5/19/2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - 18.05.2008

எனது கார் சாந்தோம் சர்ச்சைத் தாண்டும்போது பதிவர் டாக்டர் ப்ரூனோவிடமிருந்து செல்பேசி அழைப்பு வந்தது. தான் காந்தி சிலைக்கருகில் நிற்பதாகவும் இன்னும் வேறு யாரையும் காண இயலவில்லை என்று அவர் கூறினார். அவரிடம் நான் காந்தி அருகிலேயே நிற்கும்படியும் இன்னும் சில நிமிடங்களில் நானும் வந்து விடுவேன் எனக் கூறினேன். எனது கார் காந்தி சிலைக்கு வரும்போது மணி சுமார் 05.45.

என்னை அங்கு இறக்கி விட்டு என் வீட்டம்மா மகளுடனும் தன் தங்கையுடனும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு விரைந்தார். நான் கண்டுபிடிக்கும் முன்னமே ப்ரூனோ என்னை கண்டுபிடித்தார். அவர் போட்டோவிலிருந்து பெரிதும் மாறுபட்டு இருந்தார். பிறகு நான் அதியமானை தொடர்பு கொள்ள அவர் தானும் காந்தி சிலைக்கு அருகிலேயே நிற்பதாகக் கூறினார். அடுத்த நிமிடத்தில் அவரை பார்த்தேன். கூடவே ஏற்கனவே வந்துள்ள பலரையும் பார்த்தேன். சிலைக்கு பின்புறம் ஒருமாதிரி ஓவல் வட்டத்தில் இருந்த தண்ணீர் இல்லாத செயற்கைக் குளக்கரையில் அமர்ந்திருந்தனர். நான் பார்த்தவர்கள். முரளி கண்ணன், பாலபாரதி, லக்கிலுக், இராமகி ஐயா, லிவிங் ஸ்மைல் வித்யா, கோவி கண்ணன் ஆகியோர். சற்று நேரத்தில் வந்து சேர்ந்தவர்கள் வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், ஆதிஷா, தருமி ஆகியோர். இந்திய எக்ஸ்பிரஸிலிருந்து ஒரு நிருபர் வந்திருந்தார். அவர் பெயரைக் கேட்டறிந்தேன், ஆனால் இப்போது மறந்து விட்டேன்.

சந்திப்பு வெறுமனே ஒருவரை ஒருவர் சந்தித்து அளவளாவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதால் ஒரு குறிப்பிட்ட அஜெண்டா ஏதுமின்றி பேச ஆரம்பித்தோம். ப்ரூனோ அவர்கள் பெயர் புனைப்பெயர் என்று நினைத்திருந்தேன். இல்லை அது ஒரிஜினல் பெயரே என அவர் தெளிவுபடுத்தினார். ப்ரூனோ என்பவர் சரித்திரத்தில் பெயர் பெற்றவர். விஞ்ஞானி. அவரது நவீன விஞ்ஞான கொள்கைகளால் சர்ச்சால் துன்புறுத்தப்பட்டு சூனியக்காரராக குற்றம் சாட்டப்பட்டு உயிருடன் சிதையில் வைத்து 1600-ஆம் ஆண்டு எரிக்கப்பட்டவர். அவரைப் பற்றி புகழ் பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் Berthod Brecht எழுதிய ஒரு சிறுகதை எங்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. ப்ரூனோ பற்றி பதிவர் ப்ரூனோவிடம் கூறியபோது அவரும் தனக்கு அந்த ப்ரூனோ ஞாபகார்த்தமாகத்தான் பெயர் வைத்ததாகக் கூறினார். அவரிடம் மேலே பேசும்போது இதய நோய்வரும்போது சாதாரணமாக இடது தோள், கை பக்கம் ஏன் குடைச்சல் வலி ஏற்படுகிறது எனக்கேட்டேன். மிகச்சில வார்த்தைகளில் அவர் அதை அழகாக விளக்கினார். அதாவது இதயத்துக்கு சப்ளை செய்யும் நரம்புகளும் இடது கை / தோள் போன்ற இடங்களிலிருந்து தொடு உணர்ச்சி, வலி போன்ற உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்து செல்லும் நரம்புகளும் முதுகு தண்டின் ஒரே செக்மண்ட் வழியாகத்தான் செல்கின்றனவாம் (செக்மண்ட் எண் C8, T1). மேலும் இதயத்தில் வலி ஏற்பட்டால் அது கையில் வலி ஏற்படுவது போன்ற தோற்றத்தைத்தான் தருமாம். அதற்கு அவர் சொன்ன பெயர் referred pain. பிறகு எனது கண்பார்வை பற்றி நான் எழுதிய - 1 + 1 = 0 என்னும் பதிவில் அவர் அளித்தப் பின்னூட்டத்தைப் பற்றி கேட்டேன். [அவர் அதில் எழுதியது: "I was just telling the possibilities. (I did not diagnose nuclear cataract for you sitting 600 kilometres away). May be you are an exception. But it is always better to be on the safer side. I am sorry if I had frightened you too much :) :)]" எனது கேஸ் விதிவிலக்காகத்தான் தோன்றுகிறது என்று அவர் கூறினார், ஏனெனில் nuclear cataract என்பதின் விளைவு சில தினங்களிலேயே தெரிந்து விடும் என்று கூறினார்.

இப்போது கோவி கண்ணனிடம் வருகிறேன். நான் இச்சந்திப்புக்கு வந்ததன் முக்கியக் காரணமே அவரைப் பார்க்கத்தான். மனிதர் சீயர்ஃபுல்லாக தோற்றமளித்தார். சிங்கப்பூரில் பத்தாண்டுகளாக இருப்பதாகக் கூறினார். அங்கு குடியுரிமை பெற யோசிக்கிறாரா எனக் கேட்டதற்கு தன் குழந்தையின் தேவையை பொருத்தது அது என்று கூறினார். அவர் குழந்தை இரண்டாம் வகுப்பில் படிப்பதாகவும் கூறினார். நல்ல பாசமுள்ள தந்தைதான். அதியமான் அவருடன் பேசும்போது வழக்கப்படி அவரது பிறந்த தினத்தைக் கேட்க அவரும் சொன்னார். அதியமான் தனதுபிறந்த தினமும் அதுவேதான் என குதூகலத்துடன் கூறினார். என்ன கோவி கண்ணன் ஓர் ஆண்டு முந்தி பிறந்துள்ளார். உடனே அவர் பிறந்த தேதி திங்கள் கிழமையா என்று நான் கேட்க அவரும் ஆமாம் எனக் கூறினார். தேதியைக் கூறினால் கிழமையை என்னால் கூறமுடியும் என்பதை அதியமான் அவரிடம் கூறினார். எல்லோரையும் பிறந்த தேதி கேட்பது அதியமான் மற்றும் எனது வழக்கம். நான் உடனே அதற்கானக் கிழமையைக் கூறுவேன், அதியமான் விறுவிறு என அந்த தேதிக்கான ராசி ஆகியவற்றைக் கூறி ஜோஸ்யம் கூறிவிடுவார். இது பற்றி ப்ரூனோவிடம் கூறியபோது அவர் தானும் இதைச் செய்ய இயலும் எனக்கூறினார். அவரிடம் உடனே மே 27, 1964 பற்றி கேட்டேன். அவர் சிறிது அவகாசம் கேட்டார். பிறகு நான் அதை மறந்து விட்டேன். எனது காரில் நான் திரும்பச் செல்லும்போதுதான் ஞாபகம் வந்து அவரிடம் செல்பேசியில் கேட்டேன். அவர் அக்கேள்வியை மறந்து விட்டதாகக் கூறினார்.

லக்கிலுக் தனது விளம்பரத்துறையைப் பற்றி பேசினார். விளம்பரப் படங்களுக்கென்றே cannes விழா போல விருது வழங்கும் ஏற்பாடுகள் உண்டென்றும், விளம்பரம் பற்றி அறிய இந்த உரலுக்கு செல்லுமாறும் கூறினார். சில நாட்களுக்கு முன்னால் தடை செய்யப்பட்ட வோடாஃபோன் விளம்பரத்தைப் பற்றியும் பேசினார். அதில் ஒரு சுட்டித்தனம் நிறைந்த நாய்க்குட்டியை காண்பித்திருந்தனர். ரொம்ப க்யூட்டான விளம்பரம் அது. அதில் நாயைக் கொடுமைப்படுத்தியதாக யாரோ வழக்கு போட்டதால் அந்த விளம்பரத்தை வாபஸ் பெற்றனர் என்றும் கூறினர். என்ன செய்வது இம்மாதிரி பல ஆர்வக்கோளாறுகள் வந்து சேர்கின்றனர். ஒரு விளம்பரப்படம் எடுக்க என்ன செலவாகின்றது எனத் தெரிந்தால் நிஜமாகவே விசனமாகத்தான் இருக்கும்.

கோவி கண்ணன் புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். எங்கோ போய் மினரல் தண்ணீர் ஜில்லென்று சில போத்தல்கள் வாங்கி வந்தார். பதிவர் சந்திப்பில் எல்லோருக்கும் தரப்பட்ட சாக்லேட்டும் அவர் உபயம்தான் என நினைக்கிறேன். எது எப்படியாயினும் வலைப்பதிவுகளில் அவருடன் பலமுறை கருத்து மோதல்கள் நடந்துள்ளன. அதையெல்லாம் தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ள வேண்டாம் என நான் அவரைக் கேட்டு கொண்டேன். அவரும் அப்படியெல்லாம் எடுத்து கொள்ளவில்லை எனக் கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தனி சேனலில் ஒவ்வொருவராக பேட்டி கண்டார். நான் எனது வலைப்பூவைப் பற்றி கூற அவர் டோண்டு என்ற பெயர் பற்றி கேட்டார். அவருக்கு விளக்கினேன்.

இப்படியே பேசிக்கொண்டிருந்ததில் பொழுது போனதே தெரியவில்லை. திடீரென எனது செல்பேசி சிணுங்கியது. வீட்டம்மாதான் பேசினார். கார் லேடிவில்லிங்க்டன் பள்ளியின் அருகில் பீச் ரோடில் திரும்புவதாகக் கூறினார். நான் அவரிடம் காந்தி சிலையைத் தாண்டி நிற்பதாகக் கூறினேன். பிறகு எல்லோரிடமும் விடை பெற்று விரைந்தேன். வீட்டுக்கு செல்லும்போது மணி 09.30 ஆகி விட்டது. ரொமபவும் களைப்பாக இருந்ததால் பதிவை அடுத்த நாளைக்கு ஒத்திப் போட்டேன். இன்று காலை பார்த்தால் கோவி கண்ணன் முந்திக் கொண்டுள்ளார். ஃபோட்டோக்களும் அப்பதிவில் போட்டுள்ளார். அவருக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

18 comments:

Anonymous said...

வாத்யார் ஐயா சுப்பையா அவர்கள் (classroom2007.blogspot.com)தமிழ்மணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் திருப்பணியில் தன்னை அர்பணித்துள்ளார்.இந்த சந்திப்பை பார்த்தால் அகமகிழ்வார்.
அவரையும்( கோவை -திரு சுப்பையா வாத்தியார் அவர்கள்)அழைத்திருக்கலாமே டோண்டு சார்.இன்னும் சுவை கூடி உங்கள் ஆனந்தம் இரட்டிப்பாயிருக்குமே.

"தனிமனித கோபதாபங்கள் முழுவதும் மறைந்து, கருத்து மோதல்கள் பண்பாடு காத்து நாகரிகம் கொப்பளிக்கும் வார்த்தைகளின் ஊர்வலம் வலம் வந்து தமிழன்னையின் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள், குடி கெடுக்கும் சாதி.,இனம்,கட்சி,உயர்வு தாழ்வு, எனும் பேதமின்றி தமிழ் பதிவுலகில்
கோலோச்சும் நாளும் வந்திடாதோ!

"நல்லது நடக்கும்"
அதற்கு இது ஒரு நல்ல தொடக்கம்.

"வாழ்க வளமுடன்"
"வாழ்க வையகம்"
"வளர்க தமிழ்மணம்"

துளசி கோபால் said...

ஆமாம்...பதிவர் சந்திப்பில் 'நான் அன்புடன் எல்லோரையும் கேட்டதாச் சொல்லுங்க'ன்னு கோவியாரிடம் சொல்லி இருந்தேன். அதைச் சொன்னாரா இல்லையா?


அவர் பதிவில் உங்களைப் பார்த்தேன்.

இன்னொரு சின்ன விசயம்.

பர்றி = பற்றி

எப்படி உங்களுக்கு இந்தத் தட்டச்சுப்பிழை என்று ஒரு சந்தேகம்!

dondu(#11168674346665545885) said...

//பர்றி = பற்றி//

தவற்றை சுட்டிக் காட்டியதற்கு நன்றி துளசி அவர்களே. r அடிக்கும்போது ஷிஃப்டை சரியாக அழுத்தவில்லை. ஆகவேதான் அப்பிழை. அதை சரி செய்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அழைப்பு எல்லா பதிவர்களுக்கும்தான் கொடுக்கப்பட்டது. சுப்பையா அவர்கள் நேற்று சென்னையில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பார் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வடுவூர் குமார் said...

thanks for sharing Sir.

VSK said...

வழக்கம் போலவே கலகலப்பான, விவரமான பதிவுக்கு நன்றி.

கோவியார் எப்போதுமே சற்று கவனமாகவும், அன்பாகவும் பழகுவார். அவரது இந்த நல்ல குணத்தைத் தாங்களும் கவனித்துப் பதித்துப் பாராட்டியதற்கு நன்றி.

dondu(#11168674346665545885) said...

//கோவியார் எப்போதுமே சற்று கவனமாகவும், அன்பாகவும் பழகுவார்.//

பாராட்ட வேண்டியதை பாராட்டாமல் எப்படி இருப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

புருனோ Bruno said...

//அதாவது இதயத்துக்கு சப்ளை செய்யும் ரத்தக்குழாய்கள் அந்த ஏரியா வழியாகத்தான் செல்கின்றனவாம் (செக்மண்ட் எண் T8). மேலும் இதயத்தில் வலி ஏற்பட்டால் அது கையில் வலி ஏற்படுவது போன்ற தோற்றத்தைத்தான் தருமாம். அதற்கு அவர் சொன்ன பெயர் transferred pain.//

சில வார்த்தைகளை மாற்றினால் நல்லது

transferred pain அல்ல referred pain

ரத்தக்குழாய்கள் அல்ல நரம்புகள்

...

அதாவது இதயத்துக்கு சப்ளை செய்யும் நரம்புகளும் இடது கை / தோள் போன்ற இடங்களிலிருந்து தொடு உணர்ச்சி, வலி போன்ற உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்து செல்லும் நரம்புகளும் முதுகு தண்டின் ஒரே செக்மண்ட் வழியாகத்தான் செல்கின்றனவாம் (செக்மண்ட் எண் C8, T1).

...

அன்புடன் புருனோ

புருனோ Bruno said...

மே 27, 1964
--
மே 18, 2008 ஞாயிறு
மே 25, 2008 ஞாயிறு
மே 27, 2008 செவ்வாய்
--
மே 27, 1980 செவ்வாய்

28 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆங்கில நாட்காடி ஒரே போல் தான் இருக்கும்
1980 - 1964 = 16

இதன் இடையில் வரும் லீப் வருடங்கள் 1968, 1972, 1976, 1980 = 4

16 + 4 = 20

எனவே 1964 மே 27ம் 1980 மே 7ம் ஒரே நாள் (1980 மே 7ம் 2008 மே 7ம் ஒரே நாள்)

எனவே 1964 மே 27 புதன் கிழமை :) :)

2

dondu(#11168674346665545885) said...

இதய வலி பற்றி நீங்கள் அளித்த திருத்தத்துக்கு மிக்க நன்றி ப்ரூனோ அவர்களே. அதை உடனடியாக பதிவில் ஏற்றி விட்டேன்.

மற்றப்படி தேதி - கிழமை விஷயத்தில் உங்கள் விடை சரிதான், அதாவது 1964மே 27 புதன் கிழமையே. ஆனால் அதை அடைய நீங்கள் எடுத்த வழி சற்றே தவறு. விளக்குகிறேன்.

இந்த விஷயத்தைப் பற்றி நான் போட்ட பதிவில் இவ்வாறு எழுதியுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_26.html

"நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஆசிரியர் ரங்கா ராவ் அவர்கள் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதாவது, ஒரு வருடத்தில் குறிப்பிட்டத் தேதியில் ஞாயிறு என்று வைத்துக் கொண்டால் அடுத்த வருடத்தில் அதே தேதியின் கிழமை திங்களாக வரும், நடுவில் பிப்ரவரி 29 வராத பட்சத்தில். அவ்வாறு வந்தால் அது செவ்வாயாக வரும். இதை வைத்து 1940-லிருந்து சோதித்து பார்த்தேன். லீப் வருடத் தொல்லையைக் குறைக்க மார்ச் மாதத்திலிருந்து பார்க்க ஆரம்பித்தேன்.

அதில் எனக்கு கிடைத்த ரிஸல்ட் இதோ. 1940, 1946, 1957 மற்றும் 1968 ஆண்டுகளில் கிழமைகள் மார்ச் 1-முதல் கிழமைகள் ரிபீட்டு ஆகும். அதாவது லீப் வருடம் 6 ஆண்டுகளுக்கு பிறகு, லீப்+1 வருடம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, லீப்+2 வருடம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, மற்றும் லீப்+3 வருடம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கிழமைகள் திரும்ப வரும். மார்ச் 1-ஆம் தேதிக்குப் பிறகுதான் நான் இங்கே கூறியது பொருந்தும் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்".

ஒரு லீப் வருடம் மறுபடியும் அப்படியே ரிபீட் ஆவதற்கு சரியாக 28 ஆண்டுகள் பிடிக்கும். ஆகவே 1964-ம் 1980 ஒன்றாக இருக்கும் வாய்ப்பே இல்லை. மே 27 1964 புதன் கிழமை (நேரு இறந்த தினம்), ஆனால் மே 27 1980 செவ்வாய்க்கிழமை. மார்ச் ஒன்றிலிருந்து பார்த்தால் 1964-லிருந்து பேட்டர்ன் இவ்வாறு உள்ளது. 1964, 1970, 1981, 1987 மற்றும் 1992. சந்தேகம் இருந்தால் நாட்காட்டிகளை வைத்து பார்த்து கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

புருனோ Bruno said...

//ஆனால் அதை அடைய நீங்கள் எடுத்த வழி சற்றே தவறு.//

தவறில்லை என்று நினைக்கிறேன் :) :) :)

சுற்று வழியாக வேண்டுமானால் இருக்கலாம்

//ஆகவே 1964-ம் 1980 ஒன்றாக இருக்கும் வாய்ப்பே இல்லை./

நான் அப்படி கூறவில்லை

1980ம் 2008ம் ஒன்று என்று தான் கூறினேன் (மே 27, 2008 செவ்வாய்--மே 27, 1980 செவ்வாய்)

1964க்கும் 1980க்கும் இடையில் 20 நாட்கள் வேறுபாடு உள்ளது என்று கூறியிருந்தேன்.

அதனால் தான் இருபது நாட்களை கழித்து [எனவே 1964 மே 27ம் 1980 மே 7ம் ஒரே நாள் (1980 மே 7ம் 2008 மே 7ம் ஒரே நாள்)] என்று கணக்கிட்டு விடை கூறியிருந்தேன்.

(இடையில் எத்தனை நாட்கள் வேறு பாடோ அதை கழித்தால் போதும் - அதாவது 2008 மே 27ம் 2010 மே 25ம் ஒரே கிழமை)

தவறிருந்தால் விளக்கவும்
--

புருனோ Bruno said...

//ஆகவே 1964-ம் 1980 ஒன்றாக இருக்கும் வாய்ப்பே இல்லை//

கண்டிப்பாக இருக்காது. நான் அப்படி கூரவில்லை. எண் (குழப்பமான) முதல் பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை படியுங்களேன்

Anonymous said...

// //1980 மே 7ம் 2008 மே 7ம் ஒரே நாள்//
இதை நான் அவசரத்தில் "1980 மே 7ம் 2008 மே 27ம் ஒரே நாள்" என்று படித்ததால்தான் எனது குழப்பம் வந்தது.//

ஐயா இரண்டு பேரும் இப்படி ஒரே தேதியை மாத்தி மாத்தி சொல்லி குழப்புறீங்க..
ஆள விடுங்கடா சாமி உங்க தேதி விளையாட்டுக்கு நான் வரல.

dondu(#11168674346665545885) said...

//சுற்று வழியாக வேண்டுமானால் இருக்கலாம்//

It is an understatement of the year!!

//எனவே 1964 மே 27ம் 1980 மே 7ம் ஒரே நாள் //
இதை நான் அவசரத்தில் "1980 மே 27ம் 2008 மே 27ம் ஒரே நாள்" என்று படித்ததால்தான் எனது குழப்பம் வந்தது. 20 நாள் இடைவேலை என்றால் ஒரு கிழமை முந்தி வரும், புரிகிறது. அதாவது ஏழாம் வாய்ப்பாட்டை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியது.

எனது பழைய பதிவில் இந்த கணக்கிடும் முறை எனக்குள் எப்படி படிப்படியாக வந்தது எனக் குறிப்பிட்டதை நீங்களும் படியுங்கள். உங்கள் வாழ்நாளில் நடந்த பல நிகழ்ச்சிகளை கிழமையுடன் ஞாபகம் வைத்துக் கொண்டால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறுக்கு வழியில் விடையை அடையலாம்.

இதையும் புரிந்து கொள்கிறேன், அதாவது உங்கள் வழியும் உங்களைப் பொருத்தவரை சுலபமானதே. ஆனால் உங்கள் வழியில் பேப்பர் பென்சில் தேவைப்படும் என நினைக்கிறேன். என்னுடையதில் அது தேவையே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதானந்த் said...

லிவிங் ஸ்மைல் பத்தி ஏனுங்க எளுதலை?
www.lathananthpakkam.blogspot.com
முடிஞ்சாப் பாருங்க!

dondu(#11168674346665545885) said...

பொதுவாகப் பேசினோம். சில விஷயங்கள் கூறினார். அவற்றை நான் எழுதினால் அவரது ப்ரைவசியை வெளிப்படுத்துகிறேனோ என்ற எண்ணம் வர வாய்ப்பு உண்டு. ஆகவே எழுதவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முரளிகண்ணன் said...

\\அவருடன் பலமுறை கருத்து மோதல்கள் நடந்துள்ளன. அதையெல்லாம் தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ள வேண்டாம் என நான் அவரைக் கேட்டு கொண்டேன். அவரும் அப்படியெல்லாம் எடுத்து கொள்ளவில்லை எனக் கூறினார்\\
இதுதான் இதுபோன்ற சந்திப்பின் பலன்

மதி.இண்டியா said...

இந்த குப்பைகளுக்குள் எட்டிக் குதிக்காத சிறில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் , சந்திப்புக்கு வராமல் தப்பித்துவிட்டாரே ?

இந்த டாக்டர் புரூனேவின் நல்லவர் வேடத்தை சென்ஷி கிழித்து வீசியுள்ளாரே , படித்தீர்களா?

http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post.html

சீ.. தூ .. என்று தாராளமாக துப்பலாம் .

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது