6/08/2008

துஷ்யந்தன், சகுந்தலை விவகாரத்தில் உண்மையாகவே என்னதான் நடந்ததாம்?

நம்ம நாடோடி இருக்காரே, அவருக்குன்னு அற்புதமான சந்தேகங்களெல்லாம் தோன்றும். இப்பத்தான் துச்சாசனன் அவிழ்த்து போட்ட புடவைகள் என்னாயின என்பதைப் பற்றி அவர் எழுதியதைப் பார்த்தோம். அவர் சாகுந்தலத்தையும் விட்டு வைக்கவில்லை. அதையும் என் நினைவிலிருந்தே எழுதுவேன்.

சொர்க்கத்தில் கவி காளிதாசனுக்கு ரொம்பவும் புகழ். அவனது காவியங்களை அவன் வாயாலேயே பாடிக் கேட்பதில் இந்திரனுக்கு மிக்க மகிழ்ச்சி. அப்படித்தான் பாருங்கள், அன்று சாகுந்தலத்தின் காட்சிகளை சுவைபட கூறிக் கொண்டு வருகையில், எதிர்பாராத விதமாக முன்கோபத்துக்கு பிரசித்தி பெற்ற துர்வாச மகரிஷி இந்திர சபைக்கு வந்து பிரவேசிக்கிறார். காளிதாசன் திடுக்கிடுகிறான். பாவம் அவன், அப்போதுதான் சகுந்தலை தன் காதலன் நினைவாக இருந்த கோலத்தில் அதிதியாக வந்த துர்வாசரை கவனியாது போக, அவரும் கோபமுற்று, "நீ யார் நினைவால் என்னை கவனியாது மறந்து போனாயோ, அவன் நினைவிலிருந்து நீ மறையக் கடவாய்" என சாபமிட, அதை கவனித்த சகுந்தலையின் அண்ணன் சாரங்கனின் மனைவி பிரியம்வதா பதறிப் போய் முனிவரிடம் சாப விமோசனம் யாசிக்க, அதற்குள் கோபம் தணிந்த துர்வாசர், "சாபம் இட்டது இட்டதுதான், ஆனால் சகுந்தலையின் விரலில் துஷ்யந்தன் காந்தர்வ விவாகத்துக்கு அறிகுறியாக இட்ட அந்த கணையாழி அவள் கையில் இருக்கும் வரை என் சாபம் காத்திருப்பில் இருக்கும். அது தொலைந்தால் துஷ்யந்தன் அதை மறந்து விடுவான், ஆகவே சகுந்தலையிடம் சாபத்தைப் பற்றி கூறாது மோதிரத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்படி வேண்டுமானால் கூறிக் கொள்" என்று கூறிவிட்டு அகல்கிறார்.

இப்போது காளிதாசனுக்கு தர்மசங்கடமான நிலைமை. நாடோடி மேலே இவ்வாறு எழுதுகிறார்:

இந்திரன்: வாருங்கள் துர்வாச மகரிஷி அவர்களே. ஆசனத்தில் அமருங்கள்.

துர்வாசர்: சரி, சரி. மங்களம் உண்டாகட்டும் தேவேந்திரா. (கண்ணை இடுக்கிக் கொண்டு பார்க்கிறார்), யார் அது காளிதாசனா, என்னப்பா சௌக்கியமா?

காளிதாசன்: (மென்று விழுங்கியவாறு) வணக்கம் மாமுனிவரே. இந்திரரே, நான் விடை பெறுகிறேன், பிறகு வருகிறேன்.

துர்வாசர்: இரப்பா, காளிதாசா? ஏன் இப்படி பம்முகிறாய்? என்னமோ இந்திரனுக்கு படித்து காட்டிக் கொண்டிருந்தாயே, என்ன அது?

காளிதாசன்: சாகுந்தலம் நாடக காவியம் மகாபிரபோ.

துர்வாசர்: அடேடே, நானும் கேள்விப்பட்டிருகிறேன். நாடகத்தை எழுதியவனே படித்து காட்டுவது என்பது என்ன அரிய செயல். நானும் கேட்கிறேன். நான் வரும்போது எங்கு நிறுத்தினாயோ, அங்கிருந்தே ஆரம்பி.

காளிதாசன் அழமாட்டாக் குறையாக ஆரம்பிக்கிறான்.

சகுந்தலை தன் கணவன் துஷ்யந்தனை எண்ணி படுத்திருக்கிறாள். வெளியே துர்வாச மகரிஷியின் குரல்:

துர்வாசர்: அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன்.

சகுந்தலை காதில் வாங்காது தன் காதல் கணவனை நினைத்து படுத்திருக்கிறாள்.

துர்வாசர்: (கோபத்துடன்) அறிவற்ற பெண்ணே, என்னையா அலட்சியம் செய்தாய், யாருடைய எண்ணத்தில் இதை செய்தாயோ, அவன் உன்னை மறந்து போகக் கடவது.

காளிதாசன் இதை படிக்கக் கேட்ட துர்வாசர் கண்களில் நெருப்புப் பொறி பறக்கிறது.

துர்வாசர்: நிறுத்து துஷ்டனே. இது என்ன அபாண்டம். நான் அந்தக் குழந்தையை சபித்தேனா? நடக்காத கதை எழுதி என்னை அவமதித்து விட்டாய். பிடி சாபம்.

இந்திரன் (பதறிப் போய்): பொருத்தருள வேண்டும் மகரிஷே.

துர்வாசர்: (இன்னும் கோபம் தணியாது): இல்லாததை கூறினால் எப்படி பொறுப்பது? நான் கோபக்காரன் என்பதை ஒத்து கொள்கிறேன். அதுக்காக இப்படியா? இம்மாதிரி அக்குழந்தை தன் கணவனை எண்ணியுள்ளாள் என்பதைக்கூட தெரிந்து கொள்ளாது நான் இப்படி முட்டாள்தனமான சாபம் கொடுப்பேனா? இது என்ன சிறுபிள்ளைத்தனமா இருக்கு. அடேய் காளிதாசா, உண்மையில் என்ன நடந்தது என்பதை கேட்டறியாமல் நீ எப்படி இதை எழுதலாம்?

காளிதாசன் (சற்றே அசட்டு தைரியத்துடன்): அதை அறிவேன் முனிசிரேஷ்டரே. வேண்டுமானால் துஷ்யந்தனையே வரவழைத்து கேட்டு விடலாமே.

அப்படியே இந்திரன் துஷயந்தனையும் சகுந்தலையையும் வரவழைக்கிறான்.

துர்வாசர்: துஷ்யந்தா, நீ ஏன் சகுந்தலையை மறந்தாய்?

துஷ்யந்தன் (திடுக்கிட்டு): இதென்ன புதுக்கதை, நான் எங்கே அவளை மறந்தேன்? அவள் என் காதல் மனைவியல்லவா?

இந்திரன்: பின்னே ஏன் பரதன் காட்டில் தனியாக தன் அன்னையுடன் வசித்தான்?

துஷ்யந்தன்: வேறு ஒன்றும் இல்லை. நானோ அரசன், சகுந்தலையோ அரச குடும்பத்தை சேராத பெண். ஆகவே நாட்டு மக்கள் அவளை ராணியாக ஏற்று கொள்ள சமயம் தேவைப்பட்டது. அதனால்தான் அவளை தனியாக குடித்தனம் வைத்தேன். அவ்வப்போது வந்து போய் கொண்டிருந்தேன். பிறகு மந்திரி பிரதானிகள், அரசவை உறுப்பினர்கள் ஆகியோரது மனதை மாற்றி சகுந்தலையை அரண்மனைக்கு வரவழைத்தேன். அதற்கு சில ஆண்டுகள் பிடித்தன, அவ்வளவுதான்.

துர்வாசர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்கிறார்.

துர்வாசர்: என்னப்பா காளிதாசா, இந்த திருப்பம் எனக்கே பிடிக்கவில்லையே, உன் கற்பனையே நன்றாக இருக்கும் போலிருக்கே. ஆகவே அப்படியே இருக்கட்டும் எனக்கு ஆட்சேபணை இல்லை.

துஷ்யந்தன்: வேண்டுமானால் சபித்த முனிவரின் பெயரை வேண்டுமானால் மாற்றி விடட்டுமா?

துர்வாசர்: வேண்டாம், அப்படியே இருந்து விட்டு போகட்டும். நானும் காளிதாசனின் காவியத்தில் ஒரு பாத்திரம் என்பதும் எனக்கு கௌரவமே.

காளிதாசன் மறுபடியும் ஆரம்பிக்கிறான்:

"அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன்". துர்வாசரின் சாபம் இடம்பெற, அவையில் உள்ள எல்லோரும் (துர்வாசர் உட்பட) உச் கொட்டுகின்றனர்.

மீண்டும் டோண்டு ராகவன். இப்பதிவை போடும்போது, திடீரென ஒரு பயங்கர சந்தேகம் வந்தது. அதாவது சகுந்தலையின் அண்ணன் மனைவியின் பெயரில் சந்தேகம். பிரியம்வதா என்றுதான் ஞாபகம். இருந்தாலும் சரி செய்து கொள்ள நண்பர் இரா. முருகனுக்கு ஃபோன் செய்தேன். அவர் கேட்டு சொல்வதாகக் கூறினார். ஸ்டெல்லா மேரீஸ் காலேஜில் பொருளாதாரப் பேராசிரியையாக இருக்கும் என் தங்கைக்கு ஃபோன் செய்து கேட்க, அவளும் அக்கல்லூரி வடமொழி பேராசிரியரை கேட்டு பிரியம்வதாதான் என உறுதி செய்தாள். இந்த விஷயத்தை முருகன் அவர்களுக்கு ஃபோன் செய்து தெரிவிக்க, அவரும் நேர்று இரவு வேறு ஒரு காண்டக்ஸ்டில் பிரியம்வதா என்ற பெயரைக் கேள்விப்பட்டதாகவும், இன்று அதே பெயரைக் கேட்பது ஒரு ஹைப்பர் லிங்க் போல உள்ளது என்று கூறினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

ஜீவி said...

பிரியம்வதா சரி; சாரங்கன் சரியா?..அதையும் சரிபாருங்களேன்..
சரிபார்த்து நீங்கள் சொன்னால் சரிதான்.

பொதிகைத் தென்றல் said...

நுனிமரத்தில் அமர்ந்து அடிமரம் வெட்டியை
நுண்மதி கவியாய் ஆக்கிய காளிமாதா

காளியின் அருள் பெற்றே கவிபுனைந்த
காளிதாசின் தேவலோக பிரவேசக் கற்பனை

மன்னன் துஷ்யந்தனை மாறு கோண்த்தில்
மண்புகழ் காப்பவனாய் சித்தரித்து
வாழ்த்த
துடிக்கும் கோபக்காரர் பிடிசாபம் எனும்
துர்வாச முனிவரையே சமாளித்தது
பிரமாதம்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது