3/06/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 44 & 45)

எபிசோட் - 44 (03.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வீட்டுக்கு வந்ததும் வராததுமாக நாதன் வசுமதியிட்ம் அவள் தனது கம்பெனி எம்.டி. போஸ்டுக்கு ஒருவரை சிபாரிசு செய்தது பற்றி கேட்கிறார். அவளும் தனது சித்தியின் பிள்ளை பிச்சுமணிக்காக சிபாரிசு செய்ததாகக் கூறுகிறாள். அதை தான் ஏற்பதற்கில்லை என்றும் உமாவின் கணவன் ரமேஷுக்குத்தான் அந்த வேலை எனவும் கூறிவிடுகிறார். தான் என்ன சொல்லியும் எடுபடாத நிலையில் வசுமதி உமாவின் அம்மாவுக்கு ஃபோன் செய்து அவளது மாப்பிள்ளைக்கு தன்னுடைய சிபாரிசில்தான் நாதன் கம்பெனியில் வேலை கிடைத்தது எனக்கூறி தனது கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்கிறாள். மனைவியின் சாதுர்யத்தை கண்டு நாதன் வியக்கிறார்.

நீலகண்டனும் பர்வதமும் நாதன் வீட்டுக்கு வந்து ஸ்வீட் தருகின்றனர். அவர்கள் பையன் ராம்ஜிக்கு வேலை உயர்வு கிடைத்ததால் என காரணம் வேறு சொல்கின்றனர். நீலகண்டனுக்கு தன் மகனை குறித்து பெருமை பெற விஷயங்கள் இருக்கும் அதே தருணத்தில் தன்னால் அசோக்கை குறித்து பெருமையடித்து கொள்ள முடியவில்லையே என நாதன் வருந்துகிறார். நீலகண்டன் அவரை தேற்ற முயன்று தோல்வியடைகிறார்.

அப்போது வேம்பு சாஸ்திரிகளின் சம்பந்தி சிகாமணி முதலியாரின் தந்தை நாதனைப் பார்க்க வருகிறார். அவரிடம் அவர்தான் அசோக்கின் தந்தையா எனக்கேட்க, நாதனோ அசோக் தன்னுடைய பிள்ளை என அவரை திருத்துகிறார். வந்தவரோ விடாப்பிடியாக இந்தத் தருணத்தில் நாதன் அசோக்குடைய தந்தை என்ற அறிமுகம்தான் அதிக மகத்துவம் வாய்ந்தது எனக்கூறுகிறார். பிறகு அசோக் தன்னுடன் பேசி தனது மரணபயத்தை அடியோடு போக்கியதாக கூறுகிறார். அசோக் அந்தண்டை சென்ற பிறகே அவர் நசிகேதசின் கதையை படித்ததாகவும், எல்லோரையும் தேடி எமன் வர, இந்தப்பிள்ளை மட்டும் எமனைத் தேடி சென்றது குறித்த கடோபநிஷத் கதை பற்றியும் பேசுகிறார். அப்படிப்பட்ட சத்புத்திரனை பெற்ற நாதன் வசுமதி தம்பதியினர் மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும் என கூறி, அவர்களுக்காக தான் செய்த அர்ச்சனையின் பிரசாதத்தையும் நாதனிடம் கொடுத்து செல்கிறார். நமக்கு அருகாமையில் இருப்பதன் பெருமை நமக்குத் தெரிவதில்லை என பூடகமாக கூறுகிறார் நீலகண்டன். இருப்பினும் நாதனுக்கும் வசுமதிக்கும் மனம் சமாதானமடையவில்லை.

சாரியாரும் அசோக்கும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அசோக் பிட்சை கிடைக்காது பசி மயக்கத்தில் விழுந்த விஷயம் பற்றி பேசுகிறார் அவர். அவனுக்கு எங்கிருந்தோ வந்த சன்னியாசி பிட்சை அளித்து சென்றதை வேதபாடசாலையின் பிரின்சிபால் தன்னிடம் சிலர் அசோக் ஒரு தெய்வப்பிறவி என்றும் மற்றும் சிலர் வெறும் தற்செயல் என்றும் குறிப்பிட்டதை குறிப்பிடுகிறார். எல்லாவற்றையும் துறந்து தியாகம் செய்து, கடவுளிடமே விட்ட அவனுக்கு கீதையில் கண்ணபிரான் சொன்னதுபோல அனுக்கிரகம் கிடைத்தது எனவும் அவர் கூறுகிறார்.

எல்லாத்தையும் தியாகம் செய்யறதுன்னா சும்மா இருக்கணும்னு அர்த்தமா என சோவின் நண்பர் கேட்க, அப்படியில்லை என சோ விளக்குகிறார். அதாவது, காரியம் செய் பலனை எதிர்ப்பாராதே. அது தானாகவே வந்தடையும். ஆக, கிருஷ்ணர் சொன்னது செயலின்றி இருப்பதல்ல என்பதையும் விளக்குகிறார்.

தான் சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் தங்குவதால் அவருக்கு சங்கடங்களே அதிகம் ஏற்படுவதாகவும், ஆகவே தான் வேதபாடசாலையிலேயே தங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்திருப்பதாகவும், அவர்களும் சம்மதித்து விட்டதாகவும் கூறுகிறான். சாரியார் அவன் தன் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் எனக்கூற, அசோக் அது வேண்டாம் என கூறிவிடுகிறான். அவனுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் அவன் தன்னை வந்து பார்க்கலாம் என்று அவர் கடைசியாக சொல்கிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 45 (04.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சிங்காரம் திடீரென எதேச்சையாக தன் மகனை வண்டி இழுப்பவனாக பார்த்து திடுக்கிடுகிறான். அவனை தன்னுடன் வருமாறு எவ்வளவோ கேட்டுக் கொண்டும் பையன் அவனுடன் வரமறுத்து விடுகிறான். அவனுக்கு பணம் தர முற்படும்போதும் அதை ஏற்க மறுத்து விடுகிறான். சிங்காரம் திகைத்து போய் நிற்கிறான்.

சாம்பு சாஸ்திரிகள் என்ன சொல்லியும் கேட்காமல் அசோக் தான் வேதபாடசாலையிலேயே தங்கிக் கொள்வதாக கூறி விட்டு தன் பொருட்களை எடுத்து செல்கிறான். சாம்பு சாஸ்திரிகள் தன் வீட்டாரிடம் தனக்கு வந்த அச்சுறுத்தல்கள் பற்றி அவனிடம் யாரேனும் கூறினார்களா என கேட்க இல்லை என்கிறாள். பின்னே அவன் எப்படி அதை புரிந்து கொண்டான் என வியந்து ஒரு வேளை எண்ண அலைகள் ஏதேனும் இதில் செயல்பட்டிருக்குமா என்றெல்லாம் யோசிக்கப்படுகிறது. அப்போ அசோக் ஒரு ஞானியா என ஆர்த்தி கேட்க, ஒருவன் ஞானியா இல்லையா என்பதை மற்றவர்கள் அறிவதற்கே அவர்களுக்கும் ஞானம் வேண்டும் என சாம்பு விடையளிக்கிறார்.

நல்ல ட்ரிக் சார் என கிண்டலடிக்கிறார் சோவின் நண்பர். “யாராவது இந்த மாதிரி கேள்வி கேட்டா இப்படி பதிலச் சொல்லி சமாளிச்சுக்கலாம் போலிருக்கு. எனக்கு ஞானம் இருக்கு சார், எனக்கு விளக்கிச் சொல்லுங்கோ” என ஆவலுடன் கேட்கிறார். “எப்போ ஒருத்தன் தனக்கு ஞானம் இருக்குன்னு சொல்லிக்கிறானோ, அப்பவே அவன் முழுக்க அவுட் ஆயிடறான். உண்மையான ஞானி எப்போதுமே ஞானத்தை தேடுபவனாகவே தன்னைச் சொல்லிக் கொள்கிறான்” என்கிறார் சோ. உண்மையா சொல்லணும்னா தனக்குமே அத்தகுதி இல்லையென்றும், இருப்பினும் தனது அசட்டு தைரியத்தால் அதற்கான விளக்கம் தர முயற்சிப்பதாகவும் அவர் கூறி விட்டு மேலே பேசுகிறார்.

பலனுக்கான எவ்வித ஆசையுமின்றி காரியம் செய்பவன் எவனோ, செயலில் செயலின்மையையும் செயலின்மையில் செயலையும் யார் காணுகிறானோ, அவனே ஞானி என தயாநந்த சரஸ்வதிகள் மகாப்பெரியவா சொன்னதாக கூறியிருப்பதை சோ இங்கே குறிப்பிடுகிறார்.

சாம்புவின் மனைவி அசோக் தங்களாத்தில் இருந்தது பாந்தமாக இருந்தது என்றும் அவன் இப்போது போவதில் என்னமோ பறிபோனது போல உணர்வதாகவும் கூறுகிறாள். அதே உணர்வுகள்தானே நாதனையும் அவர் மனைவியையும் ஆட்டி படைக்கும் என சாம்பு எடுத்து காட்டுகிறார். பிறகு எல்லோரும் தத்தம் வேலைகளை கவனிக்க செல்கின்றனர்.

ஆர்த்தியும் அவள் அன்னையும் தெருவில் வந்து கொண்டிருக்கும் வேளையில் ஆர்த்தி பக்கத்தில்தானே அண்ணா வீடு இருக்கிறது, போய் மன்னியைப் பார்க்கலாம் என கூற, முதலில் அவள் அன்னை மறுக்கிறாள். ஆனால் ஆர்த்தி தான் பிரியாவிடம் வீட்டில் நடந்தது பற்றி கூற நேர்ந்ததை சொல்ல, முதலில் அவளை அதற்காக கடிந்து கொண்ட அவள் அன்னை பிறகு ஆர்த்தியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் பிரியாவை பார்க்க செல்கிறாள். மாமியாரை சந்தோஷமாக வரவேற்கிறாள் பிரியா. அவளிடம் வீட்டில் நடந்தது பற்றி பேச, அவளோ ஆர்த்தி தைரியமாக போய் பேசியதாலேயே எல்லா உண்மைகளும் வெளியே வந்தது என்கிறாள். வசுமதி மாமி பொல்லாதவள் என மாமியார் கூற, மருமகளோ வசுமதியை தூண்டிவிட்ட மைதிலி மகாதீசல் என்று கூறுகிறாள். வக்கீலான தன்னை மாட்டு பெண்ணாக வைத்து கொண்டு இனிமேல் தன் மாமியார் எதற்கும் கவலைப்படக் கூடாது என்று கூறி எதுவானாலும் தன்னிடம் வந்து கூறுமாறு சொல்ல அவள் மாமியாரும் சம்மதிக்கிறாள்.

வேதபாடசாலைக்கு நாதனும் வசுமதியும் காரில் வருகின்றனர். அவர்கள்தான் அசோக்கின் பெற்றோர் என அறிந்து கொண்டதும் வடமொழி கற்பிக்கும் பண்டிட் அசோக்கை பெருமையாகப் பேசி அவனைப் பெற்றதற்கு அவர்கள் புண்ணீயம் செய்திருக்க வேண்டும் என்று கூற, அதை ஒத்துக் கொள்ளாத முகபாவத்தோடு நாதனும் வசுமதியும் நிற்கின்றனர். அசோக் அவர்கள் வந்தது குறித்து அறிந்து அவர்களை பார்க்க வருகிறான். அவனை தங்கள் வீட்டுக்கே வருமாறும், அங்கிருந்து கொண்டே வேதபாடசாலைக்கும் அவன் போகலாம் என்றும் அவர்கள் மிகவும் வற்புறுத்த அவனோ பிரின்சிபாலை பார்த்து பேசுகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறான். என்னமோ அவன் தங்களுடன் வர ஒப்புக் கொண்டுவிட்ட எண்ணத்தில் கணவனும் மனைவியும் மகிழ்ச்சியில் ஆழ்கின்றனர்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது