3/03/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 42 & 43)

யாழ்தேவி நண்பர்களுக்கு சில வார்த்தைகள்:

சோவின் எங்கே பிராமணன் சீரியல் பொதுவான மெகாசீரியல்களின் அபத்தங்களின் நிழல்கூட அதன் மேல்படாது எடுக்கப்பட்டு வருகிறது. இக்கதை சமீபத்தில் எழுபதுகளில் தொடர் கதையாக துக்ளக்கில் வந்தபோதும் சரி, பிறகு போன ஆண்டு சீரியலின் முதல் பகுதி 103 எபிசோடுகளாக வந்த போதும் சரி, இப்போது இரண்டாம் பகுதி 41 எபிசோடுகள் முடிந்து இந்த இடுகை இங்கு விவரிக்கும் 42 மற்றும் 43-ஆம் எபிசோடுகள் வரைக்கும் ஒரு திசைதிருப்பலும் இல்லாது, கதையின் மூல நோக்கத்தை பார்வை இலக்கிலிருந்து தப்பவிடாமல் இருந்து வருகிறது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் எங்கே பிராமணன் ஒரிஜினலுடன் சோவின் இன்னொரு நாடகமான சாத்திரம் சொன்னதில்லையும் அழகாக சேர்த்து கோர்க்கப்பட்டது, முத்தும் பவழமும் ஒரே மாலையில் சேர்ந்தது போல.

இப்போது பதிவுக்கு போவோம்.

எபிசோட் - 42 (01.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
இசைதமிழில் ஏதோ தகராறு போலிருக்கிறது. முதல் சுட்டி பாதி எபிசோடாகத்தான் காட்டுவதாக தெரிகிறது. தேதியும் தவறுதலாக 01.03.2010 க்கு பதிலாக 18.03.2010 எனக் காட்டுகிறது.

உமாவும் ரமேஷும் நீலகண்டன் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். குழந்தையை அழைத்து வரவில்லையே என அவர்கள் குறைபடுகிறார்கள். பிறகு நீலகண்டனும் பர்வதமும் பென்ணையும் மாப்பிள்ளையையும் அவர்கள் வீட்டிலுள்ளவர்கள் சௌக்கியம் குறித்து வினவுகிறார்கள். அவர்கள் சென்றபின்னால் உமாவுக்கும் ரமேஷுக்கும் இடையில் இருந்த பிரச்சினை பற்றி பேசுகிறார்கள். அதுவரை அவர்கள் இருவரும் இது பற்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. அது ஏன் என்பதற்கு பதிலாக மற்றவருக்கு சங்கடம் வேண்டாமே என இவ்விருவருமே இருந்துவிட்டனர் என்பது தெரிய வருகிறது. தாங்கள் மனமொத்த தம்பதியராக இருப்பதற்கு இது அறிகுறி என்றும், எல்லா பிறவிகளிலும் தாங்கள் இப்படித்தான் இருப்போம் என பர்வதம் கூற, தனக்கு கதிமோட்சமே கிட்டாதா என நீலகண்டன் வருந்துவது போல நடிக்கிறார்.

நாதன் வீட்டில் பூஜை செய்ய வந்த சாம்பு சாஸ்திரிகள் அவரிடம் தான் பெற்ற காசோலையை திரும்பத் தந்து விடுகிறார். மேலும் அடுத்த நாளிலிருந்து பூஜை செய்ய வேம்பு சாஸ்திரிகளை ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். நாதன் முதலில் வருந்தினாலும் பிறகு வேறுவழியின்றி சமாதானம் அடைகிறார். வசுமதியோ சாம்புவிடம் மேலும் கடுமையான வார்த்தைகளை உதிர்க்கிறாள்.

சாம்பு ஏன் இவ்வாறு பிடிவாதமாக நாதன் வீட்டுக்கு இன்மேல் வர மறுக்க வேண்டும் என சோவின் நண்ப்ர் கேட்கிறார். மனக்கசப்பு என ஏற்பட்டுவிட்ட பிறகு அதே இடத்தில் இருக்காது அப்பால் நகர்ந்துவிடுவதே உசிதம் எனக் கூறும் சோ இதை வலியுறுத்தும் வண்ணம் மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு செய்த உபதேசத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். பிரம்மதத்தன் என்னும் அரசன், அவன் அரண்மனையில் வளர்ந்த பூஜினி என்னும் பேசும் குருவி, அதன் குஞ்சு, அது பிறந்த அதே நாளில் பிறந்த அரசகுமாரன் ஆகியோரின் கதையும் கூறப்படுகிறது. அரசகுமாரன் குருவிக்குஞ்சின் கழுத்தை நெறித்து கொல்ல, குருவி அவன் இரு கண்களையும் பிடுங்கிப் போட்டது. பின்னால் வந்து விசாரணை செய்த அரசன், தன் மகனின் குற்றத்தை ஏற்று குருவியை தண்டிக்காது விடுகிறான். ஆனால் குருவி அங்கிருக்காது அப்பால் செல்கிறது. அதை தடுத்து பேசிய அரசனிடம், இத்தனை விஷயங்கள் நடந்தபிறகு இனிமேல் முன்னைப்ப்போல சகஜமாக இருத்தல் ஆகாது எனக்கூறிவிடுகிறது.

சாம்புவும் அதையே நாதனிடம் கூறுகிறார், அதாவது இத்தனை ரசாபாசமான நிகழ்வுகளுக்கு பிறகு தன்னால் அவர் வீட்டுக்கு வரவியலாது எனக்கூறி விட்டு செல்கிறார். செல்பவர் பின்னாலேயே சென்று வசுமதி இன்னும் தூஷனையாக பேசுகிறாள்.

வேம்புவின் சம்பந்தி முதலியார் அசோக்கை பார்த்து பேசுகிறார். தனது தந்தை வயதானதால் மரணபயத்துடன் இருப்பதாகக் கூறுகிறார். அசோக் அவருடன் அவர் வீட்டிற்குள் சென்று முதலியாரின் தந்தையுடன் பேசுகிறான். அவரிடம் மரணம் பற்றி விளக்கி அவரது பயத்தைப் போக்குகிறான். வீடியோவில் பார்த்து ரசிக்க வேண்டிய கட்டம் இது. ஆகவே இங்கு அது பற்றி மேலே எழுதவில்லை.

(தேடுவோம்)

எபிசோட் - 43 (02.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
உமா ரமேஷ் வீட்டில் ரமேஷ் தான் அப்போது பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டதாகவும் நாதனின் கம்பெனியில் ஜி.எம். பதவிக்கு அப்ப்ளை செய்திருப்பதாகவும், இன்னொரு கேண்டிடேட் நல்ல வி.ஐ.பி. சிபாரிசோடு வந்திருப்பதாகவும் தனக்காக உமா நாதனிடம் பேச வேண்டும் என கேட்டு கொள்கிறான். முதலில் உமா மறுக்கிறாள். அவள் அசோக் விஷயத்தில் செய்த உதவிக்கு நாதன் அவளுக்கு கடமைபட்டுள்ளதாக ரமேஷ் கூற, தான் அசோக் விஷயத்தில் செய்தது எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து இல்லை எனக்கூறி அவள் மீண்டும் மறுக்கிறாள். ஆனால் ரமேஷ் மேலும் வற்புறுத்த, ஒத்து கொள்கிறாள்.

பிட்சை ஏதும் கிடைக்காததால் அசோக் அன்று காலை பட்டினி. இருப்பினும் வேதபாடம் எடுக்க ஆஜராகிறான். பசி களைப்பில் மயங்கிவிழ, மாணவர்கள் பிரின்சிபாலை அழைத்து வருகின்றனர். அவர் அங்கு வரும் வழியில் நாரதர் சன்னியாசி ரூபத்தில் வந்து அவரை வழிமறிக்கிறார். பிட்சையின் பெருமையை கூறுகிறார். சிவபெருமானின் கருணை பற்றியும் கூறுகிறார். தன் கண்ணின் அழகில் பெருமை கொண்டிருந்த கன்ணப்பரை தானே அவரது அக்கண்களை தானம் கொடுக்க வைத்து சிவனருள் பெறச்செய்ததை கூறுகிறார்.

கண்ணப்பனாருக்கு அவ்வாறு தன் கண்பற்றி அபிப்பிராயம் இருந்ததா என சோவின் நண்பர் கேட்க, அப்படியெல்லாம் இல்லை எனவும், சில சமயம் கதையில் சுவை சேர்க்க இம்மாதிரி சேர்க்கைகளை பௌராணிகர்கள் செய்து விடுகிறார்கள் எனவும் சோ கூறுகிறார். கண்ணப்பரின் இயற்பெயர் திண்ணன். திடீரென சென்ற இடத்தில் சிவலிங்கத்தை பார்த்து அவனறியாமல் அங்கேயே நிற்கிறான். பிறகு சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறியது போல,

போதுவர் மீண்டுசெல்வர்; புல்லுவர்; மீளப்போவர்; காதலினோக்கி நிற்பர்; கன்றகல் புனிற்றாப் போல்வர்; "நாதனே அமுது செய்ய நல்லமெல்லிறைச்சி நானே கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேனென்பார்;

எனக்கூறி சென்று பிறகு மாமிசம், காட்டுப்பூ, அபிஷேகத்துக்காக வாய்க்குள் நீரை வைத்துக் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மேல் உமிழ்ந்து சுத்தம் செய்கிறான். பிறகு மாமிச உணவை ஊட்ட சிவபெருமானும் அதை உண்கிறார். பிறகு அவனை சோதிக்க தனது ஒருகண்ணீல் உதிரம் வடியச்செய்து அவன் தனது ஒரு கண்ணை பிடுங்கி சிவலிங்கத்தில் பொருத்தச் செய்கிறார். ரத்தப்போக்கு நிற்கிறது. ஆனால் இன்னொரு கண்ணிலிருந்தும் உதிரம் பெருக தனது இரண்டாம் கன்ணையும் பிடுங்க எத்தனிக்கும்போது சிவபெருமானே பிரத்தியட்சமாகி “கண்ணப்பா நில்” என தடுத்தாட்கொள்கிறார். ஆகவே சீரியலில் சொன்ன விஷயம் வெறுமனே சுவைக்காக கூறியது என சோ விளக்குகிறார். அதனால் என்ன அதுவும் சுவையாக இருந்தது என முரளிமனோகர் எனக்கு தெரிவிக்கிறான்.

நாரதர் தன்கையில் இருந்த பிட்சையை பிரின்சிபாலிடம் கொடுத்து அசோக்குக்கு தரச்சொல்கிறார். பிரின்சிபாலும் அவ்வாறே செய்ய, அசோக்கின் உள்ளுணர்வு அதை அவனுக்கு அளித்த சாமியார் எனக் கூறிவிடுகிறது. கடற்கரையில் வைத்து அவன் சந்தித்த அதே சாமியார்தான் என்பதை தெளிவாக அறிகிறான்.

நாதன் கம்பெனிக்கு உமா வந்து ரமேஷ் வேலை பற்றி பேசுகிறாள். நாதனும் ரமேஷின் தகுதியை அறிந்து அவளுக்கு வாக்கு தருகிறார். ஆனால் இன்னொரு கேண்டிடேட்டுக்கு வி.ஐ.பி.யின் சிபாரிசு இருப்பதாக நாதனின் உதவியாளர் கூற, யார் அந்த வி.ஐ.பி. என விசாரிக்க அது நாதனின் மனைவிதான் எனத் தெரிய வருகிறது.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது