5/12/2010

உழக்கிலே கிழக்கு மேற்கு பார்க்கும் பரமசிவம் அவர்கள்

பதிவின் தலைப்புக்கு போகும் முன்னால் வேறு ஒரு விஷயத்துடன் ஆரம்பிக்கிறேன். ஆனால் பின்னால் சொல்லவிருப்பதுடன் அதற்கு சம்பந்தம் உண்டு.

கிரிமினல் வழக்குகளில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது என்பது ஒரு பெரிய கலை. அதற்கு பல வழிமுறைகள் உண்டு. உதாரணத்துக்கு இங்கிலாந்தில் ஒரு குற்றவாளியின் மீது கேஸ். அவன் ஏற்கனவேயே பல வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றான். ஆனால் அப்போதிருந்த நடைமுறைகளின்படி இந்த ஒரு வழக்கில் பழைய குற்றங்கள் பற்றி அவனிடம் பிராசிக்யூஷன் குறுக்கு விசாரணை நடைபெறும் பட்சத்தில் (குற்றவாளி கேசில் சாட்சி சொல்ல வேண்டும் என நிர்பந்தப் படுத்தமுடியாது என்பது இன்னொரு விதி), கேட்கவியலாது. ஆனால் இதற்கும் ஒரு செக் உண்டு.

அதாகப்பட்டது, பிராசிக்யூஷன் தரப்பு சாட்சிகளை விசாரிக்கும்போது அவனது வக்கீலும் சாட்சிகள் வேறு எங்கேனும் குற்றம் செய்து தண்டிக்கப்பட்டிருந்தால் அது பற்றி கேட்கக் கூடாது. அப்படி மீறி கேட்டால் என்ன ஆகும்? குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட மேலே சொன்ன சலுகையும் செல்லாது.

இந்த கேசில் பிராசிக்யூஷன் தரப்பில் வந்த பெண் சாட்சி ஒரு விலைமகள் என்றும் ஏற்கனவேயே அது சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் தண்டனை பெற்றவள் எனவும் குற்றவாளியின் வக்கீல் நிறுவினார். இப்போது கைதியின் முறை சாட்சிக் கூண்டில் நிற்க. அவனிடம் அவனது பழைய குற்றங்கள் குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட அவனது வக்கில் ஆட்சேபணை எழுப்பினார். நீதிபதியோ அவர் முன்னால் பிராசிக்யூஷன் தரப்பு சாட்சியை சரித்திரத்தை நோண்டியது பற்றி நினைவுபடுத்த, இப்போதுதான் இந்த வக்கீல் ஒரு அருமையான பதிலை தந்தார். “யுவர் ஹானர், அந்த தருணத்தில் ஒரு கெட்ட நடத்தையுள்ள பெண் சாட்சியளிக்கலாகாது என்பதாலேயே அவ்வாறு செய்தேன்” என்றார். ஆனால் அந்தோ, நீதிபதியிடம் அவர் பப்பு வேகவில்லை. அவர் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது. எல்லோரும் அந்த வக்கீலை பார்த்து கேலியாக சிரித்தனர், இது கூட தெரியாத வக்கீலா என.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் இது பற்றி ஒரு புத்தகத்தில் படித்தபோது நான் கூட ஆச்சரியப்பட்டேன், இப்படிக் கூட இருப்பார்களா என்று. ஆனால் இன்று வெளிவந்த ஜூனியர் விகடனில் (16.05.2010 இதழ், 6-ஆம் பக்கம்) வந்த இக்கட்டுரையை பார்த்ததும் அந்த ஆச்சரியம் மறைந்தது.

சரி இப்போது தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோம்.

தகிக்கும் பார்த்திபன்...
மறுக்கும் வக்கீல்கள்!


சென்னையில் வன்னிய சம்பத், பகத்சிங் என்கிற வழக்கறிஞர்கள் இருவர் அடுத்தடுத்து ரவுடிகளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் வழக்கறிஞர்கள் வட்டாரத்தையே கொதித்துப் போக செய்துள்ளது. அது சம்பந்தமான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது சம்பந்தமாகத்தான் நடிகர் பார்த்திபன் அதே மாதிரி வேறு பல பெரிய குற்றங்களில் ஈடுபட்டு அப்பாவியின் உயிர்களை குடித்த குற்றவாளிகளின் கேசை மட்டும் வழக்கறிஞர்கள் ஏற்றுக் கொள்ளலாமா என கேள்வி கேட்டு சீறியுள்ளார். சக வழக்கறிஞர்களுக்கு மட்டும் இந்த கன்சிடரேஷன் ஏன் என்றும் அவர் ஆணித்தரமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் இதற்கு தந்துள்ள பதில்தான் உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் விஷயமாக அமைந்துள்ளது. அவர் சொல்வதாவது, அவ்வாறு குற்றவாளிகளுக்கு ஆஜராக மறுத்தால் நீதிபதியே இலவச வக்கீலை நியமித்து விடுவார். அதுவும் இல்லையென்றால் கேஸ் பெண்டிங்கிலேயே நிற்கும். ஆகவே அம்மாதிரி செய்யும்படி வழக்கறிஞர்களுக்கு உத்திரவு போட முடியாது என்பவர் அதற்கு பிறகு வெளியீடிருக்கும் சிந்தனை முத்துக்கள்தான் அபாரம்.

ஆனால் வழக்கறிஞர்கள் தாக்க்க்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என அவர்கள் கூறியதற்கு காரணமே வழக்கறிஞர்கள் என்றுகூட பாராமல் கொலை செய்த அந்த பாவிகள் வழக்கறிஞர்களுக்காக அலைய வேண்டும் என்பதால்தானாம்.

அடாடா என்ன சாதுர்யம்? ஏன் இப்போது மட்டும் நீதிபதி இலவச வக்கீலை நியமிக்க மாட்டாராமா? அப்படி இல்லை என்றால் இங்கும் கேஸ் பெண்டிங்கில் நிற்காதாமா? என்ன தெளிவான சிந்தனை பாருங்கள்?

மேலே குறிப்பிட்ட ஆங்கிலேய வக்கிலின் மறு அவதாரமோ நமது பரமசிவம் அவர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

கோவி.கண்ணன் said...

//அடாடா என்ன சாதுர்யம்? ஏன் இப்போது மட்டும் நீதிபதி இலவச வக்கீலை நியமிக்க மாட்டாராமா? அப்படி இல்லை என்றால் இங்கும் கேஸ் பெண்டிங்கில் நிற்காதாமா? என்ன தெளிவான சிந்தனை பாருங்கள்?//

பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையும் காட்டும் விலாங்குமீன் என்பார்கள்.

கிரைம் வழக்குகளில் வழக்கறிஞர்களுக்கு லட்சங்கள் கிடைக்கும், அதைவிடுவார்களா ?

என்னைக் கேட்டால் ஒருவன் கடுமையான குற்றம் செய்த குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் தவறான ஜோடனை செய்து வழக்கை திசை திருப்ப முயற்சி செய்த வக்கில்களுக்கும் தண்டனை கொடுக்கனும்.

ConverZ stupidity said...

அட போங்க சார். எவன் தப்பு செஞ்சாலும் ஈவிரக்கம் இல்லாம கடுமைய தண்டிக்க வேணுமுன்னு ஏட்டு-ல இருக்குறப்போ, பஞ்சமர் செய்த ஊழல பொறுத்துக்கலாம் ஆனா உயர் ஜாதியினர் (குறிப்பாக பார்பன்னர்) ஊழல் செய்தால் தண்டிக்கவேண்டுமுன்னு சொல்லுற அளவுக்கு both morally corrputed and mentally amputated மனிதர்கள் உலா வர்ற இந்த தேசத்துல இது கம்மிதான். யோக்கியன் எவன் சார் இப்போ law practice பண்ணுறான்.

Suresh Ram said...

NCRB statistics for 2008:
MURDER 32766
ATTEMPT TO MURDER 28598
C.H. NOT MURDER 3863
http://ncrb.nic.in/cii2008/cii-2008/figure%20at%20a%20glance.pdf

India has around 1,500 jails having a capacity to lodge 2.5 lakh prisoners. But these house as many as 3.5 lakh inmates. As many as 70% of the jail population comprises undertrials, which means their number could be pegged at 2.45 lakh. As 70% of the undertrial prisoners are booked for petty offences, this category of population in jails would be 1.7 lakh.

வக்கீல் வைத்தல் அதோ கதி! வைக்காவிட்டால் அதே கதி !
ஐயோ பாவம் பாத்திபன் !! கௌரவம் போன்ற சினிமா நீதிமன்றங்களை நினைவில் வைத்து கனவுலகில் உள்ளார்.
வக்கீல்களின் உண்மை நிலையை காட்டிய நடிகர் விஜய் கதி தெரியுமா?
சாதாரண அப்பாவி போல் சைதாபேட்டை எக்மோர் நீதிமன்ற வாயிலில் போய் நின்று பாருங்கள் . பல பின்னாள் நீதிபதிகள் உங்களை கெஞ்சுவது உங்களுக்கே வக்கீல் தொழிலை நினைத்து இரக்கம் வரும்.
கொலை குற்றவாளிகளுக்கு போலீஸ் நிலையத்தில் பிரியாணி, வக்கீல் அலுவலகத்தில் முதல் மரியாதை, நீதிமன்றத்தில் வி ஐ பீ சலுகைகள் என்கிற நாட்டு நிலை தெரியவில்லை. கொலை வழக்குகள் இழுத்தடிக்க பட்டு , சாட்சிகள் பயந்து ஓடி, குற்றம்சட்டபட்டவர் விடுதலை ஆகி நீதி வெல்லும். கீழமை நீதிமன்றதால் தண்டிக்கபட்டால் மேல் முறையீட்டில் விடுதலை பச்சாதாபத்தின் பெயரில் கிடைக்கும்.

வருடம் சுமார் 30000 கொலைகளும், 25000 கொலை முயற்சிகளும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. நமது சிறைச்சாலை கொள்ளளவு 200000 மட்டுமே ! கடந்த நன்கு வருட கொலை குற்றவாளிகள் சிறை தண்டனை பெற்றால் தற்போது சிறையில் உள்ள அனைவரும் கொலை குற்றவாளிகள் !!

கொலை செய்தால் 90 நாள் மட்டுமே சிறை. கொலை குற்றம் சாட்டப்பட்ட பலர் இப்போதோ அரசியல் வாதிகள், சிபு சோரேன் உட்பட

Suresh Ram said...

இந்த ரஜினிகாந்த் வக்கீலை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்களுக்கு எந்த வக்கீல் ஆஜர் ஆகிறாரோ, அதே வக்கீல் இந்த வக்கீலை கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆஜராக மறுப்பார்களா?
----------

சென்னை மாதாவரத்தை சேர்ந்தவர் வக்கீல் ரஜினிகாந்த். எழும்பூர் கோர்ட்டில் வக்கீலாக இருந்த இவர் மீது 38 வழக்குகள் உள்ளது. இவரை கோர்ட்டு வளாகத்தில் வைத்து காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்தது.

கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த எழும்பூர் போலீசார் வக்கீல்கள் கண்ணன், ஜெயச்சந்திரன், கதிரே சன், கூலிப்படையைச் சேர்ந்த ஜெயசூர்யா, கராத்தே பாபு, கார் டிரைவர் அசோக் ஆகிய 6 பேரை கைது செய்த னர். 3 வக்கீல்களை தேடி வந்தனர்.
இதில் தகவல் கொடுத்து கொலையாளிகளை வர வழைத்த வக்கீல் கவுதம் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட வக்கீல் ரஜினி காந்தின் காரில் இருந்து 30 அரிவாள் கத்தியும், 25 இரும்பு ஆயுதங்களும், 15 உருட்டு கட்டைகளையும் போலீசார் கைப்பற்றினர்.

ரஜினிகாந்துடன் வக்கீல் உடை அணிந்த ரவுடிகள் 14 பேர் சுற்றியது போலீஸ் விசாரணையில் தெரிய வந் துள்ளது............

http://www.viparam.com/index.php?news=6717

Anonymous said...

குற்றங்களுக்கு , குறிப்பாக கொலைக் குற்றத்திற்கு தண்டனை விரைவிலும் கிடைப்பதில்லை சரியான தண்டனையும் கிடைப்பதில்லை.அதனால்தான் மிக மிக சாதாரண விஷயங்களுக்காகக் கூட கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இதற்குள் தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்பது போன்ற கூக்குரல்கள் வேறு. தூக்கு தண்டனைப் பெற்றவர்களைக் கூட தூக்கிலிடத் தயங்கும் அரசுகள். நாடு எப்படி உருப்படும் அய்யா?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது