ன நிர்வாகம் அதைப்பற்றி துளியளவும் கவலைப்படுவதில்லை. ஆறு மாதங்கள் வரை அவருக்கு எந்த கவலையுமின்றி ஊதியத்தை வாங்கிக்கொண்டு ஜாலியாக சுத்துவார்கள், அதன் பிறகுதான் அவருக்கு தலைவலியே ஆரம்பிக்கும்.

வேலை கொடுக்கப்படாமலேயே அவரது பெர்மாமென்ஸ் மேலதிகாரியால் சரிபார்க்கப்பட்டு இவர் லாயக்கில்லை என்று ஒரு முடிவுக்கு வந்து பிறகு கொடுத்த ஒருமணி நேர வேலையையும் தருவதில்லை. காலையில் அலுவலகம் வருவதும் மதியம் சாப்பிட்டுவிட்டு மாலை வீடு கிளம்பிப்போவதும் தான் அவரது வேலையாக இருக்கும். கிட்டத்தட்ட இருபது நாள் அல்லது ஒரு மாதம் வரை இதே நிலைதான். அதன்பிறகு அவரே மனசொடிந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளம்பி போய்விடுவார்.

மீண்டும் தினசரியில் வேலைக்கான விளம்பரம் வரத்தொடங்கும். சலித்துப்போன குஜராத்வாசிகள் ஒரு கட்டத்தில் அந்த கம்பெனிக்கு வேலைக்கு விண்ணப்பிப்பதே இல்லாமல் போக, புது டெக்னிக் கண்டுபிடித்தது நிர்வாகம். கம்பெனியில் நிறைய தமிழ்பேசும் ஆட்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வேலையை தேடிப்பிடித்து செய்வார்கள், இதை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை கொண்டு வந்து வேலைக்கு அமர்த்தலாம் என முடிவெடுத்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழில் விளம்பரம் கொடுத்து குஜராத்துக்கு நேர்காணலுக்கு வர விமான டிக்கெட் எடுத்து கொடுத்து வரவழைத்தார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நல்ல ஊதியம், தங்குவதற்க்கு கெஸ்ட்ஹவுஸ், சமைத்துப்போட தனி ஆட்கள், கெஸ்ட்ஹவுஸ்சிலிருந்து அலுவலகம் வந்து போக கார், இருசக்கர வாகனம் என எல்லா வசதிகளையும் செய்து தந்தது அந்த நிறுவனம். ஆனால் அவர்களும் ஆறு மாதம் தாக்குப்பிடிக்கவில்லை காரணம் சரியான திட்டமிடுதல் இல்லாமல் வேலையில் பகிர்தல் இல்லாமல் வந்த வழியே திரும்பி போய்விட்டார்கள்.

அஸ்திவாரம் கட்டுவதற்கு முன்பு ஜன்னலுக்கு வர்ணம் பூசும் கொள்கை உடையவர்கள் இந்த நிறுவனத்தினர். விற்பனைத்துறையில் அடித்தள வேலையாட்களை தேர்வு செய்யாமல் உயர்ந்த பதவிக்கு ஆட்களை அதிக சம்பளத்துக்கு எடுத்துவிட்டு மேல் மட்டமாக வேலை செய்தால் விற்பனை எப்படி உயரும். லாபம் குறைந்துவிட்டால் உடனடியாக ஆட்குறைப்பு என்ற மந்திரத்தை ஏவி நாலைந்து விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்கள்.

இங்கு வேலைக்கு ஆள் எடுப்பதே ஒரு வேலையாக வைத்துக்கொண்டு காலம் கடத்துபவர்கள் உண்டு. ஒருபுறம் வேலைக்கு ஆள் எடுப்பதும் மறுபுறம் வேலையை ராஜினாமா செய்வதும் வாடிக்கையாகிப்போன ஒன்று. வேலையை விட்டு செல்லும் பொழுது யாருக்கும் எந்த மன வருத்தமும் இருப்பதில்லை.

ஒவ்வொரு உயர் அதிகாரிகளுக்கும் தனி கேபின், ஒவ்வொரு கேபினுக்கும் ஒரு பீயுண், ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஜெராக்ஸ் மெசின், அந்த ஜெராக்ஸ் மெசினிலிருந்து ஜெராக்ஸ் எடுத்து தர தனிப் பியூன் ஆக மொத்தம் பியூன்களின் எண்ணிக்கையே 35 க்கு மேல்.

இத்தனை வசதிகள் நிறைந்த கம்பெனியில் பணியில் அமர்ந்து நிறுவனத்துக்கு போட்டு கொடுக்கும் ஊழியர்கள் மட்டும் தொடர்ந்து பணியில் வேலை செய்யாமலேயே காலத்தை ஓட்டலாம். நிறுவனத்தின் முட்டாள்தனமான முடிவுகளுக்கு தலை ஆட்டினால் வேலை தொடரும், எதிர்த்து பதில் பேசினால் வேலை காலி.

இங்கு நிர்வாகத்துக்கு பிடிக்காத நபர்களுக்கு சம்பளத்தை குறைத்துவிட்டு இடமாற்றம் கொடுப்பார்கள். பொருளாதார சரிவின் காரணமாக அதையும் ஏற்றுக்கொண்டு வேலை செய்பவர்களும் உண்டு. அங்கிருந்து வேறு ஊருக்கு இடமாற்றம் சொல்லி மறுபடியும் சம்பளத்தை குறைத்து அனுப்ப முடிவு செய்வார்கள்.முடியாது என்று மறுத்தால் இங்கு வேலை இல்லை, வேண்டுமானால் நீங்களே ஒவ்வொரு துறைக்கும் சென்று எங்காவது வேலை இருக்கிறதா என்று பார்த்து நீங்களே என்ன வேலை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்று முட்டாள்தனமாக சொல்வார்கள்.

தொடர்ந்து 20 நாட்கள் எந்த வேலையும் தரப்படாமல் போகவே போங்கடா நீங்களும் உங்க வேலையும் என்று ராஜினாமா கடிதம் எழுதி தந்து விட்டு போய்விடவேண்டும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்ப்பது.

இவ்வளவும் எழுதியிருக்கிறீர்களே நீங்க எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? மேலே சொன்ன நிறுவனத்தில்தான் நான் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்தேன். முதலில் 3000/= சம்பளம் குறைத்து ஜெய்ப்பூர்க்கு இடமாற்றம் பெற்று மறுபடியும் 6000/= குறைத்து பெங்களூர் செல்லச் சொன்னபோது வெகுண்டெழுந்து முடியாது என்று மறுக்கவே 20 நாட்கள் வேலை எதுவும் தராமல் இழுத்தடித்து அய்யோ ஆள விடுங்கடா சாமி என்று ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவன் வேறுயாருமல்ல சாட்சாத் நானே தான்.

என்ன கொடுமை சார் இது. எனக்கு வயது 42 இன்னமும் 25 வயது இளைஞனைப்போல் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்”.


அதற்கு நான் இட்டப் பின்னூட்டம் இதோ.

இம்மாதிரி தனியார் துறையில் நிறுவனமா? அதுவும் குஜராத்திலா? ஆச்சரியமாக இருக்கிறதே.

சமீபத்தில் 1970-களில் திரையிடப்பட்ட “புன்னகை” படத்தில் ஜெமினி கணேசனுக்கு கிடைக்கும் முதல் வேலை நீங்கள் சொல்வது போலத்தான் இருந்தது. அவர் உடனே ராஜினாமா செய்து விட்டு போய் விடுவார்.

அதில் என்ன சொன்னார்கள் என்றால், வெறுமனே ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இடத்தை வளைத்து போட வேண்டியது, பிறகு ஒரு தொழிலுக்கான லைசன்ஸையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டியது. பிறகு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது, பிறகு வேறு யாருக்காவது கணிசமான தொகைக்கு அந்த இடத்தையும் லைசன்சையும் மாற்றுவது என்றுதான்.

ஆனால் இன்னுமா அம்மாதிரி கம்பெனிகள் உள்ளன? கம்பெனியின் பெயரையாவது எழுதுங்கள் ஐயா, புண்ணியமாகப் போகும். வேறு சிலராவது ஏமாறாமல் இருக்கலாம் அல்லவா?


வேலை இடமாற்றம் சரிதான், ஆனால் நீங்கள் சொல்வது போல சம்பளத்தை குறைக்க இயலாதே? அவ்வாறு செய்ய முயல்வது சட்ட விரோதம் ஆயிற்றே? மேலும் கம்பெனியே இடமாறுதல் உத்திரவு பிறப்பித்தால் அவ்வாறு மாறுவதற்கான எல்லா செலவுகளையும் வேறு அல்லவா ஏற்றுக் கொள்ள வேண்டும்?

பதிவர் இடைவெளிகள் இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? செய்திருப்பேன் என்ன, செய்திருக்கிறேனே?

முதலில் எனது இப்பதிவைப் பாருங்கள்.

வருடம் 1986. சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் எனக்கு கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து பக்கத்து வளாகத்தில் இருந்த குர்கான் தொழிற்சாலைக்கு மாற்றம் வந்தது. அப்போது நான் உதவி மின் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்து வந்தேன். அதே நேரத்தில் தொழிற்சாலையில் என்னுடைய ரேங்கிலேயே இன்னொரு உதவி மின்பொறியாளர் இருந்தார். ஆனால் என் சீனியாரிட்டி அவருடையதை விட அதிகம். ஆகவே அவர் என் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம்.

அதுவும் அது வரை நான் வெறும் மொழிபெயர்ப்பு வேலைகள்தான் பார்த்து வந்தேன். ஜெனெரேட்டருக்கான வேலைகளை துவக்கி, நடாத்தி, முடித்துக் கொடுத்தது ஒரு விதிவிலக்காகவே பார்க்கப்பட்டது. அது வேறு அவருக்கு கடுப்பு. எங்கள் மேலதிகாரியிடம் போய் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்.

விளைவு நான் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த உடனேயே என்னைத் தலைமையகத்தில் உள்ள விளக்குகள், மின் விசிறிகள் முதலியவற்றைப் பார்த்துக் கொள்ளுமாறும் நான் இருக்க வேண்டிய இடமும் அதுதான் என்றும் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சம்பளம் மட்டும் தொழிற்சாலை கொடுத்து விடும். இப்படியாக மின் பிரிவில் மிக அதிக சீனியாரிட்டி உள்ள நான் ஒரு சாதாரண மேற்பார்வையாளன் செய்யக் கூடிய வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் என்ன செய்தேன்? பேசாமல் திரும்பி வந்தேன். என்னுடைய பழைய மேஜை நாற்காலிகள் எனக்கு கொடுக்கப்பட்டன. உதவிக்கு ஒரு எலெக்ட்ரீஷியன், ஒரு ஹெல்பர் மட்டுமே. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் வேலை பத்து நிமிடங்களில் முடிந்து விடும். சந்தோஷமாக மீதி நேரங்களில் என் வெளி மொழிபேயர்ப்பு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். தில்லி முழுக்க எனக்கு வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுக்கும் வேலைகளை ஹாய்யாகச் செய்து கொண்டிருந்தேன். நல்ல பிராக்டீஸ், நல்ல அனுபவமும் கூடக் கிடைத்தன. என்னைக் கண்காணிக்க வேண்டியவர்கள் தொழிற்சாலையில், நான் இருப்பதோ தலைமை அலுவலகத்தில். அங்கு இல்லையென்றால் தொழிற்சாலையில் இருப்பதாக இவர்கள் நினைத்துக் கொள்ள ஒரே தமாஷ்தான் போங்கள். இந்தக் கண்ணாமூச்சி 6 வருடம் நீடித்தது.

ஐ.டி.பி.எல் அப்போது தன் வீழ்ச்சியை நோக்கிப் போய்கொண்டிருந்தது. கைவசம் ஆர்டர்கள் ரொம்ப இல்லை. பலரும் வேலை நேரத்தில் பொழுதுபோகாமல் வம்பு பேசிக் கொண்டிருந்தனர். தன் இடத்தில் அமர்ந்து வம்பு பேசாமல் வேலை செய்பவர்கள் மிகச்சிலரே. அவர்களில் நானும் ஒருவனாக இனம் காணப்பட்டதுதான் பெரிய தமாஷ். எப்போதும் உட்கார்ந்து எதையோ பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தது பலரை இம்ப்ரெஸ் செய்தது.

திடீரென 1990-ல் ஒரு பிரெஞ்சுக்காரர் ரிஷிகேஷில் உள்ள தொழிற்சாலைக்கு வந்து 21 நாட்கள் டேரா போட, அவருக்காக துபாஷி வேலை செய்தேன். என்னுடைய மொழிபெயர்ப்பு வேலைகளை விடாமல் செய்து வந்ததால் அந்த வேலையை இடது கை விளையாட்டாகச் செய்தேன். எங்கள் தலைமை நிர்வாகிக்கு ஒரே ஆச்சரியம். அவர் என்னிடம் "ராகவன், இங்கு கிட்டத்ததட்ட 8 வருடங்களாக பெரிய அளவில் பிரெஞ்சுவேலை எதுவும் வரவில்லை, இருப்பினும் நீங்கள் நேற்றுத்தான் விட்டது போல எப்படி சமாளித்தீர்கள்?" எனக்கேட்டார். அவரிடம் உண்மையையா கூற முடியும்? வேறு மாதிரி சமாளித்தேன். "ஐயா இது சைக்கிள் விடுவதைப் போலத்தான். பல ஆண்டுகள் சைக்கிளையே தொடாவிட்டாலும் பேலன்ஸ் செய்வது எப்படி மறந்துப் போகும்?"


மேலே சொன்னது போல கொட்டம் அடித்துக் கொண்டிருந்த நான் எழுதிய இந்தப் பதிவையும் பாருங்கள்.

எங்கள் மேனேஜருக்கு மட்டும் என் மேல சிறிது சம்சயம் என்று நினைக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை, நான் ஆஃபீசுக்கு வராமல் எங்காவது மட்டம் அடித்து விடுகிறேனா என்றுதான். ஆகவே தினமும் தான் காலையில் வேலைக்கு வந்ததும் என்னை இண்டர்காமில் கூப்பிட்டு ஏதாவது பேசி அறுப்பார். நானும் சமயம் கிடைத்தது என்று அவரைப் போட்டு எதிர்மரியாதையாக அறுத்து விடுவது உண்டு.

வருடம் 1987. எம்.ஜி.ஆர். அவர்களது இறுதிச் சடங்குகள் நடந்த தினத்தன்று ஐ.டி.பி.எல். கார்ப்பரேட் ஆஃபீஸில் திடீரென காலை 10 மணிக்கு அமைச்சகத்திலிருந்து வந்த தகவல்களின்படி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5 பஸ்கள் ஸ்டாஃபுகளுக்காக. அடுத்த 5 நிமிடத்தில் எல்லோரும் பஸ்களில் ஏறிக் கொள்ள, கட்டிடமே காலியானது. நான் மட்டும் என் சீட்டில் இருந்து கொண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்தேன். அடுத்த நாளிலிருந்து நான் பத்து நாட்கள் லீவில் போகவிருந்தேன். ஆகவே கையில் இருக்கும் வேலையை முடிக்க வேண்டுமே என்ற அவசரம் வேறு.

எண்ணி ஐந்தாவது நிமிடம் இண்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசினால் மேனேஜர். அவர் நான் இன்னும் என்னிடத்தில் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தது போல இருந்தது. சாதாரணமாகப் பேசுவது போல நினைத்துக் கொண்டு என்னெனாவோ சம்பந்தம் இல்லாத கேள்விகள். பிறகு கார்ப்பரேட் ஆஃபீஸ் நிலவரம் பற்றிக் கேட்க எல்லோரும் வீட்டுக்குப் போய் விட்டதைக் கூறினேன். நான் ஏன் இன்னும் அங்கேயே இருக்கிறேன் என்பதை கடைசியில் கேட்க, பிளாண்டுக்கும் லீவா என்று "ஆச்சரியத்துடன்" நானும் கேட்டேன். சிறிது நேர மௌனம். அவருக்கு பின்னால் லாம்பா என்னும் ஆஃபீஸர் "ராகவன் போயிருக்க மாட்டான் என்று நான் கூறியது சரியாகப் போய் விட்டது பார்த்தீர்களா" என்று கேட்டது மேனேஜர் டெலிபோன் மவுத் பீசை சரியாக மூடாததால் எனக்குத் தெளிவாகக் கேட்டது.

"உங்களைப்போல் எத்தனைப் பேரை நான் பார்த்திருக்கிறேன்" என்று நான் நினைத்தேன், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் சற்று நேரம் அறுத்து விட்டு, பேச்சை முடித்து கொண்டார் மேனேஜர். நானும் விறுவென்று மூட்டை கட்டிக் கொண்டு, கீழே வந்து, என் சைக்கிளில் ஏறி வீடு நோக்கி விரைந்தேன்.


நான் சொல்ல வருவது இதுதான். நிலைமையை எப்போதுமே நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது நல்லது. ஐ.டி.பி.எல்.-லில் வேலை செய்தபோது முதல் இரண்டாண்டுகளுக்கு மொழிபெயர்ப்பு வேலை நெட்டி முறித்த போதும் எனது மற்ற மொழிபெயர்ப்பு வேலைகளை வீட்டிலிருந்த போது செய்து முடித்தேன். ஐ.டி.பி.எல்.-ல் வேலையே இல்லை என்றபோதும் அதற்காக அசராமல் என் போக்கை மாற்றிக் கொள்ளவும் செய்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/10/2009

டோண்டு பதில்கள் - 10.09.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்துக் கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே அவரவர் தத்தம் கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அனானி (12 கேள்விகள் கேட்பவர்)
1. தென்னக நதிகள் இணையும் திட்டம் எந்த நிலையில்? நெல்லையில் தொடங்கும் என்றார்களே?
பதில்: நெல்லையில் தொடங்குமா? எப்படியாம்? ஒரு படத்தில் கஞ்சா கருப்பு எல்லா நதிகளையும் இணைக்கிறேன் எனச்சொல்லி விட்டு எல்லா நதிகளின் தண்ணீரையும் சில குடங்களில் தனித்தனியே அடைத்து வைத்து அவ்ற்றை ஒவ்வொன்றாக தாமிரபரணி நதியில் விடுவார். அடுத்த சீன் அவருக்கு தர்ம அடி என்று நினைக்கிறேன். யாராவது படத்தின் பெயரை சொல்லுங்கப்பு.

2. மனசாட்சிக்கும் தன் மனதுக்கும் விரோதமாக நடக்கும் மனிதர்கள்?
பதில்: அதாவது, மனமும் மனசாட்சியும் வேறுவேறு அப்படீங்கறீங்க?

3. கர்நாடக இசைக்கச்சேரிகளில் உங்களை கவர்ந்தவர் யார்? என்ன ராகம் பிடிக்கும்?
பதில்: கர்நாடக சங்கீதத்தை ரசிக்கவும் ஓரளவு சங்கீத ஞானம் வேண்டும். அது எனக்கு சுத்தமாக லேது. சில பாடல்கள் இனிமையாக இருக்கும், கேட்பேன்.

பிடித்த ராகம்? பூபாளம். ஏனெனில் எங்கம்மா எனக்கு திருப்பாவை பாடல்களை இசையாக சொல்லிக் கொடுக்க முயற்சித்தார். மார்கழித் திங்கள் என்னும் முதல் திருப்பாவையை அவர் பூபாளத்தில் பாடுவார். வையத்து வாழ்வீர்காள் என்னும் அடுத்தப் பாட்டு பிலஹரி என்றெல்லாம் போகும். ஆனால் என்ன ஆச்சரியம் நான் எந்தத் திருப்பாவை பாடலை பாட முயன்றாலும் அது தானாகவே பூபாளத்தில் முடிந்து படுத்தும். என் அம்மா “சனியனே உனக்கு இதெல்லாம் வேண்டாம்” எனக் கூறி விசிறிக் கட்டையால் அடித்து விரட்டி விட்டார்.

4. செக்ஸ் கல்வி பள்ளிகளில் என்ற திட்டம் எந்த நிலையில்? ஆதரிக்கிறீர்களா?
பதில்: அதை எவ்வாறு சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொருத்துத்தான் பதிலும் இருக்கவியலும்.

5. தமிழக அரசியல் வாதிகள்/ஆந்திர அரசியல் வாதிகள்/கேரள அரசியல் வாதிகள்/ஆந்திர‌ அரசியல் வாதிகள் ஒப்பிடுக?
பதில்: ஊழலைப் பொருத்தவரை எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றாலும், தமிழக அரசியல்வாதிகள் தற்சமயம் அரசியல் விரோதத்தை தனிப்பட்ட விரோதமாகப் பார்க்கின்றனர். மற்ற மாநிலத்து அரசியல்வாதிகள் இந்தளவுக்கு மோசமில்லை என்றுதான் கூற வேண்டும். அதுவும் இந்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் செய்யும் கூத்துக்கள் பார்க்கச் சகிக்கவில்லை.

6. அரசின் செயல்களால் விலைவாசி எதுவும் குறைய வாய்ப்புண்டா?
பதில்: எனக்குத் தெரிந்து அப்படி ஏதும் இல்லைதான்.

7. தமிழ் நாட்டில் இன்று ஒரு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: வேலை தேட ஆரம்பிக்க வேண்டும்.

8. அஞ்சல்துறையில் நல்ல மாற்றம் தெரிகிறதே?
பதில்: எப்படிச் சொல்கிறீர்கள்?

9. சினிமா கவிஞர்கள் இப்போது அரசியலுக்குள் பிரவேசம் ?
பதில்: அவர்களும் சம்பாதிக்க வேண்டாமா?

10. அ.தி.மு.க.வின் பலமும் பலவீனமும்?
பதில்: ஜெயலலிதா

11. தா.பாண்டியன் தேர்தல் முடிவுக்கு பிறகு?
பதில்: ஐயோ பாவம்.

12. சினிமா, அரசியல் ஒற்றுமை/வேற்றுமை
பதில்: சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகளாக ஆன அளவுக்கு அரசியல்வாதிகள் சினிமாவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

கந்தசாமி
1. வட இந்தியாவில் வெகுவிமரிசையாய் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அதன் தொடர்ச்சியாய் விநாயகர் ஊர்வலம், பின் கடலில் சிலை கரைப்பு வைபோவங்கள் இப்போது தமிழ் நாட்டிலும் சில வருடங்களாய் அமைதியாய் நடை பெற்று வரும் சமயத்தில் இந்தத் தடவை ஒரு சில அதிகாரிகள் அனுமதி மறுத்து சண்டித்தனம் செய்வதாயும், முதல்வர், துணை முதல்வர் தலையிட்டு கைகொடுக்க வேண்டும் எனும் ராம. கோபாலன் கோரிக்கை நிறைவேறுமா?
பதில்: நல்லபடியாகத்தான் எல்லாம் முடிந்து விட்டதே. அடுத்த ஆண்டில் பார்ப்போம்.

2. கலைஞர் வீட்டுப் பெண்கள் ச‌மீபகலாமாய் பூஜை புனஸ்காரம் என தூள் கிளப்புவதாய் வரும் செய்திகளை பார்த்த பிறகு என்ன சொல்லத் (அரசின் கொள்கை) தோணுகிறது?
பதில்: கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று சொன்னவரின் தாய் தந்தையரே கடவுள் பக்தி உடையவர்களாக இருந்து, சொன்னவர் அவரது “பகுத்தறிவின்படியே” காட்டுமிராண்டிகளின் புதல்வர் ஆனார். தலைக்கே அக்கதி என்றால் வால்கள் பற்றி என்ன சொல்வது?

3. சாதி நல்லிண‌க்கம் ஏற்படுத்தும் இந்த விழாவுக்கு துணை போகாமல் இடையூறு செய்வோரை அரசு கண்டிக்குமா?
பதில்: விநாயகர் ஊர்வலத்தைத்தானே சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்வது போல அரசு செய்ய அது என்ன இசுலாமியர்/கிறித்துவர் ஊர்வலமா?

4. கடலில் சிலை கரைப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு எனும் பெரியார் பக்தர்களின் குற்றச்சாட்டு எடுபடுகிறதா?
பதில்: மண் பிள்ளையாரால் பாதிப்பு இல்லை. பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் செய்வது கண்டிக்கத் தக்கது.

5. முன்பு பிள்ளையார் சிலை உடைப்பு நடத்திய பகுத்தறிவுச் சிங்கங்கள், இன்று பிரணவ மந்திரத்தின் அம்சமாய் விளங்கும் ஆதிமுல கணபதியின் சீர்மிகு விழா கண்டு என்ன சொல்வார்கள்/செய்வார்கள்?
பதில்: தமிழ் ஓவியாவுக்கு போக வேண்டிய கேள்வி இது. அவரும் கண்டிப்பாக 1921-ல் பெரியார் எங்காவது எழுதியதை தேடி கண்டுபிடித்து நகலிடுவார். பார்த்துக் கொள்ளுங்கள்.


கிருஷ்ணகுமார்
1. Difference between motivation and habit?
பதில்: Habit is already there. If something is done to favor the habit in a person, the concerned fellow is motivated to achieve more.

2. Name the Indian chief minister served for the longest tenure? reason for that?
பதில்: எனக்குத் தெரிந்து அது மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுதான். அவரது தனிமனித ஒழுக்கம், உள்ளூர் காங்கிரசாரின் கையாலாகத்தனம் ஆகியவையே அவரது வெற்றிக்கு முக்கியக் காரணங்கள்.

3. Will Jaswant Singh form a new party?
பதில்: அவர் இன்னொரு மன்மோகன் சிங், நெடுஞ்செழியன். அடிமட்ட ஆதரவு அவருக்கு இல்லை என நினைக்கிறேன்.

4. Tell whether bluetooth option in cars is a dangerous idea?
பதில்: ஏம்பா காரை ஓட்டப் போறீங்களா இல்லை டெலிஃபோனில் பேசணுமா? ஏதேனும் ஒண்ணைப் பண்ணுங்கப்புகளா.

5. Tell ways to overcome shyness and have good conversational skills to the younger generation?
பதில்: சமீபத்தில் 1963-ல் வந்த ரத்ததிலகம் என்னும் படத்தில் “புத்தன் வந்த திசையிலே போர், புனித காந்தி மண்ணிலே” போர் எனத் துவங்கும் பாடலில் “பகைவனுக்கும் ஓர் உயிர்தான் வா, வா” என்னும் வரி வரும். அதே போல சங்கோஜம் என்பது எல்லோருக்குமே உண்டு. அதை வெல்வதுதான் முக்கியம். அதை வெல்வதற்கான முக்கிய உபாயமே அதை வெல்ல மனம் வைப்பதுதான். குருதிப் புனல் படத்தில் கமல் சொல்வது போல தைரியம் என்பது உள்ளே உருவாகும் பயம் வெளியில் தெரியாவண்ணம் பாதுகாத்துக் கொள்வதுதானே.

6. Methods to gauge a person's Intelligence quotient?
பதில்: எனக்கு இந்த ஐ.க்யூ. சோதனைகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஒரு குழந்தைக்கு சோதனை வைத்தார்கள். ஒரு நாணயத்தைக் காட்டி அது என்ன நாணயம் - ஒரு ரூபாயா, அரை ரூபாயா - எனக் கேட்க, குழந்தை அதை வாங்கி திருப்பிப் பார்த்து ஐம்பது பைசா என்றது. அதை ஒத்துக் கொள்ள இயலாதாம். நாணயத்தின் ஷேப்பைப் பார்த்து கூற வேண்டுமாம். ஆனால் நாணயத்தை அம்மாதிரி திருப்பிப் பார்த்தால் அதன் வால்யூ தெரிந்து கொள்ளலாம் என தெரிந்திருப்பதே ஒரு அறிவுள்ள செயல் என நான் நினைக்கிறேன். இன்னொரு குழந்தை மூன்று மொழிகள் பேசும். ஆனால் அதெல்லாம் அறிவில் கணக்கில் வராது என அந்த டெஸ்டுகள் எடுக்கும் அறிவுக் கொழுந்துகள் கூறுகிறார்கள்.

7. News T.V. Channels. will do away the News Papers from elite public in the coming days?
பதில்: அமெரிக்காவிலேயே பத்திரிகைகள் காணாமல் போகவில்லை. இங்கு நம்மூரில் போய் விடுமா என்ன?

8. Say something remarkable from your oldest memory?
பதில்: மாலை போட்டு என்னை மணையில் உட்கார வைத்திருக்கிறார்கள். நெல்லில் என் விரலை பிடித்து வாத்தியார் அ, ஆ எழுத வைக்கிறார். சமீபத்தில் 1950 விஜயதசமியன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் போது எனக்கு நாலரை வயது. அடுத்த ஞாபகம் சர்தார் வல்லபாய் படேல் இறந்த செய்தி.

9. The actors in comedy serials are becoming more vulgar in their acts. why?
பதில்: உதாரணம் கூறவும். எனக்கு அவ்வாறு தோன்றவில்லையே.

10. what is your comfortable grade with strangers?
பதில்: அவர்கள் எனக்கு அயலார் என்றாலும், நானும் அவர்களுக்கு அயலார்தானே.

அனானி (25.08.2009 இரவு 09.12-க்கு கேட்டவர்)
டோண்டுவின் புதுமொழிகள்?
1. எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

பதில்: எல்லாம் தெரிந்தவனுக்கும் கூடத்தான் சந்தேகம் இல்லை.

2. பற்களுக்கிடையில் மனிதன் மறைந்துள்ளான்.
பதில்: சொற்களினூடே தன்னைப் பற்றிய உண்மையை அவன் மறைக்கிறார்ன்.

3. ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.
பதில்: புதிய முசல்மான் ஒரு நாளைக்கு பத்து முறை தொழுவான் என்பதும் உருதுவில பழமொழிதான்.

4. உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான்
பதில்: சாவு எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தீரும்.

5. ஓர் ஆண்டின் களையெடுப்பு ஏழாண்டுகளின் விதை.
பதில்: அப்படியானால் ஏழாண்டுகள் விதைத்த பிறகு ஓராண்டு களைபிடுங்க வேண்டுமா? அறுவடை எப்போ செய்யணும்? இல்லே அதுக்காக தனியே ஆட்டோவில் ஆக்கள் வருவாகளா.

6. அவர்கள் அவனைப் பிடிக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் நேர்மையானவரே
பதில்: தங்கை தன்னைப் பற்றி அப்பாவிடம் கோள்மூட்டப் போகிறாள் என்பது அறிந்தவுடன் தானே சொல்பவனே மனசாட்சியுடையவன், நேர்மையானவன்.

7. விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.
பதில்: துப்பாக்கி சுடும் போட்டியில் பலகையில் சுட்ட பிறகு ஓட்டையை சுற்றி காம்பஸால் வட்டம் வரைந்து கொள் என்பது போல இருப்பதாக எனக்கு தோன்றுகிறதே.

8. ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.
பதில்: அம்மாதிரி நண்பர்கள் இருக்கும்போது எதிரி என்று யாரும் தேவையா என்ன?

9. ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.
பதில்: பாலைவிட பாலேட்டில்தானே சத்து அதிகம்?

10. உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு
பதில்: சின்ன வீடு பற்றி நண்பனுக்கும் கூறாதே, அவன் தள்ளிக் கொண்டு போனாலும் போவான்.

ரமணா
1. சேமிப்புக் குணம், சிக்கனம், மனநிறைவு ஆகியவை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நான் இட்ட 1. சேமிப்பது சரியா, தவறா? 2. நினைக்கத் தெரிந்த மனமே ஆகிய பதிவுகளைப் பாருங்களேன் சிக்கனம் பற்றி எனது எண்ணங்களை அறிய.

2. அலுவலகத்தில் பிறரின் தவறுகளுக்காய் கண்டிப்பு காட்டும் போது எதிர் விளைவுகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?
பதில்: கண்டிப்பு காட்ட வேண்டிய மேலதிகாரியாக நீங்கள் இருந்தால் எதிர்வினைக்கெல்லாம் பயப்படக்கூடாது. ஆனால் ஒன்று, நீங்கள் நடவடிக்கை எடுத்தால் மேனெஜ்மெண்ட் உங்களை சப்போர்ட் செய்ய வேண்டும். பல சமயங்களில் உங்களை அவர்கள் திரிசங்கு சொர்க்கத்தில் விட்டு விடுவார்கள். அது நடந்தால்தான் கஷ்டம். அது எனக்குத்தான் தேரியும். ஐ.டி.பி.எல். நாசமாகப் போனதற்கே இம்மாதிரி தொழிலாள்ர்களது ஒழுங்கீன நடவடிக்கைகளை யூனியன் ஆர்ப்பாட்டத்துக்கு பயந்து பூசிமொழுகியதும் ஒரு முக்கியக் காரணம்.

3. ந‌ண்பர்கள் சந்திப்பின் போது பொருளாதாரத்தில் நலிந்தவர்களின் வறுமை சுட்டிக் காட்டப்பட்டு கேலி பேசும் போக்கு சரியா?
பதில்: அவ்வாறு நடந்தால் நண்பர்கள் யாரும் மிஞ்ச மாட்டார்கள். ஆனால் அதே சமயம் உனக்கென்னப்பா நீயெல்லாம் பணக்காரன் என மூக்கால் அழும் நண்பர்களும் தவிர்க்கப்பட வேண்டியவர்களே.

4. இந்தப் பணியை முடித்து தருகிறேன் என வாக்கு அளித்துவிட்டு பின்னாளில் நம் முகம் பார்த்து பேச அஞ்சும் மனிதர்கள் பற்றி என்ன சொல்வது?
பதில்: அந்தப் பணி இலவசமானதா அல்லது காசு கொடுத்தீர்களா என்ற கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலை முதலில் பார்க்க வேண்டியிருக்கிறது. பிறகுதான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியும். பலர் முகதாட்சண்யத்துக்காக காலணாகூட கிடைக்காத வேலையை ஒத்துக் கொண்டு நீங்கள் சொல்வது போல நடந்து கொள்வார்கள். எல்லோருமே என்னைப் போல ஓசி வேலைகளை தாட்சண்யமே இல்லாமல் மறுத்துவிட்ட்டால் தொல்லையே இல்லையே.

5. சமீபகாலமாய் ஆன்மிக நெறியைப் போற்றுகிறவர்கள், ஆன்மிகத்தைப் பின்பற்றுகிறவர்கள் எண்ணிக்கையில் கூடுவதை பார்க்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது.
பதில்: அப்படியெல்லாம் கூடுவது போலவோ அல்லது குறைவது போலவோ எல்லாம் தெரியவில்லையே?

கோபால்
1. கேரளாவில் துஷ்ட தெய்வங்களின் துணை கொண்டு செய்யப்படும் பில்லி சூனியம் உண்மையா?
பதில்: கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நிச்சயமாகத் தெரியாது.

2. அங்கு பெரிய கோவில்களின் பிரசன்னம் பார்த்து நடந்தவை நடப்பவைகளை துல்லியமாய் சொல்வதாய் பல பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.இது எப்படி சாத்தியமாகிறது?
பதில்: இம்மாதிரி அசாதாரண நிகழ்வுகள் பற்றி எனக்கு நேரடி அறிவு இல்லை.

3. கேரள மாந்திரீகர்கள் சிலர் பெரிய கோவிலில் உள்ள தெயவத்தின் அனுக்கிர‌கத்தையே கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று சொல்லப்படுவதில் உண்மை உண்டா?
பதில்: பல மெகாசீரியல்களில் பார்த்துள்ளேன். ஆனால் உண்மையை யாரறிவார்? ஆனால் ஒரு விஷயம் பார்த்துள்ளேன். அரக்கர்கள் தாங்கள் செய்யும் தவத்துக்கான பல வரங்களைப் பெறுவது, அதனால் எல்லோரும் அவதிப்படுவது என்றெல்லாம் ஏன் நடக்க வேண்டும்? முதலில் வரம் ஏன் தரவேண்டும்? என்றெல்லாம் நான் சிறிய வயதில் யோசித்திருக்கிறேன். பிறகுதான் ராமானந்த் சாகரின் ராமாயணம் சீரியலில் அதற்கு பதில் கிடைத்தது. சிவனை கடசி முறையாக வணங்கும் ராவணன் கூறுவான், “நீங்கள் எனக்களித்த வரங்களை உங்களால் தந்திராமல் இருக்கவியலாது. ஏனெனில் நான் செயுத தவத்தின் வலிமை அப்படிப்பட்டது. அதை வைத்து நான் கர்வத்தால் எனது அழிவை நானே தேடிக் கொண்டது வேறுவிஷயம்”

4. தெருக்களில் குறளி வித்தை காட்டுபவன் செயல்களும் இந்த மந்திர வகை சார்ந்ததா?
பதில்: பொய்த்தோற்றம் காட்டி அதை செய்வதுபோல நம்மை நம்பவைக்கிறார்கள். மனித இனம் உருவாகியதிலிருந்து இப்போதுள்ள நிலை வரையிலுள்ள காலத்தை பார்த்தால் நாம் பகுத்தறிவோடு இருந்து செயல்பட்ட ரொம்பவுமே சமீபத்திலிருந்துதான். இந்த சமீபம் டோண்டு ராகவன் சொல்லும் சமீபம் மாதிரித்தான்.

5. சில மாஜிக் காட்சிகளில் ஆளை ரத்தம் சிந்தாமல் இரண்டாய் வெட்டி பின் ஒட்டுகிறார்களே இது எப்படி சாத்யமாகிறது? இதுவும் மந்திரமா? தந்திரமா?
பதில்: பொய்த் தோற்றம்


ஸ்வாமிநாதன்
1. மகாகவி பாரதிக்கும் இன்றைய கவிஞர்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன?
பதில்: மகாகவி பாரதியார் உயிருடன் இருந்த காலகட்டத்தில் அவரை அறிந்தவர்கள் மிகவும் குறைவே. அவர் இறப்பிற்கு வந்தவர்கள் எண்ணிக்கை மிககுறைவே. அதேபோல இப்போதுள்ள ஏதேனும் அடையாளம் காணமுடியாதவர்கள் பிற்காலத்தில் வரலாம் அல்லவா? ஆக, இம்மாதிரி ஒப்பிடல்கள் செய்யத்தான் வேண்டுமா?

2. மன அமைதி தரும் தியானம் செய்யும் பழக்கம் உண்டா?
பதில்: முயற்சித்தது இல்லை.

3. மன நிம்மதியுடன் வாழ வழிகள் உண்டா?
பதில்: வாழ நினைத்க்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

4. மனிதன் பந்தத்திற்கு ஆளாகுவது ஏன்?
பதில்: அதைத்தான் மாயை என்னும் பெயரில் அழைக்கிறார்கள். அது மனிதகுலம் தழைக்கத் தேவையான ஒன்றாகும். பின்னால் நடக்கப் போகும் விபரீதங்களை அறிந்தால் ஒருவன் ஒரு செயலையும் செய்ய இயலாது. ஆகவேதான் அறியாமையால் கடவுள் அவன் மனதை மூடுகிறான் என்று பெரியவர்கள் கூறுவர்.

5. ஒரு சிலர் அகங்காரத்துடன் இருப்பது ஏன்?
பதில்: எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம், தலைகுப்புற விழலாம் என்னும் எண்ணமே இல்லாது இருப்பவர்கள் அகங்காரத்தால்தான் அழிகிறார்கள்.

6. நாகாக்க என்ற வள்ளுவரின் கருத்துக்கு விளக்கம் சொல்லவும்?
பதில்: வாய்க்கொழுப்பால் பல வாய்ப்புகளை இழந்தவர்கள் என்னைவிட இதற்கு நன்றாக விளக்கமளிப்பார்களே.

7. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளி கூடுகிறதா இல்லை குறைகிறதா?
பதில்: கூடுவதோ குறைவதோ நம் கையில் இருப்பதாக எண்ணுவது மாயையே. எல்லாம் அவன் செயல்.

8. இந்தியா எல்லாத் துறைகளிலும் முன்னேற வழி?
பதில்: ஒருமித்த செயல்பாடுகள். தேசபக்தி. கடின உழைப்பு. இவற்றை தவிர்க்க ஏதும் குறுக்கு வழிகள் இல்லை என்பதில் தெளிவாக இருத்தல்.

9. மனசாட்சி பற்றி கூறவும்?
பதில்: மேலே ஒரு கேள்விக்கு சொன்னதை சற்றே மாற்றிச் சொல்வோமா? தங்கை என்னைப் பற்றி கோள்மூட்டப் போகிறாள் என்பது அறிந்தவுடன் தானே சொல்வதே மனசாட்சியாகும்.

10. ஆன்மீகத்திற்கும் இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கும் என்ன தொடர்பு?
பதில்: உபநிஷத்துகள் சொன்ன பலவிஷயங்கள் விஞ்ஞானத்தால் உண்மை என கண்டறியப்பட்டுள்ளன.

11. ஆத்ம சுத்தியுடன் எழுதும் எழுத்தாளர் யாரேனும் உளரோ?
பதில்: ஆத்ம சுத்தியுடன் எழுதுகிறார்களோ இல்லையோ கைசுத்தியுடன் எழுதுகிறார்களா என்பதை முதலில் பார்ப்போமே.

12. பக்திக்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு?
பதில்: ஒன்றுக்கொன்று உதவி செய்யும். நாம் செய்வதை செய்வோம், மீதியை ஆண்டவன் பார்த்துப்பான் என்று இருந்தால் நலம். அதற்காக எல்லாவற்றையும் அவனே பாத்துப்பான் என்று இருத்தல் சரியில்லை.

13. கல்விக்கும் நல்ல ஒழுக்கத்திற்கும் உள்ள தொடர்பு?
பதில்: கல்வி நல்லொழுக்கத்தை அடையாளம் காண உதவுகிறது. ஆனால் அதை எடுத்து கொள்ள அடிப்படையிலேயே நல்லொழுக்கம் இருக்க வேண்டுமே. புரியவில்லை? ஒரு லார்ஜ் அடித்து பாருங்கள்.

14. பிறவிகளிலிருந்து விடுபட பக்திதான் சரியான வழியா?
பதில்: அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் நான் நினைக்கிறேன் அம்மாதிரி விடுதலையும் சில நாட்களிலேயே போரடிக்கும் என.

15. உலகப்பற்று இல்லாமல் வாழ்வதற்கு என்ன வழி?
பதில்: தாமரை இலை தண்ணீர் போல வாழ வேண்டும். பலனை எதிர்ப்பார்க்காது செயலாற்ற வேண்டும். என்னால் அது ஏலாது.

16. சுவாமி விவேகானந்தர் அருளிய செய்திகளில் முதன்மையானது எது?
பதில்: உன்னையே அறிந்து கொள். உன்னையே நம்பு.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/08/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 08.09.2009

கதைகள் மிஸ்ஸிங் பத்திரிகைகளில்
முன்பெல்லாம் பத்திரிகைகளில் பல சிறுகதைகள் வரும். தொடர்கதைகள் வரும். அவற்றுக்காகவே பத்திரிகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளுமே சினிமா துணுக்குகளாகவே பக்கங்களை நிரப்புகின்றன. விகடன், குமுதம், குங்குமம் என்று எதை பார்த்தாலும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. இதில் என்ன சோகம் என்றால் கதைகளை ரொம்பவுமே பின்னால் தள்ளி விட்டார்கள். தொடர்கதைகள் கிட்டத்தட்ட இல்லை என்னும் அளவுக்கே போய் விட்டன.

இன்னும் கதைகளை போட்டு வரும் கல்கி, மங்கையர் மலர் ஆகிய பத்திரிகைகள் சற்றே நம்பிக்கை அளிக்கின்றன. உதாரணத்துக்கு சில கதைகளைப் பார்ப்போம்.

மங்கையர் மலர் செப்டம்பர் 2009 இதழ் பக்கம் 44-ஆம் பக்கத்தில் வருகிறது “வேம்பு மாமியும் வேப்பமரமும்” என்னும் கதை. பத்மா என்பவரால் ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதை போட்டியில் அளிக்கப்பட்டு, இரண்டாம் பரிசு பெற்ற கதை இது. ஒரு குடியிருப்பு காலனியில் கப்பும் கிளையுமாக நின்று கொண்டிருக்கும் வேப்ப மரத்தை அது இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி காலனி மேனேஜ்மெண்ட் அதை வெட்ட ஏற்பாடு செய்கிறது. அம்மரம் வேம்பு அம்மாள் முதலில் அந்த காலனி இருந்த இடத்தில் இருந்த தோப்பு வீட்டை சேர்ந்தது. பிற்காலத்தில் பில்டருக்கு இடத்தைக் கொடுத்து தோப்பு காலனியாக உருவாகியுள்ளது. வேம்பு அம்மாளுக்கு அந்த மரம் என்றால் உயிர். காலனி குழந்தைகளுக்க்ம் மற்ற பெண்களுக்கும்தான்.

ஆனாலும் வணிக நோக்கங்கள் காலனி அசோசியேஷனில் மேலோங்கி அம்மரம் இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி நல்ல விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்படுகிறது. கதை அம்மரம் வெட்டப்படும் நாளிலிருந்து ஆரம்பிக்கிறது. மரத்தின் கீழ் கிளாசுக்காக கூடும் குழந்தைகள் முகத்தில் உற்சாகம் இல்லை. திடீரென காlaனி செக்ரட்டரியின் மனைவி தன் குழந்தையை அழைத்து கொண்டு மாமியிடம் வருகிறார். குழந்தைக்கு அம்மை வார்த்திருக்கிறது என மாமி டயாக்னெஸ் செய்கிறார். இச்செய்தி காலனி முழுக்கப் பரவி வேப்ப மரத்தை வெட்டுவது தெய்வக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. குழந்தைகள் மரத்தை சுற்றி அணைத்து நிற்கிறார்கள். பெண்கள் அவர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கின்றனர். காலனி வேப்ப மரத்தை வெட்ட வேண்டிய கம்பெனியின் மின்சார அரம் பழுதுபடுகிறது. இப்போது காலனி அசோசியேஷனும் யோசிக்க ஆரம்பிக்கிறது. அவரவர் வீட்டிலேயே அசோசியேஷன் உறுப்பினர்களுக்கு பிரஷர் வருகிறது. கடைசியில் மரத்தை வெட்ட வேண்டாமென தீர்மானிக்கின்றனர்.

கதையின் கிளைமாக்ஸாக குழந்தையின் முகத்தில் அதன் அன்னையே ஊதுவத்தியால் சூடுவைத்திருக்கிறாள் என வாசகருக்கு மட்டும் சொல்லப்படுகிறது. நல்ல விஷயம் நடக்க இம்மாதிரியும் செய்ய வேண்டியிருக்கிறது. மனதுக்கு நிறைவை அளித்த கதை இது. இம்மாதிரி யுக்தி பற்றி ஏற்கனவேயே நான் ஒரு கதை படித்துள்ளேன். அதையே சற்று மாற்றி இக்கதையிலும் கடைசியில் சொல்கிறார்கள். ஊமைத்துரையை கும்பினியாரிடமிருந்து இவ்வாறுதான் காப்பாற்றியதாக கதையில் அதிகப்படியாக செய்தி வருகிறது.

அறுபதுகளில் இன்னொரு கதை வந்தது. முருகன் கோவில் குளத்தை தூர்க்க சில சதி நடக்க, தர்மகர்த்தா தன் கோவில் குளத்தை முருகனே காப்பான் என சூளுரைக்கிறார். அதற்கேற்ப ஊரில் பெரிய தீவிபத்து ஏற்பட குளத்து நீர் இருந்ததால்தான் தீயை அணைக்க முடிந்தது என கதை போகிறது.

இதெல்லாம் மூட நம்பிக்கை என சில அறிவாளிகள் கூறட்டும். நான் அந்த அறிவாளிகளுள் ஒருவனாக இருக்க விரும்பவில்லை என்பதை மட்டும் மனச்சந்துஷ்டியுடன் கூறி வைக்கிறேன்.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் சொல்தல்
என் அத்தையின் கணவர் திடீரென இறக்க அத்தையும் அவரது ஐந்து குழந்தைகளும் சென்னையில் இருந்த எங்கள் பெரியப்பா வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் குடிபுகுந்தனர். என் வயதுடைய ஸ்ரீதர் மற்றும் என் அக்காவின் வயதுக்கு ஈடான அவன் அக்காவும் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஸ்ரீதர் என்னுடமன் 4 மாதம் சிறியவன். ஆனால் ஒரு வகுப்பு அதிகமாக படித்தான் (நான்காம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்குத் தாவியிருக்கிறான்). அவனை என் பள்ளியில்தான் தெலுங்கு மீடியம் கிளாசில் சேர்த்தார்கள். (அவன் தந்தை இறந்த சமயம் அவர் ஆந்திராவில் பத்தாண்டுகளாக போஸ்டிங்கில் இருந்தார்).

எல்லோரிடமும் அவன் எனது சொந்த தம்பி என சும்மா கூறிவைத்தேன். அது பிறகு பல சங்கடங்களை வரவழைத்தது. முதலில் என் எட்டாம் வகுப்பு உபாத்தியாயர் ஜயராம ஐயங்காரிடம் மாட்டிக் கொண்டேன். அவர் ஸ்ரீதரிடம் “உனக்கும் ராகவனுக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம்” என எதார்த்தமாகக் கேட்டு வைக்க, அந்த உண்மை விளம்பி 4 மாதம் என்றான். வாத்தியார் தான் குடித்துக் கொண்டிருந்த காப்பியை துப்பி அவருக்கு புரைக்கேறிவிட்டது. பிறகு நான் ஒருவாறு சமாளித்து “இல்லை, சார், ஒரு வயது 4 மாதங்கள்” எனக் கூறி சமாளித்தேன்.

ஸ்ரீதரின் வகுப்பாசிரியர் எவெரெஸ்ட் அவர்கள் (அவரது உண்மைப் பெயர் தெரியாது, விசு அவர்கள் மன்னிப்பார் என நினைக்கிறேன்) இன்னும் டீப்பாக சென்றார். “ஆக உன் தந்தை ஆர். நரசிம்மன் இவனுக்கு தந்தை அல்லவா”? எனக்கேட்டார். நான் ஆமாம் எனச் சொல்லி வைக்க, பிறகு அவன் என்ன் அவரை தனது கார்டியனாக ஃபார்மில் குறிப்பிட்டுல்ளான் என ஒரு கூக்ளியை வீசினார். அசருவேனா நான், என் அத்தைக்கு பிள்ளைக் குழந்தை இல்லாததால் அவன் குழந்தையாக இருக்கும்போதே ஸ்வீகாரம் கொடுத்து விட்டார்கள் என ஒரு சிக்ஸர் அடித்தேன். நல்ல வேளையாக மேலே கேள்விகள் வரவில்லை. நான் பள்ளியிறுதி வகுப்பைத் தாண்டும்வரை மனதில் லேசாக உதறல்தான்.

மொழி பெயர்ப்பாளர் தேவைப்படும் இடம்
சமீபத்தில் 1975-ஆம் ஆண்டு முதன்முறையாக ஜெர்மன் துபாஷியாக சென்றேன். ஒரு லெதர் கம்பெனிக்கு ஜெர்மானியர் ஒருவர் வந்திருந்தார். அவர் வந்தவுடனேயே கூறிவிட்டார். அதாகப்பட்டது தான் ஆங்கிலத்தில் பயிற்சி செய்து கொண்டிருப்பதாகவும், ஆகவே நான் அவருக்கு பக்கத்தில் இருந்தால் போதும், தேவையானால் என் சேவையைப் பெறுவேன் என்றார்.

கடைசியில் எல்லாவற்றையும் பார்த்தபிறகு தனது வணிக ப்ரபோசலை வைத்தார். முழுக்க ஜெர்மனில் பேசிவிட்டு, என்னிடம் அதை கவனமாக மொழிபெயர்க்குமாறு கூறினார். நான் செய்வதை கூர்ந்து கவனிக்கவும் செய்தார். பிறகு அவர் என்னிடம் ஜெர்மனில் பேசும்போது, பண விஷயத்தில் தாய் மொழிதான் பத்திரமானது என்றார்.

பணவிஷயம் மட்டும்தானா, வேறு சந்தர்ப்பங்களிலும் தெரியாத மொழியை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது. இப்படித்தான் கீழே உள்ள படத்தில் பாருங்கள் ஒருவன் ஒரு பெண்ணுக்கு தனது காதலை தெரிவிக்கிறார். அப்பெண் ஜாக்கிரதையாக மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் அவனோடு பேசத் தயாரில்லை என்கிறாள்.



பிரசித்தி பெற்ற ஆங்கில இதழ் Punch பலரும் படித்திருக்கலாம். அதில் ஒரு கார்ட்டூன். பாரிசில் ஒரு ஹோட்டலில் ஆங்கிலேய தம்பதியினர் உட்கார்ந்திருக்கின்றனர். “உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கிறேன், பிரெஞ்சில் சாப்பாடு ஆர்டர் செய்யக்கூடாதுன்னு” என்று கூறி மனைவி கணவன் குமட்டில் குத்துகிறாள். அவர்களை நோக்கி ஒரு டிராலியில் அப்போதுதான் சமைத்த யானையின் தலையை வைத்து சர்வர் அவர்களை நோக்கி டிராலியைத் தள்ளிக்கொண்டு வருகிறான்.

அதே போல ஒரு ஜோக் அறுபதுகளில் ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக்காக வந்தது. தமிழ்த் தம்பதியர் ஹோட்டலில் தலையில் கைவைத்தபடி இருக்க, டேபிளில் அலார்ம் கடிகாரம், அரிக்கன் லைட், சோப் பெட்டி ஆகியவை இருக்கின்றன. “அடப்பாவி மனுஷா எத்தனை முறை சொன்னேன் ஹிந்தியில் ஆர்டர் செய்யாதீங்கன்னு” என்று என மனைவி கோபிக்கிறாள்.

தேன்நிலவு படம் ஷூட்டிங்கிற்கு போன டைரக்டர் ஸ்ரீதரின் அசிஸ்டண்ட் ஒருத்தார் ஐந்தடி உயரத்துக்கு ஒரு மரக்கட்டை வாங்கப் போய் கிட்டத்தத்தட்ட உதை வாங்கிய கதையை ஸ்ரீதர் எழுதியுள்ளார். கட்டை என்றால் லக்கடி என்பர்கள். பாஞ்ச் ஃபுட் லக்கடி (ஐந்தடி நீளக் கட்டை) என்பதற்கு அந்த அசிஸ்டண்ட் “பாஞ்ச் ஃபுட் லட்கி (ஐந்தடி உயரம் உள்ள பெண்) எனக் கேட்டுத் தொலைத்திருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது