4/10/2010

இட ஒதுக்கீடு திருநங்கைகளுக்குத்தான் உண்மையாகத் தேவை

பெண்கள் இட ஒதுக்கீடு என்னும் தேவையில்லாத கூத்து என்னும் எனது இப்பதிவுக்கு பின்னூட்டங்கள் வந்த வண்ணம் உள்ளன.

நான் எதிர்பார்த்தது போலவே இந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் பொலிடிகலி கரெக்ட்-ஆக பேசுவதாக எண்ணிக் கொண்டு பேசுகிறார்கள் என்றுதான் எனக்கு படுகிறது முதலில் சட்டத்தை கொண்டு வருவோம் பிறகு பார்ப்போம் என்றெல்லாம் பேசுபவர்கள், அப்படி சரியாக விவாதிக்காது சட்டத்தை கொண்டு வந்து அதன் பின்விளைவுகளை நீக்க முடியாமல பலமுறை அவதி பட்டதை நினைவுகூற மறுக்கின்றனர். என்னமோ இந்த சட்டத்தால் ஏழை எளிய மக்களைச் சேர்ந்த பெண்கள்தான் நன்மை பெறுவார்கள் என்ற மாயக் கற்பனையில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கு நான் பதில்களை போடுகையில் இப்பின்னூட்டமும் இட்டேன்.

“அது சரி, யாராவது இதில் இட ஒதுக்கீடு பெற வேண்டுமானால் திருநங்கைகள்தான் அதற்கு பொருத்தமானவர்கள். வேறு யாரும் இல்லை. அதை சொல்லிப் பாருங்கள், பெண்களும் அதை எதிர்த்து பொங்கி எழுவார்கள்”

பின்னூட்டத்தை ஒரு வேகத்தில் போட்டு விட்டேன். யோசிக்க, யோசிக்க அதன் தேவையின் உண்மை மனதை அறைகிறது. கழிப்பறைகளில் கூட அவர்களுக்கென தனியாக இல்லை, போகுமிடமெல்லாம் இழிவுபடுத்தப்படுகின்றனர். ஆகவே அவர்களை பார்லிமெண்ட் மெம்பர்கள் ஆக்கினால் அவர்களுக்கு மரியாதை கூடும் அல்லவா? சட்டங்களின் வரைவிலும் அவர்களது தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படும் அல்லவா.

இந்த யோசனைக்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்க இயலாது என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ராஜ்ய சபாவிலாவது அவர்களுக்கு பிரதிநிதித்துவம் தரலாமே. இப்போதைய சட்டப்படி வாக்காளர் பட்டியல்களில் கூட திருநங்கை என தனிப்பிரிவு இல்லை என்றுதான் நினைக்கிறேன். நிஜமாகவே அப்படித்தான் என்றால் அது எவ்வளவு கேவலம்?

தமிழக அரசு தொட்டில் திட்டம் கைவிடப்படும் பெண்குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது. அதே போல திருநங்கைகளுக்கும் திட்டம் வரலாம். அவர்களில் பலர் பிறக்கும்போது இது வெளிப்படையாக தெரியாமல் போய் பிறகுதான் அவர்களது நடத்தையிலிருந்து தெரிய வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு ஹாஸ்டல் மாதிரி ஏற்பாடு செய்யலாம். அவர்களது படிப்பு, வேலை ஆகிய விஷயங்களையும் கவனிக்கலாம். இவை எல்லாவற்றிலும் அவர்களது சுயமரியாதைக்கு பங்கம் வராமல் இருப்பது முக்கியம்.

இன்னும் பல விஷயங்களில் இது பற்றி யோசிக்கலாம். ஆனால் இதையெல்லாம் நிறைவேர்றிக் கொள்ள திருநங்கைகளுக்கு அரசியல் அதிகாரமும் தேவை. அதற்குத்தான் பாராளுமன்ற மற்றௌம் சட்டசபை தொகுதிகளுக்கு அவர்களுக்கு நிஜமாகவே இட ஒதுக்கீடு வேண்டும். அது எவ்வளவு என்பதை பேசி தீர்த்து கொல்ளலாம். அவ்வாறு வருபவர்கள் மந்திரி சபையிலும் இடம் பெற வேண்டும்.

இது பற்றி இன்றைய பதிவர் மீட்டிங்கில் பேசலாம் என்றிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: இது எனது இந்த வலைப்பூவின் 999-வது பதிவு. பதிவு எண் ஆயிரம் பிழைத்துக் கிடந்தால் பதிவர் மீட்டிங் பற்றி இருக்கும்.

12 comments:

Anonymous said...

Yes. u r correct.
They are the real deserving ones and those who have it now are the eunuchs of modern India.

dondu(#11168674346665545885) said...

2010/4/10 Tamilish Support


Hi Dondu,

Congrats!

Your story titled 'இட ஒதுக்கீடு திருநங்கைகளுக்குத்தான் உண்மையாகத் தேவை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th April 2010 06:00:02 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/222500

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
Thanks Tamilish,
Dondu N. Raghavan

smart said...

ஆனால் எந்த ஓதிக்கீடும் நிர்வாகத்திலும், தலைமை இடத்திலும் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் ஏதோ ஒரு விதத்தில் தகுதியில்லாதவர்கள் அந்த இடத்தை அழிக்க நேரும்.. இங்கே அவர்களை எதிர்க்கவில்லை திறமையிருந்தால் பொது வழியில் உயரலாம்.

ஏனைய துறையான கல்வியிலும், மருத்துவம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் ஓதிக்கீடுதரலாம், நலிவடைந்த பெண்கள் உயரும் வரைமட்டும் தான் இத்தகைய துறைகளில் பெண்களுக்கு ஒதிக்கீடு வழங்கலாம். ஆனால் திருநங்கைகளுக்கு வரம்புகளற்ற ஒதிக்கீடு இத்தகைய துறைகளில் தரலாம்.

Sundararajan P said...

பதிவுலகில் நான் படித்த பதிவுகள் மிகச்சிலவே. இலக்கியம், சினிமா, சமையல், கவிதை போன்ற பல்வேறு துறைகளில் எனக்கு போதுமான அறிவோ, ஆர்வமோ இல்லை என்பதால் பல பதிவுகளை நான் படிப்பதே இல்லை.

திரு "டோண்டு" ராகவன் அவர்களின் பதிவுகளையும் கூட நான் படித்ததில்லை. படிக்கத் தோன்றியதுமில்லை.

ஆனால் நேரில் பேசிய சில சந்தர்ப்பங்களில், இந்த பெரியவருடன் நாம் கருத்து உடன்பாடு ஏற்படும் சந்தர்ப்பமே வாய்க்காதா என்று ஏங்கியதும் உண்டு.

10-04-2010 அன்று நடந்த பதிவர் சந்திப்பில் அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்தப்பதிவை படித்தேன்.

இந்தப் பதிவின் கருத்தை நான் ஓரளவு ஏற்கிறேன். இட ஒதுக்கீடு திருநங்கைகளுக்கும் தேவை என்பது என் கருத்து. ஆனால் திருநங்கைகளுக்குத்தான் இடஒதுக்கீடு தேவை என்பது அவருடைய கருத்து.

திருநங்கைகளின் தற்போதைய அவல நிலை குறித்து அவரது கருத்துகள் முழுவதும் ஏற்கத் தகுந்ததே. அவை தீர்க்கப்பட வேண்டும், அதற்கு திருநங்கைகள் அரசியல்ரீதியாக பலம் பெற வேண்டும் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன். திருநங்கைகளின் பாலியல் சுதந்திரம் குறித்து நான் என் கருத்தை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறேன்.


ஆனால் திருநங்கை என்று நம்பப்படும் அனைவரும் திருநங்கைகள் அல்ல. லிவிங்ஸ்மைல் வித்யாவின் இந்தப்பதிவை படிக்கவும்:

பாலினச்சிறுபான்மையினருக்கான உரிமை குறித்து திரு "டோண்டு" ராகவன் பேசுவது மகிழ்ச்சியை அளித்தாலும், அதில் தோன்றும் பெண்கள் ஒதுக்கீட்டுக்கான எதிர்ப்பு சலிப்பை ஏற்படுத்துகிறது.

தற்போது நிலவும் சட்டங்களின்படி திருநங்கைகள் பெண்களாக கருதப்படுகின்றனர், அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தபோதிலும்.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் திரு. "டோண்டு" ராகவன், திருநங்கைகளுக்கான தனி இட ஒதுக்கீ்ட்டுக்காக வாதிடுகிறார்.

ஆனால் இந்த விவகாரத்தில் திருநங்கைகள் யாரிடமாவது இது குறித்து அவர் விவாதம் நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் நமக்குத் தெரியாத, புரியாத விவகாரங்களில் கருத்து தெரிவிக்கும் முன்னர் தொடர்புடையவர்களை ஆலோசிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

திருநங்கைகளில் பலரும் தங்களை பெண்களாகவே பாவிக்கின்றனர். மற்றவர்களும் தங்களை அவ்வாறே நடத்த வேண்டும் என்றும் விரும்புகின்றனர். இந்நிலையில் தேர்தலில் அவர்கள் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்று திருநங்கைகள்தான் முடிவெடுக்க வேண்டும். திரு "டோண்டு" ராகவனும், தமிழ் வலைபதிவர்களும் அல்ல!

வட இந்தியாவில் சில திருநங்கைகள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றனர். சிலர் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருக்கின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் திருநங்கைகள் சில அரசியல்கட்சிகளை நாடி தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பை கோரியதாக தெரிகிறது.

இந்நிலையில் திருநங்கைகளின் தேர்தல் பங்களிப்பு அல்லது இட ஒதுக்கீடு குறித்து திருநங்கைகள் கூடி ஆலோசித்து முடிவெடுப்பதும், அதற்கு தேவையான உதவிகளை மற்றவர்கள் செய்வதுமே சரியாக இருக்கும்.


இதற்கான முயற்சிகளில் திரு "டோண்டு" ராகவன் இறங்கினால் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

ப.கந்தசாமி said...

வெளிநாடுகளில் இவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்ற குறிப்பு தந்தால் நலமாக இருக்கும். நம் ஊருக்கு பொருந்தினால், அதை நாமும் பின்பற்றலாம்.

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சுந்தர்ராஜன் அவர்களே. இதுதான் நீங்கள் என் பதிவுகளில் இடும் முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன்.

நேற்றைய சந்திப்பின்போது எனது பதிவில் பெண்களுக்கு இட ஒதுக்கீடே தேவையில்லை என குறிப்பிடுவதாக தொனி இருந்தது என நீங்கள் கூறியதற்கு, தொனியெல்லாம் இல்லை நேரடியாகவே அக்கருத்து கூறப்பட்டது என்று நான் எனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்தேன்.

திருநங்கைகளிடம் நான் இது பற்றி விவாதித்ததில்லை. அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கருத்து ஆனால் என்னிடம் எப்போதுமே உண்டு. கண்டிப்பாக திருநங்கைகள் என்னுடன் இது பற்றி விவாதிக்கலாம். அதற்கு முதற்படியாக இப்பதிவில் கூட அதை விவாதிக்கலாம். அவர்கள் விரும்பினால் இதை முன்னே கொண்டு செல்லும் யுக்திகளை கூட விவாதிக்கலாம். உங்கள் ஒத்துழைப்பு வேறு இருக்கவே இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.

முன்பே ஒருமுறை நாம் நேரில் சந்தித்தபோது எனது பல கருத்துகளிலிருந்து மாறுபடுவதாக கோடி காட்டியிருக்கிறீர்கள். உலகமயமாக்கமும் அதில் வருகிறது என நினைக்கிறேன். நான் சோ அவர்கள் கூறும் பல கருத்துக்கலை ஆதரிப்பதும் அதில் அடங்கும் என நினைக்கிறேன். ஈழத்தமிழர் விவகாரம், இஸ்ரேல் பாலஸ்தீனிய பிரச்சினை முதலிய விஷயங்களிலும் மாற்று கருத்து கண்டிப்பாக இருக்கும் என எனக்கு தோன்றுகிறது.

அவற்றையெல்லாம் விவாதிக்கலாமே, என்ன பிரச்சினை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sundararajan P said...

மரியாதைக்குரிய திரு. "டோண்டு" ராகவன் அவர்களுக்கு,

என் பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டிருந்த இரு பதிவுகளை எனக்கு இணைக்கத்தெரியவில்லை என நினைக்கிறேன். இப்போது முயற்சிக்கிறேன்.

http://www.makkal-sattam.org/2008/08/blog-post.html

http://livingsmile.blogspot.com/2010/03/track-queen.html

விவாதங்கள் வரவேற்க வேண்டிய அம்சம்தான். எனது தொழிலும்கூட அதுதான்.

ஆனால் தற்போதைய காலச்சூழலில் நீதிமன்றம் நீண்ட விடுமுறைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பல வேலைகளை செய்துமுடிக்க வேண்டியிருப்பதால் இணையத்தில் அதிக நேரத்தை செலவழிக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

Anonymous said...

இது பற்றி இன்றைய பதிவர் மீட்டிங்கில் பேசலாம் என்றிருக்கிறேன்.

-நான் இதை பத்தி டில்லில மினிஸ்டர்ட்ட் பேசறேன்
-kaudamani in suryan.
பதிவு போட மாசம் 500 ரூபாய் என்று கேட்டாலே 99% கடை காலியாகிடும். இதுக்கு இவ்லோ பில்டப்பா? வெட்டி பேச்சு பேச என்னல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா நம்ம ஆளுங்க?

Unknown said...

வரவேற்கபடவேண்டிய கருத்து. அதே நேரம் டோண்டு அவர்கள் பெண்களுக்கு இட ஒதுக்கீடை எதிர்க்கும் வேளையில் இதை மட்டும் ஏன் ஆதரிக்கின்றார் என்று சொல்ல வேண்டும்.. பெண்கள் பொது கோட்டாவில் வரலாம் என்பது உங்கள் வாதம்.. திருநங்கைகளும் பொது கோட்டாவில் வரலாமே? .. நீங்கள் திரு நங்கைகளுக்கு சொல்லபோகும் பதில் பெருமளவில் பெண்களுக்கும் ஒத்துப்போகும்.. !

dondu(#11168674346665545885) said...

//பெண்கள் பொது கோட்டாவில் வரலாம் என்பது உங்கள் வாதம்.. திருநங்கைகளும் பொது கோட்டாவில் வரலாமே? .. நீங்கள் திரு நங்கைகளுக்கு சொல்லபோகும் பதில் பெருமளவில் பெண்களுக்கும் ஒத்துப்போகும்.. !//
பெண்களைவிட பல மடங்கு அதிகம் ஒடுக்கப்படுபவர்கள் திருநங்கைகள். பெண்களுக்காவது குடும்பம் என இருக்கிறது.

முக்கால்வாசி திருநங்கைகள் குடும்பத்தாரேலேயே ஒதுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள். அவர்களுக்கும் பெண்களுக்கும் ஒரே ஸ்டேடஸ் எனக்கூற எப்படி மனம் வருகிறது உங்களுக்கு?

ஆகவே அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதே நலம். ஆனால் இதற்கும் இனிமேல் வரப்போகும் மற்றவகை இட ஒதுக்கீடுகளுக்கும் கிரீமி லேயர் தத்துவம் அமுலாக்கப்பட வேண்டும். அது பற்றி பிறகு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

டோண்டு அவர்களே , தவறாக புரிந்துக்கொள்ளவேண்டம் .

//பெண்களுக்கும் ஒரே ஸ்டேடஸ் எனக்கூற எப்படி மனம் வருகிறது உங்களுக்கு//

நிச்சயமாக அப்படி நினைக்கவில்லை.. தயவு செய்து திசை திரும்பிடவேண்டம் . திருநங்கைகள் பற்றிய உங்கள் கருத்தோடு முழுமையாக ஒத்துபோகிறேன் . நான் சொல்ல வந்தது வேறு. திருநங்கைகளுக்கும் ஒதுக்கிடு வேண்டும் என்பது தான் என் கருத்தும்

விரிவாக சொல்லவேண்டும் என்றால்.

பெண்கள் பொது கோட்டாவில் வரலாம் என்று நீங்கள் சொல்லும் போது , திருநங்கைகளும் பொது கோட்டாவில் வரலாம் என்பதே என் வாதம்
பெண்கள் தனி கோட்டாவில் வந்தாலும் , அவர்களை முன்வைத்து ஆண்களே இயக்குவார்கள் என்ற உங்களின் வாதம் திருநங்கைகளுக்கும் பொருந்தும் அல்லவா என்பதே நான் கூற வந்தது

எந்தெந்த காரணங்களுக்காக பெண்களுக்கு வேண்டாம் என்று சொல்கின்றிர்களோ அதே காரணங்கள் திருநங்கைகளுக்கும் பொருந்துமே என்பதே என் வாதம்.

மிகச்சரியாக திருநங்கைகளுக்கு வேண்டும் என்று சொல்லும் நீங்கள் பெண்களுக்கு மட்டும் ஏன் வேண்டாம் என சொல்கின்றீர் என்று புரிந்துக்கொள்ளவே இந்த கேள்வி எழுப்பினேன்

dondu(#11168674346665545885) said...

//மிகச்சரியாக திருநங்கைகளுக்கு வேண்டும் என்று சொல்லும் நீங்கள் பெண்களுக்கு மட்டும் ஏன் வேண்டாம் என சொல்கின்றீர் என்று புரிந்துக்கொள்ளவே இந்த கேள்வி எழுப்பினேன்//

ஒரு தனிக்குழுவினராக ஒதுக்கப்பட்டவர்கள் திருநங்கைகள். அவர்களில் பெரும்பான்மையினருக்கு சொந்த குடும்பமே இல்லை. திருநங்கை என்னும் ஹோதாவில் ஓட்டுக்கள் கூட இல்லை. சுதந்திரம் பெற்ற சமயத்தில் தலித்துகள் பழங்குடியினர் இருந்த தாழ்த்தப்பட்ட நிலையை விட கீழான நிலையில் அவர்கள் உள்ளனர்.

ஒரு திருநங்கையை ஒரு ஆண் அல்லது பெண் அரசியல்வாதி தனக்கு பினாமியாக தேர்ந்தெடுக்கும் நிலை இப்போது அபூர்வம். அவர்களுடன் தங்களுக்கு சம்பந்தம் ஏதேனும் ஒரு வழியில் உண்டு என்பதை கூட அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

தங்கள் இட ஒதுக்கீட்டுக்காக போராடும் பெண்கள் திருநங்கைகளின் இட ஒதுக்கீட்டை நிச்சயம் எதிர்ப்பார்கள். ஏன், இப்பதிவிலேயே பெண் பதிவர்கள் எவரும் பின்னூட்டமிடவில்லையே. இதை என்னவென்று புரிந்து கொள்வது?

ஆகவேதான் இந்த கோரிக்கையை நான் எழுப்பினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது