தாழ்வுமனப்பான்மையில் இருப்பவர்களைத் தவிர்க்கவும். இவர்கள் தாங்களும் காரியம் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் அதைரியப்படுத்துவார்கள். ரீடர்ஸ் டைஜஸ்டில் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஒரு துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
ஒரு மழை நிறைந்த இரவில் ஆற்றுப்பாலம் மீது ஒருவன் நிற்கிறான். வாழ்க்கையில் வெறுப்பு அவனுக்கு. அவனைக் காப்பாற்ற ஒருவன் விரைந்து சென்று அவனுடன் பேசிப் பார்க்கிறான். 10 நிமிடம் தீவிரப் பேச்சு. பிறகு இருவருமே அந்த மழை நிறைந்த இரவில் ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
நண்பர் முகம்மது யூனுஸ் அவர்கள் ஒரு அருமையான பதிவு இட்டிருக்கிறார். சிறு சந்தோஷங்களையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளுமாறு கூறுகிறார். இங்கு நான் ஒன்று கூறுவேன். அவ்வாறு சந்தோஷங்களைச் சேமிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுடன் நட்பு கொள்வது மிகவும் நல்லது.
அதே சமயம் துக்கங்களாகப் பார்த்து சேமித்து அவற்றை அனுபவிப்பதிலேயே சுகம் காண்பவர்களும் உள்ளனர். அவர்களை masochist என்று அழைப்போம். அவர்களைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால் ஒரு மழை நிறைந்த இரவில் ஆற்றுப் பாலத்திலிருந்து தண்ணீரில் விழுந்து இறக்கக்கூட நேரிடலாம்.
"நான்" என்னும் படத்தில் ஒரு கேரக்டர், "என்னத்தே செஞ்சு, என்னத்தே சாதிச்சு" என்று வார்த்தைக்கு வார்த்தை புலம்பும் அந்த பாத்திரத்தில் நடித்தவர் என்னத்தே கன்னையா என்னும் பெயரில் பிரபலமானனர். அதனால் அவர் பணம் சம்பாதித்தார். அவரைப் பொருத்தவரை அவர் செய்தது அபார நடிப்பு, தவறில்லை. ஆனால் அதையே தமாஷாக நினைத்து நாமும் நிஜ வாழ்வில் பேச முடியுமா? பேசினால் அனர்த்தம் ஆகாதா? ஆனால் பலர் அவ்வாறுதான் உள்ளனர். எடுத்த உடனேயே ஒண்ணும் சரியா நடக்கப் போறதில்லை என்னும் நிலைப்பாடு எடுத்து விடுகின்றனர். அவர்களுடன் நாம் சேருவது தகுமா?
விமரிசகர் சுப்புடு அவர்கள் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் பர்மாவிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு இந்தியா வந்தடைந்தவர். அவருடன் ஒரு கும்பலே வந்தது. பலர் வழியிலேயே மாண்டனர். பயங்கரப் பசி. வழியில் வெறும் புதீனா மட்டும் கிடைத்தது. அப்போது அவர்களில் ஒருவர் "ஏய், எல்லோரும் சாகப் போறோம் இப்ப" என்று சவுண்டுவிட, சுப்புடு அவரைப் பொளேரென்று செவுளில் அறைந்தார். பிறகுதான் அந்த மனிதர் அடங்கினார். என்ன ஆயிற்று, எப்படியோ இந்தியா வந்து சேர்ந்தனர் கணிசமான நபர்கள். அவர் அவ்வாறு வந்ததற்காக சுமார் 30 ஆண்டுகள் கழித்து பல சங்கீத வித்வான்களும், நடனமணிகளும் வருத்தப்படப் போவது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாததால் அது பற்றிப் பேச வேண்டாம்.
இப்போது இஸ்ரேல் விஷயத்துக்கு வருவோம் (அதானே, டோண்டு ராகவனாவது இஸ்ரேலைப் பத்திப் புகழ்ந்து பேசாமல் இருப்பதாவது என்று யாரும் டென்ஷன் அடையவேண்டாம், ஏனெனில் டோண்டு ராகவன் அதற்காகவெல்லாம் இஸ்ரேல் பற்றி பேசாது விட்டு விடுவான் என எண்ணாதீர்கள்.)
வருடம் 1967. இஸ்ரேலை சுற்றிலும் அதன் எதிரிகள் வியூகம் அணிவகுத்து நிற்கின்றனர். உலக யூதர்களுக்குக் கலக்கம். தத்தம் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்குச் சென்று தாங்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக சண்டையிடத் தயார் என்று கூறினர். "நம்மில் 60 லட்சம் பேரை ஏற்கனவே இழந்தோம், இப்போது இஸ்ரேல் அழிவதைப் பார்ப்பதைவிட சண்டையிட்டு மடிவதே மேல் என வந்துள்ளோம்" என அவர்கள் கூற, தூதரக அதிகாரிகள் "சாவதற்கு வேறு ஆளைப் பாருங்கள், நாங்கள் வாழப் பிறந்தவர்கள்" என்று மன உறுதியுடன் கூறினர். அவ்வாறே செய்தும் காட்டினர். நான் பலமுறை பல இடங்களில் கூறியபடி பைபிள் பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல இப்போர். அதுவரை யூத இனத்தையே கோழைகளாக 2000 ஆண்டுகளுக்கு சித்தரித்து வந்த எதிரி இனத்தவர்கள் வாயை இறுக்க மூடிக் கொண்டனர்.
அப்படிப்பட்ட மனிதர்களுடன் நட்பு கொள்வதுதான் நலம் தரும்.
மறுபடியும் யூனுஸின் பதிவுக்கே வருகிறேன். எனது சந்தோஷங்களைப் பட்டியலிட ஆசைப்படுகிறேன்.
பல சந்தோஷங்கள். அருமையான தாய் தந்தையர். காதல் மனைவி. அன்பான மகள். நல்ல இஞ்சினியரிங் மற்றும் மொழி பெயர்ப்பு அனுபவங்கள். நான் சந்தித்த அருமையான மனிதர்கள் - பள்ளி, கல்லூரி நண்பர்கள், மேக்ஸ் ம்யுல்லர் பவன் தேசிகன், அல்லியான்ஸ் பிரான்ஸேய்ஸின் சாரதா லாற்டே, ஐ.டி.பி.எல். பொது மேலாளர் ஜலானி, தமிழ்மண இணைய நண்பர்கள் - கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் எனக்கு இன்னல் வந்தபோது ஆதரவு தெரிவித்தவர்கள், வலைப்பூவில் நான் இது வரை இட்ட முன்னூறுக்கும் அதிக தமிழ் இடுகைகள், அவற்றால் எனது தமிழில் மேம்பாடு, 56 வயதில் முதன்முறையாக கணினியுடன் சம்பந்தம் ஏற்பட்டு அதை கையாளுவதில் நான் பெற்ற வெற்றிகள், அவற்றால் வந்த பல மொழிபெயர்ப்பு வேலைகள் ... எதைச் சொல்ல, எதை விட? வாழ்க்கை இன்பமயமானது.
நினைவிருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாகவே மாறுகிறீர்கள். வெற்றியடைவதைப் பற்றியே நினையுங்கள். அவ்வாறு நினைப்பவர்களுடன் சேருங்கள். தோல்வி பயத்தில் இருப்பவரது அண்மையை விட்டு நீங்குங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
9 hours ago
36 comments:
ஐயா,
நான் தங்களது பதிவுகளை தொடர்ந்து படிப்பவன். ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை. நல்ல் கருத்துக்கள் கொண்ட வலைப்பூ.
==
இந்த பதிவுக்கு வருவோம். தான்கள் கூறியபடி தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் நம்மையும் அப்படி ஆக்க முனைவார்கள் என்பது நானும் கண்டிருக்கிறேன்.
ஆனால் அப்படிபட்டவர்களை நாம் ஒதுக்கிவிடத்தான் வேண்டுமா?? நம் சுயநலம்தான் முக்கியமா? நம் மகிழ்ச்சி பாதிக்ககூடாது என்பதற்காக - அவர்களுடன் சேரக்கூடாது என்பது சரியா? அவர்களை மாற்ற முயற்சிப்பது தவறா??
அன்புடன்
கிச்சா
"நம் சுயநலம்தான் முக்கியமா?"
எனது பதில், ஆம்.
"அவர்களை மாற்ற முயற்சிப்பது தவறா?"
அது எனது வேலை இல்லை என நினைக்கிறேன். தூரத்திலிருந்து வேண்டுமானால் ஏதாவது உதவி செய்யலாம். அருகே போகாதீர்கள். நீச்சல் தெரியாதவன் தண்ணீரில் தத்தளிக்கும்போது விஷயம் தெரிந்தவன் தூரத்திலிருந்து கொண்டு ஏதாவது கயிற்றை எறிந்து அவனைக் காப்பாற முயலுவான். அல்லது கிட்டே போய்த்தான் காப்பாற்ற வேண்டும் என்றால் பொளேரென்று அவனை அறைந்து மயக்கமடையச் செய்து பிறகு காப்பாற்றுவான். அதெல்லாம் எக்ஸ்பர்டுகள் செய்யும் வேலை. என்னால் முடியாது. உங்களால் முடியும் என்றால் வாழ்த்துகிறேன். நம்மை விடுங்கள் சாமி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனது பதிவு டோண்டு சார் பதிவு போடுவதற்கு துணையாக இருந்திருக்கிறது என்பதை எண்ண ஆனந்தமாக உள்ளது.
உண்மை கூறப்போனால் வாழ்க்கை அற்புதமயமானது என்று பொருள்பட நீங்கள் பல இடங்களில் எழுதியதுதான் எனது பதிவுக்கே இன்ஸ்பிரேஷன் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பன்,
முகம்மது யூனுஸ்
நன்றி முகம்மது யூனுஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்குப் பிடித்தது முரட்டுவைத்தியமாய் அலுவலகப் பேருந்தில் செல்லச் சிக்கல்கள் ஏற்பட்ட சமயத்தில் நாற்பதுவயதுகளிலான இளைஞர் இடுப்புக்கச்சையை இறுக்கிக்கட்டிக்கொண்டு பல கிலோமீட்டர்கள் மிதிவண்டி மிதித்து சிக்கலான விஷயத்தையும் சவாலாக ஏற்று மகிழ்வான மலரும் நினைவாக்கிய உறுதியான இளைஞர் டோண்டு ராகவனின் அனுபவப் பகிர்வு!
வாழ்க்கை எப்பவுமே மகிழ்ச்சியானது.
சிக்கல்களை எதிர்கொண்டு அதில் வெற்றிகாணும் போது அது எப்போது நினைவு கூர்ந்தாலும் கூடுதல் மகிழ்ச்சியையும் மன உறுதியையும் மீண்டும் மீண்டும் தரக்கூடியது!
தாழ்வு மனப்பான்மை உடையவர்களிடமான உறவு "Better to be alone than in a bad company"
சத்தம்போட்டு ஓடிவந்துடுன்னு பாதுகாப்பான தூரத்தில் இருந்து கூவலாம்.
மற்றபடி ரொம்பப் பக்கத்தில போனா உங்களையும் ஆட்கொண்டுவிடும் ஆக்டோபஸ் தாழ்வுமனப்பான்மை!
அன்புடன்,
ஹரிஹரன்
டோண்டு அய்யா,
" என்னத்தை சொல்லி என்னதை பண்ணி பிரயோசனம்" என்ற சினிகல் மன உளைச்சலுடன் பலர் இருக்கிறார்கள்.
Cynicism is the worst killer" என்று ஆங்கிலத்தில் வசனம் ஒன்று உண்டு.
தமிழ் நாட்டில், எப்படியோ தெரியவில்லை. நானிருக்கும் ஆந்திராவில், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்களின் "Art of Living" என்ற
ஒரு அமைப்பினால் நடத்தப்படும் வகுப்புக்களால் ஆயிரக்கணக்கில் மக்கள் பயன் பெற்று வருவதை நான் பார்க்கிறேன்.அதுவும் ஏராளமான இளைஞர்களும்/இளைஞிகளும் இதில் ஆசானாகவும் சேர்ந்து சமூக சேவை போன்ற பல முயற்சிகளை உற்சாகத்துடன் செய்து வருவதை பார்த்து வியந்திருக்கிறேன்.
பாலா
மிக்க நன்றி ஹரிஹரன் அவர்களே, எனது முரட்டுவைத்தியத்தை நினைவில் வைத்துக் கொண்டு குறிப்பிட்டதற்கு. அது எனக்கு ஜலானி அவர்களின் ஞாபகத்தை மறுபடி அளித்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ் நாட்டிலும் Art of living கூட்டங்கள் நடைபெறுகின்றன பாலா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எப்போதோ என்ன இப்போதே என்று செயலாற்றி வரும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன டோண்டு சார்.
கிருஷ்ணன்
நன்றி கிருஷ்ணன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"வீண் சர்ச்சை உங்களுக்கு வேண்டாம் என்பது வயதில் சிறிய அடியேனின் தாழ்மையான கருத்து."
பாத்தீங்களா நைசாப் பேசி இளைஞனான என்னை பெரிசு ஆக்கப் பார்க்கிறீர்களே. நியாயமா? :))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பல சந்தோஷங்கள். அருமையான தாய் தந்தையர். காதல் மனைவி. அன்பான மகள். நல்ல இஞ்சினியரிங் மற்றும் மொழி பெயர்ப்பு அனுபவங்கள். நான் சந்தித்த அருமையான மனிதர்கள் - பள்ளி, கல்லூரி நண்பர்கள், மேக்ஸ் ம்யுல்லர் பவன் தேசிகன், அல்லியான்ஸ் பிரான்ஸேய்ஸின் சாரதா லாற்டே, ஐ.டி.பி.எல். பொது மேலாளர் ஜலானி, தமிழ்மண இணைய நண்பர்கள் - கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் எனக்கு இன்னல் வந்தபோது ஆதரவு தெரிவித்தவர்கள், வலைப்பூவில் நான் இது வரை இட்ட முன்னூறுக்கும் அதிக தமிழ் இடுகைகள், அவற்றால் எனது தமிழில் மேம்பாடு, 56 வயதில் முதன்முறையாக கணினியுடன் சம்பந்தம் ஏற்பட்டு அதை கையாளுவதில் நான் பெற்ற வெற்றிகள், அவற்றால் வந்த பல மொழிபெயர்ப்பு வேலைகள் ... எதைச் சொல்ல, எதை விட? வாழ்க்கை இன்பமயமானது. //
எனது வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள் டோண்டு
//
நம் சுயநலம்தான் முக்கியமா?
//
Unless there is a pressing concern. There is no need to get involved with these people. However, you can help them find a professional psychiatrist.
ஒரு சாதாரண மனிதன் தன் நலத்தைப் பார்த்துக் கொண்டு போவது தான் இந்த விஷயத்தில் நல்லது. அவன் சொந்த பந்தமோ, மனைவி மக்களோ இல்லாமல் இருந்தால் ஏன் அவரைப் பற்றி நாம் கவலை கொள்ளவேண்டும்...அதை சுய நலம் என்றால், ஆம், அந்த சுய நலம் இல்லாமல் வாழ்வதற்கு நாம் ஒன்றும் புத்தர்கள் அல்லர்.
சார்
300 பதிப்புகளுக்கு பின்பு தமிழ் எழுத்து மேம்பாடு கண்டதா?
அப்ப நாங்கலெல்லாம் போகும் தூரம் வெகு தொலைவில் உள்ளது.
உங்கள் பதிவை படிக்கும் போது எப்படி "தமிழ் நடை" இருக்கவேண்டும் என்று புரிகிறது.
இப்படி திருடுகிறோமா? என்று கூட அவ்வப்போது தோன்றுகிறது.
சரியாகச் சொன்னீர்கள் வஜ்ரா அவர்களே. நான் மிகவும் மதிக்கும் இஸ்ரவேலர்களுடன் தினமும் பழகுகிறீர்கள். பாஸிடிவ் எண்ணங்களுக்கு உதாரணம் அல்லவா யூதர்கள்!
இல்லாவிட்டால் 2000 ஆண்டுகளாக அடுத்த ஆண்டு ஜெரூசலத்தில் என்று ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ள முடியுமா என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாருங்கள் வடுவூர் குமார் அவர்களே.
இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறீர்களா? உங்களை காண்டாக்ட் செய்ய நினைத்து பத்ரியிடம் கேட்டால் உங்கள் தொலைபேசி எண் தெரியாது எனக் கூறி விட்டார். முடிந்தால் எனக்கு போன் செய்யுங்கள். என் செல்பேசி எண் 9884012948. இது சென்னை எண்.
உங்கள் சிவில் வேலைகளைப் பற்றிய பதிவுகளைப் பார்க்கும்போதெல்லாம் சென்னை மத்திய ரிசர்வ் போலீஸ் வளாகத்தில் கட்டிடப் பொறியாளர்களுடன் நடந்த உரசல்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. முக்கியமாக ஸ்லாப் காஸ்டிங் சமயத்தில்.
வேலை நேரம் முடிந்ததும் எல்லோரும் நண்பர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி சபாபதி சரவணன். நான் கூறியது பிசிராந்தையார் கூறிய பாடலிலிலிருந்து இன்ஸ்பைர் ஆகி வந்தது.
பிசிராந்தையார் கோபெருஞ்சோழன் நட்பு இன்றும் பேசப்படுகிறது.
பிசிராந்தையார் தமது ஊராகிய பிசிரில் இருக்கையில் உறையூரில் இருந்து அரசு புரிந்த கோப்பெருஞ்சோழனுடைய குணநலன்களைக் கேள்வியுற்று அவனைக் காணும் வேட்கை மிக்கிருந்தார். கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையார் நலன்களைக் கேள்வியுற்றுப் பெருநட்பினைத் தன்னுள்ளே வளர்க்கலுற்றான். இருவருடைய நட்புணர்ச்சிகள் தாமே மிக்கு ஒருவரொருவர் தம் பெயர் கூறுமிடத்து, தத்தம் நண்பர் பெயரை இணைத்துக் கூறிக் கொள்ளும் அளவில் சிறந்து நின்றன. கோப்பெருஞ் சோழர் வடக்கிருந்த போது, சான்றோர் பலரும் அவனுடன் வடக்கிருப்பார் ஆயினர். அக்காலை, அவன் பிசிராந்தையாரைக் காண விழைந்தான். ஒத்த உணர்ச்சியிணர் ஆதலால், பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கப் புகுந்தது அறியாது, அவனைக் காண வேண்டி, பாண்டிய நாட்டை விட்டுப் புறப்பட்டு உறையூர் வந்தார்.
அவர் வந்து சேர்வதற்குள் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் விட்டானாக, அவனுக்கு நடுகல்லும் நாட்டப்பட்டுவிட்டது. பிசிராந்தையார் மனஞ் சோர்ந்து வருந்தினார். சிறிது தெளிந்ததும், அங்கிருந்த சான்றோருடன் கோப்பெருஞ் சோழன் குண நலன்களைப் பேசி அளவளாவிக் கொண்டிருக்கையில் சிலர்,
"சான்றீர்! யாங்கள் உங்களை நெடுங்காலமாகக் கேள்வியுறுகிறோம்: உங்கள் வாழ்நாளும் பலவாயினவே; இதனை நோக்க, உங்கட்கு நரை உளவாக வேண்டும்; அவை சிறிதும் நும்பால் காணப்படவில்லையே! என்னோ காரணம்?" என வினவினார்.
அதற்குப் பிசிராந்தையார் கீழ்வரும் பாடலைப் பாடினார்.
"யாண்டு பலவாக நரை இஇல ஆகுதல்
யாங்கு ஆகியர்?" என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான் கண்ட அனையர் என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்; அதன் தலை,
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே!
அதற்குப் பாரதிதாசன் பாட்டாலே வழங்கிய உரை:
ஏன் நரைக்க வில்லை
பிசிராந்தையார் விடை
அகவல்
மிகப்பல ஆண்டுகள் ஆகியும் மேனியில்
நரையே இல்லையே! இந்த நன்னிலை
எப்படி எய்தினீர்? என்று கேட்பார்க்கு
பிசிராந்தையார் செப்பாராயினார்:
மாட்சிமைப்பட்ட குணங்கள் வாய்ந்த என் மனைவி அறிவு நிரம்ப வாய்ந்தவள்;
அன்புறு புதல்வரும் அத்தகையோரே;
என்னுடைய ஏவலாளர் தாமும்
யான் எண்ணியது - அவர் எண்ணும் இயல்பினர்;
இறைவனோ முறைசெய்து காக்கும் மேலோன்;
என்னூரின் கண் இருக்கும் குடிகள்
பணியத் தகுமிடம் பணிபவர் நன்றே!
அமையத் தகுகுணம் அனைத்தும் அமைந்தவர்;
கல்வி நிரைந்தவர்; கற்றதன் பயனாய்
நாவைச் சுவைக்கே அடிமை ஆக்கார்;
உடம்பு பயன் மடந்தைக்கே என்னார்;
கண்ணில் காட்சி வெறி கொண்டு திரியார்;
மூக்கு நறுமணம் தோய்த்துக் கவிழார்;
காதை இசையினில் அளவொடு கவிப்பவர்;
எனவே, ஆன்று அவிந்து அடங்கிய கொள்கையுடைய சான்றோர் மிகப்பவர்; ஆதலால் ஏன் எனக்கு நரைக்கும்? இயம்புவீரே!
அன்புடன்,
டோண்டு ராகவன்
அண்ணா!
இந்தத் தாழ்வு மனப்பான்மை எனும் நோய்; நமது சொந்தச் சகோதரனுக்கோ;பிள்ளைக்கோ இருந்தாலும் விட்டு விட்டு ,நம் வேலையைப் பார்ப்போம். என்றா?? கூறுகிறீர்கள்.
யோகன் பாரிஸ்
"இந்தத் தாழ்வு மனப்பான்மை எனும் நோய்; நமது சொந்தச் சகோதரனுக்கோ;பிள்ளைக்கோ இருந்தாலும் விட்டு விட்டு ,நம் வேலையைப் பார்ப்போம். என்றா?? கூறுகிறீர்கள்."
கண்டிப்பாக இல்லை. ஆனால் அதே நேரம் அவ்ர்களுடன் ரொம்ப டிஸ்கஸ் செய்யக் கூடாது. உதவி செய்யுங்கள், ஆனால் அவர்களே தம் பிரச்சினையை தீர்க்கும் அளவிலேயே அது இருக்க வேண்டும்.
எனது பதிவு வாழ்க்கையில் சாதாரணமாக நாம் சந்திக்கும் நெருங்கிய உறவினரல்லாதவர்கள் பற்றியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி வேதாளம் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்கு ஒரு விசயம் நினைவுக்கு வருதுங்க டோண்டு ராகவன்.அதாவது இந்த குரங்கைப் பிடிக்க ஒரு வாயகலமில்லாத குவளையில் தின்பண்டம் -பொரி போட்டு வைத்து விடுவார்களாம்.இந்த குரங்கு இரண்டு கையையும் உள்ளே விட்டு எடுக்க முடடயாம மாட்டிக்குமாம்.
ஐயா! நீங்க சொல்றது அந்தக்குரங்குக்கு வேணாப்பொருத்தமாயிருக்கலாம்.
இன்று உலகின் பிரச்சனையே அடுத்தவனுகென்னாலும் நமக்கென்ன என்ற மனோபாவம் தான்..உங்களப்போன்ற மூத்தவர்கள் (வயதில் அல்ல) இப்படி தவறாய் போதிப்பது தவறு என்று எண்ணுகிறேன்.
ஒருவன் தாழ்வுமனப்பான்மை கொள்கிறான் எனில் அவன் தோல்வியால் துவள்கிறான் என்று பொருள்.
எனவே,உங்கள் கருத்து துன்பம் வந்தால் சிரி என்பதா! அது அடுத்தவர் துன்பம் பார்த்தல்ல என்று நினைக்கிறேன்.
எனக்குப்பிடித்த கமல் படம் -வசூல் ராஜா- m.b.b.s. -ல் வரும் கட்டிபிடி வைத்தியம் காட்சியைப்பாருங்க உங்களுக்கு என்கருத்து விளங்கும்.
நன்றி.
"உங்களப்போன்ற மூத்தவர்கள் (வயதில் அல்ல)..."
நன்றி.
"ஒருவன் தாழ்வுமனப்பான்மை கொள்கிறான் எனில் அவன் தோல்வியால் துவள்கிறான் என்று பொருள்.
எனவே,உங்கள் கருத்து துன்பம் வந்தால் சிரி என்பதா! அது அடுத்தவர் துன்பம் பார்த்தல்ல என்று நினைக்கிறேன்."
அப்படி நான் கூறவில்லை, என் கருத்தும் அதுவல்ல. உதவி செய்யுங்கள். அதே நேரத்தில் எவ்வளவு தேவையோ அதுமட்டும் செய்ய வேண்டும்.
அதாவது அவனுக்கு ஒரு வேளை உண்ண மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது நன்று. ஆனால் அதற்கும் அவன் தயாராக இருக்க வேண்டுமே.
நான் முக்கியமாக தவிர்க்கக் கூறுவது தாழ்வுமனப்பான்மையை டீஃபால்ட் நிலையாகக் கொள்பவனை. அவன் சாதாரணமாகக் கூறுவது "அதெல்லாம் நம்ம முயற்சிக்கு அப்பாற்பட்டதப்பா, அக்கடா என்று இரு" என்பதுதான். இதில் நம்ம என்று கூறி உங்களையும் இழுத்துவிடுவான். அவன்களைத்தான் அவாய்ட் செய்யச் சொன்னேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்கு தெரிந்து இன்னொரு தவிர்க்கவேண்டிய கூட்டம் உள்ளது. அது சதா மற்றவர்களுடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு உன்னை விட நான் தான் ஒஸ்தி என்று பினாத்தும் கூட்டம். இதுவும் ஒருவிதத்தில் தாழ்வு மனப்பான்மைதான். இந்த வியாதி வந்தவர்களை கண்டாலும் தூர ஓடவேண்டும்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஃப்ளெமிங்கோ அவர்களே. உயர்வு மனப்பான்மை என்பது தாழ்வு மனப்பான்மையை மறைக்கும் ஒரு உத்தியாகவே மனோதத்துவ நிபுணர்கள் பார்க்கின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//என்னால் முடியாது. உங்களால் முடியும் என்றால் வாழ்த்துகிறேன். நம்மை விடுங்கள் சாமி.//
பதிலுக்கு நன்றி.
நான் சுயநலம் இல்லாதவன் என்று கூறவில்லை.
என் கேள்வி இப்படி எல்லோரும் ஒதுங்கினால், எப்படி மற்றவர்களை எப்படி காப்பாற்றுவது?
சுயநலத்துடன் வாழுங்கள் என்று மொட்டையாக கூறினால் - மற்றவர்களை காப்பாற்றும் திறன் கொண்டவர்களும் ஒதுங்க வாய்ப்பு இருக்கிறதே?
"சுயநலத்துடன் வாழுங்கள் என்று மொட்டையாக கூறினால் - மற்றவர்களை காப்பாற்றும் திறன் கொண்டவர்களும் ஒதுங்க வாய்ப்பு இருக்கிறதே?"
எனக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா என்ன, நான் சொன்னவுடன் எல்லோரும் ஒதுங்குவதற்கு? :)))
சரி சீரியஸாகவே பதில் சொல்கிறேன். தாழ்வு மனப்பான்மை + மாசோகிஸ்டாக இருப்பவர்கள் ஆபத்தானவர்கள். இந்த காம்பினேஷன் போதை மருந்துக்கு சமம்.
போதை மருந்து சாப்பிடும் ஒருவனை திருத்த அவன் காதலி முயல, அவன் அவளிடம் "இந்த போதை எப்படியிருக்கும் என்பதைப் பார்த்தால்தான் உனக்கும் பிரச்சினையின் அளவு புரியும்" என்று கூறிவைக்க அவளும் அதை முயற்சி செய்து பிறகு அவனை விட பெரிய போதையில் ஆழ்ந்து சீரழிந்தாள்.
நான் கூறுவது கற்பனையல்ல. பல முறை நடந்த விஷயம்.
இதெல்லாம் விடுங்கள். ஒரு காரியம் முடிக்க முதலில் வெற்றியை கற்பனை செய்து கொள்ளவேண்டும். அது வந்து விட்டது போன்றே நமது நடை உடை பாவனைகள் வேண்டும் பல மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறே நான் நடக்க முயலுகிறேன்.
இப்போது இணைய நண்பர்களிடம் இக்கேள்வியைக் கேட்கிறேன். நிஜம் கூறியதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது நான் கூறுவதை ஆதரிக்கிறீர்களா? நிஜம் அவர்களே, பெரும்பான்மையினர் நீங்கள் சொல்வதை ஆதரித்தால் உங்களையும் அவர்களையும் வாழ்த்தி விடை பெறுகிறேன்.
நான் போய் என் முன்னேற்றத்தை கவனித்துக் கொள்கிறேன்.
ஐ ஆம் தி எஸ்கேப்! :))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ஐ ஆம் தி எஸ்கேப்" கவுண்டமணி + விவேக் காபினேஷன் குரலில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///இல்லாவிட்டால் 2000 ஆண்டுகளாக அடுத்த ஆண்டு ஜெரூசலத்தில் என்று ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ள முடியுமா என்ன?////
புதிய செய்தி, மேலதிக தகவல் தாருங்களேன்.
யூதர்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக உலகின் பல இடங்களுக்கும் விரட்டியடிக்கப்பட்டு துன்புற்றனர். இத்தனை ஆன்டுகளில் எத்தனை தலைமுறைகள் கழிந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். வேறு எந்த இனமாக இருந்தாலும் இவ்வாறு சிதறிப் போனதற்கு தன் அடையாளங்களை இழந்து அழிந்து போயிருக்கும். ஆனால் யூதர்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொன்டனர். தாங்கள் எப்படியும் இஸ்ரேலுக்கே திரும்ப வருவோம் என்பதை வலுவாக நம்பினர்.
இந்த நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக வந்திருக்கிறது. யூதர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அளவளாவி விட்டு விடை பெறும்போது அடுத்த ஆண்டில் ஜெரூசலத்தில் பார்ப்போம் என்று கூறிச் செல்வார்கள்.
அவர்களை துன்புறுத்திய ஒவ்வொரு இனமும் அழிந்தது. ரோமானியர்கள் ஒழிந்தனர். அதிலிருது ஆரம்பித்து பல இனங்கள் அழிந்தன. ஆனால் யூதர்கள் மட்டும் பிடிவாதமாக நின்றனர். கடைசியில் ஹிட்லரும் ஒழிந்தான்.
ஆனால் இஸ்ரவேலர்கள் உறுதியாக நின்று இஸ்ரேலை மீண்டும் நிறுவினர். இறந்த மொழியாகக் கருதப்பட்ட ஹீப்ரூ மொழியை மறுபடி பேசும் மொழியாக நிலை நிறுத்தினர்.
அவர்களது போராட்ட சரித்திரம் உலக இலக்கியங்களில் பொன்னெழுத்தில் எழுதப்பட வேண்டியவை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
லியோன் ஊரிஸின் எக்ஸோடஸ் (Exodus by Leon Uris) நாவலைப் படித்தால் உங்களுக்கு பல விஷயங்கள் பிடிபடும்.
ஆனால் ஒன்று, இக்கேள்வி கேட்டு டோண்டு என்ற இளைஞனுக்கு தீனி போட்டதற்கு பல வலைப்பூ நண்பர்கள் உங்களை கோபித்து கொள்ளப் போகிறார்கள்!
:))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
Self-interest என்பதை விட enlightened self-interest அதிகப் பொருத்தமாக இருக்கும். இதை அறிவார்ந்த சுயநலம் அல்லது தன்னலம் என்று மொழிபெயர்க்கலாம்.
சுயநலமோ தன்னலமோ இடத்துக்கு ஏற்றபடி மாறும். எல்லா நண்பர்களும் பார்த்திருக்க தான் மட்டும் ஐஸ் கிரீம் சாப்பிடுவது அறிவார்ந்த சுயநலம் அல்ல. ஏனெனில் சான்ஸ் கிடைக்கும் போது அவனுக்கும் அதே ட்ரீட்மெண்ட் கிடைக்கும்.
டேல் கார்னகி எழுதுகிறார், ஒருவனிடம் உங்களுக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் அவன் உங்களுக்கு உதவி செய்வது அவனது சுயநலத்துடன் ஒத்துப் போக வேண்டும் என்று.
இதைத்தான் 'ஆடற மாட்டை ஆடிக் கற, பாடற மாட்டை பாடிக் கற' என்பார்கள்.
சுயநலம் என்பதை கெட்ட வார்த்தையாக நான் பார்க்கவில்லை. ஆகவே நான் எனது சுயநலம்தான் எனக்கு முக்கியம் என்று கூறியதில் ஒரு மாற்றமும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுயநலம் ஒருவருக்கு முக்கியம் என்ற கருத்தை நானும் ஆதரிக்கிறேன். அதனால் சுயநலம் 'மட்டுமே' முக்கியம் என்று சொல்லவில்லை. இதைத்தான் டோண்டு அவர்களும் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
இந்த வார குமுதம் இதழில் 'ஹலோ மிஸ்டர் வின்னர்' பகுதி டோண்டு அவர்கள் கருத்துடன் ஒத்துப்போகிறது. "உங்களை ஊக்குவிப்பவர்களை மட்டும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார்.
டேல் கார்னகி சொல்வது managementல் சொல்லிக்கொடுக்கும் ஒரு முக்கியமான கோட்பாடு. எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் அடுத்தவரின் நலம் என்ன என்று தெரிந்தால்தான் அவர்களை உதவிசெய்ய வைக்கமுடியும். இதை WIIFM (What's in it for me) என்று சொல்கிறார்கள். முடிந்தால் அயன் ராண்டு கதைகளும் படித்துப்பாருங்கள்.
தாழ்வு மனப்பான்மையோ அல்லது தாழ்வு மனப்பான்மையை மறைக்க வெளியே காட்டிக்கொள்ளும் உயர்வு மனப்பான்மையோ உள்ளவர்களை ஒதுக்குவதுதான் என்னால் முடிந்தது. அவர்களை காப்பாற்றத்தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்களே ;D
பிரச்சினை என்னவென்றால் சாதாரணமாக நாம் சுயநலம் என்பதை ஒரு கெட்ட வார்த்தையாகவே பார்த்து விட்டதுதான். ஆனால் அதுதான் மனித குல முன்னேற்றத்துக்கே அடிப்படை.
ஒரு சிறிய திசைதிருப்பல் செய்து விட்டு திரும்புகிறேன்.
In physics while studying about force we talk ஒf its horizontal and vertical components. In general, a force has got components in all directions expect the direction perpendicular to that of its own application. If I want to be a pure theorist, I can say even obtuse angleட் directions have got the component but their value is preceded by a minus. So for all practical purposes, we consider the angles between 0 and 90 degrees only.
In the case of self-enlightened interest, there is a component for others' interests as well, at least to get the work done. But in the case of pure unadultrated selfishness, there is no such component, because of the 90 degrees direction.
ஆங்கிலத்தில் கூறியதற்கு மன்னிக்கவும்.
இதற்கு மேலும் கூறிக் கொண்டே போகலாம். ஆனால் இன்னொரு பதிவைப் போட்டுவிடுவதே முக்கியம் என நினைக்கிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Read your post on தவிர்க்க வேண்டிய நபர்கள்... It was excellent...
Hats off to this wonderful post...
The first one of the series regarding "தோல்வி பயத்தில் இருப்பவர்" was outstanding...
And...I am re-asserting my old request for a series on "Dravidian movement in Tamilnadu"....
Cheers
-Gokul
nice and inspiring post. more important that we should not become one among them.
Post a Comment