2/24/2005

ஃபிரெஞ்சு கற்றுக் கொண்டக் கதை

எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வேன். இந்த மொழியை பகுதி நேரத்தில் கற்றுக் கொள்ள அல்லியான்ஸ் ஃபிரான்சேஸை விடச் சிறந்த இடம் வேறில்லை. ஜே.என்.யூ. படிப்பை இதற்குச் சமமாகச் சொல்லலாம். ஆனால் அதில் படிக்க ரொம்ப மெனக்கெட வேண்டும். ப்ளஸ் 2 முடித்த பிறகு பி.ஏ. மற்றும் எம்.ஏ. (ஃபிரெஞ்சு படிக்க வேண்டும்). எல்லோராலும் முடிகிற காரியம் இல்லை.

ஜூலை 1975-ல் செர்டிஃபிகா வகுப்பில் சேர்ந்தேன். ஆசிரியை சாரதா லாற்டே. அவரைப் பற்றி ஏற்கனவே நான் முன்னொரு பதிவில் எழுதியதை இங்கே மறுபடியும் பதிக்கிறேன்.

"சாரதா அவர்கள் வகுப்பு எடுப்பதே ஒரு அழகு. மாணவர்களின் சந்தேகங்களை மிக அன்புடன் தீர்த்து வைப்பார். மொத்தம் நான்கு நிலைகளில் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவை "செர்டிபிகா", "ப்ரே டிப்ளோம்", "டிப்ளோம்" மற்றும் "டிப்ளோம் ஸுபேரியேர்" ஆகும்.

வாரத்துக்கு நான்கு முறை மாலை வகுப்புகள். ஒவ்வொரு நிலைக்கும் வருடத்தை மூன்றாகப் பிரித்து பிரெஞ்ச் கற்பிக்கப் பட்டது. அவசரக் குடுக்கையான நான் ஆர்வக் கோளாறில் முதல் மூன்று மாதத்திலேயே முதல் நிலைப் புத்தகத்தில் உள்ள எல்ல பயிற்சிகளையும் எழுத்தில் செய்து முடித்து அதன் பின் இரண்டாம் நிலைக்கானப் புத்தகத்தையும் முடித்தேன்.

மூன்றாம் நிலைக்கானப் புத்தகத்தை வாங்கப் போனால் ஒரே ரவுஸுதான். சாரதா அவர்கள் துணையை நாட அவர் அலட்டிக் கொள்ளாமல் தானே அப்புத்தகத்தைத் தன் பெயரில் வாங்கிக் கொடுத்தார். என் முயற்சிகளுக்கு உறு துணையாக இருந்தார்.

இரண்டாம் நிலைக்கான வகுப்பில் இருந்த போது எங்கள் வகுப்பு மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கலைக்கப் பட்டது. நாங்கள் வேறு வகுப்பு நேரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என்று ஆலோசனை கூறப்பட்டது.

ஆனால் என்னால் அது முடியாத காரியமாயிற்று. மறுபடியும் சாரதா அவர்கள் உதவி செய்தார். என்னை தன் கணவர் நடத்திய மூன்றாம் நிலைக்கான வகுப்பில் சேர்த்து விட்டார். நானும் அவர் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காமல் அத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். இரண்டாம் நிலைத் தேர்வு எழுதவே இல்லை.

நான்காம் நிலைக்கான இறுதித் தேர்வு சமயத்தில் ஸாரதாவும் அவர் கணவரும் ஸ்பெயினுக்கு மாற்றம் பெற்றனர்.

ஏதோ ஒரு தேவதையைப் போல வந்து எனக்கு உதவிகள் செய்திராவிட்டால் நான் சாதாரணப் பொறியாளனாகவே ஓய்வு பெற்றிருப்பேன். வாழ்க்கை அற்புதமயமானது."

அங்கு தேசிகன், இங்கு சாரதா. அவர் வகுப்பில் வரிசைக் கிரமத்தில் கேள்விகள் கேட்பார். என் முறை வரும்போது மட்டும் என்னை அடக்கி விட்டு என் பக்கத்து மாணவருக்குத் தாவி விடுவார். முதல் முறை நான் திகைப்புடன் பார்த்தப் போது என்னிடம் "மற்றவர்கள் முதலில் முயற்சிக்கட்டும், உங்கள் முறை எல்லோருக்கும் கடைசிதான். நீங்கள் விடை கூறி விடுவீர்கள். அதனால் மற்றவருக்குப் பயனில்லை" என்று வேகமாக ஃபிரெஞ்சில் கூறி விட்டார். அடுத்த நாள் ஒரு டெஸ்ட் வைப்பதாக ஒரு சமயம் கூறியபோது நான் அவரிடம் அன்று என்னால் வர இயலாது என்று வருத்தத்துடன் கூற, உடனே டெஸ்டை அதற்கு அடுத்த நாளுக்குத் தள்ளிப் போட்டார். இவரை ஆசிரியையாக அடைய முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது நான் ஜெர்மனிலும் ஃபிரெஞ்சிலும் ஒரே யுக்தியைக் கையாண்டுள்ளேன் என்று புரிகிறது. எல்லாப் பாடப் பயிற்சிகளையும் எழுத்து ரூபத்தில் செய்து முடிக்க வேண்டும். சம்பந்தப் பட்ட மொழியில் பேசத் தயங்கவே கூடாது. பாடங்களை வகுப்புக்கு வரும் முன்னரே படித்து வைத்து விட்டால் ரொம்ப உத்தமம். உண்மையைக் கூறப் போனால் வகுப்பு என்னைப் பொருத்தவரை ஒரு விளையாட்டாயிற்று. இங்கும் டிக்டேஷன் ஒரு நண்பனாகவே இருந்தது. இரண்டாம் மாதத்திலேயே நூலகத்திலிருந்துப் புத்தகம் எடுக்க ஆரம்பித்தேன். அவற்றால் என் ஃபிரெஞ்சு இன்னும் கூர்மையடைந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் போதனா மொழி ஃபிரெஞ்சுதான். அம்மாதிரி இத்தாலிய வகுப்பு இல்லாததால் நான் இப்போது திரிசங்குச் சொர்க்கத்தில் அதைப் பற்றிப் பின்னொரு பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது