1/08/2009

டோண்டு பதில்கள் 08.01.2009

அனானி (120 கேள்விகள் கேட்டவர்):
51. சென்னை உஸ்மான் சாலையில்தான் தங்க நகைக் கடைகள் இருப்பதன் காரணம் யாது?
பதில்: தி.நகரில் மிக முக்கியமான தெரு உஸ்மான் சாலை. தி.நகர் பஸ்கள் கிட்டத்தட்ட எல்லாமே அத்தெரு வழியாகத்தான் போகும் வரும். மேலும் தி.நகர் சற்றே வசதியானவர்கள் வசிக்கும் இடம். இம்மாதிரி பல காரண்ங்கள் ஒன்று சேர்ந்து இவ்வாறு ஆயிற்று.

52. இலங்கையில் உள்ள இனப்பிரச்னை எப்போது முடியும்?
பதில்: தெரியவில்லை.சீக்கிரம் இது முடிவுக்கு வரவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.

53. கலைஞர், ஜெயலலிதா இவர்களின் பேச்சு,எழுத்து திறமைகளை ஒப்பிடுக?
பதில்: இரண்டிலும் அதிகம் சோபிப்பவர் கலைஞர்.

54. சென்னை கராத்தே தியாகராஜன் எப்படி உள்ளார்?
பதில்: காங்கிரசில் சௌக்கியமாக இருக்கிறார். கடைசியாக நான் அவரைப்ற்றி அறிந்த சேதிக்கு இந்த உரலுக்கு செல்லவும்.

55. எல்லோர் பிள்ளைகளும் பெற்றோர் சொல்வதைக் கேட்காமல் ஊதாரித்தனமாகச் செலவு செய்கிறார்களே?
பதில்: "இக்காலப் பசங்களுக்கு சொகுசே பிரதானமாகி விட்டது, சுத்தமா மரியாதையே இல்லை. அரசைத் துச்சமாக நினைக்கிறார்கள். தேகப் பயிற்சி செய்வதை விட வாய்க்கு அதிகப் பயிற்சி கொடுத்து வம்பு பேசவே ஆசைப்படுகிறார்கள். குழந்தைகள் கொடுங்கோலர்களாகி விட்டார்கள். வீட்டுக்கு அடங்குவதில்லை. தாய் தந்தையரை எதிர்த்து பேசுகின்றனர். பெரியவர்கள் வந்தால் மரியாதையாக எழுந்து நிற்பதையே விட்டு விட்டனர். நாசுக்கிலாமல் வாயில் உணவை அடைத்துக் கொள்கின்றனர். ஆசிரியர்களிடம் அடாவடி செய்கின்றனர்."
மேலே இருப்பது சமீபத்தில் கி.மு. 399-ல் காலமான சாக்ரட்டீஸ் கூறியதாக இப்போது அறியப்படுகிறது. இல்லை, இது சாக்ரட்டீஸ் சொன்னது இல்லை என்று சிலர் வாது புரிய தயாராகலாம். சரி, சாக்ரட்டீஸ் சொல்லவில்லை. யாரோ பொல்லோனியஸ் கூறியிருப்பார், அரிஸ்டாட்டிலாகக் கூட இருக்கலாம். அதை விடுங்கள். நான் சொல்ல வருவது வேறு.
அந்தக் காலம் போல வருமோ என்று பெரிசுகள் என்னைப் போன்ற இளைஞர்களிடம் இப்போதும் பெருமூச்சு விடும்போது, நான் அவர்களிடம் சாக்ரட்டீஸ் கூறியதாகச் சொல்லப்படுவதை பெயர் குறிப்பிடாமல் கூற, அவர்களும் ஆவலுடன் யார் சொன்னது என்று கேட்க நான் சாக்ரட்டீஸ் கூறியது என்று போட்டு உடைப்பேன். நேற்றுக் கூட அறுபது வயது இளைஞனாகிய இந்த டோண்டு ராகவன், 55 வயசான ஒரு பெரிசிடம் இதைக் கூற அவர் ரொம்பவே நொந்துப் போனார்.:)))
"ஒவ்வொரு தலைமுறையும் தான்தான் செக்ஸைப் பற்றிக் கண்டுபிடித்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறது" என்று ஹர்ஷர் காலத்தில் வாழ்ந்த வாத்சாயனர் வேறு கூறியிருக்கிறார். அக்கால ஆசிரியர்கள் போல இக்காலத்தில் எங்கு கிடைக்கிறார்கள் என்று சமீபத்தில் 1930-ல் வெளி வந்த தனது "ஏட்டிக்கு போட்டி" புத்தகத்தில் பேராசிரியர் கல்கி பொருமியிருப்பார். இதுவும் மேலும் நான் இந்த விஷயம் பற்றி எழுதியதைப் பார்க்க இந்த உரலுக்கு செல்லவும்.

56. துப்புரவுப் பணிகளைத் தனியார்மயம் ஒப்படைககப்பட்ட பின், அது எப்படி உள்ளது?
பதில்: ஆரம்ப சூரத்தனம் எல்லாம் போயே போயிந்தி. மேலும் நகரசபை துப்புரவு தொழிலாளிகள் வேடிக்கை பார்க்க எங்கள் ஏரியாவில் தனியார் ஊழியர்கள்தான் வேலை செய்கிறார்கள். சம்பளம் என்னவோ முன்னவருக்குத்தான் அதிகம்.

57. சேலம் இரயில் கோட்டம் முழுமையாய் செயல்படுகிறதா?
பதில்: எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது.

58. நல்ல நண்பனை எப்படி கண்டு கொள்வது?
பதில்: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. இதைவிட தெளிவாக யாரேனும் கூற இயலுமா?

59. செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி 3 ஜி-ல் உண்டா?
பதில்: தெரியவில்லையே. அப்படியே வந்தாலும் போனை எங்கே வைத்து கொண்டு பேசுவது? இந்தப் பதிவர் மாதிரியா? ரொம்ப தமாஷா இருக்கும். இல்லை அப்படியெல்லாம் சர்க்கஸ் செய்து போனை பிடிக்க வேண்டாம் என நேற்று (05.01.2009) பங்களூரில் என்னை சந்தித்த பதிவர் ஒருவர் கூறினார். வந்த பதிவர்களில் யார் அதை கூறியது என்பதை மறந்து விட்டேன். இக்கேள்விக்கு மேலும் பதிலளிக்க அவரையே அழைக்கிறேன்.

60. பகலில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை யாரும் கண்டு கொள்வதில்லயே?
பதில்: அம்மாதிரியான விளக்குகளுக்கு டைமரை செட் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் அம்மாதிரி செட்டிங்குகள் எல்லாம் ஆற்காட்டார் மின்சாரத்திடம் செல்லாது. பவர்கட் காரணமாக அந்த டைமர்கள் சரியான நேரத்தில் ட்ரிப் ஆகாது. விளைவு நீங்கள் சொல்வது போலத்தான்.

61. மாணவர்களுக்கு தமிழக அரசால், வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தில் பயனாளிகளில் வசதி படைத்தவர்களும் உள்ளனரே?
பதில்: வசதி இல்லாதவர்களுக்கு என்று வைத்தாலும் பொய்யாக சான்றிதழ் கொண்டு வருவார்களே.

62.எதிர்க்கட்சித் தலைவர்கள் சோர்ந்து போயுள்ளனரா, தேர்தல் முடிவுகளை பார்த்து?
பதில்: அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் அம்மாதிரி எல்லாம் சோர்ந்து போகக்கூடாது. என்ன செய்வது அப்படியெல்லாம் புத்திசாலிகள் அங்கில்லை என்கிறீர்களா? யோசிக்க வேண்டிய விஷயம் அது.

63.குடி குடியைக் கெடுக்கும்,தெரிந்த பிறகும் டாஸ்மார்க்கே கதி என இருப்போரை?
பதில்: குடி குடியைக் கெடுக்கும், புகை பிடித்தால் புற்று நோய் வரும். சூதாட்டத்தில் ஈடுபட்டால் குடும்பம் திவாலாகும் என்றெல்லாம் புத்தகத்தில் படித்த ஒருவன் உடனே நிறுத்தி விட்டானாம், புத்தகம் படிப்பதை.

64. வில்லிசைக் கலிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லிசை கேட்டு இருக்கிறீர்களா? எப்படி?
பதில்: ஆகா கேட்டிருக்கிறேன். அற்புதமாக பாடுவார். அவருடைய குழு அவருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குகிறது.

65. எம்.எல்.ஏ./எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியால் பெரும் பங்கு லாபம் யாருக்கு?
பதில்: நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட திட்டம். ஆனால் என்ன செய்வது? எல்லோருமே சோ மாதிரி இல்லையே.

66. பெற்றோருக்குப் படியாத பிள்ளைகளின் எண்ணிக்கை கூடி கொண்டே பொகிறதே? பெண்பிள்ளைகளும் இப்படி என்றால்?
பதில்: கேள்வி எண் 55 பார்க்கவும்.

67. நக்சலைட்டுகள் திருந்தி விட்டார்களா?
பதில்: நாய் வால் நிமிர்ந்ததா?

68.அதிமுக காளிமுத்து-ராபின் மெயின் கேசு என்னாச்சு?
பதில்: காளிமுத்து இறந்து விட்டார். கேசும் அவ்வளவுதான் என நினைக்கிறேன். சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள் மேலே கூறலாம்.

69. அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை போட்டி போட்டு வழங்கும் அரசியல் கட்சிகள் தேர்தலை மனதில் வைத்தா?
பதில்: வேறு என்ன காரணம் இருக்க இயலும் என்கிறீர்கள்? ஏதேனும் வேண்டுதலா பாழாய்ப் போகிறது?

70. இதிலே எது சரி? அ)மன்னிக்கிறவன் கடவுள், மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன் ஆ) மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்
பதில்: தவறு செய்வது மனிதவியல்பு, மன்னிப்பது இறையியல்பு என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன். இது என்ன புதுசா இருக்கு?

71. இந்திரா காந்தி அம்மையாரால் கொண்டுவரப் பட்ட நிகழ்வு - எமர்ஜென்சி மீண்டும் வருமா?
பதில்: நிஜமான வெளி உள் நெருக்கடிகள் இருந்தால் வர இயலும். அல்லது சர்வாதிகார ஆட்சி அமைய வேண்டும். மற்றப்படி அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கெல்லாம் அது சாதாரணமாக வராது.முன்னொரு மறை வந்ததும் சர்வாதிகாரி அப்போது ஆட்சியில் இருந்ததால்தான்.

72.பொதுவாய் தனியார் மருந்தகங்கள் -ரமணா பாணி சுருட்டல் தொடர்கிறதே?
பதில்: கவலையளிக்கும் விஷயம் இது.

73. தி.மு.க.வுடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் கருத்து வேறுபாடு காரணாமாய் பிரிந்தனவா? இல்லை திமுகவின் செல்வாக்கை பார்த்தா?
பதில்: கருத்து வேறுபாடுதான். ஒரு கட்சியே கொள்ளையடிப்பது நியாயமில்லைதானே. கூட்டாளி கட்சிகள் வாயில் விரலை வைத்து கொண்டிருக்க வேண்டுமா, என்ற கருத்து வேறுபாடு.

74. விற்கப்படும் மினரல் வாட்டர் எல்லாம் தரமுள்ளதா? அரசு என்ன செய்கிறது?
பதில்: பல மினரல் தண்ணீர் கம்பெனிகள் தரக்குறைவாகத்தான் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் தருவதில் குறையில்லாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

75.தொலைக்காட்சிகளில் வர்ணிப்பாளர்களின் அழகு தமிழை கேட்கும் போது - தேசியக் கவி பாரதி இருந்தால்?
பதில்: இன்பத் தேள் வந்து பாயுது காதினிலே எனக்கூறியிருப்பார்!
( உங்களது மீதி கேள்விகள் அடுத்த பதிவுகளில்தான், மன்னிக்கவும்)


ஸ்ரீராமன்:
1. ஸ்ரீராமபிரானின் பக்தன் அனுமனின் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு கூடி கொண்டே வருகிறதே பார்த்தீர்களா?
பதில்: மகிழ்ச்சி அடைய வேண்டிய நல்ல விஷயம்தானே.

2. கம்ப ராமயணத்தில் வரும் மானிட கற்பு, தெய்வீக கற்பு, அரக்க கற்பு பற்றி விளக்கம் பக்தி பிரசங்கத்தில் கேட்டுள்ளிர்களா?
பதில்: கேட்டதில்லை. ஆனால் அருச்சுனன் தன் தந்தை இந்திரனைக் காண தேவருலகம் சென்றபோது ஊர்வசி அவனிடம் மயங்கியதாகவும், இந்திரனுக்கும் அவளுக்கும் இருக்கும் தொடர்பால் அவள் தனக்கு தாய் முறை என அருச்சுனன் மறுக்க, இந்த கற்பு கோட்பாடுகள், உறவுமுறை தயக்கங்கள் தேவருலக்த்தில் செல்லாது என அவள் கூறியதை மட்டும் படித்துள்ளேன். இந்த வாக்குவாதத்தால் அவள் அருச்சுனனை ஆண்மையிழக்க சபிப்பதாகவும், அதை ஓராண்டுக்கு மட்டும் செல்லுபடியாக்கி அவன் விரும்போது அதை எடுத்து கொள்ளலாம் என இந்திரன் அனுமதி அளிக்க, அஞ்ஞாத வாசத்தில் அவன் பிருகன்னளையாக வருகிறான் என்கிறது மகாபாரதம்.

3. அயோத்தி சென்று இருக்கிறீர்களா? 4. அங்கு இப்போது ராமர் கோவில் கட்டும் சாதுக்களின் நிலை எப்படியுள்ளது? 5. புராண காலத்தோடு தொடர்பு உள்ள சரயு நதியில் ஸ்நானம் பண்ணியுள்ளீர்களா?
பதில்: இல்லை, ஆகவே மற்ற கேள்விகளே எழவில்லை.

6. தாம்பிராஸின் செயல் பாடு எப்படியுள்ளது?
பதில்: எங்கள் வீட்டின் எதிரே உள்ள மண்டபத்திலவர்களது ஹோமம் நிகழ்ச்சி நடந்தது. நான் போகவில்லை.

7. பிராமணர் தமிழக ஜனத் தொகையில் எத்தனை சதவிகிதம் உள்ளனர் என்ற அறிவிக்கப் படும் தகவல் முன்னுக்குப் பின் முரணாய் உள்ளதே?
பதில்: மூன்று சதவிகிதம்தான் என நான் படித்துள்ளேன். வடக்கே அவர்கள் கணிசமான என்ணிக்கையில் இருந்து அரசியல் ரீதியாகவும் செயலுடன் இருப்பதால் ஓட்டு விவகாரங்களில் அச்சாதியினரும் அங்கீகாரம் பெற முடிகிறது என சோ அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டது சரி என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

8. சிறு சிறு கோவில்களில் சொற்ப மாத ஊதியம் பெற்று கொண்டு கஷ்ட ஜீவனம் நடத்தும், ஏழை பிராமணர்களின் குழந்தைக்கு இட ஒதுக்கீட்டு சலுகை அளிக்கும் முயற்சி வெற்றி பெறுமா?
பதில்: அரசு செய்யும் என நம்புவதை விட தாம்பிராஸ் போன்ற அமைப்புகள் அதை செய்வதே அதிக பலனைத் தரும் என்பது என் கருத்து. நாடார்கள் அவ்வாறுதான் முன்னுக்கு வந்தனர்.

9. அரசு இந்துக் கோவில்களை மட்டும் தன் பராமரிப்பில் வைத்து இருப்பது மாறுமா?
பதில்: மதசார்பற்ற அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அதே சமயம் இந்து அறநிலைத்துறை அமைச்சர் என்று ஒரு மதத்து கோவில்களுக்கு மட்டும் இருப்பது அரசியல் சட்டத்துக்கே புரம்பானது. யாராவது பொதுநல வழக்கே இதற்கு போடலாம். நான் கூறுவது இதுதான். மற்றமத வழிப்பாட்டுத் தலங்களுக்கும் அம்மாதிரி அமைச்சகங்கள் கொண்டு வாருங்கள் அல்லது இந்து கோவில்களை இந்து அமைப்புகளிடமே தந்து விடுங்கள். ஆனால் யார் இம்மாதிரி வழக்கு போடுவது? அட்டோக்களை சமாளிப்பது?

10. கடவுள் நம்பிக்கை அற்ற திமுக கட்சியினர் கோவில் அறங்காவலராய் இருப்பதை நினைக்கும் போது?
பதில்: வேதம் புதிது சத்தியராஜ் மாதிரி ஆட்கள் மந்திரியாவதில் எந்தக் கெடுதியும் இல்லை என்பதே என் கருத்து. ஆனால் உண்மை நிலை அப்படியில்லையே?


கிரிதரன், வெ.:
1) பாப்ரி மசூதியை ஹிந்து மதவாதிகள் இடித்தது பற்றி உங்கள் கருத்து? அதற்கும் முகலாய மன்னர்கள் இந்து கோவில்களை இடித்ததற்கும் இடையில் நான் ஒரு வேறுபாடும் காணவில்லை.
பதில்: பாப்ரி மசூதியை இடித்தது தவறுதான். அது ஒரு கருப்பு தினம்.

2) பமக அண்ட் கோ “தமிழன் மட்டுமே தமிழகத்தை ஆளவேண்டும்” என்பதற்கும் சிவசேனை மராட்டியரல்லாதவரிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதற்கிடையிலும் ஏதேனும் வித்தியாசங்கள் கூற இயலுமா?
பதில்: சிவசேனா அரசியல் ரீதியாக அதிக சக்தி வாய்ந்தது, ஆகவே அதிக அபாயம் அதனால் உண்டு. மற்றப்படி தமிழனை மட்டுமே ஆதரிப்போம் என பாமக கூறுவதை அப்படியே ஏற்று கொண்டால், எம்ஜிஆர் மலையாளி என்றார்கள், உடனே எம்ஜிஆர் கருணாநிதியின் சாதியும் தெலுன்ஙர் சாதி என்று எடுத்து கூறினார். ஜெயலலிதா டெபாசிட் அவுட். விஜயகாந்த் அவுட். ஆக காமராஜ் மட்டும்தான் பச்சைத் தமிழன் என அக்காலத்தில் கன்னடரான பெரியார் கூறியதும் நினைவுக்கு வருகிறது. இப்போது மருத்துவர் மட்டும்தான் தேறுவார் போலிருக்கிறது.

3) ஒருவன் எவ்வாறு பிராம்மணத்துவத்தை அடைவது? பிறப்பாலா அல்லது ஒழுக்கத்தாலா? (ஸ்ரீராகவேந்திரர் படத்தில் ரஜனிகாந்த் ஒழுக்கத்தால் பிராமணத்துவத்தை அடையலாம் என கூறியுள்ளார்).
பதில்: மகாபாரதத்தில் நச்சுப்பொய்கை படலத்தில் இந்த விஷயமாக யட்சன் கேள்வியும் யுதிஷ்டிரர் பதிலும் இங்கு தருவேன்.
யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?
தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.

4) இந்து மதத்துக்கு மாற ஏன் ஒரு வழியும் இல்லை? மற்றவர்களை நாம் ஏன் நமது மதத்துக்கு வருமாறு அழைப்பதில்லை?
பதில்: போன நூற்றாண்டு வரை நீங்கள் சொன்னதுதான் உண்மையாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆரிய சமாஜத்தினர் ஹிந்து மதத்துக்குள் வெளி மதத்தவரை அனுமதிக்கின்றனர்.

5) எம்பெருமான் ராமனுஜர் தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்படுபவர்களையும் பார்ப்பனராக்கி வைணவ மதத்தில் சேர்த்துள்ளார். ஆகவே பார்ப்பன குலத்தில் பிறக்காவிட்டாலும் பார்ப்பனனாக முடியும் அப்படித்தானே?
பதில்: யட்சன் கேட்ட கேள்வியை பிற்கால உதாரணத்துடன் கேட்டுள்ளீர்கள். முந்தைய கேள்வியின் பதில்தான் இப்போதும்.

எம்.கண்ணன்:
1. சாரு நிவேதிதாவின் 'பெருமாள்', லதானந்த் அங்கிளின் ' மாதப்பன்' ; சுஜாதாவின் 'கணேஷ்+வசந்த்' - யாருடைய ஆல்டர் ஈகோ டாப்? யாருடைய பாத்திரப்படைப்பு நிஜத்தின் அருகில்?
பதில்: லதானந்த் மற்றும் சாருநிவேதிதாவின் முறையே மாதப்பன் மற்றும் பெருமாளை நான் அறியேன். ஆகவே எப்படி ஒப்பிடுவது? வேண்டுமானால் ஒன்று செய்யலாம். ஷெர்லாக் ஹோம்ஸ்-டாக்டர் வாட்ஸன், ஹெர்க்யூல் ப்வாரோ (Hercule Poirot) ஜோடியுடன் ஒப்பிடலாம். கணேஷ் வசந்த் ஜோடிதான் டாப். ஏனெனில் நான் ஏற்கனவே கூறியபடி கணேஷ் வசந்த் இருவரும் ஒருவரே.

2. திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் லதா அதியமானின் மச்சினர், நாத்தனார், மாமியார் என குடும்பமே ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனரே ? திமுகவுக்கு திருமங்கலத்தில் வேட்டா?
பதில்: அஞ்சா நெஞ்சன் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவாரா?

3. 'நிழல்' சண்முகநாதன் மீண்டும் கலைஞரின் பின்னே வந்துவிட்டாரே? என்ன காரணமாக இருக்கும்?
பதில்: பல சமாதான முயற்சிகள் நடந்தன. கலைஞரை பற்றி எல்லா விவரங்களும் தெரிந்த ஒருவரை வெளியில் போக அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட மாட்டார்கள்.

4. பாலகுமாரன், இல.கணேசன் - காபி வித் அனு - பார்த்தீர்களா ? கணேசன் மிக நன்றாக பேசியதாகப் படுகிறது. (அடுத்த (2ஆம்) பகுதி வரும் சனியன்று ஒளிபரப்பாகும் என தெரிகிறது.)
பதில்: பார்க்கவில்லை, ஏனெனில் எங்கள் வீட்டில் விஜய் டிவி பார்ப்பதில்லை. சோ மௌளி வந்த அப்பேட்டிகூட எனக்கு ஒருவர் முன்கூட்டியே தகவல் சொன்னதால்தான் பார்த்தேன். அதனால் என்ன யூட்யூப்பில் வராமலா போகப், போகிறது? பார்த்தால் போச்சு, தேவையானால் பதிவு ஒன்று போட்டாலும் போச்சு.

5. தற்போது மற்றும் அடுத்த 5 வருடங்களில் ரிடையராகப் போகும் 58+ பெரியவர்களில், அரசு துறையில் இல்லாமல் தனியார் துறையிலிருந்தோ அல்லது பென்ஷன் கிடைக்காத கம்பெனியிலிருந்தோ ஓய்வு பெறுபவர்கள் எதை வைத்து தங்கள் காலத்தை ஓட்ட முடியும் ? பென்ஷன் பிளான் என HDFC போன்றவர்கள் கூறும் திட்டத்தினால் பயன் உண்டா ? இவர்கள் ஓய்வு காலத்தில் தங்கள் குடும்பங்களை எப்படி கவனிப்பது ? அதற்கு உங்கள் ஆலோசனை என்ன?
பதில்: பிரச்சினை என்ன? மாணவர்கள் பரீட்சைக்கு தயார் செய்து, படித்து பாஸ் செய்கிறார்கள். பிறகு படிப்புக்கேற்ப வேலை தேட தங்களை தயார் செய்து கொள்கிறார்கள். வேலை காலத்தில் தங்களுக்கு பிரமோஷன் வருவதற்கான முஸ்தீபுகளையும் செய்கிறார்கள். எல்லாம் செய்பவர்கள், தங்களுக்கும் ஓய்வு பெறும் வயது வரும் என்பதை எப்படி மறக்கிறார்கள்? திடீரென ஓய்வு தரும் அலுவலக ஆணையை கையில் வாங்கி ஏன் நிலை குலைந்து போகின்றனர்? ஏன் ஐயா இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? வருடங்கள் கடப்பதை தடுக்க முடியுமா? முன்கூட்டியே ஓய்வுக்கு பிறகு என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டாமா? இது பற்றி நான் எழுதிய பதிவுகள் 1 மற்றும் 2.

6. காதல் காட்சிகளில் நடிகையை நன்கு 'கை'யாளுபவர்/கையாண்டவர் எந்த எந்த ஹீரோக்கள்?
பதில்: எல்லோருமே அதில் மன்னர்கள்தான். அக்காட்சிகளுக்கு மட்டும் டூப் போட மாட்டார்கள்.

7. கிழக்கு பதிப்பகம் இன்னும் உங்களை புத்தகம் எழுத கூப்பிடவில்லையா ? ஏன் ? நீங்களும் கேட்கவில்லையா? அட்லீஸ்ட் மொழி மாற்றத்திற்கு?
பதில்: இல்லை. ஏன் கூப்பிட வேண்டும்? மொழிமாற்றம் ஜெர்மன் அல்லது பிரெஞ்சில் என்றால் வேண்டுமானால் கூப்பிடலாம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்ய அவர்களிடம் தேவைக்குமதிமாகவே ஆள்பலம் உண்டு.

8. இந்த வருட டிசம்பர் சீசனில் எத்தனை கச்சேரிகளுக்குப் போனீர்கள்? ஆர்வம் உண்டா ? எந்த எந்த பாடகர்கள் (தற்போதைய) பிடிக்கும்?
பதில்: இல்லை போகவில்லை. சங்கீதத்தை ரசிக்கவும் ஒரு திறன் வேண்டும். எனக்கு நது அவ்வளவாக இல்லை.

9. சுஜாதாவின் மறைவிற்குப் பிறகு கமல்ஹாசன் இரா.முருகனை தனது படக்குழுவில் சேர்த்துள்ளாரே? இரா.முருகனால் சுஜாதா இடத்தை இட்டு நிரப்ப முடியுமா?
பதில்: கண்டிப்பாக முடியும். இரா. முருகன் அவர்கள் எழுதிய குறுநாவல் ஒன்று “யானை வருது”. அதை படித்துவிட்டு அதன் சோகத்தால் பாதிக்கப்பட்டு விக்கி விக்கி அழுதேன். அவரிடமே அது பற்றி கூறியபோது அவர் அக்கதையின் நகல் தன்வசம் இல்லை என்றார். உங்களில் யாராவது அதை பெற முடிந்தால் முருகனுக்கு அனுப்பவும். அல்லது எனக்கு தகவல் தரவும். அவரிடம் அக்கதையை நான் சேர்த்து விடுவேன்.

10. பழ.கருப்பையாவின் நேர்முகம் (ஜெயா டிவியில் சென்ற ஞாயிறு - ரபி பெர்னார்ட்) பார்த்தீர்களா ? கலைஞரை ஒரு பிடி பிடித்தது மட்டுமில்லாமல் ஜெ. அடுத்த பிரதமர் என்றெல்லாம் பேசினாரே?
பதில்: ஜெயா டிவியில் அவ்வாறு பேசக்கூடியவர்களைத்தானே சாதாரணமாக அழைப்பார்கள்?

ராஜ மார்தாண்ட ராஜ குலோத்துங்க இரண்டாம் அதிவீர ராம பாண்டியன்:
1. கடைக்கண் பார்வை ->காதல்->மோகம்->காமம்--->உங்கள் கமெண்ட் என்ன?
பதில்: ஜாக்கிரதை, அவளும் கடைக்கண் பார்வை பார்க்க, நீங்களும் அவ்வாறே பார்க்க, உங்கள் இருவரையும் ஸில்வஸ்டர் ஸ்டல்லோன் போல இருக்கும் அவள் தந்தை கடைக்கண் பார்க்க, உங்களைப் பொருத்தவரை காதல்->மோகம்->காமம் என்பது காதல்->மொத்தல்->ஆஸ்பிடல் என்று மாறிவிடப் போகிறது.

2. கோவில்களில் உள்ள கோபுரங்களில், தேரின் சிலைகளில் உள்ள கலவிக் கலை சார்ந்த சிற்பங்களின் தாத்பரியம் என்ன?
பதில்: ஆங்கிலேயர் வருகைக்கு முந்தைய இந்தியர்களின் வாழ்க்கையில் காமமும் ஒரு அங்கமே. அதில் அசிங்கம் ஏதும் இல்லை. ஆங்கிலேயர் வந்ததும், அதிலும் அவர்களது மகா கோர விக்டோரியா மகாராணி வந்ததும்தான் காமம் என்பது அசிங்கம் என்றெல்லாம் போதனைகள் வர ஆரம்பித்தன. நீங்கள் சொல்லும் சிற்பங்கள் வாழ்க்கை ரகசியங்களை கேஷுவலாக போதித்தன.

3. மத்தியப் பிரதேசத்தில் உள்ள "கஜீரகோ"கலவிக்கலை அதி உன்னத உலகப் புகழ் பெற்ற சிற்பக் கோவிலில் பார்த்து ரசித்து உண்டா? இல்லை என்றால் 64 கலையை சொல்லித்தரும் "கஜுராஹோ கோவில்" போட்டோக்கள்/வீடியோக்கள்/மாடல் சிற்பங்கள் இவற்றை பார்த்து ரகசியமாய் ரசித்து உண்டா?
பதில்: கஜுராஹோ சென்றதில்லை. போட்டோக்களை வெளிப்படையாகவே ரசித்துள்ளேன்.

4. ஆயகலைகள் 64 ஐயும், கலவிக்கலையில் சொல்லப் பட்ட 64 நிலைகளையும் பற்றி படித்த அனுபவம் உண்டா?
பதில்: படித்திருக்கிறேன்.

5. அதிவீர ராம பாண்டியனின் பண்டயக் கால கலவிக் கலையை கற்றுத்தரும் "கொக்ககோ சாஸ்திரம்" எனும் புத்தகத்தை இளமைக் காலத்தில் படித்தது உண்டா? கைவசம் இருக்கா?
பதில்: உண்டு, ஆனால் இப்போது கைவசம் இல்லை. சாதாரணமாக அம்மாதிரி புத்தகங்களை படித்ததும் அவை கைவசம் இருக்காது. யாராவது உயிர்த்தோழன் சுட்டு கொண்டு போயிருப்பான். ஆனால் கைவசம் நிச்சயமாக வேறு ஒன்று இருக்கும். :))

6. மைசூர் சாமுண்டீஸ்வரி அச்சகத்திலிருந்து பழங்கால நடிகை சரோஜா தேவி
பெயரில் இரண்டு ரூபாய் விலையில் வெளிவந்த பலான புத்தகங்களை, பிற புத்தகங்களுக்கு இடையே மறைத்து வைத்து படிதத அனுபவம் உண்டா?

படித்திருக்கிறேன். ஆனால் மறைத்து கொண்டல்லாம் அல்ல. இது பற்றி நான் போட்ட சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும் என்ற பதிவை மேலதிகத் தகவலுக்கு பார்க்கவும்.

7. புத்தகப் பிரியரின் புததக சேமிப்பில் அவை இன்னும் இருக்கா? (இது கொஞ்சம் ஒவர் தான், மன்னிச்சுங்கோ சார்)
பதில்: இல்லை. இதற்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்டு கொண்டிருக்கிறீர்கள்?

8. படித்து இருந்தால் முதல் புதத்கம் படிக்கும் போது உங்களின் வயது? மனநிலை? புதத்கம் கொடுத்த அந்த சிகாமணி புண்யவான்?
பதில்: 18 வ்சயது, புத்தகம் “வாழு வாழவிடு” மனநிலை? கைவசம் புத்தகம் இல்லை. புண்யவான் பெயர் நாராயணன்.

9. கலவிக் காட்சிகள் அடங்கிய வண்ணத்தில் தயாரான வெளி நாட்டு புத்தகங்கள் நகரங்களில் உள்ள கல்லூரி விடுதிகளில் ருபாய் 10 தின வாடகைக்கு கிடைத்தது. உங்கள் பொறியியல் கல்லுரி அனுபவம் எப்படி?
பதில்: நான் டே ஸ்காலர். ஆகவே இந்த அனுபவம் இல்லை.

10. முன்பெல்லாம் கல்யாண முதல் இரவுக்கு செல்லும் மணப் பெண்ணிடம், இந்த பலான விசயத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட பெரிய மனுசிகள், கலவி நுணுக்கங்கள் பற்றி ஆலோசனையும்,அறிவுரையும் சொல்லுவதாய் பழக்கம் இருத்ததே. இப்போது?
பதில்: இப்போதும், அப்படித்தான்.

11. முதல் முதலாய் கலவிக் கலவி பற்றிய "வீடியோ" பார்த்த அணுபவம்?
பதில்: ஐந்து நிமிடங்களிலேயே ஆர்வம் இழந்தேன். கேனத்தனமாக இருக்கும்.

12.30-40 வருடங்களுக்கு முன்னால் வயதுக்கு வரும் சிறுவர்களிடம் பரவலாய்க் காணப் பட்ட "முஷ்டி மைத்துணம்" தற்சமயம் மார்க்கட் இழத்துள்ளதா? என்ன காரணம்? விழிப்புணர்வா? கலவி சுகம் மலிவாய் வாய்க்கிறதா?
பதில்: எந்த உலகில் இருக்கிறீர்கள்? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் பழக்கம் அப்படி போய்விடாது. கலவி சுகம் மலிவாக இருக்கலாம், ஆனால் இது இலவசமாயிற்றே. “காசு கொடுத்து தேவிடியா கிட்ட போறதை விட கல் மறைவுல போய் கைமுட்டி அடிப்பதே மேல்” என ஒரு சரோஜாதேவி புத்தகத்தில் போட்டிருந்தார்களே.

13. பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியை பார்வையிட மட்டும் சென்ற அனுபவம் உண்டா?
அப்போது உங்களின் மன நிலை? பெண்கள்,சிறுமிகளின் பரிதாப நிலையை பார்க்கும் போது காம உணர்வின் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கிய நிலை தானே?

பதில்: நான் தினமும் அலுவலகம் செல்ல பயன்படுத்தும் 65-ஆம் நம்பர் பஸ் ஃபோராஸ் ரோட் வழியாகத்தான் செல்லும். பார்க்கவே ரொம்ப கண்ராவிழாக இருக்கும். அங்கு போய் பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழப்பதை விட முந்தைய கேள்வியில் சொன்னதையே செய்து விடலாம். எய்ட்ஸும் வராது என ஒரு பிரெஞ்சுக்காரர் கூறியுள்ளார்.

14. பால்வினை நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பரவலாய் தற்சமயம் எப்படி உள்ளது?
பதில்: விழிப்புணர்வு உள்ளது ஆனால் போதாது.

15. கலவி ரகசியங்கள். பால்வினை நோய் பற்றிய அறிவியல் உண்மைகளை விளக்கும் திரைப் படங்கள் முன்பு வந்தது போல் இப்போது வருவது இல்லயே? என்ன காரணம்? மலையாளப் படங்கள் கூட "உஜாலாவுக்கு" மாறிடுச்சு இல்லையா?
பதில்: சமீபத்தில் 1974 குப்த க்யான் என்னும் ஹிந்திப் படம் பார்த்தேன். பாடம் நடத்துவது போல இருந்தது. பயங்கர அறுவை. அதற்கு பேசாமல் ஜோதி தியேட்டரில் பிட் படங்கள் பார்த்து தொலைக்கலாம். இணையத்திலும் பல தளங்கள் வந்து விட்டன. ஆகவே அம்மாதிரி படங்களுக்கு மார்க்கெட் இல்லை.

16. அரசின் இலவச "நிரோத்" வழங்கும் திட்டம் முழு வெற்றியா?
பதில்: நிறைய பலூன்கள் வானத்தில் பறப்பதாக கேள்வி.

17. ஆட்கொல்லி நோய் "எய்ட்ஸ்" பற்றிய பிரச்சாரம் என்னாச்சு?(புள்ளிராஜவும் பதில் சொல்லலாம்)
பதில்: ஆம், அவரே சொல்லட்டும்.

18. மேலை நாடுகளில் விபச்சாரம் இண்டெர்நெட் மூலம் கலக்குகிறார்களாமே? இந்தியாவில் நிலை எப்படி?
பதில்: அதே மேலை நாட்டு இண்டெர்நெட்டை யார் வேண்டுமானாலும் பார்க்கலாமே. மற்றப்படி இந்தியத் தளங்களுக்கும் குறைவில்லைதான்.

19. மேலை நாடுகளில் ஆண் விபச்சாரம் பற்றிய விளம்பரங்களும் இருக்காமே? கலாச்சார சீரழிவின் உச்சத்திலா உலகம்?
பதில்: இதென்ன போங்கு. பெண்களுக்கும் காம உணர்ச்சி வரும்தானே.

20. தெரு ஒரங்களில் காரின் கறுப்பு கண்ணாடி ஏற்றிக் கொண்டு ,தன்னை மறக்கும் இன்ப ஜோடிகளின் எண்ணிக்கை கூடுதாமே? எங்க போகுது பாழாய்ப் போன சமூகம்?
பதில்: I am afraid, you are protesting too much.

21. வெளியூர்ப் பயணங்களில் தங்கும் விடுதிகளில் உள்ள குளிப்பறைகளில் ரகசியக் கேமிரா வைத்து படம் எடுத்து வலையேற்றி விடுவது பற்றி?இதை சாமளிப்பதற்கு ஆலோசனைகள்?
பதில்: சிங்க முகமூடி போட்டு குளிக்கலாம். சற்று தேடினால் கேமிரா இருக்கும் இடத்தை கணிக்கலாம். ஆவற்றை துணியால் மூடலாம். அல்லது ஓசைப்படாமல் போலீசுக்கு தகவல் தரலாம்.

22. இன்றய இளைய சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சனி ஞாயிறு விடுமுறைக் கொண்டாடத்தில் பலான விசயத்தை 'ஜச்ட் லைக் தேட்'என கருதி வாழ்வை தொலைப்பது பற்றி?
பதில்: இதில் ஆண் பெண் பேதமின்றி எல்லோருமே சுகம் தேடுவதால் அவர்களுக்குள்ளேயே முடித்து கொள்கிறார்கள். வெளியே வராத வரைக்கும் என்ன பிரச்சினை?

23. சின்னஞ் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் பெருசுகளின் காமப் பிசாசுத் தனம் பற்றி?கட்டயிலே போற வயசிலே இதைச் செய்யும் களவாணிகளுக்கு அரேபிய முறையில் தண்டனை?
பதில்: கண்டிப்பாக வெட்டிவிட வேண்டியதுதான்.

24. ஆண்மை குறைவை மருத்துவ,மற்றும் மனோதத்துவ முறையில் நேர்மையாய் சரி செய்யும் ஆங்கில மருத்துவர்கள் இருக்கும் போது-போலி சித்த மருத்துவர்களின் ஆட்டம் பாட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறதே?
பதில்: தலைமுறை தலைமுறையாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் டாக்டர். ாளிமுத்து ஆகியோர் இருக்க இது என்னவோ புதிது போல பேசுகிறீர்கள்?

25. எவ்வளவு யோக்கியனையும் ,நிதிமானையும் ,பக்திமானையும், நல்லவனையும், வல்லவனையும் இந்த விசயத்திலே மட்டும் "படு வீக்காய்" படைத்தவனின் படைப்பின் நோக்கம் என்ன? (வம்ச விருத்திக்குதான் என்று சொல்லி விடாதீர்கள்)
பதில்: இது என்ன போங்கு? வேறு என்ன காரணம் இருக்க முடியும்?


நக்கீரன் பாண்டியன்:
பாரதி தம்புராட்டி அவர்களின் கண்ணிர்க் கதை கல் நெஞ்சையும் கரைய வைத்துவிடும்.
இவர்களின் சோக வரலாற்றுக்கு யார்/எது காரணம்?
1. நாடு பிடிக்கும் பேராசைக்காரன் திப்பு சுல்தானா?-மண்ணாசை 2. வட கேரளாவிலிருந்து தென் கேரளா ஒடிய வயலாரின் தந்தையா? - உயிர் பயம் 3. தங்கை என்றும் பாராமல் சொத்தை அபகரித்த தாய்மாமனா?-பொன்னாசை 4. வயலாரின் தாய் அனுபவித்த வறுமையா? -தலைவிதி 5. மலட்டுத் தன்மையினால் பிறந்தகம் நோக்கி விரட்டப் பட்ட வயலாரின் முத்த மனைவிக்கு இயற்கை செய்த சதியா? -மருத்துவ ரகசியம் 6. மகனின் மனைவியும் ஒரு பெண்தான் என்ற உணர்வு இல்லமால் கொடுமைகள் செய்த வயலாரின் தாயாரா?-மாமியார் கொடுமைகள் 7. கவிஞர் எல்லோரும் இந்த உலகை மறந்து ஒரு கற்பனை உலகில் வாழும் புலவர் வாழக்கை முறையா?-இறைவனின் சாபமா? 8.கல் ஆனாலும் கணவன், புல்லானலும் புருசன் எனும் தத்துவம் ஆட்கொண்ட பாரதி தம்புராட்டி அவர்களின் பத்தாம் பசலித் தனமா-பெண்ணடிமை. சரி டோண்டு சார் இப்போ நம்ம கேள்விக்கு வருவோம்.
அனாதி காலத்திலிருந்து புலவர்கள்/கவிஞர்கள்/பாடகர்கள்/இசை சம்பந்தங்கள்
1. வறுமையில் வாடி வதங்கி உள்ளனர் 2. குடுபத்தை காக்கும் அறத்திலிருந்து நழுவி உள்ளனர் 3. குடி கெடுக்கும் குடியோடு கும்மாளம் போட்டு மூச்சையும் முழுங்கி மறைந்துள்ளார்கள் 4. வாழும் காலத்தில் பிறரால் மதிக்கப் படமால்,பின் அவர்களின் மறைவுக்குப் பிறகு இந்திரன் சந்திரன் எனப் போற்றப் பட்டுள்ளனர். 5. தான் கொண்ட கொள்கையை அடிக்கடி மாற்றியதால் நிரந்திர புத்தி இல்லை என்று பழிக்க பட்டுள்ளனர்.
6. தானாய்ச் சேர்ந்த திரண்ட செல்வத்தை தீய வழிகளில் தண்ணிராய் செலவழித்து, ஊரெல்லாம் கை நீட்டி கடன் வாங்கி, பின் கலங்கி நின்றுள்ளனர்.
மேலே சொல்லப்பட்டவைகளால் ஏற்படும் பாதிப்பு கொஞ்சமும் இல்லாத கவிஞர்/புலவர்/இசை சம்பந்தங்கள் யாரேனும் உள்ளனரா? இல்லை என்றால் என்ன காரணம்
1. விதிப் பயனா? 2. புகழ் தரும் போதையா? 3. அறிவு மிகுதி தரும் சித்த பிரமையா?
4.கல்வியா? செல்வமா? வீரமா அன்று நாரதர் தொடங்கிய புராணக் கற்பனை கதை - இன்று இயற்கை அன்னையின் கரத்திலா?

பதில்: மிகப் பெரிய கேள்வி. விலாவாரியான பதிலுக்கு ஒரு தனிப்பதிவே போட்டு விடுகிறேன்.

செந்தழல் ரவி:

1. மோடத்தை ஆப் பண்ணி ஆன் பண்ணா தமிழ்மணத்டுல புதுசா ஓட்டு (வாசகர் பரிந்துரை) போட முடியும் என்று சொல்வது எந்த அளவில் உண்மை?
பதில்: அப்படியெல்லாம் அடிக்கடி செய்து மோடம் ரிப்பேராகி செலவு வைத்தால் மேடத்தின் கோபம் உங்கள் மேல் பாயுமே பரவாயில்லையா?

2. நேதாஜி உண்மையிலேயே விமான விபத்தில் இறந்தாரா?
பதில்: அதுதான் உண்மை. எது எப்படியானாலும் இன்னும் அவர் உயிருடன் இருக்கிறார் என எண்ணுவது அபத்தம்.

விஜய்:
1. இந்தியா மீது மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் படையெடுத்தார்கள் என்பதை நம்புகிறீர்களா?
பதில்: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாரத வர்ஷம் என்பது ஆஃப்கானிஸ்தானத்தையும் தன்னுள்ளே கொண்டது. ஆனால் இந்த பாரத வர்ஷம் அரசியல் ரீதியான அமைப்பு அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆக நீங்கள் கேட்கும் கேள்விக்கு இல்லை என்பதுதான் என் பதில்.

2. ஜவஹர்லால் நேருவின் Discovery of India புத்தகத்தைப் படித்ததுண்டா? அதில் அவர் எழுதியதை என்னவோ ஆய்வுக் கட்டுறையாக எடுத்துக் கொண்டு அதையே சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஆரியப் படையெடுப்பு உண்மை என்று சொல்கிறார்களே, உங்களின் அபிப்பிராயம் என்ன?
பதில்: நேரு அவர்களுக்கு இம்மாதிரி ஆராய்ச்சி எல்லாம் செய்ய ஏது நேரம் இருந்திருக்கிறது? ஏதோ அவர் அக்காலக் கட்டங்களில் படித்த புத்தகங்களிலிருந்து எழுதியிருக்கிறார். அவர் படித்த புத்தகங்களை எழுதியவர்களும் நேரடியாக ஆராய்ச்சி செய்து தெளிவு பெற்றார்களா என்பதும் யோசிக்கத் தக்கது.

3. ஹராப்பா மொஹஞ்சதாரோவில் இருந்தவர்கள் தான் உண்மையான இந்தியர்கள். அவர்கள் தான் இன்று தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: நானும் படித்திருக்கிறேன். அங்கு கிடைத்த சில எழுத்து மாதிரிகளில் தமிழ் போன்ற உருவமைப்பு இருக்கிறதாக கூறிக் கொள்கிறார்கள்.

4. கர்நாடக சங்கீதம் கேட்பதுண்டா?
பதில்: இப்போதுதான் அதையெல்லாம் கேட்கும் ஆசை வருகிறது. அவற்றை கேட்டு கொண்டே மொழிபெயர்ப்பு செய்வது சுகமான அனுபவம்.

5. மார்கழி சீசனில் கச்சேரி போகும் வழக்கமுண்டா?
பதில்: முதலில் இண்டரஸ்ட் இல்லை. பிறகு அங்கெல்லாம் போனால் மேகலா, கஸ்தூரி, கோலங்கள் ஆகிய சீரியல்களை தவற விட நேரிடும்.

6. அயல் நாட்டு மொழிகளான ஃப்ரென்சு ஜர்மன் இத்தாலி போன்ற மொழிகளில் பாண்டித்யம் பெற்ற நீங்கள் சமிஸ்கிருதம் கற்கவில்லையா? ஸமிஸ்க்ருதத்தைப் படிப்பதனால் டப்பு தேராது என்று விட்டு விட்டீர்களா? :-)
பதில்: விளையாட்டாக கேட்டாலும் உண்மை அதுதான். மேலும் வடமொழியில் என்ன பொறியியற் சம்பந்தமான பேப்பர்கள் வந்து விடப்போகின்றன? காளிதாசனின் சாகுந்தலம் எல்லாம் மொழிபெயர்க்கும் ரேஞ்சில் ஆசையேயில்லை.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/05/2009

புதுக்கோட்டுக்கு ஜூட் - 5

புதுக்கோட்டுக்கு ஜூட் - 4
புதுக்கோட்டுக்கு ஜூட் - 3

புராணங்களில் உள்ள புதுக்கோட்டுக்கு ஜூட் விஷயங்களைப் பார்ப்போமா?
1. துரோணர் அரசகுலத்தை சேர்ந்தவர்களுக்கே வில்வித்தை பயிற்சி அளிப்பதாக கூறிகொள்பவர்். அவரிடம் கர்ணன் வந்து தனக்கும் சொல்லித் தருமாறு கேட்டதற்கு இதைத்தான் கூறினார். பேசாமல் அதை ஏற்று கொண்ட கர்ணன் துரோணரின் மாணாக்கர்களோடு சேர்ந்து பயிற்சி பெற்றுவந்த அஸ்வத்தாமனைக் காட்டி அவர் யார் எனக் கேட்க, துரோணரும் அவன் தன் மகன் எனக் கூறினார்? அவர் மட்டும் அரச குடும்பத்தை சேர்ந்தவரா எனக் கேட்டு விட்டு தன் வழியே சென்றான்.

மேலே சொன்னதும் புதுக் கோட்டுக்கு ஜூட்டுக்கு ஒரு உதாரணமாக வைத்து கொள்ளலாம் என்றாலும் அதே துரோணர் இதைவிட பெரிய புதுக்கோட்டுக்கு ஜூட் விட்டார். ஏகலைவன் என்னும் வேடுவச் சிறுவன் தூரத்திலிருந்து கொண்டு இவர் பாண்டவருக்கும் கௌரவருக்கும் வில்வித்தை கற்பிப்பதை பார்த்து தானுm அவ்வித்தையை கற்றான். துரோணர் போல ஒரு பிரதிமை தயார் செய்து தினம் அதை வணங்கி, தனது பயிற்சிகளை செய்து வந்தான்.

ஒரு நாள் அருச்சுனன் வேட்டை நாய்களுடன் அப்பக்கம் வேட்டையாட வந்தான்.அவனது நாய்கள் ஏகலைவன் மேல் பாய, அவன் நாய்களின் வாய்களை அம்புகளால் கட்டினான். அதைக் கண்ட அருச்சுனனுக்கு மிக ஆச்சரியம். ஏனெனில் அம்மாதிரி நாய்களின் வாய்களை அம்பினால் கட்ட அவனுக்கு மட்டும்தான் தெரியும் என அதுவரை நினைத்து வந்துள்ளான். அச்சமயம் அப்பக்கம் வந்த துரோணரும் இதை கண்டு வியப்புற்று ஏகலைவன் எங்கிருந்து இவ்வித்தையைக் கற்றான் என கேட்க, ஏகலைவனும் துரோணரே அவனது மானசீக குரு என்று வினயத்ய்துடன் கூறினான்.

இப்போதுதான் துரோணர் மிகப்பெரிய புதுக்கோட்டுக்கு ஜூட் விட்டார். அதாகப்பட்டது தனக்கு ஏகலைவன் குருதட்சணையாக தனது வலக்கை கட்டைவிரலைத் தரவேண்டும் என அநியாயமாகக் கேட்டார். அரசகுமாரர்களும் செய்யத் துணியாததை அந்த வேடுவச்சிறுவன் செய்தான். கட்டைவிரலை அறுத்துத் தந்தான், புகழ்பெற்றான்.

ஆனால் துரோணருக்கோ அது ஒரு பெரிய பிளாக் மார்க். என்னால் இப்போது இதை எழுதும்போதே கோபத்தை அடக்க இயலவில்லை. ஆனால் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், அந்த மகானுபாவரே அம்மாதிரி இன்னொரு புதுக்கோட்டுக்கு ஜூட் விவகாரத்தில் இரையாகி பிராணனை விட்டார். அதை சிறிது நேரம் கழித்து பார்ப்போம்.

15-ஆம் நாள் யுத்தம். அதற்கு முந்தைய நாள் அபிமன்யுவை கௌரவர் தரப்பில் உள்ள் அத்தனை மகாரதர்களும் சேர்ந்து துரோணரின் ஆலோசனைப்படி கொன்றனர். பத்ம வியூகத்துக்குள் போகத் தெரிந்தவர்கள் பாண்டவர் தரப்பில் மூவர் மட்டுமே, அவர்கள் அருச்சுனன், கிருஷ்ணர் மற்றும் அபிமன்யு. ஆனால் அபிமன்யுவுக்கு உள்ளே போகத் தெரியுமே தவிர வெளியே வரத் தெரியாது. இருந்தாலும் அருச்சுனரும் கிருஷ்ணரும் அச்சமயம் யுத்த களத்தில் வேறிடத்தில் இருந்ததால் அபிமன்யு மட்டும் போகத் துணிகிறான். பின்னாலேயே பீமனும் மற்ற வீரர்களும் அவனுடனேயே உள்ளே நுழைவதாக ஏற்பாடு. ஆனால் துரியோதனனின் தங்கை துச்சலையின் கணவனும், சைந்தவ அரசனுமான ஜயத்ரதனின் குறுக்கீட்டால் அபிமன்யுவை பீமனும் மற்றவர்களும் தொடர இயலாது போயிற்று. அதை பின்னால் அறிந்த அருச்சுனன் அடுத்த நாள் மாலைக்குள் ஜயத்ரதனை வதம் செய்வதாகவும் அவ்வாறு இயலாவிடில் தீப்புகுவதாகவும் சபதம் செய்கிறான்.

இப்போதுதான் துரியனும் ஜயத்திரதனும் சேர்ந்து ஒரு புதுக்கோட்டுக்கு ஜூட் விடுகின்றனர். அதாவது ஜெயத்திரதன் யுத்தத்துக்கு வராது ஒளிந்து கொள்கிறான். அப்புறம் அருச்சுனன் எப்படி அவனைக் கொல்ல இயலும், ஆகவே அவன் தீப்புகவேண்டியதுதான் என்பது துரியனின் திட்டம். அதுவும் கதிரவன் மறைவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்வரை அத்திட்டம் வெற்றி பெறும் என்றுதான் தோன்றியது. அந்த எண்ணத்துக்கு தூபம் போடுவது போல கதிரவன் திடீரென மறைந்தான். அழுகினி ஆட்டம் ஆடிய ஜெயத்ரதன் மகிழ்ந்தான். அப்பாடா பிழைத்தேன் என எண்ணியபடி வெளியில் வந்தான். அழுகினி ஆட்டம் என்று நான் தெரிந்துதான் கூறினேன். ஏனெனில் அவன் யுத்த வீரன். யுத்த களத்தில் இருந்து சண்டை போட்டிருக்க வேண்டியது அவன் கடமை. ஆட்டத்துக்கே வராமல் ஒளிவதல்ல. அது சுத்த வீரனுக்கு அழகல்ல.

ஆனால் துரியனும் சரி, ஜயத்திரதனும் சரி, ஒன்றை மறந்து விட்டனர். இவர்களுக்கு மேல் பெரிய அளவில் புதுக்கூட்டுக்கு ஜூட் விடக்கூடியவர் பாண்டவர் வசம் இருக்கிறார் என்பதுதான் அது. அவர்தான் கிருஷ்ணர். பாண்டவர் தரப்பில் துயரக் குரல்கள், கௌரவர் தரப்பில் சந்தோஷ ஆட்டங்கள். ஜயத்திரதன் ரதத்தின் மேலேறி நின்று டப்பாங்குத்து ஆட்டம் போடுகிறான். கிருஷ்ணன் அருச்சுனனின் காதோடு ஏதோ சொல்லிவிட்டு செயல் படத் துவங்குகிறார். அவர் என்ன செய்திருந்தார் என்றால் தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனைத் தற்காலிகமாக மறைத்து வைத்திருந்தார். சக்கரத்தை இப்போது விலக்கி கொள்கிறார். சூரியன் பிரகாசிக்கிறான். அருச்சுனன் அப்போது விட்ட பாணம் ஒன்று ஜெயத்திரதன் தலையை கவ்வி தன்னுடன் மேலே எடுத்து செல்கிறது. இப்போது இன்னொரு சிக்கல். ஜெயத்திரதன் தலையை யார் தரையில் தள்ளினாலும் தள்ளுபவர் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என்னும் ஒரு வரம் வேறு இருக்கிறது. ஆகவே கண்ணன் சொன்னபடி அருச்சுனன் அடுத்த சில் அம்புகள் செலுத்தி அத்தலையை ஊருக்கு வெளியே ஒரு பர்ணசாலைக்கு செலுத்துகிறான். அங்கு ஜெயத்திரதனின் தந்தை (தன் மகனுக்காகா மேலே சொன்ன அழுகினி வரம் பெற்றவர்) தரையில் அமர்ந்து தியானம் செய்த வண்ணம் இருக்கிறார். அவர் மடியில் அத்தலை போய் விழுகிறது. என்னவோ தன் மடியில் விழுந்து விட்டதே என்பதற்காக அதைச் சட்டென்று உதறிவிட தலை தரையில் விழ ஜ்ர்யத்திரதனின் தந்தையின் தலை உடைகிறது.

அன்று முதன் முறையாக இரவு யுத்தம் நடக்கிறது. அருச்சுனனுக்காக சேமித்து வைத்திருக்கும் சக்தி ஆயுதத்தை கர்ணன் ஒரு கோபாவேசத்தில் கடோத்கசன் மீது செலுத்த அவன் மரிக்கிறான், ஆனால் அருச்சுனன் உயிருக்கு எமனாய் இருந்த அந்த ஆயுதம் வீணாயிற்று. இதுவும் புதுக்கோட்டுக்கு ஜூட் மன்னன் கிருஷ்ணனின் கைங்கர்யம். துரோணர் பிரும்மாஸ்திரம் விடத் தயாராகும்போது மீண்டும் கண்ணன் ஆலோசனையின்படிம் பீமன் அசுவத்தாமன் என்னும் யானையை கொன்று, துரோணர் காது கேட்க அசுவத்தாமனை கொன்றேன் எனக் கூற, தன் மகன் இறந்து விட்டானா எனக் கலங்கிய துரோணர் பொய்யே பேசாதவன் என புகழ் பெற்றிருந்த யுதிஷ்டரரை கேட்க, அவரும் மென்று விழுங்கிக் கொண்டே அசுவத்தாமா ஹதஹ, (அசுவத்தாமன் இறந்தான்) எனக் கூறி விட்டு, குஞ்சரஹ (அசுவத்தாமன் இறந்தான், ஆனால் அது ஒரு யானை). அவர் குஞ்சரஹ எனக்கூறியது துரோணர் காதில் விழாதவண்ணம் கண்ணன் தனது பாஞ்சஜன்யம் என்னும் சங்கெடுத்து ஊதுகிறார். துரோணரும் யுத்தம் செய்வதை நிறுத்திவிட்டு தரையில் நிராயுதபாணியாக அமர, அவரைக் கொல்லவென்றே துருபதனின் மகனாக வந்த திருட்டத்துய்மன் அவர் கழுத்தை கத்தியால் வெட்ட அவரும் இறக்கிறார்.

துரோணரின் இந்த மரணம் அவர் ஏகலைவனுக்கு செய்த துரோகத்துக்கான தண்டனை என்று கூறுபவர்களும் உளர்.

இம்மாதிரி புராணங்களிலும் இதிஹாசங்களிலும் இந்த புதுக்கோட்டுக்கு ஜூட் விவகாரம் பல உண்டு. அவற்றை இதே வரிசையில் பின்னால் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/04/2009

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கலாம் ...

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கலாம், ஒன்று மட்டும் செய்யாதிருந்தால். அது என்ன அந்த ஒன்று? அதற்கு பிறகு வருகிறேன்.

ஜியோனிசத்தின் தந்தை என அழைக்கப்படும் தியோடர் ஹெர்ட்ஸல் எழுதிய Der Judenstaat (யூத நாடு) புத்தகத்துக்கு முதலில் யூதர்களிடமே அதிக வரவேற்பு இல்லை. அப்போதைய யூத பொது புத்தி எப்படியிருந்ததென்றால், தத்தம் நாடுகளிலேயே நிலைத்து இருந்து மற்ற மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து நாட்டின் நலத்துக்காக பாடுபடுவது. ஆனால் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் போராடியும் அவர்களுக்கு இந்த ஆதர்சநிலை கிட்டவில்லை என்பது கசப்பான சரித்திர உண்மை.

இப்போது ஜெர்மனிக்கே வருவோம். முதல் உலக மகாயுத்தத்தில் ஜெர்மானிய யூதர்கள் ஜெர்மனிக்காக அபாரமாக பணி புரிந்தனர். பல கண்டுபிடிப்புகள் ஜெர்மனியின் யுத்த முயற்சிக்கு ஆதரவாக இருந்தன. ஆனால் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் என்னவாயிற்று? யூதர்கள் விரும்பினாலும் அவர்கள் பங்களிப்பை ஏற்கும் மனநிலையில் ஜெர்மனி இல்லை. ஏன், 1939-ல் யுத்தம் ஆரம்பிக்கும் முன்னாலேயே நாஜிகளின் முதல் ஆறாண்டு கால ஆட்சியில் யூதர்கள் பொது வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்டு வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இதில் யூதர்கள் இழப்பு மிக அதிகமே என்றாலும், ஒரு மாறுதலுக்கு ஜெர்மனியின் இழப்புகளைப் பார்ப்போம். முதற்கண் யூத விஞ்ஞானிகளின் பங்களிப்பு இல்லை. இரண்டாவதாக யூத தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் இல்லை. யூத மத்திய வர்க்கத்தினர் இல்லை. பல யூத விஞ்ஞானிகள் வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்து அந்த நாடுகளின் ஜெர்மனிக்கு விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த அழகில் எல்லாமே பற்றாக்குறையாக, முக்கியமாக ரயில் போக்குவரத்து சாதனங்கள், இருந்தபோது, யூதர்களை வதைமுகாம்களுக்கு கொண்டு செல்லும் ரயில்வண்டிகளுக்கே முன்னுரிமை கொடுத்ததில் ஜெர்மனியின் சீரழிவு இன்னும் வேகப்படுத்தப்பட்டது. எல்லாமே ஒரு பைத்தியக்கார தலைவனின் ஆசைக்கு உட்பட்டு நடந்தன. கடைசியில் சாகும் தருவாயில் ஹிட்லர் எழுதிய உயிலில் கூட தனது யூத வெறுப்பை கக்கிவிட்டுத்தான் செத்தான்.

யூதர்கள் இம்மாதிரி ஒடுக்கபடாமல் இருந்திருந்தால் ஜெர்மனி இந்த யுத்தத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றிருந்திருக்கும். இஸ்ரேலும் உருவாகியிருக்காது. நரகத்தில் இதற்காகவே எண்ணெய் கொப்பரையில் உட்கார்ந்து கொண்டு ஹிட்லர் மனம் புழுங்கி கொண்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்லோரையும் அணைத்து செல்வதே புத்திசாலித்தனம். ஒரு பிரச்சினையை தீர்க்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆதரவு திரட்டுவது புத்திசாலித்தனம். அதன்றி சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அந்த பிரச்சினையை தீர்ப்பதில் உதவக்கூடிய சிலரை தாக்கினால் அவர்களுக்கு என்னவாயிற்று? போடா ஜாட்டான் என போய்விடுவார்கள்.

உதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு தள்ளுவதும் நான் சொன்னதற்கு இன்னொரு உதாரணம். பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அந்த நாட்டினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அறத்துக்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை

திருக்குறள் கால எல்லைகளை மீறியது் என்று கூறுவதற்கு சரியான சான்றாக இக்குறளைக் கூறலாம். அது பற்றி இங்கு இப்போது ஏன் பேச வேண்டும் என்றால் அவ்வாறு செய்யத் தூண்டியது ஜெயமோகனின் இறைவிருப்பம் என்ற தலைப்பில் வந்துள்ள இடுகையே. முதலில் அதை பார்ப்போம், பிறகு டோண்டு ராகவன் வருவான்.

மலையாள கவிஞர் வயலார் ராமவர்மா பற்றியது இந்த இடுகை. அதில் என்னைக் கவ்ர்ந்த வரிகள் கீழே:

“வயலார் ராமவர்மா கண்ணதாசனின் நெருக்கமான நண்பர். இருவருக்கும் பொதுவான பல வாழ்க்கைக்கூறுகள் இருந்தன. மது மாது தட்டுகெட்ட வாழ்க்கை. இருவரும் சேர்ந்து மதுவருந்தும் மாதுக்களை கோண்டாடும் வழக்கமும் இருந்தது. ஆனால் கண்ணதாசனின் பாடலுக்கும் வயலார் ராமவர்மாவின் பாடலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கண்ணதாசனிடம் ஒரு தத்துவார்த்தத் தன்மை உண்டு. அது அவரது பாடல்களுக்கு ஒரு செவ்வியல்தன்மையை அளித்தது. மாறாக வயலார் ராமவர்மா கற்பனாவாதத்தில் ஊறியவர்.

வயலார் ராமவர்மாவின் கவிதைகள் வைரங்களை செங்கற்களாக அடுக்கிக் கட்டி மேக விதானம் இடப்பட்ட மாளிகை போல மண்ணில் சற்றும் கால்பாவாத கற்பனாவாத எழுச்சிகள். காமமும் இயற்கை வருணனையும் கற்பனையின் பொன்னிலத்தில் ஒன்று கலந்தவை. பாடல் என்ற வடிவில் அவற்றுக்கு இருக்கும் கனவுத்தன்மையே பெரும் கவற்சியாக ஆகிறது. அத்துடன் அழகிய சம்ஸ்கிருதச்சொற்கள் கலந்து கம்பீரமான ஒலியழகை அளிக்கின்றன.

நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே
ஜோதிர்மயியாம் உஷஸினு
வெள்ளீச்சாமரம் வீசும் மேகங்ஙளே
சுப்ர·பாதம் சுப்ர·பாதம்!

[நீலமலையின் தோழிகளே, சுடர்முகத்தவர்களே!
ஒளிவடிவாம் புலரிமகளுக்கு
வெள்ளிச்சாமரம் வீசும் மேகங்களே!
நல்விடியல்! நல்விடியல்!]

என்று அவரது கவிதை கிட்டத்தட்ட சம்ஸ்க்ருத சுலோகம்போலவே ஒலிக்க்கும். சலீல் சௌதுரி தவிர பிறர் அவரது வரிகளுக்குத்தான் இசையமைத்திருக்கிறார்கள். இசைக்குப் பாடல்கள் அமைக்கும்போதுகூட

”இவிடே காற்றினு சுகந்தம்?
இதிலே போயொரு வசந்தம்!
வசந்தத்தின் சுவர்ண தேரில் இருந்நதாரு?
வாஸர ஸ்பனத்தின் தோழிமாரு!

[இங்கே காற்றுக்கு நறுமணம்?
இவ்வழியாகச் சென்றதொரு வசந்தம்!
வசந்தத்தின் பொற்தேரில் இருந்தது யார்?
இளமைக்கனவின் தோழியர்!]

என்று சகஜமாக நகர்ந்தது அவரது கவிதை. காமத்தை பலசமயம் அத்துமீறிக்கூட அவர் எழுதியிருக்கிறார். அதை சம்ஸ்கிருதம் மறைத்துவிடும். ‘ஒவ்வொரு மாமிசமலரும் இதழ்விட்டு விழித்தெழும் இந்த இரவில்…’, ‘ஈர உடையணிந்து நீ பூஜைக்கு வருகையில் நீலக்கார்வண்ணனாக நிற்பேன் நான்’ போன்ற வரிகளை சாதாரணமாக அவர் கவிதைகளில் காணலாம். நிலவு அவருக்கு பெரியதோர் படிமம். ஓடம், காயல், நிலவு மூன்றும் கலந்த ஒரு காட்சி சித்திரம் அவரது பல பாடல்களில் மீண்டும் மீண்டும் வருகிறது. ‘எத்தனை கறந்தாலும் அகிடு வற்றாத ஒரு கருநீலப் பெரும்பசு’ அவருடைய நிலாவானம்.

சமீபத்தில் வயலார் ராமவர்மாவின் மனைவி பாரதி தம்புராட்டி கணவரைப்பற்றி எழுதிய ஓரு சிறு நூலைப் படித்தேன். [இந்திர தனுஸின் தீரத்து'.. ஸைந்தவ புகஸ் ] அவர் எழுத்தாளர் அல்ல. ஆகவே சும்மா எழுதிச்செல்கிறார். வர்ணனைகள் இல்லை. நுண்விவரிப்புகள் இல்லை. வெறும் தகவல்கள் , நினைவுகள். வயலார் 1975ல் தன் 48 ஆவது வயதில் வயலார் ராமவர்மா மறைந்தார். மறைவில் இருந்து தொடங்குகின்றன நினைவுகள். சமீபத்தில் இத்தனை உள்சுழிகள் கொண்ட ஒரு வாழ்க்கை வரலாற்றை வாசிக்க நேர்ந்ததில்லை”.

“வயலார் ராமவர்மாவுக்கும் அம்மாவுக்குமான உறவின் விசித்திரங்களை தொட்டுத்தொட்டுச் செல்கிறது பாரதியம்மாவின் குறிப்புகள். அம்மாவில் நிழலில் வளர்ந்தவர் வயலார். அம்மா சொல்லை ஒரு கணமேனும் தட்டமுடியவில்லை அவரால். அம்மாவுக்கு தன் மகனை எவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. சற்று கூட. வயலார் ராமவர்மா பிரபல மலையாள எழுத்தாளர் காரூர் நீலகண்ட பிள்ளையின் சகோதரியை மணக்க விரும்பினார். ஆனால் அம்மாவுக்கு ஒரு நாயர் பெண்ணை அவர் மணப்பது பிடிக்கவில்லை. ஆகவே அந்த எண்ணத்தையே உதறிவிட்டார்.

அம்மாவின் கூற்றுக்கு இணங்க பாரதியின் அக்காவைத்தான் முதலில் மணம் புரிந்தார் வயலார் ராமவர்மா. கிட்டத்தட்ட நான்குவருடங்கள் கழித்துத்தான்தான் அம்மா தன் மகனுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இரவில் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்துவிட்டுப் படுக்கப்போகும்முன்பு தான் வீட்டு விலக்காகிவிட்டதாகச் சொல்வது பாரதியின் அக்காவின் வழக்கம். அதை சந்தேகப்பட்ட அம்மா அவளை மிரட்டிக்கேட்கும்போது உண்மை வெளியாகிறது. அவளுக்கு மாதவிலக்கே வருவதில்லை. அவளால் தாய்மை அடைய முடியாது.

மனைவியை ஆழமாக நேசித்த வயலார் ராமவர்மா தன் அம்மாவின் கட்டளைக்கு ஏற்ப அவளை விவாகரத்து செய்கிறார். அவள் அதற்குச் சம்மதிக்க மறுக்கிறாள். அழுகிறாள். ஆனால் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கிறார்கள். அவளை பிறந்தகத்துக்குக் கொண்டுவந்து விடுவிடுகிறார்கள். அங்கே உள்ளறைகளின் இருட்டில் வாழ்ந்து அவள் மறைந்தாள். பாரதியை வயலார் இரண்டாவதாக மணக்கவேண்டும் என்று அம்மா ஆணையிடுகிறாள். வயலார் ராமவர்மாவை எண்ணி காத்திருந்த காரூர் நீலகண்டபிள்ளையின் சகோதரி மீண்டும் திருமண ஆலோசனையுடன் வந்தபோதும் அம்மா சம்மதிக்கவில்லை.

பாரதியை வயலார் ராமவர்மா மணக்கிறாள். பாரதிக்கு வயலார் ராமவர்மாவை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் வேறுவழியே இல்லை. வேறு ஒரு பெண் வயலார் ராமவர்மாவை மணந்தால் அவரை தன்னால் பார்க்கக்கூட முடியாது போய்விடுமே என்று அக்கா அழுதுகொண்டு சொன்னதனால் பாரதி சம்மதிக்கிறாள். ஒரு முறை மூத்தமனைவியை ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்து விட்டு வந்த வயலார் பாரதியிடம் அதைப்பற்றிச் சொல்லி கண்ணீர் வடிக்கிறார்.

அப்போது வயலார் ராமவர்மா திரையுலகில் உச்சத்தில் இருந்தார். எப்போதாவது வீட்டுக்கு வருவதோடு சரி. வந்தால் அம்மாவுடன் மட்டுமே பேசமுடியும். அவர் தன் மனைவியுடன் பேசுவது வெளியே செல்வது எதுவுமே அம்மாவுக்குப் பிடிக்காது. பாரதி வயலார் ராமவர்மாவுக்கு சமைத்துப்போடக்கூட அம்மா சம்மதிப்பதில்லை. கடிதங்கள்கூட வயலார் ராமவர்மா அம்மாவுக்குத்தான் எழுதினார். பெயர்கூட எழுதமாட்டார். ‘அம்மா, ராகவப்பறம்பு, வயலார், சேர்த்தலா’ என்றுதான் விலாசம் எழுதுவார். தொலைபேசியில் தினமும் அம்மாவிடம் பேசுவார் வயலார் ராமவர்மா, ஒருமுறைகூட மனைவியிடம் பேசியதில்லை.

சமையலறையிலேயே வாழ்ந்து குழந்தைகளை வளர்த்து வாழ்க்கையைக் கடந்து வந்தார் பாரதி. நினைவில் சில பயணங்கள் சில அபூர்வ தினங்கள் அல்லாமல் வயலார் ராமவர்மாவுடனான வாழ்க்கையின் ஒளிமிக்க கணங்களே இல்லை. சென்னையிலேயே தங்கிய வயலார் ராமவர்மா குடிகாரர் ஆனார். பெண்பித்தராக அலைந்தார். அவரது பெண்பித்து பற்றி பாரதி கேள்விப்படுகிறார். ஆனால் அப்படியெல்லாம் இல்லை, அவர்களெல்லாம் அவரது சகோதரிகள்தான் என்று கற்பனை செய்துகொண்டேன் என்கிறார். வேறு என்ன செய்ய முடியும்?

வயலாரை பாரதி நேசித்தாரா? ஆமாம் என்று சொல்கிறார் பாரதி. ஏனென்றால் நேசித்தாகவேண்டும். வேறு உலகமே கிஐயாது. நேசிக்கும்படியாக அவர் வளர்க்கபப்ட்டிருக்கிறார். அவரன்றி நினைவுகள் கூட இல்லை. ஆனால் அது நேசம்தானா? வெறும் கற்பனையா? சொல்ல முடியாது. என் வாழ்க்கையை நரகமாக்கிய வயலாரின் அன்னையை முதுமைக்காலத்தில் நன்றாகவே புரிந்துகொள்வதாகவும், அவர்மீது நேசமும் இரக்கமும் மட்டுமே மனதில் எஞ்சியுள்ளது என்றும் சொல்கிறார்.

குடி வயலார் ராமவர்மாவை வதைத்தது. அதை விட்டுவிட ஒவ்வொருநாளும் விரும்பினார். அதற்காக பலமுறை சபதம் எடுத்தார். புத்தாண்டுகள் தோறும் டைரியில் எழுதிவைத்தார். மனைவியை நேசிக்க முடியாமையைப்பற்றி புலம்பி எழுதினார். ஆனால் அந்த மரணப்பாதையில் சென்றுகொண்டே இருந்தார். அவரை நினைத்து அம்மா மனம் புழுங்கினார். அவருக்காக கோயில்தோறும் வேணிக்கொண்டார்.

ஒருமுறை குடி மூத்து நிற்க முடியாத வயலார் ராமவர்மா தன் வேலையாளிடம் மேலும் மது வாங்க பணம் எடுத்துக் கொடுக்கும்படி பாரதியிடம் சொல்ல பாரதி அழுதபடி மறுக்கிறார். அம்மா வெளியே வந்து ”நீ சீதனம் கொண்டுவந்த பணம் அல்ல அது. அவன் சம்பாதித்த பணம்… போய் எடுத்து கொடுடீ”என்று சீறினாள். பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டு பாரதி வந்து பார்த்தபோது அம்மா அறைக்குள் கதறி அழுது கொண்டிருந்தாள்.

”பாரதீ நீ கவலைப்படாதே, அம்மாவின் காலம் முடிந்தபின் நாம் நிம்மதியாக வாழலாம்”என்று போதையில் மனைவியிடம் சொல்லி கண்ணீர்விடுகிறார் வயலார் ராமவர்மா. ஆனால் அம்மாவின் கண்முன் அவர் இறந்தார். ஈரல் கெட்டுவிடிருந்தது. மரணப்படுக்கையில் ”என்னை வேலூருக்குக் கொண்டு செல்லுங்கள்…”என்று கதறினார். கசக்கவில்லை வாழ்க்கை ”இந்த அழகிய நிலத்தில் ஆசை தீர வாழ்ந்து மறைந்தவர்கள் உண்டா?” என்று கேரளத்தைப்பற்றி பாடியவர் அவர்

அம்மா உடைந்துபோய்விடுகிறாள். சற்றே மனநலம் பாதிக்கப்பட்டது. தலையில் தண்ணீர் விடமுடியாது, ஜன்னி வரும் . ஆனால் பேரப்பிள்ளைகளை வளர்த்து மேலும் பல வருடங்கள் வாழ்ந்தாள். எத்தனை வீணான வாழ்க்கை. ஏன் அப்படி அது நிகழ்ந்தது?

வாழ்க்கையின் பெரும் புதிர்களை ‘ஈஸ்வரஹிதம்’ என்று சாதாரணமாக தாண்டிச்செல்கிறார் பாரதி. தனித்த வாழ்க்கையின் குரூரங்களை கண்ட அம்மா அதே வாழ்க்கையை ஏன் தன் மருமகளுக்குக் கட்டாயமாக்கினாள்? அம்மாவின் சொல்லை மகன் தட்டமாட்டான் என்று அறிந்திருந்தும் ஏன் மகனை குடிக்கக்கூடாது என்று அம்மா சொல்லவில்லை?

”சொல்லியிருந்தால் மகன் தட்டியிருப்பான் என்று அம்மாவுக்குத்தெரியும்”என்றார் லோகித தாஸ். ”ஓர் எல்லை உள்ளது. அந்த அம்மா அதை மீறிவிட்டார்”. வயலார் ராமவர்மா குடித்து அலைந்தது ஏன்? உள்ளூர அவர் ஏன் நிறைவில்லாதவர் ஆனார்? ”மறுக்கப்பட்ட அன்பை உலகில் எங்குமே மனிதன் கண்டுகொள்ள முடியாது…தேடித்தேடிச் சாகவேண்டும் என்பது விதி…”என்றார் லோகிததாஸ். பேரன்பால் தன் மகன் வாழ்க்கையைத் தின்று அழித்தார் அம்மா. பேரன்பால் தன்னை அம்மாவுக்கு பலிதந்தார் மகன்”.

மீண்டும் டோண்டு ராகவன். ஜெயமோகன் மேலும் ஜேசுதாஸை பற்றியும் எழுதுகிறார். அது எனது இப்பதிவுக்கு தேவையில்லை. நன்றிகெட்டத்தனத்தை குறித்து வள்ளுவர் எழுதியதை எடுத்து காட்ட நான் பதிவு போட்டால் அதற்கு உபயோகமானதாக அது இருக்கும் என்பது வேறு விஷயம். ஆவல் உள்ளவர்கள் ஜெயமோகனின் பதிவுக்கே சென்று பார்த்து கொள்ளலாம்.

வயலார் ராமவர்மாவின் அம்மாவின் பேரன்பு அவரை மட்டுமின்றி அம்மாவையும் ராமவர்மாவின் மனைவியையுமே அழித்து விட்டது. அதைத்தான்் ஐயன் வள்ளுவன் மறத்துக்கும் அஃதே துணை என்கிறார். சூர்ப்பனகையிடம் ராவணன் வைத்த அன்பு அவன் குலத்தையே அயித்தது. மகாபாரதத்தில் இம்மாதிரி எண்ணற்ற உதாரணங்களைப் பார்க்க இயலும்.

எமோஷனலாக பிளாக்மெயில்களைத்தானே தொலைக்காட்சி சீரியல்களில் செய்கிறார்கள்? “மெட்டி ஒலி” மாணிக்கத்தைவிட சிறந்த உதாரணம் தரவியலுமா? சரியோ தவறோ என் அன்னை சொல்வதே சரி என்று எத்தனை கணவன்மார்கள் படுத்துகின்றனர். பெண்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல. வயலார் ராமவர்மாவின் அன்னையே சிறந்த உதாரணம். முதல் மனைவி தான் ராமவர்மாவை பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்ற தனது சுயநலனுக்காகத்தானே தன் தங்கையை வற்புறுத்தி அவரை மணம் செய்ய வைக்கிறாள். அவள் மேல் உள்ள பாசத்தால்தானே அத்தங்கையும் தன் வாழ்வை பலிகொடுத்தாள். இவ்வரிகளை தட்டச்சிடும் போதெ என்னுள்ளே கோபம் கொப்பளிக்கிறது.

சமீபத்தில் 1969-ல் உயர்ந்த மனிதன் படத்தை நான் பார்க்க மறுத்ததன் காரணமே மறத்துக்கு வழி செய்யும் இந்த அன்பை பார்க்கப் பிடிக்காமல்தான். தன் மகன் சிவாஜியின் காதலியின் வீட்டுக்கு நெருப்பு வைத்து கொளுத்தும் ராமதாஸ் பிறகு சிவாஜி சவுக்கார் ஜானகியை திருமணம் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லி மிரட்டியே தன் காரியத்தை சாதித்து கொள்கிறார் என்ற கதையோட்டத்தைக் கேட்டதுமே அப்படத்தைக் காண நான் விரும்பவில்லை. இன்றுவரை முயுமையாக பார்க்கவில்லை. கடைசி சில காட்சிகள்தான் க்ளிப்பிங்களில் பார்த்தேன்.

இன்னமும் கோலங்கள் தொலைக்காட்சி தொடரில் அம்மாதிரி காட்சிகள் வரும்போது பார்க்க பிடிக்காமல் எழுந்து சென்றுவிடுவேன்.

எனது பாலிசி என்னவென்றால் யாரும் என்னை எமோஷனலாக பிளாக்மெயில் செய்ய அனுமதிக்கக் கூடாது; அம்மாதிரி செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய நபர்கள் என்பதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது