11/18/2007

எனது கிரிக்கெட் எண்ணங்கள்

இந்தப் பதிவைப் பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்தன. மேலே செல்லும் முன்னால் ஒன்றை கூறி விடுகிறேன். கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். சாரண இயக்கத்தில் இருந்த நாட்களில் மாலை வேளைகளில் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். நாட்குறிப்பில் எழுதும் சமயம் "இன்று ரன் எதுவும் எடுக்கவில்லை" என எழுதுவேன். பல நாட்கள் அவ்வாறே இருந்ததைப் பார்த்து என் அன்னை "நீ ரன் எடுத்தால் மட்டும் எழுது" என்று கூறிவிட, அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டதில் கிரிக்கெட் ஸ்கோர் விவரம் என் நாட்குறிப்பிலிருந்து மறைந்தது. இதையும் இன்னும் சிலதையும் எனது இப்பதிவில் கூறியுள்ளேன்.

இப்போது மேலே முதலில் குறிப்பிட்டுள்ள பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். அம்மாதிரி ஒரே பாலில் இருவர் அவுட் ஆக இயலாது. ஏனெனில் ஒருவர் ரன் அவுட் ஆனதுமே அந்தப் பந்து டெட் பால் ஆகிறது. ஆகவே அதை வைத்து இன்னொரு பேட்ஸ்மேனையும் அவுட் என்று சொல்ல இயலாது. ஆனால் நான் ஐ.டி.பி.எல்.லில் வேலை செய்தபோது எனது நண்பன் ஒரு சினேரியோ கூறினான். அதாவது ஒரே பந்தில் மூவர் அவுட் ஆவது.

"ஒரு நோ பால். அதை அடித்து விட்டு ரன் எடுக்க ஓடிய ஒரு பேட்ஸ்மேன் அவுட். அடுத்த பேட்ஸ்மேன் குறிப்பிட்ட நேரத்துகுள் மைதானத்துக்கு வர இயலாததால் அவர் டைம் அவுட் ஆகிறார். அடுத்து வந்தவர் உடனேயே க்ளீன் போல்ட். நோ பால் எண்ணிக்கையில் சேராததால் ஒரு பந்தில் மூவர் அவுட் என்றான்". நிஜமாகவே நடந்தது என்று சத்தியம் வேறு செய்தான். நானும் இது சம்பந்தமாக மேலும் அறிய என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு இன்று ஃபோன் செய்தேன். அவர் வெளியில் போயிருந்ததார். பிறகு நம்ம பத்ரியைக் கேட்டேன். அவர் அம்மாதிரி தன் நினைவில் நடந்ததே இல்லை என அடித்து கூறினார். "தியரிட்டிக்கலாக என்ன வேண்டுமானாலும் கூறலாம்தான். 11 பேரையுமே 11 நோ பால்களில் ரன் அவுட் கூட ஆக்கலாமே" என்றும் கூறினார்.

நானும் கூகளில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஆனால் ஒரு சுவாரசியமான செய்தி கிடைத்தது. அதாவது 1981 ஆண்டு வரை அண்டர் ஆர்ம்ஸ் போலிங் விதிக்கு விரோதம் இல்லை. அதை உபயோகித்து ஆஸ்திரேலியா போல் செய்த கடைசி பந்தில் அண்டர் ஆர்ம்ஸ் உபயோகித்து பந்தை தரையோடு உருட்டச் செய்தனராம். அதை நாங்கள் பீயுருட்டல் எனக் குறிப்பிடுவோம். ஏனெனில் கடைசி பந்தில் சிக்ஸர் எடுத்தால் நியூசிலாந்து மேட்சை டை செய்திருக்குமாம். அந்த சிக்சரை தடுக்கவே இந்த உருட்டல்.

சில மேட்சுகள் நினைவில் உள்ளன. சமீபத்தில் 1958-59-ல் மேற்கிந்திய அணிக்கும் இந்திய அணிக்கும் சென்னையில் டெஸ்ட் மேட்ச். அப்போதெல்லாம் கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில்தான் மேட்சுகள் நடக்கும். முதலில் ஆடிய மேற்கிந்திய அணி 500 ஆல் அவுட். இந்தியா 222 ஆல் அவுட். ஃபால்லோ ஆன் தராது மேற்கிந்திய அணி ஆடி 168 சொச்சம் ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிறகு இந்தியா 151 ரன்களிலேயே சுருண்டு மகத்தான தோல்வி. இந்தியாவின் கேப்டன் வினூ மன்காட். முதல் இன்னிங்ஸில் கில்க்றிஸ்ட் போட்ட பந்தை மிக அழகாக லேட் கட் செய்து நான்கு ரன்கள். அடுத்த பந்து க்ளீன் போல்ட். இரண்டாம் இன்னிங்ஸில் காயத்தால் அவர் ஆடவில்லை.

புச்சர் செய்த அழும்பால் ரோஹன் கன்ஹாய் 99 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதெல்லாம் ஏனோ நினைவில் உள்ளன. மற்றப்படி நான் முதலிலேயே கூறியபடி கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். டெண்டுல்கர் 10 கோல் போட மாட்டாரா என்றெல்லாம் அலம்பல் செய்து பின்னூட்டம் போட்டு என்றென்றும் அன்புடன் பாலாவை அவர் கிரிக்கெட் பதிவுகளில் டென்ஷன் ஆக்குவதுடன் சரி.

அன்புடன்,.
டோண்டு ராகவன்

7 comments:

Anonymous said...

//அதை நாங்கள் பீயுருட்டல் எனக் குறிப்பிடுவோம். //

இதுதான் உள்குத்து. வெளுத்து வாங்கறீங்க.

enRenRum-anbudan.BALA said...

//
டெண்டுல்கர் 10 கோல் போட மாட்டாரா என்றெல்லாம் அலம்பல் செய்து பின்னூட்டம் போட்டு என்றென்றும் அன்புடன் பாலாவை அவர் கிரிக்கெட் பதிவுகளில் டென்ஷன் ஆக்குவதுடன் சரி.
//

TRUE ! In my serious cricket related match review postings, you have created havoc :)

Anonymous said...

20:20 வரைக்கும் வந்த பிறகு, கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே எஞ்சி நிற்கிறது. இவ்வளவு ஆன பிறகு பேட்ஸ்மேனுக்குப் பின்னால் ஒரு கோல் போஸ்ட்டையே எதிர்காலத்தில் வைத்தாலும் ஆச்சர்யப் பட முடியாது!

dondu(#11168674346665545885) said...

//இவ்வளவு ஆன பிறகு பேட்ஸ்மேனுக்குப் பின்னால் ஒரு கோல் போஸ்ட்டையே எதிர்காலத்தில் வைத்தாலும் ஆச்சர்யப் பட முடியாது!//
அப்படிப் போடுங்க அருவாளை. அது மட்டும் நடந்தாக்க டெண்டுல்கர் எவ்வளவு கோல் போடுவார் என்பதை நம்ம என்றென்றும் அன்புடன் பாலாவே அனலைஸ் செய்திடுவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//டெண்டுல்கர் எவ்வளவு கோல் போடுவார் //

lol

hi buddy, youve gotta nice writing skill yaar. Write more.

Anonymous said...

///இந்தப் பதிவைப் பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்தன. மேலே செல்லும் முன்னால் ஒன்றை கூறி விடுகிறேன். கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். சாரண இயக்கத்தில் இருந்த நாட்களில் மாலை வேளைகளில் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். நாட்குறிப்பில் எழுதும் சமயம் "இன்று ரன் எதுவும் எடுக்கவில்லை" என எழுதுவேன். பல நாட்கள் அவ்வாறே இருந்ததைப் பார்த்து என் அன்னை "நீ ரன் எடுத்தால் மட்டும் எழுது" என்று கூறிவிட, அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டதில் கிரிக்கெட் ஸ்கோர் விவரம் என் நாட்குறிப்பிலிருந்து மறைந்தது.////

நல்ல காமெடி....!!!

சீனு said...

//அடுத்த பேட்ஸ்மேன் குறிப்பிட்ட நேரத்துகுள் மைதானத்துக்கு வர இயலாததால் அவர் டைம் அவுட் ஆகிறார்.//

டைம் அவுட் நேரம் 2 நிமிடம் என்று நினைக்கிறேன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது