மாம்பலத்தில் இருந்த அப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் அந்த 8 வயது சுட்டிப்பெண்ணுக்கு அன்று காலையிலிருந்தே ஏதோ இனம் புரியாத அச்சம். காரணம் அவளது 6 வயது தம்பி. அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் அவன் முக லட்சணம் முந்தைய நாள் மாலையிலிருந்தே சரியாக இல்லாமல் திருட்டு முழி விழித்துக் கொண்டிருந்தான். அக்காவுடன் ஒன்றாக செல்வதையே அவமானம் என சாதாரணமாகக் கருதி, அவளிடமிருந்து பல அடிகள் தள்ளியே வீட்டுக்கு செல்பவன், அன்று என்னவோ சமத்தாக அவள் அருகிலேயே நடந்தான்.
என்னவோ சரியில்லையே, எலி ஏன் அம்மணமா போறதுன்னு அப்பெண் அப்போதே யோசித்தாள். ஆனால் கல்லுளி மங்கனான அவள் தம்பி அவள் கேள்வி எதற்கும் பதில் சொல்லவில்லை. தி.நகர் ராமனாதன் சாலை முக்கில் இருக்கும் பள்ளியில் இருந்து வெளியே வந்து அதே சாரியிலேயே நடந்து டாக்டர் அன்னங்கராச்சாரியார் நர்சிங் ஹோமுக்கு எதிரில் தெருவை கடந்து ராமசாமி தெரு வழியாக தண்டபாணி தெருவில் உள்ள வீட்டுக்கு செல்லும் வழமையான முறைக்கு மாறாக, உஸ்மான் சாலை வந்ததுமே அப்படியே அத்தெருவை குறுக்கே கடந்து சரோஜினி சாலை வழியாக செல்லலாம் என்று மட்டும் கூறிவிட்டு, 12-ஆம் நம்பர் பஸ் வருவதைக் கூட கவனிக்காது குடுகுடுவென ஓடி உஸ்மான் சாலையைக் கடந்து சரோஜினி சாலையில் நுழைந்து சென்றான். இவளும் வேறு வழியின்றி அவன் பின்னாலேயே செல்ல வேண்டியதாயிற்று.
அன்று மாலையும் இரவிலும் அவள் அருகே வந்து அவனிடம் என்ன விஷயம் எனக் கேட்க முயன்றதையும் தவிர்த்து சமத்தாக அம்மாவின் அருகில் போய் நின்று கொண்டான் (அவன் அம்மா செல்லம்). அவள் மட்டும் என்ன அப்பா செல்லம்தானே, இருந்தாலும் அப்பாவிடம் தம்பியை போட்டுக் கொடுக்க விடாமல் அவளது தம்பிப் பாசம் தடுத்தது.
இதையெல்லாம் எண்ணியவாறே வகுப்பில் அமர்ந்திருந்த அச்சுட்டிப் பெண் கிளாசுக்கு வெளியே இருந்த விளையாட்டு மைதானத்தின் மறுபுறத்தில் இருந்த தன் தம்பியின் வகுப்பை ஒரு பார்வையிட்டாள். இரண்டாம் வகுப்பு டீச்சர் நெட்டைக் கமலா வகுப்பிலிருந்து வெளிவருவதை சுவாரசியமின்றி பார்த்த அப்பெண் அடுத்து நடந்ததைப் பார்த்து நடுங்கிப் போனாள். இரண்டாம் வகுப்பு மாணவியான மூக்குஒழுகி மைதிலி (ஆறு வயது), டீச்சரால் அனுப்பப்பட்டு மைதானத்தை கடந்து நான்காம் வகுப்பை நோக்கி வரலானாள்.
இரண்டே எட்டுகளில் நான்காம் வகுப்புக்கு வந்த அப்பெண், நான்காம் வகுப்பு டீச்சர் சாவித்திரியைப் பார்த்து, “ராஜலச்சுமியை டீச்சர் கூப்பய்யா” என மழலை மறையாத குரலில் கத்தி விட்டு வேகமாக இரண்டாம் வகுப்புக்கு திரும்பினாள். “ராஜி, போய்ப் பாரம்மா, வழக்கம் போல உன் தம்பி வம்பை இழுத்து விட்டுண்டுட்டான் போல இருக்கு” என அனுதாபத்துடன் அச்சுட்டிப் பெண்ணிடம் கூற, அவளும் விதியை நொந்து கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கு கிளாஸ் டீச்சராக இருந்த அதே நெட்டைக் கமலாவிடம் போய் நின்றாள்.
“ராஜி, நீயே பாரு. நீ எவ்வளவு சமத்து. இங்கே படிச்ச ஒவ்வொரு வகுப்பிலும் காண்டக்டுல முதல் பரிசு வாங்கியிருக்கே. உன் தம்பி எப்படி இவ்வளவு துஷ்டனானான்? அவன் என்ன பண்ணியிருக்கான் பாரு” எனக்கூறி டாக்டர் அன்னங்கராச்சாரியாரின் பேரன் டி. ஏ. ரங்கநாதனைக் காட்டினாள். சிவந்திருந்த அவன் முகம் கண்ணீரால் நிரம்பியிருந்தது. வலது கன்னத்தில் சந்திரப்பிரபை போன்ற வடிவத்தில் நகத்தால் கிள்ளிய அடையாளம். “நேத்து மத்தியானமே உன் தம்பி இதை பண்ணியிருக்கான். ரங்கநாதனும் உடனேயே அழுதுக் கொண்டே வீட்டுக்கு போய் விட்டான். இப்போத்தான் விஷயம் வெளியே வந்திருக்கு” என டீச்சர் கூறினாள்.
அப்பெண்ணின் தம்பியோ இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்னும் முகபாவத்துடன் நின்று கொண்டிருந்தான். அச்சுட்டிப் பெண்ணுக்கு இப்போதுதான் தன் தம்பி முந்தைய நாள் மாலை அன்னங்கராச்சாரியாரின் நர்சிங் ஹோம் அருகே செல்வதைத் தவிர்த்ததின் காரணம் புலப்பட்டது. என்ன செய்வது, தம்பி சார்பில் எல்லோரிடமும் அவள் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. என்னதான் படுத்தினாலும் நெட்டைக் கமலாவின் ஃபேவரைட் மாணவனானதால் அவள் தம்பி ஓரிரு ஸ்கேல் அடிகளுடன் தப்பித்தான் (டீச்சர் கையிலிருந்த ஸ்கேல் வேகமாக அவன் அருகில் வந்ததுமே அதன் ஃபோர்ஸ் குறைக்கப்படுவது அவனுக்கு மட்டும்தான் தெரியும்)
இதெல்லாம் நடந்து 58 ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் அந்தச் சுட்டிப் பெண் “இம்மாதிரியெல்லாம் என்னைப் படுத்தினாயேடா டோண்டு” எனப் பெண்களுக்கே உரித்தான ஞாபகசக்தியுடன் தன் தம்பியிடம் கூறுவது வழக்கமாகப் போயிற்று.
என்னை மன்னித்துவிடு அக்கா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
9 hours ago
10 comments:
சகா அந்த சுட்டி பையன் நீங்கதான?
@பொன் கார்த்திக்
இது என்ன கேள்வி சீதைக்கு ராமன் சித்தப்பாங்கர ரேஞ்சுக்கு?
அந்த துஷ்டப் பையன் இந்த டோண்டு ராகவனேதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எல்லாம் சரி.எலி அம்மணமா ஓடாம எப்ப டிரஸ் போட்டுண்டு ஒடித்து?
@தமிழன்
இந்தச் சொலவடையில் அம்மணம் என்பது பாதுகாப்பின்றி இருப்பதாகும். எலி பூனை எதிரே ஓட, பூனையோ என்னடா இது தைரியமாகப் போகிறதே என்பதைச் சற்றும் யோசியாது அதை நோக்கி கவனமில்லாது ஓடி நாயிடம் அகப்பட்ட கதைதான் அந்தச் சொலவடை கூறுவது.
ஆனால் இப்பதிவில் அதன் பொருள் சோழியன் குடுமி சும்மா ஆடுமா எனவும் பொருள் தரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த அருமையான நிகழ்வு நினைவை அழகா சொல்லியிருக்கிறீர்கள்..
பால்ய வாண்டுத்தனத்துக்கு நினவுகள் செல்வதை தவிர்க்க முடியவில்லை..
"12-ஆம் நம்பர் பஸ் வருவதைக் கூட கவனிக்காது குடுகுடுவென ஓடி உஸ்மான் சாலையைக் கடந்து.."
எதிரில் என்ன வந்தது என கவனிக்கவில்லைதானே, எப்படி அது 12 நம்பர் என தெரிந்தது? இம்பாசிபெள். Contradictory
நீங்க சொல்லும் தெருவெல்லாம் என்னுடைய ஸ்டோம்பிங் க்ரௌண்ட். அண்ணங்ராசாரி என் ஃபேமிலி டாக்டர். அப்போதெல்லாம் , அந்த தெருக்கள் விளையாடுபவையாக இருக்கும். இப்பத்தான் கால் வைக்கவே இடம் இல்லை.
விஜயராகவன்
//
எதிரில் என்ன வந்தது என கவனிக்கவில்லைதானே, எப்படி அது 12 நம்பர் என தெரிந்தது? இம்பாசிபெள். Contradictory//
நீங்கள்தான் சரியாகப் படிக்கவில்லை. பதிவின் நிகழ்வு அந்தச் சுட்டிப்பெண் ணின் பார்வையிலிருந்து கூறப்படுகிறது.
என் அக்காதான் என்னிடம், “அதான் நீ 12-ஆம் நம்பர் பஸ் வருவதைக்கூடப் பார்க்காது உஸ்மான் ரோடை கிராஸ் பண்ணியா குண்டா” என்று பிறகு கேட்டாள்.
பை தி வே இந்த விஷயம் நடந்தது சமீபத்தில் 1952-ல் அப்போது 9, 10, 11, 12 மற்றும் 13 ரூட் பஸ்கள் உஸ்மான் ரோட் வழியாகத்தான் வந்து அதே தெருவில் உள்ள டெர்மினசில் நிற்கும். அக்காலகட்டத்திலேயே மாம்பலத்திலே அதிக டிராஃபிக் உள்ள இடம் அத்தெருவும் பாண்டி பஜாரும்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாவம் டி ஏ ரங்கநாதன்.
ஹஹாஹ் .. எல்லோருமே ஒரு கட்டத்தில் அப்படித்தானே இருந்து இருப்போம்
Your ending of the story with your dear Akka touched a raw nerve in me too. Yes, ultimately, we remember only our mutual love and affection towards our parents, brothers and sisters and our other loved ones. Recently, my elder sister's husband of 75 years passed away, and I flew into India just to be with my sister at this hour. We didn't have to say anything to each other, but we understood our deep affection. No need for words in such moments. Both of us were moved.
Post a Comment