12/20/2010

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம்

நான் சமீபத்தில் 1955-56 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு தேர்வில் மகாத்மா காந்தியைக் கொன்றது யார் என்ற ஒரு வார்த்தையில் பதிலளிக்க வேண்டிய கேள்வி வந்தது. அதன் விடையை பாடத்தில் படித்திருந்தாலும் உப்பிலிக்கு காந்தியைக் கொன்றவரின் பெயர் அச்சமயம் பார்த்து மறந்து தொலைத்தது.

ஆனால் வேறு விஷயம் அரைகுறையாக நினைவுக்கு வரவே, மகாத்மா காந்தியைக் கொன்றது ஒரு வயதான நபர் என எழுதித் தொலைத்தான். மதிப்பிடப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களுக்கு வினியோகிக்கும் சமயம் ஆசிரியர் ரங்காராவ் அன்றைக்கென்று மழமழவென சவரம் செய்து வந்திருந்தார். ஆகவே அவர் கோபத்துடனேயே இருப்பார் என்பது மாணவர்களது சரியான அனுமானம்.

அப்படிப்பட்டவர் “உப்பிலி எழுந்திரு” என கர்ஜிக்க, உப்பிலிக்கு சர்வநாடியும் ஒடுங்கிற்று. “மகாத்மா காந்தியைக் கொன்றது யார்” என அவனிடம் முழு வகுப்பில் எல்லோருக்கும் முன்னால் கேள்வி கேட்க, தலைக்குமேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன என தெளிந்த உப்பிலி, அசட்டுத் துணிச்சலுடன் “கோட்ஸே சார்” என்று கூற, “பின்னே ஏன் காந்தியைக் கொன்றவர் ஒரு வயதானவ்ர் என எழுதினாய்” என ரங்காராவ் கர்ஜித்தார்.

உப்பிலி பவ்யமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு, “அப்படித்தான் புத்தகத்தில் போட்டிருக்கு” என்று கூற, எல்லா மாணவர்களுக்கும் ஒரே திகைப்பு. உப்பிலி மேலும் பவ்யமாகக் கூறலானான். “சார் புத்தகத்தில் போட்டிருக்கு சார், ‘மகாத்மா காந்தியை 1948, ஜனவரி 30-ஆம் தேதி மாலை கோட்ஸே என்கிற கயவன் சுட்டுக் கொன்றான்’ என்று” கூறினான்.

அடுத்த நிமிடம் ரங்காராவ் சார் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தார். “அடே அசடு கயவன்னாக்க கிழவன்னு அர்த்தம் இல்லை, சரி உட்கார்” எனக்கூறிவிட்டு, கயவன் என்றால் கெட்டவன், தீயவன் என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.

இப்போது எனது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். கிழவனை சரியாக உச்சரிக்காமல் ஒரு பெரிய கோஷ்டியே கெயவன் என்றும், கியவன் என்றும், கிளவன் என்றும் கூறிவரும் நிலையில் அப்பாவி உப்பிலி மட்டும் கயவனும் கிழவனே என முடிவுக்கு வந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

இதுவாவது பரவாயில்லை, ஹாஸ்யமாக போயிற்று. இருப்பினும் தவறான உச்சரிப்பால் உயிருக்கே கேடு வந்ததும் நடந்திருக்கிறது.

எங்கே பிராமணன் சீரியல் பகுதி-2, ஆறாம் எபிசோடில் சோ அவர்கள் இதை சுவையாக விளக்குகிறார். இது பற்றி நான் இட்ட பதிவிலிருந்து சில வரிகள்:

“உமாவுக்கு பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் பண்ணிப் பார்த்தார்களா என வேம்பு சாஸ்திரிகள் கேட்க, அவ்வாறு செய்வது சட்ட விரோதம் என நீலகண்டனும் அவர் சம்பந்தியும் கூறுகின்றனர். ஆணோ பெண்ணோ நல்லபடியாக பிறந்தால் போதும் என பர்வதம் கூறுகிறாள்.

நுணலும் தன் வாயால் கெடும் என்னும் கணக்காக வேம்பு சாஸ்திரிகள் எல்லாம் தெரிந்த சிரோன்மணி அசோக் உமாவுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை கூறலாமே எனக் கிண்டலாகக் கேட்டு, சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறார். அவர் முறைப்படி மந்திரங்கள் உச்சரித்திருந்தால், அவற்றின் அதிர்வுகளை உமாவின் கருவிலுள்ள குழந்தை பெற்றிருக்கும், அதையும் இவர் உணர்ந்திருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என வேம்பு சாஸ்திரிகளே கூறிடலாமே தான் எதற்கு என அசோக் வினயமாக பதிலளிக்கிறான். வேம்பு சாஸ்திரி திடுக்கிடுகிறார். தான் சொன்ன மந்திரங்களில் என்ன குறைவு என அவர் துணுக்குற்று கேட்க, எல்லோர் எதிரிலும் வேண்டாம், அவரிடம் தான் தனியாக கூறுவதாக அவன் தயங்க வேம்பு சாஸ்திரிகள் அவன் இப்போதே கூற வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அவரது மந்திரங்களில் ஸ்வரப்பிழை இருந்ததாக அசோக் கூறுகிறான்.

“ஸ்வரப்பிழையா, இது என்ன கச்சேரியா” என சோவின் நண்பர் வியக்க, கச்சேரியாக அமையக்கூடாது என்பதுதான் சரி என சோ விளக்குகிறார். வேதத்தின் ஸ்வரத்தை மாற்றல், அவசரப்படல், உணர்ச்சியின்றி அதை உச்சரித்தல், சொல் மாற்றிக் கூறுதல், அனாவசியமாக தலையெல்லாம் ஆட்டி சேஷ்டைகள் செய்தல் முதலியவை அடங்கிய ஆறு குறைகளை சோ அவர்கள் பட்டியலிடுகிறார். இந்திரனைக் கொல்லும் ஆற்றல் பெற்ற பிள்ளை பெறும் வரம் வேண்டி தவம் இருந்த ஸ்வஷ்டா என்னும் தேவத்தச்சன், தனது கோரிக்கையை ஸ்வரப்பிழையுடன் கூறியதில் இந்திரனால் கொல்லப்படும் மகன் என உருமாறி, அவனுக்கு பிறக்கும் மகனை இந்திரன் கையால் சாவதாக வரும் கதையையும் சோ கூறுகிறார். தினசரி வாழ்க்கையிலும் இம்மாதிரி தொனி மாறிய வரவேற்புரைகள் விபரீத பொருளை தருவதையும் உதாரணத்துடன் விளக்குகிறார்”.


அந்த எபிசோடின் வீடியோவுக்கான சுட்டி இதோ. (இந்த எபிசோடே இரண்டு வீடியோக்களில் உள்ளன. முதல் வீடியோ சுமார் 11 நிமிடங்கள், இரண்டாவது வீடியோ சுமார் 10 நிமிடங்கள். அதன் லொகேஷன் திரைக்கு கீழ் பகுதியில் வருகிறது. இரண்டையும் பார்த்தல் நலம்).

அதே போல “தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளாய்” என்னும் பாடலை பல பாடகர்கள் தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் என்றெல்லாம் சிதைத்துப் பாடியதில் ஒரு குழந்தை கிருஷ்ணர் ஒரு நாயர் என்று முடிவுக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லைதான்.

அம்மாதிரியான பிழைகள் வரலாகாது என்பதற்காகவே வடமொழி சுலோகங்களை தமிழில் எழுத முயலும்போது சரியான உச்சரிப்புக்காக கிரந்த எழுத்துக்களை பாவிக்கிறேன் என ஒருவர் கூறினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

விருப்பம் உள்ளவர்கள் பாவியுங்கள், மற்றவர்கள் விட்டுத் தொலையுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

36 comments:

எல் கே said...

இப்படி சொன்னாலும் ஒத்துப்பங்கன்னு நினைக்கறீங்க

dondu(#11168674346665545885) said...

@எல்கே
அவங்க ஒத்துண்டா என்ன, ஒத்துக்காட்டா என்ன? கிடக்கிறான்கள் ஜாட்டான்கள்.

இதனாலெல்லாம் உண்மை பொய்யாகி விடுமா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

///நான் சமீபத்தில் 1955-56 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு தேர்வில் மகாத்மா காந்தியைக் கொன்றது யார் என்ற ஒரு வார்த்தையில் பதிலளிக்க வேண்டிய கேள்வி வந்தது.///

ராகவன் சார், 1955-56 சமீபத்திய காலமா?

Simulation said...

"கெயவன்" என்ற பததை ஜெயகாந்தன் தனது "சினிமாவுக்குப் போன சித்தாளு" கதையில் அடிக்கடி பாவித்திருப்பார். அவர் யாரை அப்படிச் சொல்கிறார் என்று தெரியும் என்று நம்புகின்றேன்.

- சிமுலேஷன்

dondu(#11168674346665545885) said...

//ராகவன் சார், 1955-56 சமீபத்திய காலமா?//
டோண்டு ராகவனைப் பொருத்தவரை ஆமாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எல் கே said...

நடராஜன் சார், நீங்க டோண்டு சார் பதிவுகள் படிக்கறது இல்லைன்னு தெரியறது . அவரை பொறுத்தவரை இது சமீபத்தில்தான்

Venkat said...

Raghavan Sir,

Did you read this news?

http://thatstamil.oneindia.in/news/2010/12/19/gujarat-agricultue-kalam.html

Please blog on this news in your blog

Thanks

Venkat

R. Gopi said...

\\அம்மாதிரியான பிழைகள் வரலாகாது என்பதற்காகவே வடமொழி சுலோகங்களை தமிழில் எழுத முயலும்போது சரியான உச்சரிப்புக்காக கிரந்த எழுத்துக்களை பாவிக்கிறேன் என ஒருவர் கூறினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?\\

என்னைப் பொருத்தவரை இது சரி. முடிந்தால் ஒரு படி மேலே போய் அந்த உச்சரிப்பையும் பதிவு செய்வேன் (வாய்ஸ்).

உதாரணமாக நசிகேதன் என்பது நஸிகேதன் என்று திரிந்து விட வாய்ப்புள்ளது. இது போல இன்னும் எத்தனையோ சொற்கள்.

Anonymous said...

"அம்மாதிரியான பிழைகள் வரலாகாது என்பதற்காகவே வடமொழி சுலோகங்களை தமிழில் எழுத முயலும்போது சரியான உச்சரிப்புக்காக கிரந்த எழுத்துக்களை பாவிக்கிறேன் என ஒருவர் கூறினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?
"

அப்பவும் ‘பாவிப்பது’ 100/100 முடியாக்காரியம்.

சமஸ்கிரிதத்தை முதலில் படிக்கவேண்டும்.

இல்லயெனில், உச்சரிப்பு என்பது அரைவேக்காட்டுத்தனம்தான்.

Anonymous said...

"விருப்பம் உள்ளவர்கள் பாவியுங்கள், மற்றவர்கள் விட்டுத் தொலையுங்களேன்."

அப்படி சுலபமாகத் தள்ளிவிட முடியாது.

மதம் என்பது இருவகையில் அனுசரிக்கப்படுகிறது:

1. தனிமனிதனாக
2. மக்கட்கூட்டத்திற்கு மொத்தமாக

இதன்படி, நம்பர் 1ல்தான் உங்கள் ‘விட்டுத்தொலையுங்களேன்’ சரிவரும்.

இரண்டாவதாகவும் உங்கள் மதம் அனுசரிக்கப்படுவதால் எல்லாருக்கும் முடியாதபோது அது புகைச்சலை உருவாக்குகிறது.

அது பிராமணரல்லாதோரிடம் மட்டுமன்று. பிராமணர் எனப்படுவோரிடமும் கூட.

ஒரு எ.டு.

ஜடாயு என்பவர் இந்துத்வாவின் பிரச்சாரக். இந்து மதத்தின் பிராமணீயக்கூறுகளை ஏற்றுக்கொண்டவர். அவர் எழுதினார் இந்து .காமில்.

ஆச்சாரியர்களின் வியாக்கியானங்கள் மணிபிரவாளத்தில் இருக்கின்றபடியாலே, அவைகள் ஒதுக்கித் தள்ளினால் ஒன்றும் குறைனேராது. பாசுரங்கள் நேராகவே படித்துக்கொள்ளலாம் என்றார்.

கிட்டத்தட்ட் உங்கள் ‘விட்டுத்தள்ளுங்களேன்’ ஒத்துவரவைல்லை இந்துத்வாவினரிட்மே. இல்லையா?

Anonymous said...

”டோண்டு ராகவனைப் பொருத்தவரை ஆமாம்”

இந்த ‘ஆமாம்’ ஒரு காரணமில்லாமல் இருக்காது.

தமிழ் இலக்கணத்திற்கே சவால் விடுகிறீர்கள்.

கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்.

Whatever is that ?

pichaikaaran said...

ஆங்கிலத்தில் ழ என்ற எழுத்து இல்லாவிட்டாலும், அந்த உச்சரிப்பை ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி எழுதிவிட முடியும்.

தமிழ் எழுத்துக்களை பயன் படுத்தி எல்லா உச்சரிப்பையும் எழுதும்படி செய்ய வேண்டும்... f என்பதை ஆயுத எழுத்து , மற்றும் ப வை பயன்படுத்தி எழுதுவது ஓர் உதாரணம்..

கிரந்த எழுத்து இல்லாமலேயே, சில தமிழ் எழுத்தை வைத்தே எல்லா உச்சரிப்பையும் கொண்டு வர முடியும்... அனைவரும் ஒப்புக்கொள்வார்களா ?

உதாரணமாக ...

ba

ப pa


cha
ச sa

Arun Ambie said...

எங்கள் ஹிந்தி வாத்தியார் தமிழில் எழுத்துக்களால் ஏற்படும் குழப்பங்கள் பற்றி ஒரு விஷயம் சொன்னார். 'சம்பந்தம்' என்று எழுதி அதை 'ஸம்பந்தம்' என்று உச்சரிக்கிறோம். புதிதாகத் தமிழ் படிப்போர்க்கு 'அச்சம்' என்று எழுதுவதை 'அஸ்ஸம்' என்று சொல்வதா, அச்சம் என்றே சொல்வதா என்று குழப்பம் வரும். அதே போலத்தான் கருணாநிதி, ராமதாஸ் போன்ற பெயர்களில் 'த' உச்சரிப்பு சிக்கல் தரும் (Karunanithi/Ramathas).

இந்துமதத்தை விடுத்து சமணத்தின் நாலடியாரில் இப்படி எத்தனை இருக்கிறது!

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
(யாக்கை நிலையாமை)

இப்பாடலில் எத்தனை இடங்களில் 'ட' da, ta என்ற உச்சரிப்புகளில் மாறி மாறி வருகிறது?

உருது மொழியும் அப்படியே. ஹிஜ்ரி, ஜிஹாத், லஷ்கர் இதையெல்லாம் தூய தமிழ் எழுத்துக்களில் கிச்ரி, சிகாத், லச்கர் என்று எழுதினால் சரியாக உச்சரிக்க என்ன செய்வார்கள்?

ஆகவே கிரந்த எழுத்துக்கள் ஒரு வசதிக்காக என்பதே உண்மை. சிலர் தனித்தமிழ் கொள்கையையும் விட்டுவிட முடியாமல் யதார்த்தத்தையும் ஏற்க முடியாமல் ஆப்பசைத்த குரங்கு போலத் திண்டாடுகிறார்கள்.

அருள் said...

// //பிழைகள் வரலாகாது என்பதற்காகவே வடமொழி சுலோகங்களை தமிழில் எழுத முயலும்போது சரியான உச்சரிப்புக்காக கிரந்த எழுத்துக்களை பாவிக்கிறேன் என ஒருவர் கூறினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?// //

இது சும்மா பம்மாத்து காரணம்.

ஹ, ஜ, ஸ, ஷ உள்ளிட்ட உச்சரிப்புகளுக்கு தமிழில் எழுத்துக்கள் இல்லை என்பது காரணமானால், அவ்வாறே kha, ga, gha, cha, jha, tha, da, dha, pha, ba, bha போன்ற ஒலிகளுக்கும்தான் தமிழில் எழுத்துகள் இல்லை. அதற்கெல்லாம் என்ன செய்கிறீர்கள்?

வடமொழி சுலோகங்களில் kha, ga, gha, cha, jha, tha, da, dha, pha, ba, bha போன்ற எழுத்துக்கள் வரும்போது சரியான உச்சரிப்புக்காக எந்த எழுத்துக்களை பாவிக்கிறீர்கள்?

40க்கும் மேற்பட்ட கிரந்த எழுத்துக்கள் இருந்தாலும் அவற்றில் சிலவற்றை மட்டுமே தமிழோடு கலந்து இப்போது பயன்படுத்துகின்றனர். காரணம் இந்த எழுத்துக்கள் மட்டும்தான் பள்ளிகளில் சொல்லித்தரப்படுகின்றன.

ஹ, ஜ, ஸ, ஷ உள்ளிட்ட வடமொழி எழுத்துக்கள் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டதால்தான் அவை இப்போது வழக்கில் இருக்கின்றன. பள்ளிகளில் தமிழ் எழுத்துக்களுடன் கிரந்த எழுத்துக்களும் கற்பிக்கப்படுவது நிறுத்தப்பட்டால் - தேவையற்ற இந்த கிரந்த சுமையும் ஒழிந்து போகும்.

முன்பு தமிழக அரசு லை, ளை, னை, ணை போன்ற எழுத்துகளை எழுதுவதற்கு மேலே 'கொக்கி' போன்ற குறியை பயன்படுத்தும் முறையை ஒழித்துக்கட்டியது. உடனே, சோ போன்ற பார்ப்பனர்கள் அதனை ஏற்க முடியாது என்று அடம்பிடித்தனர். பலகாலம் 'துக்ளக்' கொக்கி எழுத்துடன் வெளியானது. ஆனால், புதிய தலைமுறையினருக்கு 'கொக்கி' புரியவில்லை என்றவுடன் - துக்ளக்கும் கொக்கியை விட்டுவிட்டது.

எனவே, சமச்சீர் கல்வி திட்டத்திலிருந்து கிரந்த எழுத்துக்களை தூக்கி எறிந்தால் - டோண்டு சார் போன்ற அவாள்களின் "விருப்பம் உள்ளவர்கள் பாவியுங்கள், மற்றவர்கள் விட்டுத் தொலையுங்களேன்" என்கிற வீரவசனம் காலாவதியாகிவிடும்.

Indian said...

மரமண்டைத் தமிழர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதுங்க. மதியாதார் வாசல் மிதியாதேங்கற பழமொழிக்கேற்ப விட்டுத் தொலைக்கலாமே? சுலோகங்கள் சங்கதத்திலேயே இருந்தால் உச்சரிப்பு சிதையாமல் இருக்குமல்லவா?

dondu(#11168674346665545885) said...

//ஹ, ஜ, ஸ, ஷ உள்ளிட்ட உச்சரிப்புகளுக்கு தமிழில் எழுத்துக்கள் இல்லை என்பது காரணமானால், அவ்வாறே kha, ga, gha, cha, jha, tha, da, dha, pha, ba, bha போன்ற ஒலிகளுக்கும்தான் தமிழில் எழுத்துகள் இல்லை. அதற்கெல்லாம் என்ன செய்கிறீர்கள்?//
சரியாகச் சொன்னீர்கள் அருள். அம்மாதிரி kha, ga, gha, cha, jha, tha, da, dha, pha, ba, bha கொண்டு வருவதுதான் இப்போதைய முயற்சியே. அது கூட உங்களுக்குத் தெரியாதா? என்ன போங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//மதியாதார் வாசல் மிதியாதேங்கற பழமொழிக்கேற்ப விட்டுத் தொலைக்கலாமே?//
அந்த வாசல் நமக்கும் உரியதே என்பதை மறந்து விட்டீர்களா? கிரந்த எழுத்துக்களை கொணரும் முயற்சியில் நாம் ஈடுபட எந்த ஜாட்டானது அனுமதியும் தேவையில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

டோண்டு ஐயா,

அழகான யதார்த்தமான நகைச்சுவை அனுபவத்தை எழுதியது மிகவும் ருசியாக இருந்தது. நன்றாக ரசித்தேன். உங்களின் அபாரமான ஞாபகத்தனத்தில் எல்லா சம்பவங்களும் அழகாக இடத்திற்கு ஏற்றாற்போல் எடுத்துச்சொல்லும்போது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.
நன்றி

அருள் said...

டோண்டு ராகவன் said...

// //சரியாகச் சொன்னீர்கள் அருள். அம்மாதிரி kha, ga, gha, cha, jha, tha, da, dha, pha, ba, bha கொண்டு வருவதுதான் இப்போதைய முயற்சியே. அது கூட உங்களுக்குத் தெரியாதா? என்ன போங்கள்.// //

உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

ஹ, ஜ, ஸ, ஷ போன்றவற்றை தமிழிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது எங்களது முயற்சி.

ஹ, ஜ, ஸ, ஷ இவை போதாது, இன்னும் kha, ga, gha, cha, jha, tha, da, dha, pha, ba, bha எழுத்துகளும் தமிழில் சேர்க்கப்பட வேண்டும் என்பது உங்களவா முயற்சி.

யாருடைய முயற்சி வெற்றி பெறும் என்பதற்கு காலம் பதில் சொல்லும். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் உங்களுக்கு பதில் கிடைக்கும்.

Indian said...

//அந்த வாசல் நமக்கும் உரியதே என்பதை மறந்து விட்டீர்களா? //

புரியலீங்களே. உரிமையாளராக விருந்தினரை வரவேற்பதற்கா இல்லை விருந்தினராக வீட்டினுள் செல்வதற்கா?

அருள் said...

Indian said...

// //மரமண்டைத் தமிழர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதுங்க. மதியாதார் வாசல் மிதியாதேங்கற பழமொழிக்கேற்ப விட்டுத் தொலைக்கலாமே? சுலோகங்கள் சங்கதத்திலேயே இருந்தால் உச்சரிப்பு சிதையாமல் இருக்குமல்லவா?// //

உங்களது கருத்தை வரவேற்கிறேன். உங்களைப் போன்று பார்ப்பனர்கள் எல்லோரும் மாவீரர்களாக இருந்துவிட்டால் சிக்கலே இருக்காது.

இசுலாமியர்கள் மதரசாக்களை வைத்து அரபி கற்பிப்பது போல, "அவாள்" எல்லோரும் - தமக்குத் தாமே - சமற்கிருதத்தை தேவநாகரியொலோ, கிரந்தத்திலோ, ரோமன் எழுத்திலோ எதில் வேண்டுமானாலும் படித்துதொலைந்தால் - எந்த எழவாவது எப்படியோ போகட்டும் என்று தமிழர்கள் இருந்து விடுவார்கள்.

இசுலாமியர்கள் தமிழ்வழியே குர் ஆனை 'உள்ளது உள்ளபடி' படிக்க வேண்டும் என்பதற்காக அரபி எழுத்துக்களை தமிழோடு கலக்க சொல்கிறார்களா? கிறித்தவர்கள் தமிழ்வழியே விவிலியத்தை 'உள்ளது உள்ளபடி' படிக்க வேண்டும் என்பதற்காக கிரேக்க எழுத்துக்களையும் ஃகீப்ரு எழுத்துக்களையும் தமிழோடு கலக்க சொல்கிறார்களா?

"அவாள்" மட்டும் தமிழோடு மல்லுக்கு நிற்பது ஏன்?

dondu(#11168674346665545885) said...

@இந்தியன்
அந்த வாசலில் நமக்கும் உரிமை இருக்கிறது என்பதுதான் நான் கூறுவது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Indian said...

நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் சுலோகங்களை ஒலியாகவே அனைவருக்கும் போதிக்கலாமே, கர்நாடக வாய்ப்பாட்டுப் பயிற்சி போல.

சங்கதத்து உச்சரிப்புக்கான புது எழுத்துக்களை உருவாக்கும் முயற்சியை ஒவ்வொரு மொழியிலும் திரும்பத் திரும்ப செய்ய வேண்டியதில்லையே? நாளை ஆங்கிலத்திலோ, ஷ்பானிஷிலோ, மாண்டரினிலோ புது எழுத்துகளை உருவாக்க வேண்டியதில்லையே?

எல் கே said...

@அருள்
திருப்பி கேட்கிறேன் .. எந்த மசூதியிலும் தமிழில் தொழுகை செய்வது இல்லை. அவர்களிடம் சென்று தமிழில் தான் தொழ வேண்டும் என்று சொல்லுங்களேன் . ஏன் செய்வது இல்லை அதை ???

R.DEVARAJAN said...

ஸ்வஷ்டா இல்லை அண்ணா;
த்வஷ்டா


தேவ்

Essex Siva said...

டோண்டு சார்,
வணக்கம்,.
இருந்தாலும் ரங்கராவ் சார் ஒரு குட்டாவது உப்பிலிற்கு வைத்திருக்கலாம்...
காந்திஜி மாலை கூட்டத்திற்கு செல்லும்போதுதானே சுடப்பட்டார்?

"ஆசிரியர் மழமழவென்று ஷேவ் செய்த அன்று கடுகடுவென்று இருப்பார்"...அட, எனக்கும் சமீபத்தில்(!) நடந்த சம்பவம் நியாபகத்திற்கு வருகிறது...
1985 - தாரபுரம் முனிசிபல் பள்ளி கணக்கு ஆசிரியர் சேஷன் அவர்களைப்பற்றியும் மாணவர்கள் சொல்வார்கள்.
(வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால்,எப்படியும் அடி உண்டு, என் அனுபவத்தில்... ஷேவ் செய்தாலும் செய்யாவிட்டாலும்!).

Essex சிவா

hayyram said...

//@அருள்
திருப்பி கேட்கிறேன் .. எந்த மசூதியிலும் தமிழில் தொழுகை செய்வது இல்லை. அவர்களிடம் சென்று தமிழில் தான் தொழ வேண்டும் என்று சொல்லுங்களேன் . ஏன் செய்வது இல்லை அதை ???// பகுத்தறிவு பேசும் தொடைநடுங்கிப் பயல்களுக்கு பிராமணர்களிடம் மல்லுக்கு நிக்கத்தாந் தைரியம் இருக்கும். இது போன்ற விஷயத்தை செய்யச்சொன்னால் ராமசாமிநாயக்கர், கருனாநிதி முதல் பகுத்தறிவுக்கு சொம்பு தூக்கும் அத்தனை பேரும் மூத்திரம் போய் விடுகிறார்கள் என்பதே உண்மை.

hayyram said...

//இசுலாமியர்கள் தமிழ்வழியே குர் ஆனை 'உள்ளது உள்ளபடி' படிக்க வேண்டும் என்பதற்காக அரபி எழுத்துக்களை தமிழோடு கலக்க சொல்கிறார்களா? கிறித்தவர்கள் தமிழ்வழியே விவிலியத்தை 'உள்ளது உள்ளபடி' படிக்க வேண்டும் என்பதற்காக கிரேக்க எழுத்துக்களையும் ஃகீப்ரு எழுத்துக்களையும் தமிழோடு கலக்க சொல்கிறார்களா? // அவையெல்லாம் வெளிநாட்டு மொழிகள். சமஸ்கிரதம் இந்தியர்களின் மொழி

dondu(#11168674346665545885) said...

@எஸ்ஸெக்ஸ் சிவா
ஆமாம் மாலைதான். இப்போது சரி செய்து விட்டேன்.

நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

R. Gopi said...

எந்த இடத்தில் ga, ka என்று வரவேண்டும் என்று தொல்காப்பியத்தில் விதிகள் உண்டு என்று அறிகிறேன். நான் இதில் பெரிதாக ஆராய்ச்சி செய்ததில்லை.

சிக்கல் எங்கே வருகிறது என்று பார்த்தால் தமிழ் அல்லாத பிற வார்த்தைகளைத் தமிழ்ப் படுத்தும்போது. கூடுமானவரை ஆங்கிலத்தில் அதன் உச்சரிப்பைத் தரலாம். உதாரணம்: நசிகேதன் (Nachikethan). ஆனால் இது போல எத்தனை வார்த்தைகளுக்குக் கொடுப்பீர்கள்?

ஆங்கிலம் ஒப்புக் கொள்வீர்கள், கிரந்தம் கூடாதோ என்று சிலர் கேட்கலாம். நடைமுறையில் நாம் ஆங்கிலம் நிறையப் பயன்படுத்துகிறோம். அதனால் சொல்கிறேன். மற்றபடி எந்த மொழி பயன்படுத்தினால் என்ன? உச்சரிப்பு சரியாக வந்தால் எனக்குப் போதும்.

அருள் said...

LK said...

// // @அருள்..திருப்பி கேட்கிறேன் .. எந்த மசூதியிலும் தமிழில் தொழுகை செய்வது இல்லை. அவர்களிடம் சென்று தமிழில் தான் தொழ வேண்டும் என்று சொல்லுங்களேன் . ஏன் செய்வது இல்லை அதை ???// //

hayyram said...

// //பகுத்தறிவு பேசும் தொடைநடுங்கிப் பயல்களுக்கு பிராமணர்களிடம் மல்லுக்கு நிக்கத்தாந் தைரியம் இருக்கும்.// //

ஒருவர் விரும்புகிற மொழியில் வழிபட உரிமை உண்டு. அந்த வகையில் இசுலாமியர்கள் அரபியில் ஓதுவதில் குறைகாண எதுவும் இல்லை. அதேசமயம் - அரபி வார்த்தைகளை தமிழ் எழுத்தில் எழுதி படிப்பதற்கு போதுமான எழுத்துக்கள் இல்லை, எனவே, சில அரபி எழுத்துகளை சேருங்கள் என்று எந்த இசுலாமியரும் கோரவில்லை.

பார்ப்பனர்கள் தமது மந்திரங்கள் எந்த மொழியில் எழுதினாலும் அதில் குறைசொல்ல ஒன்றும் இல்லை. தமிழ் எழுத்துக்களோடு கிரந்த எழுத்துக்களை 50:50 என்று கலந்து வேண்டுமானாலும் பார்ப்பனர்கள் எழுதட்டும், படிக்கட்டும். அதில் எவரும் தலையிடப் போவதில்லை.

ஆனால், எல்லோருக்குமான தமிழ் மொழியில் பிறமொழி வார்த்தைகளை இணைப்பது ஒரு மோசடிச் செயல். அது யுனிகோடு ஆனாலும் சரி, பள்ளி பாட நூல் ஆனாலும் சரி. பொதுவான இடத்தில் கிரந்தத்தை திணிப்பது அயோக்கியத்தனம்.

virutcham said...

மொரார்ஜி தேசாய் என்பதில் தேசாய் என்பதை தோசை, தேசை, தொசை என்று ஆளுக்கு ஒரு விதமாய் எழுதி ஆசிரியையை மிரளவைத்த அந்த பள்ளி அனுபவம் நினைவுக்கு வருகிறது
வட மொழி எழுத்து ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ சாதாரணமாகவே தமிழ் எழுத படிக்க இப்போதைய மாணவர்கள் விரும்புவதில்லை. இதை குறித்த பதிவு http://www.virutcham.com/2010/01/இது-தமிழா/

Arun Ambie said...

நிஜமாகவே மிகமிகச் சமீபத்தில் சூன் 2010ல் நடந்த நிகழ்ச்சி. தமிழுக்குச் செம்மொழி மாநாட்டை 450 கோடி ரூபாய் செலவில் நடத்திய தமிழக முதல்வரை அண்ணா நகரில் ஒரு திமுக சுவர் விளம்பரத்தில் "முத்தமிழறிஞர், செம்மொழிச் செம்மல், வாழும் வள்ளுவர், டாக்டர் கஞைர்" என்று எழுதியிருந்தனர். அதை என் மொபைலில் படம் பிடிக்கப் போன போது ஒரு ஆட்டோக்காரர் வந்து நீங்க பத்திரிக்கையா என்றார். இல்லையே என்றேன் இயல்பான நக்கலை விடுத்து. "இன்னாத்துக்கு இத்த போட்டா புட்சினுகிறீங்கோ" என்றார். "ஸ்டாலின் ஒரு வெப்சைட் நடத்துறாருப்பா. அதுக்கு அனுப்பி ஒங்கப்பாவ எப்படி அசிங்கப் படுத்திருக்காங்கன்னு பாருங்க சார்னு சொல்லப் போறேன்" என்றேன். "ஏஏய்! தோடா இன்னா அசிங்கத்தக் கண்டுகின இத்துல" என்று குரலை உயர்த்தினார். கலைஞரை கஞைர் என்று எழுதியிருப்பதை சுட்டிக்காட்டிய பிறகு எழுதியவரின் பிறப்பு பற்றி கேவலமாக விமர்சிக்க,(எங்கள் ஊரில் அதில் 10% பேசினாலே கொலை விழும்!) எழுதியவராகச் சொல்லப்பட்டவர் சிரித்துக் கொண்டே "உடுண்ணா தப்பு நந்துச்சு.(எதைச் சொன்னார்?)கிளீர் பண்ருவோம்." என்று அவரிடம் சொல்லிவிட்டு என்னிடம் வந்தார். "சார் நீங்க ரீஜண்டா கிரீங்கோ. அத்தொட்டு நம்புறேன். போட்டா கீட்டா தலபதியாண்ட போச்சு... நீ காலேஜுக்கு போவ சொல்ல கலீஜ் ஆயிருவ" என்றார். (நான் MBA weekend class போய்க் கொண்டிருந்தேன்) அடுத்த சனிக்கிழமை மாலை போகும் போது பார்த்தேன் கலைஞர் என்று இருந்தது.

என் கேள்வி: கஸ்மாலம், கலீஜ், பேஜாரு, பேமானி ஆகியவற்றோடு இன்னுமிருக்கும் இதுபோன்ற எந்த மொழியென்று அறியவியலாத இன்னபிற சொற்கள் குறித்து தூயதமிழ்த் தன்னார்வலர், வடமொழிக்கு வைரி அருள் என்ன கருதுகிறார்?

அருள் said...

Arun Ambie said...

// //கஸ்மாலம், கலீஜ், பேஜாரு, பேமானி ஆகியவற்றோடு இன்னுமிருக்கும் இதுபோன்ற எந்த மொழியென்று அறியவியலாத இன்னபிற சொற்கள் குறித்து தூயதமிழ்த் தன்னார்வலர், வடமொழிக்கு வைரி அருள் என்ன கருதுகிறார்?// //

நான் தூயதமிழ்த் தன்னார்வலரும் அல்ல, வடமொழிக்கு வைரியும் அல்ல. காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பது போல - யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதுதான் எனது நிலைப்பாடு.

பேச்சு மொழி, எழுதும் மொழி, வட்டார வழக்கு என்கிற வேறுபாடுகள் எல்லா மொழியிலும் உண்டு. அதேபோல என்னவென்று அறியவியலாத வார்த்தைகளும் ஆங்காங்கே வழங்கப்படுவதும் இயல்புதான்.

பேச்சு மொழியில் உள்ளவை அப்படியே எழுத்தில் வருவதில்லை. எல்லோரும் முடிந்தவரை எழுதும் மொழியை பிழையில்லாமல் எழுதவே முயற்சிப்பர். ஒருசிலரால்தான் பேச்சிலும் மொழித்தூய்மையை பின்பற்ற முடியும்.

முடிந்தவரை நல்ல தமிழில் பேசவேண்டும், முடிந்தவரை நல்ல தமிழில் எழுதவேண்டும் என்பது ஒரு நல்ல பண்பு, நியாயமான விருப்பம் (நான் கட்டாயமாக என்று கூறவில்லை). இதில் என்ன குறை கண்டீர்கள்?

நல்ல தமிழ் என்கிற உன்னத கொள்கைக்கு 'கிரந்தத்தை கலப்பது' எதிராக இருக்கிறது. எனவே தமிழோடு கிரந்தத்தை கலப்பதைதான் எதிர்க்கிறோம். அதுவும் பாடநூல், யூனிகோடு போன்ற பொது நடைமுறைகளில் தமிழோடு கலப்பதை மட்டும்தான் - அவரவர் தனிப்பட்ட முறையில் தமிழோடு எந்த இழவைக் கலந்தாலும் அதில் குறைசொல்ல எதுவும் இல்லை.

எனவே, நீங்கள் இட்டுக்கட்டுவது போல இங்கு எவரும் கிரந்தத்தையோ, வடமொழியையோ எதிர்க்கவில்லை. அவற்றை தமிழோடு கலக்காமல் தாராளமாக பயன்படுத்துங்களேன். யார் தடுத்தது?

அருள் said...

டோண்டு ராகவன் said...

// //உதாரணத்துக்கு எனது வீட்டு முகவரியில் Plot B-23 என வருவதை தமிழில் பிளாட் பி-23 என்றால், பார்ப்பவர்கள் அது B-யா அல்லது P-யா என குழப்பம் அடைய நேரிடும். இங்கு கூட பரவாயில்லை, பிளாட் B-23 என்றே எழுதி விடலாம். ஆனால் சுலோகங்களில் அவ்வாறு செய்ய இயலாது.// //

B யா? P யா? என்பது குழப்பம் இல்லை. அதற்கும் கிரந்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. பலர் தமது தலைப்பெழுத்தாக ஆங்கில எழுத்தை அப்படியே பயன்படுத்துகின்றனர். அதுபோலத்தான் இதுவும். A-Z ஆங்கில எழுத்துகளை பெரும்பாலானோர் அறிந்திருப்பதால் - இது ஒரு குழப்பம் ஆகாது.

"சுலோகங்களில் அவ்வாறு செய்ய இயலாது" என்று நீங்கள் கூறுவதுதான் உண்மையான சிக்கல். இதற்கு தீர்வு சுலோகங்களை பயன்படுத்த விரும்புவோர் அதற்கான தனி வசதிகளை தமக்குத்தாமே செய்துகொள்வதுதான். விருப்பமுள்ளோர் கிரந்தமோ வடமொழியோ கற்றுக்கொள்ளட்டுமே. அதைவிட்டுவிட்டு பாடபுத்தகத்திலும் யூனிகோடிலும் அதனை எதற்காக திணிக்க வேண்டும்?

வேத மந்திரங்களைக் கேட்கும் சூத்திரன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று கூறிவிட்டு, இப்போது அதே மக்களை கிரந்தம் படிக்க சொல்வது முரண்நகையாக இல்லையா?

செருப்பின் அளவுக்காக காலை வெட்ட முடியாது என்பது எமது நிலைப்பாடு. செருப்புக்காக காலை வெட்ட வேண்டும் என்பது 'உங்களவா' நிலைப்பாடு - எது சரி என்பதை காலம் சொல்லும்.

khaleel said...

ungal valaipoo padipatharku suvarasiyamaga irukirathu.

oru siriya thagaval.
naanum hindu uyar nilai palliyil thaan padithen. 1990-1993 (5th - 9th std).

ovoru murai vidumuraiku varum pothum palliyil naan amarndha vaguparaigalai poi paarka vendum enru ninaipen. yeno adhu seiya mudinandhu illai.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது