12/17/2008

புதுக்கோட்டுக்கு ஜூட் - 3

புதுக்கோட்டுக்கு ஜூட் - 2
எனது முதல் புதுக்கோட்டுக்கு ஜூட் பதிவுக்கு பெயர் தானம் செய்த என் பெரியப்பா பிள்ளை அம்பி ராகவன் ஜெயின் கல்லூரியில் பி.யூ.சி. மற்றும் பி.எஸ்.சி. படித்தான். என்.சி.சி.யில் மிகுந்த ஆர்வம் உடையவன் (நான் இதில் அவனுக்கு நேரெதிர், ஆனால் அது இப்பதிவுக்கு வேண்டாம்). Corporal ரேங்க் வரைக்கும் வந்தான். அவனை குவார்ட்டர் மாஸ்டராக போட்டார்கள். அதாவது மாணவர்களுக்கு இஷ்யூ செய்யும் எல்லா உருப்படிகளுக்கும் கணக்கு வைத்தல். ஒரு மாதிரி ஸ்டோர்கீப்பர் என வைத்து கொள்ளலாம். அப்போது அவன் என்னிடம் சொன்ன விஷயத்திலிருந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.

அவனுக்கு முன்னால் இருந்த குவார்ட்டர் மாஸ்டர் ஒரு குசும்பு வேலை செய்தான். அதாவது ஒவ்வொருவருக்கும் இரண்டு செட்டுகள் யூனிஃபார்ம் கொடுப்பது வழக்கம். சில மாணவர்கள் ஆர்வக் கோளாறில் தாங்களாகவே அதிகப்படியாக ஒரு செட் தைத்து கொள்வார்கள். இதை தெரிந்து கொண்ட அந்த பழைய குவார்ட்டர் மாஸ்டர் ஓசைப்படாமல் யூனிஃபார்ம் அளித்த பட்டியலில் சம்பந்தப்பட்டவர்கள் பெயருக்கு நேராக 2 என்பதை 3 என திருத்தி விட்டான். எல்லாமே சும்மா ரவுசுக்குத்தான் செய்திருக்கிறான். இருந்தாலும் கடைசி ஆண்டை முடித்து விட்டு போய் விட்டான். அவன் எண்ணிக்கையை சரி செய்த மாணவர்கள் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு மாணவர்கள். அவர்கள் மூன்றாம் ஆண்டு வரும்போதுதான் யூனிஃபார்ம்களை திரும்பத் தரவேண்டும். அப்போதுதான் இம்மாதிரி மாற்றிய விஷயம் தெரிந்திருக்கிறது. அவர்கள் அம்பி ராகவனிடம் வந்து அழுதிருக்கிறார்கள். என்னதான் புதுக்கோட்டுக்கு ஜூட் எல்லாம் பம்பர விளையாட்டில் செய்திருந்தாலும் அவன் பொது வாழ்வில் நெருப்பு மாதிரி. அவர்கள் சொல்வது உண்மை என தெரிந்து ரொம்ப ஃபீலிங்ஸ் ஆனான். இருந்தாலும் பிரச்சினை வெடித்த சமயம் சற்றே நாசூக்காக நிலைமையை சமாளிக்க வேண்டியிருந்தது.

புத்திசாலித்தனமாக ஒன்று செய்தான். டோட்டலை செக் செய்தான். நல்ல வேளையாக முன்னால் திருத்திய பையன் டோட்டலில் கைவைக்கவில்லை. டோட்டல் டாலியாகாமல் போனதையும், சாதாரணமாக இரண்டு செட்டுகளுக்கு மேல் யாருக்கும் யூனிஃபார்ம் தருவதில்லை என்ற நடைமுறையை வைத்தும் என்.சி.சி.க்கு பொறுப்பு வகித்த கல்லூரி ஆசிரியரை கன்வின்ஸ் செய்தான். மாணவ்ர்களும் அவனிடம் நன்றியாக இருந்தனர்.

இந்த புதுக்கோட்டுக்கு ஜூட் விடும் விஷயம் மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே நடந்து வந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் கல்கியில் படித்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது. சாதி கட்டுப்பாடுகள் நிறைந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஒரு சமயம் ஒரு கிராமத்தில் பத்து நாட்கள் விடாமல் மழை பெய்து பெரிய வெள்ளம் வந்தது. ஊரை ஒட்டிச் சென்ற நதியில் ஒரு எருமையின் அழுகிய பிணம் இந்த ஊருக்கருகில் புதரில் மாட்டி கரையில் ஒதுங்கி விட்டது. ஊரே நாறிவிட்டது. எந்த சாதியினர் அதை எடுப்பது என்ற பிரச்சினை வந்தது. இம்மாதிரி விஷயம் இது வரை நடந்ததே இல்லை. ஊர் நாட்டாமை கணக்கப் பிள்ளையை அழைத்து பழைய ஓலைச்சுவடிகளில் இது மாதிரி ஏதாவது நிகழ்ச்சி நடந்ததாக கூறப்பட்டுள்ளத்தா, அவ்வாறு இருந்தால் அப்போது என்ன செய்தார்கள் என்பது அதில் சொல்லப்பட்டுள்ளதா என பார்க்க சொன்னார். கணக்கு பிள்ளைக்கும் உள்ளூர் குயவர்களுக்கும் மனத்தாங்கல் ரொம்ப நாட்களாகவே. இவர் ஒரு காரியம் செய்தார் ஓலைச்சுவடு கட்டுகளை புரட்டினார். அதில் சில பழைய எழுதப்படாத ஓலைகள் இருந்தன. அவற்றில் ஒன்றை எடுத்து பாட்டாக பின்வருமாறு எழுதினார்.

வானம் பிளந்து மாரிபொழிந்து
பல நாட்கள் மக்கள் அல்லலுற்று
துயரம் கொள்ள வெள்ளத்தில் செத்த எருமை
அழுகிக் கரை ஒதுங்க அதை எடுக்கும் கடன்
புத்தம்புது பானைகள் செய்யும் குயவருக்கே
அவருக்கு ஒரு கலம் நெல் அளிக்கும் கடன் ஊராருக்கே

பிறகு எழுதிய ஓலையை மண்ணில் புரட்டி வைத்தார். கூடவே மற்ற ஓலைகளையும் அவ்வாறே வைத்தார். நாட்டாமை ஊர்க்காரர்கள் புடைசூழ அவர் இருக்கும் இடத்துக்கு வந்து ஏதேனும் தகவல் கிடைத்ததா எனக்கேட்க, அவரும் அவர் எதிரிலேயே மேலே சொல்லப்பட்ட அத்தனை ஓலைகளயும் மண்ணைத் தட்டி எடுத்து நீரில் கழுவி ஒவ்வொன்றாக உரக்கப் படித்தார். பல ஓலைகளுக்கப்புறம் கடைசி ஓலையாக மேலே சொன்ன பாடலை எழுதி வைத்திருந்த ஓலையை படித்தார்.

பிறகென்ன, குயவர்கள் தம் தலைவிதியை நொந்து கொண்டு எருமையை அடக்கம் செய்ய வேண்டியதாயிற்று. “அது சரி, நெல்லாவது குடுத்தாங்களா”ன்னு கேட்கும் முரளி மனோஹருக்கு சீரியஸ்னெஸ்ஸே இல்லை என விசனப்பட வேண்டியிருக்கிறது.

அன்புடன்
டோண்டு ராகவன்

12/16/2008

புதுக்கோட்டுக்கு ஜூட் - 2

இந்த வரிசையில் வந்த முந்தைய பதிவு

எனது இப்பதிவில் குறிப்பிட்ட என் அத்தை பிள்ளை ஸ்ரீதரனும் (என் மனைவியின் அண்ணன்) நானும் உறவினர்கள் என்பதைவிட அதிக அளவில் நண்பர்கள் என்றுதான் கூறவேண்டும். அவன் அப்பா திடீரென இறக்க அவனும் அவன் அக்காவும் அடுத்த ஆறு ஆண்டுகள் எங்கள் வீட்டில் தங்கி படித்தனர். நானும் அவனும் சேர்ந்து அடித்த கொட்டங்கள் அனேகம். அது பற்றி பிறகு.

அவன் அப்பா இந்தியன் வங்கியில் மேலாளராக ஆந்திராவில் பணிபுரிந்தார். அவனுக்கு டியூஷன் வைத்திருந்தனர். அவன் நண்பன் தனது டியூஷன் வாத்தியாரின் சிபாரிசால் டபிள் ப்ரமோஷன் வாங்கி படித்தான், அதாவது நான்காம் வகுப்பிலிருந்து நேரடியாக ஆறாம் வகுப்புக்கு சென்றான். ஸ்ரீதரனுக்கும் அவர்தான் டியூஷன் வாத்திய்யர். இவனும் அவ்வாறே ஆசைப்பட்டு அவரிடம் கூற அவர் அவனிடம் அவ்வாறெல்லாம் எல்லோராலும் முடியாது என்று கூறியிருந்தார். அப்படியே விட்டிருக்கலாம், ஆனால் அவர் நேரம்தான் என்று கூற வேண்டும். அவர் அவனிடம் மாடிப்படியில் நேரடியாக நான்காம் படிக்கு போக இயலாது, இதுபோலத்தான் அது, வேண்டுமானால் அவர் அவ்வாறு தாவிவிட்டால் ஆவன செய்வதாக வார்த்தையை விட்டு வைத்தார். நம்ம திருவாழத்தானும் வேகமாக ஓடிவந்து அவன் வீட்டு மாடிப்படியில் உள்ள நான்காம் படிக்கு தரையிலிருந்தே தாவி குதித்து விட்டான். திகைத்து போன வாத்தியார் “ஏதோ பேச்சுக்கு சொன்னால் அப்படியேவா எடுத்து கொள்வது” என முணுமுணுத்து கொண்டே ஜகா வாங்கினார். இதுவும் நான் முந்தைய பதிவில் சொன்ன புதுக்கோட்டுக்கு ஜூட் போன்ற நிலைதான். அதாவது பந்தயத்தில் தோற்றதும் அதன் ஷரத்தை அப்படியே மாற்றுவது அல்லது முழுக்கவே மறுத்துவிடுவது.

ஒரு கன்னட திரைப்படம் பார்த்தேன். அதில் பள்ளி மாணவர்கள் சீதைக்காக ராமர் வில்லை ஒடிக்கும் காட்சியை நடிக்கும் ஒரு காட்சி காட்டப்பட்டது. எல்லா அரசர்களும் அந்த சிவன் வில்லை எடுத்து நாணேற்ற முயல்கின்றனர். ராவணனும் முயல்கிறான், ஆனால் அவனும் மற்றவர்களை போலவே தோல்வியடைகிறான். பிறகு ராமர் வந்து வில்லெடுத்து நாணேற்ற வில் முறியும். ஆனால் அந்தோ இக்காட்சியில் ராவணனாக நடிக்கும் பையன் நிஜமாகவே வில்லை எடுத்து ஒடித்துவிட்டான். நாடகத்தை டைரக்ட் செய்து கொண்டிருந்த ஆசிரியை மடேரென மண்டையில் தட்டிக் கொள்வார். ஆடியன்சில் ஒரே கைத்தட்டல். அப்போதுதான் ஜனகராக நடித்த நடிகர் ஒரு காரியம் செய்தார். “யாரங்கே, எந்த மடையனடா இந்த வில்லை கொண்டு வந்து வைத்தது? இது சிவதனுஷு அல்லவே. அதை கொண்டு வாருங்கள்” என சமாளிப்பார். நல்ல வேளையாக ஒரு ஸ்பேர் வில் இருந்ததோ நாடகம் பிழைத்ததோ. இன்னொரு வில்லை கொண்டு வந்து வைக்க, மறுபடியும் ராவணன் வில்லிடம் செல்ல முயற்சிக்க, அவனை டிரில் மாஸ்டர் கெட்டியாக பிடித்து வைக்க, ராமர் அவசரம் அவசரமாக வந்து வில்லை ஒடிப்பார். இதுவும் புதுக்கோட்டுக்கு ஜூட்தான், ஆனால் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.

நான் சமீபத்தில் 1976-ல் மத்தியப் பொதுப்பணித் துறையில் வேலை செய்த தருணத்தில் Executive Engineer (Hindi) என்ற போஸ்டை உருவாக்கினர். அதற்கு முன்னுரிமை ஹிந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத Assistant Engineer களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஹிந்தியில் எம்.ஏ. படித்திருக்க வேண்டும் என்ற ஷரத்தும் வைக்கப்பட்டது. கூடவே ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் Assistant Engineer ஆக பணி புரிந்திருக்க வேண்டும். அவ்வாறு யாரும் கிடைக்காவிட்டால் ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்ட Assistant Engineer-களை இவ்வேலைக்கு பதவி உயர்வு தரலாம் என்று கடைசியாக ஷரத்து சேர்த்திருந்தார்கள். அவர்கள் தாய்மொழியாதலால் எம்.ஏ. தகுதி வற்புறுத்தப்படவில்லை. இந்த ஷரத்து கடைசியாக சேர்க்கப்பட்டிருந்தாலும் இதுதான் ஒரே ஷரத்து என்றுதான் கூறவேண்டும். யாராவது பி.இ. படித்து விட்டு எம்.ஏ. ஹிந்தி படிப்பார்களா? ஆகவே கடைசி ஷரத்தின்படித்தான் வேலை உயர்வு தரப்படவிருந்தது. விஷயம் என்னவென்றால் இதற்காக ஏற்கனவே வடமாநிலம் ஒன்றில் உள்ள ஒரு தேஷ்பாண்டேயையோ குப்தாவையோ தெரிவு செய்து வைத்திருந்தனர். அதற்காகவே இந்த போஸ்டையும் உருவாக்கினர்.

ஆனால் அவர்கள் கால்குலேஷன் எல்லாம் எகிறிப்போகும் அளவுக்கு ஒரு விஷயத்தை எங்கள் Assistant Engineer வீரப்பன் செய்தார். அவர் சமீபத்தில் 1961-ல் த்ட்சிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபா நடத்திய பிரவீண் என்னும் பரீட்சையில் தேர்வு பெற்றிருந்தார். அக்காலக் கட்டங்களில் இம்மாதிரி ஹிந்தி பிரைவேட்டாக படித்தவர்கள் அனேகம் பேர் உண்டு. பரீட்சைகள் பின் வருமாறு: பிராதமிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா, பிரவேசிகா, விஷாரத், பிரவீண். கடைசியில் சொல்லப்பட்ட பிரவீண் பரீட்ட்சைக்கு எம்.ஏ. படிப்புக்கு சமமான அந்தஸ்து மத்திய அரசு ஆணையால் கொடுக்கப்பட்டுள்ளது. வீரப்பன் ஆறு ஆண்டுகளாக Assistant Engineer ஆக வேறு பணி புரிந்திருக்கிறார். ஆகவே அவர் கீழ்க்கண்டவாறு செயல்பட்டார். மத்திய அரசு ஆணையை தோண்டி எடுத்தார். தனது பிரவீண் பாஸ் செய்த சான்றிதழின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகலை தனது அப்ளிகேஷனுடன் போட்டு தனது மேலதிகாரிக்கு அனுப்ப, அதுவும் வரிசைக்கிரமமாகப் போய் இந்த வேலைக்காக தேர்வு செய்ய வேண்டிய குழுவிடம் போய் சேர்ந்தது. சம்பந்தப்பட்ட எல்லோருமே அசடு வழிந்தனர். பிறகு சில நாட்களுக்கு விஷயம் கிணற்றில் போட்ட கல்லாய் கிடந்தது. திடீரென ஒரு நாள் இந்த போஸ்டை உருவாக்கும் விஷயமே ஒட்டுமொத்தமாக டிராப் செய்யப்பட்டது. சிக்கன நடவடிக்கை எனக் கூறப்பட்டது. இதை நான் புதுக்கோட்டுக்கு ஜூட் விஷயத்துக்கு இன்னொரு உதாரணமாக பார்க்கிறேன்.

இதற்கு முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டிருந்த internationally branded car rental சேவைகள் சம்பந்தமான டெண்டரில் என்னதான் சொல்லியிருந்தார்கள் என்று பார்க்க விரும்பினேன். அதை கூகளிட்டு பார்த்ததில் ஒரு உரல் கிடைத்தது. அரசின் டெண்டர்களை பார்வையிட வழி செய்யும் உரல் அது. அதில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் விரும்பும் டெண்டரை அது அங்கு சேமிக்கப்பட்டிருந்தால் நாம் நோக்கிட இயலும். இந்த டெண்டரும் அதில் இருந்தது. சரி பதிவு செய்து கொள்ளலாம் என தீர்மானித்தேன். பயனர் பெயர், நமது கடவுச்சொல் (இருமுறை) நமது முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும். நான் பத்து கேரக்டர்கள் வரும் ஆல்ஃபா ந்யூமெரிக் கடவுச்சொல்லை தேர்ந்தெடுத்தேன். எல்லாவற்றையும் உள்ளிட்டவுடன் எனது பதிவு விண்ணப்பம் ஏற்கப்பட்டது என கூறப்பட்டிருந்தது. இப்போது அந்த டெண்டர் உள்ள பக்கத்திற்கு சென்றேன். லாக் இன் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அவ்வாறே பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் இட்டு க்ளிக்கினால், “கடவுச்சொல் ஆறு கேரக்டர்களுக்கு மேல் இருக்கலாகாது” என்ற எர்ரர் மெச்ஸேஜ் வருகிறது. எனக்கு மூச்சே நின்று விட்டது. “பின்னே ஏண்டா எனது பதிவை முதலில் ஏற்று கொண்டாய் மொட்ட நாயே” என்று கத்திக்கொண்டே அப்பக்கத்தை மூடினேன். இன்னொரு முறை வேறு பயனர் சொல் போட்டு மெம்பராகியிருக்கலாம்தான். ஆனால் இந்த சொதப்பலால் அங்கு போகும் ஆசையே அற்றுப் போயிற்று. இன்னொரு புதுக்கோட்டுக்கு ஜூட் கதைதான் இது.

இது சம்பந்தமாக வேறு ஏதாவது ஞாபகத்துக்கு வந்தால் மேலும் வந்து மொக்கை போடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/14/2008

புதுக் கோட்டுக்கு ஜூட்!

இப்பதிவு எனது இந்த ஆங்கிலப் பதிவின் அப்பட்ட மொழிபெயர்ப்பல்ல. ஆகவே அதில் குறிப்பிட்டுள்ள வழக்கின் முழுவிவரங்கள் தேவைப்பட்டால் அங்கே போய் பார்த்து கொள்ளலாம்.

வழக்கின் சாராம்சம் பின்வருமாறு:
Airports Authority of India (AAI) மேலாண்மை internationally branded car rental services-களுக்கு விமான நிலையத்தில் செயல்படும் உரிமம் சம்பந்தமாக டெண்டர் விட்டிருந்தது. இந்த சேவை அளிப்பைத் தரும் உள்ளூர் நிறுவனமான Fast Track (P) Ltd. இதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தது. அவர்கள் கூறுவது என்னவென்றால், எந்த அடிப்படையில் ஏ.ஏ.ஐ. சர்வதேச பிராண்ட் கார் வாடகை நிறுவனங்களுக்கு மட்டும் இந்த டெண்டர் விடப்பட்டதென கேள்வியை எழுப்பியது. ஆகவே சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தருவிக்குமாறும், இந்த ஆணையை ரத்து செய்யக் கோரியும் வழக்கு தொடர்ந்தது.

A.Xavier Arulraj, AAI-வழக்குரைஞர் என்ன கூறினார் என்றால் internationally branded car rental சேவைகள் சம்பந்தமான இந்த டெண்டரில் உள்ள ஷரத்துகள் AAI-யின் வணிக கொள்கை மற்றும் அத்தரிட்டியின் board of directors ஒப்புதல் பெற்றது என்பதே ஆகும்

நீதியரசி கே. சுகுணா அவர்கள் வாதியின் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். அவர் என்ன சொல்கிறார் என்றால், சம்பந்தப்பட்ட டெண்டர் ஷரத்தின் “plain reading”-படி உள்ளூர் டாக்சி நிறுவனங்கள் போட்டி போட தடை ஏதும் இல்லை. ஆனால், இந்த ஷரத்தை (internationally branded car rental services) பூர்த்தி செய்தால் போதும் என்பதே.


இப்போது டோண்டு ராகவன்:

என் முதல் கேள்வி: "plain reading" என்றால் என்ன? அதற்கு பொருள் "prima facie" (முதல் பார்வையில்) என மதிப்புக்குரிய நீதிபதி கருதுகிறாரா? அப்படியென்றால் இதற்காகத்தான் வழக்கே போடப்பட்டது என கருதுகிறேன். மேற்படி செய்தியிலிருந்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், ஏன் இந்த முடிவை அத்தாரிட்டி எடுத்தது என்பதைத் தெரிந்து கொள்ள கால் டாக்சி நிறுவனம் முயன்றுள்ளது என்பதே. மேலும், "internationally branded" என்ற சொற்றொடர் எதை சுட்டுகிறது? வண்டியையா அல்லது வாடகை சேவை அளிக்கும் நிறுவனத்தையா? இதுவும் தெரிய வேண்டும், "internationally branded" என்றால் என்ன? சம்பந்தப்பட்ட ஆவணங்களில் இதற்கெல்லாம் விடை கண்டிப்பாக கிடைத்திருக்கும். தேவையான definitions கிடைத்திருக்கும். இல்லையென்றால், இதற்காகவே இந்த டெண்டரை ரத்து செய்திருக்க வேண்டும். ஆவணங்களை ஒரு வேளை நீதிபதியின் பார்வைக்கு வைத்திருக்கலாம். ஆனால் இது பற்றி இந்த ரிப்போர்ட்டில் ஒன்றும் கூறப்படவில்லை. (இதனால் எல்லாம் நான் இந்தத் தீர்ப்பை கேள்வி கேட்கிறேன் என பொருள் கொள்ளலாகாது. ரிப்போர்ட்டில் முழுவிவரம் இல்லாத நிலையில் அவ்வாறு கேள்வியும் கேட்கக் கூடாது என்பதும் நிஜமே).

ஆனால் அத்தாரிட்டியை கேள்வி கேட்கலாம். எது எப்படி இருந்தாலும் ஏன் internationally branded car rental services மட்டும்தான் டெண்டர் தரமுடியும் எனக் கூறவேண்டும்? சேவையில் ஈடுபடுத்தப்படும் கார்களுக்கு தரநிர்ணயம் செய்யலாம், அவற்றை ஓட்டப் போகும் டிரைவர்கள் பலான பலான திறமைகள் இருக்க வேண்டும் எனக் கூறலாம். கார்கள் குறிப்பிட்ட நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட வேண்டும் என ஷரத்து போடலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணை மேல் வை என்னும் ரேஞ்சில் internationally branded car rental services எனத் தொங்குவது சந்தேகத்தை அளிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே போல ஒரு டெண்டர் பற்றி படித்துள்ளேன். அது மினிவேன்களுக்கான டெண்டர். அதை வரைவு செய்த கிளார்க் மினிவேன் என்பதற்கு பதிலாக Matadors என குறிப்பிட்டு விட்டார். அவருக்கு புரிந்தவரை மினிவேன்கள் எல்லாமே Matadors போலும். ஆனால் அவை ஒரு பிராண்ட் மட்டுமே. இதற்காக "Dynaclippers" (இன்னொரு மினிவேன் பிராண்ட்) வாடகைக்கு தரும் வேறொரு சேவை அளிப்பவர் கோர்ட்டுக்கு சென்று, நீதிபதி plain reading காரணத்தை கூறி Dynaclippers தரும் நிறுவனம் Matadors-ம் தரலாம் என முடிவு கூறினால் எப்படியிருக்கும்?

வழக்கறிஞர்களாக செயல்படும் பதிவர் யாரேனும் எனது சந்தேகத்தை தீர்த்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

அது கிடக்கட்டும், இந்தப் பதிவுக்கு ஏன் இந்தத் தலைப்பு என திகைப்புடன் கேட்கும் முரளி மனோஹருக்காக இப்போது மேலும் எழுதுவேன்.

சிறுவயதில் பம்பரம் ஆடுபவர்கள் இப்போதெல்லாம் அருகிவிட்டனர் என நினைக்கிறேன். ஆகவே நான் கூறப்போவதை டி.பி.ஆர். ஜோசஃப், சிவஞானம்ஜி, ராதாகிருஷ்ணன், இராமகி ஐயா ஆகியோர்தான் புரிந்து கொள்ள இயலும்.

ஒரு வட்டம் வரைந்து அதில் பம்ப்ரங்களை வைப்பார்கள். ஒருவன் தன் பம்பரத்தை அவற்றின் மேல் “ஜூட்” என கத்தியவண்ணம் செலுத்த வேண்டும். பம்பரங்கள் சில வெளியில் சிதறும். அவற்றுக்குரியவர்கள் அவற்றை அவசர அவசரமாக எடுத்து, செலுத்தி அப்பீட் செய்ய வேண்டும், முதலில் பம்பரம் விட்டவரும் அப்பீட் எடுக்க வேண்டும். முதலில் அப்பீட் எடுப்பவர் தவிர மீதிப்பேருடைய பம்பரங்கள் மறுபடியும் வட்டத்துக்குள செல்லும். மறுபடி ஜூட் என கத்திக் கொண்டு பம்பரம் செலுத்த வேண்டும், இத்யாதி, இத்யாதி.

இந்த ஜூட் சொல்வதற்கு ஒரு விதிமுறை உண்டு. வட்டம் சில சமயம் அழிந்து விடும். ஆகவே பம்பரம் செலுத்தும் முன்னர் யாராவது அந்த கோட்டை மீண்டும் வரைவர். இப்போது பம்பரம் செலுத்துபவன் “புதுக்கோட்டுக்கு ஜூட்” என கத்திக் கொண்டே பம்பரம் செலுத்த வேண்டும். அப்படி கூறாவிட்டால் அவனது பம்பரமும் வட்டத்துக்குள் பிடிக்கப்படும். இப்போது எல்லோரும் அவனவன் பம்பரத்தை எடுத்து அப்பீட் எடுக்க வேண்டும். இப்படியே விளையாட்டு செல்லும்.

இங்குதான் எனது பெரியப்பா பிள்ளை அம்பி ராகவன் ஒரு வேலை செய்வான். அவன் பம்பரம் உள்ளிருக்கும்போது கேஷுவலாக பம்பரம் செலுத்தப் போகிறவன் பார்க்காதபோது அந்த வட்டத்தை திரும்பப் போடுவான். அதை கவனிக்காத அச்சிறுவன் புதுக்கோட்டுக்கு ஜூட் சொல்லாது வெறுமனே ஜூட் என்றால் அவன் பம்பரம் பிடித்து வைக்கப்படும். ஆகவே இம்மாதிரி வேலைகளுக்கு எங்கள் குடும்பத்தில் புதுக்கோட்டுக்கு ஜூட் விட்டுவிட்டார்கள் எனக் கூறுவோம்.

இப்பதிவை எழுதும்போது அம்பி ராகவன் நினைவுக்கு வந்தான். ஆகவே இத்தலைப்பை வைத்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/13/2008

போகட்டும் விடு நண்பா, சண்டை வேண்டாம்

சமீபத்தில் 1983-ல் வந்தது ஜானே பீ தோ யாரோ என்னும் ஹிந்திப்படம். முதலில் அதிலிருந்து ஒரு காட்சியைப் பாருங்கள். ஹிந்தி தெரியாவிட்டாலும் பரவாயில்லை, நான் பிறகு விளக்குகிறேன்.

முதலில் கதை ரவி பாஸ்வானி மற்றும் நஜுருத்தீன் ஷா ஆகிய இருவரும் லட்சிய நோக்கை கொண்டுள்ள புகைப்படக்காரர்கள். அவர்கள் ஒரு சமூக பிரச்சினைகளை அலசி விவாதிக்கும் பத்திரிகையில் சேருகின்றனர். பத்திரிகையின் ஆசிரியை ரொம்பவும் லட்சியவாதி (என காட்டி பந்தா செய்பவர்). அதே நகரத்தில் இரண்டு ஒப்பந்தக்காரர்கள், பங்கஜ் கபூர் மற்றும் ஓம்புரி. அவர்களுக்குள் போட்டி. அதில் முன்னவர் நகரசபை கமிஷனரை தன் வசப்படுத்தி பல ஒப்பந்தங்களை பெறுகிறார். இன்னொருவரும் கமிஷனரை தன்வசப்படுத்த, முதல் ஒப்பந்தக்காரர் கமிஷனரை போட்டுத் தள்ளிவிடுகிறார். கமிஷனரின் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து தான் கட்டிய மேம்பாலத்திலேயே ஓரிடத்தில் புதைத்து விடுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக சரியாக கட்டப்படாத அந்த மேம்பாலம் இடிந்து விழுகிறது.

எதேச்சையாக பிணத்தை கண்டெடுக்கின்றனர் நம் கதாநாயகர்கள். இதை அறிந்த பத்திரிகை ஆசிரியை பிணத்தைத் தன்வசப்படுத்த அவர்களை அனுப்ப, பிணம் காணாமல்போக, எப்படியோ பிணத்தை கண்டுபிடித்து இவ்விருவரும் அதற்கு ஸ்கேட்டிங் உருளைகளை அணிவித்து தங்களுடன் எடுத்து செல்ல என்று படம் விறுவிறுவெனச் செல்கிறது. கடைசியில் மகாபாரதத்தில் பாஞ்சாலி சபதம் காட்சி நடக்கும் கட்டத்தில் கிரீன்ரூமுக்குள் இவ்விருவரும் பிணத்துடன் வருகின்றனர். அதன் பிறகு வரும் காட்சிதான் மேலே உள்ள யூட்யூப் க்ளிப்பிங். பிணத்தை பாஞ்சாலி என துச்சாசனன் இழுத்து வருகிறான். துரியோதனன் பேசிக் கொண்டிருக்கும்போதே துரோபதை அவன் மேல் சாய்கிறாள். வியர்த்து விறுவிறுத்து போகிறான் துரியோதனன். நடுவில் நசிருத்தீன் ஷா துரியோதன வேடதாரியை அடித்து போட்டுவிட்டு தானே துரியோதனனாக மாறி துரோபதை தனது அண்ணி ஆகவே துகிலுரிய விடமாட்டேன் எனக் கூற, துச்சாசன நடிகர் குழம்ப பிறகு அவர் இடத்தில் ரவி பாஸ்வானி வந்து அண்ணன் துரியோதனன் சொல்வதுபோல அண்ணி அன்னைக்கு சமம் என டயலாக் விட, யுதிஷ்டிரர் துரியனிடம் சீறுகிறார், “தம்பி துரியோதனா, நீ இங்கு என்ன செய்ய்ய வேண்டுமோ அதைச் செய்யாது ஏன் சொதப்புகிறாய் எனக் கேட்க நாடக ஆடியன்ஸில் விசில் அமளி.

ஓம்புரி பீமன் நடிகரை சாய்த்துவிட்டு பீமனாக வந்து, அவர் வேறு அலம்பல் செய்கிறார். இதில் திருதிராஷ்டிரனாக வருபவர்தான் முடிந்தவரை நாடகத்தைக் காப்பாற்ற நினைக்கிறார். காப்பாற்றியும் இருப்பார், ஆனால் பங்கஜ் கபூர் அக்பராக உள்ளே வர, “this is too much, யே அக்பர் கஹான் சே ஆயா (இந்த அக்பர் எங்கேயிருந்து வந்தான்)” என சீறுகிறார்.

பிறகு போலீஸ் வருகிறது என வைத்து கொள்ளுங்கள். கதாநாயகர்கள் போலீஸ்காரனிடம் எல்லா உண்மைகளையும் கூறுகின்றனர். ஆனால் பயன் ஏதும் இல்லை. நகரசபை உதவி கமிஷனர் சண்டைக்கார ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியை இவர்களுக்கிடையில் சமாதானம் செய்வித்து யார் யாருக்கு எவ்வளவு பணம் என்பதையும் தீர்மானம் செய்கிறார். அது சரி யாரை கைது செய்வது? குழப்பமே இல்லை. பங்கஜ் கபூர் கட்டிய மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு கதாநாயகர்களே பொறுப்பு என குற்றம் சாட்டி அவர்களை கைது செய்கின்றனர்.

இப்போது பங்கஜ் கபூர் ஸ்க்ரீனுக்கு வந்து நம்மிடம் பேசுகிறார். “எல்லாம் ஒருவழியாக முடிந்தது. இவ்விருவரும் ஜெயிலில். கேஸ் நடக்கும். ஆறு மாதங்களுக்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அதற்குள் எல்லோரும் இந்த விஷயத்தை மறந்திருப்பார்கள்” என கதையை முடிக்கிறார்.

அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முடிந்துபோன கதை என்று சொல்வது போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது