விக்கிலீக்ஸ் பற்றி பதிவுகள் போடும்போதும் (இந்தச் சோதனையில் நீங்க மட்டும் தேருவீங்கன்னு நினைக்கிறீங்களா மேடம், ஊரே சிரிச்சா கல்யாணம்னு சொல்லுவாங்க), அதன் பிறகும் எனது மனம் ஓவர்டைமில் வேலை பார்க்க ஆரம்பித்தது.
தாம் எழுதுவது வெளியில் தெரிய முப்பது ஆண்டுகளாவது குறைந்த பட்சமாக என்னும் எண்ணத்தில் தூதரக அதிகாரிகள் அந்தரங்க ரிப்போர்டுகள் எழுதும்போது தாங்கள் போஸ்டிங்கில் இருக்கும் தேசங்களின் முக்கிய நபர்கள பற்றி தங்களது எண்ணங்களை வெளிப்படையாகவே எழுதுவார்கள் (பலான தேசத்தின் பிரதம மந்திரி கையாலாகாதவர் என்ற ரேஞ்சில் கூட இருக்கலாம்). ராஜரீக நாசுக்குகள் எல்லாம் அங்கே செல்லாது (diplomatic niceties)’
ஆனால் விக்கிலீக்ஸ் வெளியீடுகள் அவர்களை ஒரு மோசமான நிலைக்குத் தள்ளி விட்டன. இப்போது என்ன செய்வது என முழிக்கும் அமெரிக்கா முதலிலிருந்தே மற்ற அரசுகளை இந்த விஷயத்தில் ரொம்ப அலட்டிக் கொள்ள வேண்டாம் எனக் கூறி டேமேஜ் லிமிட்டிங் செயல்பாட்டில் இறங்கியது. சம்பந்தப்பட்ட அரசுகளுக்கும் வேறு வழியில்லை, அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அந்த அரசுகளின் தூதர்களும் தத்தம் அரசுக்கு இம்மாதிரித்தான் அமெரிக்கத் தலைவர்களை பற்றி எழுதியிருப்பார்கள் [க்ளிண்டன் மோனிகா விவகாரம் பலான விவரங்களுடன்:)))]. அது எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம், விக்கிலீக்ஸ் இல்லாவிட்டால், வேறு ஏதாவது லீக்ஸ். அதை விட முக்கியமான காரணம் அமெரிக்கர்களை விரோதித்துக் கொள்ள யாரும் தயாராக இல்லை, பிறகு உதவிக்கு எங்கு போவதாம்.
ஆனால் எனது மனது ஓவர்டைம் போட்டு வேலை செய்தது வேறு விஷயம். மேலே சொன்ன விவரங்கள் தெரிவது மற்றவர் மனதை படிக்கும் அளவுக்கு சீரியசானது. அது மட்டும் முடிந்தால் என்ற கற்பனை ஒவ்வொருவருக்கும் பல சமயங்களில் வந்திருக்கும். எனக்கே அக்கற்பனை வந்திருக்க்கிறது.
அப்படி நிஜமாகவே நடந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும்? கீழே சந்திரமுகி படத்தில் வந்த க்ளிப்பிங் போல இருக்கலாம்.
அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஒரு படத்தில் விவேக்குக்கு மின்சார ஷாக் அடித்து அவருக்கு அந்த சக்தி வருவதை ஒரு படத்தில் காமெடியாகக் காட்டியிருப்பார்கள். ஆனால் சீக்கிரமே மனிதர் நொந்து விடுவார். அவரது பாட்டியே தாத்தாவுக்கு பாயசத்தில் விஷம் வைத்துக் கொன்றது தெரியவரும். பேரனுக்கு தெரிந்தாயிற்றே, சரி அவனுக்கும் பாயாசம் போட வேண்டியதுதான் என பாட்டி நினைக்க விவேக் பதறியடித்து அங்கிருந்து ஓடுவார். படத்தின் பெயரை யாராவது சொல்லுங்கப்பூ.
சினிமா அத்தாரிட்டி கேபிள் சங்கரைக் கேட்டால் அவருக்கும் நினைவில்லை ஆனால் மெல் கிப்சன் நடித்த What women want என்னும் ஆங்கிலப் படத்திலிருந்துதான் இந்த விவேக் காமெடி டிராக் வந்தது என்று மட்டும் கூறினார்.
இன்னொரு படத்தில் சோ தான் மற்றவர் பார்வையிலிருந்து மறைந்து அவர்களை வேவு பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார். அது பலித்து விடும். அவரது மனைவி நீலுவுடன் காதல் டூயட் பாடுவதைக் கண்டு பதைபதைப்பார். அவரால் பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. ஆக இந்த சக்தி வருவது 100% நல்லது எனக்கூற முடியாது.
அதே மாதிரித்தான் பூர்வ ஜன்ம நினைவுகளும். பூர்வ ஜன்மம் என்று உண்டா இல்லையா என்னும் கேள்விக்குள் போக நான் விரும்பவில்லை. அதே சமயம் அது உண்டு என்றால் அதன் நினைவுகள் வராமல் போவதே நலம். பகவத் கீதையில் கண்ணன் கூறுகிறான், “ஹே அர்ஜுனா, நீயும் நானும் சேர்ந்து எண்ணற்ற பிறவிகள் இதற்கு முன்னால் எடுத்துள்ளோம். நமக்குள் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் அவை ஒன்றும் உனக்கு நினைவிலில்லை. ஆனால் அவற்றில் ஒன்றையும் நான் மறக்கவில்லை”. கண்ணன் கடவுள், அது அவருக்கு கட்டிவரும். ஆனால் ஒரு மனிதனுக்கு அவை நினைவிலிருந்தால் ரொம்ப போராக இருக்கும் இல்லை?
இப்போதே இணைய இணைப்பு சில சமயம் கிடைக்காது அழும்பு செய்யும்போது அதன் ஒரு காரணம் முந்தைய அமர்வின் நினைவுகள் கணினியில் உள்ளன என்பதே. ஆகவே மீண்டும் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் புதிதாக டைப் அடித்து மேன்யுவலாக லாகின் செய்யச் சொல்வார்கள். ஜிமெயிலிலும் முந்தைய அமர்வுகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளனவா எனப் பார்த்து அவற்றை சைன் அவுட் செய்வது முக்கியமாகிறது.
இதற்கே அப்படியென்றால் மனித வாழ்க்கை எத்தனை முக்கியம்?
அதே போல எல்லா துயரங்களும் காலப்போக்கில் மறதி என்னும் போர்வையால் மூடப்பட்டு மனிதன் மேலும் வாழ்க்கையை தொடருகிறான். அதைத்தான் கவியரசு கண்ணதாசன் நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்று பாட்டாகப் பாடினார்.
இப்போது முரளி மனோகர் ஒரு கேள்வி கேட்கிறான். அதாகப்பட்டது நான் ஏன் சமீபத்தில் 1952-ல் இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது நடந்த நிகழ்ச்சியையெல்லாம் எழுதி எல்லோரையும் டென்ஷனாக்க வேண்டும் என்று. அதற்கு முன்னால் எழுத்தாளர் கடுகு அவர்கள் அதே கேள்வியைக் கேட்டார். அதாவது எல்லா விஷயங்களுமே நினைவில் இருந்தால் பல துன்பகரமான நிக்ழ்வுகள் மன அமைதியைக் கெடுக்குமே என்று அவர் வினவினார். நான் அதற்கு அந்த நிகழ்வுகள் பின்னோக்கி பார்க்கும் போது ஒரு பெர்ஸ்பெக்டிவ் கிடைத்து விடுகிறது, அவை மாற்றப்பட முடியாதவை என்பதை நான் உணர்வதால் துன்பம் ஏதும் இல்லை என்றும் கூறினேன்.
அதே சமயம் நான் செய்த தவறுகளையும் மறப்பதில்லை. ஆகவே அவற்றைத் மீண்டும் செய்யாமல் தவிர்க்க இயலுகிறது. நல்ல நினைவுகள் எப்போதுமே இன்பம் தருவன. ஆகவே என்னைப் பொருத்தவரை இந்த நினைவுத்திறன் ஒரு வரப்பிரசாதமே.
இப்போது பிறர் மனதை படிக்கவியலும் சக்தி பற்றி கடைசியாக ஒரு வார்த்தை. அப்படியே அது வந்து விடுகிறது என வைத்துக் கொள்வோம். என்னைப் பொருத்தவரை அச்சக்தி எனக்கு இருப்பதை யாரிடமும் மூச்சுக் கூட விடமாட்டேன். மேலும் அதே சமயம் என்னைப் பற்றி மற்றவர்களது உள் மனதில் உள்ள விருப்பு வெறுப்புகள் என்னை பாதித்தாலும் அவற்றையும் அறிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டேன். அப்போதுதான் மன அமைதியுடன் இருக்கவியலும்.
நீங்கள் என்ன செய்வீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
9 hours ago
2 comments:
//இப்போது பிறர் மனதை படிக்கவியலும் சக்தி பற்றி கடைசியாக ஒரு வார்த்தை. அப்படியே அது வந்து விடுகிறது என வைத்துக் கொள்வோம். என்னைப் பொருத்தவரை அச்சக்தி எனக்கு இருப்பதை யாரிடமும் மூச்சுக் கூட விடமாட்டேன். மேலும் அதே சமயம் என்னைப் பற்றி மற்றவர்களது உள் மனதில் உள்ள விருப்பு வெறுப்புகள் என்னை பாதித்தாலும் அவற்றையும் அறிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டேன். அப்போதுதான் மன அமைதியுடன் இருக்கவியலும்.
நீங்கள் என்ன செய்வீர்கள்?//
பலர் செய்வது : " திறுபாச்சியை எடுப்பதுதான் ".
நான் செய்வது : " அமைதி காண் "
விவேக்கின் காமெடி வரும் படத்தின் பெயர் "விசில்".
Post a Comment