கீழே உள்ள கட்டுரை தமிழ் ஹிந்துவில் வந்தத் தொடரின் முதல் பகுதி. பலர் இதைப் பார்க்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆகவே இங்கும் அதை போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி: TamilHindu.com
நண்பர் விஸ்வாமித்ரா அவர்களும் அனுமதி தந்து விட்டார். அவருக்கும் என் நன்றி.
இப்போது தொடருக்கு போவோம்
நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 01
விஸ்வாமித்ரா
இந்தியாவின் பிரதமர் யார்?
இந்தக் கேள்விக்கு ஒன்றாம் கிளாஸ் பிள்ளைகளாக இருந்தால் மன்மோகன் சிங் என்று பதிலளித்திருப்பார்கள். ஆனால் அது தவறு என்பது நாட்டு நடப்பை ஓரளவுக்காவது அறிந்த எந்தவொரு இந்தியனுக்கும் தெரிந்ததுதான்.
இந்தக் கேள்விக்கு, “சோனியா காந்தி” என்று பதிலளித்தால் ஐம்பது மார்க் கொடுக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் இந்தியாவின் பிரதமர் ”நீரா ராடியா” என்று நீங்கள் பதிலளித்திருப்பீர்கள் என்றால் உங்களுக்கு நூறு மார்க்குகள் நிச்சயம் வழங்கலாம்.
”நீரா ராடியா யார்?” என்பதை அறியாதவர்கள் மேலே படியுங்கள்.
காங்கிரஸ் காரர்களுக்கு சுயராஜ்யம் என்பது பிறப்புரிமையாக இருந்ததோ இல்லையோ; ஆனால் ஊழலும், கொள்ளையும் மட்டுமே காங்கிரசின் அதிகாரபூர்வ கொள்கையாக பிறப்புரிமையாக இன்று வரை இருந்து வருகிறது. காங்கிரசின் இந்தப் பிறப்புரிமைக்குப் பங்கம் வராமல் நம் மக்களும் சலிக்காமல் அக்கட்சிக்கு ஆதரவளித்து வருகிறார்கள். யதா பிரஜா, ததா ராஜா.
மாநிலக் கட்சிகள் வலுப்பெற ஆரம்பித்து மத்தியில் கூட்டணி ஆட்சியே யதார்த்த நிலையாக மாறிப் போய்விட்டது. இது ஆரம்பித்த வேளையில் இருந்து இந்தக் கொள்ளையடிக்கும் பிறப்புரிமையில் பிற மாநிலக் கட்சிகளும் உரிமை கோரவும், பங்கு கேட்கவும் ஆரம்பித்தார்கள். விளைவு: லல்லு யாதவ்களின் மாட்டுத் தீவன ஊழல்களும், முலாயம் யாதவ்களின் பல நூறு கோடி ஊழல்களும், கருணாநிதிகளின் தனி ஆவர்த்தன ஊழல்களும் - காங்கிரஸ் கலாச்சாரம் பிற கட்சிகளிடமும் ஆழமாக வேரூன்றிப் பரவ ஆரம்பித்தது.
இங்கே கொள்ளையடிக்கப்படும் பணம் வெளிநாடுகளில் சேமிக்கப்படுகிறது. ஸ்விஸ் போன்ற நாடுகள் நோகாமல் பணக்கார நாடுகளாக வளர்ந்து கொண்டு போக இந்தியாவில் இன்றைக்கும் ஒரு வேளை சோற்றிற்கு வழியில்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. உலக வரலாற்றிலேயே, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலம் தொடங்கி, ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து கொள்ளையடிக்கப் பட்டு வரும் ஒரே நாடு இந்தியாவாக மட்டுமே இருக்க முடியும். இந்தக் கொள்ளை இப்போதும் தொடர்கிறது.
இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.
ஊழல்களின் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் இந்த ஊழலின் கதாநாயகனும் ஒரு ராஜாதான். ஆபாசகரமான இந்த ஊழலின் நாயகன் ஆ.ராசாவேதான் என்று ஒரு சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சொல்லுவதன் அடிப்படையில், அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களைக் கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் இது வரை அரசாங்க நிலத்தை விற்று ஊழல் செய்திருக்கிறார்கள். நிலக்கரியை வைத்து ஊழல் செய்திருக்கிறார்கள். தண்ணீரை விற்று ஊழல் செய்திருக்கிறார்கள். மண்ணெண்ணெயை வைத்து ஊழல் செய்திருக்கிறார்கள். அரிசி, பருப்பு, எண்ணெய், ஜவுளி, வீடு, கார், பஸ், விமானம், தொலைபேசி, ராணுவம், மனிதர்கள், பெண்கள், சிறுவர்கள், மதங்கள், என்று உண்பது, உடுப்பது, படுப்பது, நின்றது, நடந்தது, பறப்பது, ஊர்வது, மிதப்பது என்று சகல விதமான உயிருள்ள உயிரற்ற படைப்புக்கள் அனைத்தையும் வைத்து ஊழல்கள் நடைபெற்று வந்தேயிருக்கின்றன. இப்பொழுது கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அலைகளை வைத்து ஒரு மாபெரும் ஊழல் அரங்கேறியிருக்கிறது. அதுதான் இந்த மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழல்.
இந்த ஊழல் உலக ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஊழல். ஏனென்றால் இந்த ஊழலின் மதிப்பு மொத்தமாக ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேலானது. ஒரு லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்கள் என்பது கூட நமக்கெல்லாம் தெரியாதுதான். 1 போட்டு பக்கத்தில் 12 சைபர்களை கை வலிக்கப் போட்டால்தான் இந்த ஒரு லட்சம் கோடிகள் என்ற கணக்கு வரும் என்று பொருளாதார மேதைகள் கம்ப்யூட்டரிடம் கேட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.
முதலில் எப்படி இந்த ஒரு லட்சம் கோடியை கொள்ளையடித்தார்கள், யார் அடித்தார்கள் என்பவை பற்றி ஊடகங்கள் சொல்லுவதைப் பார்க்கலாம். ஒரு லட்சம் கோடி வருமானம் வரும் அளவுக்கு அது என்ன ஆகப் பெரிய விஷயம் என்பதில் இருந்து ஆரம்பிக்கலாம்.
ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?
வானொலி, தொலைக்காட்சி, செல் ஃபோன் என்று அனைத்து விதமான கம்பியில்லாத தொலைத் தொடர்புகளுக்கும் மின்காந்த அலைகளே ஊடகமாகச் செயல் பட்டு வருகின்றன. இந்த மின்காந்த அலைகளின் அலை நீளம், வகை ஆகியவற்றை வைத்து பகுத்து பல்வேறு தொடர்புகளுக்கு பயன் படுத்தி வருகிறார்கள். அதாவது, வானொலியின் ஷார்ட் வேவ், மீடியம் வேவ், எஃப் எம் போல, தொலைக்காட்சிகளுக்குரிய அலைவரிசைகள் போல, செல் ஃபோன்களின் பயன்பாட்டிற்கும் மின்காந்த அலைவரிசைகளே பயன்படுத்தப் படுகின்றன. dish
இதில் வெறும் ஒலிகளை மட்டும் அனுப்பக் கூடிய பிரிவில் வரும் அலைப் பரவல்களை 2ஜி ஸ்பெக்ட்ரம் என்றும், தகவல், பேச்சு, படங்கள் போன்ற அனைத்து விதமான தகவல் பரிமாற்றங்களையும் பரிமாறக் கூடிய அலைப் பரவல்களை 3ஜி ஸ்பெக்ட்ரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இப்படி பல்வேறு வகையில் உபயோகமாகும் அலைவரிசைகளை அரசாங்கமே கட்டுப் படுத்தி யார், யார் எந்தெந்த அலைவரிசையை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பதை பிரித்து வழங்கி நிர்வாகித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட அலை அதிர்வெண்ணை செல்ஃ போன் மூலமான தகவல் தொடர்புக்கு மத்திய அரசாங்கம் ஒதுக்குகிறது. ஒதுக்கப்பட்ட அந்த அலைப் பரவல்களில், சிலவற்றை பயன்படுத்தத் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெறுகின்றன. பெற்ற பயன்பாட்டு உரிமையின் அடிப்படையில் தத்தம் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குகின்றன.
அந்த அலைப்பரவல்கள் மூலமாக தனியார் நிறுவனங்களும், அரசாங்கத்தின் பொது நிறுவனங்களும் தொலைத் தொடர்பு சேவைகளை தத்தம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். (இது குறித்த மேலதிக அறிவியல் தகவல்களை பத்ரி அவர்களின் வலைப்பதிவில் படித்துக் கொள்ளலாம். வலைப்பதிவு இங்கே.)
இந்த அலைப்பரவல்களை கணக்கு வழக்கு இல்லாமல் எல்லோரும் இவற்றைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில், எப்பொழுது தேவை (demand) ஆதாரத்தை (supply) விட அதிகமாகிறதோ, அப்பொழுது அளவில் குறைந்த வளங்களை ஏதாவது ஒரு பொது அடிப்படையில்தான் பயனர்களுக்கு வழங்க முடியும். அதுதான் எந்தவொரு இருப்பு/தேவை சமானத்திற்குமான அடிப்படையே. அதன்படி மின்காந்த அலைப்பரவல் வளமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்தான் இயங்க முடியும்; இவற்றை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறுவனங்கள் மட்டுமே இயக்க முடியும்.
நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது எந்தவொரு அரசாங்கமும் அந்த வளங்களை, ஏலத்தின் அடிப்படையில் யார் அதிக விலையை அரசுக்குக் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் வழங்க முடியும். வழங்க வேண்டும். அப்படித்தான் எந்தவொரு அரசாங்க வளங்களுமே பிரித்து வழங்கப் படுகின்றது. அதன்படி இந்த அலைப்பரவல்களை வேண்டுபவர்களுக்கு அரசாங்கம் ஏலத்தின் அடிப்படையில் பிரித்து வழங்க முடிவு செய்தது. அங்குதான் இந்த ஊழலுக்கு அஸ்திவாரமும் போடப் பட்டது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு உதாரணம் பார்க்கலாம். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஒரு பெரிய அளவிலான நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலம் சென்னையின் மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ளது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த நிலத்தை பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு வேண்டும் என்று கோருகிறார்கள். பலத்த போட்டி நிலவுகிறது. ஆனால் இருப்பதோ பத்து ஏக்கர் நிலம் மட்டுமே. இருக்கும் பத்து ஏக்கர்களுக்கோ ஆயிரக்கணக்கான கட்டுமான வியாபாரிகளும், பெரு நிறுவனங்களும் போட்டி போடுகிறார்கள். அரசாங்கத்திற்கோ அந்த நிலம் விற்பதன் மூலமான வருவாய் தேவைப் படுகிறது. ஏனெனில், வருவாயை வைத்து அரசாங்கம் நிறைய மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ளலாம். மக்களுக்கு அந்த வருவாயையை தக்க விதத்தில் பயன் படுத்தலாம். அப்படியானால் அரசாங்கம் யாருக்கு அந்த நிலத்தை பிரித்து வழங்க வேண்டும்?
அரசாங்கத்தின் ஆட்சியாளர்களுக்கா? அவர்களது உறவினர்களுக்கா? அதிகாரிகளுக்கா? அல்லது எந்த நிறுவனம் அதிகம் ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் தருகிறதோ அந்த நிறுவனங்களுக்கா? யாருக்குத் தர வேண்டும்? எப்படித் தர வேண்டும்? எலிமெண்டரி ஸ்கூல் பையனிடம் இந்தக் கேள்விவைக் கேட்டால் கூட மிக எளிதாக விடையைச் சொல்லி விடுவானே? நிலத்தின் மதிப்பை ஏலத்துக்கு விட்டு யார் அதிக விலைக்குக் கேட்கிறார்களோ அவர்களுக்கே அந்த நிலம் விற்கப் பட வேண்டும் என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?
இந்த ஒரு எளிய விடை இந்திய அரசாங்கத்திற்கு, அதிலும் உலகப் புகழ் பெற்ற பொருளாதார மேதையான மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் இயங்கும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் போகுமா? தெரியாமல் போய் விட்டது என்றுதான் அதிகாரபூர்வ அரசு அறிக்கைகள் சொல்கின்றன; அவரும் சொல்கிறார். கறைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரரான மிஸ்டர் உத்தமரான அப்பழுக்கற்ற தூய்மையாளரான திருவாளர் மன்மோகன் சிங்கனார் அவர்கள் தலைமையில் உள்ள அரசாங்கம் இது போன்ற ஒரு விற்பனையில் எந்தவித சந்தேகத்திற்கும், எந்தவித ஊழல்களுக்கும், எந்தவித முரண்பாடுகளுக்கும், எந்தவித லஞ்சங்களுக்கும், எந்தவிதமான சிபாரிசுகளுக்கும் இடமில்லாமல் அரசுக்கு அதிக பட்ச வருமானம் உள்ள வழியைத்தானே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன?
மன்மோகன் சிங் அவர்கள் தலைமையிலான ஊ பி ஏ (ஊழலைப் பின்பற்றும் ஏஜென்ஸி) செய்த ஒரு மாபெரும் அயோக்யத்தனத்தால் இன்று இந்தியாவுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு.
ஸ்பெக்ட்ரம் என்பது ஏன் ஒரு பெரும் விலை மதிப்புள்ள ஒரு வளமாகிறது?
ஸ்பெக்ட்ரம் எனப்படும் கம்பியில்லாத தொலைத் தொடர்பு, வலைப் பின்னல்களுக்கான ஊடகம். அரசாங்கத்தின் கட்டுப்பாடில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அளவுள்ள ஒரு வளம். நீர்வளம், நில வளம், விவசாய வளம், மனித வளம், கனிம வளம், மின் வளம், கடல் வளம், வன வளம், மலை வளம், நதி வளம் போல இதுவும் ஒரு வளம். ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு வளம். இந்தியாவின் வான் வெளி எப்படி கண்ணுக்குத் தெரியாத ஒரு வளமோ அதே போல வான்வெளியில் விரிந்திருக்கும் இந்த அலைப் பரவல்களும் ஒரு வளமே.
இந்த வளத்தை பெற உலக அளவிலும், இந்திய அளவிலும் பெரும் தொலைத் தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்குள் பலத்த போட்டி நிலவுகிறது. ஏன் பலத்த போட்டி? உலகத்திலேயே மிக அதிக அளவு செல் ஃபோன் பேசும் பயனர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள்.
இன்று இந்தியாவில் ஒரு மிகப் பெரிய நடுத்தர வர்க்கம் உருவாகி வருகிறது. அவர்களது வாங்கும் திறனும், சக்தியும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. செல் ஃபோன் பயன்பாடு என்பது இன்று வெறும் நடுத்தரவர்க்கத்தினரால் மட்டும் பயன் படுத்தப் படும் ஒரு சந்தை என்பதையும் தாண்டி கீழ் நடுத்தர மக்களிடம் பரவலாகப் புழங்கும் ஒரு சாதனமாகவும் மாறி வருகிறது. அதன் பயன்பாடும், அது பயன் படுத்தப் படும் விதமும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டும் புதிய பரிமாணங்களை அடைந்தும் வருகிறது.
ஆக இந்தியாவின் பல கோடிக்கணக்கான செல் ஃபோன் பயனர்களும் அவர்களின் பயன்பாடுகளும் அவை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான சந்தையும் உலக அளவில் பெரு நிறுவனங்களைக் கவர்ந்து அவர்கள் அனைவரையும் இந்தியச் சந்தைக்கு இழுத்து வருகிறது.
செல் ஃபோன் என்பது பேசுவதற்கு மட்டுமே பயன்படும் ஒரு தொலைபேசி சாதனமாக மட்டும் இன்று பயன் படுவதில்லை. இணையம், புகைப்படம், பங்கு வர்த்தகம், இணைய வர்த்தகம், பொழுது போக்கு என்று பல்வேறு விதமான செயல் பாடுகளுக்கும் செல்ஃ போன் என்ற ஒரே சாதனம் இன்று பயன் படுத்தப் பட்டு வருகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைக்கு ஒரு ஃபோன் விகிதம் செல்ஃபோன் வைத்திராத இந்தியர்களே கிடையாது என்ற நிலைக்கு இதன் சந்தை பெருத்து வருகிறது.
கிராமங்களில் விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் கூட செல்ஃபோன் பயன் படுத்தி வருகிறார்கள். இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் செல் ஃபோன் கோபுரங்கள் ஊடுருவி வருகின்றன.
செல் ஃபோன் சாதனம், அதில் பேசும் நிமிடங்களுக்கான கட்டணங்கள், அதில் இறக்கப் படும் விளையாட்டு மென்பொருள்கள் மற்றும் இசைகளுக்கான சந்தைகள், அதன் மூலம் செய்யப் படும் விளம்பரத்திற்கான சந்தை, வாங்கப் படும் பொருட்கள், பிற பயன்பாடுகள் என்று செல்ஃபோன் மூலமாக விளையும் உபரி வணிகத்தின் பெருக்கம் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ளவை.
பல கோடிக்கணக்கான செல் ஃபோன் பயனர்கள் இன்று இந்தியாவில் உருவாகி வருகிறார்கள். கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்தும் எந்தவொரு பொருளின் வியாபார மதிப்பும் பல கோடி மதிப்புள்ளவையாகவே இருக்கும்.
இவை அளிக்கும் மிகப் பெரிய உலகளாவிய வர்த்தக வாய்ப்பும் அவை ஏற்படுத்தும் சந்தைகளும் அதனால் விளையும் லாபங்களும் பிரமிக்கத் தக்கவை. ஆகவே இந்த செல்ஃபோன்களுக்குத் தேவைப் படும் அலைவரிசைகளின் உரிமைகளைப் பெறுவதிலும் உலக அளவில் பெரும் போட்டி நிலவி வருகிறது.
ஆக இந்த அலைப் பரவல் வளத்தினை உரிய முறையில் ஏலம் மூலமாக விநியோகித்திருந்தால் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் வரை நிதி ஆதாரத்தைப் நிச்சயமாகப் பெற்றுத் தந்திருக்கும். ஆனால் இது முறைகேடாக, மக்கள் விரோதமாக, அரசுக்குப் பெரும் நஷ்டத்தையும் தனியார்களுக்குப் பெரும் ஊழல் பணத்தையும் பெற்றுத் தரும் விதமாக அமைந்து விட்டது. இந்தியாவில் இதுவரை நடந்த அத்தனை ஊழல்களின் ஒட்டு மொத்த மதிப்பினைக் கூட்டினாலும் அதை விட பல மடங்கு அதிக அளவில் இதில் பொது மக்களாகிய உங்களுக்குச் சேர வேண்டிய பணம் கையாடல் செய்யப் பட்டிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு முன்னோட்டம்:
ஸ்பெக்ட்ரம் ஊழலை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால் இதன் பின்ணணியில் அமைந்த அரசியல் சூழ்நிலைகளைச் சுருக்கமாகப் பார்த்து விடலாம்.
சென்ற முறை திரு. மன்மோகன் சிங் தலமையில் அரசு அமைந்த பொழுது காங்கிரஸ் கட்சி, திமுக போன்ற உதிரி மாநிலக் கட்சிகளின் தயவிலேயே ஆட்சியைப் பிடித்தது. அப்பொழுது மத்திய அரசின் மிக முக்கியமான துறையான தொலைத் தொடர்புத் துறை மந்திரிப் பதவியை திமுக வின் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான திரு கருணாநிதி தன் மருமகனின் மகனான தயாநிதி மாறனுக்குப் பெற்றுத் தந்தார்.
தயாநிதி சன் டிவி எனப்படும் மாபெரும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். அப்படி ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் முதலாளி ஒருவரிடம் அந்தத் துறையின் மந்திரிப் பதவிப் பொறுப்பும் அளிக்கப் படுவது நேர்மையான ஒரு செயலாக இருக்காது. Conflict of Interest எனப்படும் நியாயமில்லாத ஒரு பதவி வழங்கலாக அது கருதப் பட்டு நியாயப் படி தயாநிதி மாறனுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப் பட்டிருக்கவே கூடாது. ஆனால் நமது மிஸ்டர் க்ளீன் மன்மோகன் சிங் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டணிக் கட்சியின் நிர்ப்பந்தத்தில் அந்தப் பதவியை தயாநிதி மாறனுக்கே அளித்தார்.
மேலும் தயாநிதி மாறனுக்கு எந்தவித அனுபவமும் இல்லாத நிலையில் மூத்த அனுபவம் உள்ள அரசியல்வாதிகளுக்கு அளிக்கப் படும் கேபினட் பொறுப்பு மந்திரி பதவி அளிக்கப் பட்டது பலரது கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது. ஆனால் நேர்மை, நியாயம், விதிமுறைகள், அறவுணர்வு போன்ற லட்சியங்கள் கிஞ்சித்தும் இல்லாத காங்கிரஸ் கட்சி அவற்றையெல்லாம் குப்பையில் வீசி எறிந்து விட்டு மாறனுக்கு முக்கியமான துறையை வழங்கியது. உண்மையில் இந்தத் துறையின் மேல் திமுக கண் வைத்ததன் காரணமே, இந்தத் துறையின் மூலமாகச் சாத்தியப் படும் விநியோகமும் அதன் மூலமாக செய்யக் கூடிய பெரும் ஊழலின் சாத்தியக் கூறுகளுமேயாகும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதை இந்தப் பதவிக்காக அக்கட்சி செய்த பெரும் நிர்ப்பந்தங்களும் பேரங்களுமே நிறுவத் தேவையான சாட்சிகளாக அமைகின்றன.
குடும்ப உறுப்பினரான தயாநிதி மாறனுக்கு முக்கியமான துறையைப் பெற்றுத் தந்து விட்டாலும் கூட அவர்கள் குடும்பத்துக்குள் நடந்த சொத்துத் தகராறுகளின் காரணமாக பாதியிலேயே அவரது பதவி பறிக்கப் பட்டு விட்டது. அந்த நேரத்தில் அது வரையில் சுற்றுச் சூழல் துறை மந்திரியாக இருந்த மற்றொரு திமுக மந்திரியான ஆ.ராஜாவிடம் தொலைத் தொடர்புத் துறை அளிக்கப் பட்டது. அதில் இருந்து இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்ச கட்ட கியருக்கு மாறியது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது எப்படி?
ஆ.ராஜா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் மந்திரியாக இருந்த பொழுதே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. லஞ்சம் வாங்கிக் கொண்டு முறை கேடான கட்டிடங்கள் கட்டுவதற்கு சூழல் துறையின் அனுமதியை அளிக்கிறார் என்பது அவர் மீது பல தரப்புக்களில் இருந்தும் எழுந்த முக்கியக் குற்றசாட்டு. “தந்திரமும், தரகும் செழித்து வளர்ந்த தலைநகரில் ராஜாவுக்கு புதிய நண்பர்கள் பலர் சுற்றுச் சூழல் துறையில் உருவாகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் வணிகத்தின் அதிபர்கள்” என்றெல்லாம் புலனாய்வுப் பத்திரிக்கைகள் தெரிவித்தன. பிரதமர் ராஜா மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருந்தன.
இந்தத் தருணத்தில் தமிழ் நாட்டில் மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தாருக்கும் பெரும் உள்குடும்ப யுத்தம் ஒன்று துவங்கியிருந்தது. 60கள் வரையிலும் கூட பணத்தட்டுப்பாட்டில் தடுமாறிய கருணாநிதி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு இப்போது பல்லாயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டி விடுகிறது. சன் டிவி என்னும் ராட்சச தொலைக்காட்சி நிறுவனம் அவர் குடும்பத்தில் இருந்து கிளைகள் பிரிந்து அசுர வேகத்தில் மாநில, மத்திய அரசுகளில் அவரது கட்சிக்கு இருந்த செல்வாக்கின் மூலம் வளர்கிறது. அதன் பாகப்பிரிவினை யுத்தத்தின் நடுவே அப்பாவி இளைஞர்கள் மூவர் மதுரையில் எரித்துக் கொல்லப் பட, சன் டிவி பாகஸ்தர்களில் ஒருவராகிய தயாநிதி மாறனின் பதவி பறிக்கப் பட்டு, அந்தப் பதவி ஏற்கனவே தலைநகர் டெல்லியில் ஊழல் வித்தகராக மாறிவிட்டிருந்த ஆ.ராஜாவிடம் அளிக்கப் படுகிறது.
ஊடகங்கள் சொல்லும் கதையின்படி, சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாகிய ராஜா தன் ரியல் எஸ்டேட் படை சூழ சஞ்சார் பவன் அலுவலகத்தில் தொலைத் தொடர்பு மந்திரியாகிறார். அவரது தரகர்கள் அனைவரும் புதிய துறைக்கு ராஜாவுடன் சேர்ந்தே இடம் பெயர்கிறார்கள். புதிய துறையில் பணம் கொழிக்கும் வாய்ப்புக்களை இனம் காண்கிறார்கள். வனத்துறையில் சில கோடிகள்தான் கிட்டின, இங்கு ஒரு பெரிய தங்கச் சுரங்கமே ஸ்பெக்ட்ரம் விநியோகத்தின் மூலமாக மறைந்து கிடக்கிறது எனக் கண்டு பிடித்துக் கொடுக்கிறார்கள். புதிய துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விநியோகிக்க வேண்டிய தங்கச் சுரங்கம் இருப்பதைக் கண்டறியும் ராஜா அதை கடத்திச் சென்ற திட்டம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல். தங்கச் சுரங்கத்தை வெட்டிக் கொள்ளையடிக்கும் திட்டம் உருவாகிறது.
அப்படி ஏற்கனவே ராஜாவுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு சக்தி வாய்ந்த இடைத் தரகர்தான் ராஜாவின், ஸ்பெக்ட்ரத்தின், ஏன் இந்தியாவின் தலைவிதியையே தீர்மானிக்கும் சகல வல்லமை படைத்த அதிகார பீடமாக மாறுகிறார் என்று ஹெட்லைன்ஸ் சானல் சொல்லுகிறது. அவரைப் பற்றி பின்னால் பார்க்கலாம். முதலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் எப்படி நடத்தப் பட்டது என்பதை பார்த்து விடலாம்.
ராஜாவின் ஊழல்களா? அல்லது ஊழல்களின் ராஜாவா?
1900ம் ஆண்டு சென்னை போட் கிளப் நிலத்தில் ஒரு கிரவுண்டு என்ன விலையில் விற்றதோ அதே விலையை 2010ல் அதே கிரவுண்டுக்கு யாராவது விற்கத் தீர்மானம் செய்வார்களா? செய்தார் ராஜா ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில்!
2001ம் ஆண்டு வெறும் 40 லட்சம் பேர்களே செல்ஃபோன்கள் பயன் படுத்துபவர்களாக இந்தியாவில் இருந்தார்கள். இந்த செல் ஃபோன் பயனர்களின் எண்ணிக்கையின்படி ஒரு விலை 2001ல் தீர்மானிக்கப் பட்டது.
2001ல் 40 லட்சமாக இருந்த செல்ஃபோன் பயனர்களின் எண்ணிக்கை 2008ல் 30 கோடியாக உயர்ந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. பயனர்கள் அதிகரித்துவிட்ட 2008ம் ஆண்டிற்கான விலை, பல ஆண்டுகள் முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகத்தான் இருக்கும். அப்படி, ஒரு சேவையின் தேவை நூறு மடங்கு அதிகரித்திருக்கும் பொழுது அதன் விலை குறைந்தது ஒரு பத்து மடங்காவது அதிகரித்திருக்க வேண்டும் அல்லவா? அதுதான் நடக்கவில்லை என்று பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. ஏன் நடக்கவில்லை? மேலே படியுங்கள்.
ஸ்பெக்ட்ரம் வரிசைகளை 2008ம் ஆண்டில் விற்க வேண்டிய அடிப்படை விலையாக 2001ல் நிர்ணயத்த குறைந்த விலையையே முடிவு செய்கிறார் ராஜா. டிராய் அமைப்பும், பத்திரிகைகளும், பிரதமர் அலுவலகமும் இந்த குறைந்த விலை நிர்ணயத்தை மாற்றச் சொல்லியும் பிடிவாதமாக அந்தக் குறைந்த விலையே அடிப்படை விலை என்று ராஜா நிர்பந்தித்து விடுகிறார் என்பது ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
அவர்களது கூற்றுப்படி, விலையைக் குறைவாக நிர்ணயித்ததும் அல்லாமல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வரிசைகளை ஏலம் மூலம் விற்பனை செய்யாமல் மிகவும் ரகசியமாக, சந்தேகம் தரும் வகையில், முறையான நெறிமுறைகளைப் பின்பற்றாமல், முறைகேடாக, யாருக்கும் அறிவிக்காமல் பெரிய நிறுவனங்கள் யாரும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்காமல், ராஜாவே இந்த விற்பனையை தனியாக நடத்தி முடித்து விடுகிறார்.
அதாவது ஏலத்திற்கு விடாமல் யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே ஸ்பெக்ட்ரம் என்று அறிவித்து விடுகிறார். ஒரு சில ஊர் பேர் தெரியாத, திடீரென்று முளைத்த, ரியல் எஸ்டேட் கம்பெனிகள்தான் முதலில் வந்தன என்று அறிவித்து விடுகிறார். அந்த சந்தேகத்திற்கு உரிய ரகசியமான கம்பெனிகளுக்கே ஸ்பெக்ட்ரம் எல்லாம் சொந்தம் என்று சொல்லி, முன்கூட்டியே சதித் திட்டம் போட்டு வைத்திருந்த குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரெம் வரிசைகளை விற்று விட்டு, அதற்குப் பின்னால் முறையாக வந்த பெரும் நிறுவனங்கள் அனைத்திற்கும் பெப்பே காட்டி விடுகிறார் ராஜா.
“சரி இதனால் அரசுக்கு என்ன நஷ்டம்? விற்பனைதான் நடந்து விட்டதே? காசுதான் வ்ந்து விட்டதே?” என்று அப்பாவித்தனமாக நீங்கள் யாரேனும் கேட்கலாம். ஒரு சில ஊடகங்கள் கசியவிடும் குற்றச்சாட்டு உண்மையானால், உங்களது புரிதல் ஏன் சரி இல்லை என்பதையும் இப்படி பின்வாசல் வழியாக செய்த விற்பனை மூலமாக அரசுக்கு எப்படி ஒரு பெரும் இழப்பு ஏற்பட்டது என்பதையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1. முதலில் அரசிற்குச் சொந்தமான, தேவை மிக அதிகம் உள்ள ஒரு மாபெரும் வளத்தை, அந்த வளத்தைப் பெற கடும் போட்டிகள் நிறைந்த ஒரு சூழலில், அதன் அடிப்படை விலையைத் தற்கால தேவையைப் பொருத்தே நிர்ணயித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் உள்நோக்கத்துடனும் சதித்திட்டத்துடனும் 2001ல் குறைந்த பயனர்கள் இருந்த சூழலில் தீர்மானிக்கப் பட்ட விலையை நிர்ணயித்தது ராஜாவின் முதல் குற்றம்.
2. இரண்டாவதாக, அப்படியே குறைந்த பட்ச அடிப்படை விலையை நிர்ணயித்திருந்தாலும் கூட கடும் போட்டி நிலவும் சூழலில் அந்த வளங்களை ஏலம் விடுவதின் மூலமாகவே விற்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி ஏலத்திற்கு விட்டிருந்தால் ராஜா விற்ற அடிப்படை விலையை விட பத்திருபது மடங்கு அதிகமாக அவை விலை போயிருக்கும். அரசுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய்கள் வருமானத்தை ஈட்டித் தந்திருக்கும்.
அப்படி ஏலத்திற்கு விடாமல் தான்தோன்றித்தனமாக ரகசியமான முறையில் அனைத்து நிறுவனங்களையும் போட்டி போட விடாமல் முன்னால் வருபவர்களுக்கே விற்பேன் என்று கள்ள ஆட்டம் ஆடி குறைந்த விலைக்கு விற்று அரசுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுத்தியது ராஜாவின் இரண்டாவது குற்றம்.
3. சரி அப்படி குறைந்த விலைக்கு வைத்து அவர் யாருக்கு விற்றிருக்கிறார் என்று பார்த்தால் அங்குதான் அவரது சகுனி வேலைகள் யாவும் அம்பலத்துக்கு வருகின்றன என்பது ஊடகங்கள் சொல்லும் கதை.
முதலில் சில தில்லு முல்லுகள் செய்து முறையாக இந்தத் தொழிலில் இருக்கும் பெரு நிறுவனங்கள் எவையும் விண்ணப்பம் சமர்ப்பிக்காமல் செய்து விடுகிறார். அதாவது விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய நேரம் காலாவதியாகி விட்டது என்று சொல்லி பெரிய நிறுவனங்களை நிராகரித்து விட்டு தனக்கு வேண்டப் பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே விற்று விடுகிறார். அந்த நிறுவனங்கள் எவை என்று பார்த்தால் நமக்கு அடுத்த கடும் அதிர்ச்சி காத்திருக்கிறது.
ராஜா முதலில் விற்பனை செய்த நிறுவனங்கள் இரண்டு - ஸ்வான் என்ற நிறுவனமும், யுனிடெக் என்ற நிறுவனமும். இந்த இரண்டு நிறுவனங்களும் முதலில் தொலைத் தொடர்பு நிறுவனங்களே அல்ல. ரியல் எஸ்டேட் கம்பெனிகள்.
எந்தவிதமான தொலைத் தொடர்பு கட்டுமானங்களிலும் அனுபவம் இல்லாத, முதலீடு செய்யாத நிறுவனங்கள். அவர்கள் ரியல் எஸ்டேட் துறையிலாவது ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் அவைகள் அதிலும் ஈடுபட்டவை அல்ல. புதிதாக இந்த விற்பனையை வாங்குவதற்காகவே திடீரென்று முளைத்த கம்பெனிகள்.
இவை எங்கிருந்து வந்தன? யார் உருவாக்கினார்கள்? இவைகளுக்கும் ராஜாவுக்கும் என்ன சம்பந்தம்? அவற்றிற்கும் கருணாநிதியின் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் “தி பயனீர்”, “ஹெட்லைன்ஸ் டுடே”, “டைம்ஸ் நௌ” போன்ற ஊடகங்கள் தருகின்றன. அவர்கள் சொல்லும் தகவல்களின்படி இந்த ஊழல் மிகுந்த எச்சரிக்கையுடன், நேரடியாகக் குற்றம் சாட்ட முடியாதபடி வடிவமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் அப்படி என்னதான் சொல்லுகிறார்கள் ?
ஊர் பேர் தெரியாத இரு கட்டிட வணிக நிறுவனங்களுக்கு கடும் தொழில்நுட்ப அனுபவமும் அறிவும் தேவைப் படும் ஒரு புதிய தொழில்நுட்ப வளம் அடிமாட்டு விலைக்கு விற்கப் படுகிறது. ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்ற கதையாக, கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இந்த வளம் விற்கப் பட்டிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் போன்ற ஒரு உயர் தொழில்நுட்பம் கோரும் வளத்தை சம்பந்தமேயில்லாமல் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு எதற்காக விற்க வேண்டும்?
ஏன் 2008ல் 2001ல் இருந்த விலை வைத்து விற்கப் பட வேண்டும்?
ஏன் தொலைத் தொடர்பிலும் செல்ஃபோன் தொழிலிலும் பழம் தின்று கொட்டை போட்ட உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் எதுவும் இந்த விற்பனையில் கலந்து கொள்ள முடியாமல் துரத்தி அடிக்கப் பட்டன?
ஏன் முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று விற்பனை உத்தி மாற்றப் பட்டது? இது என்ன பள்ளிக்கூடத்தில் வைக்கப் படும் ஓட்டப் பந்தயமா?
ஒரு சில ஊடகங்கள் எழுப்பும் மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒவ்வொன்றாக அதே ஊடகங்கள் தரும் பதிலைக் காணும் பொழுது இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலின் முழு மர்மங்களும் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பித்து, இதில் யார் யார் பங்குதாரர்கள்? யார் யார் கூட்டாளிகள்? யார் யார் குற்றவாளிகள்? என்பவை தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும். அவற்றை ஒவ்வொன்றாக விடுவித்து இந்த உலக மகா ஊழலின் புதிரை விடுவிக்கலாம். சற்று பொறுமையாகவும் ஆழமாகவும் இவற்றைப் படித்து உள்வாங்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்.
இந்த ஊழல் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பெரும் அளவில் பாதிக்கக் கூடியது.
இந்த ஊழல் குறித்து ஊடகங்கள் தெரிவிப்பவை என்ன?
அறிந்துகொள்ள மேலே தொடருங்கள்.
(தொடரும்)
மீண்டும் டோண்டு ராகவன்.
இந்தக் கட்டுரையை இங்கும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தீராநதி நேர்காணல்- 2006
-
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை.
இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய
ஒரு படை...
8 hours ago
1 comment:
அங்கேயே படித்தேன். மறுபகிர்விர்க்கு நன்றி
Post a Comment