1/03/2009

ஃபிகர்களை எப்படி மெயிண்டைன் பண்ணுவது - டோண்டு ராகவனின் மொக்கை எண்ணங்கள்

அடையாறுக்கு செல்ல கால் டாக்சிக்காக (இது என்னவோ என் கார்தான்) காத்திருக்கும்போது ஃபிகர்களை மெயிண்டைன் பண்ணுவதில் வடிவேலுவுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை காட்டும் இந்த வீடியோ பார்த்து கொண்டிருக்கும்போது மனதில் உருவானது இப்பதிவு. கால் டாக்சியை காக்க வைத்தாவது பதிவை போட்டுவிட வேண்டும் என்ற கொலைவெறியில் வேகமாக தட்டச்சிடுகிறேன். பார்க்கலாம், கால் டாக்சிக்காச்சு எனக்காச்சு. அந்த வீடியோ:

இந்த பெரிசை யூ ட்யூப்பை பார்க்கவிடாது தடுக்க அவாத்து மாமி அப்பளக்குழவியை எடுப்பது நலம் என கத்துவது முரளி மனோஹர். படவா, என்னோடுதானே பங்களூருக்கு நீயும் வரப்போகிறாய். வா உன்னை நொங்கு எடுத்து விடுகிறேன் என அவனை எச்சரிப்பது டோண்டு ராகவன்.

சுஜாதா அவர்கள் ஒரு முறை அனலாக் மற்றும் டிஜிட்டலுக்கு அற்புதமான உதாரணம் தந்தார். அதாவது ஸ்ரீதேவியின் வளைவுகளை அப்படியே நகலெடுத்து இரட்டை பரிமாணத்தில் ஒரு தாளில் ப்ரொஜக்ட் செய்தால் கிடைக்கும் hourglass வடிவம் அனலாக். அதே சமயம் 42-26-36 என்று கூறினால் அவரது பரிமாணங்களை பற்றிய எண்ணம் உடனேயே மனக்கண்ணில் உருவாகிறது. அது டிஜிட்டல்.

அம்மாதிரி எண்ணிக்கைகளை vital statistics என ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதை கேட்டாலே ஜொள்ளன்களின் ஜொள்ளுவும் ஆரம்பித்து விடும். அதுவும் 42? ஐயோ. ஐயோ.

எனக்கு பலநாட்களாகவே ஒரு சம்சயம். இம்மாதிரி எண்களால் பெண்களை குறிப்பதால்தான் அவர்களை ஃபிகர்கள் என்கிறோமோ?

டோண்டு ராகவன் அவன் ஷட்டகர் காரில் பெங்களூர் செல்லும் ஆறு மணி நேரத்துக்குள் யாரேனும் இதுக்காகவே ரூம் போட்டு யோசித்து பின்னூட்டங்கள் இட்டால் தன்யனாவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இன்னும் கால் டாக்சி வரவில்லை.

1/02/2009

டோண்டு ராகவனின் பங்களூர் பயணம்

நாளை (03.01.2009) சொந்த வேலையாக பங்களூருக்கு காரில் (கார் என்னுடையதல்ல, எனது ஷட்டகருடையது) பயணம் செல்வதாக தீர்மானம் செய்துள்ளேன். அப்போது அங்குள்ள பதிவுலக நண்பர்களையும் (ம்யூஸ், அருண்குமார், கோபி, ஐயப்பன், சுபமூகா இன்னும் பலர்) சந்திக்கும் ஆவலில் உள்ளேன். சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் என்னை எனது செல்பேசியில் தொடர்பு கொள்ளலாம். ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கலாம்.

எனது செல்பேசி எண் 09884012948 (சென்னை எண், ஆகவே சென்னையில் வசிக்காதவர்கள் 0 சேர்த்து கொள்ள வேண்டும்). அங்கு 3-4 நாட்கள் இருப்பேன்.

அங்குள்ள எனது மற்ற வேலைகளை இனிமேல்தான் ஆர்கனைஸ் செய்ய வேண்டும்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/01/2009

டோண்டுவை கவர்ந்த நிகழ்வுகள்/செய்திகள்-1

நண்பர் நக்கீரன் பாண்டியன் எனது டோண்டு பதில்கள் 01.01.2009 பதிவில் இவ்வாறு பின்னூட்டம் இட்டுள்ளார். “ஜெயமோகன் பதிவுகளில் உள்ள சிறப்பானவற்றை தொகுத்து வழங்கியது போல் பிற உங்களை கவர்ந்த பிரபல பதிவர்களின் பதிவுகளில் ,தாங்கள் படிக்கும் சிறப்பான பதிவுகளின் சாராம்சத்தை சுருக்கமாய் கொடுத்தால்,உங்கள் பதிவுகளுக்கு நாளும் வந்து போகும் 600-700 வாசகர்கள் நன்மை பெறுவர்களே. நீங்கள் பல சுட்டி கொடுத்துள்ளீர்கள், இருந்தாலும் இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும். டோண்டு பதில்கள் மாதிரி டோண்டுவை கவர்ந்த நிகழ்வுகள்/செய்திகள் புதிய தொடர் வாரம் ஒரு முறை பதிவு மலரட்டுமே”!

நல்ல யோசனைதான். ஆகவே செய்ய வேண்டியதுதான். எப்போது? எப்போதோ என்ன இப்போதே ஆரம்பித்து விடுகிறேன். பதிவர்கள் என்றில்லை நான் அனுபவிக்கும் எல்லா நிகழ்வுகளுமே இங்கு பரிசீலனைக்கு வைக்கப்பட்டு அவற்றிலிருந்து சுவாரசியமானவை தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவுகளாக வரும். முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற யோசனைக்கே இடமில்லை. தமிழ் பதிவுகளில் நான் படித்த முதல் பதிவரிலிருந்தே ஆரம்பிக்கிறேன். அவர்தான் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா. அவரேதான், இந்த டோண்டு ராகவன் பதிவு போட காரணமாக இருந்தவர். “ஐயோ பாவம், அவர் செஞ்சதை எத்தனைவாட்டி சொல்லி அவரை போட்டு கொடுப்பே” என்று கத்துகிறான் முரளி மனோஹர்.

மார்கழி மாதம் ஆரம்பித்த நாளில்ருந்தே அவர் தினம் ஒரு திருப்பாவை என்ற ரேஞ்சில் பதிவிட்டு வருகிறார். கடந்த ஆண்டு மார்கழியில் செய்ததை இப்போது விரிவுபடுத்தி எழுதுகிறார். இந்த மார்கழி முதல் தேதி அவர் இட்ட பதிவு அவரது வலைப்பூவின் 400-வது பதிவு என்பதும் இன்னொரு விசேஷம். அதில் அவர் எழுதுகிறார், “சென்ற வருடம் மார்கழி மாதத்தின் போது ஒரு சில திருப்பாவை பாசுரங்களுக்கு பொருள் விளக்கத்தையும், சிறப்பையும் எனது திருப்பாவைப் பதிவுகளில் எழுதியிருந்தேன்.

விட்டுப்போன பாசுரங்களுக்கு, பொருள் விளக்கத்தையும், சிறப்பையும் எடுத்துச் சொல்லும் பதிவுகளை இந்த மார்கழி மாதம் இட உத்தேசம். திருப்பாவையின் முதல் பாடலிலிருந்து ஆரம்பிக்கிறேன். அதற்கு முன் மார்கழி பற்றியும், பாவை நோன்பு குறித்தும் ஒரு சிறிய முன்னுரை !

மார்கழி, பன்னிரண்டு தமிழ் மாதங்களில் ஒரு மாதம். 'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.

மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், 'மார்கழி நோன்பு' ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு நலத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப் பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித் துதித்து வழிபட்டனர்.

தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, 'பாவை நோன்பு' நோற்ற சமயம் சூடிக் கொடுத்த நாச்சியார் பாடிய முப்பது பாடல்களே 'திருப்பாவை'.

'திருப்பாவை' யும் (திருமால் மீது பாடப்பட்ட பாடல்கள்), மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை' யும் பாவைப் பாட்டுக்களில் சிறந்தவை. திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களும் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது. இப்பாடல்களில் பக்திப் பெருக்கும், தன்னலமற்ற இறைசேவை ஆகியவை தவிர வேறு நோக்கம் எதுவும் இல்லாமலிருப்பதையும் காணலாம்”
.


திருப்பாவையில் எனக்கு பிடித்த பாட்டு உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் என்று தொடங்கும் 18-வது பாடல். அது பற்றி பதிவர் தேசிகன் எழுதியதைப் பார்ப்போம்.

“திருப்பாவை - 18
நந்த கோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்
ஸாவேரி ராகம், ஆதி தாளம்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பொழிப்புரை:
மத யானையை மோதி தள்ளுகின்ற வலிமையும், போரில் பின் வாங்காத
தோள்ளை படைத்தவனுமான நந்தகோபாலன் மருமகளே ! நப்பின்னையே!
மணம் வீசும் கூந்தலை உடையவளே கதவைத்திற!
கோழிகள் சுற்றிலும் வந்து கூவுவதைக்கேள்!
குருக்கத்தி(மல்லிகைப்பூ) கொடிப் பந்தலில் குயில்கள் பலமுறை கூவி விட்டன
பந்தைத் தாங்கிய விரல்களையுடையவளே ! உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம்.
உன் தாமரைக் கையால் வளையல்கள் ஒலிக்க
மகிழ்ச்சியுடன் வந்து கதைவை திறக்கவேணும்.

ராமானுஜருக்கு பிடித்த திருப்பாவை
ராமானுஜருக்கு திருப்பாவையில் ஈடுபாடு மிக அதிகம். அதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்ற பெயர் பெற்றார். இந்த பெயரையே அவர் விரும்பினார்.
"உந்துமத களிற்றன்" என்ற திருப்பாவை பாடிக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் பெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது "செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்" என்று பாடி முடிக்க, நம்பியின் மகள் அத்துழாய் கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரோ சமயம் நிகழ, ராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்) என்று கூறுவர்.
இதனால் இந்த பாட்டை கோயில்களில் இன்றும் இரண்டு முறை பாடுவது வழக்கம்”
.


அப்பதிவுக்கு நான் இட்டப் பின்னூட்டம்:
“ராமானுஜர் தன்னைச் சேவித்து மயக்கமடைந்ததைக் கண்ட அத்துழாய் திகைத்து நிற்க, அப்பக்கம் வந்த பெரிய நம்பி ராமானுஜரை ஆதரவுடன் எழுப்பி, "என்ன திருப்பாவை ஜீயரே, 'உந்து மதகளிற்றன்' பாடலை பாடிக் கொண்டே வந்த போது அத்துழாயைக் கண்டு இச்சிறுமிதான் நப்பின்னை என்று மயங்கினீரோ?" என்றுக் கேட்டதாகவும் அதன் பின்பே ராமானுஜருக்கு இப்பெயர் வந்ததாகவும் நான் அறுபதுகளில் கல்கியில் படித்த ஞாபகம்.
எனக்கு மிகப் பிடித்தத் திருப்பாவைப் பாடல்களில் இது மிக முக்கியமானது”.

இந்தப் பாடலுக்கு பாலா அவர்கள் எழுதப்போவதை பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் 01.01.2009

பலமுறை பலர் கேட்டதற்கிணங்கி இனிமேல் டோண்டு பதில்கள் பதிவை ஒவ்வொரு வியாழனுக்கும் மாற்றுவேன். மேலும் நாளை ஜனவரி 1 வேறு. அடுத்த பதிவுகள் இனிமேல் ஒவ்வொரு விழாயனன்றும் வந்து விடும். (“அடப்போய்யா, பெரிசுக்கு நாளைக்கு என்ன பதிவு போடுவதென்று தெரியாததால் இம்மாதிரி சீன் காட்டுகிறது” என்று கூவும் முரளி மனோஹரா, உனக்கும், மற்ற பதிவுலக நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!)

நக்கீரன் பாண்டியன்:
2008 ஆண்டில் உங்களை:
1. மகிழ்ச்சிப்படுத்திய செய்தி/நிகழ்ச்சி

பதில்: எனது தாய்மொழி தரும் உற்சாகம் - 3 பதிவில் அதை குறிப்பிட்டுள்ளேன்.

2. கவலைப்படுத்திய செய்தி/நிகழ்ச்சி
பதில்: குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை பற்றி நான் இட்ட இப்பதிவில் அதை நீங்கள் பார்க்கலாம்.

3. போடா ஜாட்டான் என்று நினைத்த செய்தி/நிகழ்ச்சி
பதில்: எதிர்பாராது வந்த தாக்குதலின் எதிர்வினையாக நான் போட்ட பதிவை விட வேறு என்ன நல்ல உதாரணம் நீங்கள் கேட்டதற்கு இருக்க இயலும்?

4. எதிர்பார்த்து நடந்த நிகழ்ச்சி/செய்தி
பதில்: மேலே முதல் கேள்விக்கு பதில் தந்ததேதான் இங்கும். பிளாட்டினம் உறுப்பாண்மை பெற வேண்டும், அதுவும் சென்ற ஆண்டு (2007) பெற்றது போலவே என நினைத்தேன். அது நடந்தது, அதுவும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு.

5. எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சி/செய்தி
பதில்: இந்தக் கேள்வி பதில் பதிவுகள் விளையாட்டாக ஆரம்பித்தது இப்படி பிரபலம் அடையும் என நினைக்கவேயில்லை.

6. எதிர்பார்த்து நடக்காத நிகழ்ச்சி/செய்தி
பதில்: அப்படி என்று சொல்லிக் கொள்ள விசேஷமாக இல்லை. பஸ் சீக்கிரம் வரும் என நினைத்தேன், ஆனால் ரொம்பவும் நேரம் ஆயிற்று என்ற ரேஞ்சில் கூறுவது எல்லாம் இதில் வராதுதானே?

7. நீங்கள் எழுதிய பதிவில் மிகவும் பிடித்தது (முதல் பரிசு)
பதில்: போலி டோண்டுவுடனான யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது பற்றிய இப்பதிவு. It wins hands down!

8. நிறைய பின்னுட்டங்களையும் பார்வைகளையும் பெற்ற பதிவு
பதில்: இந்த ஆண்டின் கடைசி டோண்டு பதில்கள் பதிவு (137 பின்னூட்டங்கள்) மிக அதிக பின்னூட்டங்கள் பெற்றது. ஆனால் பார்வைகள் என்று கேட்டால், பதில் கூற இயலாது. ஏனெனில் எனது பார்வைகள் கவுண்டர் மொத்தமாகத்தான் எண்ணும். ஒரு குறிப்பிட்ட பதிவுக்கான எண்ணிக்கை என்று அதில் பார்க்க இயலாது. ஆனால் ஒன்று கூறலாம். பொதுவாக கேள்வி பதில்கள் பதிவுகள் வரும்போது ஹிட்டுகள் கூடும். சராசரியாக இருக்கும் 600-க்கும் மேல் 1000-1100 வரை கூட சில சமயங்களில் ஒரே நாளில் ஹிட்டுகள் வந்துள்ளன. சர்ச்சைக்குரிய விஷயங்கள் எழுதினால் அவ்வாறு நடக்கும்.

9. யாரும் கண்டு கொள்ளாத பதிவு (0 பின்னூட்டம்)
பதில்: அப்படி ஒரு பதிவும் இல்லை. மினிமம் 3 பின்னூட்டங்கள். ஆனால் 12.09.2008-க்கான கேள்விகள் ஒன்றுமே வராததால் அந்த தேதிக்கான பதில்கள் பதிவு வரவில்லை.

10. பிறர் எழுதிய பதிவில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய பதிவு/பதிவர்
பதில்: ஜெயமோகன். அவரைப் பற்றி நான் இட்ட பதிவுகளில் ஒன்று இதோ.

நக்கீரன் பாண்டியன்:
டோண்டு பதில்களில்:
1. மொத்தம் கேட்கப்பட்ட கேள்விகள்?

பதில்: அது இருக்கும் ஆயிரத்துக்கும் மேல். ஒவ்வொரு பதிவாக போய் பார்க்க வேண்டும். அதிலும் எண்ணிக்கை வரிசையில் இருக்காது. ஒருவரது கேள்விகள் 10 என வைத்து கொள்வோம். அடுத்தவர் கேள்விகள் ஆரம்பிக்கும்போது மறுபடியும் என்ணிக்கை ஒன்றிலிருந்து ஆரம்பிக்கும். ஆகவே இப்போது போய் எண்ணுவது அலுப்படையச் செய்யும் வேலை.

2. அதிகம் கேள்வி கேட்ட பதிவாளர்?
பதில்: மதிப்புக்குரிய ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க அனானி அவர்கள்.

3. பதிலளிக்காமல் விட்ட கேள்விகள் எத்தனை?
பதில்: சாதாரணமாக ஆட்சேபகரமான கேள்விகளை மட்டுறுத்தும்போதே விலக்கி விடுவேன். அதையும் மீறி வந்ததில் எனக்கு தெரிந்து ஐந்துக்கும் குறைவான கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்னும் பதிலை கூறியுள்ளேன்.

4. என்ன காரணம்?
பதில்: ஏனெனில் அவை சிலரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாக கேட்கப்பட்டவை. அம்மாதிரி கேள்விகளுக்கு சோ அவர்களோ, டோண்டு ராகவனோ பதிலளிக்க மாட்டார்கள் என முரளி மனோஹர் பிரகடனம் செய்கிறான்.

5. அனைத்து பதிவிலும் கேள்வி கேட்டவர் யாராவது உண்டா?
பதில்: மதிப்புக்குரிய ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க அனானி அவர்கள்.
6. கேள்வி கேட்டவர், பதிலை பார்த்து பின்னூட்டம் விடவில்லை என்பது வாடிக்கையா?
பதில்: வாடிக்கை இல்லை. இரண்டு முறைகள் மிக வெளிப்படையாக நடந்துள்ளது. முதலாதவதாக சம்பந்தப்பட்ட இஸ்மாயில் என்பவர் கேட்டு கொண்டதற்கிணங்க அவருடைய 18 கேள்விகளுக்கு தனிப்பதிவில் பதிலளித்தேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவேயில்லை. அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை. அதே போல ஜோதிபாரதி என்பவரும் தனது பதிவில் தான் கேட்ட கேள்விகளை ஒருவர் சுட்டு எனக்கு அனுப்பியதாகவும், ஆகவே நான் அவர் பதிவில்தான் பதில் தர வேண்டும் என கேட்டு கொண்டார். அவரிடம் நான் என்னிட கேள்விகள் எங்கிருந்து வந்தாலும் அவற்றுக்கு பதிலளிக்க முயற்சிப்பேன் என்றும், அவரது பதிவிலும் பதில்களை நகல் செய்து ஒட்டுகிறேன் என்று கூறி அவ்வாறே செய்தேன். ஆனால் அவரிடமிருந்தும் எதிர்வினைகள் ஏதும் இல்லை.

7. உசுப்பேத்தும் கேள்விகளை தவிர்க்காமல் விட்டு விட்டோமே என நினைத்து உண்டா?
பதில்: இல்லை

8. கேள்விபதில் இது மாதிரி தொடர்ந்து வேறு யாராவது பதிவு போடுகிறார்களா?
பதில்: எனக்கு தெரியாது.

9. அவரிடம் நீங்கள் கேள்வி கேட்ட அனுபவம் இருக்கிறதா?
பதில்: இக்கேள்வியே எழவில்லை.

10. இது எத்தனையாவது கேள்வி பதில்? (பதிவு-ஆரம்பத்திலிருந்து கணக்கிடவும்).
பதில்: 47-வது.


அனானி (இவரது முதல் 25 கேள்விகள் போன வாரம் பதிலளிக்கப்பட்டன. அவரேதான் இங்கும் கேள்வி கேட்கிறார் என்பதை உணர்த்தவே கேள்வி எண்களை மாற்றாது வைக்கிறேன்):
26.சின்னத்திரையும், சினிமாவும் இன்றைய கலாச்சார சீரழிவின் அடையாளங்களா?
பதில்: அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஒன்றை பார்த்து இன்னொன்று நடக்கிறது. இது ஒரு விஷச்சுற்று

27.இந்திய அரசியல் 2009 ல் எந்த திசையில் செல்லும்?
பதில்: இந்திய அரசியல் நிஷாப்புயல் போல. எப்போது எங்கு செல்லும் என்பது தெரியாது. ஆகவே இக்கேள்விக்கு சரியான விடை 2010-ன் முதல் டோண்டு பதில்கள் பதிவில் பதிலளிப்பேன்.

28.கலைஞரின் சாதுரியம் ஜெயலலிதாவின் சாதுரியம்-ஒப்பிடுக?
பதில்: இருவருமே ஒரு மாதிரிதான். அவர்களது சாதுர்யமானவை என்று அழைக்கப்படும் செயல்கள் பல எரிச்சலையே விளைவிக்கின்றன.

29. சென்னை நகரப் பேருந்துகளில் இன்றைய முன்னேற்றம் எப்படி?
பதில்: தாழ்தள பேருந்துகள் அதிகரித்து சாமானிய வண்டிகள் குறைந்து சாமானியர்கள் அவதிப்படுவதே அதிகம்.

30.தமிழக காங்கிரசார் அதிமுக பக்கம் சாய்கிறார்களா?
பதில்: தமிழக காங்கிரசாருக்கு என்ன செல்வாக்கு கட்சியில்? சோனியா சொல்படித்தானே அங்கு எல்லாமே நடக்கிறது?

31.இந்தியாவில் பெட்ரோல் விலை குறையமா? குறையாதா?
பதில்: என் நண்பனுக்கு ஃபோன் செய்து கேட்டதில் சில நாட்களுக்கு முன்னால் பெட்ரோல் விலை 5 ரூபாய் லிட்டருக்கு குறைந்ததாக கூறினான். இனிமேலும் குறையும், லோக்சபா தேர்தலுக்கு சில நாட்கள் முன்னால்.

32.தமிழ்கப் பெண்கள் அதிகமாய் நகை வாங்குவது சரியா?
பதில்: தமிழக பெண்கள் என்று என்ன, இந்தியப் பெண்களுக்கே நகை மோகம் உண்டு. அவை ஆத்திர அவசரத்துக்கு உதவுவதும் இம்மாதிரி அவற்றை அதிகம் வாங்கும் காரணங்களில் ஒன்றே. அது தவறு என எவ்வாறு கூறுவது?
33. தமிழகத்தில் கோஆப்டெக்ஸின் நிலை எப்படியுள்ளது?
பதில்: நன்றாகத்தான் உள்ளது என என் வீட்டம்மா தெரிவிக்கிறார். இந்த அழகில் அவருக்கு தான் புடவைகள் வாங்கி பல நாட்கள் ஆகிவிட்டன என்பது சட்டென்று நினைவுக்கு வர, அடுத்த சில நாட்களில் ஒரு விஜயம் கடைகளுக்கு உண்டு என்பதையும் எனக்கு தெரிவித்தார். தேவையா எனக்கு இந்த கேள்வி?

34. கனிமொழி- தமிழச்சி- யார் முந்துகிறார்கள்?
பதில்: யார் முந்தினால் என்ன, சாதாரண மக்களுக்கு இதில் என்ன பயன்?

35. வரும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கலந்து ஜமாய்ப்பீர்களா?
பதில்: எப்போதுமே இம்மாதிரி கொண்டாட்டங்களுக்கு சென்றதில்லை, செல்லப் போவதும் இல்லை. கால விரயம்.

36. கனிமொழி மத்திய அமைச்சராக வாய்ப்பு இனி உண்டா?
பதில்: அடுத்த தேர்தலே வந்து விடப்போகிறது. இப்போது போய் மந்திரியானால் தேவலையா ஆகாவிட்டால் தேவலையா?

37. சென்னையில் வசதி படைத்தோர் பண்ணை வீடுகள் வாங்கிப் போட்டார்களே,அவை இப்போது?
பதில்: அவையெல்லாம் அதே இடங்களில்தான் உள்ளன, ஆனால் மதிப்பிழந்து.

38. பணத்தை அமுக்குவதில் அதிகாரிகள் டாப்பா, அரசியல்வாதி டாப்பா?
பதில்: முயல் (அமைச்சர்கள்) ஆமை (அதிகாரிகள்) கதைதான், ஆனால் இங்கு எப்போதுமே முயல்தான் ஜெயிக்கும்.

39. சென்னை கடற்கரை ஜோடிகள் இரவிலும், உலாவும் இடமாகிறதே?
பதில்: பகலில் உலாவவில்லை என எப்படி கூறுகிறீர்கள்?

40. 90 நாள் முன்பதிவு முறை இரயில்வேயில் உள்ளதை பயன்படுத்தி சிலர் கொள்ளை அடிக்கிறார்களே?
பதில்: கொள்ளையடிப்பவர்கள் எம்மாதிரி ஏற்பாடு கொண்டு வந்தாலும் கொள்ளை அடிப்பார்கள். அளிப்பு அதிகமானால் தானே இம்மாதிரி விஷயங்கள் குறையும். இப்போதெல்லாம் யாராவது லேண்ட்லைன் தொலைபேசிகளுக்காக அதிகம் துட்டு தருகிறார்களா?

41. பறவைக் காய்ச்சல் நாமக்கல் கோழிப் பண்ணைகளை பாடாய்படுத்துகிறதே?
பதில்: கோழிப்பண்ணைகளை நடத்துவது என்பது இம்மாதிரியான அபாயம் நிறைந்த தொழில்தானே. அதற்கு நாமக்கல் என்ன, சேலம் என்ன?

42. சின்னத் திரையில் பெண்கள் அழாத சீரியல்கள் வருமா?
பதில்: கடலில் அலைகள் ஓயுமா?

43. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் நாத்திகர்களின் முடக்குவாதம் இப்போது அதிகமாய் காணவில்லையே?
பதில்: நிரந்தர நாத்திகனோ நிரந்தர ஆத்திகனோ எங்கும் கிடையாது

44. அரசியல் கட்சிகளின் பொதுக்குழு, செயற்குழு பற்றி சொல்லுக?
பதில்: அனேகமாக எல்லா கட்சிகளிலும் தலைவரின் அல்லக்கைகள் அதிகமாக இருக்கும் இடமே செயற்குழு. ஆனால் அதற்குத்தான் அதிகாரம் அதிகம். பொதுக்குழுவில் அல்லக்கைகளை விட இளிச்சவாயர்கள் அதிகம்.

45. மயிலை எஸ்விசேகர் இனி என்ன செய்வார் அரசியலில்?
பதில்: அவருக்கென்ன ராஜா. மாயாவதி கட்சியில் சேரப்போவதாக சொல்லிக்கொள்கிறார்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றன அவரது நாடகங்கள்.

46.பிஹார் லாலுவின் ரயில்வே அமைச்சு செயல்பாடு எப்படி?
பதில்: யாருமே எதிர்ப்பர்த்திருக்க முடியாத அளவுக்கு அது லாபம் ஈட்டும் துறையாக மாறியதற்கான கிரெடிட் லாலுவுக்குத்தான் செல்ல வேண்டும்.

47. கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் எல்லோருக்கும் எப்போதும் 7.5 நாட்டு சனி போலுள்ளதே?
பதில்: டிஷ் ஆண்டென்னாக்கள் விலை இன்னும் குறையும் என எதிர்ப்பார்க்கிறேன். அது நடந்து விட்டால் கேபிளாவது ஆப்பரேட்டராவது. எதற்கு பதிவர் கேபிள் சங்கரையும் இது பற்றி கேட்டு விடுவது நலம்.`

48. ரஜினி 1 கோடி கொடுத்து ஆரம்பித்து வைப்பதாய் சொன்ன நதி நீர் இணைப்பு?
பதில்: ஒரு கோடியை வைத்து என்ன செய்ய, நாக்கு வழிக்கவா?

49.தகவல் அறியும் உரிமைச் சட்டம் தமிழ் நாட்டில் பயன் பெறுகிறதா?
பதில்: டிராஃபிக் ராமசாமியைத்தான் கேட்க வேண்டும்.

50. மருத்துவர் ராமதாஸ் மதுவுக்கு எதிராக தீவிரமாக இறங்கியிருக்கிறாரே மருத்துவர் ஐயாவுக்கு இதில் அரசியல் ஆதாயம் இருக்குமா?
பதில்: நான் ஏற்கனவே பல முறை கூறியதுதான். பூரணமதுவிலக்கு எப்போதுமே சாத்தியமாக இருந்ததில்லை. இதில் மருத்துவருக்கு சில ஓட்டு வேட்டைகள் வெற்றியடையலாம்.

[இந்த அனானியின் 100 கேள்விகளில் இதுவரை 50-க்கு பதிலளித்தாகி விட்டது. மீதி 50 அடுத்த பதிவு(களில்)]

ஸ்ரீராம்:
கறுப்புச் சட்டை காவலர் கி.வீரமணி, எண்சோதிடப்படி தனது திருநாமத்தை, மீ.கி.வீரமணி என்று மாற்றியுள்ளதாய் தினமலர் சொல்லுகிறதே: 1. பகுத்தறிவு வாதங்களெல்லாம் பக்தியை நோக்கியா? 2. சோதிட நம்பிக்கையில் தொடங்கும் சீர்திருத்தம் கடவுள் நம்பிக்கையில் முடியுமா? வீரமணியாருக்கு வயதாவதுதான் காரணமா?
பதில்: இரு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். மீ என்பது அவர் தாயின் பெயரையே குறிக்கிறது என்று அவர் கூறிய பிறகு இக்கேள்விகளுக்கு அவசியமே இல்லை.

3. காங்கிரஸ்-அதிமுக கூட்டணி என்ற வதந்தி என்றவுடன் கலைஞர் வீரமணி, திரு, மருத்துவர் மேல் சட்டம் பாயும் என்கிறாரே?
பதில்: கலைஞர் கவலை அவருக்குத்தானே தெரியும். மருத்துவரும் அதிமுகவுடன் சேர்ந்து கொண்டால் தேர்தலில் திமுக உதை வாங்குவது நிச்சயம்தானே.

எம். கண்ணன்
1. குமுதத்தின் சேர்மன் எஸ்.ஏ.பி புதல்வர் ஜவஹர் பழனியப்பன் கருணாநிதியை சந்தித்து ஒரே செண்டி டயலாக் எல்லாம் விட்டு வந்திருப்பதை சுதாங்கன் கிழி கிழி என கிழித்திருக்கிறாரே ? உமது எண்ணம் என்ன ? படிக்க: http://sudhanganin.blogspot.com/2008/12/blog-post_26.html
பதில்: பணம் பத்தும் செய்யும். வண்டி ஒரு நாள் ஓடம் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியேறும்.

2. துக்ளக் சத்யா எப்படி இருப்பார் ? அவரது புகைப்படம் இதுவரை வெளியானதுண்டா? (அப்படி ஒருவர் இருக்கிறாரா இல்லை சோ புனைப்பெயரில் எழுதுகிறாரா ?)
பதில்: நிச்சயம் இருக்கிறார். துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களில் அவரையும் சோ அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார் என்று எனது ஞாபகம்.

3. மொட்டை மாடிக் கூட்டம் கூட்டி, வெறும் காபி, பக்கோடா வைத்தே புத்தகம் வெளியிட்டு - பெரிய விழா/ஹால் செலவில்லாமல் கிழக்கு பதிப்பகம் சாமர்த்தியம் எப்படி?
பதில்: இதில் ஒரு சாமர்த்தியத்தையும் நான் பார்க்கவில்லை. அப்பதிப்பகத்தின் நேர மேலாண்மையையே அது பிரதிபலிக்கிறது. மேலும் அங்கு நடக்கும் புத்தக வெளியீட்டு கூட்டங்களில் ஏற்படும் ஆத்ம திருப்தியே அலாதிதான்.

4. சாரு நிவேதிதாவைச் சந்தித்தால் என்னென்ன கேள்விகள் கேட்க விருப்பம்?
பதில்: சந்தித்தேனே, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி கூட்டத்தில். கேள்விகளும் கேட்டேனே.

5. அரி-கிரி அசெம்பிளி பாஸ்கியும் சோவைப் போல முடி வளராதவரா? இல்லை வாராவாரம் மொட்டை அடித்துக் கொள்பவரா?
பதில்: தெரியவில்லையே. அவரைத்தான் கேட்க வேண்டும். அப்படி கேட்டு அவர் “மயிரே போச்சு” என்று பதில் கூறினால் என்ன செய்வது?

6. பெரும்பாலான தமிழ் டிவி சேனல்கள் இரவில் 9.30 அல்லது 10.00 மணிக்குப் பிறகு காமெடி நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புகின்றனவே? இது ஒரு விதத்தில் தூங்கப் போகுமுன் ஒரு லேசான உணர்வோடு செல்ல மனதை தயார் செய்கிறது என்றாலும் மீண்டும் மீண்டும் அதே காட்சிகளையே கட்டுகின்றனரே? ஏன் பழைய படங்களிலிருந்து (நாகேஷ், சந்திரபாபு, பாலையா, சிவாஜி..) காட்சிகள் காண்பிப்பதில்லை?
பதில்: அதானே, ஏன் செய்வதில்லை? சேனல்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என உங்களுடன் சேர்ந்து நானும் குரல் தருவேன்.

7. சன் டிவியில் வரும் 9.30 மணி ராதிகாவின் அரசி சீரியலில் - தமிழக அரசியல் சம்பவங்களை / நடப்புகளை கிண்டல் அல்லது விமர்சனம் செய்யும் வகையில் வசனங்கள் வருகிறதே ? இது சரத்குமாரின்/ராதிகாவின் சொந்த முடிவா இல்லை இதற்குப்பின் கலாநிதி மாறனின் உள்குத்து இருக்குமா?
பதில்: அரசி எல்லாம் ஒரு சீரியலா? ஒரே அறுவை. நான் பார்ப்பதில்லை. ஆகவே நீங்கள் சொல்வது பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை. ஆனால் சித்தியில் ஒரு சீன் இவ்வாறு வந்தது. கலைஞரை நல்ளிரவில் கைது செய்த சீனை காட்டினார்கள். ஆனால் அங்கு சித்திக்கு டப்பிங்காக சிவகுமார் (சித்தப்பா) ஐயோ ஐயோ என கத்தினார்.

8. சரத் ரெட்டியை (கலைஞர் டிவி) அடிக்கும் அளவிற்கு சகோதரர்களுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா என்ன?
பதில்: அப்புறம் சகோதரர்களையே மன்னிப்பு கேட்க வைத்தாராமே, லக்கிலுக் சொன்னார். மேலும் கேள்விப்பட்டது, சரத் கை எலும்பு முறிவு உண்மையில்லையாம். காலெலும்புதான் முறிந்ததாம்.

9. தமிழ் இணைய உலகத்தில் ஒரு காலத்தில் பிராமண எதிர்ப்புகளை போராடி வந்த நியுஜெர்சி அருண் வைத்தியநாதன், தற்போது சிநேகா, பிரசன்னாவை வைத்து 'அச்சமுண்டு அச்சமுண்டு' தமிழ்ப்படம் எடுத்து வருகிறார். அவரது பழைய பதிவுகளைப் படித்ததுண்டா ? கொஞ்சம் உங்கள் எண்ண சாயலில் இல்லை? உங்கள் கமென்ட்டும் அந்தப்பதிவில் உள்ளது.
http://arunhere.com/pathivu/?p=24
(என்ன தான் சொன்னாலும், தமிழ் மொழிக்காக ஆங்கிலப் பலகைகளில் தார் பூசுவதோ அல்லது இந்தி எழுத்துக்களில் சாணியடிப்பதையோ என்னால் ‘ஆஹா…சபாஷ்’ என்று கைதட்டி வரவேற்க முடியாது. அதே போல, பார்ப்பனீயம், பார்ப்பனர்கள் என்று தமிழகத்தில் எழுப்பப்படும் கோஷங்களை வலைப்பதிவுகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எழுதப்படும் போது, பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்து, பல தரப்பட்ட கலாச்சாரம் மற்றும் மக்களோடு பழகி வரும் என்னால் சிரிக்கத்தான் முடிகிறது. அதற்காக நான் பூணூல் அணியமாட்டேன் என்றோ அல்லது சடங்குகள் சம்பிரதாயங்களில் ஈடுபடமாட்டேன் என்றோ சொல்லவில்லை. யாரையும் எந்த விதத்திலும் ‘டிஸ்டர்ப்’ செய்யாத எந்த சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் எனக்கு வருத்தமோ கோபமோ கிடையாது. அது போன்ற விஷயங்களை நான் செய்து கொண்டு தானிருப்பேன். ஏனென்றால், அது எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், எனக்கும் திருப்தியைத் தரும் சமாச்சாரம்)

பதில்: நான் தமிழ் பதிவுகள் படிக்க ஆரம்பித்தபோது அவர் பதிவுகள் என்னால் மிகவும் விரும்பி படிக்கப்பட்டவை. என்ன பிறகு அவர் வேறு விஷயங்களில் பிசியாகி ஒதுங்கி கொண்டார். அது தமிழ்ப்பதிவுகளுக்கு இழப்புதான்.

10. வைரமுத்து எழுதிய திரைப்பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடல்கள் / வரிகள் என்ன ? ஏன்?
பதில்: கருத்தம்மாவில் வரும் “போறாளே பொன்னுத்தாயி, பொலபஒலவென்று கண்ணீர் விட்டு” என்ற சோகமான பாடலின் வரிகள்தான் என்னைக் கவர்ந்தன. காரணம் இப்பதிவில் வேறு உதாரணங்களுடன் தந்துள்ளேன். அப்பாடலையும் கேளுங்களேன்.


சுவனப்பிரியன்:
1. 'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்' என்பது அறிவியலார் பொதுவாக ஒத்துக் கொண்ட உண்மை. ஆனால் பரிணாமவியலோ உலகம் முழுவதும் உயிரற்றப் பொருட்களான கற்பாறைகள் மண்,வாயு ஆகியன நிரம்பி இருந்த போது காற்று, மழை, மற்றும் மின்னல் ஆகியவற்றின் பல பொருட்களின் கூட்டு விளைவால் உயிர் உண்டானது என்கிறது. இரண்டு கருத்துக்களில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். இதற்கான உங்களின் விளக்கம் என்ன?
பதில்: அறிவியலின் ஒரு முக்கிய விஷயமே எந்த கண்டுபிடிப்பும் நிரந்தரமாகக் கோலோச்சுவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அப்போதைய பிரசித்தி பெற்ற அறிவியலாளர் கூறியது என்னவென்றால், வான் பயணம் சாத்தியமே இல்லையென்று. அப்படி முடியும் என்றால் கடவுள் மனிதனுக்கு இறக்கைகள் தந்திருப்பான் என்பதேயாகும். இப்போது கூட க்ளோனிங் ஆராய்ச்சிகள் கடவுளாவதற்கு மனிதனின் முயற்சிகள் எனக்கூறி பலர் எதிர்க்கின்றனரே. மேலும் நீங்கள் சொன்ன “இரண்டு கருத்துக்களில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்” என்ற வாக்கியமும் முழு உண்மையல்ல. உதாரணத்துக்கு ஒளி என்பது அலையா பொருளா என்பதற்கு இரண்டுமே சரி என்ற பதில் வந்தது. இன்னும் ஆய்வுகள் நடப்பதால் இதற்கு மேல் நாம் என்ன சொன்னாலும் அபத்தமாக போகும் வாய்ப்பு உண்டு.

2. ஜீன்களை ஆராய்ந்த அறிவியலார் மனித இனம் அனைத்தும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்து பிறகு பல்கிப் பெருகியதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி பரிணாமவியல் சொல்வது என்ன?
பதில்: அந்த முதல் தாய் எங்கிருந்து வந்தாள் என்பது பற்றித்தான் அது பேசுகிறது என நினைக்கிறேன்.

3. 'ஆற்றலை ஒரு போதும் உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஆயினும் மாற்றி அமைக்கவே முடியும்' - ஐன்ஸ்டீன். ஒரு பொருளைப் படைப்பதற்கு ஆற்றல் மிகவும் இன்றியமையாதது. மனிதனைப் படைத்தது இறைவன் தன்னகத்தே கொண்ட ஆற்றலினால் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். இல்லை... மனிதனாலும் படைக்க முடியும் என்கின்றனர் நாத்திகவாதிகளும் பரிணாமவியலாரும். இது உண்மையானால் அண்டசராசரங்கள் அடங்கிய இப்பேரண்டத்திலிருந்து எந்த ஒன்றையும் எவ்விதத்திலும் பயன்படுத்தாமல் சுத்த சூன்யத்திலிருந்து சுயமாக (இறைவன் படைப்புகளில் கை வைக்காது) சொந்த ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு சிறிய அணுவையேனும் படைத்துக் காட்ட முடியுமா?
பதில்: அதற்கு ஒன்றுமில்லாத நிலைக்கு அல்லவா போக வேண்டும்? நீங்கள் விரும்பினாலும் அதை செய்ய இயலாதே. அறிவியல் என்பது இன்னும் அபிவிருத்தியில்தான் உள்ளது. சில முன்னேற்றங்கள், பல பின்னடைவுகள் என்ற ரீதியில் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது ஒரு குகையின் உள்ளே செல்கிறோம். குகையின் அடுத்த வாயில் இன்னும் கண்ணுக்கு தெரியவில்லை என்பதே நிஜம்.

4. நமக்குள் இருக்கும் உயிர் எங்கிருந்து வருகிறது? உயிரின் உதயம் எவ்வாறு நிகழ்கிறது? மனிதனின் இறப்புக்குப் பின் எங்கு செல்கிறது?
பதில்: இக்கேள்வியை வைத்துத்தானே மனித உலகமே ஆரம்பத்திலிருந்து போராடி வருகிறது. வியாழக்கிழமைக்குள் அதற்கு விடையளிக்க இயலுமா?

5. மனிதனுக்குப் பிறகு பரிணாமம் அடைந்து நாம் என்னவாகப் போகிறோம்? அது எப்போது என்பதையும் தெரிவிக்க முடியுமா?
பதில்: தேவர்களாவோமோ, அசுரர்கள ஆவோமா காலம்தான் பதில் கூற வேண்டும். இங்குள்ள பல பதிவர்கள் அசுரர்களாவதே மேல் என்ற முடிவில் இருக்கிரார்கள் போலிருக்கிறதே.

6. எந்த ஒரு கோட்பாடும் நிரூபிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். டார்வினின் கோட்பாடுகளில் எத்தனை கோட்பாடுகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளன?
பதில்: நிரூபிக்கப்பட்ட பிறகு அது கோட்பாடு அல்ல, அறிவியல் விதியாகிறது. டார்வின் கோட்பாடுகளின் நிரூபணம் சம்பந்தமாக சண்டை மண்டை உடைகிறது. சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.

7. மனிதன் தனது உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையைப் பெறவில்லை. பகுத்தறிவால்தான் பெறுகிறான். உடல் வளர்ச்சி, உடல் அமைப்பில் மாறுதல் என்பதற்குத்தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறார். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் நிர்பந்தம் எது என்று பரிணாமவியல் கூறும் தத்துவம் என்ன?
பதில்: இதை குருட்டுத்தனமான தெரிவு (blind selection) என்று கூறுவார்கள். எல்லா உயிரினங்களுமே தத்தம் இருத்தலுக்காக போராடுகின்றன. திறன் அல்லாதவற்றை இயற்கை கருணையின்றி நீக்குகிறது. இதை ஒரு அல்பமான உதாரணமாக கூறலாம். பழைய திரைப்பாடல்கள் நமக்கு நன்றாக காதுகளுக்கு கேட்பதன் காரணமே காலப்போக்கில் நல்ல பாடல்களே நிலைத்து நின்றதால்தான். எண்ணற்ற அடாசு பாடல்கள் இப்போராட்டத்தில் அழிய நேர்ந்தது. அவ்வளவே. ஒரு பாடலாசிரியர் தனது எல்லா பாடல்களையுமே ஒரே அர்ப்பணிப்புடனேயே இயற்றியிருப்பார். அத்தருணத்தில் எது நிலைக்கும் என யாராலும் கூறியிருக்க இயலாது என்பதே நிஜம். அதுதான் உயிரினக்களின் survival of the fittest கோட்பாட்டிலும் வெளிப்படுகிறது.


அனானிT:
1. இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று முன்பு நடத்தப்பட்ட கூத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் தீக்கிறையாக்கப்பட்டார்களாமே? இன்றைக்கு பேருந்து எரிப்பு வழக்கை குறை சொல்லும் தி.மு.க. குண்டர்கள் அன்றைக்கு (சமீபத்தில்?) அறுபதுகளிலேயே போலீஸ்காரர்களையே பிடித்து பஞ்சாலைக்குள் தள்ளி உயிருடன் கொளுத்திய கதை தமிழகத்தில் மறைக்கப்பட்டது ஏன்? அது குறித்து மேல் விபரங்கள் எதுவும் தெரியுமா?
பதில்: இது என்ன குழந்தைத்தனமான கேள்வி. தனக்கு என்றால் ஒரு நியாயம், பிறர்க்கு என்றால் வேறு ஒரு நியாயம் என்று இருப்பது மனித இயல்புதானே.

2. இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று பிரபல வரலாற்று ஆசிரியர் எல்லாம் அறுதியிட்டுக் கூறியிருக்கின்றனர். பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்கூட இதே கருத்தைத் தான் கூறியிருக்கிறார்! உங்கள் பதில்?
பதில்: எல்லா காவியங்களுக்குமே அடிப்படையான நிகழ்ச்சி என ஒன்று இருந்திருக்க வேண்டும். அதைத்தான் இங்கும் குறிப்பிட்டுள்ளனர். ஆரியர் - திராவிடர் என்கிறீர்கள். அவர்கள் இப்போது ஆரியர் - திராவிடராக இருப்பவர்களா அல்லது வேறு யாரோவா? ராமரை பார்ப்பனன், ராவணன் திராவிடன் என்பவர்கள், ராமர் சத்திரியர், ராவணனே பார்ப்பனன் என்றதும் சங்கடமான மௌனம் காக்கின்றனர். பெரியார் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அதாவது அவர் தனது பெயரை ராமசாமியிலிருந்து ராவணசாமியாக மாற்ற எண்ணினாராம். பிறகு ராவணன் பார்ப்பனன் என்று கேள்விப்பட்டதும் அத்தீர்மானத்தை சட்டென நழுவ விட்டாராம்.


நக்கீரன் பாண்டியன்:
உலகத்தில் பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு தாய் தந்தையருக்கு பிள்ளைகளாய்ப் பிறக்கும் சகோதரர்களுக்கு ஒரே உணவுப் பழக்கம், ஒரே சுற்றுப் புறச் சூழ்நிலை, ஒரே கல்வி முறை அளிக்கபட்டு வளர்க்கப்படுக்கின்றனர். வளர்ந்து ஆளாய் பின்னர் ஓரே தாய் வயிற்றில் பிறந்தை முழுவதுமாய் மறந்து ரத்த சம்பத்தையும் நினையாமல் பங்காளிகளாய் மாறி சிறு சிறு வாய்ச் சண்டையில் ஆரம்பித்து கோர்ட் கேசுன்னு உருமாறி சில சமயங்களில் கொலை பாதகங்களில் இறங்கி உயிர்ப் பலி நிகழ்வுகள் கூட நடை பெறுகிறதே. இந்த சண்டைகள் சச்சரவுகள் மோதல்கள் தாக்குதல்கள் இருப்பவன் இல்லாதவன் நடுத்திர வர்க்கம் எங்கும் வியாபித்து உள்ளதற்கு என்ன காரணம்? அ) ஜாதகக் குறைபாடா? ஆ)போன ஜென்ம பலனா?
இ)விதிப் பயனா? ஈ)இயற்கையின் சித்து விளயாட்டா? உ)23 குரோமோசங்களின் குழறுபடியா?
ஊ)ஆண்டவனின் தண்டனையா? எ)நவக் கிரகங்களின் பாதிப்பா? ஏ)குரங்கிலிருந்து வந்ததாலா? ஐ)------------------?

பதில்: இதற்கான பதிலை அவரவர் மனபாவத்திற்கேற்ப மேலே சொன்ன தெரிவுகளிலிருந்து எடுத்து கொள்ளலாம். ஆனால் அவை உள்ளன. அதுதான் உடனே தெரியும் உண்மை. சொந்த தாய்மாமனையே மணம் புரிந்து கொண்ட பெண்ணுக்கும் மாமியார் கொடுமை உண்டு என்றால் அந்த இடத்தில் அப்பெண்ணின் பாட்டி என்பதைவிட மாமியார் என்பவளே ஏற்றம் பெறுகிறாள் என்றுதானே அர்த்தம்? முன்பின் தெரியாதவனுடன் ஏற்படும் விரோதத்தை விட பல மடங்கு கூடப் பிறந்தவர்களுடன் விரோதம் ஏற்படுகிறதே எப்படி? சரி, நேரம் கிடைக்கும்போது இது பற்றி பதிவே போட்டால் போச்சு.


மெட்ராஸ்காரன்:
1. சோதிடம் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? சரியாக/தவறாக கணிக்கப்பட்ட எதிர்க்காலம் உங்கள் அனுபவத்தில் உண்டா?
பதில்: சோதிடம் பற்றி பதிவு போட்டுள்ளேனே.

2. நாடி சோதிடம் பற்றி உங்கள் கருத்து என்ன? அது பற்றி ஏதேனும் தகவல்கள் உங்களிடம் உண்டா? (Itஇது பற்றி பதிவு போட முடிந்தால் ரொம்பவும் உத்தமம். அப்படி செய்தால் நான் தன்யனாவேன்)
பதில்: கருத்து ஏதுமில்லை, எனது இப்பதிவில் அதை குறிப்பிட்டதைத் தவிர. மற்றப்படி இது பற்றி தனிப்பதிவு ஒன்று பதிவர் சுப்பையா ஏற்கனவே போட்டு விட்டார்.

3. Bomb blast in Bangalore , Ahmedabad, Mumbai attack all happening in very short intervals (periods).It is quite obvious that we are missing a major link in combating terrorism. Do you think our goverment has learnt any lesson? Any specific measures being carried out in Gujarat to your knowledge?
பதில்: தம் மேல் ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹமாசுக்கு பதிலடி தரும் இஸ்ரவேலர்களை குறை கூறுவதிலிருந்தே தெரியவில்லையா இந்திய அரசு பாடம் எதுவும் கற்கவில்லை என்று? குஜராத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று கேட்பதைவிட மத்திய அரசு மோடியின் கைகளை எப்படியெல்லாம் கட்டிப் போடுகிறது என்பதைப் பாருங்கள்.

4. சோ அவர்கள் "வாஷிங்டனில் நல்லத்தம்பி" படித்திருக்கிறீர்களா? இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் அது இன்னமும் இக்காலத்துக்கும் பொருத்தமாக இருப்பதை கவனித்தீர்களா?
பதில்: ஆகா, அது சமீபத்தில் 1972-ல் துக்ளக்கில் தொடராக வந்தபோதே படித்துள்ளேன். ரிச்சர்ட் பர்ட்டன் நல்லத்தம்பி எடுக்கும் படத்தில் நடித்து கென்னடி இறந்ததற்காக புலம்பும் காட்சியின் படப்பிடிப்பில் அமெரிக்கர்கள் கேலி செய்ய என்றெல்லாம் கதை போகிறது. அதிலும் பிசாசு முக்கண்ணன் (பூதலிங்கம்) தூள்.


கிரிதரன். வெ.:
1) வர்ணாஸ்ரமத்தின் நோக்கம் என்ன? மக்களை அவரவர் செய்யும் தொழிலுக்கேற்ப பிரிக்கும் செயல் என நினைக்கிறேன்.
பதில்: மேலோட்டமாக சரிதான். அப்படித்தான் ஆரம்பித்தது. பிறகு காலப்போக்கில் இம்மாதிரி ஆகிவிட்டது. சமூகவியல் படித்த எல்லோருமே ஒன்றை உணர்ந்திருப்பார்கள். எந்த ஒரு மக்கள் கூட்டத்தை எடுத்து கொண்டாலும் அதில் உள்ளவர்கள் வேவ்வேறு திறமைகளுடன் இருப்பதை பார்த்திருப்பார்கள். ஆக ஒரு சமூகம் நன்றாக நடக்க அவரவருக்கு நன்கு வரும் வேலையை செய்தால் முன்னேற்றம் நிச்சயம். Aldous Huxley எழுதிய The Brave New World படித்தால் நான் கூற வருவது புரியும். அதில் ஐந்து ஜாதிகள் வருகின்றன. ஆல்ஃபா, பீட்டா, காம்மா, டெல்டா, இப்ஸிலான் என்று அவற்றுக்கு பெயர். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு வேலை. அந்த ஐந்து ஜாதிகளை சேர்ந்த ஒவ்வொருவருமே தத்தம் ஜாதியின் நிலையில் திருப்தியாகவே இருப்பார்கள். ஆனால் இந்த திருப்தி காலக்கட்டத்தில் குறையும் என்பது சரித்திரம் நமக்கு புகட்டும் பாடம்.

2) அந்தந்த ஜாதியினர் குறிப்பிட்ட வேலைதான் செய்ய வேண்டும் என ஏன் ஏற்பட்டது?
பதில்: இம்மாதிரியான வரைமுறை ஒட்டுமொத்த நலனுக்காக முதலில் உருவாகியது. பிறகு பிறழ்ந்தது மனித இயற்கையால் வந்தது. ஒரு ராக்கெட் செலுத்தும் இடத்துக்கு போய் பார்த்திருக்கிறீர்களா? அங்கு பலர் பாரமான பளுக்களை தள்ளும் வேலையில் இருப்பார்கள். சிலர் கண்ட்ரோல் பேனல் முன்னால் ஏ.சி. அறையில் அமர்ந்திருப்பார்கள். பளு தூக்குபவரை கொண்டு போய் கண்ட்ரோல் பேனல் இருக்கும் ஏ.சி.அறையில் வைத்தாலோ, கண்ட்ரோல் பேனலருகில் இருப்பவரை பளு தூக்க வைத்தாலோ கெட்டது குடி. அதைத்தான் மாவோவின் கீழ் கலாச்சார புரட்சியில் மற்றும் கம்போடியாவில் Pol Pot ஆட்சியில் செய்து பார்த்ததில் நாடே சர்வ நாசம் அடைந்தது.

3) இசுலாமியர்களில் யார் வேண்டுமானாலும் குரானை கையாளலாம். ஆனால் நமது மதத்திலோ சிலரைத் தவிர பார்ப்பனருக்கு கூட வேதம் எளிதில் கிட்டாத தூரத்திலேயே உள்ளது. எனது சகோதரனின் நண்பன் வைதிகத்தை பாடமாக படிக்கிறான். அதற்காக வடமொழி கற்கிறான். மாணவர்களுக்கு எல்லா 4 வெறுமனே அவற்றை மனப்பாடமாக மட்டும்தான் கற்று தருகிறார்கள் என்றான். வேதங்களும் கற்பிப்பதில்லை என்று அறிந்தேன். மந்திரங்களின் பொருளையும் கற்று தருவதில்லையாம். இப்படி இருந்தால் ஒரு சாதாரண மனிதன் எப்போதுதான் வேதங்களின் பெருமைகளை அறிவது?
பதில்: இசுலாமியர்கள் பற்றி தெரியாது.
வேதங்கள் கடல் மாதிரி. அவற்றைக் கற்க ஒரு ஆயுள் போதாது. உங்கள் நண்பர் சேர்ந்த கோர்ஸ் சிலபசில் அவ்வளவுதான் வைத்திருப்பார்கள். அதையாவது அவர் ஒழுங்காக கற்று கொண்டு வரட்டுமே.

4) சோஷலிசம்?
பதில்: பல நூற்றாண்டுகளாக டெவலப் ஆகிக்கொண்டிருக்கும் இக்கோட்பாடு பற்றிய இக்கேள்விக்கு வரும் வியாழனுக்குள் பதிலை எதிர்பார்ப்பது ஓவரோ ஓவர்.

5) எவ்வளவு "ism"கள் உள்ளன?
பதில்: அவை எண்ணற்றவை. ஒவ்வொரு கருத்தின் ஆங்கில வார்த்தைக்கும் ism சேர்ந்தால் அது ஒரு இஸம், போதுமா? உதாரணம்: Brahmin --> Brahminism, Dondu --> Donduism and so on.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இவ்வாண்டு வியாழனில் ஆரம்பித்து திசம்பர் 31-ஆம் தேதி மறுபடியும் வியாழனில் முடிகிறது. இம்மாதிரி டோண்டு பதில்கள் பதிவோடு ஆண்டு ஆரம்பித்து அதே பதிவோடு முடியப்போவது வரும் 2015, 2026, 2037, 2043, 2054 and so on ஆண்டுகளில்தான் என்பதை நான் கூற என்னுடன் மெதுவாக ஒட்டிக் கொண்ட இந்தத் திறமையே உதவியுள்ளது!!).
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது