எஸ்.வி.சேகரின் இந்த நாடகம் பரவலாகவே வரவேற்பை பெற்றது. அதிலிருந்து சில காட்சிகள் எனது நினைவிலிருந்து. இந்த நாடகம் இப்போதும் போடப்படுகிறது. என்ன, காலத்துக்கு ஏற்ப டயலாக்குகளும் மாறும், நல்ல டைமிங் சென்ஸோடு. நான் தரப்போவது ஆரம்பகாலங்களில் நான் பார்த்த வெர்ஷன்.
சேகரின் தந்தை ஒரு விஞ்ஞான பைத்தியம். அவர் செய்த குளறுபடியால் அவனது அண்ணன் வானரமாக மாறிவிடுகிறான். நாடக ஆரம்பத்தில் டெலிஃபோன் மணி அடிக்கிறது. வானரம் போய் அதை எடுக்கிறது. தொலைபேசியின் அந்தண்டை பக்கத்திலிருந்து கேள்விகள் வருகின்றன. வானரம் மௌனமாக நிற்கிறது. கதாநாயகன் (எஸ்.வி.சேகர்) வருகிறான்.
சேகர்: ஏண்ணா உனக்கு இந்த வேண்டாத வேலை? உன்னால்தான் பேச முடியாதோல்லியோ. பேசாமல் இருக்க வேண்டியதுதானே?
சேகரின் அப்பா: ஒரு புது மருந்தை டெஸ்ட் பண்ணலாம்னு அவனுக்கு அதை கொடுத்தேன். இந்த மாதிரி ஆயிட்டான். மாற்று மருந்தை தேடிண்டிருக்கேன். அது வரைக்கும் என்ன பண்ணறதுன்னு தெரியல்லே.
எஸ்.வி. சேகர்: அது வரைக்கும் பேசாம ஏ.பி.டி. பார்சல் செர்வீசு விளம்பரத்தில் வரும் வானரத்துக்கு இவனை மாடலா போடலாம்.
சுந்தா வருகிறான். சேகரும் சுந்தாவும் ஒரு சினிமா எடுக்கும் முயற்சியில் இருக்கின்றனர். அனிதா (நான் பார்த்த போது அந்த பாத்திரத்தில் நடித்த நடிகையின் பெயர்) சுந்தாவின் செட்டப்பு. அவள் எங்கு வந்தாலும் அவள் வருவதற்கு முன்னால் அவளுடைய நாற்காலியை ஒருவன் கொண்டு வந்து வைக்கிறான்.
இவர்கள் இருவருமே விஞ்ஞான அப்பாவால் தயார் செய்யப்பட்ட கால யந்திரந்தில் ஏறி எக்குத் தப்பாக மாட்டிக் கொள்கின்றனர். 1919 வாக்கில் உள்ள சென்னைக்கு வந்து சேருகின்றனர்.
மவுண்ட் ரோடில் நடக்கின்றனர்.
சுந்தா: ஐயையோ என்னடா இது எல்.ஐ.சி. பில்டிங்கையே காணும்?
சேகர்: இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை அல்லவா, எல்.ஐ.சி.க்கு லீவு.
சுந்தா: லீவுன்னா பில்டிங்குக்குமா.
சேகர்: அதானே.
அந்தப் பக்கமாக வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் என பாடிக் கொண்டே தான் வேலை செய்யும் சுதேசமித்திரன் அலுவலகத்துக்கு வருகிறார் பாரதியார்.
அவர்களது அடுத்த ஹால்ட் பாஞ்சாலங்குறிச்சி. மேடையில் அவர்கள் நிற்க, ஒரு சேவகன் ஒரு நாற்காலியை கொண்டு வந்து போடுகிறான்.
சுந்தா: இந்த நாற்காலியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.
ரொம்ப நேரம் குழம்பத் தேவையின்றி அனிதா வந்து அதில் அமர்கிறாள். அவளும் இவர்களுக்கு தெரியாம கால யந்திரத்தில் பயணம் வந்திருக்கிறாள். ஆனால் இங்கு அவள் வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு செட்டப்பாக வருகிறாள். அவள் செய்யும் அலம்பல் தாங்கவில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனும் வருகிறான். அவ்வப்போது மார்வலி என துடிக்கிறான். இருந்தாலும் அவன் அனிதாவின் பேச்சுக்கு மயங்கி தானும் ஒரு நாடகம் போடலாமா என நினைக்கிறான்.
வெறும் நாட்டுப் பாடல்களில் மட்டும் அறியப்பட்ட கட்டபொம்மன் ம.பொ.சி.யின் தயவால்தான் பிரபலமானான் என்று அவனுக்கு சேகரும் சுந்தாவும் தரும் செய்தியை கட்டபொம்மன் நம்பத் தயாராகவில்லை என்பது தனி விஷயம்.
எனது உயிர் நண்பர் எட்டப்பன் என சேகர் சுந்தாவுக்கு அவன் அறிமுகப்படுத்த, அவர்கள் திகைப்படைகின்றனர். எட்டப்பன் பானர்மேனின் கையாள் என்பதை போட்டுக் கொடுக்க சேகர் முயற்சிக்க, எட்டப்பன் சாமர்த்தியமாக கட்டபொம்மனை சேகரும் சுந்தாவும்தான் ஒற்றர்கள் என நம்ப வைத்து விடுகிறான். நல்ல வேளையாக நிகழ்காலத்தில் இருந்து கொண்டு கால எந்திரத்தை ரிமோட் கண்ட்ரோலில் இயக்க முயலும் விஞ்ஞான அப்பாவின் உபயத்தால், அங்கிருந்து தப்பி ஷாஜஹான் காலத்துக்கு செல்கின்றனர். அங்கும் அனிதாவின் அலம்பல் தொடர்கிறது. அவள் ஷாஜஹானின் செட்டப்பாக மாறி விட்டாள். இந்த மூவர் புதிதாக எங்கிருந்து வந்தன என ஷாஜஹான் குழம்ப, தானும் சேகர் சுந்தாவை அட்டாக் செய்து ஷாஜஹானிடம் நல்ல பெயர் வாங்கும் முயற்சியில் அனிதா ஈடுபடுகிறாள்.
இவர்களை பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறி அவள் அவர்களை ஷாஜஹானிடம் போட்டுக் கொடுக்க, அவனும் கோபத்துடன் இவர்களை சவுக்கால் அடிக்கும்படி ஆணையிட, அனிதா அதற்கு மேல் ஒரு படி போய் அவர்களை அதன் பின்னால் கொதிக்கும் எண்ணையில் போட வேண்டும் என்னும் ஆலோசனையும் தர சேகரும் சுந்தாவும் நொந்து போகின்றனர்.
ஒரு நிமிடம் அனிதாவை வெறித்துப் பார்க்கும் ஷாஜஹான் அனிதாவுக்கும் சேர்த்துத்தான் இத்தனை தண்டனைகளையும் தர வேண்டும் என உத்திரவு போட, அனிதா திகைக்கிறாள். வா, வாடி கண்ணூ, உனக்கும் எங்களுக்கும் ஒரே கதிதான். நீ என்னதான் கூப்பாடு போட்டு எங்களை போட்டுக் கொடுத்தாலும் உனக்கும் எங்களுக்கு தரும் தண்டனையைத்தான் தரப்போறாங்கடி என அவளிடம் இவர்கள் கூறுவார்கள்.
நல்ல வேளையாக எல்லோரும் மீண்டும் அங்கிருந்து கிளம்பி, இம்முறை மகாபாரத காலத்துக்கு போய் விடுகின்றனர். அஞ்ஞாத வாசம் முடிந்து யுத்தம் ஆரம்பிக்கும் காலம் அது. இவர்கள் துரியோதனனின் சபைக்கு செல்கின்றனர்.
அங்கு அவர்கள் துரியோதனனிடம் தங்களுடன் மங்காத்தா ஆட அழைக்கின்றனர். அவனும் தன் குல வழக்கப்படி, சகுனியை தனக்கா ஆடும்படி கூறுகிறான்.
சகுனி: யாரங்கே ஆசனம் கொண்டு வாருங்கள்
சேகர்: அதெல்லாம் வாணாம், இந்த ஆட்டத்தை குந்திக்கிட்டேதான் ஆடணும்.
துரியோதனன்: எனது சித்தி குந்தி தேவியிடமா?
சுந்தா: இல்லே கண்ணு குந்தி ஒக்காந்துதான் ஆடணும் என அவ்வாறே உட்கார்ந்து காண்பிக்கிறான்.
சகுனி: இந்த மாதிரி உட்காருவது மிகுந்த கடினமாக உள்ளதே?
சேகர்: ஏம்பா நெஜம்மா சொல்லு, இந்த மாதிரி ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தபா உக்காந்ததே இல்லையா?
சகுனி சங்கடத்துடன் எழுந்து நிற்கிறான். பிறகு மங்காத்தா ஆட்டம் ஆரம்பிக்கிறது. உள்ளே வெளியே உள்ளே வெளியேன்னு சொல்லிச் சொல்லி சேகர் சகுனியிடமிருந்து எல்லாத்தையும் ஜெயிக்கிறான். துரியோதனன் செய்வதறியாது விழிக்க, சேகர் ஸ்டைலாக நடந்து வந்து துரியோதனனை துகிலுரிக்க ஆரம்பிக்கிறான்.
துகிலிருக்கும் இடங்களுக்கு வழக்கமாக வரும் கண்ணபிரானும் அங்கு வருகிறார்.
துரியோதனன்: கர்ணா, கர்ணா காப்பாற்று
கர்ணன் வருகிறான் அம்பை வில்லில் கோத்துக் கொண்டு.
சேகர்: கர்ணா என்ன இருந்தாலும் பாண்டவர்கள் உனது சகோதரர்கள் எனப் பேச ஆரம்பிக்க, பதறிப் போகும் கண்ணபிரான் இப்போது கர்ணனிடம் நைச்சியமாகப் பேசி சேகர் சுந்தா மேல் பிரும்மாஸ்திரத்தை பிரயோகிக்க சொல்கிறார்.
சேகர்/சுந்தா: கர்ணா, நீதான் கொடை வள்ளலாயிற்றே, எங்களுக்கு உயிர் பிச்சை தா.
கர்ணன் குழம்புகிறான் என்ன செய்வதெனத் தெரியாமல்.
கண்ணபிரான்: சரி என்ன செய்வது கர்ணா பின்னால் கூறப்போவதை இப்போதே கூறிவிடுகிறேன் எனக்கூறி கர்ணனுக்கு பலனை எதிர்ப்பார்க்காது கர்மத்தைச் செய்யத்தூண்டும் பகவத் கீதையை உபதேசிக்கிறார்.
கடைசியாக அங்கிருந்தும் தப்பி எதிர்காலத்துக்கு வந்து சேர்கின்றனர். அங்கு அவர்களை ஒரு எந்திர மனிதன் வரவேற்கிறான். நீங்கள்தானே சேகர் சுந்தா, இருபதாம் நூற்றாண்டிலிருந்து வந்துள்ளீர்கள். சுந்தாவின் செட்டப் அனிதாவை இப்போதுதான் உங்கள் காலத்துக்கு அனுப்பினோம். இப்போ உங்களையும் அனுப்புகிறோம் என்கிறான் அவன்.
ஒரே மாட மாளிகைகளாக இந்த இடம் இருக்கே இது என்ன இடம் என சேகர் கேட்க, பழைய மாம்பலம் என பதில் வருகிறது. நம்பவே முடியாது என அவர்கள் இருவரும் அடம் பிடிக்கின்றனர்.
அப்போது தன் கையை படீரென அடித்துக் கொள்ளும் இயந்திர மனிதன், இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல்லியே என அலுத்துக் கொள்கிறான். இப்போ நம்பறோம் என்கின்றனர் சேகரும் சுந்தாவும்.
இவர்களை இருபாதாம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லும் டாக்சி வந்து நிற்கிறது.
சேகர்: என்னப்பா எங்களை ஒழுங்காக கொண்டு போய் சேர்ப்பாயா?
டிரைவர்: மீட்டருக்கு மேலே நூறு ரூபாய் போட்டுக்கொடு சார்.
சர்ரியலிசம் என்பதை வைத்து அந்தப் பெயரையெல்லாம் சொல்லி அலம்பல் செய்யாது சேகர் இந்த நாடகத்தில் விளையாடியிருக்கிறார். அவரை கலைஞர் பாராட்டியது மிகக்குறைவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
14 hours ago
6 comments:
//சேகர்: என்னப்பா எங்களை ஒழுங்காக கொண்டு போய் சேர்ப்பாயா?
டிரைவர்: மீட்டருக்கு மேலே நூறு ரூபாய் போட்டுக்கொடு சார்.
//
நிகழ்காலம் தான் சூப்பர்
சாதாரணமாகவே சேகர் நாடகங்கள் உளறல்கள்.அதில் இது அக்மார்க் உளறல்.
Thanks for sharing sir.. எஸ்.வி.சேகரின் நாடகங்கள் சிரிப்புக்கு 100% கியாரண்டி..
S.Ve.Sekhar - நல்ல காமெடியன், அரசியலில் கூட..!
innaikkum paattum vaenuma thalai ?
Tamil Vazhga
Post a Comment