2/27/2009

எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதி 16, 17, 18, 19 & 20

இப்பதிவை எழுதுவது முரளி மனோகர்.

நான் பெரிசு கிட்ட சொல்லிட்டேன், இம்முறை நான்தான் பதிவு போடப்போறேன்னு. அதுவும் சரிடா கண்ணா ஜமாய்னு சொல்லிடுத்து.

முதலில் 26.02.2009 அன்னிக்கு உருப்படியா ஒரு காரியம் பண்ணித்து அது. அதாவது “எங்கே பிராமணன்” புத்தகத்தை வாங்கிண்டு வந்தது. அதையும் ஒரு முறை முழுக்க படிச்சேன். துக்ளக்கிலேயே தொடர்கதையா படிச்சதுன்னாலும் மறுபடியும் படிக்க உற்சாகமாகவே இருந்தது.

16-ஆம் பகுதி
முதல் சீனில் வசுமதி அசோக் எங்கேயாவது சாமியாராகப் போய்விடுவானோ என்ற தன் கவலையை நாதனிடம் தெரிவிக்க, அவரும் தன்னிடம் பாகவதர் ஏற்கனவே இது பற்றி பேசும்போது தனக்கு தெரிவித்ததைப் போல, எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என கூறுகிறார். அவன் சன்னியாசியாக வேண்டும் என இருந்தால் யாராலும் தடுக்கவியலாது. அதேபோல ஆகக் கூடாது என விதி இருந்தால், அவனே முயற்சி செய்தாலும் சன்னியாசியாக ஆக இயலாது எனக் கூறுகிறார். தனது கட்டுப்பாட்டில் இல்லாத விதி போன்ற விஷயங்களை பற்றி சிந்தித்து நேரத்தை வீணாக்குவதை விட அவரவர் வேலையைப் பார்ப்பதே மேல் என அவர் கூறுகிறார்.

புத்தகத்தில் இல்லாத முக்கிய நிகழ்ச்சி ஒன்று இந்த எபிசோடில் ஆரம்பித்தது. முதலில் சமையற்கார மாமி அசோக்கை கல்லூரிக்கு வழியனுப்புகிறார். பூனை ஒன்று குறுக்கே போக, சற்று அமர்ந்து விட்டு போகுமாறு கூற, அசோக் அதெல்லாம் தேவையில்லை என சொல்லிவிட்டு போகிறான். அன்றிலிருந்து அவனைக் காணவில்லை. எல்லா இடத்திலும் தேடுகிறார்கள்.

இப்போது சோவும் நண்பரும் திரைக்கு வருகிறார்கள். பூனை குறுக்கே போவது பற்றிய நம்பிக்கை பற்றியும் பேச்சு வருகிறது. அதை நம்புவதும் நம்பாததும் அவரவர் மனநிலையை பொருத்ததே என சோ கூறுகிறார். அம்மாதிரியான சகுனங்கள் ஒரு எச்சரிக்கைக்குத்தான் என நம்புபவர்களும் உளர். திருஞான சம்பந்தர் அரசி மங்கியர்க்கரசியின் அழைப்பை ஏற்று மதுரை செல்ல முயன்றபோது, அவரை திருநாவுக்கரசர் கோள்நிலை சரியில்லை எனக்கூறி தடுக்க அப்போது திருஞான சம்பந்தர் பாடுகிறார்:

“வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே”

ஈசனடியாருக்கு கிரகக் கோளாறுகளால் பாதகம் இல்லை எனக் கூறிவிடுகிறார். மேலே உள்ளதைப் பாராயணம் செய்தாலே கிரகக் கோளாறுகள் அண்டாது என காஞ்சிப் பெரியவர் கூறியதையும் சோ நினைவுபடுத்த, நம்ம பெரிசு ஆவென பார்த்து கொண்டிருந்தது.

அசோக்கை காணாது போலீஸ் ஸ்டேஷனில் நாதன் புகார் கொடுக்கப் போனால், அவரது புகாரை ஏற்காது ஜூரிஸ்டிக்‌ஷன் எல்லாம் சொல்லி அலைக்கழிக்க, அவர் அரசியல்வாதி வையாபுரியை அழைத்து புகாரை ஏற்கச் செய்கிறார்.

நாதனின் நண்பர் நீலகண்டன் தன் தரப்புக்கு அருகில் உள்ள ஆட்டோக்காரர்களை விசாரிக்க சற்று தள்ளு முள்ளு ஏற்படுகிறது.

பகுதி - 17.
குழப்பம் தொடர்கிறது. நாதன் போலீஸ் ஸ்டேஷனில் போய் விசாரிக்க அங்கிருப்பவர் மார்ச்சுவரியில் 7 பிணங்கள் இருப்பதாகவும் அவற்றில் அசோக்கின் உடல் இருக்கிறதா எனப் பார்க்க வருமாறு அவரிடம் கூற அவர் அப்படியெலாம் இருக்க முடியாது என கூறிவிட்டு வந்து விடுகிறார்.

மீண்டு சோ மற்றும் நண்பர். இறந்ததுமே மனிதன் என்பது மறைந்து வெறும் பாடி என ஆவது பற்றி பேச்சு போகிறது. உயிர் என்றால் என்ன சோ அடுக்கடுக்கடுக்காக கேள்விகள் கேட்க நண்பர் திகைக்கிறார். குழப்பறீங்க என குறைபட்டு கொள்கிறார்.

நாதன் வீட்டில் நீலகண்டன், நாதன் மற்றும் வசுமதி பேசிக் கொண்டிருக்க, சமையற்கார மாமி நீலகண்டன் கோபம் அடையும் அளவுக்கு பேசிவிட, எல்லோராலும் எச்சரிக்கப்படுகிறார். பேப்பரில் விளம்பரம் கொடுக்கலாமா என பேச்சு வருகிறது.

மீண்டும் சோ மற்றும் நண்பர். சோ இப்போது ஒருவிஷயத்தை போட்டு உடைக்கிறார். இந்த பேப்பரில் விளம்பரம் கொடுப்பதை வைத்து எவ்வளவு எபிசோட்கள் இழுக்கலாம் என்றெல்லாம் கோடி காட்டுகிறார். இது என்ன சோவே இவ்வாறு சொல்றாரே என பெரிசிடம் கேட்க, அது பேசாம சீரியலைப் பார்னு சொல்லிடுச்சு.

காஞ்சீபுரத்தில் பாகவதர் வீட்டில் அவரும் அவர் மனைவியும் அசோக் காணாமல் போனது பற்றி பேசுகின்றனர். அசோக் இம்மாதிரி விட்டேற்றியா இருந்ததுக்கு பாகவதர்தான் காரணம் என அவர் மனைவி அவரிடம் கூற அவர் ஒப்பு கொள்ளவில்லை.

சமையற்கார மாமியும் நீலக்ண்டனின் மனைவி பர்வதமும் பத்திரிகையில் வந்த விபத்து பற்றிய செய்தியை விவாதிக்கின்றனர். அதில் கொல்லப்பட்டவரின் முகம் அசோக்குடையது போல இருந்ததாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பகுதி - 18
பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து யார் யாரோ வந்து தாங்கள் அசோக்கை பார்த்ததாகக் கூறுகின்றனர். ஒருவன் நாதனிடமிருந்து ஏதோ கதை சொல்லி, 5000 ரூபாய் பணமும் பெற்று சொல்கிறான்.

சமையற்கார மாமியின் ஆலோசனை பேரில் ஒரு தேவி உபாசகரை பார்க்க நாதனும் வசுமதியும் செல்கின்றனர். பிறகு அவர் கூறியது பற்றி விவாதமும் நடக்கிறது.

இப்போது சீன் திருவண்ணாமலைக்கு செல்கிறது. அங்குதான் அசோக் இருக்கிறான். அசோக் ஒரு டீக்கடை முன்னால் நிற்க அந்த கடைக்காரர் அவனுக்கு டீயும் பிஸ்கட்டும் தருகிறார். இதென்ன ஓசியில் டீயும் பொறையும் இந்த பையனுக்கு கொடுக்கிறார்கள் என நண்பர் வினவ, அது கூட நாம் போய் நின்றால் கிடைக்காமல் போகலாம் என அவர் காலை வாருகிறார் சோ. அப்போது உதங்க மகாரிஷியின் கதையை கூறுகிறார். தாகத்துக்கு எப்போதும் குடிக்க நல்ல தண்ணீர் வேண்டும் என அவர் கிருஷ்ணரிடமிருந்து வரம் பெற்ருள்ளார். ஒரு சமயம் பாலைவனத்தில் நாவறள அவர் துன்பப்படும்போது அவர் எதிரில் அருவருக்கத்தக்க உடலோடு ஒரு வேடன் அவர் முன்னால் தோன்றி தனது தோல் பையிலிருந்த தண்ணீரை அவருக்கு தர முன்வர, அவர் அறுவறுப்புடன் மறுக்க, வேடனும் மறைந்து விடுகிறான். பிறகு வந்த கிருஷ்ணர் வந்தது இந்திரன் என்றும், அளித்த நீர் அமிர்தம் என்றும் அது தெரியாமல் உதங்கர் கோட்டை விட்டதையும் எடுத்து கூறுகிறார்.

நீலக்ண்டன் வீட்டில் அவர் வேலை விஷயமாக திருவண்ணாமலை போக வேண்டியிருக்கிறது. அவர் மனைவி தானும் வருவதாகக் கூற அவர் மறுத்து தனியாக செல்கிறார். ஈசனை தரிசனம் எல்லாம் செய்ய நேரமிருக்காது, அங்கு கேம்ப் போட்டிருக்கும் மேலதிகாரி ரொம்ப கண்டிப்பானவர் என கூறிவிட்டு அங்கு போகிறார். ஆனால் அங்கு போனதும் என்ன நடக்கிறதென்றால், அந்த அதிகாரி இவரையே தன்னை கோவில்களுக்கெல்லாம் அழைத்து போய் தரிசனம் செய்விக்கக் கூறி, ஸ்தல புராணங்களையும் கேட்டு, இவரும் விதியே என எல்லாவற்றையும் நெட்டுரு போட்டு ஒப்பிக்க வேண்டியதாகிற சீனை அவர் ஊருக்கு வந்ததும் வயித்தெரிச்சலுடன் தன் மனைவியிடம் விவரிக்க, விவரிக்க, நம்ம பெரிசுக்கு ஒரே ஆனந்தம், “நல்லா வேணும் இந்த நாத்திகனுக்குன்னு” குதிச்சுது.

பகுதி - 19:
நீலகண்டன் வீட்டில் நேற்று விட்ட இடத்திலிருந்து இன்றைய எபிசோட் ஆரம்பித்தது. இவ்வளவெல்லாம் தான் மேலதிகாரிக்கு செய்த பிறகு ஏதேனும் பிரமோஷன் கிடைக்குமோன்னு பார்த்தால் அவர் போகும்போது தனக்கு ஒரே ஒரு மூன்றுமுக ருத்திராட்ச கொட்டையை தந்து போனதாக நீலகண்டன் புலம்புகிறார்.

இப்போது திரைக்கு வரும் சோவிடம் அவர் நண்பர் இந்த ருத்திராட்ச கொட்டை பற்றி கேட்கிறார். இதெல்லாம் சிரத்தை உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும் எனக் கூறிய சோ அவர்கள் பக்தி விஷயங்களும் வணிகமயமாக்கப்பட்டது பற்றி பேசுகிறார். அவனவன் ஆயிரக்கணக்கில் இம்மாதிரி மத சம்பந்தமான பொருட்களை புழக்கத்தில் விடுவதால் அவற்றின் நம்பகத் தன்மையும் குறைகிறது எனக் கூறுகிறார்.

திருவண்ணாமலையில் ஒருவீட்டின் வாசலில் அசோக் அமர, அந்த வீட்டு பெண்மணி அவனுக்கு உணவு அளிக்கிறார். அவர் சாம்பு சாஸ்திரிகளின் சகோதரி. அச்சமயம் அங்கு வந்த சாம்பு சாஸ்திரியும் அசோக்கை பார்க்கிறார், ஆனால் அடையாளம் கண்டு பிடிக்கவில்லை.

இங்கு சென்னையில் ஒரு கோவிலில் வசுமதி அமர்ந்திருக்க, பிரசாத வினியோகம் நடக்கிறது. சாம்பு சாஸ்திரிகளின் மகன் கிருபாதான் வினியோகம் செய்கிறான். வசுமதியுடன் அறிமுகம் ஏற்பட்டு வரும் வியாழக்கிழமை அவரது உபயமாக கோவிலில் அன்னதானம் செய்வதற்காக கோவில் அலுவலகத்தில் புக் செய்கிறான். பிறகு அவரை அவர் வீட்டில் கொண்டு விடுகிறான்.

நிவேதனம் செய்தால் பகவான் உண்மையாக சாப்பிடுவாறா என சோவின் நண்பர் அவரை கேட்க, நிவேதனம் என்றால் காட்டுதல் என்றுதான் பொருள். பிரசாதங்களை பகவானிடத்தில் காட்டிவிட்டு, அவர் ஆசியுடன் பக்தர்களே அதை உண்கிறார்கள். கடவுள் எல்லோரிடமிருந்தும் பிரசாதம் சாப்பிட மாட்டார். அதெல்லாம் கண்ணப்ப நாயனார் போன்ற உண்மை பக்தர்களால்தான் சாத்தியம் எனவும் கூறுகிறார்.

பகுதி - 20
தான் பிரார்த்தனை செய்து கொண்டதற்கேற்ப வசுமதி அங்க பிரதட்சணம் செய்கிறார். அது பற்றி சோவின் நண்பர் அவரை கேள்வி கேட்க, அவரும் கடவுளை முழுசரணாகதி அடைவதை அது குறிக்கிறது என்கிறார்.

சாம்பு சாஸ்திரிகள் திருவண்ணாமலையில் அசோக்கை இப்போது அடையாளம் கண்டு கொண்டு தன் மகனுக்கு ஃபோன் செய்து வசுமதி வீட்டில் சொல்ல ஏஏற்பாடு செய்கிறார். நாதனுக்கும் வசுமதிக்கும் சந்தோஷம். அசோக்கை அழைத்துவர நாதன் நீலகண்டனையும் பாகவதரையும் காரில் அனுப்புகிறார். நீலகண்டன் ஏடாகூடமாக பேசிபாகவதர் மனதை நோக அடிக்கிறார். அவரால்தான் அசோக் இம்மாதிரி பைத்திய நிலைக்கு தள்ளப்பட்டான் என்று குற்றம் சாட்டுகிறார். அவர் சொல்வதை கேட்பது தனது பிரரப்த கர்மா என பாகவதர் நொந்து கொள்கிறார்.

சோவின் நண்பர் அவரிடம் பிராரப்தம் என்றால் என்ன என கேட்க அவரும் பூர்வ ஜன்மாக்களின் பலன்கள் பற்றி விவரிக்கிறார்.

திருவண்ணாமலை வந்து பார்த்தால் அசோக் அங்கிருந்து வேறு எங்கோ சென்று விட்டிருக்கிறான். அடுத்து வரும் திங்களன்றுதான் பார்க்க வேண்டும்.

நான் என்னவோ நானே முடிவு செய்து இப்பதிவை எழுதியதாக நினைத்துக் கொள்ள பெரிசோ அதை ஏற்கனவே தீர்மானித்து தன்னுடன் ஃபோனில் பேசிய ஒரு சகபதிவரிடமும் அதை கூறி வைத்திருக்கிறது என்பதை இப்போதுதான் அறிந்து மனம் நொந்தேன்.

வணக்கம்,
முரளி மனோகர்

2 comments:

வால்பையன் said...

//இது என்ன சோவே இவ்வாறு சொல்றாரே என பெரிசிடம் கேட்க, அது பேசாம சீரியலைப் பார்னு சொல்லிடுச்சு.//

சீரியல் பார்க்கும் போது இப்படித்தான் தொனதொனன்னு பேசிகிட்டே இருப்பிங்களா?

வால்பையன் said...

//ஒரு சமயம் பாலைவனத்தில் நாவறள அவர் துன்பப்படும்போது அவர் எதிரில் அருவருக்கத்தக்க உடலோடு ஒரு வேடன் அவர் முன்னால் தோன்றி தனது தோல் பையிலிருந்த தண்ணீரை அவருக்கு தர முன்வர, அவர் அறுவறுப்புடன் மறுக்க, வேடனும் மறைந்து விடுகிறான். பிறகு வந்த கிருஷ்ணர் வந்தது இந்திரன் என்றும், அளித்த நீர் அமிர்தம் என்றும் அது தெரியாமல் உதங்கர் கோட்டை விட்டதையும் எடுத்து கூறுகிறார்.//


இது உண்மையென்றால், ஒருவேளை நம் வீட்டுக்கு நீர் அருந்த வரும் தலித்தும் இந்திரனாக கூட இருக்கலாம் இல்லையே! பிறகு ஏன் ”பெரும்பாலான” பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதியினர் இன்னும் தீண்டாமையை கட்டி அழுகின்றனர்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது