நம் கதாநாயகனை முதலில் ஒரு கிராமத்தில் பார்க்கிறோம். மிலிட்டரியில் சேரு சேரு என அவன் மாமா கமல்காந்த் நச்சரிப்பதால் அவனுக்கு பயந்து கிராமத்துக்கு வந்துள்ளான். வந்த இடத்தில் விமலா என்னும் சென்னை பெண்ணுடன் மோதல். பிறகு அங்கிருந்து கிளம்பி சென்னைக்கே திரும்ப வருகிறான்.
மோகன்குமார் என்னும் கவுரவ நடிகர் (அவர் மகாபாரதம் சினிமாவில் கௌரவர்களில் ஒருவராக நடித்தவர்) வீட்டில் வேலையில் சேர அங்கு விமலாவை சந்தித்து திடுக்கிடுகிறான். அவள் மோகன் குமாரின் பெண். வழக்கம்போல இன்னும் சில மோதல்களுக்கு பிறகு காதல் மலருகிறது.
இதற்குள் மோகன் குமார் ராமாயணம் பற்றி எடுக்கப்படும் சினிமாவில் ராமராக நடிக்கிறார். அதில் அனுமன் வேடம் போட வேண்டும் என்று நம் கதாநாயகனிடம் கூற அவன் மறுக்கிறான். குரங்கு மாதிரிஎல்லாம் மூஞ்சியை வைத்து கொள்ள இயலாது என்கிறான்.
அன்று வீட்டுக்கு போய் அடுத்த நாள் பார்த்தால் அவனுக்கு வால் முளைத்திருக்கிறது. சில நாள் கூத்துக்கு பிறகு அவன் வாலை அவன் அன்னை இருட்டில் புடலங்காய் என எண்ணி நறுக்கி விடுகிறாள். அவனுக்கு தன் பெண்ணை மணமுடித்து தர மோகன் குமார் சம்மதித்த நிலையில் கதாநாயகனுக்கு கொம்பு முளைப்பதாக கதை வேடிக்கையான சுபமாக முடிகிறது.
வணக்கம், நாடகப்பிரியாவின் “வால்பையன்” என்னும் நாடகத்தின் கதை சுருக்கத்தை மேலே படித்தீர்கள். இதில் கதாநாயகன் சிதம்பரமாக வருவது எஸ்.வி. சேகர், அவன் மாமா கமல் காந்தாக வருவது சுந்தா. இவர்கள் இருவரின் இயக்கத்தில்தான் இந்த நாடகம் பல நூறு முறைகள் அரங்கேறியுள்ளது.
அதிலிருந்து சில டயலாக்குகள்:
சிதம்பரம் தான் ராணுவத்தில் சேர்ந்துவிட்டு திரும்ப வந்ததாக தன் மாமா கமல்காந்திடம் புருடா விடுகிறான்.
சிதம்பரம்: மாமா, அங்கே திருச்சிலேருந்து வந்த முரளிங்கற பையன் ரொம்ப பாவம், அவன் வாயிலேயே குண்டு வெடிச்சுடுத்து.
கமல்காந்த்: எப்படி ஆச்சு அது?
சிதம்பரம்: எறி குண்டு பின்னை வாயில் கடிச்சு எடுத்துட்டு குண்டை வீசி எறியச் சொன்னாங்க. இவன் தவறுதலா குண்டை வாயில் கடிச்சுட்டு பின்னை வீசி எறிஞ்சுட்டான்.
மோகன் குமார் சிதம்பரத்துக்கு வேலை கொடுத்து விட்டு மேலே பேசுகிறார்.
மோகன் குமார்: - தம்பி நீ மத்தியானம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கெல்லாம் போக வேண்டம்.
சிதம்பரம்: ரொம்ப நன்றி ஐயா.
மோகன் குமார்: இங்கேயும் போட மாட்டாங்க. கையோட சாப்பாட்டை கொண்டு வந்துடுன்னு சொல்ல வந்தேன். இங்கே வேலை அதிகம்.
சிதம்பரத்துக்கு வால் முளைத்ததும் வீட்டோடேயே முடங்கிக் கிடக்கிறான். அவன் மாமா கமல்காந்த் அவனுடன் பேசுகிறார்.
மாமா: சிதம்பரம், மனசை தேத்திக்கோப்பா. இந்தா ராமாயணம், படி.
சிதம்பரம்: மாமா, என்னது இது? எனக்கெல்லாம் போய் “வால்”மீகி ராமாயணம்னு தரீங்க? அதுலே வேற யாரோ வால்மீகியை வால்மீதி-ன்னு திருத்தியிருக்காங்க. வேணும்னுதானே இந்த் புத்தகத்தை தந்தீங்க?
மாமா: அடேய் அது சாதாரண அச்சுப்பிழைடா.
சற்று நேரம் கழித்து ரேடியோவை ஆன் செய்கிறான்.
ரேடியோவில் பாடல், அடைப்பு குறிகளுக்குள் சிதம்பரத்தின் எதிர்வினைகள்.
“தைரியமாகச் சொல் நீ மனிதந்தானா (என்னது?) இல்லை (இல்லியா?) நீதான் (ஊம்?) ஒரு மிருகம் (ஐயையோ), மிருகம், மிருகம், மிருகம் (ரிகார்டில் ஏதோ கோளாறு, அங்கேயே நின்று விடுகிறது).
சிதம்பரம்: டாய், எவண்டா அது கீசுறுவேன்.
சிதம்பரத்தின் காதலி விமலா அங்கு வருகிறாள். சிதம்பரம் ஒரு பெரிய போர்வையை போர்த்திய வண்ணம் அமர்ந்திருக்கிறான்.
விமலா: என்ன சிதம்பரம், உங்களை கொஞ்ச நாளாவே பாக்க முடியல்லே. என்ன இந்த மாதிரி வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிறீங்க? முன்னெல்லாம் சுறு சுறுப்பா அங்கேயும் இங்கேயுமா தாவிக்கிட்டிருப்பீங்க? எங்கே போச்சு உங்க வாலு.
சிதம்பரம் (முனகிக் கொண்டே): எங்கேயும் போகல்லே. அப்படியேத்தான் இருக்கு.
இப்ப ஏன் இது ஞாபகத்துக்கு வரணும்? ஏன்னாக்க நேற்று புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அப்போது எஸ்.வி.சேகரின் நாடகங்கள் புத்தக வடிவில் பார்த்தேன். இந்த நாடகம் நினைவுக்கு வந்தது. அங்கு நடந்த மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மட்காத மானுடக்குப்பைகள்
-
மனிதர்கள் இன்று மானுடக்குப்பைகளாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். கடுமையான
சொல்லாட்சிதான். ஆனால் அது ஓர் யதார்த்தம். நாம் அனைவரும் குப்பையாகிக்கொண்டே
இருக்கும் ஒ...
1 day ago
