4/23/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 71 & 72)

எபிசோட் - 71 (21.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(முதல் சுட்டியாக வரும் blog.isaitamil தளத்தில் வைரஸ் இருப்பதாக செய்தி வருகிறது).

நாதன் வீட்டுக்கு பிச்சுமணி வருகிறான். தனக்கு வேலை போட்டுத் தந்ததற்கு நன்றியும் தெரிவிக்கிறான். அசோக்கை திரும்ப வீட்டுக்கு அழைத்து வரும் வேலையை நாதன் அவனிடம் ஒப்புவிக்கிறார். அவனும் அதை ஏற்றுக் கொள்கிறான்.

பிச்சுமணி அசோக்கிடம் பேசுகிறான். அவன் தந்தைக்கு வயதாகி விட்டது என்றும், அவருக்கு துணையாக அவன் அவருடனேயே இருக்க வேண்டும் என அவன் கூறுகிறான். வயதாவது இயற்கை. அப்படி வயதானதும் மீண்டும் இளமையை பெற அவர் என்ன யயாதியா என அசோக் கேட்கிறான்.

யார் இந்த யயாதி என சோவின் நண்பர் கேட்க, சோ யயாதியின் கதையை கூறுகிறார். சாபத்தால் யயாதி முதுமை எய்த, அவன் என்ன விமோசனம் என தன்னை சபித்த சுக்ராச்சாரியாரை கேட்கிறான். அவரோ அவன் மகன்களில் யாரேனும் ஒருவர் அவனது முதுமையை வாங்கிக் கொண்டு தனது இளமையைத் தரலாம் எனக் கூறுகிறார். அவனும் தன் எல்லா மகன்களையும் கேட்க, கடைசி மகன் மட்டும் ஒத்துக் கொண்டு முதுமையை ஏற்றுக் கொள்கிறான். பிறகு பல ஆண்டுகள் இளமையை அனுபவித்தாலும் மனம் திருப்தியடையவில்லை என்பதை உணர்ந்து மகனுக்கு அவனது இளமையை திரும்பத் தந்து முதுமையை ஏர்று, பிறகு நல்ல காரியங்கள் பல செய்து நற்கதியடைகிறான் என்று கதை போகிறது.

பிச்சுமணி இதெல்லாம் பிராக்டிகல் இல்லை என மறுக்கிறான். தாய் தந்தையரை பேணுவதுதான் மகனின் கடமை என்கிறான். மகான்கள் கூட கடைசி காலத்தில் தத்தம் பேற்றோரை பேணினர் என்று பிச்சுமணி சுட்டிக் காட்டுகிறான்.

தன்னை பிச்சுமணி ஒருபோதும் மகான்களுடன் ஒப்பிடக் கூடாது என்பதை வினயத்துடன் கூறி மறுக்கிறான். தாய் தந்தையருக்கும் ஆற்றும் கடனை விட தெய்வத்துக்கு ஆற்ற வேண்டிய கடமை பெரிது என்கிறான்.

இது என்ன என நண்பர் கேட்க, அசோக் சன்னியாசி மாதிரி பேசுகிறான். ஆனால் அச்சமயம் அவன் பிரும்மச்சாரி மட்டுமே. மேலும் அவனது வாதங்களில் பிழை இருக்கிறது. தாய் தந்தையரை புறக்கணித்தல் மகா பாவம் என்று சோ கூறுகிறார். மேலும் அவன் செய்யும் வேறு விஷயங்களும் ஒத்துக் கொள்ளக்க்கூடியனவாக இல்லை. அவன் கற்றல் நிலையில் இருக்கும் பிரும்மச்சாரி, அவனுக்கு மற்றவர்களுக்கு வேத பாடம் எடுக்கும் அதிகாரம் இல்லை. மேலும் பல உதாரணங்களை அடுக்குகிறார்.

அசோக் வேதபாடசாலைக்கு செல்ல, பிச்சுமணி it's a hard nut to crack என தனக்குள் முணுமுணுக்கிறான்.

இங்கு டோண்டு ராகவன் ஒன்று கூற விரும்புகிறேன். இந்த சீரியலில் ஏதோ ஒரு விதி எல்லாவற்றையும் ஒரு திசையில் செலுத்துவது போலத்தான் தோன்றுகிறது. எங்கே பிராமணன் என்பதைத் தேட பூலோகம் அனுப்பிக்கப்பட்ட வசிஷ்டர் முதல் பகுதியில் தற்சமயம் வர்ணரீதியான பிராமணன் என்று எவருமே இல்லை என்பதைக் கண்டு கொண்டார். ஈசன் அருளால் அவர் அசோக்காகிய தனக்குள்ளேயே வர்ணரீதியான பிராமணனை தேடத் துவங்குகிறார். அதுதான் அவரது இருப்பின் முக்கிய நோக்கம். அது கூட அவருக்கு உள்ளுணர்வாகத்தான் தெரிகிறது. ஆகவே தேடலில் தீவிரமாக இருக்கிறார்.

இத்தருணத்தில் போய் அவர் தாய் தந்தையர் வீட்டுக்கு செல்வது சரியாக வராது என்பதை அவர் உள்ளுணர்வால் உணர்ந்திருப்பதாலேயே அவ்வாறு நடந்து கொள்கிறார் என்றுதான் எனக்கு படுகிறது. அதுவும் வேதபாடசாலையின் பண்டிட்டே அவனை டெஸ்ட் செய்யப் போய் அவன் ஞானத்தைக் கண்டு மிரள்வதும் ஏற்கனவே காட்டப்படுகிறது. சோ இதையெல்லாம் அடக்கியே வாசிக்கிறார். காரணம் அவரே அறிவார்.

(தேடுவோம்)

எபிசோட் - 72 (22.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(இரண்டுமே இன்னும் வரவில்லை. வந்தால் போடுகிறேன்)
கேட்டரர் வீட்டில் பிரியா ஆர்த்தியின் கல்யாணம் சம்பந்தமாக பேசிப் பார்க்கிறாள். பலவிதமாக தாஜா செய்து பார்க்கிறாள். கேட்டரர் முதலிலேயே தனது டிமாண்ட் எதுவும் இல்லை எனக் கூறிவிட, அவர் மனைவி மட்டும் வைர நெக்லசில் விடாப்பிடியாக இருக்கிறாள். பிரியா லேசாக வரதட்சணை தடை சட்டத்தை பேச்சில் இழுக்க அவள் இன்னும் சூடாகிறாள். தான் அவளை பயமுறுத்தவில்லை எனவும் எப்படியாவது தங்களாத்து ஆர்த்திக்கு வாழ்க்கை தரும்படியும் அப்படி செய்தால் பஹவான் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தரட்டும் எனவும் கூறுகிறாள்.

அது யார் சார் பஹவான், விஷ்ணுவா, சிவனா, விநாயகரா என சோவின் நண்பர் கேட்கிறார். சோ அவர்கள் முதற்கண் பஹவான் என சொல்லக் கூடாது, பகவான் என்றுதான் சொல்ல வேண்டும், அதே போல பலர் நமஷிவாய என உச்சரிப்பதால் வடமொழி சரியாக பேசப்படுகிறது என்னும் என்ணத்தில் உள்ளனர். அது தவறு, நமச்சிவாய என்றுதான் சொல்ல வேண்டும் எனவும் கூறுகிறார்.

பகவான் யார் என பார்த்தால், அவனே பிரும்மா, அவனே சிவன், அவனே விஷ்ணு என்றும் கூறப்படுகிறது. ஒரு வைதிக காரியத்தை பரமேஸ்வர பிரியர்த்தத்தம் எனக் கூறி ஆரம்பிக்கிறோம். அதை ஜனார்த்தன பிரியர்த்தத்தம் எனக் கூறி முடிக்கிறோம். பகவான் ரஜோகுணத்தால் சிருஷ்டி செய்கிறான், சாத்வீக குணத்தால் சிருஷ்டிகளை காப்பாற்றுகிறான், தமோ குணத்தால் எல்லாவற்றையும் அழிக்கிறான் என்று கூறுகிறார்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் கேட்டரர் மனைவியின் ஃபோன் வருகிறது. செல்லம்மாவிடம் அவள் பிரியா வந்து தங்களை சட்டத்தைக் காட்டி மிரட்டியதாகவும், தங்களுக்கும் வக்கீல்கள் பலரைத் தெரியும் என்றும், எது எப்படியானாலும் அவர்கள் வீட்டு சம்பந்தம் வேண்டாம் எனக் கூறி பேச்சை முறிக்கிறாள். மன்னி இப்படி செய்து விட்டாளே என ஆர்த்தி கண் கலங்க, செல்லம்மாவோ பிரியாவை கூப்பிட்டு விசாரிப்போம், கேட்டரர் மனைவி சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறிவிடுகிறாள்.

பாகவதர் வீட்டில் ராஜியும் சிவராமனும் தாங்கள் வாங்க வேண்டிய அபார்ட்மெண்டுக்கு முன் பணமாக தர காஞ்சீபுரம் வீட்டை விற்றுவிடலாம் எனக்கூற, பாகவதர் பேய்முழி முழிக்கிறார். வீடு ஏற்கனவே கைமீறிப் போனதை கூற மனமில்லாமல் வீட்டின் ஒரிஜினல் பத்திரம் வங்கி லாக்கரில் இருப்பதாகவும், சாவியை எங்கோ கைமறதியாக வைத்து விட்டதாகவும் கூறி சமாளிக்கிறார்.

என்ன சார் இப்படி பொய் மேலே பொய்யாக அடுக்கிக் கொண்டே போகிறாரே பாகவதர், இதுதான் அவர் சாத்திரம் அறிந்ததன் பலனா என சோவின் நண்பர் ஆவேசமாகக் கேட்க, சோ புன்முறுவலுடன் பாகவதர் செய்வது மிகப்பெரிய தவறு என்பதை ஒத்துக் கொள்கிறார். பொய் என்பது மகாபாவம் என்பதை அவர் அகத்தியர், கஸ்யபர், நாரதர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர் ஆகியோரை வைத்து ஒரு நிகழ்ச்சியை கூறுகிறார். அதில் வெவ்வேறு வகையான பாவங்கள் பட்டியலிடப்படுகின்றன. அவர்றில் மிகப்பெரிய பாவமாக எப்போதும் பொய் கூறுவது வகைபடுத்தப்படுகிறது.

இவை எல்லாம் தெரிந்த பாகவதர் ஏன் பொய் சொல்லணும் என நண்பர் விடாது கேட்க, சுய அறிவு இல்லாதவன் எவ்வளவு சாத்திரம் கற்றும் பிரயோசனமில்லை என ஆணித்தரமாகக் கூறுகிறார்.

இங்கே பாகவதர் மேலே என்ன செய்வது எனத் தெரியாது திணறுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

எல் கே said...

இதுக்கும் மைனஸ் ஓட்டா ???

dondu(#11168674346665545885) said...

இங்கே யாருக்கும் பிராமணனை பிடிக்காது, சோவை பிடிக்காது, டோண்டு ராகவனை பிடிக்கவே பிடிக்காது.

இன்று விடியற்காலை 2.59-க்கு பதிவை போட்டேன். அதை ட்விட்டர், தமிழிஸ், தமிழ்10, நம்குரல், யாழ்தேவி மற்றும் தமிழ்மணத்தில் இணைத்து விட்டு முதல் ஓட் போடலாம் என பார்த்தால் ஏற்கனவே ஒரு நண்பர் மைனஸ் ஓட் போட்டிருக்கிறார். நான் ஒரு ப்ளஸ் போட்டேன், இப்போ நீங்களும் ஒரு பிளஸ் போட்டிருக்கணும்.

என்ன கணக்கு சரியா போச்சா?

ஏதோ ஒரு பிரகஸ்பதி நான் எப்போடா பதிவு போடுவேன்னு காத்திருந்தா மாதிரி இருக்கு. அதுக்கு தூக்கம் போச்சு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது