எபிசோட் - 75 (28.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் ஏன் திரும்பி வந்தான் என்பதை அறிய எல்லோருமே ஆவலாக உள்ளனர். சிங்காரம் அவனை கோவிலில் வைத்து கேட்கிறான். புன்முறுவலுடன் அசோக் நேரம் வரும்போது கூறுவதாக கூற அவன் சற்றே பேஜார் ஆகிறான். திருவிளையாடலில் தருமி சிவபெருமானை பார்த்து கேட்பது போல இங்கும் எதற்கெடுத்தாலும் தெய்வீகச் சிரிப்புதானா என்றும் அவன் கேட்கிறான்.
சாம்பு சாஸ்திரிகள் திரும்பவும் நாதன் வீட்டுக்கு பூஜை செய்ய வருகிறார். அசோக் சொல்லித்தான் அவருக்கு இந்த வேலை திரும்பக் கிடைத்ததாக வசுமதி கூறுகிறாள். அவரிடம் அவள் அசோக் ஏன் திரும்ப வந்தான் என்பதை அவனிடமே கேட்டு சொல்லுமாறு கூறுகிறாள். தன் பிள்ளை தங்களாத்திலேயே நிரந்தரமாக இருக்க ஏதேனும் ஸ்பெஷல் பூஜை செய்யலாமா என அவள் கேட்க, சாம்புவும் செய்யலாமே என்கிறார்.
கோவிலில் வைத்து சாம்பு அசோக்குடன் பேசுகிறார். வசுமதி அவனை இது சம்பந்தமாக கேட்குமாறு சொன்னதாக வேறு கூறுகிறார். “நீங்கள் என் குரு, உங்களுக்கு சொல்லாததா” என்று சொல்லிவிட்டு, அசோக் அவருடன் மேலே பேசுகிறான். இங்கு வாய்ஸ் ஓவர் ஆகி அவன் பேசுவது கேட்கவில்லை. ஆக, இப்போதைக்கு அது ரகசியம் என புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தான் சொன்னது அவர் மனசோடவே இருக்கட்டும் எனக் கேட்டுக் கொள்கிறான்.
அசோக் வந்தது பற்றி விசாரிக்க நீலகண்டனும் பர்வதமும் வருகிறார்கள். அவன் எங்கே என நீலகண்டன் கேட்க, மாடியில்தான் இருக்கிறான், சுயம்பாகம் செய்து கொண்டு என பதில் வருகிறது. மாடிக்கு செல்ல அங்கு அசோக் சமையல் செய்து கொண்டு இருக்கிறான். அவன் எவ்வளவு நாளுக்குத்தான் இவ்வாறு சமையல் செய்து கொண்டு இருக்கப் போகிறான் என நீலகண்டன் கேட்க, தனக்கென மனைவி வரும்வரை என அவன் கூறுகிறான்.
எங்கோ குத்தி விட்டது போல துள்ளி குதிக்கும் நீலகண்டன் வேகமாக கீழே வந்து நாதனிடம், அசோக் குண்டுக்கு மேல் குண்டாக வீசுகிறான் என பூடகமாக கூற, அவன் தீவிரவாதியாகி விட்டானா என்ன என நாதன் கேட்க, அவன் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் என நீலு கூற, நாதனும் மேலே ஓடுகிறார்.
நிஜமாகவே அவனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டதா என அவர் ஆவலுடன் கேட்க, தனது பிரும்மச்சரிய வாழ்க்கை வெற்றிகரமாக முடிந்தது என அவன் கூறுகிறான். அவன் கண் முன்னால் நாரதர் வந்து அவனோடு பேசிய காட்சி விரிகிறது. அப்போது அவன் கோவிலில் இருக்கிறான். திடீரென சன்னியாசி ரூபத்தில் வந்த நாரதரை கண்டு வணங்குகிறான். அவர் அவனுக்கு கடற்கரையில் வைத்து உபதேசம் செய்தபடி அவன் பிரும்மச்சரிய வாழ்க்கை துவங்கி ஓராண்டு பூர்த்தியாயிற்று என கூற, அவரோ அவனை பொருத்தவரை அது வெற்றிகரமாகவே முழுக்கவே பூர்த்தியானது என்கிறார். அதெப்படி ஓராண்டுக்குள்ளாகவா என அவன் கேட்க, இதில் காலம் ஒரு பிரச்சினையே இல்லை என்கிறார். அவனது தீவிரமே இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது என்கிறார். ஆன்மீக தோட்டத்தில் அவன் ஒரு குறிஞ்சி மலர் என்றும் அவர் கூறுகிறார். இனிமேல் அடுத்த கிரமமான கிருகஸ்தாஸ்ரமத்துக்கு செல்ல வேண்டும் என்றும், அவன் தனது வீட்டுக்கு திரும்பி பெற்றோர்களை மகிழ்விக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அவ்வாறே செய்வதாக அசோக் கூற, அவர் சட்டென மறைந்து போகிறார்.
இங்கு டோண்டு ராகவன். அசோக் ஒரே ஆண்டில் பிரும்மச்சரியத்தை பூர்த்தி செய்ததை புரிந்து கொள்ள முடிகிறது. சுண்டைக்காய் பேர்வழியான டோண்டு ராகவனே அதி வேகத்தில் பிரெஞ்சு ஜெர்மன் கற்று, குறைந்த காலத்தில் எல்லா பரீட்சைகளையும் எழுத முடிந்த போது, வசிஷ்டரான அசோக்குக்கு இதெல்லாம் இடது கை விளையாட்டுதானே.
மனிதனுக்கு நான்கு கிரமங்கள் உண்டு. அவையாவன பிரும்மச்சரியம், கிருகஸ்தாஸ்ரமம், வனப்பிரஸ்தம் மற்றும் சன்னியாசம் என அசோக் நாதனிடம் கூறுகிறான்.
வனப்பிரஸ்தமா என சோவின் நண்பர் கேட்க, அவரோ முதலில் அசோக்கின் உச்சரிப்பு தவறு என்றும் அது வானப்பிரஸ்தம் என்றும் கூறுகிறார். பிறகு எல்ல கிரமங்களையும் ஒவ்வொன்றாக வர்ணிக்கிறார். சுவாரசியமான இந்த வர்ணனைகளை வீடியோவில் காண்க.
(தேடுவோம்)
எபிசோட் - 76 (29.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் பேசுகிறான். நான்கு கிரமங்களையும் கூறி அவன் இப்போது இரண்டாம் கிரமத்துக்கு வந்துள்ளதாக கூறுகிறான். அவனிடம் அவனுக்கு வழிகாட்டியாக முதலில் வந்த சாமியாரே இதை கூறியதாகவும், அவர் சொல்லித்தான் தான் வீட்டுக்கே வந்ததாகவும் அவன் கூற, இதை ஏன் முதலிலேயே கூறவில்லை என வசுமதி கேட்கிறாள். அவன் வெறுமனே புன்னகை பூக்கிறான். அப்போ திருமணத்துக்கு வரன் பார்க்கலாமா என நாதன் கேட்க, பிரயத்தினம் பண்ணிப் பாருங்கோ என அவன் மையமாகக் கூறுகிறான். எல்லோரும் துள்ளலுடன் கீழே வருகின்றனர். சமையற்கார மாமி ஸ்வீட் செய்திருக்கிறாள். எல்லோருமே சந்தோஷமாக அதை எடுத்து கொள்கின்றனர்.
நாதனின் உறவினர் எல்.ஐ.சி. ஏஜெண்டின் மனைவி தன் தங்கை காதம்பரி சென்னைக்கே வரப்போவதாக காதம்பரியின் தோழி பிரியாவிடம் ஃபோனில் கூறுகிறாள். காதம்பரி ஒரு அல்ட்ரா மாடர்ன் பெண். அவள் பி.பி.ஏ. முடித்து விட்டு எம்.பி.ஏ. செய்யலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறாள். அவளை அசோக்குக்கு அவள் அக்கா சிபாரிசு செய்ய, அந்தக் குடுமியா, எனக்கு சரிப்பட்டு வராது என அவள் எடுத்த எடுப்பிலேயே மறுக்கிறாள். பிறகு அவளை சரிக்கட்டி பிரியாவிடம் அசோக் பற்றி விசாரித்து மேல் விவரங்கள அறிந்து கொள்ளுமாறு கூறுகிறாள்.
ஏன் சார் இந்தப் பெண் இப்படி மாடர்னாக இருக்கிறாள், அவள் போய் குடுமி அசோக்கை திருமணம் செய்ய ஒத்துக் கொள்வாளா என சோவின் நண்பர் கேட்க, சிலர் மாட்டார்கள், ஆனால் வேறு சிலர் ஒப்புக் கொள்வார்கள் என கூறும் சோ இப்போது அகத்தியர் கதையை கூறுகிறார். உயரத்தில் குறைவாகவும், அவ்வளவு அழகும் இல்லாத அகத்தியர் லோபமுத்திரை என்னும் அரசிளங்குமரியை பெண்கேட்டு அவள் தகப்பன் அரசனிடம் வர, அவனோ தயங்குகிறான், தனது அழகான மகளுக்கு இப்படி ஒரு அழகில்லாதவர் மாப்பிள்ளையாவதா என. லோபமுத்திரையோ அகத்தியரின் பெருமைகளை உணர்ந்தவள். அவர் செய்த பல அற்புதங்களை அறிந்தவள், ஆகவே அவரை மணம் செய்து கொள்ள மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறாள்.
அகத்தியரின் பெருமை பற்றி மகாகவி பாரதியாரே,
ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்
என்று பாடுகிறார்.
பிரியாவுடன் அசோக் பற்றி விசாரிக்க காதம்பரி அவள் வீட்டுக்கு செல்கிறார். பரஸ்பர க்ஷேமலாபங்களை விசாரித்து கொள்கின்றனர்.
கேட்டரர் மனைவியிடம் காதம்பரியின் அக்கா வந்து தனது நாத்தனார் கௌரிக்கு சினிமாவில் பாட சான்ஸ் வந்ததால் இப்போதைக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை எனக்கூறுகிறாள். கேட்டரர் மனைவியிடம் பட்டாபிக்கு ஆர்த்தியை பெண் பார்த்ததும் கௌரிக்கு தெரிந்து விட்டது என்றும், அது வேறு அவலது ஆட்சேபணைக்கு காரணம் எனவும் கூறுகிறாள். சாம்பு வீட்டார்தான் இதை அவளுக்கு எழுதிப் போட்டிருக்க வேண்டும் என பட்டாபியின் அன்னை கோபப்பட, முக்கால்வாசி பட்டாபியே அதை செய்திருப்பான் என காதம்பரியின் அக்கா கூறிவிட்டு அப்பால் செல்கிறாள்.
பேசாமல் ஆர்த்தியையே பட்டாபிக்குப் பார்க்கலாம் என கேட்டரர் மனைவி கூற, எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு அவர்களுடன் பேசுவது என கேட்டரர் ஆட்சேபிக்கிறார். வைர நெக்லஸ் என்னவாயிற்று என அவர் கிண்டலுடன் கேட்க, ஆர்த்தி கட்டிய புடவையுடன் வந்தால் போதும் என அவள் கூறிவிட்டு, அவரே சாம்பு வீட்டுக்கு ஃபோன் செய்து பேச வேண்டும், தனக்கு சங்கடமாக இருக்கிறது என்றுக் கூறுகிறார். அவருடன் சாம்புவுடன் பேசி அவரிடம் மன்னிப்பு கோருகிறார். வைர நெக்லேஸ் எல்லாம் வேண்டாம் எனவும் கூறி விடுகிறார்.
தனது மகன் ஆர்த்தியுடன் பேசி பேசாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆலோசனை கூற, அந்த உத்தமப் பெண்ணோ அதற்கு சிறிதும் இடம் கொடுக்காது, தனது பெற்றோர் மனதை குளிரச் செய்ததைக் கூறி, அப்படிப்பட்ட குலவிளக்கு தனக்கு மருமகளாக வர தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். தனது மனைவியின் பேராசைக்கு நல்ல பாடம் கிடைத்தது என அவர் மேலும் கூற, அவள் அவ்விடத்திலிருந்து பைய நழுவுகிறாள்.
சாம்பு வீட்டில் எல்லோரும் மகிழ்கின்றனர்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
11 hours ago