12/13/2010

சில அரதல் பழசான மொக்கைக் கதைகள்

நான் பல இடங்களில் பல தருணங்களில் படித்த கதைகளை வைத்து இங்கே மொக்கை போட ஒரு முக்கியமான காரணம் உண்டு. அது என்னவென்பதைக் கடைசியில் கூறுகிறேனே.

கதை-1: தவளை உருவில் வந்த ராஜகுமாரி
அந்த சோல்ஜருக்கு அன்று காலையிலிருந்தே ஒன்றும் சரியாக அமையவில்லை. யார் முகத்தில் விழித்தோம் என்று பார்த்தால், அடச்சே அவன் தன் முகத்தைத்தான் கண்ணாடியில் பார்த்து தொலைத்திருக்கிறான்.

நொந்து போன அவனுக்கு ஒரே ஆறுதல் ராணுவ முகாமில் தங்கியிருந்த அவனுக்கு அன்று விடுமுறை. சரி சினிமாவுக்குப் போகலாம் என வெளியில் வந்து முயற்சித்தான். அவன் அதிர்ஷ்டம் அன்றைக்கென்று பார்த்து விஜய் நடித்த வில்லு, குருவி, அழகிய தமிழ்மகன் போன்ற படங்களுமே ஹவுஸ்ஃபுல். பிறகுதான் அவனுக்கு அன்று காணும் பொங்கல் என்பது நினைவுக்கு வந்தது.

சரி கடற்கரைக்கு போய் அடையாரின் முகத்துவாரத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம் என நினைத்தான். அவ்வாறே சென்று, புழுவை முள்ளில் பொருத்தி, தக்கையை நதியின் கரையிலிருந்து தண்ணீருக்குள் வீசினான். சில மணி நேரங்கள் கழிந்தன. ஒன்றும் சிக்கவில்லை. அடச்சே என முயற்சியை கைவிட நினைத்தபோது திடீரென தக்கை தண்ணீருக்குள் இழுக்கப்பட்டு மறைந்தது. விறுவிறென தூண்டில் கயிற்றை சுற்ற அவன் கையில் கடைசியில் ஒரு குண்டு மீன் கிடைத்தது என்றுதான் எழுத ஆசை. ஆனால் கிடைத்ததோ தவளை ஒன்று.

இது வேற எனச் சொல்லிக் கொண்டே அதை கையில் பிடித்து தரையில் வீசி அடித்துக் கொல்ல அவன் முயன்றான். அப்போது அத்தவளை, “மானிடனே நில், நான் ஒரு ராஜகுமாரி. என்னை ஒரு சூனியக்கார கிழவி சபித்து தவளையாக்கி விட்டாள்” என்றது. இது என்ன புதுக்கதை என வியந்த அவனிடம் அது மேலும் கூறியதாவது. தான் மிக மிக அழுது சூனியக்காரியிடம் தன்னை மீண்டும் அரச குமாரியாக்க வேண்டும் எனக் கேட்க, அவளோ அதை உடனே செய்ய முடியாது என்றும், ஓரிரு நூற்றண்டுகளுக்கு பிறகு, ஒரு போர் வீரன் கையில் ராஜகுமாரி மாட்டுவாள் என்றும், அவன் அவளை தன் இருப்பிடத்துக்கு அழைத்து சென்று, தன் கட்டிலில் தலையணை மேல் படுக்க வைத்து, இரு சொட்டு அடையாறு நதி நீரை விட்டால், இரவு 12 மணிக்கு தான் ராஜகுமாரியாக மாறமுடியும் எனக் கூறியதாகக் கூறினாள்.

அத்தவளை மேல் இரக்கம் வந்தது போர்வீரனுக்கு. ஆகவே ஒரு பாட்டிலில் அதை தண்ணீர் நிரப்பி, அதற்குள் அத்தவளையை போட்டு தன் பேரக்சுக்கு வந்தான். மற்ற சோல்ஜர்கள் கண்ணில் படாமல் நைட் விசில் அடிக்கும்வரை காப்பாற்றினான். எல்லோரும் விளக்கை அணைத்ததும், அவன் தவளை சொன்ன மாதிரி செய்தான்.

என்ன ஆச்சரியம், சரியாக இரவு 12 மணிக்கு அவனருகே ஒரு பேரழகி படுத்திருந்தாள்.

மேலே நடந்ததை அப்படியே அந்த போர் வீரன் பின்னால் கோர்ட் மார்ஷல்காரர்களிடம் சொல்ல, யாருமே அவனை நம்பவில்லை. அதான் நான் எற்கனவேயே சொன்னேனே, அந்த சோல்ஜருக்கு அன்று காலையிலிருந்தே ஒன்றும் சரியாக அமையவில்லைதான்.


கதை-2: ஒன்றுமே மாறவில்லை
தான் படித்து, தேர்வு பெற்று சென்ற அந்த மிலிட்டரி அகாடெமிக்கு அந்த படை தளபதி 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விசிட்டுக்கு வந்திருந்தார். தனது பழைய அகாடெமியைப் பார்த்தது அவருக்குள் பல ஆட்டோகிராஃப் நினைப்புகளை தூண்டி விட்டது. “அதே அகாடெமி, மாறவேயில்லை” என்றார். பிறகு தான் படித்த வகுப்பறைக்கு சென்றார். அதே வகுப்பறை என இன்னொரு முறை ஃபீலிங்ஸ் ஆனார். அப்படியே தான் இருந்த ஹாஸ்டலுக்கு சென்றார். அதே ஹாஸ்டல் என்றார். காரிடாரில் நடந்தார் (அதே காரிடார்). அறை 208 அவர் அங்கு படித்தபோது தங்கியிருந்த அறை. அதே 208-ஆம் எண் அறை எனக் கூறியவாறு சட்டென கதவைத் திறந்து உள்ளே சென்றால், அங்கு இரு கட்டிலகள். இரண்டு மாணவர்கள் இவரைப் பார்த்து பேந்தப்பேந்த விழித்தனர். அதே கட்டில்கள், அதே மாணவர்கள் என்றவாறே அறைக்குள் பார்த்தால், அந்த ஆளுயர கப்போர்ட் கண்ணில் பட்டது. அதே கப்போர்ட் என விதந்தோதியவாறு அதைத் திறந்தால், உள்ளே அரைகுறை ஆடைகளுடன் ஒரு ஃபிகர் நின்று கொண்டிருந்தது. அதே ஃபிகர் என இவர் வியப்புடன் கூற, மாணவர்களில் ஒருவன், “சார் அது எனது சகோதரி” எனக்கூற, “அதே பொய்” எனக்கூறி இன்னமும் அதிகமாகவே ஆச்சரியப்பட்டார் அந்தப் படை அதிகாரி.

இப்போ மெனக்கெட்டு ஏன் இந்த பழைய மொக்கைகளைப் போடணும் எனச் சீறுகிறான் முரளி மனோகர்.

என்ன செய்வது, முரளி? மொக்கை போட்டு கொஞ்ச நாளாச்சில்லையா? அதனால்தான். லூஸ்ல விடு மாமு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

பினாத்தல் சுரேஷ் said...

/மொக்கை போட்டு கொஞ்ச நாளாச்சில்லையா?/

2010 - 275, December - 18 ன்னு சொல்லுது சைட்பார்.. அபாண்டமா பேச ஒரு அளவே இல்லையா?

dondu(#11168674346665545885) said...

@ராம்சுரேஷ்
திசம்பர் 18 இன்னும் வரவேயில்லையே. நான் திசம்பர் 3-க்கு நீஈஈண்ட பத்து நாட்களுக்குப் பிறகு இப்போத்தான் மொக்கை போடறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது