9/23/2007

அதிகப் பிரசங்கித்தனமான தணிக்கைகள்

இப்பதிவு வெகு நாட்களாக என் மனதில் நிலை கொண்டிருந்தது. இன்று திடீரென அதன் உந்துதல் அதிகமானதற்கு காரணம் யாழ் சுதாகர் அவர்களின் இப்பதிவே காரணம். அவருக்கு என் முதன்கண் நன்றி. இனிமையான எம்ஜிஆர் பாடல்களை கேட்டு கொண்டே இங்கு எழுதுகிறேன். இங்கு இனிமை என்பது பாடல்களுக்கு மட்டுமல்ல எம்ஜிஆருக்குமே பொருந்தும் என கூறுவது அந்த உலகம் சுற்றும் வாலிபனின் 61 வயது இளம் ரசிகனான இந்த டோண்டு ராகவன்.

சமீபத்தில் 1967-ல் திமுக ஆட்சி ஏற்பட்ட சில மாதங்களில் இச்செய்தி குமுதத்தில் வந்தது. அதாவது "பெற்றால்தான் பிள்ளையா" என்னும் எம்ஜிஆர் படத்தில் உள்ள "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்னும் பாடலை நேயர் விருப்பத்தில் போட AIR சம்மதிக்கிறது என்பதை அச்செய்தி குறிக்கிறது. அதுவரை அப்பாடல் கீழ்க்கண்ட வரிக்காக தடை செய்யப்பட்டிருந்தது.

"மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்" என்பதுதான் அது. அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்ததும் இத்தடை அவசர அவசரமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தில் இம்மாதிரி அசட்டுத்தனமான தணிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை. உதாரணத்துக்கு ஹார்மோனியம் பல ஆண்டுகள் இங்கு தடை செய்யப்பட்டிருந்தது. பிறகு காலத்தின் கட்டாயம் இத்தடையின் அபத்தத்தை உடைத்தது. அது இருக்கட்டும், நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கண்டுணர்ந்த சில அபத்தத் தடைகளை பற்றி இங்கு பேச உள்ளேன்.

"காதலிக்க நேரமில்லை" படத்தில் "அனுபவம் புதுமை", "என்ன பார்வை உந்தன் பார்வை" ஆகியவற்றுக்கு தடா. வெண்ணிற ஆடையிலோ "சித்திரமே சொல்லடி, முத்தமிட்டால் என்னடி" என்ற இனிமையான பாடலைக் கேட்டாலே அகில இந்திய ரேடியோவின் நிலைய இயக்குனருக்கு கொலைவெறி வரும் போலிருக்கிறது. அப்பாடலை நேயர் விருப்பமோ, வேறு எங்குமோ போட மாட்டார்கள். இப்போதெல்லாம் போடுகிறார்கள் போல. காலம் கடந்த நீதி என்றுதான் அவற்றை குறிப்பிட வேண்டும்.

என் நினைவிலிருந்து எழுதுகிறேன், அவ்வாறு தடை செய்யப்பட்ட பாடல்கள்:

1. "வாங்கோன்னா, வாங்கோன்னா", படம் பத்திரகாளி.
2. "ஒத்த ரூபா உனக்கு தாரேன்", படம் பத்திரகாளி
3. "பாதி நிலாவை விண்ணில் வைத்து, மீதி நிலாவை கண்ணில் வைத்து" எங்க வீட்டு பிள்ளை.

இன்னும் கூறிக்கொண்டே போகலாம், ஆனால் எனது கருத்தை நிலை நிறுத்த அவை போதும் என நினைக்கிறேன்.

அதே "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்னும் பாடல் திரையிலும் தணிக்கை செய்யப்ப்பட்டது. "மேடையில் முழங்கு திரு விகாவைப் போல்" என மாற்றப்பட்டது. (வி.க. --> வி. கல்யாணசுந்தரனார் என்பதை அறிக, வேறு யாரும் அல்ல). :)

அதே போல சுமைதாங்கி படத்தில் வரும் "எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி" என்ற பாடல் வரி "எந்தன் பார்வையின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி" என்று மாற்றப்பட்டது.

அவசர நிலை அமுலில் இருந்த போது கிஷோர் குமார் சம்பந்த பாடல்கள் ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகளில் தடை செய்யப்பட்டன. தொண்ணூறுகளில் இந்த அபத்தங்கள் தொலைக்காட்சியிலும் குறைவில்லாம இருந்தன. உதாரணத்துக்கு ஆலோக் நாத் என்னும் நடிகர் (புனியாத் மெகா சீரியலில் மாஸ்டர்ஜி பாத்திரத்தில் வருபவர்) நடித்த சீரியல்கள் தேர்தல் நேரத்தில் தடை செய்யப்பட்டன. ஏனெனில், அவர் முகஜாடை வி.பி. சிங்கின் முகஜாடையுடன் ஒத்திருக்கும். அதே போல காட்சிகளில் சைக்கிள்கள் மாஸ்க் செய்யப்பட்டன. காரணம்? அவை தெலுகு தேசத்தின் தேர்தல் சின்னமாம். அரிக்கேன் விளக்கும் மூடி மறைக்கப்பட்டது. அது என்ன கட்சியின் சின்னம் என்பது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

இப்போது பழைய படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வரும்போது சிகரெட்டை எதிர்க்கும் வாசகங்கள் வருவதும் ஒரு தணிக்கையே.

இப்போது முரளி மனோஹர் ஒரு கேள்வி வைக்கிறான். "அதெல்லாம் சரிடா டோண்டு, யாருக்கோ பின்னூட்டமிட்டால் வேறு யாருக்கோ பின்னால் பிடுங்கி கொண்டதே"?

டோண்டு ராகவன் - ஷ் ஷ் ஷ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: எம்ஜிஆர் பாடல்கள் கேசட் முடிந்து விட்டது. பதிவையும் இப்போதைக்கு முடிக்கிறேன்.

12 comments:

PAISAPOWER said...

"வதனமோ சந்திரபிம்பமோ" என்ற பாடல் முதலில் முகமது சந்திரபிம்பமோ என எழுதப்பட்டு ஒலிப்பதிவும் முடிந்த பிறகு அது இஸ்லாமிய மதகுருவான ஸல்லாஹு முகமது நபி அவர்களை நினைவு படுத்துகிறது என கருதியதால்ல் பின்னர் வதனமோ சந்திரபிம்பமோ என மாற்றப்பட்டதாம்.

dondu(#11168674346665545885) said...

சுவாரசியமான தகவல் பைசாபவர் அவர்களே.

"தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை.." என்னும் அருமையான பாடலை "தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த" என்று கொலை செய்யும் பாடகர்களும் உள்ளனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

உண்மைத்தமிழன் said...

'அன்பே வா' படத்தில் இடம் பெற்ற 'புதிய வானம் புதிய பூமி' பாடலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இதில் இரண்டு விஷயங்கள். ஒன்று அதில் இடம் பெறும் 'உதயசூரியனின் பார்வையிலே' என்கிற வரிகளுக்காக.. இன்னொன்று எம்.ஜி.ஆருக்காக..

பின்பு எம்ஜிஆர் தி.மு.க.விலிருந்து விலகிய பிறகு 'புதிய சூரியனின் பார்வையிலே' என்று மாற்றப்பட்டுத்தான் ஒலி நாடாக்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் படத்தில் அதே வரிகள்தான் இன்றுவரையிலும் இருக்கிறது.

எம்.ஜி.ஆர். எப்போதெல்லாம் காங்கிரஸோடு கூட்டணி வைத்தாரோ அப்போதெல்லாம் இப்பாடல் ஒலிபரப்பாகும். எப்போதெல்லாம் விலகினாரோ அப்போதெல்லாம் ஆகாது.. இப்படியொரு கொடுமை..

அதேபோல்தான் மூன்றாம் தரமான வரிகளைக் கொண்ட பாடல்களைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நிறையப் பாடல்கள் தடை செய்யப்பட்டன. அதையெல்லாம் வரவேற்க வேண்டியதுதான்.. வேறு வழியில்லை.

ரேடியோவைத் தவிர வேறு எந்தப் பொழுது போக்கும் அல்லாத கிராமப்புற மக்களிடையே 'நேத்து ராத்திரி அம்மா'வை ஒலிபரப்பி நாம் ஏன் நம் அருமைத் தமிழைக் கொலை செய்ய வேண்டும்? நல்ல விஷயம்தானே..

dondu(#11168674346665545885) said...

//அதேபோல்தான் மூன்றாம் தரமான வரிகளைக் கொண்ட பாடல்களைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நிறைய பாடல்கள் தடை செய்யப்பட்டன.//
அதில் எவ்வித வெளித்தன்மையும் காட்டப்படவில்லையே. அனுமதித்த பாடல்களில் "எலந்தப்பயம், எலந்தப் பயம்", வா வாத்யாரே வூட்டாண்டே" "காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி" ஆகிய பாடல்கள் என்ன இலக்கிய வரிகளா?

சென்சார் என்று ஒன்று இருந்து சென்சார் செய்த பாடல்களை மேலும் சென்சார் செய்ய இவர்கள் யார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்பின்னூட்டத்தை போடும்போது அதே யாழ் சுதாகர் எழுதிய இன்னொரு பதிவிலிருந்து சிவாஜி பாடல்கள் பின்னணியில் ஒலித்து கொண்டிருக்கின்றன. "நிலை மாறினான் குணம் மாறினான்" என்ற வரிகள் ஒலிக்கின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

யாழ் சுதாகர் said...

அன்றைய பாடல் தணிக்கை பற்றிய நினைவுகளை அசை மீட்க வைக்கும் அருமையான பதிவு.எனது எம்.ஜி.ஆர் பதிவு பற்றிய தங்களின் சிறப்புக் குறிப்பிடுகைக்கும் எனது நன்றிகள்.

dondu(#11168674346665545885) said...

வருகைக்கு நன்றி யாழ் சுதாகர் அவர்களே. வெறுமனே பார்வையாளனாக இருந்த நான் எழுதியதெல்லாம் நான் வெளியிலிருந்து அவதானித்ததுதான். ஆனால் வானொலி அறிவிப்பாளர் என்ற முறையில் உங்களுக்கு பல முறை இது பற்றியெல்லாம் தாக்கீது வந்திருக்குமே. அவற்றைப் பர்றி கூற இயலுமா?

உதாரணத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மறைந்த அன்று நான் அகில இந்திய வானொலியின் வெளி நாட்டு சேவைக்கான பிரெஞ்சு ஒலிபரப்பை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தேன். முன்னாலேயே தெரிவு செய்யப்பட்டிருந்த ஹிந்தி படப்பாடல்களை விலக்கி தத்துவப்பாடல்களை போடச் சொன்னார்கள். (மொத்தம் 3 பாடல்கள்). நானும் சந்தோஷமாக பாக்கிஜா, சவுக்கிதார், அனோக்கீ ராத் ஆகிய படங்களிலிருந்து தத்துவப் பாடல்களை போட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<----
இப்போது முரளி மனோஹர் ஒரு கேள்வி வைக்கிறான். "அதெல்லாம் சரிடா டோண்டு, யாருக்கோ பின்னூட்டமிட்டால் வேறு யாருக்கோ பின்னால் பிடுங்கி கொண்டதே"?
--->
இதுக்கும் இந்தப்பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு புரியல்லே.டோண்டு யார்மேலோயோ கோபமாய் இருக்கார்னு புரியுது.

இதைப்படிக்கும் யாராவது காரணம் கண்டுபிடித்து சொன்னால் தேவலை

Anonymous said...

vote for cho ramaswamy in CNN-IBN
http://features.ibnlive.com/features/2007/top25editors/

dondu(#11168674346665545885) said...

A very vague voting structure from CNN-IBN.

Scale 1 to 5 is ok. But what is 1 and what is 5? They are in which order?

Regards,
Dondu Raghavan

Anonymous said...

//அரிக்கேன் விளக்கும் மூடி மறைக்கப்பட்டது. அது என்ன கட்சியின் சின்னம் என்பது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.//

அது அதிரடி சூப்பர்ஸ்டார் 'லாலு' வின் சின்னம்
-விபின்

dondu(#11168674346665545885) said...

//அது அதிரடி சூப்பர்ஸ்டார் 'லாலு' வின் சின்னம் - விபின்//

நன்றி விபின் அவர்களே. ஹரிக்கேன் விளக்கை விடுங்கள். ஒருவன் சைக்கிள் விடும் காட்சியில் சைக்கிளை மாஸ்க் செய்தால் வரும் காட்சி அபத்தத்தை யோசியுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது