2/11/2005

சைட் பிசினெஸ் செய்யலாமா? - an analysis

மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரிப் பேராசியர்களாகவோ அல்லது ஏதாவது கம்பெனிகளுக்கு முழு நேர மருத்துவப் பணிக்கோ போகும் போது. தனி ப்ராக்டீசில் ஈடுபடக் கூடாது என்று விதி உண்டு. ஆனால் அதற்குப் பதில் அவர்களுக்கு அம்மாதிரி தனித் தொழில் செய்யாததற்கான ஈட்டுத் தொகை சம்பளத்துடன் வழங்கப்படும். அதே போல ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது என்றும் விதி இருப்பதாக அறிகிறேன். இங்கு இதற்காக ஏதும் ஈட்டுத்தொகை வழங்கப் படுவதாகத் தெரியவில்லை. எது எப்படியாயினும் அதைப் பற்றி நான் இங்குப் பேச வரவில்லை.

சில வேலைகளில் நிறைய மிகுதி நேரம் கிடைக்கிறது. நான் கடைசியாக வேலைப் பார்த்த நிறுவனத்தில் தினப்படி வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம். பிறகு என்ன செய்வது? எல்லோருக்கும் புத்தகம் படிப்பதில் விருப்பம் இருக்கும் என்றுக் கூற இயலாது. 90 சதவிகிதத்துக்கும் மேலான அளவில் அவ்வாறு ஓய்வு நேரம் அதிகம் உள்ளவர்கள் பேசிப் பேசியே அலுவலக வம்புகளுக்கு வழி வகுக்கின்றனர். ஆனால் திறமையுள்ள் சிலர் அலுவலக வேலைக்கு ஒரு பங்கமும் வாராது மற்ற வேலைகள் செய்துப் பொருள் ஈட்டுகின்றனர்.

எனக்குக் கீழே ஒரு மெக்கானிக் பணி புரிந்தார். ஏர் கண்டிஷன் தொழில் நுட்பத்தில் திறமை அதிகம் அவருக்கு. கம்பெனி வேலைகளை உடனுக்குடன் முடித்துப் பிறகுத் தன் சொந்தத் தொழிலையும் கவனிப்பவர். பழகுவதற்கு இனிமையானவர். (அப்போதுதானே வெளி வாடிக்கையாளர்களைப் பிடிக்க முடியும்). அவரிடன் கம்பெனி வேலையிருந்தால் அதற்குத்தான் முதலுரிமை என்று இருப்பார். வெகு வேகமாக அந்த வேலையை முடித்து வேறு வேலையில் ஈடுபடுவார். எனக்குத் தெரியும் அவர் இம்மாதிரி வெளி வேலைகளை எடுத்துச் செய்கிறார் என்று. அதனால் என்ன? வெளி வேலை எதையும் செய்யாது அதே சமயம் கம்பெனி வேலையையும் சொதப்பும் மற்ற மெக்கானிக்குகளை விட அவர் பல மடங்கு மேலானவர்.

நான் மட்டும் என்ன? நான் பொறியாளர் பற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் நான் பாட்டுக்கு வெளி மொழிபெயர்ர்ப்பு வேலைகளையும் செய்து வந்தேன். ஆகவே 11 வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு எடுக்கும் சமயம் ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்காக வாடிக்கையாளர்கள் தயாராக இருந்தனர். கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு ஒரு மொழி பெயர்ப்பு வேலையும் என் கம்பெனியில் நடக்கவில்லை என்றாலும், திடீரென்று வந்து 21 நாட்கள் தங்கிய ஒரு பிரெஞ்சுக்காரருக்கு எங்கள் தலைமை நிர்வாகியே வியக்கும் வண்ணம் துபாஷியாக என்னால் செயல் பட முடிந்தது.

இதனால் கூறப்படும் நீதி யாது?

பொது நலனுக்கு பங்கம் வராது செயல்பட முடிந்தால் இம்மாதிரி தனி வேலையில் ஈடுபடுவது வேலை செய்யாமல் வம்பு பேசிக் கொண்டிருப்பதை விடச் சிறந்தது. அதே நேரத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம். முழு நேர வேலையும் சைட் பிசினெஸும் ஒன்றுக்கொன்று எவ்விதத் தொடர்பும் இல்லாது இருக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் தெரியக் கூடாது. தேவையற்ற அச்சுறுத்தல்கள்தான் அதன் பலன். அதே மாதிரி வெளி வேலைகளைப் பற்றி உங்கள் கம்பெனியில் மூச்சு விடக் கூடாது. யாருடனும் சண்டைப் போடக் கூடாது. அதெல்லாம் வம்பு பேசுபவர்களின் உரிமை. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். இதனால் கிடைக்கும் நல்லப் பெயர் ஒரு தனி போனஸ்.

பதிவை முடிக்குமுன் ஒரு சிறு தமாஷ். எனக்கு இஞ்சினியராக 23 வருடங்கள், ஜெர்மன் மொழிப் பெயர்ப்பாளனாக 30 வருடங்கள் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளனாக 27 வருடங்கள் அனுபவம் ஆக மொத்த அனுபவம் 80 வருடங்கள் ஆனால் என் வயது 59-க்கும் கீழேதான் என்று நேற்றுத்தான் ஒரு வாடிக்கையாளரிடம் கூற அவர் வியப்புடன் இது எவ்வாறு சாத்தியம் என்றுக் கேட்க, "ஓவர்டைம்" என்றேன் சிரிக்காமல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

Vijayakumar said...

ஹி ஹி.... நல்ல யோசனை. இது side business-க்கு மட்டுமில்ல,Site business-க்கும் தான். 1 மணி நேரம் வேலையிருந்திச்சுன்ன, மத்த நேரமெல்லாம் ப்ளாக் படிச்சி,பின்னூட்டமிட்டு,பதிப்பு போட்டு இப்படி பல வேலை பாக்கலாம். 4 நாள் வேலைன்ன 3 நாள் ஆபிஸ் வேலை 1 நாள் ப்ளாக் வேலை. இது எப்படியிருக்கு? ஹி ஹி...

dondu(#11168674346665545885) said...

விஜய்,
இது ஒரு தனிமை நிறைந்த உலகம். மாட்டிக் கொள்ளாமல் இருப்பதுதான் உத்தமம். நீங்கள் மேயும் இணையப் பக்கங்களை உங்கள் முதலாளியால் ட்ரேஸ் செய்ய முடியும்.
என் கேஸ் வேறு. அப்போது இணையம் என்று இவ்வளவு விஷ்யங்கள் கிடையாது. ஒன்றை நினைவில் கொள்ளவும். நான் எழுதிய நியாயங்களுக்கு ஒரு சட்ட ஆதரவும் கிடையாது. ஞானதேவன் இதைச் செய்ததால்தான் இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வர வேண்டியிருந்தது. என்னைப் போல செய்து ஆனால் மாட்டிக் கொண்ட ஆடிட்டர் ஒருவர் வேலை இழக்க நேர்ந்தது. ஜாக்கிரதை, ஜாக்கிரதை.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Vijayakumar said...

நன்றி அய்யா. நெஞ்சுக்கு நீதியென்று ஒன்றிருக்கிறதல்லவா...

நெஞ்சின் நீதிக்கு காட்டுப்பட வேண்டும் எப்போதும். நீங்கள் சொல்வது 100-க்கு 100 உண்மை. ஒருவரின் ப்ரொடிக்டிவிட்டி குறைந்தால் கட்டாயம் கவனிப்புக்குள்ளாகி விடுவார். தத்தம் வேலைகளில் கரெக்டாக இருக்க வேண்டும். தேவையென்றால் சில நாள் ப்ளாக்கை மறந்து விட வேண்டும். நேற்று ஒருவர் பதிந்திருந்தார் இந்த மாதிரி ப்ளாக்கி மாட்டிக் கொண்டவரைப் பற்றி. ப்ளாக்கும் போது ஆபிஸ் சென்சிடிவ் விசயமும் போய் கொண்டிருந்தால் அவர்களும் ஆபிஸை விட்டு போய் விடவேண்டியது தான்.மேலே நான் பின்னூட்டமிட்டது நீங்கள் சொல்ல வந்ததில் கணனி காலத்திலும் அப்படியொரு வழியிருக்கிறதென சொல்ல வந்தேன்.

dondu(#11168674346665545885) said...

நிச்சயமாக. என் மெக்கனிக்கை நான் சகித்துக் கொண்டதற்குக் காரணம் அவர் உற்பத்தியில் ஒரு குறைவும் இல்லை என்பதால்தான். இன்னும் ஒரு உதாரணம் தருவேன். என் மொழி பெயர்ப்புகளை எங்கள் அலுவலகத்தில் இன்னொரு செக்ஷனில் வேலை செய்த ஒரு டைப்பிஸ்டிடம் கொடுத்தே தட்டச்சு செய்துக் கொண்டேன். அவரிடம் நான் போட்ட ஒரே கண்டிஷன் அவர் அலுவலகக் கடிதங்களுக்கெ முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான். அவர் மேலதிகாரிக்கு விஷயம் தெரிந்தாலும் கண்டுக் கொள்ளாமல் இருந்து விடுவார். அவர் தட்டச்சு வேலைகளில் ஒரு பின்னடைவும் இல்லை என்பதே இதற்குக் காரணம். சில சமயம் என்னிடம் வேலை ஒன்றும் கொடுப்பதற்கில்லை என்றால் அம்மேலதிகாரியே என்னிடம் வந்து ரகசியமாகக் கூறுவார். "அவளுக்கு ஏதாவது வேலை கொடுங்கள் ராகவன். உங்கள் வேலை செய்யும்போது தன் அலுவலக வேலையில் அவள் நெருப்பாக இருக்கிறாள். அதுதான் எனக்கும் வேண்டியது".
அன்புடன்,
டோண்டு ராகவன்

Jsri said...

ராகவன், ஆமாம், மருத்துவருக்கு அதற்கான ஈட்டுத் தொகை உண்டு; ஆசிரியருக்கு இல்லை. அரசாங்க மருத்துவர்களுக்குக் கூட அந்தச் சலுகை உண்டு. அந்தத் தொகையும் மிக மிக சொற்பமானதாகத்தான் இருக்கும். நான்கு நோயாளிகளிடம் பெறும் ஃபீஸைவிட ஒரு மாதத்திற்கான ஈட்டுத்தொகை குறைவாகவே இருக்கும்.

ஆனால் பொதுவாக மருத்துவர் ஆசிரியரோடு, உங்கள் கணினி, மொழிபெயர்ப்பு வேலைகளையும் ஒப்புமைப்படுத்திப் பேசுவது சரியில்லை. நீங்களெல்லாம் அப்படிச் செய்வது வேறு நிலையிலிருந்து பார்க்கப்பட வேண்டியது. ஆனால் அவர்களுடையது வேறுவிதமான அர்ப்பணிப்புகள். அவர்களை தனியாகத் தொழில் நடத்தக்கூடாது என்று சொல்வதற்கான காரணங்கள், இங்கு அர்ப்பணிப்பு குறைந்துவிடும் என்ற பயம் காரணமாகவே. அதன்படியே நடந்தும் வருகிறது. புரிந்துகொள்வீர்கள் என்று தெரியும்.

இவர்களைத்தாண்டியும் முழுநேரத்தையும் மிகக் குறைந்த ஊதியத்தில் அரசாங்க- கான்சர் போன்ற பகுதிகளிலும், casuality பகுதிகளிலும் மிகக் குறைந்த வசதிகளோடு, எந்த எதிர்பார்ப்புமில்லாமல் மிகத் திறமையாக செயல்படும் நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள். இவர்களின் ஊதியம் கணிசமாக உயர்த்தப்படவேண்டும்.

சிலர் தனியாக அங்கங்கே க்ளினிக் நடத்தியும், நடத்தவில்லை என்று சொல்லிக்கொண்டு ஈட்டுத் தொகையும் வாங்கிவந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். :( இவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதையேதான் செய்வார்கள். எதுவும் மாறாது.

இது உங்கள் பதிவிற்கான பின்னூட்டம் இல்லை. தவறாக நினைக்கவேண்டாம்; Just sharing my views about doctors.

dondu(#11168674346665545885) said...

"தவறாக நினைக்கவேண்டாம்"
நிச்சயமாகத் தவறாக நினைக்க மாட்டேன் ஜயஸ்ரீ அவர்களே. நீங்கள் கூறியதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
என்னிடம் இவ்வாறான சைட் பிசினஸைப் பற்றிப் பேசிய நண்பர் என்னைக் கேட்டார். "நீங்கள் அலுவலகத்தில் அனுமதி பெற்றே இக்காரியத்தைச் செய்திருக்கலாமே" என்று. நான் கூறியது: "அனுமதி எனக்குக் கொடுக்க இவர்கள் யார்? அப்படியே கொடுத்தாலும் நான் இவ்வழியில் ஈட்டியப் பணத்தில் ஒன்றின் கீழ் மூன்றுப் பகுதியை அலுவலகத்துக்குச் செலுத்த வேண்டும் என்ற விதி இருக்கிறதே. நான் என்னக் கேனையனா?"
என்னைப் பொருத்தவரை சில விதிகள் அபத்தமானவை. அவை மீறப்பட வேண்டியவையே. அதே சமயம் சண்டைப் போடாமல் இதைச் செய்வது மிக்க அவசியம். மாட்டிக் கொண்டால் முழு பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது