நரசிம்மா:
1. ஜீ டிவி தமிழில் ஒளிபரப்பு தொடங்கி இருக்கிறார்களே, அவர்கள் முதலிடத்துக்கு வர முடியுமா?
பதில்: முயன்றால் முடியாதது இல்லை. ஆனால் நிகழ்ச்சிகள் உண்மையாகவே உள்ளூர் தமிழாக இருக்க வேண்டும். இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது போன்ற தோற்றம் எல்லாம் தரலாகாது. பை தி வே அதை இன்னும் பார்க்கவில்லை. எங்கள் கேபிள் டிவியில் தெரியவில்லை. இது கட்டணச் சேனல் என கேள்விப்படுகிறேன். அப்படியானால் எடுத்ததுமே டிபாசிட் காலிதான்.
2. தமிழில் சன் டிவிக்கு அடுத்தபடியாக ஆரம்பிக்கபட்ட ராஜ் டிவி ஏன் இன்று வரை கடைசி நிலையில் தள்ளாடுகிறது?
நிஜமாகவே அந்த சேனல் ஐயோ பாவம்தான். முதலில் சன் டீவி அதை மந்திரி மாறன் துணையோடு நசுக்கியது. பிறகு சன் டீவிக்கு கெட்ட காலம் ஆரம்பித்தபோது, சில நாட்களுக்கு அதற்கு கலைஞரால் ஆதரவு வந்தது போன்ற தோற்றம். பிறகு கலைஞர் டிவி வர உள்ளதும் போச்சடா என ஆகி விட்டது. நிகழ்ச்சிகள் நடுவில் ப்ரொக்ராம் ப்ரமோஷன் என்ற கழுத்தறுப்புக்கு இவர்களே முன்னோடி என்ற வகையில் அந்த சேனல் எனக்கு ஏற்கனவே பிடிக்காது.
3. சன் டிவி ஜோடி பொருத்தம் பார்த்ததுண்டா?
பதில்: இல்லை. நான் பார்ப்பது கோலங்கள், கஸ்தூரி மற்றும் மேகலா மட்டுமே. பொதிகையில் ராமானுஜர். அவ்வளவே.
4. இந்து ராம் அவர்களை சாதி ரீதியாக விமர்சிக்கும் வீரவன்னியன் பதிவுக்கு உங்கள் பதில் என்ன?
இதில் வேடிக்கை என்னவென்றால் ஹிந்து ராம் அவர்களை யாரும் பார்ப்பன வெறியர் எனக் கூற மாட்டார்கள். ஆனால் வீர வன்னியனோ *அவரே கூறி கொண்டதுதான்) வன்னிய சாதி வெறியர். இதில் யார் யாரை விமரிசனம் செய்வது என்ற தராதரம் இல்லையா?
அனானி (18.10.2008 இரவு 08.58-க்கு கேட்டவர்):
2. மார்க்ஸ் என்பவர் காஷ்மீருக்கு சென்று வந்து ஒரு கட்டுரை ஜீனியர் விகடனில் எழுதி இருக்கிறார். இவர்கள் போன்றவர்கள் எண்ணம் என்ன?
தன் கூட்டிலேயே வெளிக்கிருத்தல் என்று இதை ஜெர்மானிய மொழியில் கூறுவார்கள் (Nestverschmutzung)
3. கிருஸ்துவ மதமாற்றம்தான் ஒரிசா கர்நாடகா கலவரங்களுக்கு காரணமா?
பதில்: அதுவும் காரணமே. இந்து மதத்தில் சாதிக் கொடுமை என்று போனால் கிறித்துவர்களிடமும் அது தலை விரித்து ஆடுகிறது. கிறித்துவர்களாக கன்வர்ட் ஆன தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதப்படுவதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அடி வாங்குகிறது. ஆகவே பழங்குடியினராக மாற எண்ணுகின்றனர். ஆனால் இந்துக்களில் இருக்கும் பழங்குடியினர் அதை ஆட்சேபிக்கின்றனர்.
4. சென்னையில் இந்து டைம்ஸ் ஆப் இந்தியா இதில் எது நல்ல பத்திரிக்கை?
என்னை பொருத்தவரை சென்னையில் இந்துதான். பம்பாயில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, தில்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அவ்வளவே.
5. செந்தழல் ரவி பாரதியார் தொடர்பாக ஒரு கட்டுரை பதிந்து இருந்தார் அது உண்மையான கட்டுரையா?
பதில்: சொந்த இடத்தை விட்டு வெளியிடத்தில் வாழ்வதென்பது கொடுமை. அதை தவிர்க்க சில சமாதானங்கள் செய்து கொள்ள வேண்டியுள்ளது. அதைத்தான் பாரதியாரும் செய்தார். செந்தழல் ரவி சொன்னது போன்ற விஷயங்கள் நடந்தன. ஆனால் அவர் நிலைமையில் இருந்து பார்த்தால்தான் புரியும்.
ரமணா:
1. ஜெட்ஏர்வேஸின் ஆட்குறைப்பு திடீர் வாபஸ் ? இடையில் என்ன நடந்தது?
பதில்: இதில் ஜெட் ஏர்வேஸின் போர் யுக்தியைத்தான் பார்க்கிறேன். முதலில் ஒட்டுமொத்த டிஸ்மிஸ். குய்யோ முய்யோ என பலர் கதறல். திடீரென நிறுவனத் தலைவரின் டிராமா. இப்போது எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இப்போது எந்த சம்பளக் குறைவுக்கும் மனத்தளவில் தயார். என்ன விளங்கிற்றா?
2. icici வங்கி உண்மை என்ன?
பதில்: நிலைமை அவ்வளவு மோசமில்லை என எனது நண்பர் கூறுகிறார். அவர் வங்கித் துறையில் நிறுவனத் தலைவருக்கு அடுத்த பதவியை வகித்தவர்.
3. மத்திய அரசின் வலிமையான உறுதிக்குப் பிறகும் அதன் பங்கின் வீழ்ச்சி ஏன்?
பதில்: பங்குகளின் வீழ்ச்சிகளைத் தடுக்க இயலாது. மட்டுப்படுத்தலாம். சற்று அசிங்கமாகக் கூறவேண்டுமானால் கோமணத்தால் மலத்தை அடக்க முடியுமா? பிய்த்துக் கொண்டு வராதா?
4. பிற வங்கிகளும், மென்பொருள் நிறுவனங்களும் சிக்கன நடவடிக்கை என்பது உண்மையா?
பதில்: சிறிது காலத்துக்கு இம்மாதிரி கலவர எதிர்வினைகள் இருக்கத்தான் செய்யும்.
5. இது எல்லாம் சரியாக 10 வருடம் என்பது உண்மையா?
பதில்: அப்படியெல்லாம் சரியாகக் கால அனுமானம் செய்ய இயலாது.
6. அமெரிக்கா போல் வீட்டு விலை குறைய வாய்ப்புள்ளதா?
பதில்: இங்கே இந்தியாவிலா? விலைகள் என்னதான் குறைந்தாலும் அவற்றை கொடுக்கும் நிலையிலும் மிகக் குறைவானவர்களே இருப்பார்கள்.
7. பொருளாதார தேக்கத்தை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பெரிதுபடுத்தி தங்கள் வருமானத்தை பெருக்குவது போலிருக்கிறதே?
பதில்: அவர்களாவது பிழைக்கட்டுமே. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியபோது எல்லா தொழிற்சாலைகளிலும் “வேலை காலி இல்லை” என்ற போர்டுகளே ஆட்சி செலுத்தியபோது அந்த சைன்போர்டுகளை வரைந்து விற்று காசாக்கியவர்களும் உண்டு என்பதை மறந்தீர்களா?
8. ரிலயன்ஸ் குழும பங்குகள்தான் எல்லாத்தையும் தீர்மானிப்பது போலுள்ளதே?
பதில்: சென்ஸக்ஸ் புள்ளிகளை நிர்ணயிப்பதில் அவற்றின் பங்குகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
9. உணவுப் பற்றாக்குறை வந்துவிடும் போலுள்ளதே
பதில்: வராது என்றுதான் நான் நம்புகிறேன்.
10. விவசாயப் பரப்பு குறைவது நல்லதிற்கில்லையே?
பதில்: உழவுத்தொழிலையும் லாபகரமாக மாற்ற வேண்டும். ஆனால் அதற்கு அரசியல் தைரியம் வேணது வேண்டும். மோடி மாதிரி ஒருவர் பிரதம மந்திரியாக வேண்டும்.
அனானி (18.10.2008 காலை 09.45-க்கு கேட்டவர்)>
1. விவசாய தொழிற்பேட்டைகள் அமைத்தால் உணவு உற்பத்தி பெருகுமா?
பதில்: இதே போன்ற கேள்விக்கு மேலே ரமணா அவர்களுக்கு சொன்ன பதில்தான் இங்கும்.
புரட்சித் தமிழன்:
1. அமெரிக்காவில் 700 சதுர அடி வீட்டு விலை ரூபாய் 70,000 உண்மையா?
பதில்: என்ன பாஸ்போர்ட் எடுப்போமா? அங்கு போய் வாங்குவோமா? முடியாது போலிருக்கிறதே. சொத்து வாங்க அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்
2. அமெரிக்காவின் ஜாதகம் சரியில்லையாமே? (தகவல் classroom 2007-sri.subbiah)
பதில்: நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் ஜாதகப்படி அதற்கு பல கெடுதிகள் விளையும் என பல ஜோசியர்கள் சமீபத்தில் 1947-ல் கூறியதாகக் கேள்வி.
3. 2022 வரை திண்டாட்டமாம்?
பதில்: அதற்கப்புறம் அந்த திண்டாட்டமே பழகிவிடும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.
4. இந்தியாவில் அந்த நிலை வராது என்ற உறுதியை நம்பாலாமா?
பதில்: பொருளாதார விதிகளை மீறாது இருந்தால் நம்பலாம்.
5. crr cut to 6.5 % from 9 % ,repo rate cut from 9% to 8%, what next?
பதில்: எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என இருக்கிறார்கள்.
இளவேனில்: (கேள்விகள் இங்கிருந்து வந்துள்ளன)
டோண்டுவின் புதியபாணி பதிலை எதிர்பார்த்து.(நிகழ்காலச் சூழ்நிலை சார்ந்து)
01. பலவீனர்களின் பாதையில் தடைக்கல்லாக இருந்த கருங்கல் பலசாலிகளின் பாதையில் படிக்கட்டாக அமைகிறது.
பதில்: எஸ்கிமோ பிரதேசத்துக்கு ஒரு ஃப்ரிட்ஜ் விற்பனையாளனை அனுப்பினார்கள். அவன் அங்கே போனதும் தந்தி அனுப்பினானாம். “இங்கு ஒருவரும் ஃப்ரிட்ஜ் உபயோகப்படுத்துவதில்லை. ஆகவே நமக்கு வாய்ப்பில்லை” என்று. இன்னொரு விற்பனையாளனை அதே இடத்துக்கு அனுப்பிய போது அவன் அனுப்பிய தந்தி: “இங்கு இதுவரை யாருமே ஃப்ரிட்ஜ் வாங்கவில்லை, நமக்கு இங்கு அதிக விற்பனை ஏற்படுத்தும் வாய்ப்பு அமோகமாக உள்ளது” என்று.
02. உழவன் என்பவன் எப்போதும் அடுத்த ஆண்டு பணக்காரனாக இருப்பான்.
பதில்: உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று சும்மாவா சொன்னார்கள்?
03. தனது குளத்துக்கு தன்னை ராஜாவாகக் கருதிக்கொண்டிருக்கும் கிராமத்து மீன் சமுத்திரத்தில் வேலைக்காரனாக இருக்க சம்மதிக்காது.
பதில்: இதை பல மாதிரி புரிந்து கொள்ளலாம். சாதனைகள் செய்தவரைக்கும் போதும் என்று இருப்பவர்கள் கிராமத்து மீனாகவே இருக்க விரும்புவர். ஆனால் அதே சமயம் சமுத்திரத்திலும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மீனும் கிராமத்து மீனே அதை பொருத்த வரையில் என்பதை நினைவில் கொண்டால் அங்கும் வெற்றி பெற இயலும். அவரவர் தேவையைப் பொருத்தது அது. பல வங்கி ஊழியர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வைப் பெற விரும்ப மாட்டார்கள். அந்த மனோபாவமும் இதில்தான் வரும்.
04. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி எதையும் இலட்சியம் செய்யாமல் சேவையில் ஒன்றி விடுவதுதான்
பதில்: இதில் சம்பந்தப்பட்டவரின் முன்னுரிமைகள் என்ன என்பதுதான் முக்கியம். சிலருக்கு உடனே புகழ் தேவை. சிலருக்கு அவ்வாறு இல்லை. இத்தீர்மானம் அவரவரால்தான் எடுக்கப்படவேண்டும். சமீபத்தில் 1957-58 கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு படித்த போது அவதானம் செய்த இப்பாடல் நினைவுக்கு வருகிறது.
கண் துஞ்சார்,
பசி நோக்கார்
மெய் வருத்தம் பாரார்
கருமமே கண்ணாயினார்!
05. அடிமையாக இருப்பது தெரியாதவனுக்கு சுதந்திரத்தைச் சொல்லிப் பயனில்லை. அடிமைத்தனத்தின் சுமை யாருக்குப் புரியுமோ அவர்களுக்குத்தான் சுதந்திரத்தின் சௌகரியமும் புரியும்.
பதில்: அடிமை வாழ்வில் அடிமைக்கு முக்கியமாக முடிவுகளை எடுக்கும் பிரச்சினை இல்லை. அதை எடுக்க இயலாதவர்கள் அனேகம். சரியோ தவறோ நான் செய்ய வேண்டியதைச் செய்வேன். அதன் பலனையோ கெடுதியையோ நானே பார்த்து கொள்கிறேன் என்று இருப்பவர்கள் குறைவே. அப்படிப்பட்டவர்களை அவ்வாறு செய்ய்விடாது தடுக்கும்போது அவர்களுக்கு அடிமைத்தனம் என்பது சுமையே.
06. கலை மூலம் சொல்லப்படும் கருத்துக்கள் உள்ளத்தைப் பண்படுத்த வேண்டுமேயல்லாது புண்படுத்தக் கூடாது.
பதில்: இது எல்லா செயல்பாடுகளுக்கும் பொருந்துமே.
07. மாடு காணாமல் போனவன் காதில் எப்போதும் மணியோசை கேட்டுக்கொண்டேயிருக்கும்.
பதில்: ஒரு படத்தில் வடிவேலு பார்ப்பவர் எல்லாருமே பார்த்திபனாக தெரிவார்கள். பார்த்திபன் என நினைத்து அவர்களிடம் பேசக்கூடாததைப் பேசி வடிவேலு உதை வாங்குவார். படத்தின் பெயர் மறந்து விட்டது.
08. மூடிய கைகளுடன் மனிதன் பூமிக்கு வருகிறான் திறந்த கைகளுடன் அதை விட்டுப் போகிறான்.
பதில்: ஆடையின்றி பிறக்கிறான். இறக்கும்போது ஆடை அணிவித்து மயானத்துக்கு கொண்டு சென்றாலும் கடைசியில் துணி உருவப்படுகிறது என்பதுதான் நிஜம். ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் இறக்கும்போது மாயானத்துக்கு செல்லும்போது இது என்ன வாழ்க்கை என சலிப்பு ஏற்படுவது நிஜம். இதை மயான வைராக்கியம் என்பார்கள். ஆனால் வீட்டுக்கு திரும்ப வந்ததும் மனைவியிடம் இரவு என்ன சமையல் என்பதை கேட்டு உறுதி செய்து கொள்வார்கள்.
09. வளைகிற முள் நுழையாது.
பதில்: அதாவது அந்த முள் குத்தாது என்கிறீர்கள். அதே சமயம் அம்மாதிரி முள்ளை வைத்து கொண்டு குத்தின வேறு முட்களை எடுக்கச் சொல்வதும் விரயம்தானோ?
10. வண்டி வந்தால் வழி தானாக உண்டாகும்.
பதில்: உண்மைதான். பல வேலைகள் குவிந்து மலைப்பாக இருக்கும்போது ஏதாவது ஓரிடத்தில் ஆரம்பிப்பது நலம். செய்யச் செய்ய வேலைகள் தானே பூர்த்தியாகும்.
11. வேலையில்லாதிருந்தால் அது ஆயிரம் நோய்களை கொண்டுவரும்.
பதில்: இது பற்றி நான் போட்ட பதிவிலிருந்து:
“ஐ.டி.பி.எல்.-லில் நான் இருந்தபோது ஒரு விஷயம் நடந்தது. எங்கள் ஜி.எம். ஒருவர் தனது 58 வயதில் ஓய்வு பெற்றார். எனக்கு ஒரே ஆச்சரியம். நான் அவரது வயது ஐம்பது இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். இளமை தோற்றம் + சுறுசுறுப்பு நிறைந்த மனிதர். அவருக்கு நல்ல பார்ட்டி கொடுத்து வழியனுப்பினோம்.
ஒரு மாதம் கழித்து அவர் ஒரு வேலையாக அலுவலகம் வந்தார். எனக்கு ஒரே திகைப்பு. மனிதர் இப்போது 70 வயதினராக தோறம் அளித்தார். அலுப்பு நிறைந்த முகம். முழுத்தலையும் நரைத்திருந்தது. "என்ன சார் உடம்புக்கு" என்று நான் கேட்டேன். "அதெல்லாம் ஒன்றும் இல்லை, மனதுதான் சோர்வாக இருக்கிறது" என்றார் அவர். அப்போது எனக்கு வயது 40. ஒரு நிமிடம் யோசித்தேன், ஏன் இவ்வாறு நடக்கிறது என்று. இந்த மனிதரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு கம்பெனியே சகலமும். எப்போதும் வேலை, வேலை என்று ஆழ்ந்திருப்பார். வீட்டை கவனிக்கக் கூட நேரமின்றி இருந்திருக்கிறார். ஆனால் இப்போது? திடீரென வேலை இல்லை. வேறு பொறுப்புகளும் இல்லை. குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து வேலைக்கு போயாயிற்று. இவரது தேவை குடும்பத்துக்கு இல்லை. ஆகவே தான் உபயோகமற்றவனாகி விட்டோம் என்ற காப்ளக்ஸே அவருக்கு வந்திருக்கிறது. சட்டென்று முதுமை தாக்கி விட்டது”.
12. நன்மைக்கு நன்மை செய் தீமைக்கும் நன்மையே செய்.
பதில்: இதை கடைபிடிப்பது மிக்கக் கடினம். அதுவும் எப்போதுமே இது பலன் தரும் என்று சொல்ல இயலாது. ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டுவது போல இருக்கிறது. அவ்வாறு இருந்தால் வடிவேலு மாதிரி உதை வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். நான் அப்படியில்லை. ஒரு கன்னத்தில் அடித்தால் அடித்தவர் இரு கன்னத்திலும் முறையே பத்து அறைகள் கொடுப்பேன்.
13. சாவின் அருகில் சென்றவனுக்குத்தான் உயிரின் மதிப்புத் தெரியும்.
பதில்: உயிர் இழப்பதென்பது சரிசெய்து கொள்ளமுடியாத விஷயம். அத்தருணத்தில் பல விட்டுப் போன விஷ்யங்கள் ஞாபகத்துக்கு வரும். அதையெல்லாம் செய்யமுடியாமல் போகிறதே என்ற துயரமும் அதிகம் வரும். ஆக அச்சமயம் உயிர் தப்பித்தால் அவற்றையெல்லாம் செய்யலாமே என்ற சந்தோஷத்தில் எல்லாமே மதிப்பாகத் தெரியும், அடுத்து சில நாட்களுக்கு? பிறகு, பழையக் குருடி கதவைத் திறடிதான்.
14. பழத்தைச் சாப்பிட விரும்பின் பூவைப் பாதுகாக்க வேண்டும்.
பதில்: அதாவ்து அப்பழத்தின் பூவை என்று தெளிவாக சொல்லாவிட்டால், பலர் மல்லிகைப் பூவை பாதுகாத்து விட்டு மாங்காய்க்கு ஆசைப்படுவார்கள்.
15. ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால் அந்த இடத்தில் இரு குற்றமுள்ளவள் வருவாள்.
பதில்: உண்மை. கட்டிய மனைவியை அவள் குழந்தை பெறவில்லை என குற்றம் சாட்டி கொடுமைப்படுத்தி அவளை விவாகரத்து செய்தான் ஒருவன். பிறகு இன்னொருத்தியை திருமணம் கட்டினான். வெகு சீக்கிரம் குழந்தை பிறந்தது. ஆனால் இவனுக்கு விஷயம் தெரியாது. அதாகப்பட்டது, இவன்தான் மலடன். அப்புறம் அடுத்த மனைவிக்கு ஏது குழந்தை என்கிறீர்களா? அவள் திருமணத்துக்கு முன்னமேயே வேறு ஒருவனிடம் கருவுற்றவள். அந்த வேறு ஒருவன் திடீர் மரணமடைய, மேலே குறிப்பிட்ட அந்த மனிதன் மாட்டினான். அவனை திருமணம் செய்து கொண்டாள். நான் கூறுவது நிஜமாகவே நடந்த நிகழ்ச்சி. சம்பந்தப்பட்ட கணவன் மீது எனக்கு சுத்தமாகவே அனுதாபம் இல்லை.
16. மற்றவர்கள் உனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கலாம் ஆனால் நல்ல குணத்தை களங்கப்படுத்த முடியாது.
பதில்: களங்கத்தால் தனிப்பட்ட முறையில் பல இன்னல்கள் வந்தால் அதை துடைக்க முயல்வதே நலம். நீங்கள் கூறுவது போல எல்லாம் இருந்தால் கட்டுப்படியாகாது.
17. தமிழருக்கு அன்றும் இன்றும் தொலைநோக்கு மருந்துக்கும் கிடையாது.
பதில்: அதானே. நல்லாட்சி தரக்கூடியவர்களை விட்டு இலவச டிவி தருவர்களுக்கெல்லாம் ஓட்டளித்தவர்கள்தானே அவர்கள்.
18. பெரும்பாலானவர்கள் வாழ அஞ்சுகிறார்கள் அதுபோல சாகவும் அஞ்சுகிறார்கள்.
பதில்: அதிர்ஷ்டவசமாக சாவு இதையெல்லாம் பார்த்து வராமல் நின்று விடுவதில்லை.
19. வாழ்வது எப்படியென அறிவோமாயின் சாவும் அதுபோல ஒன்றுதானென அறிவோம்.
பதில்: நோய், தேய்வு, மூப்பு, மற்றும் இறப்பு என்ற மாபெரும் பொய்களை மெய்யென்று நம்பி மோசம் போகாமல் பொய்யென்று தெளிந்தால் போதும். ஒரே கணத்தில் நீயும் மெய்ஞ்ஞானியாகலாம். ஏனெனில், உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
20. எதையும் உருவாக்கத் தெரியாதவன் உடைக்கச் சொல்ல அருகதையற்றவன்
பதில்: அப்படியானால் யாருமே எதையும் விமரிசனம் செய்ய முடியாது.
21. ஆய்வு என்பது மன விருப்பத்தை கருத்தாக்குவதல்ல
பதில்: எந்த ஆய்விலும் முதலில் சில அனுமானங்களுடனேயே இறங்குவார்கள். ஆனால் அந்த ஆய்வின் மூலம் தான் முதலில் செய்த அனுமானங்கள் தவறு எனத் தெரியும்போது அவற்றைத் தூக்கியெறியத் தயங்கக் கூடாது. தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் பல வெற்றியடையாத அனுமானங்கள் உள்ளன. அவற்றையே பிடித்து தொங்கியிருந்தால் அவர் நாம் அறியும் எடிசனாக வந்திருக்க இயலாது.
22. கொட்டிய பிறகு தேள் என்று அறிந்து கொள்ளாதீர்கள்
பதில்: ஆம். தேள் கடிப்பட்டவர்களை பார்த்தாவது நீங்கள் தேளிடம் போகாதீர்கள். போதை பழக்கத்தில் சீரழிபவர்களை பார்த்த பிறகும் அதில் என்னதான் இருக்கிறது என பார்த்து விடலாமே என அசட்டுத்தனமாக போகிறவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய வரிகள் அவை.
23. ஒவ்வொரு காரியத்திற்கும் உரிய காரணம் அதற்குள்ளேயே இருக்கிறது
பதில்: சோழியன் குடுமி சும்மா ஆடுமா? ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போக மாட்டான்.
24. முட்டாள்களை அறியும் பொறுமை இல்லாதவர் அரசியலில் இருக்க முடியாது
பதில்: உண்மை. அதனாலேயே ராஜாஜி அவர்கள் அரசியலில் அதிக காலம் இருக்க இயலவில்லை. அதே சமயம் முட்டாள்களை சகித்து அரசியல் நடத்துபவர்கள் தனக்காக தீக்குளிக்கும் முட்டாள் தொண்டர்களின் தியாகத்தின் பேரில் மேலும் மேலும் வளர்வார்கள்.
25. அரசியலில் ஈடுபடாதே ஈடுபட்டால் அதுதான் உனக்கு செத்த வீடு
பதில்: அவ்வாறு ஈடுபட்டு மற்றவர்கள் வீட்டை செத்த வீடாக ஆக்குபவர்களும் உள்ளனரே.
நக்கீரன் பாண்டியன்:
1. சில மாநிலங்களில் பிற மாநிலத்தவரை தாக்கி உயிர் பலிகூட ஆவதாக செய்திகள். இது பற்றி?
பதில்: இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய நிகழ்ச்சிகள். விட்டால் நாட்டின் ஒருமைப்பாட்டுகே தீங்கு விளைவிக்கக் கூடியவை.
2. மத்திய அரசின் திடீர் இடதுசாரி பாசம் பற்றி?
பதில்: வரப்போகும் தேர்தல் குறித்து பயம்?
3. பாஜக வின் ஆட்சி வாய்ப்பு பற்றி?
பதில்: மத்தியில் நன்றாகவே உள்ளது. அவர்களாக இதை தங்கள் ஒற்றுமின்மையின் மூலம் கெடுத்து கொள்ளாமல் இருந்தால் நலம்.
4. ரஜினியின் அரசியல் பிரவேச கண்ணாமூச்சு ஆட்டம் பற்றி?
பதில்: வின்னர் படத்தில் வடிவேலு கூறுவது போல இன்னுமாப்பா அவரை இந்த விஷயத்தில் நம்புகிறீர்கள்?
5. விஜய் ராஜேந்திரரின் திடீர் திமுக பாசம் பற்றி?
பதில்: ஐயோ பாவம் கலைஞர். மச்சி, பஜ்ஜி, கச்சி என்றெல்லாம் பேசி கலைஞரை அவர் டரியல் ஆக்கப்போகிறார்.
6. பாரதிராஜாவின் தமிழ் இன உணர்வு பற்றி?
பதில்: யாரைத்தான் நம்புவதோ.
7. நடிகர்களின் 1-ஆம் தேதி உண்ணாவிரத முயற்சி பற்றி?
பதில்: காந்தியடிகளால் தவம் போல நடத்தப்பெற்ற இந்த செயல்பாடு இப்போது கேலிக் கூத்தாகி விட்டது.
8. சு.சாமி அலுவலகம் தாக்கப்பட்டது பற்றி?
பதில்: பைத்தியக்காரத்தனம்.
9. தயாநிதி கலைஞர் சமிபத்திய சந்திப்பு (அழகிரியை மீறி) பற்றி?
பதில்: Damage limiting exercise
10. பங்கு வணிகத்தில் வெளிநாட்டாரின் சித்து விளையாட்டு பற்றி?
பதில்: அவர்கள் முதலீடு செய்தார்கள். இப்போது எடுக்கிறார்கள். உலகமயமாக்கலின் ஒரு அங்கமே இது. இதையும் மீறி செயல்பட்டாலாதான் வெற்றி.
11. லக்கிலுக் பதிவாளருக்கும் ஒரு சில பதிவாளருக்கும் உள்ள கருத்து மோதல் பற்றி?
பதில்: எனக்கு இதில் கருத்து கூற ஒன்றுமில்லை.
12. மீண்டும் போலிகளின் நடமாட்டம் பற்றி?
பதில்: இப்போது நிலைமை என்னவென்றால் போலிகள் உடனே அடையாளம் காணப்படுவார்கள்.
13. வார்த்தை பிரயோகங்கள் அத்துமீறல் பற்றி?
பதில்: வள்ளுவர் கூறியபடி நா காக்காவிட்டால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு
14. சன் டீவி நிர்வாகம் திரைப் படங்களை வாங்குவது (அதீத விளம்பரம்) பற்றி?
பதில்: இம்மாதிரி ஒட்டு மொத்தமாக திரைப்படங்களை நம்புவது சரியல்ல. சுவாரசியமான நிகழ்ச்சிகளை திரை கலப்பில்லாமல் தரலாம். அவையே வேஸ்ட் என்னும்போது அவற்றுக்கான அதீத விளம்பரங்கள் வேஸ்டோ வேஸ்ட்.
15. கலைஞரின் சமாதான முடிவு (இலங்கை) பற்றி?
பதில்: நான் ஏற்கனவே கூறியபடி, “தியாகம் என்றால் இதுதான் தியாகம். இரண்டரை ஆண்டுகள் மீதியுள்ள மாநில முதல்வர் பதவியையோ, அதைத் தெருகின்ற அரசையோ, அதற்கு ஆதரவு அளிக்கின்ற எம்.எல்.ஏக்களையோ விட்டுவிடவில்லை. ஆறு மாத காலம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளக்கூடிய மந்திரிப் பதவிகளை விட்டு விடவில்லை. இன்னும் மிஞ்சிப் போனால் ஆறு மாதங்களே இருக்கப் போகும் எம்.பி. பதவிகளை மட்டும் துறந்தார். இன்று அதுவும் இல்லை என ஆகிவிட்டது”.
16. வீட்டு விலைகள் 40-50 % குறையலாம் என்பது பற்றி?
பதில்: சகட்டு மேனிக்கு அனியாயமாக உயர்ந்த விலைகள் கீழே இறங்கினால் மகிழ்ச்சியே. ஆனால் அவற்றை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் அளவில் நிதி நிலைமை இல்லாவிட்டால், “காசுக்கு நாலு புடவை விற்றாலும் நாயின் சூத்து அம்மணம்தான்” என்ற பழைய சொலவடைதான் நிலைக்கும்
17. பங்கு வர்த்தகம் கவிழ்ந்தது பற்றி?
பதில்: அதை சூதாட்டமாக நினைத்து ஆடினால் இதுவும் ஆகும் இன்னமும் ஆகும்.
18. நிதி அமைச்சரின் சமாதானம் (இந்தியப் பொருளாதார சமன் நிலை) பற்றி?
பதில்: எல்லோருக்கும் புரியும் உண்மைகள், ஆனால் ஏற்கத்தான் மனம் வராது. எப்படி வரும்? அதை மறந்து செயல்பட்டதில் எல்லோரும் வாங்கிய அடி சும்மாவா?
18. பெட்ரோல் விலை குறைப்பு இழுத்தடிப்பு பற்றி?
பதில்: இன்னும் சில நாட்களில் அது பற்றிய அறிவிப்பு வரும் என நினைக்கிறேன்.
19. ஒபாமாவின் இந்திய எதிர்ப்பு நிலை பற்றி?
பதில்: நான் ஏற்கனவே கூறியபடி அமெரிக்காவில் நான் ரிபப்ளிகன் கட்சியைத்தான் ஆதரிக்கிறேன். (அதை ஜார்ஜ் புஷ்ஷே அறிவார் என முரளி மனோஹர் கத்துகிறான்).
20. தமிழ்மணத்தில் நிலவும் இன்றய சூழ்நிலை பற்றி?
பதில்: என்ன சூழ்நிலை? நன்றாகத்தானே உள்ளது?
அனானி (30.10.2008, காலை 09.05-க்கு கேட்டவர்)>
please comment in dondu style
1. sudden arrest of directors ameer & seeman after the speech of jeyalalitha?
பதில்: இன்னும் சில மணி நேரங்களில் அவர்கள் அரெஸ்ட் ஆகப் போகிறார்கள் எனத் தெரிந்த நிலையிலும் கலைஞர் அவர்களுக்கு மனித சங்கிலி தருணத்தில் பாசத்தோடு கையசைத்ததை எண்ணி எண்ணி பலர் மறுகுகின்றனரே.
2. viduthalaipuli's threat rumour to jeyalalitha?
பதில்: இது வதந்தி அல்ல உண்மை. அவரது பாதுகாப்பை அதிகரித்தே ஆகவேண்டும்.
3. is it true that all brahmin journalists are against srilanka tamils?
பதில்: வேலுப்பிள்ளை பிரபாகரனை ஆதரிப்பவர்கள் எல்லோருமே பிள்ளைமாரா?
4. disputed remarks by actor ajit/arjun about srilankan tamils?
பதில்: ஆதரவு என்பதெல்லாம் தன்னிச்சையாக வரவேண்டும். அதையெல்லாம் பயமுறுத்தி வரவழைக்க இயலாது. அதிலும் இந்த விஷயத்தில் அதை கண்டிப்பாக செய்யலாகாது. புலிகள் நலனும் இலங்கைத் தமிழரின் நலனும் ஒன்றல்ல.
5. rajinikanth is going to condut a separate fast in support of tamils?
பதில்: காலை டிபனை ஒரு பிடி பிடித்து விட்டு மாலை வரை உண்ணாமல் இருப்பதெல்லாம் உண்ணாவிரதமா? நல்ல கேலிக்கூத்து.
வால்பையன்:
//இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும்//
வந்தால்:
1. இந்தியா முழுவதும் மது விலக்கை அமுல் படுத்துவாரா?
பதில்: கண்டிப்பாக அது அவரது முன்னுரிமைகளில் வராது. ஏனெனில் நாட்டின் தொழில் முன்னேற்றம்தான் முக்கியம். பூரண மதுவிலக்கு ப்ராக்டிகலே இல்லை என்பதுதான் நிஜம்.
2. ஈழதமிழர்களும் பூர்வீகத்தில் இந்தியர்களே அவர்களுக்காக குரல் கொடுப்பாரா?
பதில்: தூக்கு தண்டனை பெற வேண்டிய பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து அவருக்கு தண்டனை பெற்றுத் தரும் பிரயத்னங்களைத்தான் முதலில் செய்வார் என நம்ப விரும்புகிறேன்.
3. மத சார்பில்லாத சட்டம் நிறைவேற உத்திரவாதம் உண்டா?
பதில்: நமது நாடு அரசியல்சட்டப்படி ஏற்கனவே மதசார்பற்ற நாடுதான். புதிதாக இதற்காக சட்டம் தேவயில்லை.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
7 hours ago