எபிசோட் - 60 (31.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நள்ளிரவில் செல்பேசி அழைப்பு வர ரமேஷ் வெளியே செல்கிறேன். அவனறியாமல் அவனைப் பின்தொடர்ந்த உமா அதிர்ச்சியான விஷயம் தெரிந்து கொள்கிறாள். அது குறித்து என்ன செய்வது என்பதில் தெளிவு பெற அவள் அசோக்கை தேடி செல்கிறாள்.
ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்லப் போவதாக அவள் கூற, அசோக் அவள் சொல்வதை கேட்கத் தயாராகிறான். தனது கணவன் ரமேஷ் நாதன் கம்பெனியில் உற்பத்தி செய்யப்படும் பைப்புகளை நகல் செய்து போலி பைப்புகளை நாதன் கம்பெனி பைப்புகளின் பெயரில் விற்று வருகிறான் என அவள் மனக்கொதிப்புடன் கூறுகிறாள். விநாசகாலே விபரீத புத்தி என பெருமூச்சு விடும் அசோக் ரமேஷ் இவ்வாறு செய்தது துரதிர்ஷ்டவசமானது அவன் மனைவி அது பற்றி தெரிந்து கொண்டது மேலும் துரதிர்ஷ்டவசமானது என அசோக் கூறுகிறான். அவனது ஆலோசனையை கேட்டு வந்திருப்பதாக உமா கூற, ஆலோசனை கேட்பவர்கள் சாதாரணமாக தங்களுக்கு பிடித்த ஆலோசனையைத்தான் தேடுகிறார்கள் என்றும், ஓரிடத்தில் அது கிடைக்காவிட்டால் பலரிடம் அது பற்றி பேசி தனக்கு பிடித்த ஆலோசனை பெறும்வரை காத்திருக்கிறார்கள் என்றும் அசோக் கூறுகிறான்.
அவனது ஆலோசனையை கேட்கும் மனநிலையிலேயே தான் இருப்பதாக கூறுகிறாள் உமா. இப்போது அசோக் அவளிடம் ஒவ்வொன்றாக கேள்விகள் கேட்கிறான். பிறகு அவள் வாயாலேயே நாதனிடம் போய் விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பதை வரவழைக்கிறான். அதைத்தான் அவள் முதலில் செய்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறான். உறவுக்கு கைகொடுப்போம் என்பதெல்லாம் சரிதான், ஆனால் உண்மையைக் காப்பாற்றுவோம் என்பது அதைவிட பெரிய ஆச்சாரம் என்றும் தெளிவுபடுத்துகிறான்.
வேம்பு சாஸ்திரி ஒரு சாவுக்காரியத்துக்கு போய்விட்டு வந்திருக்கிறார். அங்கே எவ்வளவு பணம் கிடைத்தது என சுப்புலட்சுமி கேட்க, ஏதோ அவர்கள் கொடுத்ததை வாங்கிவந்ததாக அவர் கூறுகிறார். போன இடம் பெரிய இடம், சற்று அதிகமாகக் கேட்டிருக்கக் கூடாதா என அவள் ஆதங்கப்பட, மேலே போட்டுக் கொடுக்கும்படி கேட்க தான் என்ன ஆட்டோக்காரனா என வேம்பு கிண்டலுடன் கேட்கிறார். ஆம், அவர் ஆட்டோக்காரனே எனக் கூறும் அவர் தமக்கை, வேம்பு இறந்த அந்த ஆத்மாவை அதற்குரிய இடத்துக்கு எடுத்துச் செல்வதால், அவரும் ஆட்டோக்காரனே என கூறுகிறாள்.
இதே மாதிரித்தான் ராமாயணத்தில் குகனிடம் ராமன் தன்னையும் இலக்குவனையும் சீதையையும் கங்கைக்கு மறுபுறம் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ள, அவனோ ராமரே ஆன்மாக்களை பிறவிப் பெருங்கடல் வழியே செலுத்தி, கரை சேர்ப்ப்பவர், ஆகவே அவரே தன்னை விட பெரிய ஓடக்காரனாக கூறினானே என சுப்புலட்சுமி கூறுகிறாள்.
குகனுக்கு ராமர் இறைவன் என்பது தெரியுமா என சோவின் நண்பர் கேட்க, தெரியாது எனக்கூறி, அதற்கு சான்றாக கம்பராமாயணத்திலிருந்து சில பாடல்களை கூறுகிறார். ராமருக்கே தான் இறைவனே என்ற உணர்வு இல்லையென்றும் அவர் கூறுகிறார். இக்கதைகளெல்லாம் பிற்காலத்தில் சுவைக்காக சேர்க்கப்பட்டவை என்றும் அவர் கூறுகிறார்.
தான் போய் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வேம்பு புறக்கடை பக்கம் செல்கிறார். சாம்பு சாஸ்திரிகள் வருகிறார். காலை 11 மணிக்கு ஓரிடத்தில் புண்யாகவசனம் என்றும், அதற்கு வேம்புவையும் அழைத்து போவதாக கூறுகிறார். புண்யாகவசனம் என்றால் என்ன என்பதை சோவின் நண்பர் கேட்க, அவரும் அதை விளக்குகிறார். இந்த விளக்கமும் தான் ஒரு சாஸ்திரிகளை கேட்டு அவரிடமிருந்து பெற்றதே என்றும் கூறுகிறார்.
[இங்கு டோண்டு ராகவன் தரப்பிலிருந்து சில வார்த்தைகள். ஏற்கனவேயே சோ அவர்கள் பல முறை தனது நண்பரிடம் குறிப்பிட்டது போல பல விஷயங்களையும் பலரிடமும் கேட்டுத்தான் போடுகிறார் அதைப்போல நானும் பல இடங்களில் முழுப்பாடல்களை போடுவது கூகளண்ணன் துணையாலேயே. என்ன, எதை எவ்வாறு எழுதி எங்கே தேட வேண்டும் என்ற அறிவு தேவைப்படும். இப்போதே கூகள் தேடுபெட்டியில் ஒருங்குறி எழுத்தில் “எங்கே பிராமணன்” என தட்டச்சிட்டு தேடு பகுதியை க்ளிக்கினால். கிடைக்கும் 92000-க்கும் அதிகமான ஹிட்டுகளில் முதலில் எனது இப்பதிவுத் தொடர்தான் வருகிறது. ஏதோ நாமும் நம்மாலானதை செய்கிறோம் என்ற மன நிறைவும் வருகிறது].
(தேடுவோம்)
எபிசோட் - 61 (01.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சாம்பு சாஸ்திரிகள் வந்திருப்பதை வேம்புவிடம் அவர் மனைவி புறக்கடைக்கு சென்று கூறி, புண்யாகவசனம் பற்றியும் கூறுகிறாள். அவரோ தான் சாவு காரியத்துக்கு போய்விட்டு வந்ததால், இந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியாது என கூறிவிடுகிறார். அதெல்லாம் இப்போது யார் பார்க்கிறார்கள் என அவர் மனைவி கூற, அவரோ அதை மறுத்து பேசுகிறார். பிறகு சாம்புவிடம் வந்து தனது சங்கடத்தைக் கூற அவரும் வேம்பு சொல்வதே சரி என்கிறார். “இது என்ன நீங்க ரெண்டுபேரும் அசோக்குக்கு உதாரணமா இருக்கப் போறேளா” என சுப்புலட்சுமி சீற, சாம்புவோ அசோக்கைப் பற்றிப் பேச தனக்கு தகுதி இல்லை, அவன் ஒரு உதாரண புருஷன். அவன் பாதை போடுகிறான், அதில் பின்தொடர இஷ்டமிருப்பவர்கள் செய்யலாம் என்றும், தான் அதையே செய்வதாகவும், இப்போது வேன்புவும் அதையே செய்வதாகத் தோன்றுகிறது என கூற, வேம்பு பெருமிதத்துடன் தலையசைக்கிறார்.
சாவுக்காரியம், சிராத்தம் ஆகியவற்றைப் பண்ணி வைக்கும் புரோகிதர்களுக்கு கடுமையான நியமங்கள் உண்டு என சோ அவர்கள் இது சம்பந்தமாக கேள்வி எழுப்பிய நண்பருக்கு கூறுகிறார். உதாரணங்களையும், குறிப்பிட்ட விதிமுறைகளையும் கூட கூறுகிறார்.
நாதன் வீட்டை நோக்கி உமா காரில் செல்கிறாள். மாமனாருக்கு ஃபோன் செய்து குழந்தை சமர்த்தாக இருக்கிறாளா ஏனக் கேட்க, அவரும் அதை உறுதி செய்துவிட்டு, உமா எப்போது வீட்டுக்கு வருவாள என கேட்கிறாள். தான் அவர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்கள் தன்னை அவர்கள் சேர்த்துக் கொள்வது சந்தேகம் எனக்கூறி விட்டு, ரமேஷ் செய்ததையும் தான் நாதனைப் பார்க்கச் செல்வதையும் கூறிவிட்டு செல்பேசியை கட் செய்கிறாள். இந்த விஷயம் உடனுக்குடன் உமாவின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் தரப்பிலிருந்து போன், பிறகு மாமியாரின் கெஞ்சல் எல்லாமே வருகின்றன. எல்லாவற்றையும் புறக்கணிக்கிறாள். டிரைவரிடம் ஒரு சிடியை கொடுத்து போடச் சொல்ல, மனதில் உறுதி வேண்டும் என்னும் மகாகவி பாரதியாரின் வரிகள் காரில் நிரம்புகின்றன. அந்த உத்தமப் பெண்ணின் மனதுக்கு அது ஆறுதலாக இருக்கிறது. (இங்கு நான் சுட்டியது வீடியோ பெண்குரலில், ஆனால் காரில் பாடல் மட்டும் கேட்கிறது. அதுவும் ஆண்குரலில்).
நாதன் வீட்டுக்கு சென்ற உமாவை சிங்காரம் நாதன் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதால் அவரை தொந்திரவு செய்யக்கூடாது எனத் தடுக்க, அப்பெண்ணோ ஒரு புதுமைப் பெண்ணின் சீறலோடு செல்பேசியில் நாதனுடன் பேசி அவர் அனுமதி பெற்று உள்ளே செல்கிறாள். உள்ளே போனதும்தான் நாதன் எவ்வளவு பலகீனமான நிலையில் இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. அவருக்கு இதயத்தில் பிரச்சினை என்றும், அதிர்ச்சி தரும் செய்திகளை கூறக்கூடாதென்று எண்ணி என்ன செய்வது எனத் தெரியாமல் மயங்குகிறாள். பிறகு சுதாரித்துக் கொண்டு அவரது கம்பெனியில் ஜி.எம். ஆக வேலை செய்யும் தனது கணவனை நன்கு அப்சர்வேஷனில் வைக்குமாறு மென்றுவிழுங்கிக் கொண்டே கூற, அவரோ அவள் தனது கணவனது பதவி உயர்வு பற்றி பேச வந்தாள் எனப் புரிந்து கொண்டு தான் நிச்சயம் ஆக்ஷன் எடுப்பதாகக் கூற, அவளும் தயக்கத்துடன் விடை பெறுகிறாள். அவள் போன பின்னர், இல்லையே ஏதோ சரியில்லையே என்ற உணர்வுக்கான முகபாவத்துடன் அவர் அமர்ந்திருக்கிறார்.
உமா அந்தண்டை போனதும் நீலகண்டன் உள்ளே பிரவேசிக்கிறார். என்ன இது, அவர் குடும்பத்திலிருந்து ஒவ்வொருவராக வருகிறார்கள் என அதிசயிக்கும் சிங்காரத்தை கண்டதும் நீலகண்டனின் பயம் அதிகரிக்கிறது. அவரும் உள்ளே போய் நாதனிடம் பேசுகிறார். நாதனோ உமா தன்னிடம் ரமேஷ் பற்றி எல்லா விவரத்தையும் கூறிவிட்டதாகவும் தான் நிச்சயம் ஆக்ஷன் எடுப்பதாகவும் பேச, நீலகண்டன் அதை தவறாகப் புரிந்து கொண்டு தனது மாப்பிள்ளை செய்த தவறுகளை வெளிப்படையாகவே பட்டியலிடுகிறார். இப்போது திகைப்பது நாதனின் முறை. அவர் உமா தன்னிடம் இதைத்தான் கூற வந்திருக்க வேண்டும் என்றும், தனது உடல்நிலையை மனதில் வைத்துக் கொண்டு அந்தப் பெண் போக, அவள் தந்தையே எல்லா விவரங்களையும் கூறிவிட்டார் கோபத்துடன் கூற, நீலகண்டன் தலையில் கையை வைத்துக் கொள்கிறார்.
இங்கு டோண்டு தரப்பிலிருந்து சில வார்த்தைகள். பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல, அசொக்குடன் தொடர்பில் வருபவர்கள் தங்களையறியாமலேயே நல்ல செயல்கள் செய்வது இப்போதெல்லாம் அதிகமாகத் தெரிகிறது. இந்த எபிசோடிலேயே உமா, வேம்பு மற்றும் சாம்பு அதற்கு உதாரணமாக அமைகின்றனர். முந்தைய எபிசோடுகளில் நகை பற்றி புகார் செய்து அசோக்கை மாட்டிவிட்ட அப்பெண்மணி அசோக் ஒரு சிறுவனின் ஆப்பரேஷனுக்காக டொனேஷன் கேட்டபோது அந்த நகையையே கொடுத்துவிடுகிறாள் என்பதையும், தான் காசி யாத்திரைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை வேம்புவின் தமக்கையார் அசோக்கிடம் தூக்கிக் கொடுத்ததையும் ஏற்கனவேயே பார்த்துவிட்டோம். அது சரி, வசிஷ்டரால் இது முடியாவிட்டால், வேறு யாரால் முடியும்]?
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club – December Meet
-
Hi Sir, Hope you’re doing well. The First meet of ‘Manasa Book Club’ had a
wonderful response — we had 15 participants. Everyone was highly
enthusiastic an...
10 hours ago

No comments:
Post a Comment