2/10/2005

மிளகாய் அரைத்தல் - 153

என் அனுபவங்கள் மற்றத் தொழில் வல்லுனர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

என் தூரத்து உறவினர் ஒருவர் என்னிடம் "ஏண்டா டோண்டு, என்னவோ மொழி பெயர்க்கறயாமே, என்னிடம் ஒரு ஜெர்மன் கட்டுரை இருக்கு. அதில் என்ன இருக்கு என்றுப் பார்த்துச் சொல்லேன்" என்று கேட்டார்.

நான் உடனே "அதற்கென்ன மாமா செஞ்சாப் போச்சு. கட்டுரையைக் காண்பியுங்கள்" என்றேன். அதைப் பார்த்தேன். கிட்டத்தட்ட 50 பக்கம் இருக்கும். "ரொம்பக் காசாகுமே பரவாயில்லையா" என்றுக் கேட்டதற்கு அவர் உடனே "அடே என்னிடமே துட்டு கேட்கிறாயா? நான் பார்த்து வளர்ந்தப் பையன் நீ, என்னிடம் துட்டு கேட்கலாமா?" என்றுக் கேட்டார். அவரிடம் "மாமா இது ஒரு பெரிய கட்டுரை. வெறுமனே படித்து முடிக்கவே மணிக் கணக்காக ஆகும். மேலும் எனக்கு ஏற்கனவே நிறைய வேலைகள் இருக்கின்றன. என்னை விட்டு விடுங்கள். வேண்டுமானால் இன்னொரு நண்பனை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். அவன் இலவசமாகச் செய்தால் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை" என்றுக் கூறி விட்டு வந்தேன். அதை விடுத்து நான் செய்திருந்தால் தொலைந்தேன். இதே வேலையாக எல்லோரும் என்னை முற்றுகை இட்டிருப்பர்.

ஒரு தடவை கெட்டப் பெயர் வாங்கினாலும் பரவாயில்லை என்றுத் துணிய வேண்டும். இல்லாவிடில் நிம்மதியே இருக்காது வாழ்வில்.

வக்கீல்களிடம் சில பேர் வருவார்கள். அதாவது ஏதாவது பார்ட்டிகளில். தங்கள் பிரச்சினையைத் தங்கள் நண்பர் பிரச்சினையாகக் கூறித் தீர்வு கேட்பார்கள். மருத்துவர்களுக்கோ இன்னும் அதிக சங்கடம். விருந்துக்கு வந்த மருத்துவரிடம் தன் குழந்தை எந்தக் கலரில் வெளிக்குப் போகிறது என்றெல்லாம் கூறி வயத்தைக் கலக்குவர். ஓசியில் பிழைப்பதே வேலையாகி விட்டது பலருக்கு.

இப்படித்தான் ஒருவர் ஒரு வக்கீலிடம் சரியான விவரம் கூறாது ஆலோசனை கேட்க, அவரும் யதார்த்தமாக ஏதோ சொல்லிவைக்க அதன்படி நடந்ததில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அவர் வக்கீலிடம் வந்து சண்டை போட, அதற்குள் சுதாரித்துக் கொண்ட வக்கீல் இவ்வறு அவரிடம் கூறினார். "நான் உனக்குக் கொடுத்த ஆலோசனையின் மதிப்பு நீ எனக்குக் கொடுத்த ஃபீஸின் அளவுதான். அதற்கு மேல் இல்லை".

153 என்றால் என்ன? 15 = O, 3 = C, அவ்வளவுதான்

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

ரவியா said...

Savoir dire NON..இது தெரியாமல் தான் வேலையில் கஷ்டப்ட்டிருக்கேன். இது இந்தியர்களின் சுவாபம் என்று நினைக்கிறேன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது