1/15/2009

டோண்டு பதில்கள் - 15.01.2009

அனானி (120 கேள்விகள் கேட்டவர்):
76. சமையற்கலை படிப்புகள் நல்ல வேலைவாய்ப்பை இளைஞர்களூக்கு தருமா?
பதில்: எது எப்படியானாலும் மக்கள் சாப்பிடுவது நிற்கப்போவதில்லை. அதிலும் குடும்பத்தை விட்டு தொலைதூரம் செல்பவர்களுக்கு ஹோட்டல் சாப்பாடுதான் துணை. இருக்கவே இருக்கின்றன கல்யாணங்கள், கருமாதிகள் ஆகியவை. இத்தொழிலை மேற்கொள்பவர்கள் விஞ்ஞான கண்ணோட்டத்துடன் தமது தொழிலை நடத்துவார்களாயின் வெற்றி நிச்சயம். வேலை என்ன வேலை, சுண்டைக்காய்! திறமை இருந்தால் பலருக்கு வேலை தரலாம்.

77.பொதுவாய் விடிகாலை எத்தனை மணிக்கு விழித்து எழுவீர்கள்?
பதில்: காலை ஐந்து மணியிலிருந்து, ஆறு மணிக்குள். படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதே வலது கை தன்னிச்சையாக கணினியை ஆன் செய்து விடும். பல் தேய்த்து முகம் கழுவிக் கொண்டு வந்தால் கணினி திறந்திருக்கும். பிறகு என்ன வேலைதான்.

78. இரண்டு மனைவி உள்ள கணவன்கள் பாக்கியசாலிகளா? இல்லையா?
பதில்: ஒன்றுக்கு மேல் மனைவி வைத்திருந்தால் தண்டனை சட்டம் தருகிறதோ இல்லையோ வாழ்க்கை தந்து விடும். அதுதான் இரண்டு மாமியார்கள்.

79. இன்றைய தமிழகத்தில் எழுத்தாளர் வாழ்க்கை வளமாய் இருக்கிறதா?
பதில்: வறுமையும் புலமையும் என்னும் தலைப்பிட்ட எனது பதிவில் இது பற்றி கூறியுள்ளேன். அதன் முக்கிய இழையே வெறுமனே எழுத்தை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்த இயலாது என்பதே.

80. தற்சமயம் பதிவுலகில் உண்மையான ஜென்டில்மேன் யார்?
பதில்: நான் பார்த்தவர்களிலிருந்து, பத்ரி, மா.சிவகுமார், என்றென்றும் அன்புடன் பாலா.

81. அரசியலில் அடிக்கடி கட்சி மாறுகிறவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: பிழைக்கத் தெரிந்தவர்கள்.

82. நேற்றைய தமிழகம், இன்றைய தமிழகம், நாளைய தமிழகம் ஒப்பிட்டு கருத்து சொல்லவும்?
பதில்: நேற்றைய தலைவர்கள், அவர்களது இன்றைய புதல்வர்/புதல்வியர், அப்புதல்வர்/புதல்வியரின் நாளைய புதல்வர்/புதல்விகளின் கையில் தமிழகத்தின் தலவிதியை ஒப்படைத்து விட்டு கம்மென்று கிடக்கும் தமிழகம் என்றுதான் அஞ்சுகிறேன்.

83. சிறைகளில் அபின், கஞ்சா போன்ற லாகிரி வஸ்துக்கள் கும்மி அடிக்கின்றனவாமே?
பதில்: வேற ஏதாவது புதுசா நியூஸ் இருந்தா சொல்லுங்களேன்.

84. நடிகர் சேரன் தொடர் வெற்றியை தக்கவைக்காததற்கு என்ன காரணம்?
பதில்: படத்தை எங்கு முடிக்க வேண்டுமோ அதற்கு மேல் ஒரு ஃபிரேம் கூட அதிகப்படியாக வரக்கூடாது என்றிருக்கிறார் போலும்.

85. தமிழகத்தில் விற்பனையில்/தரத்தில்/நம்பகத்தன்மையில் நம்பர் ஒன் நாளிதழ்/வார இதழ்/மாத இதழ் வரிசைப்படுத்துக?
பதில்: தரம் என்று பார்த்தால் துக்ளக், கல்கி, ஆனந்தவிகடன் ஆகியவை. மற்ற விஷயங்கள் சம்பந்தமாக பதில் சொல்லும் அருகதை எனக்கில்லை. லக்கிலுக்கை வேண்டுமானால் கேளுங்கள்.

86.தமிழ்க் கடல் அய்யா நெல்லைக் கண்ணன் அவர்களின் விஜய் டீவியில் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" எப்படி?
பதில்: அதை ஒருமுறைகூட கேட்டதில்லை. எங்கள் வீட்டில் சன் டிவிதான் இல்லாவிட்டால் பொதிகை எப்போதாவது ஜெயா. தமிழ்க்கடல் கன்ணன் அவர்கள் துவக்கிய தனது வலைப்பூவிலும் முதலில் தன்னை தமிழ்க்கடல் என்றுதான் குறிப்பிட்டிருந்தார். அதை அவரே சொல்லிக் கொண்டால் நன்றாக இராது, மற்றவ்ர்கள்தான் கூற வேண்டும் என பொருள் வரும்படி பின்னூட்டமிட்டேன். அது ஏற்கப்படவில்லை, ஆனால் தமிழ்க் கடல் என்ற விருது மறைந்தது. இது உங்கள் தகவலுக்கு மட்டுமே.

87. விஜய் டீவி "நீயா? நானா? புகழ் கோபிநாத் அவர்கள் நடத்தும் "டாக் ஷோ" கேட்பீர்களா?
பதில்: இல்லை.

88. எல்.ஐ.சி.யின் ஊழியர் சங்கம் ஒன்றால்தான் இன்று அரசின்,தாராளமய கொள்கைக்கு "ப்ரேக்" போட முடிகிறது பார்த்தீர்களா?
பதில்: அதற்கு என்ன அப்படி பெரிய சக்தி இருப்பதாக கருதுகிறீர்கள்?

89. உங்களுக்காக மீண்டும் உழைக்க இந்த தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என அடிக்கடி கேட்பவர்கள்?
பதில்: சம்பாதித்தது போதவில்லை போலும்.

90. மக்கள்திலகம் எம்.ஜி.ஆருக்குப் பின் வள்ளல் யாரும் உள்ளனரா?
பதில்: வள்ளலாக இருந்து சோம்பேறிகளை வளர்க்காமல் இருப்பவர்களே நாட்டுக்கு தேவை. ஏழைக்கு ஒருவேளை மீன் சாப்பிட கொடுப்பதைவிட, அவனுக்கு மீன்பிடிக்க கற்று கொடுப்பதே மேல்.

91. தேர்தல் ஆணையத்தின் ஜாதிப் பாசம் ஜெயலலிதா மீது, எனவேதான் இந்த திடீர் திருமங்ககலத் தேர்தல் எனும் குற்றச்சாட்டு எழுவது பற்றி?
பதில்: யாருடைய சாதிமேல் பாசமாம்?

92. தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையதாய் இருக்க அதிக வாய்ப்புள்ளது?
பதில்: கூட்டணிகளை பொருத்துள்ளது. பார்ப்போம்.

93. ஸ்டேட் வங்கி ஊழியர் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்து தங்கள் (the best wage revision, 3rd benefit -enhanced assured pension, very low interest bearing personal loans-home loans-car loans, easy assured time bound promotions, request transfers as per their demand) தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்களே?
பதில்: இக்கேள்விக்காகவே எனது நண்பனுக்கு தொலைபேசி கேட்டேன். அவன் ஜி.எம். ஆக ரிட்டயர் ஆனவன். யார் சொன்னது, அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை என பொங்கி எழுந்து விட்டான்.

94. அடுத்த தி.மு.க./அதிமுக/தேமுதிக வின் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் கொட்டோ கொட்டென்று கொட்டுமா?
பதில்: நீயா நானா யார் பொதுப்பணத்தை இம்மாதிரி ரூட் விடுவது என்ற போட்டிதானே, கண்டிப்பாக இருக்கும்.

95. சென்னையில் பறக்கும் சாலை திட்டம் வரும் போலுள்ளதே? தரையில் அமைக்கும் சாலையிலே 40% கமிஷன் பார்க்கும் இவர்கள்,பறக்கும் சாலை திட்டத்தில்?
பதில்: புல்லுக்கு வார்க்கும் நீர் அவ்வப்போது நெல்லுக்கும் பொசிக்குமாம் என்று மாற்றிப் பாடவேண்டியதுதான்.

96. ஏட்டறிவு & எழுத்தறிவு, பட்டறிவு அல்லது அனுபவ அறிவு ஒப்பிடுக?
பதில்: நெருப்பு சுடும் என படிப்பது ஏட்டறிவு. ஆனால் உண்மையாக சூடுபட்டு அறிவது பட்டறிவு. அதை எழுதினால் வருவது எழுத்தறிவு.

97. ஊதாரி ,கஞ்சன், சிக்கனவாதி, காரியவாதி நிறை குறைகளை சொல்லுக (நிகழ்கால அரசியல் சார்ந்து)
பதில்: தேர்தல் வாக்குறுதிகளை தரும்போது ஊதாரி, அதை நிறைவேற்றுவதில் சிக்கனவாதி இல்லாவிட்டால் கஞ்சன், தொண்டர்கள் யாரேனும் சாதாரணமாக செத்தால் கூட அவர்கள் கட்சிக்காக போராடி செத்தார்கள் எனக்கூறி செயலாற்றுபவன் காரியவாதி.

98.ஒருவரின் கையெழுத்துக்கும் தலையெழுத்துக்கும் தொடர்புண்டா? கையெழுத்தை மாற்றினால் நல்லது நடக்குமா? இல்லை இது புருடாவா?
பதில்: எனக்கு இதில் நம்பிக்கையே இல்லை. ஆகவே அது புருடா என்றுதான் கூறுவேன். ஆனால் இதையே அவதானித்து பிழைப்பை நடத்துபவர்களும் உளர் என அறிகிறேன். ஆகவே இது பற்றி மேலே கருத்து ஒன்றுமில்லை.

99. பொதுத்துறை பங்குகள் விற்பனை பிரச்னை மீண்டும் தொடங்குமா? பதுங்குமா? பாயுமா?
பதில்: நீங்கள் அரசு கம்பெனிகளையா கூறுகிறீர்கள்? சாதாரண பொதுமக்களிடம் அவற்றுக்கான டிமாண்ட் இருக்காது.

100. டோண்டு ஐயா அவர்கள் தனது பதிவுகளை பதிவதற்கும், தனது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதுவதற்கும், தினசரி செலவழிக்கும் கால நேரம் எவ்வளவு?
பதில்: இதையெல்லாம் டைம் ஸ்டடி செய்து பார்க்கவில்லை. திடீரென தோன்றும்போது பதிவு போடுவேன். கணினியில் மொழிபெயர்ப்பு வேலை செய்யும்போது கூகள் டாக்கிலிருந்து பலூன்கள் வரும் மின்னஞ்சல வருகையை குறிக்க. அது தொழில் சம்பந்த மின்னஞ்சலா பின்னூட்டங்கள் என்பதும் தெரிந்து விடும். அதற்கேற்ப நடவடிக்கை. பிறகு செய்து கொண்டிருந்த வேலை தொடரும். இதில் எல்லாம் பேட்டர்ன் என்று கிடையாது. எனது நேரம் என்னுடையது. அதன் பங்கீட்டை பற்றிய முடிவு என்னுடையது. அதை கேள்விகேட்கும் அளவுக்கு மேலதிகாரி எனக்கில்லை. என்ன, அவ்வப்போது முரளி மனோஹர் கொஞ்சம் படுத்துவான்.
(மன்னிக்கவும் உங்களது மீதி கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த பதிவில்தான்)

அனானி (08.01.2009 பிற்பகல் 3.28-க்கு கேட்டவர்):
1. பாஜக புலிகளையும் இலங்கை பிரிவினையும் ஆதரிக்க போவதாக செய்திகள் வருகின்றன. ஒரு பெரிய கட்சி விடுதலைச் சிறுத்தைகள் தரத்திற்கு நடந்து கொள்ளலாமா?
பதில்: பாஜக தவறு செய்கிறது என்றுதான் நினைக்கிறேன்.


1. இந்தியத் திருநாட்டில் மேட்டுக்குடியினர்-நடுத்தர வர்க்கம்-வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ் வாழும் ஏழை வர்க்கம்- இந்தப் பிரிவுகளுக்கு அரசின் பொருளாதார அளவுகோல் என்ன?
பதில்: இந்த வறுமைக்கோடு என்னும் விஷயம் சமயத்துக்கு தகுந்த மாதிரி மாறுகிறது. இது பற்றி இந்த உரலுக்கு போனால் சில அடிப்படை விஷயங்கள் அறியலாம்.

2. அது சரியாய் நடைமுறைபடுத்தப்படுகிறதா?
பதில்: எங்கே சரியாக செய்கிறார்கள். அடிக்கடி வறுமைக் கோட்டை வைத்து புதுக்கோட்டுக்கு ஜூட் விடுவதுதான் நடக்கிரது.

3. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதற்கு காரணம், இப்போது தில்லுமுல்லுகள் செய்வது எளிது என்ற காரணமா?
பதில்: இதில் பல விஷயங்கள் உள்ளன. முன்னோர்களிடமிருந்து உயில் மூலம் பெற்ற வீடு தி.நகர்/அன்ணா நகர் ஆகிய இடங்களில் இருந்தால் அதன் மதிப்பு ஈசியாக ஒரு கோடியை எட்டுகிறது. அக்குடும்பத்தில் பிறந்ததைத் தவிர வேறு எந்த முயற்சியும் இங்கு மைதானத்தில் இல்லைதான். பங்கு மார்க்கெட் குறியீட்டு எண் 20000க்கு மேல் போனதில் பலர் கோடீஸ்வரரானார்கள். இப்போது அவர்களில் பலர் லட்சாதிபதி ஆகிவிட்டார்கள். வருந்துகிறார்கள்.

4. சத்யம் நிறுவனத்தில் நடந்தது போல் இன்னும் எதிலெல்லாம் இந்தக் கன்னக்கோல்தனங்கள் இருக்குமோ?
பதில்: விப்ரோ கூட தப்பிக்காது போலுள்ளதே.

5. வழக்கம் போல் சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து சட்ட மேதைகளின் துணை கொண்டு இந்த பொருளாதர முகமூடிக் கொள்ளைகாரர்களை காப்பாற்றி விடுவார்களா?
பதில்: அதற்கு ஏதாவது அரசியல்வாதியின் கொட்டைகளும் சிக்கலில் மாட்டியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் செல்வாக்கு அதிகம் பெற்றவராக இருக்க வேண்டும்.


அனானி (08.01.2009 இரவு 08.54-க்கு கேட்டவர்):
1. இவர்களில் யார் தியாகம்,இரக்க சுபாவம் மற்றும் வள்ளல் தன்மை களில் வெகுவாக மிளிர்கிறார்கள்? எந்த அடிப்படையில்? அ) மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன் ஆ) முல்லைக்கு தேரைக் கொடுத்த பாரி இ) கவச குண்டலத்தை தானம் கொடுத்தால் தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஒருவன் கேட்டுவிட்டான் என கழட்டிக் கொடுத்த கர்ணன் ஈ) புறாவுக்காக தன் தொடைச் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி.
பதில்: இதில் குழப்பத்துக்கு இடமே இல்லை. கர்ணனுக்கு மிஞ்சிய கொடையாளி இல்லை. அவன் இறந்ததும் தருமமே அழுதது. கடைசியில் கண்ணனுக்கு தனது தருமத்தின் பலன்களை தாரை வார்த்து தந்த போது அந்த தர்மத்தின் பலனையும் சேர்த்தே தந்தான். அவனுக்கு ஈடு ஏது?


அனானி (9.01.2009 காலை 08.20-க்கு கேட்டவர்):
1. மத்திய அரசால் மிகுந்த பரபரப்புடன் அறிவிக்கப் பட்ட பயிர் இன்சூரன்ஸ் திட்டம் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு உண்மையிலே பலனளித்துள்ளதா?
தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை பணப் பட்டுவாடா ஒழுங்கான முறையில் நடை பெறுகிறதா?
இதில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் வழி வகைகள் செய்து உள்ளதா? உழவர்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு குறைந்து காணப்படுகிறதா?
இத்திட்டம் ஒழுங்காகச் செயல்பட என்ன செய்தால் திட்டம் நல்ல வெற்றியைப் பெறும்?

பதில்: இதற்காக பல திட்டங்கள் உள்ளன. உதாரணத்துக்கு அவற்றுள் ஒன்றை இந்த உரலில் காணலாம்.

அனானி (10.01.2009 காலை 10.06-க்கு கேட்டவர்):
1. தமிழக அரசின் இலவசத்திட்டங்களில் அரசுக்கு அதிகம் செலவாகும் திட்டம் எது?
பயன் பெறும் மக்களின் பார்வையில் எந்த திட்டம் அவர்களுக்கு திருப்தியான மன நிறைவை தருகிறது?

பதில்: கேப்டன் விஜயகாந்தின் அடுத்த படத்தில் இதற்கான டயலாக் வரும், அதுவரை பொறுமை காத்து, உலக தொலைக்காட்சி சரித்திரத்திலேயே முதல் முறையாக ஒளிபரப்பப்படும் படங்களை பார்த்து தெளிவு பெறுங்கள்.

2. இலவசத் திட்டங்கள் எல்லாம் ஓட்டாய் மாறுமா? அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூட இந்த இலவசத் திட்டங்களால் அலங்கரிக்கப்படுமா?
பதில்: தமிழ் நாட்டில்தானே கேட்கிறீர்கள்? நிச்சயமாக.

3. இந்தியாவிலேயே தமிழக மக்கள்தான் அரசு அளிக்கும் அதிக இலவச் திட்டங்களால் அதிக பயனடைகிறார்களா?
பதில்: அதாவது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக இளிச்சவாயர்கள் இருக்கிறார்களா என கேட்கத்தானே நினைக்கிறீர்கள்? சிக்கிம் லாட்டரி என்ன பூட்டான் லாட்டரி என்னா எல்லாமே தமிழிலும் அச்சடிப்பதிலிருந்தே தெரியவில்லையா?

அனானி (10.01.2009 இரவு 08.52-க்கு கேட்டவர்):
1. அரசியலில் மறுமலர்ச்சி ஏற்பட அடிப்படையான தேவையான மாறுதல்கள் எவை எவை என சொல்வீர்கள்?
பதில்: உழைப்புதான் தேவை என்னும் மனோபாவம். அது வருமா? வந்தால் போதும்.

2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைய உண்மையிலே யாராவது முயற்சி செய்கிறார்களா?
பதில்: வாழ்க்கை போட்டிகளால் ஆனது. அதில் வெற்றி பெறுபவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்க இயலாது. அப்படியே செலுத்தி மேலும் வெற்றி பெற்றால் அது சமூகத்துக்கும் கிடைக்குமாறு பார்த்து கொண்டால், அவர்கள் செய்யும் ஆதிக்கத்துக்காக ரொம்ப வருந்த வேண்டியதில்லை.

3. ஜாதி உணர்வில் ஊறிய மக்கள் தெளிவு பெறுவார்களா?
பதில்: நான் பல இடங்களில் ஏற்கனவே கூறியதுதான். சாதி இருக்கிறது. அது வேண்டாம் என பேசும் எல்லோருமே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கீழ் நிழல் பெறுகின்றனர். அவர்கள் என்னதான் இல்லை எனக்கூறினாலும் அதுதான் நிஜம். சாதியால் கெடுதலும் உண்டு நன்மையும் உண்டு. வாழ்வில் பல விஷயங்கள் இம்மாதிரித்தான் இருக்கின்றன.

4. இளைய தலைமுறையினர் பலர் ஜாதி, மத பாதிப்புகள் இல்லாமல் இருக்கும் போது போன தலைமுறையினர் மனது மாறுமா?
பதில்: சாதி மத பாதிப்பு இல்லாமல் இருக்கிறோம் என கூறும் பலர் அவ்வாறு தாங்கள் சொல்வதுதான் பொலிடிகல்லி கரெக்ட் என நினைக்கிறார்கள்.

5. கலப்புத் திருமணங்கள் இந்த ஜாதிப் பூசல்களுக்கு ஒரு விடியலைத் தருமா?
பதில்: திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர். எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுதல் நல்லதல்ல.


அனானி (11.01.2009 இரவு 11.29-க்கு கேட்டவர்):
1. உங்களுக்கு பிடித்த நாடகக் கலைஞர் யார்? ஏன்?
பதில்: பலர் இருக்கிறார்களே. டி.எஸ். சேஷாத்திரி, மனோஹர், சோ, பூர்ணம் விஸ்வநாதன், விசு, மௌலி என கூறிக்கொண்டே போகலாம். காரணம்? அவர்கள் அற்புதமான கலைஞர்கள்.

2. எல்லா காலத்துக்கும் சேர்த்து உங்களுக்கு பிடித்த நாடகம்?
பதில்: அதெப்படி கூற இயலும்? மிகப்பெரிய பட்டியல் ஆயிற்றே.

3. முன்னைப் போல திசம்பரில் நாடக சீசன் உண்டா?
பதில்: போடுவதற்கு ஆட்கள் எங்கே? மகேந்திரன், சோ, ஆகியோருக்கு வயதாகி விட்டது. கிரேசியும் சேகரும் போடுகிறார்கள் போல, தெரியவில்லை. பதிவர் ராதாகிருஷ்ணனிடம் கேட்க வேண்டிய கேள்விகளையெல்லாம் என்னிடம் கேட்கலாமா?

4. சென்னை சங்கமம் மார்கழி சீசனுக்கு போட்டியா?
பதில்: சங்கமத்தில் அரசியல் அதிகம் விளையாடுகிறது. திறமையை விட உங்களுக்கு யாரைத் தெரியும் என்பதில்தான் அதிக முக்கியத்துவம் பார்க்கப்படுகிறது. ஆகவே மார்கழி சீசனுக்கு போட்டியாக அது இன்னும் வளறவில்லை.


மெட்றாஸ்காரன்:
1. தில்லியில் இந்தி நாடகங்கள் பார்த்தது உண்டா?
பதில்: தில்லியில் பார்க்கவில்லை. ஆனால் சென்னையில் “அத்ரக் கே பஞ்சே” என்ற ஒரே ஒரு நாடகம் பார்த்தேன். ரொம்ப ரொம்ப சுமார் ரகம்தான்.

2. உங்களுக்கு பிடித்த நாடகாசிரியர் (தமிழ் தவிர்த்து)?
பதில்: ஆல்பர்ட் காம்யூ

3. புத்தக விழாவில் என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?
பதில்: அ.முத்துலிங்கத்தின் மூன்று புத்தகங்கள் (அங்கே இப்ப என்ன நேரம், வியத்தலும் இலமே, மகாராஜாவின் ரயில் வண்டி), ஜெயமோகனின் இரு புத்தகங்கள் (சிறுகதைகள், குறுநாவல்கள்), நம்ம லக்கிலுக்கின் விளம்பர உலகம் அவ்வளவுதான். அவற்றைப் பற்றிய பதிவுகள் இனிமேல் போடுவேன்.

4. அத்வானியின் புத்தகம் எப்படி? (முடிந்தால் தனி பதிவு போடவும்)
பதில்: வாங்கவில்லை, படிக்கவில்லை. வாங்குவேன் எனத் தோன்றவில்லை.

5. முக்கியமாக தமிழ் ட்ரான்ஸிலேஷன் எப்படி?
பதில்: கருத்து ஏதுமில்லை, ஏனெனில் பார்க்கவில்லை.

சேதுராமன்:
1. திருமங்கலத்தில் லதா அதியமான் அவர்களது 50% மார்ஜினில் பெறப்பட்ட வெற்றிக்கு பிறகு அதிமுக முகாமில் வியூகங்களில் ஏதேனும் மாறுதல் இருக்குமா? அதுபோல விஜயகாந்த் மற்றும் சரத்குமார் தத்தம் கட்சியை கலைத்துவிட்டு மெயின் உஜாலாவுக்கு மாறிவிடுவார்களா?
பதில்: ஆளும் கட்சி பெற்ற வெற்றி மிக அதிக விலையில் பெறப்பட்டது. பலர் கண்ணை உறுத்துகிறது. அதே சமயம் அதிமுகவும் இந்த விஷயத்தில் சும்மா இல்லை. அதுவும் பண விநியோகம் செய்தது. ஆகவே அதற்கு ரொம்ப ப்ரொட்டஸ்ட் பன்ண வாய்ப்பு இருக்குமா எனத் தெரியவில்லை.


எம். கண்ணன்:
1. 'அயன்' படத்திற்கு எழுத்தாளர்கள் சுபாவும், 'மர்மயோகி'க்கு இரா.முருகனும், 'கனகவேல் காக்க' படத்திற்கு பா.ராவும் பெறும் ஊதியம், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கான Conflict of Interest rules படி சரியா?
பதில்: இதில் என்ன Conflict of Interest rules வரப்போகிறது? அனுமதி வாங்குவது நலம். சாதாரணமாக எழுத்தாளர்களுக்கு அனுமதி கொடுத்து விடுவார்கள். என்ன, இரண்டு நிறுவனங்களுக்குள் போட்டி இருக்கக் கூடாது. வேலையில் சேரும்போதே கண்டிஷன்கள் போட்டு சேர்ந்தவர்கள் உண்டு. எனது விஷயத்தில் நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்து கொண்டு போனேன். அதற்கென சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்பட்டன, அவ்வளவுதான்.

2. புத்தகமோ கதையோ எழுதினால் கிடைக்கும் சன்மானம் - வேலை பார்க்கும் நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளம்? எப்படி சமாளிக்கிறார்கள் (எழுதுவோர் ?) இதனால்(லும்) தான் சுஜாதா மனைவி பெயரில் எழுதினாரா?
பதில்: எல்லாவற்றுக்கும் வருமான வரி கட்டியாக வேண்டும். முழுநேர வேலை செய்யும் நிறுவனத்திடம் அனுமதி பெற்று வேலை செய்யும்போது இதெல்லாம் பிரச்சினை இல்லை. என்ன, அதிக வரி விகிதப் பிரிவில் இருப்பீர்கள். அவ்வளவுதான். சுஜாதா மனைவி பெயரில் எழுதியது ரங்கராஜன் என்ற பெயரில் ஏற்கனவே பலர் எழுதியதால்தான்.

3. ஸ்ரேயா போல் சமீப வருடங்களில் - இவ்வளவு கட்டான உடல்வாகு கொண்ட நடிகை யாரும் தமிழ் திரையுலகில் வரவில்லைதானே ? வெண்ணெய் போல் வழுக்கும் அந்த இடையும், அழகான வளைவுகள் கொண்ட சரியான அளவில் இரண்டு மார்புகளும்? ஆனாலும் அவர் சோபிக்காதது ஏன்?
பதில்: எனக்கு இது அவ்வளவு ஆச்சரியமாக இல்லை. ஏனெனில் சதா, நக்மா, ஜோதிகா என பெரிய பட்டியலே இருக்கிறதே?

4. டிரைவ் இன் உட்லண்ட்ஸ் இல்லாத நிலையில் - தற்போது போண்டா சிறப்பாக கிடைக்கும் இடம் எது ?
பதில்: திருவல்லிக்கேணி ரத்னா கஃபே.

5. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் என்ன தொழில் புரிகிறார் ? (தந்தை - அமைச்சர் மற்றும் வக்கீல், தாய் வக்கீல், மனைவி அப்பொல்லோவில் டாக்டர்)
பதில்: எனக்கு தெரியாது. ஒருவேளை இந்தப் பதிவுக்கு போனால் ஏதேனும் தெரிந்து கொள்ளலாம்.

6. ராமதாஸ், மாறன், கருணாநிதி, ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, வைகோ, வீரமணி - இவர்கள் குடும்பத்தின் வாரிசுகள் எந்த ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடத்தினைப் பெற்றார்கள் / பெறுகிறார்கள்? ஓப்பன் கோட்டாவா ? அவர்கள் சமூக ஒதுக்கீட்டிலா ? RTIயில் யாராவது கேட்டு தெரிந்து கொள்ள முடியுமா ? இல்லை கேட்டால் ஆட்டோ வருமா?
பதில்: அவர்கள் ஓபிசியில் வருகிறார்கள் என நினைக்கிறேன். தகவல் பெறும் உரிமை சட்டப்படி அப்ளிகேஷன் போடுங்களேன்.

7. தற்போது சென்னையில் ஒலிபரப்பாகி வரும் பண்பலை வானொலிகளில் எந்த வானொலி கேட்கும் பழக்கம் உண்டு? எது பெஸ்ட்?
பதில்: ரேடியோவே கேட்பதில்லை. ரொம்ப நாட்களுக்கு பின்னால் ஒரே ஒரு முறை வானொலி கேட்டது பற்றி இங்கு எழுதியுள்ளேன்.

8. உங்கள் ஏரியா (நங்கநல்லூர்) ரிடையர்ட் ஆசாமிகளுடன் அரட்டை அடிக்கும் பழக்கம் உண்டா (தினமும்)? பெரும்பாலும் எந்த டாபிக்குகளில் அரட்டை?
பதில்: இக்கேள்வியை யாராவது ரிடயர் ஆனவர்களிடம் அல்லவா கேட்க வேண்டும்? என்னைப் போன்ற இளைஞனிடம் கேட்கலாமா? ஜெயா டிவி நேர்காணலில் கூறியதுபோல எனக்கு ரிடயர்மெண்டே கிடையாது. கணினியில் மொழிபெயர்ப்ப்பை தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கையோடு அப்படியே கீபோர்டில் சரிந்து உயிரை விடுவதுதான் என்னைப் பொருத்தவரை உத்தமச் சாவு. ஆனால் அதற்கு முன்னால் பில் எல்லாம் செட்டில் செய்து விட வேண்டும். சங்கராபரணம் சாஸ்திரிகள் மேடையிலேயே உயிரை விட்டது என் மனதை விட்டு அகலவில்லை.

9. வாத்தியார் சுப்பையா சாரிடம் 5 கேள்விகள் கேட்கலாம் என்றால் என்ன கேட்பீர்கள்?
பதில்: 1. கவியரசு கண்ணதாசனை நேரில் சந்தித்த அனுபவம் உண்டா, அது எப்படி இருந்தது? 2. இப்போது திடீரென கவியரசு உங்கள் முன்னால் வந்து நின்றால் அவரை என்ன கேட்பீர்கள்? 3. பல நகரத்தார் வீடுகள் பராமரிக்க ஆள் இன்றி போவது பற்றி உங்கள் மனநிலை என்ன? 4. உங்கள் சமூகத்தில் உள்ள வள்ளல்களை பற்றி ஏதேனும் எழுதும் உத்தேசம் உண்டா? 5. பெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் பற்றி நான் இட்ட இடுகை, அதில் வந்த பின்னூட்டங்களிலுள்ள தகவல்கள் இவை தவிர மேலதிகத் தகவல்கள் இருந்தால் அதை பதிவாகப் போடும் எண்ணம் உள்ளதா?

10. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் யாருக்கு எத்தனை எம்.பி தொகுதிகள் வெற்றி கிடைக்கும் ? உங்கள் ஊகம் என்ன ? (திருமங்கலம் வெற்றிக்குப் பின்)?
பதில்: நிலைமை ரொம்ப குழப்பமாக உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

Anonymous said...

//மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?//

ஆவ்வ்வ்வ்... இந்த டார்ச்சர் எப்ப முடியும்?

Anonymous said...

//மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?//

ஆவ்வ்வ்வ்... இந்த டார்ச்சர் எப்ப முடியும்?

.))))

Anonymous said...

துகளக் 39 (தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடை பெற்ற சோவின் நிகழ்ச்ச்சி) பற்றிய பதிவுதான் உங்களின் அடுத்த பதிவா?

Vijay Subramanian said...

///கணினியில் மொழிபெயர்ப்ப்பை தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கையோடு அப்படியே கீபோர்டில் சரிந்து உயிரை விடுவதுதான் என்னைப் பொருத்தவரை உத்தமச் சாவு/// -- u are my hero dondu sir.U REALLY ARE.

வால்பையன் said...

// சமையற்கலை படிப்புகள் நல்ல வேலைவாய்ப்பை இளைஞர்களூக்கு தருமா?//

கண்டிப்பாக தரும்,
சுற்றுலா தளங்களில் வேலை வாய்ப்பு அதிகம்.

வால்பையன் said...

//கர்ணனுக்கு மிஞ்சிய கொடையாளி இல்லை. அவன் இறந்ததும் தருமமே அழுதது. கடைசியில் கண்ணனுக்கு தனது தருமத்தின் பலன்களை தாரை வார்த்து தந்த போது அந்த தர்மத்தின் பலனையும் சேர்த்தே தந்தான். அவனுக்கு ஈடு ஏது?//


காந்தி,நெல்சன்மண்டேலா, மார்டின் லூதர் கிங், ஸ்பைடர்மேன் இதில் யார் சிறந்தவர்கள் என்று ஒரு கேள்வி.
ஸ்பைடர்மேனே சிறந்தவன் என்று ஒரு பதில்.

உண்மையான கதாபாத்திரங்களையும், புனைவு கதாபாத்திரங்களையும் எப்படி குழப்பி கொள்ளமுடிகிறாது உங்களால்.

வால்பையன் said...

//சிக்கிம் லாட்டரி என்ன பூட்டான் லாட்டரி என்னா எல்லாமே தமிழிலும் அச்சடிப்பதிலிருந்தே தெரியவில்லையா?//

இன்றும் தமிழ்நாட்டில் வியாபாரம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

வால்பையன் said...

//சாதியால் கெடுதலும் உண்டு நன்மையும் உண்டு. வாழ்வில் பல விஷயங்கள் இம்மாதிரித்தான் இருக்கின்றன. //

இதில் எது அதிகம் என்று பார்த்தால் கெடுதலே அதிகமாயிருக்கிறது, சாதியினால் அடையும் நீங்கள் சொல்லும் நன்மைகளை!? வேறு வழியிலும் அடையலாம்.

அதனால் சாதி வேண்டாம்

வால்பையன் said...

//இளைய தலைமுறையினர் பலர் ஜாதி, மத பாதிப்புகள் இல்லாமல் இருக்கும் போது போன தலைமுறையினர் மனது மாறுமா?//

இளைய தலைமுறையினர் மேல் என்றுமே பெருசுகளுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை.

வால்பையன் said...

//திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர். எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுதல் நல்லதல்ல.//

இப்படி நாம பழம பேசிதான் முன்னேற்றங்களில் கோட்டை விடுகிறோம்.

sriram said...

ராகவன் ஜி
"இளைய தலைமுறையினர் பலர் ஜாதி, மத பாதிப்புகள் இல்லாமல் இருக்கும் போது போன தலைமுறையினர் மனது மாறுமா?//

சாதி மத பாதிப்பு இல்லாமல் இருக்கிறோம் என கூறும் பலர் அவ்வாறு தாங்கள் சொல்வதுதான் பொலிடிகல்லி கரெக்ட் என நினைக்கிறார்கள்"

உங்களது இந்த கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேன். நான் பொலிடிகல்லி கரெக்ட் என்பதற்காக சொல்லவில்லை, ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மேல்சாதி எண்ணம் என்றுமே எனக்கு வந்ததில்லை. எனக்கு அனைத்து சாதி / இன நண்பர்கள் உண்டு, அவர்கள் அனைவரையுமே நானும் எனது குடும்பமும் ஒரு முறை கூட பிரித்து பார்த்ததில்லை, பலர் கூறுவது போல் எங்கள் வீட்டில் என்றுமே தனி தட்டு/ டம்பளர் இருந்ததில்லை ( i mean guests plates are same for all the guests). நான் பெருமாள் கோவிலுக்கு சென்றதை விட தி.நகர் முப்பாத்தம்மன் கோவிலுக்கும் ஐயப்பன் கோவிலுக்கும் சென்றதுதான் அதிகம். எனக்கு தெரிந்த வரை எனது எந்த நண்பனும் / நண்பியும் சாதி வெறி பிடித்து அலைந்ததில்லை. I need to make a point clear here, I was born and raised in chennai, then lived in Delhli for about 5 years before I moved to Boston couple of years ago, I have always been exposed only to METRO culture, I have no idea about how the life would be in rural areas. My point of view is purely based on Urban living. But I can vouch that there was / is no சாதிய எண்ணம் in my mind and in most of the youngsters mind (ex . vaalpaiyan)
Having read all your posts so far, I know you would live and die for your ideas and convictions, but you may want to change this idea about the youngsters.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
Boston USA

Anonymous said...

\\ஸ்டேட் வங்கி ஊழியர் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்து தங்கள் (the best wage revision, 3rd benefit -enhanced assured pension, very low interest bearing personal loans-home loans-car loans, easy assured time bound promotions, request transfers as per their demand) தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்களே?
பதில்: இக்கேள்விக்காகவே எனது நண்பனுக்கு தொலைபேசி கேட்டேன். அவன் ஜி.எம். ஆக ரிட்டயர் ஆனவன். யார் சொன்னது, அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை என பொங்கி எழுந்து விட்டான். \\
state bank employees are getting the following retirement benefits.

1. gratuity
2.contributory p.fund
3. third benefit - pension

but in all other nationalized banks either benefit 2 or 3 is only allowed.

It is told that their demand respecting pension as third benefit at par with SBI, has been rejected .

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது