5/04/2008

சபையறிந்து பேசுதல் - கலைஞரது பிளஸ் பாயிண்ட்

தசாவதாரம் வெளியீட்டு விழாவில் நம்ம முதல்வர் கலைஞர் பேசியதைப் பற்றி பதிவுகளில் படித்தேன். ஜாக்கி சானுக்கும் கமலுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளை கலைஞர் பேசியதாக அறிந்தேன். அதில் சுவையான புள்ளி விவரங்களை கூறியதாகவும் அறிந்தேன். அதுதான் கலைஞர். எங்கு பேச வேண்டுமானாலும் தயாராகவே செல்கிறார்.

அவருடைய பேச்சை இங்கு நகலெடுத்து ஒட்டினால்தான் நான் கூறவருவது புரியும். (நன்றி இட்லிவடை)

ஒரு நாள் என் இல்லத்திற்கு காலை நேரத்தில் கமல் வந்தார். தசாவதாரம் படத்தைப்பற்றி பேசும்போது இதுவரையில் எடுத்திருக்கின்ற புகைப்பட ஸ்டில்களை என்னிடத்திலே காட்டினார். நான் பார்த்தது படமல்ல, புகைப்படங்கள்தான். ஸ்டில்கள்தான். அந்த ஸ்டில்களில் கமல் மாத்திரமல்ல, ஒரு வேதியர், ஒரு அமெரிக்க நாட்டு அதிபர், தமிழகத்தின் தலைவர் என்று இப்படி கமல் 10 உருவங்கள் கமல் ஒப்பனையால் அந்த படங்களில் விளங்கிய காட்சிகளை கண்டேன்.

கமலுக்கு முத்தம் கொடுத்தேன்
உள்ளபடியே நான் ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது, இதுயார், யாரைப்போல என்று கமலைக் கேட்டு தெரிந்து கொண்டேன். அவ்வளவு இயற்கையாக, அற்புதமாக அப்படியே அச்சாக ஒப்பனை செய்யப்பட்டிருந்த அந்த காட்சியை கண்டு நீங்கள் பெருமையாகக் கருதினாலும் சரி அல்லது கேலியாக கருதிக் கொண்டாலும் சரி அல்லது பாசத்தின் உச்ச கட்டமாக கருதிக் கொண்டாலும் சரி அல்லது கலைத் திறனை இந்த கருணாநிதி எப்படியெல்லாம் ரசிக்கிறான் என்று தெரிந்து கொண்டாலும் சரி கமலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்.
நான் முத்தம் கொடுத்தது எனக்கே தெரியாது. அவ்வளவு மெய் மறந்து போனேன். அந்தப் படங்களை பார்த்து, அப்போதே சொன்னேன். ஸ்டில்களே இப்படி இருந்தால் படம் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன் கமல் என்று நான் என்னுடைய உணர்வுகளை அன்றைக்கு வெளிப்படுத்தினேன்.

வைராக்கியத்தை புலப்படுத்தும் வகையில்
தசாவதாரத்தில் முதல் காட்சியாக ராமானுஜரை, நீ இனிமேல் நாராயணா என்று சொல்லக்கூடாது, பரமசிவத்தின் பெயரைத்தான் சொல்ல வேண்டும் என்று மன்னன் வற்புறுத்துகிறான். அதற்கு இணங்க மறுத்த ராமானுஜர், தன்னுடைய மனைவி, மக்கள், குடும்பம், உற்றார், உறவு என்ற அத்தனை பேருடைய கெஞ்சுதலுக்கும் இணங்காமல் தியாகத்திற்கு தயாராகிறார். நான் தியாகம் செய்தாலும் செய்வேன். என்னுடைய உயிருக்குயிராக எந்த பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றேனோ, அந்த பெயரை நான் மறக்க மாட்டேன், அதை மாற்றிச் சொல்ல மாட்டேன் என்று அதே பெயரைத்தான் அவருடைய கொள்கை வெறியை, அவருடைய வைராக்கியத்தை புலப்படுத்துகிற வகையில் அந்த காட்சி அமைந்திருக்கிறது. அப்போது என்னிடத்தில் கமல் சொன்னார். கொள்கை மாறக்கூடாது, ஒருவர் ஒரே நிலையில் இருக்க வேண்டும். மனதிலே சஞ்சலம் ஏற்படக்கூடாது என்ற உறுதிக்கு நீங்கள் கொண்டிருக்கின்ற கொள்கை உரத்திற்கு இது பக்தி கலந்த காட்சியாக இருந்தாலுங் கூட, இந்த காட்சியின் மையம் அத்தகையப் பொருளைத் தருகிறதா அல்லவா என்று கேட்டார்.

ஆதங்கத்தோடு..
நான் எண்ணிக்கொண்டேன். ராமானுஜருக்கு உள்ள வைராக்கியம், தமிழ்நாட்டில் இன்றைக்கு எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருந்தால், இடம்பெயராமல், இதயம் மாறாமல், கொள்கை கோணாமல், அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், இந்த நாடு என்றைக்கோ இன்னும் அதிகமான முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்ற ஆதங்கத்தோடு தான் இந்த படத்தை நான் புகழ்ந்து கொண்டே வெளிவந்தேன்.

கமலஹாசனுக்கும், ஜாக்கிசானுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கமலஹாசன் பிறந்த ஆண்டும் 1954. ஜாக்கிசான் பிறந்த ஆண்டும் 1954. கமலஹாசன் பிறந்தது 7.11.1954. ஜாக்கிசான் பிறந்தது 7.4.1954. ஆக இருவரும் பிறந்தது 7-ம் தேதிதான். கமலைவிட ஜாக்கிசான் சரியாக 7 மாதங்கள் தான் மூத்தவர். கமல் தனது 6-வது வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் முதன் முதலாக நடித்தார். ஜாக்கிசான் அவருடைய 8-வது வயதில் "பிக் அண்ட் லிட்டில் வாங்க் டின் பார்'' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார்.
ஜாக்கிசான் நடித்த புகழ் பெற்ற படங்கள் ஆர்மர் ஆப் காட், "போலீஸ் ஸ்டோரி'', ரஷ் அவர் போன்றவை. ஜாக்கிசான் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்தவர். கமல் இதுவரையில் 240 படங்களில் நடித்திருக்கிறார்.


உயிரோடு இருக்கும் போதே வணங்குங்கள்
ஜாக்கிசான் தனது ரசிகர்களுக்கு ஒரு செய்தியை சொல்வதாக அவரைப்பற்றிய புத்தகத்திலே நான் படித்து பார்த்தேன். "உங்களுடைய பெற்றோரை அவர்கள் உயிரோடு இருக்கும்போதே வணங்கி விடுங்கள். இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்கு சென்று வணங்குவதை விட இது சிறந்தது.''
இன்னொன்று, உலகமே ஜாக்கிசானை சூப்பர் ஹீரோ என்று அழைத்தாலும் கூட, அவர் தன்னுடைய ஹீரோ யார் என்று சொல்லிக் கொண்டாரென்றால் "காவல் துறையைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக தீயணைப்பு படை வீரர்களையும் தான் நான் நிஜ ஹீரோக்கள் என்பேன். உயிருக்கு உலை வைக்கும் வேலையில் இருந்து கொண்டு இவர்கள் ஆற்றும் சமுதாய பணி பாராட்டுக்குரியது'' என்று சொன்னவர் ஜாக்கிசான்.
"களத்தில் குதிப்போம்-வெற்றியை குவிப்போம்'' இதுவே ஜாக்கிசானின் தாரக மந்திரமாக போற்றப்படுகிறது.


ஜாக்கிசானின் பிறப்பு
அவருடைய சண்டைக்குழுவில் புதிதாகச் சேருபவர்களுக்கு முதல் 2 ஆண்டுகள் எடுபிடி வேலைகள் தான் தரப்படுமாம். அவர் சொல்கிறார். "எனது குழுவினரை என் குழந்தைகள் போல் காப்பேன். (இப்போதுள்ள ஸ்டண்ட் நடிகர்களுக்கு தரவேண்டிய பாடம் இது) அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் நான் தான் பொறுப்பு. உண்மையான அக்கறை செலுத்துவதால் நான் என்ன சொன்னாலும் அதை என் ஆட்கள் செய்கிறார்கள். கட்டிடத்திலிருந்து குதித்து கீழே காரில் கண்ணாடியில் தலைக்குப்புற விழ வேண்டுமானாலும் தயங்காமல் மறு நொடியே செய்வார்கள். ஆனால் ஒன்று என்னால் செய்ய முடியாத எவ்வித சண்டைக் காட்சிகளையும் அவர்களை விட்டு நான் செய்யச் சொல்வதில்லை'' என்று ஜாக்கிசான் கூறியிருக்கிறார்.
இவருடைய பிறப்பு, வளர்ப்பு இரண்டுமே அதிசயமானது, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, படித்தறிந்து தெரிந்து கொள்ளவேண்டியது.
சார்லஸ்-லீலீசான் தம்பதியருக்கு ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக் என்னும் இடத்தில் பிறந்தவர் ஜாக்கிசான். ஜாக்கிசானின் தந்தையிடம் பிரசவ சிகிச்சையின் செலவான 500 ஹாங்காங் டாலர்களை கொடுக்க முடியாத நிலையில் அந்தக் குடும்பம் தடுமாறியது. அவருடைய பெற்றோர்களுக்கு அவர் பிறந்த போது பிரசவ செலவிற்காக மருத்துவர்களுக்கு 500 ஹாங்காங் டாலர்களை கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு, என்ன செய்வதென்று தடுமாறியபோது, அப்போது மருத்துவம் பார்த்த பெண் மருத்துவர், ஜாக்கிசானின் தந்தையிடம் "எத்தனையோ பேருக்கு பிரசவம் பார்க்கும் எனக்கு புத்திர பாக்கியம் இல்லை. மருத்துவ செலவுத் தொகையை நானே கட்டிவிடுகிறேன். மேலும் 1500 டாலர் தருகிறேன். உங்கள் மகனை தத்து கொடுத்து விடுங்கள்'' என்று கேட்டார்.


நன்மைகளில் ஒன்று ஜாக்கிசான்
ஜாக்கிசானின் தந்தை இரண்டொரு நாளில் பதில் கூறுவதாகச் சொல்லிவிட்டு வந்தார். ஆனால் உறவினர்கள் எல்லாம் கண்டித்தனர். நண்பர்கள் பண உதவி செய்ய முன்வந்தனர். அதனைக் கொண்டு மருத்துவ மனையிலே பணத்தைக் கொடுத்து விட்டு குழந்தையுடன் வீடு திரும்பினார். இது நடக்காமல் போயிருக்குமேயானால் இன்றைக்கு நாம் ஜாக்கிசானை காண முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஆகவே உலகத்தில் அதிசயங்கள், ஆச்சரிய நிகழ்வுகள், எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுவதால் உலகுக்குக் கிடைக்கக்கூடிய பல நன்மைகளில் இதுவும் ஒன்று. அப்படி கிடைத்த நன்மைகளிலே ஒன்றுதான் நம்முடைய நண்பர் ஜாக்கிசான் ஆவார்.


கிரீடத்தில் ஒரு முத்து
நம்முடைய கலைஞானி கமலஹாசனுடைய புகழ் கிரீடத்தில் இன்னும் ஒரு முத்து பதிக்கப்பட்டது போன்ற விழா, இந்த விழா என்று கூறி, கமலை வாழ்த்தி, இந்த படம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, வாரக்கணக்கில் அல்ல, மாதக்கணக்கிலே, வருடக்கணக்கிலே தமிழகத்திலே மாத்திரமல்ல, இந்தியத் திருநாட்டிலும், வெளியிலே உள்ள பகுதிகளிலும் இந்த படம் வெற்றிபெற்று நடைபெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகளை உங்களுடைய வாழ்த்துகளோடு இணைந்து கமலுக்கு வழங்கி விடைபெறுகிறேன்.

இப்போது மீண்டும் டோண்டு ராகவன்:
முதலில் வெறுமனே கலைஞரின் பேச்சின் சுருக்கத்தைப் போட்டு விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவரது பேச்சைப் பார்த்த போது சுருக்கும் வேலையை கலைஞர் அவர்களே திறம்பட செய்திருப்பதால் அதை மேலே சுருக்க வழிதெரியாது விழித்து, மரியாதையாக முழுக்கவே நகலெடுத்தேன்.

இப்போது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். கலைஞர் சொன்ன தகவல்கள் நிச்சயமாகவே அவர் பேசுவதற்கு சற்று முன்னர்தான் அவர் தயார் செய்திருக்க வேண்டும். தகவல்களை அவரிடம் தருவதற்கு உதவியாளர்களும் உண்டு. இருப்பினும் அவை எல்லாவற்றையும் சேர்த்து சுவையான ஆனால் சுருக்கமான பேச்சாகத் தர ஒரு திறமை வேண்டும்; அது கலைஞரிடம் தாராளமாகவே உண்டு.

இதையெல்லாம் எழுதும்போது நான் விகடனில் படித்த துணுக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திரசேகரருக்கு ஒரு பாராட்டு விழா நடந்ததாம். அதில் பேசிய ஒரு மத்திய அமைச்சர் இவ்வாறு கூறினாராம்:

"இந்த சந்திரசேகர் ரொம்பவும் திறமைசாலி. நோபல் பரிசு பெற்று இந்தியாவின் கௌரவத்தை நிலை நாட்டியுள்ளார். இவருடைய மற்ற திறமைகளும் அனந்தம் என கேள்விப்பட்டேன். இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்திருக்கிறார். புள்ளியியல் துறையிலும், கணிதத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கிரிக்கெட்டில் பெரிய சுழற்ப்பந்து வீச்சாளர். எல்லாவற்றையும்விட தமிழ் சினிமாவிலும் கதாநாயகன் வேடம், மற்றும் குணசித்திர வேடங்கள் ஏற்று திறம்பட செயல்பட்டுள்ளார்" மேலும் டைரக்டராகவும் திறம்பட செயல்பட்டு "சட்டம் ஒரு இருட்டறை" போன்ற படங்கள் எடுத்துள்ளார். இளைய தளபதி விஜயின் அப்பா வேறு.

இது எப்படி இருக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

மாயவரத்தான் said...

எல்லாம் சரிதான். ஆனா பேசக்கூடாததை, பேசக்கூடாத இடங்களில் சமயங்களில் பேசித் தொலைத்து விடுகிறாரே.

dondu(#11168674346665545885) said...

//எல்லாம் சரிதான். ஆனா பேசக்கூடாததை, பேசக்கூடாத இடங்களில் சமயங்களில் பேசித் தொலைத்து விடுகிறாரே.//

வாருங்கள் மாயவரத்தான் அவர்களே. நீங்கள் சொல்வதும் சரிதான். என்ன செய்வது அதுவும்தான் கலைஞர். அது கூட தனக்கு தெரிந்த எல்லா விஷயங்களையும் வெளியில் கொட்டிவிட வேண்டும் என்ற ஆர்வக்கோளாறினாலேயே வந்து விடுகிறது என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//"இந்த சந்திரசேகர் ரொம்பவும் திறமைசாலி. நோபல் பரிசு பெற்று இந்தியாவின் கௌரவத்தை நிலை நாட்டியுள்ளார். இவருடைய மற்ற திறமைகளும் அனந்தம் என கேள்விப்பட்டேன். இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்திருக்கிறார். புள்ளியியல் துறையிலும், கணிதத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கிரிக்கெட்டில் பெரிய சுழற்ப்பந்து வீச்சாளர். எல்லாவற்றையும்விட தமிழ் சினிமாவிலும் கதாநாயகன் வேடம், மற்றும் குணசித்திர வேடங்கள் ஏற்று திறம்பட செயல்பட்டுள்ளார்" மேலும் டைரக்டராகவும் திறம்பட செயல்பட்டு "சட்டம் ஒரு இருட்டறை" போன்ற படங்கள் எடுத்துள்ளார். இளைய தளபதி விஜயின் அப்பா வேறு//

செய்தி பழைய மொந்தை ஆனால் இறுதியில் சுடசுட இறக்கிய கள்
அந்த செய்தி உண்மையா, கற்பனையா

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் வால்பையன். எனக்கு தெரிந்து இவ்வளவு முத்துக்களை உதிர்க்கும் அளவுக்கு அமைச்சர் ரத்தினங்கள் இல்லை என்றுதான் நினைக்கிறேன். இதை ஒரு தமாஷாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும். விகடன் கட்டுரையிலும் இப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை வலியுறுத்த விளையாட்டாகத்தான் சேர்த்திருந்தனர். என்ன, அத்துணுக்கு வந்த நேரத்தில் விஜய் எல்லாம் இன்னும் பிறக்கவேயில்லை. அது எனது கைசரக்கு.

நிஜமாக நடந்த வேறு ஒரு நிகழ்ச்சியும் சுவாரசியமானதே. எகிப்தின் அதிபர் நாசர் அவர்கள் இங்கிலாந்துக்கு விஜயம் செய்தபோது விமான நிலையத்தில் எகிப்தின் தேசீய கீதத்தை முழங்கி வரவேற்றனராம். ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் இசைக்கப்பட்ட தேசீயகீதம் நாசரால் பதவியிறக்கப்பட்ட அரசர் ஃபரூக் அவர்கள் காலத்து நீக்கப்பட்ட தேசீய கீதமாம். நாசர் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தன்மையாக விட்டாராம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

pottu thaaku

Anonymous said...

Well-done dontdu sir,

This is called “Un-biased critics.”
Can you follow the same yardstick to all ‘n’ all .

dondu(#11168674346665545885) said...

சாத்தப்பன் அவர்களே,

நான் பெரியாரைப் பற்றி எழுதிய பதிவைப் பார்க்கவும், http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நான் கேட்டிருக்கும் கேள்விகள் டோண்டுவிற்கு அல்ல. கருணாநிதி போன்ற தலைவர்களைப் பாராட்டும் உணர்வு கொண்டவர்களுக்கே இந்தக் கேள்விகள்.
---------------------------------

/// என்ன செய்வது அதுவும்தான் கலைஞர். அது கூட தனக்கு தெரிந்த எல்லா விஷயங்களையும் வெளியில் கொட்டிவிட வேண்டும் என்ற ஆர்வக்கோளாறினாலேயே வந்து விடுகிறது என நினைக்கிறேன்.////


மதுரையில் தினகரன் அலுவலக தாக்குதலும், அதில் இருவர் மரணமும் அழகிரியால் செய்யப்பட்டதாக பேசப்பட்ட்டது. இருப்பினும், அவர்மேல் ஏன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்ட நிருபரை கருணாநிதி திட்டினார். அதை, தொலைக்காட்சி சேனல்கள் எல்லாவற்றிலும் காட்டினார்கள். ஆனால், எந்த மீடியா ஆட்களும் அதைப் பற்றி எதுவும் அதன்பின் பேசவில்லை.

ஒருவேளை அந்த நிருபர் பற்றிய "தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் வெளியில் கொட்டிவிடவேண்டும் என்ற ஆர்வக்கோளாறினால்தான்" கருணாநிதி சொன்னாரா?

பெண் எம் எல் ஏ ஒருவரது கேள்விக்குப் பதில் அளிக்கையில், "பாவாடையை தூக்கிப் பார் பதில் கிடைக்கும்" என்று பேசினாரே அது...?

"எனக்கு மட்டும் நாற்பது வயதாகியிருந்தால், உன்னிடம் என் ஆண்மையை நிரூபித்திருப்பேன்" என்றாரே அது....?

இவையெல்லாம் தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் வெளியில் கொட்டிவிடவேண்டும் என்ற ஆர்வத்தாலா?

பிகு: டோண்டு எழுதிய கட்டுரையின் உள்குத்து புரிந்தது. டோண்டு பாராட்டியிருப்பது கருணாநிதி அவர்களுக்கு பேச்சினைத் தயார் செய்துதந்தவரை. :) !

dondu(#11168674346665545885) said...

அனானி அவர்களே,

வார்த்தைகளில் சற்றே சூடு குறைவாக இருக்கட்டுமே.

பேச்சைத் தயார் செய்ய ஒரு முதல்வருக்கு செயலாளர் இருப்பது ஒன்றும் புதியதல்லவே. இருப்பினும் அதையெல்லாம் கோர்வையாகப் பேசத் தெரிய வேண்டும் அல்லவா. கலைஞர் அவர்களின் அந்தத் திறமையைத்தான் பாராட்டியது இப்பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கலைஞரை பாராட்டி பதிவா...
டோண்டு ஐயாவுக்கு என்னாச்சு?
கத்திரி வெயில் தாக்கமா :-)

dondu(#11168674346665545885) said...

வேறு வழியின்றி சென்சார் செய்யவேண்டியுள்ளது அனானி அவர்களே.

கடுமையான வார்த்தை பிரயோகங்களுடன் வந்த உங்கள் கருத்துக்கள் அனானி பெயரில் வந்தன. உங்களுக்கென்ன வாயில் வந்ததை கூறிவிட்டு சென்று விடுவீர்கள், மாட்டிக் கொள்ள போவது நானல்லவா?

அதற்கு இந்த டோண்டு ராகவன் ஆள் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

keyven said...

Good piece of appreciation to MK from Mr. Dondu ? Keep it up...

Anonymous said...

//உங்களுக்கென்ன வாயில் வந்ததை கூறிவிட்டு சென்று விடுவீர்கள், மாட்டிக் கொள்ள போவது நானல்லவா?//

Dondu also has fear.
fear for the right reasons I guess.. we live in a lawless country...

Anonymous said...

குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிகக் கொளல் எனும் வள்ளுவப் பெருந்தகையின் பொய்யா வாக்கிற்கு இணையாக வாழும் வள்ளுவராம் கலைஞர் ஐயாவின் இடம் பொருள் ஏவல் அறிந்து பேசும் ஆற்றலை புகழ்ந்து பாராட்டியதற்கு டோண்டு ஐயாவுக்கு நன்றி.நடுநிலை பார்வையாளர்கள் பார்வையில் நீவிர் உயர்ந்துவிட்டீர்கள் .வாழ்த்துக்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது