4/07/2010

தியாகம் versus அசட்டுத் தியாகம்

தியாகம் செய்வதுதான் அல்லாவுக்கு பிடித்தமான செயல் என்பது ஒரு பிரசித்தி பெற்ற இசுலாமிய சொலவடை. அதை தேனினும் இனிய உருதுவில் குர்பானி என குறிப்பிடுவார்கள்.

சமீபத்தில் 1980-ல் வந்த உருது படம் குர்பானியில் வரும் குர்பானி குர்பானி குர்பானி, அல்லா கோ ப்யாரீ ஹை குர்பானி என்னும் இந்த இனிய பாடலைக் கேளுங்கள். கதை கூட ஒரு நண்பன் இன்னொரு நண்பனுக்காக செய்யும் உயிர்த்தியாகத்தில்தான் முடிகிறது.

தியாகத்தின் பெருமை பல கலாசாரங்களிலும் பேசப்பட்டு வருகிறது. ஹாரி பாட்டர் கதையே தியாகத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அவனைக் காப்பாற்ற அவன் அன்னை கைவசம் மந்திரக்கோல் இல்லாத நிலையில் கூட வோல்தமோற் எதிரில் நின்று அவன் உயிருக்காக இறைஞ்சுகிறாள். தன் உயிரையும் இழக்கிறாள். அடுத்த நொடியில் ஒரு வயது குழந்தை ஹாரி பாட்டரை நோக்கி வோல்தமோற் மந்திரக்கோலை நீட்டி குழந்தை சாவதற்கான மந்திரம் சொல்ல, அது அவனையே பீடிக்கிறது. உயிர் ஒட்டிக் கொண்டிருந்தாலும் மிக க்ஷீண நிலையை அடைகிறான். பிறகுதான் அவனுக்கு தெரிகிறது, ஹாரியின் அன்னையின் உயிர்த்தியாகம் குழந்தைக்கு கவசமாக அமைந்தது என்று. அதை பற்றி பல முறை அலுப்புடன் பேசி இந்த மிக பழமையான மந்திரசக்தியை அலட்சியப்படுத்தியதற்கு நொந்து போகிறான்.

ஏழாவது புத்தகத்தில் ஹாக்வேர்ட்ஸ் பள்ளியில் வோல்தமோறுக்கு எதிரான கடைசி போரில் அத்தனை நல்ல மந்திரவாதிகளின் சார்பாகவும் ஹாரி தன்னுயிரையே பயணம் வைக்கிறான். கதையில் உணர்ச்சிகரமான கட்டங்களில் முக்கியமானது இதுவே. ஆனால் அவனும் இறக்கவில்லை, அதே சமயம் அவன் செய்த தியாகம் பள்ளியில் உள்ள அனைவரையுமே காக்கிறது. அந்த கடைசி சண்டையில் அவன் வோல்தமோறுக்கு இதை எடுத்துக் கூற, அப்போதும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படியே புரிந்து கொண்டிருந்தாலும் அது அவனைப் பொருத்தவரையில் டூ லேட் என்பதுதான் நிஜம். தன் பெயர் கெட்டாலும் பரவாயில்லை என செயல்பட்ட ஸ்னேப் தியாகத்துக்கு இன்னொரு உதாரணம்.

இன்று ஜூனியர் விகடனில் தங்கள் ஆசிரியரின் உடல்நலம் வேண்டி அவரது மாணவர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு பிரார்த்தனை நிறைவேற்றியதை பற்றிய ஒரு அருமையான கட்டுரை வந்துள்ளது (“அன்புடையார் எல்லாம்”, ஜூனியர் விகடன் 11.04.10 இதழ், பக்கம் 29). ஆசிரியரும் குணமடைந்து விட்டார், மருத்துவர்களே அதிசயிக்கும் அளவுக்கு.

இம்மாதிரியான தியாகங்கள் பிரதிபலன் ஏதும் எதிர்பார்த்து செய்யப்படுவதில்லை. மனப்பூர்வமாக சுய விருப்பத்துடன் செய்யப்படுகின்றன. ஆனால் ஒன்று ரொம்ப முக்கியம். இத்தியாகத்தை சகட்டுமேனிக்கு செய்ய முடியாது. அதாவது கோலங்கள் அபி, தொல்காப்பியன்கள் செய்தது போல. அவை அசட்டுத் தியாகத்தின் கீழ் வரும். அம்மாதிரி ஏமாந்த சோணகிரிகள் செய்யும் தியாகத்தின் பலனை பெறுபவர்களோ என்னமோ இது தங்களது உரிமை என்ற ரேஞ்சுக்கு நடந்து கொள்வார்கள்.

வேறு வழியில்லை என்னும்போதுதான் தியாகம் செய்ய வேண்டும். அதற்கான நல்ல மனநிலையும் முக்கியமே.

பல படங்களை/சீரியல்களை இம்மாதிரி அசட்டு தியாகங்கள் வருகின்றன என்ற ஒரு காரணத்துக்காகவே நான் பார்க்காமல் இருந்திருக்கிறேன். சுமைதாங்கி, குலவிளக்கு, தியாகம், ஆறிலிருந்து அறுபது வரை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதிலும் முக்கியமாக குடும்பத்தின் மூத்த மகனோ மகளோ தனக்கென ஏதும் செய்து கொள்ளாது தம்பி தங்கைகளுக்காவே உழைப்பதாக காட்டினாலே எனக்கு டைரக்டர் மேல் கோபம் பற்றிக் கொண்டு வரும். அரங்கேற்றம் படத்தையே எடுத்து கொள்வோமே. மூத்த பெண் உயிரை கொடுத்து வேலை பார்த்து, விபசாரம் கூட செய்து குடும்பத்துக்காக பணம் அனுப்ப, அவள் பெற்றோர் வெட்கமேயில்லாமல் ஒரு புது குழந்தையை உருவாக்கும் முயற்சியில் இருப்பார்கள். கடைசியில் காரியம் எல்லாம் முடிந்ததும் மூத்த பெண்ணை பைத்தியமாக வைத்து விடுவார்கள்.

இம்மாதிரி தருணங்களில் எல்லாம் எனது கோபம் முழுக்க முழுக்க அந்த அசட்டு தியாகிகள் மேல்தான்.

ஆக, நான் கூற நினைப்பது? தியாகம் என்பது டீஃபால்ட்டாக தவிர்க்க வேண்டிய விஷயம். அப்படியே செய்ய நினைத்தாலும் யாருக்காக தியாகம் செய்கிறோமோ அவர்கள் அதற்கு லாயக்கானவர்களாக இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

virutcham said...

வலிய போய் எதோ தான் இல்லேனா எதுவுமு அசையாதுன்னு நினச்சுகிட்டு தியாகம் செய்து விட்டு பின்னால் செய்ததையே மனசில் வைத்து கொண்டு பிரதி பலன் எதிர்பார்த்து ஏமாந்து போகும் தியாகங்கள் அதற்கான நியாங்களையே இழக்கின்றன.
பெரிசா தியாகம்னு வேண்டாம். சின்ன சின்ன விஷயங்களிலே கூட பலரும் தேவை அறியாது ஓடி போய் உதவி செய்து விட்டு, பின்னால் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் உறவையே கேள்விகுரியதா ஆக்கி கொண்டு விடுவதை நாம் வீட்டிலும் வெளியிலும் மிகச் சாதாரணமாக பார்க்கமுடிகிறது.

http://www.virutcham.com

கிருஷ்ண மூர்த்தி S said...

தியாகம் என்பது, தானே மனமுவந்து எந்தப் பலனையும் எதிர்பாராமல், செய்யப்படுவது. அப்படியிருக்கையில், அதில் அசட்டுத்தனம், அசட்டுத் தியாகம் என்று எப்படி வரும்?

தவிர தியாகம் என்பது தன்னிடமுள்ளதைக் கொடுப்பது! பிற உயிரை எடுப்பது அல்ல! இதுவும் கூட இடம் பொருள் ஏவலைப் பொறுத்து மாறுபடத்தான் செய்கிறது.

வலைஞன் said...

இப்போதைக்கு நான் செய்யற தியாகம் உங்களோட இந்த மொக்க பதிவை படிச்சு பின்னூட்டம் போடறது தான்.
இது எந்தப் பிரிவில் அடங்கும்?
:-))

dondu(#11168674346665545885) said...

@வலைஞன்
நீங்கள் செய்வது எதிர்மொக்கை என்னும் பெயரில் அன்பாக அழைக்கப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

R.Gopi said...

டோண்டு சார்...

இங்க வெறும் தியாகத்தை விட “அசட்டு தியாகம்” தான் பெரிய அளவில் பேசப்படுகிறது......

வஜ்ரா said...

எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்.
இந்த ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற படங்களில் வரும் தியாகி அண்ணன் மாதிரி ஆளெல்லாம் உண்மையிலேயே இருப்பாங்களா இல்லை இவங்க சினிமாக்காக இப்படி மிகைப்படுத்துகிறார்களா ?

R.Gopi said...

//வஜ்ரா said...
எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்.
இந்த ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற படங்களில் வரும் தியாகி அண்ணன் மாதிரி ஆளெல்லாம் உண்மையிலேயே இருப்பாங்களா இல்லை இவங்க சினிமாக்காக இப்படி மிகைப்படுத்துகிறார்களா ?//

கண்டிப்பாக இருக்காங்க வஜ்ரா.. நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன். எல்லா சினிமாவின் கதையோ, கதைக்கான கருவோ கற்பனையில் உதிப்பதில்லை... பெரும்பான்மையான கதைக்கான கரு, நடைமுறை வாழ்விலிருந்தே எடுக்கப்பட்டு சினிமாக உருப்பெறுகிறது..

பழமைபேசி said...

வணக்கம். நலமா??

//இம்மாதிரி தருணங்களில் எல்லாம் எனது கோபம் முழுக்க முழுக்க அந்த அசட்டு தியாகிகள் மேல்தான். //

இதே உணர்வுதானுங்க ஐயா.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது