நான் ஏற்கனவே கூறியபடி எனது மனைவியின் அத்தையன்பர் உருவாக்கிய திருக்குறள் பரிமேலழகர் உரைக்கான ஆங்கில மொழியாக்கத்தை மொழி பெயர்ப்பு மற்றும் எழுத்துப் பிழைகள் சரிபார்த்து ஒருங்குறியில் தட்டச்சிடும் வேலையில் ஈடுபட்டுள்ளேன்.
நான் தற்சமயம் பொருட்பாலில் 60-ஆம் அதிகாரம், குறள் 595-ல் இருக்கிறேன். அக்குறள்:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
[The length of stem of a water-borne flower has to just exceed the depth of the pond. In the same manner, a person's rise and achievement are commensurate with his enthusiasm and zest for life].
இதே குறளை நம்ம கலைஞர் அவர்கள் நிச்சயமாக ஒரு சுவையான கட்டுரையாக தனது குறளோவியத்தில் எழுதியிருக்க வேண்டும். அந்த அளவுக்கு நமக்கு திறமை இல்லை. என்னால் வெறும் பதிவு மட்டும்தான் போட முடியும்.
சில நாட்களுக்கு முன்னால் அசுரன் அவர்களது இப்பதிவில் பின்னூட்டமிட்டபோது யதேச்சையாக மேலே சொன்ன குறளையே சுட்டியிட்டுள்ளேன். அப்போதே நினைத்து வைத்த பதிவுதான். இன்று அதே குறளுக்கு வரும்போது, சற்று நேரம் அந்த வேலையை நிறுத்தி விட்டு இப்பதிவைப் போடத் துணிந்தேன்.
ஏற்கனவே நான் வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை, மனித இயற்கைக்கு புறம்பான ஒரு தத்துவம், உலகமயமாக்கல் ஆகியவை பற்றியெல்லாம் பதிவுகள் போட்டுள்ளேன். அவற்றை பற்றியெல்லாம் இங்கு பேசப் போவதில்லை.
இங்கு இக்குறள் எவ்வாறு எக்காலத்திற்கும் பொருத்தமாக உள்ளது என்பது பற்றி எனது எண்ணங்களை எழுதப் போகிறேன். திருக்குறளை படிக்கப் படிக்க பிரமிப்பு ஏற்படுகிறது. முக்கியமாக அவரது அதிகாரங்கள் ஒரு வித ஒழுங்கில் வரிசையமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு 59-ஆம் அதிகாரம் ஒற்றாடல், அதற்கடுத்தது ஊக்கமுடைமை. இவ்வதிகாரத்தின் முன்னுரையாக பரிமேலழகர் உரையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
"அஃதாவது, மனம் மெலிதலின்றி வினைசெய்தற்கட் கிளர்ச்சியுடைத்தாதல், ஒற்றரான் நிகழ்ந்தனவறிந்து அவற்றிற்கேற்ற வினை செய்வானுக்கு இஃதின்றியமையாமயின், ஒற்றாடலின் பின் (இவ்வதிகாரம்) வைக்கப்பட்டது".
இப்போது குறளுக்கு வருவோமா?
எனக்கு மிகவும் பிடித்த இஸ்ரவேலர்களுடன் துவக்குகிறேன். (ஆரம்பிச்சுட்டாண்டா, ஆரம்பிச்சுட்டான் என்று துவளப் போகிறவர்களும், சற்றே பொறுமையுடன் படிக்கவும்). யூதர்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் உலகெங்கிலும் துரத்தப்பட்டு பீடிக்கப்பட்டனர் என்று நான் ஒரு வரியில் எழுதினாலும், அது மிகப் பெரிய துயரமே. ஆனால் அவர்கள் நம்பிக்கையிழக்கவில்லை. அவர்கள் நோக்கம் மிக ஆழமானது. எப்பாடுபட்டாவது இஸ்ரேலுக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் தலைமுறை தலைமுறையாக வேரூன்றி வந்தது. ஆகவே தங்களை முதலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு மிக உதவியாக இருந்தவ்ற்றுள் முக்கியமானது அவர்தம் நகைச்சுவை உணர்வு. தங்களை வைத்தே நகைச்சுவை துணுக்குகள் கூற அவர்களை மிஞ்சி யாரும் இல்லை. இதெல்லாம் எவ்வாறு நிகழ்ந்தது? அவர்களது ஊக்கம் மிகவும் ஆழமானது. வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பது போல வெளியில் வந்ததும் ஆழங்களைத் தாண்டியே வந்தது. மீதி உயர்வுகளும் மெதுவாக ஆனால் நிச்சயமாக வந்தன.
சமீபத்தில் 1967-ல் நடந்த 6 நாள் யுத்க்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றி நான் ஏற்கனவே பல இடங்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குறிப்பிட்டது போல பைபிள் பழைய ஏற்பாட்டில் வரும் அரசன் சாலமன், அரசன் தாவூது ஆகியோர் பெற்ற வெற்றிகளுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல. இது எப்படி கிடைத்தது? அவர்களது தன்னம்பிக்கை மற்றும் ஊக்கமே காரணம். வெள்ளத்தனைய மலர் நீட்டம்.
சமீபத்தில் 1969-ல் நான் ஜெர்மன் மொழி கற்கத் துவங்கியபோது பொறியியல் படிப்பில் கடைசி ஆண்டு தேர்வில் பெற்ற தோல்வியால் மனம் துவண்டிருந்தேன். அந்த தோல்வியை மறைக்க எனக்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது. அதை பெறும் வெறியும் ஏற்பட்டு வெற்றி பெற்றேன். வெள்ளத்தனைய மலர் நீட்டம்.
அதே போல நான் ஐ.டி.பி.எல். லில் பெற்ற பல அனுபவங்கள் எனது ஊக்கத்தின் ஆழத்தால் நிகழ்ந்தவையே. முக்கியமாக பொறியியல் மற்றும் மொழிபெயர்ப்பு என எனக்களிக்கப்பட்ட இரு கடமைகளையும் சிறப்பாக நிறைவேற்ற முடிந்ததும் இதில் அடங்கும். வெள்ளத்தனைய மலர் நீட்டம்.
என்னை விடுங்கள். வெற்றி பெற்ற யாரை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அம்பானியையே எடுத்து கொள்வோமே. அவர் டைப்பிஸ்டாக தனது அடிநாட்களில் வேலை துவங்கியவர். அவருள் இருந்த ஊக்கத்தின் ஆழமே அவரை இந்தளவுக்கு உயர்த்தியது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவருடன் டைப்பிஸ்டாக இருந்தவர்களில் பலர் அதே நிலையில் பல ஆண்டுகளுக்கும் அப்படியே இருந்தனர். வெள்ளத்தனைய மலர் நீட்டம்.
எங்கள் ஐ.டி.பி.எல். தலைவர் ராவ் அவர்கள், ஆரம்பத்தில் அதே நிறுவனத்தில் ஒரு நடுநிலை அதிகாரியாக ரிஷ்கேஷில் இருந்தார். சௌகரியமான வேலை. குவார்டர்ஸ் உண்டு. அவ்வாறு சென்று அமர்பவர்கள் தேவையின்றி வேலை மாற்றுவதில்லை. ஆனால் இவரோ சௌகரியமான வேலையை விட்டு உதறி, வேறு பல இடங்களில் வேலை செய்து பிறகு அதே கம்பெனிக்கு நிர்வாகியாக வந்தார். அவருடன் சக பதவியில் இருந்தவர்கள் அப்படியே இருந்தனர். இதைத்தான் வெள்ளத்தனைய மலர் நீட்டம் என வள்ளுவர் கூறுகிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
21 hours ago
24 comments:
வலைத்தளத்தில் சுய புராணம், குடும்ப அந்தாதி பாடாம ஒரு பதிவு போட முடியாதா? என்ன கேவலமான ஈனத்தனம். மற்றவர்கள் கண்டிப்பதில் உண்மை இருக்கு.
எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்தாலும் அலுக்காமல் புதிதாய்த் தோன்றுவது திருக்குறள்!
அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்கள் ஒருவரது சுயமேம்பாடு, சுய மேலாண்மை சிறப்புற்று செழிப்புடன் வாழ வகை செய்யும்.
பள்ளிக்கூட தமிழ் கோனார் நோட்ஸ் பதிப்பகத்தாரான திருச்சி பழனியப்பா பிரதர்ஸ் கூட பல எளிமையான பொழிப்புரை திருக்குறளுக்குப் பதிப்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள்!
அரசியல் ஆரவாரம் ஏதும் இல்லாமல் :-))
//வலைத்தளத்தில் சுய புராணம், குடும்ப அந்தாதி பாடாம ஒரு பதிவு போட முடியாதா?//
என்ன செய்யறது. இந்த டோண்டு ராகவன் இருக்கானே அவன் தனக்கு தோணினதைத்தான் செய்வான். மத்தவங்க சொல்லறதை பரிசீலிப்பான், ஆனால் அவனைப் பொருத்தமட்டில் அவன் முடிவுகள் அவனதுதான்.
அம்மா, அப்பா, வாத்தியார், ஒண்ணு விட்ட சித்தப்பான்னு யார் சொன்னாலும் தனக்கு சரின்னு படறதைத்தான் செய்வான்.
அவன் இம்மாதிரி செய்யறது பிடிக்கலைன்னு யாராச்சும் சொன்னாக்க சரிதான் போடா ஜாட்டான்னு போயிடுவான் இந்த டோண்டு ராகவன்.
இன்னுமா இதை புரிஞ்சுக்கலை அனானியாரே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்தாலும் அலுக்காமல் புதிதாய்த் தோன்றுவது திருக்குறள்!//
ரொம்பவும் உண்மை ஹரிஹரன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
your transalation of kural is wrong.....please dont degrade thiruvalluvar please ...
அப்படியா ராம் அவதார்? உங்கள் வெர்ஷனை கூறவும், பார்ப்போம்.
தவறு என்பதை உணர்ந்தால் நான் நிச்சயம் உங்களுக்கு நன்றி கூறி திருத்திக் கொள்வேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
it should have been
"The length of the lotus stalk depends on the water's depth. Even so, a man's greatness is proportionate to his mind's energy. "
"The length of stem of a water-borne flower has to just exceed the depth of the pond."
""The length of the lotus stalk depends on the water's depth".
Both mean the same thing expressed in different manner.
Regards,
Dondu N.Raghavan
அற்புதமான பதிவு. வழங்கியதற்கு நன்றி.
மேலும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருவேளை, இனிமேலும் எழுதுவீர்களோ என்னவோ?
திருக்குறளின் பல கருத்துக்கள் எனக்கு குழந்தைத்தனமாகவே தோன்றுகின்றன. ஒருவேளை, அது என் அறியாமையின் வெளிப்பாடாகக்கூட தோன்றலாம். இங்கும், ஐயன் சொல்வது உளளத்தனையது உயர்வு என்பது நடைமுறையில் எப்படி இருக்கிறது? இங்கு உள்ளம் என்று சொல்லப்படுவது முயலவேண்டும் என்கிற ஆர்வம் என்ற அளவில் எடுத்துக்கொண்டால் ஒருவேளை சரியாகுமோ என்னமோ?
ஆனால், உள்ளம் என்பது உயர்ந்த குறிக்கோள்கள் கொண்ட இலக்கு என்று நான் நினைத்தால் இது சரியாக படவில்லை.
எத்தனையோ நல்ல இலக்கு கொண்டவர்கள் இன்று வாழ்க்கையில் வெற்றி பெறாமல் வீழ்ந்துவிட்டதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அதுபோல, பல கொடிய உள்ளம் கொண்டவர்கள் இன்று உயர்வதை பார்க்கிறோம். இது இன்று மட்டும் அல்ல, என்றுமே நடந்து வருவதுதான்.
இதை இந்த குறளுடன் எப்படி பொருத்திப் பார்ப்பது?
இக்குறளின் அடுத்த பக்கத்தை பார்த்தாலும் இது ஒரு குழந்தைத்தனமான ஒரு கருத்து என்றே எனக்கு மறுபடியும் படுகிறது.
"உள்ளத்தனையது உயர்வு" என்பது தீர்மானமில்லை.
உள்ளம் நன்றாக (அது எந்த பொருளில் சொன்னாலும்) இருந்தால் மட்டும் உயர்ந்துவிட முடியுமா? பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று வாழ்க்கையில் உயராமல் இருப்பதற்கு அவர்களின் உள்ளம் (determination) அல்லது விடாமுயற்சி இல்லாதது காரணமா? இல்லை!!
சமுதாயத்தில் இன்று பல வசதிகளும் பொருளாதார உதவிகளும் நிறைய தேவைப்படுகின்றன. அதில்லாமல் உள்ளத்தனையது உயர்வு என்பது சரியா?
அம்பானியைச் சொல்கிறீர்கள். அம்பானியுடன் இருந்த பல டைப்பிஸ்ட்கள் இன்றும் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர்கள் முயற்சியோ, ஆர்வமோ இல்லாதவர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை அம்பானிக்கு இறைவன் அருளால் பல ஆதரவுகளால் முன்னேறினார் என்று தோன்றுகிறது.
ரைட் மேன் அட் ரைட் டயம்.
ஒரு விவாதத்திற்காகவே நான் இந்த கருத்துக்களை வைக்கிறேன். திருக்குறளை வெறுக்கிறேன் என்று யாரும் ஜல்லி அடிக்கவேண்டாம். திருக்குறள் ஒரு புனிதபசுவாக எப்போதோ ஆகிவிட்டது என்பதை நான் அறிவேன்.
நல்லதொரு பதிவுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி.
//மேலும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருவேளை, இனிமேலும் எழுதுவீர்களோ என்னவோ?//
எழுதும் எண்ணம் உள்ளது. ஆண்டவன் மனம் வைக்க வேண்டும்.
//திருக்குறளின் பல கருத்துக்கள் எனக்கு குழந்தைத்தனமாகவே தோன்றுகின்றன.//
உங்களுக்குமா தோன்றியது? எனக்கும் கூடத்தான். அதிலும் அறத்துப்பால் தாண்டுவதற்குள் தாவு தீர்ந்து விட்டது. ஒன்று நிச்சயம். திருவள்ளுவர் தற்காலத்தில் இருந்து பதிவுகள் போட்டிருந்தால் அவரை மற்றப் பதிவாளர்கள் போட்டு தள்ளியிருப்பார்கள். :)
ஆனால் பொருட்பால் பரவாயில்லையாக உள்ளது. அதிலும் இக்குறள் எனது உள்ளத்தைக் கவர்ந்தது. இது உள்ள அதிகாரம் உக்கமுடைமை. நீ என்னவாக மாற எண்ணுகிறாயோ அவ்வாறு மாறிவிட்டதாக கற்பனை செய்து கொள் என்று பல சுயமுன்னேற்றப் பதிவுகளும் அதைத்தானே கூறுகின்றன. கனவுகள் காணுங்கள் என்று கலாமும் கூறினாரே. ஆக இது முதற்படியே. இது மிகவும் அவசியம், ஆனால் இது மட்டும் போதாது.
//ஒருவேளை, அது என் அறியாமையின் வெளிப்பாடாகக்கூட தோன்றலாம்.//
நிச்சயம் இல்லை. இம்மாதிரி சந்தேகங்கள் வந்து ஒருமுறை சரியாக அவற்றைக் கையாண்டு தீர்த்து கொண்டால், நாம் முன்னேற அடுத்த படிக்கு போக இயலும்.
//இங்கு உள்ளம் என்று சொல்லப்படுவது முயலவேண்டும் என்கிற ஆர்வம் என்ற அளவில் எடுத்துக்கொண்டால் ஒருவேளை சரியாகுமோ என்னமோ?//
ஆம், அதுதான் இந்த அதிகாரத்தில் கூறுகிறார் ஐயன்.
//எத்தனையோ நல்ல இலக்கு கொண்டவர்கள் இன்று வாழ்க்கையில் வெற்றி பெறாமல் வீழ்ந்துவிட்டதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.//
அதுதான் கூறினேனே. வெறும் இலக்கு மட்டும் போதாது. அவசியம் தேவையானதுதான், ஆனால் அது மட்டும் போதாது.
//சமுதாயத்தில் இன்று பல வசதிகளும் பொருளாதார உதவிகளும் நிறைய தேவைப்படுகின்றன. அதில்லாமல் உள்ளத்தனையது உயர்வு என்பது சரியா?//
அவை இருந்தாலும், அவற்றை உபயோகப்படுத்தவும் அறிந்திருக்க வேண்டும் அல்லவா? நான் பம்பாயில் இருந்த மூன்றரை ஆண்டுகளில் மொழிபெயர்ப்பு வேலைகள் எடுக்க முயற்சிக்கவேயில்லை. விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்து விட்டேன். அந்த மூன்றரை ஆண்டுகள் போனது போனவைதானே.
//அம்பானியைச் சொல்கிறீர்கள். அம்பானியுடன் இருந்த பல டைப்பிஸ்ட்கள் இன்றும் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர்கள் முயற்சியோ, ஆர்வமோ இல்லாதவர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை அம்பானிக்கு இறைவன் அருளால் பல ஆதரவுகளால் முன்னேறினார் என்று தோன்றுகிறது.
ரைட் மேன் அட் ரைட் டயம்.//
எல்லாம் உண்மைதான். இருப்பினும் சந்தர்ப்பம் ஒரே முறை கதவைத் தட்டும்போது அதற்கு செவி சாய்த்தது அவர்தானே. அதற்கு அவர்தம் ஊக்கம்தானே காரணம்? உள்ளத்தனையது உயர்வுதானே.
//ஒரு விவாதத்திற்காகவே நான் இந்த கருத்துக்களை வைக்கிறேன். திருக்குறளை வெறுக்கிறேன் என்று யாரும் ஜல்லி அடிக்கவேண்டாம். திருக்குறள் ஒரு புனிதபசுவாக எப்போதோ ஆகிவிட்டது என்பதை நான் அறிவேன்.//
:) நான் அவ்வாறு சொல்ல மாட்டேன். கவலைப்படாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்கள் விளக்கம் மிகுந்த மனநிறைவை கொடுக்கிறது. எதிர்கருத்துக்களையும் நேராக மறுக்காமல் அரவணைத்து எழுதியுள்ளீர்கள்.
//// அவை இருந்தாலும், அவற்றை உபயோகப்படுத்தவும் அறிந்திருக்க வேண்டும் அல்லவா? /////
///// இருப்பினும் சந்தர்ப்பம் ஒரே முறை கதவைத் தட்டும்போது அதற்கு செவி சாய்த்தது அவர்தானே. /////
ஊக்கமான உள்ளம் என்பது வேறு, சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டிய அறிவு என்பது வேறு.
இங்கு ஐயன் முதல் பொருளை குறிப்பிடுகிறார். நீங்கள் சொல்வதோ இரண்டாவது பொருள். இது அதனுடன் சேராது.
ஊக்கமான உள்ளம் என்பது முதல் படி என்று நீங்கள் சொல்வது குரளில் அவ்வாறு இருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. உள்ளத்தனையது உயர்வு என்று ஐயன் தீர்மானமாகவே சொல்வதாகவே படுகிறது. அப்படி என்றால் அது முழுமையான உண்மை அல்ல என்று நீங்கள் சொல்வதே என் கருத்தும்.
அது சரி! ஊக்கமில்லாதவர்கள் உயர்வதில்லையா? சோனியா காந்தி வேண்டா வெறுப்பாக (காங்கிரஸை காப்பாற்றவே...!) பதவி ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. வேண்டா வெறுப்பாக உயர் பதவி வகித்தவர்கள் (தேவகெளடா இதில் வருவாரா?) பலருண்டு. அப்படி ஊக்கமில்லாமல் உயர்வது ஏன்?
இப்படி சுற்றி வளைத்து பல கோணங்களில் பார்த்தால் ஊக்கத்துக்கும் உயர்வுக்கும் தொடர்பு ரொம்ப பலகீனமாகவே தோன்றுகிறது...
///// எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்தாலும் அலுக்காமல் புதிதாய்த் தோன்றுவது திருக்குறள்! ////
ஹரி,
நன்றாக சொன்னீர்கள். என் பின்னூட்டங்களை படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை திருக்குறளின் பல கருத்துக்கள் முழுமையாகவும், தீர்மானமாகவும் இல்லாமல் இருப்பதாலேயே அவை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் பல புது கருத்துக்களை நமக்கு கொடுக்கின்றனவோ என்று எனக்கு சந்தேகம்.
அதாவது, நம் புதிய அறிவும், அனுபவங்களும் குறளின் கருத்துக்களை ஒட்டியும், வெட்டியும் பல புது கருத்துக்களை நம்முள்ளத்தில் ஏற்படுத்துகின்றன. இது என்னுடைய சித்தாந்தமே, இதற்கு என்னிடம் ஆதாரமில்லை!!
//ஊக்கமான உள்ளம் என்பது வேறு, சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டிய அறிவு என்பது வேறு.
இங்கு ஐயன் முதல் பொருளை குறிப்பிடுகிறார். நீங்கள் சொல்வதோ இரண்டாவது பொருள். இது அதனுடன் சேராது.//
ஏன் சேராது? ஆனால் ஒன்று முதலாவது இருக்க வேண்டும். அதுவே இல்லாத போது இரண்டாவது வருவதற்கு பிரமேயமே இல்லை.
//ஊக்கமான உள்ளம் என்பது முதல் படி என்று நீங்கள் சொல்வது குறளில் அவ்வாறு இருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. உள்ளத்தனையது உயர்வு என்று ஐயன் தீர்மானமாகவே சொல்வதாகவே படுகிறது. அப்படி என்றால் அது முழுமையான உண்மை அல்ல என்று நீங்கள் சொல்வதே என் கருத்தும்.//
ஆம். எல்லாவற்றையும் முழுமையாக எழுத திருவள்ளுவர் என்ன மேலாண்மை நூலா எழுதுகிறார்? அவர் கோடு போடுவார், வல்லவர் ரோடு போட வேண்டியதுதான்.
//அது சரி! ஊக்கமில்லாதவர்கள் உயர்வதில்லையா? சோனியா காந்தி வேண்டா வெறுப்பாக (காங்கிரஸை காப்பாற்றவே...!) பதவி ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. வேண்டா வெறுப்பாக உயர் பதவி வகித்தவர்கள் (தேவகெளடா இதில் வருவாரா?) பலருண்டு. அப்படி ஊக்கமில்லாமல் உயர்வது ஏன்?//
அதாவது இதற்காக திட்டமிடவில்லை என்கிறீர்கள். ஆனால் அந்த ஆசை ஆழ்மனத்தில் இருந்திருக்க வேண்டும். சமயம் பார்த்து வந்த போது அதை பிடித்து கொண்டது அதனால்தான்.
//ஒருவேளை திருக்குறளின் பல கருத்துக்கள் முழுமையாகவும், தீர்மானமாகவும் இல்லாமல் இருப்பதாலேயே அவை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் பல புது கருத்துக்களை நமக்கு கொடுக்கின்றனவோ என்று எனக்கு சந்தேகம்.//
ஆகவேதான் திருக்குறள், பகவத் கீதைக்கு இத்தனை உரைகள், குரான் பைபிள் ஆகியவற்றுக்கு இத்தனை விளக்க உரைகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அனானி சொல்லியபடி, சில திருக்குறள்கள் பயங்கரமான காமெடியை தரும். இந்த காலத்துக்கு சற்றும் பொருத்தமில்லாததாக தோன்றும்
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லார் தொழுதுண்டு பின்செல்பவர்"
:))
கூட்டுறவு கடனுக்கான ஜப்திக்காக ஆந்திர விவசாயி ஒருவர் தன்னையே எரித்துக்கொண்ட சம்பவத்தை நாளிதழில் பார்த்தேன் நேற்று...
நீலகிரி தேயிலை அதளபாதாளத்தில் சரிந்து கிலோ 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது, மேலும் 8% வாட் வரியும் விதிக்கப்படுகிறது...இன்றைக்கு ஒவ்வொரு தேயிலை விவசாயியும் கடனாளி...
செங்கம் / திருவண்ணாமலை ஏரியாவில் கரும்பு வெட்ட கட்டிங் ஆர்டர் கடந்த 6 மாதமாக கொடுக்கப்படவில்லை...அதனால் 16 மாத வயதுள்ள கரும்பு பயிர் தன்னுடைய பிழிதிறனை இழந்து காய்ந்த குச்சிகளாக நிற்கிறது..10 ஏக்கர் கரும்பு போட்ட பெரு விவசாயி அன்றாட செலவுக்கு கூலிவேலைக்கு செல்லும்படி தள்ளப்படுகிறார்...
கணினி துறையில் இருப்பவரோ நல்ல சம்பல(ள)த்துடன் ஏ/சி ரூமில் அமர்ந்து, பாக்கிஸ்தானில் விளைந்த பாஸ்மதி ரைசை ஹைதராபாத் பிரியாணிக்கடையில் பெப்சி பருகியபடி உண்கிறார்.
இப்போது சொல்லுங்க, திருவள்ளுவரில் பல குறள்கள் எனக்கு காமெடியானதில் என்ன ஆச்சர்யம்...
ஆனால் இந்த குறள்...அருமையானது...மாந்தரின் உள்ளத்துக்கு தகுந்தது போலத்தான் உயர்வும் இருக்கும் என்கிறது...
பல அர்த்தங்கள்...!!!!
//அனானி சொல்லியபடி, சில திருக்குறள்கள் பயங்கரமான காமெடியை தரும். இந்த காலத்துக்கு சற்றும் பொருத்தமில்லாததாக தோன்றும்//
அதுவும் அறத்துப்பாலில் பல குறள்களில் அவர் கூறும் கருத்துக்கள்படி நடந்தால்..?
ஊத்தி மூடிக் கொண்டு போக வேண்டியதுதான்.
இப்போது ஒரு பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் ஆழ்ந்து இருப்பதால் பிறகு உதாரணங்களுடன் வருகிறேன். பல குறள்களின் எதிர்ப்பார்ப்புகள் மூச்சையே நிறுத்தி விட்டன. நம்ம மாசிவகுமார் அவர்களைத் தவிர வேறு யாரும் ஒத்து கொள்ளமாட்டார்கள். :)
அன்புடன்,
டோண்டு ராகவன்
//// ஆகவேதான் திருக்குறள், பகவத் கீதைக்கு இத்தனை உரைகள், குரான் பைபிள் ஆகியவற்றுக்கு இத்தனை விளக்க உரைகள். ////
சந்தடி சாக்கில், நான் போற்றும் கீதையையும் முழுமையும், தீர்மானமும் இல்லாதது என்று சொல்லிவிட்டீர்களே! என்ன கொடுமை?
//சந்தடி சாக்கில், நான் போற்றும் கீதையையும் முழுமையும், தீர்மானமும் இல்லாதது என்று சொல்லிவிட்டீர்களே! என்ன கொடுமை?//
குரான் மற்றும் பைபிளையும் கூட சேர்த்ததற்காக பலர் பின்னூட்டமிடலாம். எல்லோருக்கும் ஒரே பதில்தான். தவறு, ஒரே ஒரு கேள்வி.
பிறகு ஏன் இவற்றுக்கெல்லாம் இத்தனை உரைகள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பிறகு ஏன் இவற்றுக்கெல்லாம் இத்தனை உரைகள்?//
மனுசனக்கு எவ்வளோ சொன்னாலும் உரைக்காது, அதான்.
//மனுசனக்கு எவ்வளோ சொன்னாலும் உரைக்காது, அதான்.//
:) பாத்தீங்களா, இந்த ஒரு கேள்விக்கே விதம் விதாமா பதில் வருவதை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Bit busy and hence no feedbacks. I have read all these Nehru stuff in your blog. What to know your vimarsanam on periyar movie. Hope you can bring out your views cause some of the portions of rajaji-periyar, anna- periyar relationships were missing i think. since you are very familiar with both the leadwers history. waiting for that post and let me know by an sms. Thanks.
Anbudan
OSAI Chella
பெரியார் படம் பார்த்த உடனேயே பதிவும் போட்டு விடுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அது சரி! ஊக்கமில்லாதவர்கள் உயர்வதில்லையா? சோனியா காந்தி வேண்டா வெறுப்பாக (காங்கிரஸை காப்பாற்றவே...!) பதவி ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. வேண்டா வெறுப்பாக உயர் பதவி வகித்தவர்கள் (தேவகெளடா இதில் வருவாரா?) பலருண்டு. அப்படி ஊக்கமில்லாமல் உயர்வது ஏன்?//
பிரதமர் பதவி ஒரு நாட்டை வழிநடத்தி செல்லும் பொறுப்பா பார்க்காம அதை ஒரு உயர் பதவியா பார்க்கிற மனப்பான்மைய என்னன்னு சொல்றது.
//அனானி சொல்லியபடி, சில திருக்குறள்கள் பயங்கரமான காமெடியை தரும். இந்த காலத்துக்கு சற்றும் பொருத்தமில்லாததாக தோன்றும்
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லார் தொழுதுண்டு பின்செல்பவர்"
:))
கூட்டுறவு கடனுக்கான ஜப்திக்காக ஆந்திர விவசாயி ஒருவர் தன்னையே எரித்துக்கொண்ட சம்பவத்தை நாளிதழில் பார்த்தேன் நேற்று...
....
கணினி துறையில் இருப்பவரோ நல்ல சம்பல(ள)த்துடன் ஏ/சி ரூமில் அமர்ந்து, பாக்கிஸ்தானில் விளைந்த பாஸ்மதி ரைசை ஹைதராபாத் பிரியாணிக்கடையில் பெப்சி பருகியபடி உண்கிறார்.//
பாக்கிஸ்தான் பாஸ்மதியும் ஹைதராபாத் பிரியாணிக்கடை பெப்ஸியும் தான் உங்களுக்கு உயர்வு என்றால் கண்டிப்பாக திருக்குறளோ கீதையோ உங்களுக்கு ஒத்து வராது.
உயர்வுன்னா என்ன? அது வெளியில உங்களைப்பற்றி மற்றவர் என்ன பேசறாங்கங்கறது இல்ல. தனிப்பட்ட முறையில் நீங்க எவ்வளவு தூரம் மன நிறைவு அடைஞ்சிருக்கீங்கங்கறது தான் உயர்வு. பில் கேட்ஸையும் அன்னை தெரஸாவையும் கம்பேர் பண்ணி பாருங்க. பில் கேட்ஸ் சம்பாதிக்காத பணமே இல்லை, சொந்தமா தீவு கூட வச்சிருக்கார். மதர் தெரஸா இறந்தப்ப அவங்க விட்டுட்டுப் போன ஒரே சொத்து இரண்டு செட் துணியும் ஒரு பக்கெட்டும் தான். ஆனா அவங்க எவ்வளவுபேரோட அன்பை எடுத்துட்டு போனாங்க, எவ்வளவு மன நிறைவோட இறந்திருப்பாங்க. பில் கேட்ஸுக்கும் அதையே சொல்ல முடியுமா? மதர் தெரஸாவின் சேவை மனப்பான்மை உள்ள உயர்வா அல்லது பில்கேட்ஸின் பணம் சம்பாதிக்கும் வெறி உள்ள உயர்வா? கேட்ஸுக்கு கொஞ்சம் மன நிறைவு இருந்தாலும் அது அவர் சம்பாதிச்ச பணத்தால இருக்காது, உலகத்துல பல மக்கள் பயன்பெறுகிற(?) மாதிரி மென்பொருள் தயாரிச்சதால வேணும்னா இருக்கலாம்.
என்ன தான் இருந்தாலும் தன் நிலத்துல தானே உழுது அதுல இருந்து கிடைக்கிற புழுங்கல் அரிசி சாதத்துல இருக்குற ருசி மேல்நாட்டு கம்பெனிகளை தொழுது ஒயிட் காலர் கூலிப் பொழப்பு நடத்தி வருகிற பிச்சைக் காசில் சாப்பிடுற பிரியாணில இருக்காது.
விவசாயிகளுடைய பிழைப்பு நஷ்டத்துல ஓடுதுன்னா அது அந்த தொழில்ல இருக்கிற குறையில்ல. தகுந்த ஊக்கம் இல்லாததே காரணமா இருக்கலாம். லாபம் அளிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தெரியாம பழைய பல்லவியையே பாடிக்கிட்டு இருப்பதால இருக்கலாம். ஏன் மத்த நாட்டுலயெல்லாம் விவசாயமே பன்றது கெடையாதா? வறண்ட நிலத்தையும் தன் உழைப்பால் விளைநிலமாக்கும் விவசாயிகளின் செய்தியும் ஊடகங்களில் வரத்தான் செய்கிறது.
//அதுவும் அறத்துப்பாலில் பல குறள்களில் அவர் கூறும் கருத்துக்கள்படி நடந்தால்..?
ஊத்தி மூடிக் கொண்டு போக வேண்டியதுதான்.//
ஆமாம் ஒரு விஷயத்துல கன்விக்ஷன் இல்லாம யாரோ ஒருத்தர் 2000 வருஷத்துக்கு முன்னால் சொன்னார் என்கிற ஒரே காரணத்துக்காக அதை அலசி ஆராயாம, அரைகுறையா புரிஞ்சிகிட்டு அப்படியே ஃபாலோ பன்னா கண்டிப்பா இழுத்து மூடிக்கிட்டு போவ வேண்டியதுதான்.
எல்லொருக்கும் ஒரு வேண்டுகோள், பின்னுட்ங்களை சற்று சுருக்கமாக வைக்கவும்
//எல்லொருக்கும் ஒரு வேண்டுகோள், பின்னுட்ங்களை சற்று சுருக்கமாக வைக்கவும்//
I second it.
GK
Post a Comment