நான் சில மாதங்கள் முன் இட்ட "நினைக்கத் தெரிந்த மனமே" என்ற பதிவு இன்று திடீரென நினைவுக்கு வந்தது. காலையில் உலாவச் செல்லுகையில் இப்பாட்டு காற்றினிலே மிதந்து என் செவிப்பறையில் மிருதுவாக மோதியது. கண்ணதாசனின் கவிதையின் இனிமையே இனிமை.
மேலே போவதற்கு முன்னால் ஒரு சிறிய degression. முழு பாட்டையும் போட்டுவிடுகிறேன். கூகுளாண்டவரே துணை. விளக்கம் கடைசியில்.
"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
(நினைக்கத்)
மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா
(நினைக்கத்)
எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா
(நினைக்கத்)
கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
(நினைக்கத்)"
இப்போது இடுகை. சிக்கனம்மும் கருமித்தனமும் வெவ்வேறு. சிக்கனமாக இருப்பவரை கருமி என்று கூறுபவர்களும் உண்டு. நான் புரிந்து கொண்டது என்னவென்றால், ஒரு நல்ல வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதற்கான செலவு மட்டும் செய்து கொள்வதுதான் சிக்கனம் என்பதுவே. உதாரணத்துக்கு எனக்குக் கார் தேவையில்லை. வாடகைக் கார்கள் எல்லாம் என்னுடையதுதானே! (:))))
பக்கத்து வீட்டுக்காரன் வாங்கினான் என்பதற்காகவே நானும் கார் வாங்கினேன் என்றால் நான் சிக்கனமாக வாழவில்லை என்பதே பொருள். அதே சமயம், பொன்னான நேரத்தை பார்த்து செலவழிக்காது சிக்கனமாக நடந்து கொள்கிறேன் பேர்வழி என்று காரில் செல்லாது பஸ்சுக்காகக் காத்துக் கிடந்தால் நான் கருமி என்று பொருள்.
மேலே சுட்டிய எனது பதிவில் குறிப்பிட்டபடி எனது பெரியப்பா சிறு வயதில் பட்ட கஷ்டம் காரணமாக ரொம்பத்தான் சிக்கனமாக இருந்தார். டெலிஃபோனில் தேவையில்லாது பேச மாட்டார். அப்போதெல்லாம் வாடகை 75 ரூபாய்தான், 150 அழைப்புகள் இலவசம். ஆனால் மனிதர் 25 அழைப்புகளுக்கு மேல் செய்ய மாட்டார். என்னிடம் அதைப் பற்றி கூறியபோது, நான் ஒன்றே ஒன்றுதான் கூறினேன். மீதி 125 அழைப்புக்ளை செய்யாததால் அவருக்கு அதிக பலன்கள் ஏற்படவில்லை என்பதே அது. தேவையின்றி டெலிபோன் துறைக்கு அவற்றை தண்டமாக அழுவதில் என்ன லாபம்? ஆகவே இந்த இடத்தில் சற்று மாற்று சிந்தனை தேவைப்படுகிறது. ஒவ்வொரு பில்லின் போதும் அம்மாதிரி மிகுந்த அழைப்புகளை கேரி ஓவர் செய்யாத பட்சத்தில் அவற்றை உபயோகித்து விடுவதே மேல் என்பேன். நானாக இருந்தால் அனுமதிக்கப்பட்ட அழைப்புகளை சற்றே மீறுவேன். அதாவது முழு உபயோகம் சந்தேகத்துக்கிடமின்றி வரவேண்டும். ஒரு அழைப்பு கூட வீணாக திரும்பிப் போகக்கூடாது என்பதே குறிக்கோள். மேலே 5 கால்கள் செய்தால் என்ன, அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டுப் போகலாம். பரவாயில்லை.
ஆகவே சிக்கனமாக இருப்பதால் ஏதேனும் உருப்படியாக காரியம் ஆகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் இருந்த போது மார்ச் 31-க்குள் அந்த வருடத்துக்கான பட்ஜெட் முழுக்க செலவழிக்க வேண்டும். அங்கு போய் சிக்கனமாக இருந்தால் வேலைக்காகாது. அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் சம்பந்தப்பட்ட டிவிஷனுக்கு சங்குதான். ஆக, இந்த சந்தர்ப்பத்திலும் சிக்கனம் பிரயோசனப்படாது.
நான் ஐ.டி.பி.எல்லில் இருந்தபோது ஏதேனும் எலெக்ட்ரிகல் ஐட்டம் வாங்க நேர்ந்தால் வேண்டுமென்றே சற்று அதிகமான தொகையை அட்வான்ஸாகக் கேட்பேன். ஒரு மெயின் ஸ்விட்ச் வாங்க 2000 ரூபாய் தேவை என்றால், 2500 ரூபாய் அட்வான்ஸாகப் பெறுவேன். விலை சற்றே முன்னே பின்னால் இருந்தாலும், உதாரணத்துக்கு 2100 ரூபாய் என்று ஆகிவிட்டாலும் கவலை இல்லை. பிறகு அக்கௌண்ட் சப்மிட் செய்வேன். வாங்கிய அட்வான்ஸ் 2500 ரூபாய், செலவு 2100 ரூபாய், ஆகவே என்னிடம் மீதியிருப்பது 400 ரூபாய். அதை திருப்பி கம்பெனி கணக்கில் செலுத்த தேவையான ஆணையைக் கோருவேன். பிறகு என்ன, என்னுடைய அக்கண்ட் உடனே சாங்ஷன் ஆகி 400 ரூபாய் செலுத்தச் சொல்லிவிடுவார்கள். நானும் செலுத்துவேன், தீர்ந்தது விஷயம்.
அவ்வாறு செய்யாமல் 1900 ரூபாய்தான் வாங்கியிருந்தேன் என்றால், எனக்கு ரி-இம்பர்ஸ் செய்ய வேண்டியது 200 ரூபாய் என்று போட வேண்டியிருக்கும். அக்கௌண்டண்ட் நம் கணக்கை சுலபத்தில் தொடமாட்டார், புரிகிறதா? ஆக, இம்மாதிரி அட்வான்ஸ் வாங்கும்போது சிக்கனம் பார்க்கக் கூடாது.
இப்போது நான் ஏன் இந்தப் பாட்டை முழுமையாக இங்கு போட்டேன் என்று கேட்பவர்களுக்காக:
1. நான் இன்று முழு பாட்டைக் கேட்டு சந்தோஷம் அடைந்தேன்.
2. அதை மற்றப் பதிவர்களும் பெறட்டுமே.
3. இதிலென்ன சார், காசா அல்லது பணமா?
என்ன நான் சொல்வது? அது இருக்கட்டும், இப்பாட்டு எம்.ஜி.ஆர். மற்றும் தேவிகா நடித்த ஆனந்த ஜோதி என்ற படம் என்று ஞாபகம். யாராவது கன்ஃப்ர்ம் செய்ய முடியுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
9 hours ago
4 comments:
டோண்டு அய்யா,
அருமையான பாட்டு. நீங்கள் சொன்னது சரி. ஆனந்த ஜோதி படத்தில் வந்த பி சுசீலா பாடிய பாட்டு தான் இது.
பாலா
நன்றி பாலா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
//ஒரு மெயின் ஸ்விட்ச் வாங்க 2000 ரூபாய் தேவை என்றால், 2500 ரூபாய் அட்வான்ஸாகப் பெறுவேன். விலை சற்றே முன்னே பின்னால் இருந்தாலும், உதாரணத்துக்கு 2100 ரூபாய் என்று ஆகிவிட்டாலும் கவலை இல்லை. பிறகு அக்கௌண்ட் சப்மிட் செய்வேன். வாங்கிய அட்வான்ஸ் 2500 ரூபாய், செலவு 2100 ரூபாய், ஆகவே என்னிடம் மீதியிருப்பது 400 ரூபாய். அதை திருப்பி கம்பெனி கணக்கில் செலுத்த தேவையான ஆணையைக் கோருவேன். பிறகு என்ன, என்னுடைய அக்கண்ட் உடனே சாங்ஷன் ஆகி 400 ரூபாய் செலுத்தச் சொல்லிவிடுவார்கள். நானும் செலுத்துவேன், தீர்ந்தது விஷயம்.
அவ்வாறு செய்யாமல் 1900 ரூபாய்தான் வாங்கியிருந்தேன் என்றால், எனக்கு ரி-இம்பர்ஸ் செய்ய வேண்டியது 200 ரூபாய் என்று போட வேண்டியிருக்கும். அக்கௌண்டண்ட் நம் கணக்கை சுலபத்தில் தொடமாட்டார், //
இது சிக்கனமா உஷர்ராக இருக்கும் சூட்டிகையா?
shri & sha இ கலப்பையில் எப்படி அடிப்பது என்று சொல்லவும் உதவியாயிருக்கும்.
அன்புடன்,
ஹரிஹரன்
"இது சிக்கனமா உஷர்ராக இருக்கும் சூட்டிகையா?"
இரண்டும்தான். கேட்கும்போது சிக்கன எண்ணமே வரக்கூடாது. அதிகம் கேட்டால்தான் அக்கவுன்டை சீக்கிரம் க்ளோஸ் செய்ய இயலும். இல்லையெனில் நீங்கள் க்ளோஸ்.
இகலப்பையில் alt+2 செட்டிங்கில் வெறுமனே sr அடித்தாலேயே ஸ்ரீ வந்து விடும். ஷ அடிப்பதற்கு sha அடிக்க வேண்டும்.
Xa அடித்தால் ஞ வரும். ங அடிக்க வேண்டுமானால் gga அடித்து விட்டு பேக் கீயைத் தட்டுங்கள். ங் என்பது ங ஆகிவிடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment