3/12/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 48 & 49)

எபிசோட் - 48 (10.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக்கை பார்க்க வசுமதி போலீஸ் லாக்கப்புக்கு வருகிறாள். அவள் மனம் கலங்கி பேசினாலும் அசோக் மனவுறுதியுடன் பேசுகிறான். தன்பக்தகோடிகளை சோதித்து விளையாடுவது பகவானுக்கு விளையாட்டு என்றும், இதனால் வரும் மான அவமானமும் அவனுக்கே உரித்தானது என்றும் கூறிவிடுகிறான். பிட்சை எடுக்க முடியாததால் அவன் இரவு முழுக்க ஒன்றும் சாப்பிடாது இருந்திருக்கிறான். அது பற்றி வசுமதி கேட்க, அவன் ராமாயணத்தில் விசுவாமித்திர மகரிஷி ராம லட்சுமணர்களுக்கு பலா அதிபலா என்னும் இரு மந்திரங்களை போதித்ததாகவும், அதனால் அவர்கள் பசி, தாகம், களைப்பு ஆகியவற்றிலிருந்து முக்தி பெர்றார்கள் என்றும் கூறுகிறான். அதேபோல தனக்கும் யாரோ ரிஷி ஒருவர் சூட்சும ரூபத்தில் வந்து இம்மந்திரங்களை உபதேசித்தார்கள் என நினைக்கும் வண்ணம் தனக்கு பசி, தாகம், களைப்பு எதுவுமே இலை என கூறுகிறான்.

பிரியா சொன்னபடிக்கு தான் ஏழரை மணிக்கே போனதாக எழுதிக் கொடுக்க வேண்டியதுதானே என வசுமதி கூற, அவனோ தான் எட்டு மணிக்கே போனதாகவும், ஆனால் நகையை நான் எடுக்கவில்லை என்றும், அதுதான் எப்போதுமே தன் நிலை என்றும் கூறுகிறான்.

நகையை திருட்டு கொடுத்த வீட்டில் அப்பெண்மணியிடம் அவள் கணவர் வந்து நகை வீட்டிலேயே கிடைத்ததாகவும், அவர்கள் பிள்ளை சுற்றுப்பயணம் போகும் முன்னால் நகை கேட்பாரற்று கிடக்கிறதே என்ற ஆதங்கத்தில் உள்ளே வைத்துவிட்டு போனதாகவும், இப்போது திரும்பி வந்து எடுத்து கொடுத்ததாகவும் கூறி, மீண்டும் அவளது அலட்சிய புத்தியை சாடுகிறார். நீங்கள் போய் கேசை வாபஸ் வாங்குங்கள் என அப்பெண்மணி அவரிடம் கூற, அவர் அவளை கன்னாபின்னாவென்று திட்டி, அவளையே ஸ்டேஷனுக்கு போகச் சொல்கிறார்.

அசோக்கை விடுதலை செய்து பிரியா அவனை நாதன் வீட்டுக்கு அழைத்து வருகிறாள். நடந்ததைக் கூறுகிறாள். அசோக் 2 நாள் ஜெயிலில் இருந்திருக்கவே வேண்டாம் என்றும் அவள் கூற, நாதனோ அது அவன் வாங்கி வந்த விதி எனக் கூறுகிறார். பிறகு பிரியா விடைபெற்று செல்கிறாள். நாதனும் வசுவுமாக சேர்ந்து அசோக்குக்கு லௌகீக வாழ்க்கைக்கு திரும்புமாறு புத்திமதி மழை பொழிகின்றனர். அவன் எல்லாவற்றையும் சிரித்த முகத்தோடு கேட்டு கொள்கிறான். ஒன்றும் பேசவில்லை. ஆனால் நாதன் திடீரென எல்லா துன்பங்களுக்கும் வேம்புதான் காரணம் என ஆரம்பிக்க, உறுதியாக அப்பேச்சை முளையிலேயெ கிள்ளி எரிகிறான்.

நாதன் அலுவலக்ம் சென்றதும் மேலும் வசுமதி பேசுகிறாள். அவனை சாப்பாட்டுக்கு அழைக்க, அவனோ பேசாது வேளியே சென்று நின்று, பவதி பிட்சாந்தேஹி என பிட்சை கேட்கிறான். இது என்ன சார், இப்படித்தான் நடந்துக்கணுமா என சோவின் நண்பர் கேட்க, இது ஒரு நாடகம், ஆகவே இந்த இடத்தை ட்ரமாட்டிக்காக ப்ரெசண்ட் செய்கின்றனர் அவ்வளவுதான் எனக்கூறி விட்டு, அசோக் செய்வது வெறும் பரிசோதனையே. எல்லாமே சாத்திரப்படித்தான் இருக்கும் என கூறிடமுடியாது. உதாரணத்துக்கு அவன் இருக்கும் பிரும்மச்சரிய நிலை கல்வி கற்பதற்காத்தானே தவிர, கற்பிப்பதற்காக அல்ல என்பதையும் தெளிவு படுத்துகிறார்.

வசுமதி உள்ளே வந்து அரிசியை எடுக்கும்போது பலகாட்சிகள் flashback-ஆக காட்டப்படுகின்றன. வீடியோவில் பார்த்து கொள்ளுங்கள்.

வேதபாடசாலைக்கு அசோக் வருகிறான். அவன் ஒன்றுமே நடக்காதமாதிரி வருவதைக் கண்டு அவனது சக பண்டிதர் வியக்கிறார். எல்லாவர்றையும் அவன் சமமாக பாவிக்கிறான் என்பதை அவர் கூற, இதைத்தான் கிருஷ்ணபகவான் பகவத் கீதையில் சமதா என்று கூறுகிறார் என இன்னொரு மாணவன் கூறுகிறான். சோவின் நண்பர் இது பற்றி கேட்க, அவரோ எல்லாவற்றையும் சமமாக பாவிப்பது என்னும் பொருள் இதற்கு உண்டு என கூறுகிறார். சுகமோ துக்கமோ எல்லாவர்றையும் சமமாகவே பாவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அவ்வாறு இருப்பவர்கள் ஸ்திதப்பிரக்ஞர்கள் என்று அழைக்கப்படுவர் எனவும் கூறுகிறார்.

இந்த இடத்தில் டோண்டு ராகவன் சில வார்த்தைகள் கூற ஆசைப்படுவான்.

ராமனுக்கே பட்டம் என எல்லோரும் மகிழ்ந்திருக்க, திடீரென ராமனை தன்னிருப்பிடம் வரவழைத்து அவனிடம் கைகேயி கூறுகிறாள் மன்னனின் ஆணை என்னும் பேரில்:

"ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டு ஆண்டின் வா" என்று, இயம்பினன் அரசன்' என்றாள்.


கைகேயியின் உரை கேட்ட இராமனது எதிர்வினை என்னவென்பதை கம்பர் இவ்வாறு கூறுகிறார்.

இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!


இதே போலத்தான் இந்த எபிசோட் முழுக்க அசோக் நடந்து கொண்டான். என்னதான் இருந்தாலும் அவன் வசிஷ்டர்தானே, ராமனின் குருதானே. வேறு எப்படித்தான் அவனால் நடக்க முடியும்?

(தேடுவோம்)

எபிசோட் - 49 (11.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக்கை பற்றிய சர்ச்சை வேதபாடசாலையில் தொடர்கிறது. இரண்டு நாட்களாக ஆகாரம் ஏதும் இல்லாமல் அவன் இருந்திருக்கிறான் என்பதை ஒருவர் குறிப்பிட, இன்னொருவரோ அவனது அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து அவன் நிஷ்டையில் இருந்தபோது தரையிலிருந்து ஐந்தங்குலம் உயர்ந்து இருந்தான் என இன்னொருவர் கூறுகிறார்.

நாதனும் நீலகண்டனும் இதே விஷயத்தை விவாதிக்கின்றனர். பேப்பரில் எல்லாம் அசோக் சிறைக்கு சென்றது பற்றி போட்டுள்ளனர் ஆனால் அவன் நிரபராதி என வெளியில் வந்ததை அவை கண்டுகொள்ளவில்லை என நாதன் வருந்துகிறார். நீலகண்டன் வீட்டில் ஏதேனும் பாராயணம் செய்யலாமா என ஐடியா தர, என்ன மகாபாரதம் படிக்க வேண்டுமா என நாதன் கேட்க, வீட்டில் பாரதம் அடிப்பது நல்லதில்லை என நீலகண்டன் தடுக்கிறார்.

அப்படியா சார் என கேட்கும் தன் நண்பருக்கான பதிலில் சோ அவர்கள் சாதாரணமாக அந்த நம்பிக்கை இருந்தாலும் உண்மை அப்படியில்லை என கூறுகிறார். இருப்பினும் இந்த நம்பிக்கை ஆழ்ந்து இருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறார்.

வசுமதி வீட்டில் சுந்தர காண்டம் படிக்கலாம் என நீலக்ண்டன் ஆலோசன சொல்ல, அதெல்லாம் அவளுக்கு வணங்காது என நாதன் கூறுகிறார். சாம்பு சாஸ்திரிகளை செய்யச் சொல்லலாம் என நீலகண்டன் கூற, அதுவும் சாத்தியப்படாது என வசு மாமி முன்னால் சாம்பு சாஸ்திரிக்கு தந்த தொல்லையை கோடி காட்டுகிறார்.

வசுமதியும் பர்வதமும் கோவிலில் சந்திக்கின்றனர். மகனை நினைத்து புலம்பும் வசுமதிக்கு பர்வதம் ஆறுதல் சொல்கிறாள். ஒரு நாள் அசோக் வருவான், தன்கையால் சாப்பிடுவான் என பைராகி பெண்மணி கூறியதை அவள் நினைவுகூற, பர்வதம் அவள் சரியாகத்தான் சொன்னான் என கூறி, ஒரு நாள் வருவான் என்று சொன்னபடியே அன்று அவளிடம் பிட்சை பெற்றதை எடுத்து காட்டுகிறாள்.

வேம்பு சாஸ்திரி வீட்டில் அவரது தமக்கையார் தான் காசி ராமேஸ்வரம் போக வேண்டும், கடைசி காலத்தில் கிருஷ்ணா ராமா என்றிருக்கவேண்டுமென்ற தனது திட்டத்தை எடுத்து கூறுகிறாள். வாழ்நாள் முழுக்க பாவங்கள் செய்து விட்டு சாகும் சமயத்தில் மட்டும் நாராயணன் பெயரைச் சொன்னால் மோட்சம் கிட்டுமா என நண்பர் கேட்க, அது எப்படி என்பதை சோ விளக்குகிறார். அதற்கு ஒரு கதையும் சொல்கிறார். அதே சமயம் அவ்வாறு கடைசி காலத்தில் சொல்ல முடிவதே பூர்வ புண்ணிய பலனாலேயே சாத்தியம் என்பதையும் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

காசி யாத்திரை செய்ய வேண்டிய கிரமங்களை வேம்பு அடுக்க, அவரும் தன்னுடன் வரத்தான் வேண்டும் என அவர் தமக்கை ஆர்டர் போடுகிறாள்.

நீலகண்டன் வீட்டில் அடுத்த நாள் தங்கள் மாப்பிள்ளை நாதன் கம்பெனியில் சேரும்போது அவரும் கூடவே சென்று நாதனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டுன்மென பர்வதம் அவருக்கு கூறுகிறாள். கூடவே நாதனுக்கு அறுபது வயது நிறையப்போவதால் அவர் சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று வசுமதி ஆசைப்பட அவர் மறுப்பதாகவும், ஆகவே நீலக்ண்டன் அவரிடம் தன் தரப்புக்கும் வற்புறுத்துமாறு பர்வதம் கூறுகிறாள்.

தன் கம்பெனியில் ஜாயிண் பண்ணவரும் ரமேஷிடம் நாதன் உமாவின் சிபாரிசு ஒரு பக்கம் இருந்தாலும் ரமேஷ் நிச்சயமாகவே தனது திறமையாலேயே அந்த வேலையை பெற்றான் என்பதை நாதன் சுட்டிக் காட்டுகிறார். தனது மாமனார் அவரைப் பார்த்து நன்றிசொல்லிவிட்டு போக வந்திருப்பதாக ரமேஷ் கூறிவிட்டு அவரை உள்ளே வரச்சொல்லிவிட்டு அப்பால் செல்கிறான். நாதனுக்கு நன்றியெல்லாம் கூறிவிட்டு நீலகண்டன் அவரது சஷ்டியப்தபூர்த்தி விவகாரம் பற்றி பேசுகிறார். நாதன் அதெல்லாம் தேவையில்லை என விரக்தியில் பேசுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது