1/15/2009

துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2009 : பகுதி - 3

ஆண்டுவிழா கூட்டத்தின் இரண்டாம் பகுதி
ஆண்டுவிழா கூட்டத்தின் முதல் பகுதி
இப்போது சோவின் பேச்சு ஆரம்பம். அப்படியே verbatim ஆக தர இயலவில்லை, மன்னிக்கவும்.
ஸ்டாலின் ரொம்ப தாராளமானவர் குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறேன் பேர்வழி என்று 40 வயதுக்காரர்களுக்கெல்லாம் பணம் தருகிறார். வாக்காளர்கள் குழந்தை மனம் உடையவர்கள் என்பது இதனால் நிரூபணம் ஆகிறது (அரங்கத்தில் ஒரே சிரிப்பு). மேலும் திருமங்கலத்தில் தேர்தல் அன்று கூட வீடு வீடாகப் போய் ஓட்டு போடாதவர்களையும் ஓட்டு சாவடிக்கு போக வைத்துள்ளார்கள். அதனால்தான் இந்த ரிகார்ட் போலிங். இது எல்லோருக்குமே தெரியும். முதல் 6-7 மணி நேரத்துக்கு 40% ஆக இருந்த ஓட்டளிப்பு கடைசி ஒரு மணியளவில் கிட்டத்தட்ட 90 %-க்கு உயர்ந்தது. ஆனால் பாராளுமன்றத்துக்கு 40 தொகுதிகள் உள்ளன. அத்தனைக்கும் திருமங்கலம் மாதிரி ட்ரீட்மெண்ட் சற்று கடினமே. பணம் பற்றி திமுகவுக்கு பிரச்சினை இல்லை. எப்படியும் அதெல்லாம் ஒரு முதலீடுதான். ஆள்பலம்தான் பிரச்சினை.

பிறகு சில எண்களை மாநிலவாரியாகத் தர ஆரம்பித்தார். பிறகுதான் தெரிந்தது, அது பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை என. இவ்வளவு நடந்தும் கடுமையான நடவடிக்கை ஏதும் இல்லை என்பதில் மட்டும் மத்திய அரசு தெளிவாகவே இருந்திருக்கிறது. இது சம்பந்தமாக தீவிரவாதிகளுக்கு வாக்குறுதி தராததுதான் குறை. ஆனால் மும்பையில் வெளிநாட்டவரும் இறக்க, அரசுக்கு வேறு வழியில்லை. உலகின் கவனமே அல்லவா இந்தியா மேல் திரும்பியது! ஏதோ சுரணை வந்துள்ளாது. இருப்பினும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மிகக் கடுமையானவை, இந்தியாவில் அதை செய்ய முடியாது என்று கூறுகிறார். என்ன கடுமை பாழாய் போகிறது? கொலைக்கு தூக்கு தண்டனை கடுமைதான் அது வேண்டாம் என்பீர்களா? எல்லாம் இசுலாமியருக்கு விரோதமாக பார்க்கப்படும் என ஏன் அச்சப்பட வேண்டும்? இசுலாமியர்களையும் தீவிரவாதத்தையும் ஏன் முடிச்சு போட்டு, தீவிரவாதிகள் மேல் நடவடிக்கை எடுத்தால் இசுலாமியர் ஆட்சேபிப்பார்கள் என பயப்பட வேண்டும்? கண்டிப்பாக எந்த தேசபக்தியுள்ள இசுலாமியரும் அவ்வாறு சொல்லவில்லை. அரசே இவ்வாறு அவர்களை கட்டம் கட்டுகிறது. இந்த அழகில் அரசு தன்னை மதச்சார்பற்றது என எப்படி கூறிக் கொள்ள இயலும்?

இப்போது சிதம்பரம் உள்துறை மந்திரியாகியிருக்கிறார். அவரும் கடமை தவறாமல் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விட ஆரம்பித்து விட்டார். நிதி அமைச்சகத்தை சரி செய்யவேண்டும் என்பதற்காகக் கூட மன்மோகன் இவரை உள்துறை மந்திரியாக்கினார் என நினைக்கத் தோன்றுகிறது. நிதி மந்திரியாக இருந்தபோது அவர் சில அறிக்கை விடுவார் பங்குகள் விலை ஏறும், சில நாட்கள் கழித்து இன்னொரு அறிக்கை விடுவார். அதே பங்குகள் விலை இறங்கும். நடுவில் அந்த பங்குகள் கைமாறியிருக்கும். எப்படி இதெல்லாம்?

பயங்கரவாதிகளின் பணம் பங்கு மார்க்கெட்டில் விளையாடுகிறது என ஜெயலலிதா இட்ட குற்றச்சார்ரை நிதி மந்திரி மறுத்தார் ஆனால் ஜெயலலிதா கூறியதற்கு அடிப்படைகள் உண்டு என கூறப்படுகிறது. மன்மோகன் சிங்கைத் தவிர எல்லா மந்திரிகளும் ஊழல் குற்றச்சாட்டில் உள்ளனர், ஆனால் அவர் மட்டும் நாணயமானவர் எனக் கூறினாலும் அவர் சும்மா இருந்து இதையெல்லாம் பார்த்ததற்காக குற்றவாளியாகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்து கொள்வோம். திடீரென முதலில் வந்தவர்களுக்கே முதலில் காண்ட்ராக்டை அளிப்போம் என்பதற்கு இது என்ன விளையாட்டா? நாலு அளிப்புகளை பார்த்து சிறந்ததைத் தேர்ந்தெடுக்காமல் இது என்ன விபரீத வேலை? ராசா கூறுகிறார் ட்ராய் அமைப்பு சொன்னதைத்தான் தான் நிறைவேற்றியதாக. ஆனால் அந்த அமைப்பு இதை மறுக்க, முன்னால் நியமித்த விலைக்குத்தான் விற்றேன் என மந்திரி கூறுகிறார். எத்தனை முன்னால் நிர்ணயித்த விலை எனக் கேட்டால் 12 ஆண்டுகளுக்கு முன்னால் நிர்ணயித்த விலை என்கிறார். அவர் வீட்டை 12 வருடத்துக்கு முந்தைய விலையில் விற்பாராமா?

இதில் கருணாநிதி என்ன செய்கிறார்? அவர் குடும்பத்தில் சமாதானம் ஏற்பட்ட உடனேயே ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ந்த விஷயமாம். ஸ்பெக்டரம் ஊழலைத் தீர்ப்பதற்காகவே இந்த சமாதானம் போடப்பட்டது என நினைக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் சன் டீவியில் போட்டு கிழிப்பார்களே என்ற உதறல். திடீரென அவர் கூறுகிறார், ராசா தலித் ஆகவே அவரைக் குற்றம் சாட்டுகிறார்கள் என்று. ஏன் அவருக்கு இந்த சாதி வெறி? சமயத்தில் பத்திரிகைகளுக்கே பூணூல் போட்டுவிடுகிறார். இந்த விஷயத்தில் அவரைவிட சிறந்த புரோகிதர்கள் இருக்கமுடியாது. திடீரென தான் சூத்திரன் ஆகவே தன்னை எதிர்க்கிறார்கள் என்கிறார். இல்லாவிட்டால் என் ராசி அப்படி என நொந்து கொள்கிறார். ராஜாஜியை தவிர்த்து எல்லா மந்திரிகளுமே பார்ப்பனர் அல்லாதவர்தான் (இந்த இடத்தில் நான் டோண்டு ராகவன் ஒன்று கூறுவேன், அவர் ஜெயலலிதா பெயரையும் பார்ப்பன முதல் மந்திரிகளில் சேர்த்திருக்க வேண்டும்). இம்மாதிரி கருணாநிதி பேசுவதெல்லாம் இந்த விஷயங்களில் அபத்தமாக உள்ளது. ஆக என்ன நடந்தது? தயாநிதி மாறன் ராசாவை குற்றம் சாட்டுகிறார், ராசா மாறனை பி.எஸ்.என்.எல். விஷயத்தில் குற்றம் சாட்டுகிறார். இப்போது குடும்ப சமாதானம் வந்தது எல்லா பிரச்சினைகளும் தீர்ந்தன.

இதுவரை இருந்ததிலேயே அதிக ஊழல் நிறைந்தது இந்த மத்திய அரசு. சி.பி.ஐ. அமைப்பை மிகக் கேவலமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றதால்தான் முலாயம் சிங் மேல் தங்கள் நடவடிக்கை என சி.பி.ஐ. கோர்ட்டில் கூறி வாங்கி கட்டிக் கொண்டது. மாயாவதியின் விஷயத்திலும் இதே மாதிரித்தான் நடந்தது. அவர் அதை வெளிப்படையாகவே கூறினார். க்வாட்ரோக்கி தன் பணத்துடன் எஸ்கேப் ஆவதற்கும் சி.பி.ஐ.தான் வழி செய்தது. நல்ல வேளை சி.பி.ஐ. மேல் க்வாட்ரோக்கி வழக்கு போடவில்லை. போட்டிருந்தால் அதற்கும் நஷ்ட ஈடு அரசு தந்திருக்கும்.

ஒரு தனிப்பட்ட மனிதர் வேணுகோபால் மேல் ஏற்பட்ட விரோதம் காரணமாக அன்புமணி ஏ.ஐ.ஐ.எம்.எஸ் விவகாரத்தில் ஒரு மத்திய சட்டமே கொண்டு வந்தார். இந்த கூத்தும் நடந்தது.

சேது சமுத்திர திட்டத்தையே எடுத்து கொள்வோம். எத்தனை பல்டிகள்? முதலில் ராமரே கற்பனை என்றார்கள். அதனால் இந்துக்கள் கோபம் கொள்வார்கள் என்ற நிலை வந்ததும், ராமரே சேது பாலத்தை அழித்தார் என கதையை திருப்பினார்கள். ஆதாரம் கேட்டால் கம்ப ராமாயணம் என்கிறார்கள். வால்மீகி ராமாயணம்தான் அத்தாரிட்டி ராமாயண விஷயத்தில். இதில் கம்பனையோ துளசிதாசரையோ அத்தாரிட்டியாக எடுப்பது சரியில்லை. வால்மீகி என்பவர் ரிஷி. அவர் உண்மையே எழுதினார். ஆனால் கம்பரும் சரி துளசிதாசரும் சரி கவிஞர்கள். அவர்களது கற்பனைக்கும் வேலை கொடுத்தனர். அப்படியே கம்பன் இது குறித்து எழுதியதாகக் கூறப்படும் கவிதையே இடைச்செருகல் என கம்பன் கழகமே கூறிவிட்டது. மத்திய ரசு இந்த கூத்துக்களையெல்லாம் கருணாநிதியை திருப்திப்படுத்தவே செய்தது.

பிறகு சோ அவர்கள் மும்பை அட்டாக் பற்றி அந்துலே உளறியதை எடுத்து கொண்டார். கார்க்கரே என்னும் போலீஸ்காரரை இந்துக்கள்தான் சுட்டுக் கொன்றனர் என்ற அபாண்டத்தை கூறி பாகிஸ்தானை சந்தோஷப்படுத்தினார். அவரை பதவியிலிருந்து தூக்கியெறிய மத்திய அரசுக்கு தைரியம் இல்லை. ஏனெனில் அதே இசுலாமிய ஓட்டு பிரச்சினை. இவ்வாறெல்லாம் செய்தால்தான் ஓட்டுபோடுவோம் என எந்த இசுலாமியரும் கூறவில்லை. இவர்கள்தான் பயப்படுகிறார்கள். இவ்வகையில் காங்கிரஸாரைவிட பெரிய மதவெறியர்கள் இருக்க இயலாது.

அடுத்து வருவது அமர்நாத் கோவில் சொதப்பல். தானே கொடுத்த நிலத்தை அரசு திரும்ப எடுத்து கொண்டது போன்ற அவலம் எங்குமே நடக்காது. இதற்கும் காரணம் காஷ்மீரில் முக்தி முகம்மத் சயீதை திருப்திப் படுத்தும் முயற்சியே தெரிகிறது. பங்களாதேஷில் இருந்து ஊடுருவலை தடுக்க மனமில்லை, அதே இசுலாமியர் கோபிப்பார்கள் என்ற பயம். கந்தமாலில் கிறித்துவர்கள் மீது நடந்த தாக்குதல்களை சோ கண்டித்தார். சம்பந்தப்பட்ட இந்துக்கள் செய்தது அக்கிரமம் என்றும் கூறினார். ஆனால் அதற்கு முன்னால் இந்து சாமியார் கொல்லப்பட்டதற்கு மட்டும் ஏன் ஒருவரும் கண்டிக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினார். ராஜ் தாக்கரே அவ்வளவு கூத்துகளை நிகழ்த்தும்போது அற்ப ஓட்டுகளுக்காக அரசு வேடிக்கை பார்க்கிறது.

சோ அவர்கள் பேச்சு இன்னும் ஒரு பதிவு வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

Vijay said...

உங்களது நேரடி ரிபோர்ட் துக்ளக் ஆண்டு விழாவை நேரில் பார்த்த effect தருகிறது. வாழ்க உமது பணி.

Anonymous said...

\\ ராஜாஜியை தவிர்த்து எல்லா மந்திரிகளுமே பார்ப்பனர் அல்லாதவர்தான் (இந்த இடத்தில் நான் டோண்டு ராகவன் ஒன்று கூறுவேன், அவர் ஜெயலலிதா பெயரையும் பார்ப்பன முதல் மந்திரிகளில் சேர்த்திருக்க வேண்டும்). \\


ஜெயலலிதா அம்மையாரின் குடுமபம் ஐயங்கார் வகுப்பை சேர்ந்தது என்றாலும் அவர்கள் இதுவரை, பார்ப்பன சமுதாய காவலர், கொள்கை பரப்புச் செயலர்,அஞ்சா நெஞ்சர்,இன மான முரசு, அண்ணன் முரளி மனோகர் போல்,பார்ப்பனரை ஆதரித்து வெளிப்படையாக பேசியது கிடையாது என்ற காரணமும் , MGR அவர்களால், அதிமுகவில் தன் வாரிசாய் அறிவிக்கப் பட்ட நாள்முதல் தேவரின மக்களின் பெரும் பகுதி மக்களால், ஜெ யை தங்களில் ஒருத்தி என எண்ணுவதாலும்( தேவரின மக்களின் சுவீகார புத்ரி போல்),
சோ அவர்கள் ஜெ பெயரை பிற ஜாதி முதல்வர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பாரோ?

dondu(#11168674346665545885) said...

@அனானி:
ராஜாஜி மட்டும் பார்ப்பனரை ஆதரித்து பேசினாரா? ஜெயலலிதா ஆம் நான் பார்ப்பனத்தி என வெளிப்படையாக சட்டசபையில் அறிவித்தார். அதற்கு என்ன சொல்வீர்கள்? அவ்வாறு அவர் சொன்னதை நான் தவறாக நினைக்கவில்லை என்பதையும் இப்போது கூறிவிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//ராஜாஜி மட்டும் பார்ப்பனரை ஆதரித்து பேசினாரா?//

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சரியார் இதையெல்லம் கடந்தவர் அல்லவா?

dondu(#11168674346665545885) said...

//சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சரியார் இதையெல்லாம் கடந்தவர் அல்லவா?//
ஆம், கண்டிப்பாக. எனது பின்னூட்டமும் அதைத்தான் கூற வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//ஜெயலலிதா ஆம் நான் பார்ப்பனத்தி என வெளிப்படையாக சட்டசபையில் அறிவித்தார்//


இதை மறந்திருந்த மக்களுக்கு,அதிமுக தொண்டர்களுக்கு ஞாபகம் படுத்தி விட்டீர்கள்.இனி அதிமுகவின் எதிர் காலம்?

வால்பையன் said...

நம் மக்களுக்கு ஆறிப்போனால் எதுவுமே பிடிக்காது, அதனால் தான் சோவே ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை மீண்டும் எழுதாமல் சத்யம் பிரச்சனைக்கு போய் விட்டார்.


மக்களின் இந்த ஞாபகமறதி தான் அரசியல்வாதிகளுக்கு வரப்பிரசாதம்.

Anonymous said...

//சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சரியார் இதையெல்லாம் கடந்தவர் அல்லவா//
----
எதைக் கடந்தவர்...? குலக் கல்வி தேவை என்றாரே
அதை வைத்துச் சொல்லுங்களேன்....

dondu(#11168674346665545885) said...

@அனானி
அவதூறாக குலக்கல்வி என அழைக்கப்பட்ட திட்டத்தை பற்றி நான் இங்கு பதிவு போட்டுள்ளேன். அதை பின்னூட்டங்களுடன் சேர்த்து பார்க்கவும்.

http://dondu.blogspot.com/2006/08/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது