அருமை நண்பர் சந்திரசேகரன் அவர்கள் இன்று எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர் ஸ்ரீனிவாச ராகவன் என்பவரது கட்டுரையை சுட்டியிருந்தார்.
அதை என்னால் இயன்ற அளவு தமிழில் சுருக்கி தருகிறேன். இப்போது வரும் வரிகளில் தன்னிலை ஒருமையில் வருவது ஸ்ரீனிவாசராகவன் அவர்களே.
இந்த வார ஆரம்பத்தில் நான் பம்பாய் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு பட்டறையில் பங்கு கொண்டேன். இதற்கு ஏற்பாடு செய்தது அயராது உழைக்கும் பத்மபிரகாஷ் அவர்கள். முன்பு அவர் Economic and Political Weekly-ல் இருந்தார். இப்போது பம்பாய் பல்கலைகழகத்தில் இருக்கிறார்.
பட்டறையின் நோக்கம் அதில் பங்கேற்பவர்களுக்கு எழுதுவதற்கான அடிப்படை விதிகளை போதிப்பதாகும். பங்கேற்பவர்களில் பெரும்பாலானோர் PhD அல்லது MPhil மாணவர்கள். அவர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் கட்டத்தில் உள்ளனர்.
நான் பேசும்போது எனது வழக்கமான அறிவுரைகளை எடுத்து வீசினேன். முதலாவதாக, ஒரு வாக்கியத்தில் சுமார் 15 சொற்கள் மட்டும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக காற்புள்ளிகளாகப் போட்டு சுழற்றி சுழற்றி எழுதும் முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களைப் பார்த்து கொண்டாலே முக்கால்வாசி பிரச்சினைகள் தீரும்.
மூன்றாவது விதி கூட உண்டு: என்ன சொல்ல வேண்டும் என்பதை தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்து கொள்ள வேண்டும். நன்றாக எழுதுவதற்கும் இங்கு சொன்னதற்கும் என்ன சம்பந்தம்? உண்டு.
எழுதும் திறமையை வளர்த்துக் கொள்வது இப்போது இந்தியாவில் எல்லோருக்குமே - நீதிபதிகள், அரசு அதிகாரிகள் அல்லது கம்பெனி நிர்வாகிகள் என்று யாராக இருந்தாலும் - தேவை என்பதுதான் நிஜம். வெறுமனே மாணவர்களுக்கு மட்டுமல்ல. ஆகவே அதை வளர்க்கும் எந்தப் பாடத்திட்டமும் பின்பற்றத் தகுந்ததே.
ஏனெனில் கடந்த 30 ஆண்டுகளாக கற்றறிந்தவர்களில் 99% பேர்களுக்கு எழுதுவது எப்படி என்பது சொல்லித் தரப்படவில்லை. இதற்கு முக்கியக் காரணமே CBSE தேர்வு முறைகளே.
1970களின் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதும் திறமையை வளர்ப்பது அவ்வளவு முக்கியமேயில்லை என்று CBSE தீர்மானித்தது. ஆகவே, கட்டுரை எழுதுவதைக் கட்டாயமாக்கிய பழைய பிரிட்டிஷ் கல்விமுறை மாற்றப்பட்டது.
அதன் இடத்தில் சிறுகேள்விகள் கேட்கும் பழக்கம் வந்தது. மாநிலக் கல்வி போர்டுகளும் இந்த வழக்கத்தை நகல் செய்தன. தரத்தில் கீழ்நோக்கிப் போக எல்லோருமே எண்பதுகளில் போட்டி போட ஆரம்பித்தனர். பதில்கள் இன்னும் சுருங்கின.
ஆனால் ISC போர்டு மட்டும் இப்போக்கை எதிர்த்தது. இது பற்றி என்னிடம் ஒரு தில்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு கல்லூரி ஆசிரியை பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
முதல் வீட்டுப்பாடத்தை மாணவ மாணவிகள் பூர்த்தி செய்து அளித்த உடனேயே அவருக்கு யார் CBSE-ல் படித்தது யார் அல்லது ISC-ல் படித்தது யார் என்பது புரிந்து விடுமாம். பிந்தையவரின் தரம் உயர்ந்தது.
எழுதும் திறமை பொதுவாக குறைந்ததுடன் இன்னொன்றும் சேர்ந்து கொண்டது. அதுதான் இலக்கணம் கற்பிக்கத் தவறுதல் ஆகும். முக்கியமாக எங்கு the போடுவது, எங்கு a அல்லது an போடுவது, எந்தெந்த வேற்றுமை உருபுகளை எங்கெங்கு பயன்படுத்துவது என்ற அடிப்படை அறிவே நிறைய பேரிடம் இல்லை. மற்ற இலக்கண விதிகளைப் பற்றி கூறவே வேண்டாம்.
மற்ற சமூக அறிவியல் பிரிவுகள் எப்படியோ எனக்கு தெரியாது. ஆனால் பொருளாதாரப் பிரிவில் நன்றாக எழுதக் கூடியவர்கள் தேவைக்கும் இருப்புக்கும் இடையே பெரிய இடைவெளி வந்து விட்டது. பொருளாதாரம் நன்கு தெரிந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது, ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு பொருளாதாரம் தெரியாது. இரண்டும் தெரிந்தவர்கள் கிட்டத்தட்ட லேது என்றாகி விட்டது.
ஆக, ஆய்வுக் கட்டுஇரைகள் பல கிட்டத்தட்ட புரிந்து கொள்ளவே முடியாத அள்வுக்கு போய்விட்டன. நான் இங்கு குறிப்பிடுவது தெளிவான இலக்கண விதிகளுக்குட்பட்ட எழுத்துகளே ஆகும். ஏதோ எழுதினோமா டாக்டரேட் பெற்றோமா என்ற விட்டேத்தியான மனப்பான்மை வளர்ந்து விட்டது
இதனால் நல்ல பிழைதிருத்துபவர்களது தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம் அவர்களுக்கு அதிகச் சம்பளம் தரவும் தயாராக பலர் இல்லை. ஏனெனில் அக்கட்டுரைகளை படிப்பவர்களது ஆங்கில அறிவும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்வது போல இல்லை. ஆகவே நிலைமை அப்படியே உள்ளது. ஆகவே முன்னே பின்னே இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை.
இப்போது மீண்டும் டோண்டு ராகவன். பல துறைகளில் இருந்து கட்டுரைகளை நான் மொழிபெயர்ப்பதால், இக்குறை எல்லாத் துறைகளிலும் உண்டு என்பதை அறிவேன். முன்னாலெல்லாம் பொறியியல் நிபுணர்கள் மட்டும் ஆங்கிலத்தில் வீக் என்று இருக்கும். அதனாலேயே இரு துறைகளிலும் போதிய அளவு திறமையுடைய என்னால் நல்ல மொழிபெயர்ப்பாளனாக வரமுடிந்தது என்பதை இங்கே சந்தடிச் சாக்கில் போட்டு வைக்கிறேன். ஸ்ரீனிவாச ராகவன் அவர்களுக்கு இன்னொன்றும் கூற ஆசைப்படுவேன். இம்மாதிரி எழுதும் திறமை குறைவது ஆங்கிலத்துக்கு மட்டும் உரித்தானது அல்ல. மற்ற மொழிகளிலும் அவ்வாறே. நான் இந்த விஷயத்தில் குறிப்பிடும் மொழிகள் ஃபிரெஞ்சு மற்றும் ஜெர்மன். மற்ற மொழிகளிலும் இவ்வாறுதான் இருக்கும் என்பதை நான் சுலபமாக ஊகிக்க முடியும்.
சமீபத்தில் 1982-ல் Greven என்ற மகானுபாவர் ஜெர்மனில் பிதற்றியதை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அந்த வேலை இன்ஸ்டாக்கிற்கு வந்ததுமே, மொழிபெயர்ப்புத் துறையின் அப்போதைய ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்வாமி அவர்கள் என்னையழைத்து, பாதிக்கும் மேற்பட்ட பக்கங்களை மொழிபெயர்ப்புக்காக என்னிடம் அளித்தார். மீதி பாதி வேலை இன்ஸ்டாக்கில் உள்ள முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள் மூவரிடம் கொடுக்கப்பட்டது. 12 நாட்களில் வேலை முடிய வேண்டும். கட்டுரை ஆசிரியரோ எவ்வளவு அபத்தமான இலக்கணப் பிழைகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார். பன்மை எழுவாய் ஆனால் ஒருமை பயனிலை என்றெல்லாம் தூள் கிளப்பினார். ஒரு பெரிய வாக்கியத்தில் எழுவாய், செயப்படுபொருள் எல்லாம் இட்டு பயனிலையையே மறந்தார் அப்பெருந்தகை. "Who manufactured this fellow" என்ற கேள்வியே எழுப்பப்பட்டது. இங்கு இதை ஏன் கூறுகிறேன் என்றால், இப்பிரச்சினை எல்லா மொழிகளுக்கும் உண்டு.
ஏன் தமிழையே எடுத்து கொள்ளுங்கள். "ஒவ்வொரு பூக்களுமே" என்று அபத்தமாக எழுதுபவர்கள் இல்லையா? "பிழைகள் மலிந்து விட்டது" என்று ஒன்றின்பால் பலவின்பால் தெரியாது எழுதுபவர்கள் இல்லையா?
சமீபத்தில் 1958-59-ல் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது, எங்கள் வகுப்பாசிரியர் ஜெயராம ஐயங்கார் நினைவுக்கு வருகிறார். ஆங்கில இலக்கணத்துக்கு என்று சிறப்பு வகுப்புகள் எடுத்தவர் அவர் ஒருவர் மட்டும்தான் இருப்பார். கல்லூரி அளவில் வரும் ஆங்கில சொல்லிலக்கணத்தையே கற்பித்தார்.
உதாரணத்துக்கு, Rama killed the evil Ravana என்னும் ஆங்கில வாக்கியத்தில்
Rama: Subject, proper noun, third person singular.
killed: Past tense of the verb "to kill", predicate, action belonging to the subject Rama.
the: definite article denoting the object Ravan
evil: adjective, qualifying the object Ravana
Ravana: Obbject, proper noun, third person singular.
என்று போர்டில் எழுதி படங்கள் எல்லாம் போட்டு காட்டினார். மேலே கூறியதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அவை எனது மறதிக்குறைவாலேயெ என்பதை முன்கூட்டியே கூறி விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
4 comments:
//மற்ற சமூக அறிவியல் பிரிவுகள் எப்படியோ எனக்கு தெரியாது. ஆனால் பொருளாதாரப் பிரிவில் நன்றாக எழுதக் கூடியவர்கள் தேவைக்கும் இருப்புக்கும் இடையே பெரிய இடைவெளி வந்து விட்டது.//
Using this as a opportunity many (who haven't learned economics) have started promoting factually wrong ideas as good economics. Readers beware!
என்ன சார் இப்படி சொல்லிவிட்டீர்கள்,
சிந்தனையே இல்லாமல், பக்கம் பக்கமாக 'ஸ்டாலின், மாவோ' என்று, மீள்வாந்தி எடுப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே!!
//சிந்தனையே இல்லாமல், பக்கம் பக்கமாக 'ஸ்டாலின், மாவோ' என்று, மீள்வாந்தி எடுப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே!!//
அதுவும் நீஈஈஈண்ட பத்திகளுடன் பல்லை உடைக்கும் மொழியில் எழுதுபவர்கள். அவர்களுக்குத்தான் முதலில் மொழியறிவு தேவை. தாங்கள் சொல்ல வருவதை வாசகர்கள் படித்து உணர்ந்தால்தானே அவர்கள் எழுதுவதற்கு ஒரு அர்த்தம் இருக்க முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அய்யா,
என்ன சொல்ல வர்றீங்க?தேவையில்லாமல் அடுக்கு மொழியில் நீள வாக்கியங்களாக பேசும்/எழுதும் வந்தேறி திராவிட கும்பலுக்கு மொழி அறிவு இல்லை என்றா?
பாலா
Post a Comment