வீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு தனிப்பதிவு போட வந்தேன்.
முதலில் பின்புலம் என்னவென்று பார்ப்போம். ராமர் மற்றும் கிருஷ்ணரை பார்ப்பனர்களாகப் பலர் இங்கு பார்த்து அவ்வாறே எழுதியும் வருகின்றனர். முதலில் இதை சந்தேகத்துக்கிடமின்றி தீர்த்துக் கொள்வோம். ராமர் ஷத்திரிய வகுப்பை சேர்ந்தவர், கிருஷ்ணர் வைசியர் (விவசாய, வாணிக வகுப்பு). ராவணன் வகையறாக்கள்? அவர்கள்தான் பார்ப்பனர்கள்.
இத்தருணத்தில் ஈ.வே.ரா. அவர்களைப் பற்றி என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு. நாராயணசாமி அய்யர் அவர்கள் சமீபத்தில் 1961-ல் கூறியது நினைவுக்கு வருகிறது. அதாகப்பட்டது, "ஈ.வே.ரா. அவர்கள் தன் பெயரை மாற்றிக் கொள்ள நினைத்தார். திராவிடனான ராவணன் பெயரை வைத்து தன் பெயரை ராவணசாமி என்று மாற்றிக் கொள்ள விரும்பினார். அப்போது அவரிடம் கூறப்பட்டது, அதாவது ராவணன் பார்ப்பனன் என்று. சரி அப்படியானால் ராமசாமியாகவே இருந்து விட்டுப் போகிறேன்" என்றார்.
மேலே எழுதுவதற்கு முன் ஒரு டிஸ்க்ளைமர் போட்டு விடுகிறேனே. முக்கால்வாசி இந்த நிகழ்ச்சி ஒரு அபோக்ரிஃபல் என்ற வகையைச் சேர்ந்த கற்பனையாகவே எனக்கு இப்போது படுகிறது. இருந்தாலும் இங்கே அதை போடுவதற்கு காரணம் தமிழகத்தில் இதே தவறுதான் பலரும் செய்வது.
நிற்க. வீடணன் மற்றும் கும்பகர்ணனைப் பற்றிப் பேசுவோமா? இருவருமே நல்லவர்கள். இருவருக்குமே ராவணன் மற்றும் இலங்காபுரியின் நலன் பற்றி அக்கறை உண்டு. எல்லா சிறப்புகளும் பெற்ற ராவணன் சீதையை அபகரித்து வந்ததை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதைக் கையாண்ட முறையிலேயே வீடணன் மற்றும் கும்பகர்ணன் மாறுபடுகின்றனர்.
சீதையைக் கடத்தி வந்த போது கும்பகர்ணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். வீடணன் தன்னால் முடிந்தவரை ராவணனுக்கு அறிவுறை கூறினான். ராவணன் அவனை மிகவும் இழிவு செய்ய, வேறு வழியின்றி அவனை விட்டு விலகினான். கவனிக்கவும், அத்தருணத்தில் ராவணன் வலுவான நிலையிலேயே இருந்தான். அவனை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவிடவில்லை, இங்கு பல பகுத்தறிவாளர்கள் கூறியது போல.
கும்பகர்ணன்? தூக்கத்திலிருந்து எழுப்பப்படும்போது ராவணன் ரொம்பக் கஷ்டத்தில் இருந்தான். அப்போது கூட அவனிடம் பிரச்சினை என்னவென்று விவரிக்கப்பட்ட பின்னால் முதலில் அவனும் அண்ணனுக்கு அறிவுறை கூறினானே. சீதை என்ற யமனை கூட்டி வந்து தான் கெட்டதுமன்றி இலங்கையையும் ஏன் ராவணன் அழிக்க வேண்டும் என்றுதானே கேட்டான்? இருப்பினும் அண்ணன் படும் மன வேதனையைப் பார்த்து அவனுக்காக யுத்தம் செய்யப் போனான். அப்போது கூட தான் உயிருடன் திரும்புவோம் என்று அவனுக்கு நிச்சயம் இல்லை. ஆகவே அண்ணனிடம் கேட்டுக் கொண்டான், தான் இறந்த பிறகாவது ராமருடன் சமாதானமாகப் போகுமாறு.
கும்பகர்ணன் போர்முனைக்கு வரும்போது வீடணன் அவனைப் பார்க்க சென்றான், அவனையும் ராமர் பக்கம் இழுக்கும் முயற்சியில். அவனைப் பார்த்ததுமே கும்பகர்ணன் வேறு விதமாக நினைத்துப் பதறினான். அவன் கூறினான், "அடேய் தம்பி, நீயாவது பிழைத்து நாங்கள் இறந்த பிறகு இலங்கையைக் காப்பாய் என நினைத்தேனே, என்ன ஆயிற்று, ஏன் இப்பக்கம் வந்தாய்?" பிறகு உண்மை அறிந்து சமாதானம் அடைந்தான். இருப்பினும் ராவணனை விட்டு வர முடியாது என்பதை அன்புடன் வீடணனுக்குக் கூறி அவனை ராமரிடமே திருப்பி அனுப்பினான்.
யார் இதில் சிறந்தவர்? என்னைப் பொருத்தவரை இருவரும்தான். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
11 hours ago