கீழே உள்ள கட்டுரை தமிழ் ஹிந்துவில் வந்தத் தொடரின் இரண்டாம் பகுதி. பலர் இதைப் பார்க்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆகவே இங்கும் அதை போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி: TamilHindu.com
நண்பர் விஸ்வாமித்ரா அவர்களும் அனுமதி தந்து விட்டார். அவருக்கும் என் நன்றி.
இப்போது தொடருக்கு போவோம்
நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 02
விஸ்வாமித்ரா
முந்தைய பகுதி:
ஸ்பெக்ட்ரம் அலைப்பரவல் சம்பந்தேமேயில்லாமல் பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப் பட்டது என்று ஒரு சில ஊடகங்கள் சொல்வதைப் பார்த்தோம்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் எந்தவொரு பாமரனுக்கும் எழும் சில அடிப்படைக் கேள்விகளையும் அதற்கு ஊடகங்கள் தரும் பதில்களையும் கீழே காணலாம்:
1. ஏன் தொலைத் தொடர்பு சம்பந்தப்பட்ட ஒரு உயர் தொழில்நுட்ப வளமான ஸ்பெக்ட்ரம் அலைப்பரவல் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விற்கப் படாமல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்கப் பட்டன?
நியாயமான கேள்வி. இந்த நிறுவனங்களுக்கும் ஸ்பெக்ட்ரத்திற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. இருந்தாலும் இந்தக் கம்பெனிகளுக்கு அரசாங்கம் தனது அரிய வளம் ஒன்றை தானம் செய்தது போல 2001ல் நிர்ணயிக்கப் பட்ட விலைக்கு விற்றிருக்கிறது.
ஏன்?
ஏனென்றால் இந்த நிறுவனங்கள் எல்லாம் மந்திரி ராஜாவின் மற்றும் அவரது கட்சித் தலைவரின் உறவினர்களின் பினாமி நிறுவனங்கள் என்று சொல்லுகின்றன ஊடகங்கள். இதை பயனீர் பத்திரிக்கையும் (The Pioneer), அதன் பிறகு அரசு உளவு அமைப்பான சிபிஐயும் கண்டு பிடித்திருக்கின்றனர். ஆக ஆதாயம் இல்லாமல் ஆண்டிமுத்து ராஜா இந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்கவில்லை என்கின்றனர் இவர்கள்.
அவர்கள் கூற்றுப்படி, அரசு வளத்தைக் குறைந்த விலைக்கு தனக்கும் தனக்கு வேண்டப் பட்டவர்களுக்கும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். கடைத்தேங்காயை எடுத்துத் தனக்குத் தானே உடைத்துக் கொண்டிருக்கிறார்.
2. அப்படி இவரது பினாமி கம்பெனிகளுக்கு விற்றதால் இவருக்கு என்ன லாபம்?
நல்ல சந்தேகம்.
18_06_2008_001_0272001ல் முடிவு செய்யப் பட்ட விலையின் அடிப்படையிலேயேதான் ஸ்பெக்ட்ரம் விற்கப் பட வேண்டும் என்று இவர் பிடிவாதமாக பல எதிர்ப்புக்களையும் மீறி முடிவு செய்யும் பொழுதே மத்திய மந்திரி சபை சுதாரித்துக் கொண்டு இவரைக் கட்டுப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால், லேசான சில எதிர்ப்புக்களுடன் இவர் தொடர்ந்து தன் விற்பனையை மேற்கொள்கிறார்.
அப்படி மேற்கொள்ளும் பொழுது திட்டமிட்டு குறிப்பிட்ட சில கம்பெனிகளுக்கு மட்டுமே இந்த விற்பனையை செய்து முடித்து விடுகிறார். ஏனென்றால் இவர் விற்ற நிறுவனங்களுக்கும் இவருக்கும், இவரது கட்சித் தலைவரின் குடும்பத்தினருக்கும் தொடர்புகள் இருக்கின்றன என்று ஊடகங்கள் சொல்லுகின்றன. அடிப்படையில் இவை யாவுமே இவரது மறைமுகமான நிறுவனங்களே அல்லது இவருக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே என்பதை சிபிஐ இப்பொழுது கண்டு பிடித்திருக்கிறது என்பதையும் இந்த ஊடகங்கள் மறக்காமல் சொல்லுகின்றன.
பண்டோராவின் பெட்டி போல ஆரம்பம் எது, முடிவு எது, குற்றம் செய்தவர்கள் யார் என்பவற்றைத் தெளிவாகச் சொல்ல முடியாதபடி வலைப் பின்னல்களாக மிகக் கச்சிதமாக இந்த ஊழல் நடந்திருக்கிறது.
இவர் உரிமைகளை விற்றதாகச் சொல்லப்படும் சில கம்பெனிகளின் வண்டவாளங்களைப் பார்க்கலாம்.
முதலில் ஸ்வான் என்னும் கம்பெனிக்கு 13 வட்டாரங்களுக்குரிய ஸ்பெக்ட்ரம் பங்குகள் 1537 கோடி ரூபாய்களுக்கு விற்கப் பட்டிருக்கின்றன என்கின்றன தகவல்கள். அந்த ஸ்வான் நிறுவனமோ தன்னை ஒரு கட்டிட நிறுவனமாக பதிவு செய்துள்ளது. ஏற்கனவே அனில் அம்பானி வசம் இருந்த இந்த நிறுவனத்தை இன்னொருவர் மூலமாக வாங்கி, இந்த ஸ்பெக்ட்ரத்தை வெறும் 1537 கோடி ரூபாய்களுக்கு முதலில் அரசிடம் இருந்து இந்தக் கம்பனியார் வாங்குகிறார்கள். வாங்கிய கையோடு எலிஸாட் என்றொரு மத்திய கிழக்கு நிறுவனம் ஒன்றிற்கு 4500 கோடி ரூபாய்க்கு 100% மேல் லாபம் வைத்து விற்கிறார்கள். பின்னர் அந்தக் கம்பெனியோ வேறு ஒரு நிறுவனத்திற்கு இன்னும் அதிக விலைக்கு வாங்கிய பங்குகளை விற்கிறது!
இதைப் போலவே இன்னும் சில வட்டாரங்களுக்கான உரிமை யுனிடெக் என்றொரு மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்கப் பட்டிருக்கிறது. அந்த நிறுவனமோ அரசிடம் இருந்து 22 வட்டாரங்களுக்கு 1651 கோடி ரூபாய்களுக்கு வாங்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமையை டெல்நார் எனப்படும் நார்வே கம்பெனி ஒன்றிற்கு 6120 கோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கிறது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன.
இந்த பரிவர்த்தனையில் கிடைத்த கொள்ளை லாபம் பல்வேறு இடைத்தரகு கம்பெனிகள் மூலமாக கடத்தப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுக்கு மாற்றப் பட்டிருக்கின்றது.
அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன.
இந்தத் தகவல்களின் சாரம் என்ன ? scams2
நீங்கள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறீர்கள். அதற்கு மத்திய அரசு உடந்தையாகவோ அல்லது மறைமுக கூட்டாளியாகவோ இருந்திருக்கிறது.
நம் சொந்தப் பணம் நூறு ரூபாய்கள் பிக்பாக்கெட் அடிக்கப் பட்டால் கூட கிடந்து பதறும் பொதுஜனம், திருடியவனைப் பிடிக்கத் துடிக்கும் பொது மக்கள், தங்கள் பொதுப்பணம் 1 லட்சம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப் பட்டிருந்தும் கொஞ்சம் கூட சுய பிரக்ஞை இன்றி , சுய உணர்வு இன்றி, கவலை இன்றி, விழிப்புணர்வு இன்றி கொள்ளையடிக்கும் அதே அரசியல்வாதிகளைத் துதி பாடி, புகழ்ந்து, பாராட்டித் திரிகிறார்கள்.
இப்படி ஒரு நாட்டின் மக்கள் இருந்தால் அந்த நாடு எங்கனம் உருப்படும்?
3. 2ஜி குறைந்த விலைக்கு விற்கப் பட்டிருக்கிறது என்பது எப்படி உறுதியாகத் தெரியும்?
இப்பொழுது 3ஜி ஸ்பெக்ட்ரத்திற்காக முறையான ஏலம் நடந்து வருகிறது. கோர்ட், மற்றும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பினால் ராஜாவின் விருப்பத்தை மீறி இந்த 3ஜி ஏலம் வேறு ஒரு மந்திரி குழுவின் தலைமையில் நடந்து வருகிறது. அதன் விற்பனை நிலவரத்தின் படி 2 ஜி விற்பனை அடிமாட்டு விலைக்கு விற்கப் பட்டிருப்பது உறுதிப் பட்டு விட்டது.
சந்தை நிலவரப்படி அரசாங்கமே நேரடியாக உண்மையான தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலம் விட்டால், 1000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட 2ஜி அலைவரிசைக்கு ஈடான 3ஜி அலைவரிசையை கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கலாம் என்பதைத்தான் தற்பொழுது நடை பெறும் 3 ஜி ஏலம் உறுதிப் படுத்துகிறது.
அதன் மூலம் அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.
2ஜி மோசடி விற்பனைக்கும் 3 ஜி ஏல விற்பனைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும். தனது பினாமி கம்பெனிகளுக்கு ஆ.ராஜா விற்ற விலைக்கும் தற்பொழுது சந்தை நிலவரப் படி முறையான ஏலத்தில் போகும் விலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கீழ்க்கண்ட பட்டியலில் காணலாம்.
(இது ஒரு சாம்பிள் மட்டுமே. மொத்தப் பட்டியல் அல்ல. அதனால் கூட்டினால் லாபக் கணக்கு 1 லட்சம் கோடி வராது.)
ஆக நியாயமான முறையில் பல்வேறு வட்டாரங்களுக்கான 2ஜி ஸ்ப்கெட்ரம் உரிமை ஏலத்தில் விடப் பட்டு விற்கப் பட்டிருக்குமேயானால் 3ஜி ஸ்பெக்ட்ரத்திற்கு கிடைத்த அதே அமோக விலை கிட்டியிருக்கும் என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் இப்பொழுது உறுதியாகியிருக்கிறது என்கின்றன இந்த ஊடகங்கள்.
இப்பொழுது மீண்டும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப் பட்ட நிறுவனங்களின் ஜாதகங்களை நாம் அலசலாம்.
ஸ்பான் நிறுவனத்தின் பின்னணி என்ன? அது எப்படி தனக்குக் கிடைத்த லாபத்தை யார் கண்களிலும் படாமல் ஒளித்து வைக்கிறது?
முதலில் ஸ்பான் எனப்படும் நிறுவனம். இந்த நிறுவனத்தை யார் துவக்கியது? பின்னால் யார் வாங்கினார்கள் ? இதன் முதல் கட்ட முதலீடு என்ன? இவர்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்குவதற்குத் தேவையான பணம் எங்கிருந்து வந்தது? அதற்கு முறையான கணக்குக் காட்டப் பட்டுள்ளதா? வரி கட்டப் பட்டுள்ளதா? எவ்வளவு நாட்கள் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள்? இவர்கள் பின்ணணி என்ன? ஸ்பெக்ட்ரத்தை வாங்கியவுடன் அந்த உரிமையை யாருக்கு விற்றார்கள்? அந்த விற்பனையின் லாபத்திற்கு வரி கட்டப் பட்டதா அந்த லாபப் பணம் எங்கு சென்றது? யாருக்குப் போனது ? எந்தக் கணக்கிற்கு சென்றது? raja-kanimozhi-nexus
இந்தக் கேள்விகளையெல்லாம் ஆராயும் பொழுது இந்த மொத்த விற்பனையினால் ஏற்பட்ட லாபப் பணம் அனைத்துமே கனிமொழி, ராஜா, கருணாநிதியின் துணைவியான ராஜாத்தி அம்மாள் ஆகியோர்களுக்குச் சென்றிருப்பதாக சி பி ஐ கண்டுபிடித்துள்ளதாக சிபிஐ வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆவணங்களை மேராமன் என்ற பதிவில் நீங்கள் நேரடியாகப் படிக்கலாம். தளம் இங்கே.
இதை எப்படி நிகழ்த்தினார்கள் என்பதைச் சொல்லும் இந்தத் தகவல்களைப் படிக்கும் பொழுது நமக்குத் தலை சுற்றுகிறது. ஒரு சின்ன வட்டத்தை மட்டும் இங்கு கவனிக்கலாம்.
ஸ்வான் என்ற நிறுவனத்தை முதலில் யார் என்றே தெரியாது என்று ராஜா மறுத்திருக்கிறார். அவர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள். எனக்குத் தெரியவே தெரியாத நிறுவனங்கள். அவர்கள் முதலில் வந்தார்கள், ஆதலால் நான் முதலில் கொடுத்து விட்டேன் என்று ஒன்றுமே தெரியாத அப்பாவி போல, வாயில் விரலைக் கொடுத்தால் கடிக்கக் கூடத் தெரியாத அப்பாவிச் சிறு குழந்தை போல ராஜா பேசியிருக்கிறார். ஆனால் ஸ்வான் நிறுவனத்தின் பங்குதாரர்களைத் தேடினால் அது சுற்றிச் சுற்றி ராஜாவுக்கு நெருங்கியவர்களிடம் வந்து முடிகிறது என்கின்றன இந்தத் தகவல்கள்.
அந்த ஊடகத் தகவல்களின் கூற்றுப் படி, ஸ்வான் நிறுவனத்தை 2006லேயே ஷாகித் பால்வா என்பவர் ராஜாவின் கட்டளையின் பெயரில் வாங்கியிருக்கிறார். அதன் உரிமையாளர்களாக மொரீஷியஷில் உள்ள பாரட் இன்வெஸ்ட்மெண்ட்ஸின் உரிமையாளர்களான டைகர் டிரஸ்டீஸ். அதன் உரிமையாளர்கள் இந்தியப் பெருங்கடல் தீவு ஒன்றில் உள்ள ஸீப்ரா இன்வெஸ்ட்மெண்ட்ஸ். இப்படி வனவிலங்குகளின் பெயர்களில் போலியாக வெளிநாடுகளில் பதிவு செய்யப் பட்ட ஃபோர்ஜரி நிறுவனங்களின் பெயர்களில் இந்த ஸ்வான் நிறுவனத்தின் உரிமை போய்க் கொண்டேயிருக்கிறது.
நம் தொன்மக் கதைகளில் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி உள்ள ஒரு குகையில் உள்ள கிளியிடம் ராட்சதனின் உயிர் இருப்பது போலவே ராஜா விற்பனை செய்த இந்த போலிக் கம்பெனிகளின் உண்மையான உரிமையாளர்கள் கண்டு பிடிக்கவே முடியாத பல்வேறு அடையாளங்களில் மர்மமான பெயர்களில், தூர தேசங்களில் உள்ள தீவுகளில் ஒளிந்திருக்கிறார்கள். அவர்களின் கணக்கு யாவுமே இறுதியில் ராஜாவின் அல்லது அவரது எஜமானர்களின் கணக்காக இருக்கவே செய்யும் என்பதை யாரும் எளிதில் கண்டு பிடித்து விட முடியாது.
ஒரு நேர்மையான அரசாங்கம் முறையாக விசாரிக்குமானால் இந்த வெளிநாட்டுக் கணக்குகளில் கடத்திச் செல்லப் பட்டுப் பதுக்கி வைக்கப் பட்டுள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் வெளிவரும். அதன் உண்மையான உரிமையாளர்களின் பெயரும் வெளி வரும். அது வரை இவர்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது. imgname-saudi_and_bae_threats_drop_the_corruption_probe-50226711-corruption
ஸ்வான் கம்பெனியை சையத் ஜலாலுதீன், முகமது காதீர் என்ற இரு கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ‘ஜென் எக்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரால் வாங்குகிறார்கள். அந்த நிறுவனத்திற்கும் துபாயைச் சேர்ந்த இடிஏ என்ற நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளது. (இடிஏ நிறுவனத்திலும் கீழக்கரைக் காரர்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.)
அந்த நிறுவனத்திற்கு தமிழ் நாட்டின் புதிய சட்டசபை, மேம்பாலங்கள் போன்ற எண்ணற்ற கட்டுமான காண்டிராக்டுகள் வழங்கப் பட்டுள்ளன என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக ஸ்வான் நிறுவனம் தான் விற்ற லாபத்தை தனது எண்ணற்ற துணை நிறுவனங்கள் மூலமாகக் கடத்திக் கடத்தி இறுதியில் யாருமே கண்டுபிடித்து விட முடியாத வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்து விடுகிறது. வெட்ட வெட்ட முளைக்கும் மயில் ராவணன் கதை போலத் தோண்டத் தோண்ட ஒரு கம்பெனியின் பின் இன்னொரு கம்பெனியாக முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. திட்டமிட்டு மிகத் திறமையாக இந்த ஊழலைச் செய்திருக்கிறார்கள். இதற்கு உடைந்தையாக பல்வேறு இடைத்தரகர்களும் செயல் பட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது. இந்திய அரசின் பட்ஜெட்டையே தொடும் அளவுக்குப் பணம் கையாடல் செய்யப் பட்டிருக்கிறது. இதை ஒருவர் கூடவா கண்டு பிடிக்கவில்லை? எதிர்க்கவில்லை? ஒரு அரசு ஏஜென்சி கூடவா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை? நடவடிக்கை எடுக்கவில்லை?
நியாயமான கேள்விகள்தான்.
2008ல் இந்த பரிவர்த்தனை நடந்தது. நடப்பதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகளும், பயனீர் போன்ற பொறுப்பான பத்திரிகைகளும், சுப்ரமணியன் சுவாமி போன்ற சிலரும், இந்த ஊழலின் ஆரம்ப கட்ட நிலையிலேயே அரசாங்கத்திற்குத் தங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
ஆனால் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு இவர்களின் எதிர்ப்புக்களை சட்டையே செய்யவில்லை. சும்மா, மேம்போக்காக எல்லாம் முறையாக வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதோடு சரி.
அரசிடம் முறையிட்டால் நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த எதிர்கட்சிகள் இந்தியாவின் பல்வேறு அமைப்புகளிடம் முறையிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக டெல்லி ஹைக்கோர்ட் இந்த ஊழலை விசாரித்து சினிமாக் கொட்டகைகளில் டிக்கெட் விற்பது போல 2ஜி ஸ்பெக்ட்ரத்தை விற்றிருக்கிறார்கள் என்று கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் காம்ப்ட்ரோலர் ஜெனரல் அமைப்பு ஸ்பெக்ட்ரம் விற்பனையை விசாரித்து அரசுக்கு 25000 கோடி வரையிலான பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தன் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. ஏன் காங்கிரஸ் எம் பிக்கள் கூட இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி சகல தரப்புகளிலும் வந்த அனைத்துக் கண்டனங்களும் கூட, இந்த ஊழலின் மையப் புள்ளியான ராஜாவை அசைக்கவே முடியவில்லை. ஏனென்றால் ராஜாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிபூரண ஆசிகளும் பாதுகாப்பும் இருக்கின்றன என்று மறைமுகமாகக் குற்றம் சாட்டுகின்றன ஊடகங்கள்.
பல முறை ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் மன்மோகன் சிங் மொளனம் சாதித்து வருகிறார்.
இந்தியாவின் தலைமை கண்காணிப்பு அலுவலரான (சீஃப் விஜிலென்ஸ் ஆபீசர்) பிரத்யுஷ் சின்ஹா, 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் மாபெரும் முறைகேடும் ஊழலும் அரசுக்கு பெரும் பொருள் இழப்பும் லஞ்ச லாவண்யங்களும் நடந்திருப்பதாக பல முறை சொல்லியிருக்கிறார்.
ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி என்னென்ன குற்றங்கள் நடந்திருக்கின்றன ?
ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அடிப்படை விலையை சந்தை நிலவரத்திற்கு மாறாக மிகக் குறைவாக 2001ல் இருந்த விலை நிலவரத்தில் நிர்ணயம் செய்தது முதல் குற்றம்.
அப்படி குறைந்த விலைக்கு விலை வைத்து அவற்றை தனக்கு வேண்டிய போலிக் கம்பெனிகளுக்கு விற்றது இரண்டாவது குற்றம்.
அப்படி ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமையை வாங்கிய டுபாக்கூர் கம்பெனிகள் வாங்கிய உடனேயே பத்து மடங்கு கூடுதல் விலை வைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றது மூன்றாவது குற்றம்.
அப்படி நடந்த பரிவர்த்தனைகளை எல்லாம் கண்டு கொள்ளாமலும், மறைத்தும், அவர்களுக்குச் சாதகமாகச் செயல் பட்டதும் நான்காவது குற்றம்.
இந்த குற்றங்கள் மூலமாக நாட்டுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது ஐந்தாவது குற்றம்.
என்று குற்றசாட்டுக்களை அடுக்கடுக்கடுக்காக அடுக்குகிறார் இந்தியாவின் தலைமை விஜிலென்ஸ் ஆஃபீசர் சின்ஹா. இந்தக் குற்றங்களுக்கு எல்லாம் பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணியில் சிவிசி ஈடுபட்டுள்ளது என்கிறார் சின்ஹா.
இப்படி ஒரு மாபெரும் ஊழல் தங்கள் கண்முன்னே நடப்பது பொறுக்காத தலைமைக் கண்காணிப்பாளர் இந்த சந்தேகத்துக்கிடமான மறைமுகமாக நடந்த பரிவர்த்தனையை சிபிஐ விசாரித்து இதில் யார் யார் எல்லாம் சம்பந்தப் படுத்தப் பட்டனர், யார் யார் எல்லாம் பயன் பெற்றார்கள் என்று கண்டுபிடிக்குமாறு உத்தரவு தெரிவித்திருக்கிறார். அந்தக் கட்டளையை ஏற்று சிபிஐ தனது விசாரணையைத் துவங்கி தன் கண்டுபிடிப்புகளை அளிக்கும் நேரத்தில், தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்காமல் இருக்குமாறு பிரதம மந்திரியாலேயே சிபிஐ தடுக்கப் பட்டிருக்கிறது என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆக இந்தியாவின் நீதிமன்றம், தலைமைக் கணக்காயர், ஊழல்களைக் கண்காணிக்கும் தலைமைக் கண்காணிப்பாளர், எதிர்க்கட்சிகள், பொறுப்பான சில பத்திரிகைகள் இவை அனைத்தும் தங்கள் சந்தேகங்களையும், கண்டனங்களையும், விசாரணை முடிவுகளையும் வெளியிட்டுள்ளன. இதில் நிச்சயமாக மாபெரும் ஊழல் நடந்திருக்கிறது என்பதை நிரூபித்து ஊழலுக்குக் காரணமான மந்திரி ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும், மீண்டும் பாராளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும், நீதிமன்றத்திலும், அரசாங்க உத்தரவுகளிலும், சிபிஐ விசாரணைகளிலும் வேண்டுகோள்கள் வெளியிட்டுக் கொண்டேயிருந்த போதிலும் எருமை மாட்டின் மீது பெய்த மழை போல இவை அனைத்தையும் கண்டு கொள்ளாமல் பிடிவாதமாக மத்திய அரசு அசாதாரணமான ஒரு மொளனத்தைச் சாதித்து வருகின்றது.
இது ஏன் இப்படி என்பதை நாம் பிறகு பார்க்கலாம்.
சி.பி.ஐ விசாரணைகள், கண்டுபிடிப்புகள்:
இந்தியாவின் தலைமைக் கண்காளிப்பாளரின் உத்தரவின் பேரில் சி பி ஐ இந்த வழக்கை எடுத்துக் கொண்டு தனது விசாரணையைத் துவக்கியிருக்கிறது. 2008க்குப் பிறகு தொடர்ந்து இந்த ஊழலில் சந்தேகப் படுபவர்களையெல்லாம் சி பி ஐ ரகசியமாக உளவு பார்த்திருக்கிறது, அவர்களின் தொலைபேசிகளையெல்லாம் ஒட்டுக் கேட்டிருக்கிறது. இதற்கான உள்துறையின் உத்தரவையும் சட்டபூர்வமாகப் பெற்றே செயல் பட்டிருக்கிறது.
சிபிஐ, இந்திய வருமான வரித்துறையின் விசாரணைப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் மற்றும் மத்திய அரசின் நேரடி வரி ஆணையம் (செண்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்ஸஸ்) ஆகியோருக்கு இடையே நடந்த மிக ரகசியமான கடிதப் போக்கு வரத்துக்களும், ஆதாரங்களும் கொண்ட ஆவணங்கள் இப்பொழுது கசிந்து இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. அந்த ஆவணங்களில் இந்தியாவின் அனைத்துத் தலைமை புலனாய்வு நிறுவனங்களும் சேர்ந்து நடத்திய ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளும் பல அதிர்ச்சி தரும் உண்மைகளும் காணக் கிடைக்கின்றன. அவை மத்திய மந்திரி ராஜா மற்றும் இந்த ஊழலில் பயனடைந்த அனைத்து பயனர்களையும் இனம் கண்டு குற்றவாளிகளாக அடையாளம் காண்கின்றன. அந்த ஆவணங்கள் இங்கே.
அந்த ஆவணங்களில் காணப்படும் முக்கியமான கண்டுபிடிப்புக்களை இங்கு முதலில் சுருக்கமாகப் பட்டியலிட்டுக் கொள்ளலாம்:
1. இந்த கிரிமினல் குற்றங்களில் முக்கிய நபராக நீரா ராடியா எனப்படும் சக்தி வாய்ந்த இடைத்தரகர் அடையாளம் காணப் படுகிறார். நீரா ராடியா நோயிஸிஸ் கன்சல்ட்டசன்சி, வைஷ்ணவி கன்சல்ட்டன்ஸி என்ற பெயர்களில் பல்வேறு பொதுத் தொடர்பு நிறுவனங்களை நடத்தி வருபவர். இந்த நிறுவனங்கள் அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே இடைத்தரகர்களாகச் செயல் பட்டு தங்கள் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு தேவைப் படும் சலுகைகளை அரசாங்கத்திடம் இருந்து பெற்று தருகின்றன. அதற்காக பெரும் தொகைகளை தங்கள் வாடிக்கையாளர்களிடம் பெற்று அரசு அதிகாரிகள் மந்திரிகளுக்கு லஞ்சமாக அளிக்கும் பணியைச் செய்து வருபவை.
2. இடைத்தரகர் நீரா ராடியா மந்திரி ராஜாவுக்கு நெருக்கமாகச் செயல் பட்டிருக்கிறார். ராஜாவை இந்தத் துறைக்கு மந்திரியாக தேர்வு செய்ய பிரதமரை வற்புறுத்தி ராஜாவுக்குத் தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தந்ததில் இருந்தே நீரா ராடியாவின் சேவைகள் துவங்குகின்றன. ராஜாவின் ஃபோன்களை ஒட்டுக் கேட்டதன் மூலமாக இது போன்ற அவரது பல்வேறு பங்களிப்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
3. ராஜாவின் நெருக்கமான நண்பராக இருந்த இந்த பெண்மணி ராஜாவுக்கு அந்தத் துறையையே பெற்றுத் தரும் அளவுக்குச் செல்வாக்கு உடையவராக இருக்கிறார். தனக்கு வேண்டிய ஊழல் ராஜாவை அந்தத் துறையின் மந்திரியாக நியமித்த பின், அதே ராஜா மூலமாக ஸ்பெக்ட்ரம் 2ஜி விற்பனையிலும் தலையிட்டு தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கும் ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமையினை அடிமாட்டு விலைக்குப் பெற்றுத் தருவதில் உதவியிருக்கிறார்.
4. ராஜாவுக்கும் ராடியாவுக்கும் நடந்த உரையாடல்களை ஒட்டுக் கேட்டதன் மூலமாக ராஜாவுக்கும், ராடியாவுக்கும் ஸ்பெக்ட்ரம் 2ஜி விற்பனையினால் பயனடைந்த ஸ்வான் என்ற கம்பெனியில் தொடர்புகள் இருப்பதும் அந்த கம்பெனியில் பங்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளன.
5. தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறைக்கு மந்திரியாக வர விடக் கூடாது என்று டாடா நிறுவனத்தின் சேர்மன் ரத்தன் டாடா ராடியாவிடம் கேட்டுக் கொண்டதும் பதிவாகியுள்ளது. மாறனை வரவிடாமல் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார் டாட்டா.
ஆக யார் மந்திரியாக வர வேண்டும் அல்லது வரக் கூடாது என்பதைத் தீர்மானம் செய்யும் முக்கியமான முடிவெடுக்கும் சக்தியாக ராடியா விளங்கியிருக்கிறார் என்பது இந்த சம்பாஷணையை ஒட்டுக் கேட்டதன் மூலம் தெரிய வருகிறது என்கின்றன இந்த ஆவணங்கள்.
6. இந்த ஆவணங்கள் தரும் அடுத்த அதிர்ச்சி எதிர்பாராதது. தயாநிதி மாறனை டெலிகாம் துறை மந்திரியாக்காமல் விலக்கி வைத்தால் அதற்கு கைமாறாக கருணாநிதியின் துணைவியான ராஜாத்தி அம்மாளுக்கு டாட்டா நிறுவனம் ஒரு மாபெரும் கட்டிடத்தைச் சென்னையின் மத்தியில் கட்டித் தர வாக்குறுதி அளிக்கிறது. இந்தப் பேரத்தை ராடியா ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினம் என்பவர் மூலமாக நடத்தியுள்ளார். அதாவது பிரதமர் முடிவெடுக்க்க் கூடிய ஒரு விஷயத்தை யாரோ ஒரு இடைத்தரகர் தீர்மானித்து அதற்காக கமிஷனையும் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. இந்த விஷயம் இப்பொழுது அப்பட்டமாக அரசாங்கத் துறையின் கண்டுபிடிப்பு மூலமாகவே வெளிக் கொணரப் பட்டிருக்கிறது. 3242759095_494ed21715
7. திமுக வில் யார் யாருக்கு எந்தெந்த மந்திரிப் பதவி பெற வேண்டும் எந்தெந்தத் துறை பெற வேண்டும் என்பதை திமுகவில் ராஜாவின் சார்பாக நீரா ராடியாவும், கனிமொழியின் சார்பாக நீரா ராடியாவும், பத்திரிகையாளர் வீர் சங்வியும், தொலைக்காட்சி பிரபலமான (என்.டி.டி.வி) பர்க்கா தத்தும் இடைத்தரகர்களாகச் செயல் பட்டு அந்தந்த துறைகளைப் பெற்றுத் தந்துள்ளார்கள் என்கின்றன இந்தத் தகவல்கள்.
பிரதமர் தனது மேலான நிர்வாகத் திறன், திறமைகளை அடையாளும் காணும் திறன் கொண்டு மத்திய மந்திரிகள் அனைவரையுமே தேர்ந்தெடுக்கிறார் என்று அப்பாவித்தனமாக பொதுமக்களாகிய நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஒரு வேளை சோனியா சொல்படி முடிவு எடுப்பார் என்றும் நினைத்தோம். ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது சில ப்ரோக்கர்கள் சொல்படியும் முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன என்பது. எவ்வளவு கேவலமான ஒரு விஷயம் இது?
8. ராஜாவுக்கும், கனிமொழிக்கும், ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினத்திற்கும் மிக நெருக்கமானவராக இருந்து வந்திருக்கிறார் நீரா ராடியா என்கின்றன இந்த ஆவணங்கள்.
9. இந்த ஊழலில் ராஜாவின் நம்பிக்கைக்குரிய ஆட்களாக பத்திரிகையாளர் வீர் சங்வி, அருண் தாஸ் மற்றும் சுனில் அரோரா என்னும் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரியும் செயல் பட்டிருக்கிறார்கள்.
10. ராஜாவுக்கு மந்திரி பதவி பெற்றுத் தந்ததுடன் நில்லாமல் ஸ்பெக்ட்ரம் ஊழலை நடத்தியதிலும் இந்த ப்ரோக்கர் ராடியா முக்கிய பங்காற்றியிருக்கிறார். யுனிடெக் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் 2ஜி விற்றதிலும் பின்னர் ஸ்வான் நிறுவனத்தில் பங்குதாராராக இருந்ததிலும் இரு நிறுவனங்களுக்கும் கிட்டிய பணத்தை வெளிநாட்டு அக்கவுண்டுகளுக்கு திறமையாக மாற்றுவதிலும் இந்த நீரா ராடியா முக்கியமான பங்காற்றியிருப்பதில் இருந்து ராஜாவுடன் ஒரு கூட்டளியாகவே இந்த நீரா ராடியா செயல் பட்டிருப்பது தெளிவாகியிருக்கிறது என்கின்றன ஊடகங்கள்.
11. டாட்டா கம்பனி, யுனிடெக் நிறுவனத்திற்கு 250 கோடி ரூபாய்களை நீரா ராடியா மூலமாக வழங்கியுள்ளது என்பதும் இந்தத் தகவல்களின் மூலம் தெரிய வருகிறது.
12. ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழலைத் தவிர இன்னும் பல்வேறு பெரும் ஊழல்களிலும் பணப் பரிவர்த்தனைகளிலும் உலகளாவிய மோசடி வர்த்தகங்களிலும் தனக்கு காங்கிரஸ் அரசில் இருக்கும் செல்வாக்கைக் கொண்டு நீரா ராடியா நிகழ்த்தியிருப்பதாக சிபிஐ மற்றும் வருமான வரித்துறைகளின் புலனாய்வு ஆவணங்கள் பட்டியலிட்டிருக்கின்றன. அதற்காக நீரா ராடியாவை 300 நாட்கள் தொடர்ந்து கண்காணித்தும் அவரது ஃபோன்களை ஒட்டுக் கேட்டும் இந்த குற்றங்களையெல்லாம் கண்டுபிடித்துள்ளனர்.
ஆக ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றம் ஏதோ பொழுது போகாத பத்திரிகைகளோ, எதிர்கட்சிகளோ வீணாக ஆதாரம் இல்லாமல் சுமத்திய குற்றங்கள் அல்ல என்பது உறுதியாகிறது. இந்த ஊழலும், கிரிமினல் குற்றங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட நம்பிக்கைக்குரிய ஆதாரபூர்வமான இடங்களில் இருந்து, அரசுப் புலனாய்வு நிறுவனங்கள் மூலமாகவே உறுதி செய்யப் பட்டுள்ளன.
நமக்கு வரும் கேள்வி இவ்வளவு தெரிந்தும் ஏன் மத்திய அரசும், பிரதமரும் ஊமையாக இருக்கிறார்கள் என்பது தான்.
கிராமங்களில் “யோக்கியன் வருகிறான் எதற்கும் சொம்பை எடுத்து உள்ளே வை” என்றொரு பழமொழி உண்டு. இவனோ வீட்டில் இருக்கும் சொம்பைக் கூடத் திருடிக் கொண்டு போய் விடும் அயோக்யன். இவன் வரும் பொழுது நம் சொம்பைக் கூடப் பத்திரப் படுத்திக் கொள்வது அவசியம் என்று அர்த்தம். ஆனால், ஊரில் எல்லோரும் இவனைத்தான் பெரும் யோக்யன் என்று சொல்கிறார்கள். இவன் தான் ஊரிலேயே யோக்யன் என்றால் ஊரில் இருக்கும் மிச்ச பேர்கள் இவனை விட அயோக்யர்கள் என்றுதானே அர்த்தம்.
ஒரு ஊருக்குப் போய் இந்த ஊரிலேயே யோக்யன், நல்ல மனிதன் யார் என்று கேட்டார்களாம், அதற்கு ஒருவர் சொன்னாராம், அந்தக் குடிசை வீட்டின் கூரையில் உட்கார்ந்து கொண்டு வீட்டிற்கே கொள்ளி வைக்கிறானே தீயை வைக்கிறானே அவன் தான் இந்த ஊரிலேயே பெரிய யோக்யன், நல்ல மனிதன் என்று சொன்னாராம்.
அப்படியானால் அவனை விட அந்த ஊரில் உள்ள ஆட்கள் எல்லாம் இன்னும் மோசமான அயோக்யர்கள் என்று அர்த்தம். ஊடகங்கள் தரும் தகவல்கள், மற்றும் சிபிஐ வெளியிட்டதாகச் சொல்லப்படும் ஆவணங்களைப் படித்தவர்களுக்கு பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை உத்தமர், அப்பழுக்கற்றவர், எளியவர், கறை படியாதவர் என்று யாராவது சொன்னால் இந்த இரு கதைகளும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.
இந்தத் தகவல்களின்படி இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் செய்த தவறுகள் என்ன? குற்றங்கள் யாவை?
1. முதலில் தனது மந்திரி சபையில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை பிரதமர் மட்டுமே முடிவு செய்ய முடியும், செய்ய வேண்டும். ஆனால் மன்மோகனைப் போன்ற பலவீனமான ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தியின் கட்டளைகளுக்கு அடி பணிந்தே ஆகவேண்டுமே அன்றி தன்னிச்சையாக தனது அமைச்சரவையைத் தேர்ந்தெடுத்து விட முடியாது, அதற்கான ஆதரவும் அவருக்குக் கிடையாது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
கிடைக்கும் தகவல்களின்படி பார்த்தால் ஒருவிதத்தில் பிரதமர் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் நடை பெறுவதற்கு மறைமுகமான ஒரு வினையூக்கியாக இருந்திருக்கிறாரோ என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது. முதலில் கட்சித் தலைவரான சோனியா சொல்படி தன் மந்திரி சபையைத் தேர்ந்தெடுப்பதே தவறு என்னும் பொழுது, யாரோ ஒரு ப்ரோக்கரான நீரா ராடியாவின் உத்தரவுப் படி யாருக்கு எந்தத் துறையை வழங்க முடிவு செய்திருக்கிறார் என்பதே மிகவும் அதிர்ச்சி தரும் தகவல்.
பிரதமரான தனது அடிப்படை உரிமையைக் கூட காற்றில் பறக்க விட்டது திரு மன்மோகன் சிங் அவர்களது முதல் குற்றம். இந்த முதல் குற்றமே இந்தியாவை உண்மையில் ஆள்வது யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
2. சரி. கூட்டணி அரசியலில் ஏராளமான அழுத்தங்கள் உண்டு என்று ஒப்புக் கொள்வோம். அப்படி ஒரு அழுத்தத்திற்குப் பணிந்து ஒரு ஊழல் அரசியல்வாதியைத் தன் மந்திரி சபையின் ஒரு முக்கியத் துறையின் மந்திரியாகத் தேர்ந்தெடுத்து விட்டாலும் கூட அந்த மந்திரியின் செயல்பாடுகளையும், மோசடிகளையும் கண்டு கொள்ளாமல் இருந்ததும், கோர்ட்டும், பாராளுமன்றமும், தலைமைக் கணக்காளரும், தலைமை விஜிலென்ஸ் கமிஷணரும், பத்திரிகைகளும், நேர்மையான மூத்த அரசியல்வாதிகளும் மீண்டும் மீண்டும் மீண்டும் ராஜாவைக் குறித்து புகார் செய்த பொழுதெல்லாம் அவர்கள் புகார்களையெல்லாம் புறம் தள்ளியது இரண்டாவது பெரிய குற்றம்.
3. அப்படியே கூட்டணி அரசியலின் அழுத்தங்களினால் ஆ.ராஜாவின் ஊழல்களைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சில விஷயங்கள் மத்திய அரசே ராஜாவின் ஊழல்களுக்குத் துணை போனதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள். இது மூன்றாவது முக்கியக் குற்றம்.
ராஜாவின் செயல்பாடுகள் மத்திய அரசின் முழு ஆதரவும் இல்லாமல் நடந்தேயிருக்காது என்பது இப்பொழுது சி பி ஐ இன் விசாரணையைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. கசியும் தகவல்களின்படி, சீஃப் விஜிலென்ஸ் கமிஷனரின் உத்தரவுப் படி சிபிஐ யின் டிஐஜி ஆன வினித் அகர்வால் என்பவர் நேர்மையாகச் செயல் பட்டு, சந்தேகத்துக்கு இடமான குற்றவாளிகளின் டெலிஃபோன்களை ஒட்டுக் கேட்டு உளவு பார்த்து, ராஜாவையும் ராடியாவையும் கனிமொழியையும் இந்தக் ஊழலின் முக்கிய குற்றவாளிகள் என்பதை கண்டு பிடிக்கிறார்.
தனது ஊழல்களை ஒரு நேர்மையான அதிகாரி கண்டுபிடித்து விட்டார் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் ராஜாவும் அவரது கட்சித் தலைவரும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்கின்றனர். சிபிஐ அதிகாரிகளின் கட்டுப்பாடு நேரடியாக பிரதமரின் கீழ் வருகிறது. குறுகிய காலகட்டத்தில் உடனடியாக அந்த சிபிஐ அதிகாரி மஹராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றல் செய்யப் படுகிறார்!
இதுதான் ஊடகங்கள் முன்வைக்கும் திரைக்கதை.
இதை விட ஒரு குற்றவாளி தப்ப வேறு எப்படி உதவ முடியும்? ஆக குற்றவாளியை விசாரித்த அதிகாரியைத் தன் கடமையைச் செய்ய விடாமல் தடுப்பதும் ஒருவகையில் குற்றத்துக்குத் துணை போன குற்றம் தானே? திருடன் திருடினால் குற்றம்; அவனைப் பிடிக்க வரும் காவல்துறையினரை தடுத்தால், அப்படித் தடுப்பவரும் குற்றவாளி தானே? இப்படிப் பட்ட ஒருவரையா இந்திய மக்கள் இன்னமும் தூய்மையானவர் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்?
மேலும் ஒவ்வொரு முறை ராஜாவின் கூட்டாளிகளும் ப்ரோக்கர்களும் கைது செய்யப் படும் பொழுதும் விசாரிக்கப் படும் பொழுதும் மத்திய அரசு தலையிட்டு அவர்களை விடுவிக்கச் சொல்லி சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் குறுக்கிட்டிருக்கிறது என்கின்றன ஊடகங்கள்.
உதாரணமாக வேறொரு சம்பவத்தையும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் தபால் துறை அதிகாரியான போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பாலி என்பவர் தபால்துறை இடத்தில் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு கட்டிடம் கட்ட அனுமதி தந்த ஊழலில், அப்படி அனுமதி அளித்தற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகளினால் கைது செய்யப் பட்டார். லஞ்சம் கொடுக்க வந்தவர் மந்திரி ராஜாவின் ஏஜெண்ட் என்பதும் ராஜாவின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகளை அந்த அருண் டால்மியா கையாளுகிறார் என்ற விபரமும் சிபிஐ வசம் கிட்டியுள்ளன. மந்திரி ராஜாவின் உதவியாளரான சந்தோலியா என்பவர் தான் அந்த இரண்டு கோடி ரூபாய் லஞ்சப் பணத்தை மந்திரியின் சார்பாகக் கொடுத்து அனுப்பியவர் என்ற விபரமும் சிபிஐக்குக் கிட்டியது.
இந்த அருண் டால்மியா தன்னுடன் எப்பொழுதுமே சில அழகிகளை வைத்திருப்பவர். அந்த அழகிகளைக் கூட்டிக் கொண்டு மந்திரி ராஜாவை பல முறை சந்தித்திருக்கிறார் என்ற உண்மையும், அந்த ப்ரோக்கர் டால்மியாவின் சிபாரிசின் படி ஒரு சீனக் கம்பெனி தயாரித்த டெலிகாம் உபகரணங்களை வாங்குவதற்கு மந்திரி உத்தரவு இட்டிருக்கிறார் என்ற உண்மையையும் சிபிஐ ஆட்கள் விசாரித்து அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்றன செய்திகள்.
சீனாவில் செய்யப் பட்ட டெலிகாம் நிறுவனத்தின் பொருட்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விளைவிக்கலாம் என்ற நிலையில், இந்தியாவை உளவு பார்க்க அந்தக் கருவிகள் உபயோகிக்கப் படலாம் என்ற எச்சரிக்கை இருக்கும் பொழுதே சீன கம்பெனியின் ஏஜெண்டான அழகிகளுடன் அலையும் அருண் டால்மியாவால் ராஜாவை சீனக் கருவிகளை வாங்கும் ஆர்டரைப் பிறப்பிக்க முடிந்திருக்கிறது.
அருண் டால்மியா வீட்டை சோதனையிடுகையில் அவருக்கும் ராஜாவுக்கும் இருந்த “நெருக்கம்” ஃபோட்டோ ஆதரங்களாக சிபிஐயிடம் சிக்கியுள்ளன என்கின்றன ஊடகங்கள். இந்தக் கைதின் தொடர்பாக மந்திரியின் தனிச் செயலாளரான சந்தோலியாவை விசாரிக்க சிபிஐ முடிவு செய்யும் பொழுது, அவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து விசாரணையை மேலும் தொடர வேண்டாம் என்ற உத்தரவு வருகிறது. அவர்களும் கேசை அப்படியே இழுத்து மூடுகிறார்கள்.
ஆக, கிடைக்கும் செய்திகளின் படி பார்த்தால், மந்திரி ராஜாவுக்கு சிக்கல் ஏற்படும் பொழுதெல்லாம் மத்திய அரசே ஆபத்பாந்தவராக “அராஜகரட்சகராக” தோன்றி காப்பாற்றிக் கொண்டேயிருந்திருக்கிறது!
knin290lஇந்தத் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் பொதுமக்களுக்குக் கேள்விகள் எழுகின்றன. இவற்றையெல்லாம் மதிப்பிற்குரிய பிரதமர் திரு, மன்மோகன் சிங் ஏன் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்? முறைகேடாக தன் பதவியைப் பயன் படுத்தி ஒரு கிரிமினலைக் காப்பாற்றும் அளவுக்கு ஒரு பிரதமர் போகிறார் என்றால் அவர் எப்படி நேர்மையான ஒரு பிரதமராக இருக்க முடியும்? தன் பிரதமர் பதவியை, நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக இந்த அளவு முறைகேடுகளுக்கு ஒருவர் துணைபோகிறார் என்றால், அவர் எப்படி அப்பழுக்கற்றவராக இருக்க முடியும்? அவரை இன்னும் எப்படி மிஸ்டர் க்ளீன் என்று மக்கள் நம்புகிறார்கள்?
புரியவில்லை.
இந்தத் தகவல்கள் உண்மை என்று நீங்கள் நம்பினால், இனிமேலும் தயவு செய்து யாரும் இந்த ஊழலுக்குத் துணை போகும், தன் உரிமையை ஒரு தரகருக்கு விட்டுக் கொடுக்கும் மனிதரை நேர்மையானவர், தூய்மையானவர், அப்பழுக்கற்றவர் என்று மட்டும் யாரும் அழைத்து விடாதீர்கள்.
“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்” என்ற பாரதியாரின் குமுறலும் ஆத்திரமுமே இவரைப் பிரதமராகக் கொண்டுள்ள நம் பாவத்தை நினைத்தால் ஏற்படுகிறது.
“படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோ என்று போவான்” என்றான் பாரதி. அவனைப் போலவே சாதாரண பொதுமக்களும் நொந்து போய் நிற்கிறார்கள்.
ஊழல்களுக்கு எல்லாம் தலையாய இந்த ஊழலை, 1 லட்சம் கோடி என்ற பிரமிக்க வைக்கும் ஊழலை பொதுவாக நம் அரசாங்கமும், ஆளும் கட்சியும், பிரதமரும், எதிர் கட்சிகளும், பத்திரிகை/டிவி களும் பொதுத்துறை நிறுவனங்களும் கடைசியாகப் பொதுமக்களும் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதைக் காணும் பொழுது எந்தவிதமான ஒரு நாடு இந்தியா என்பது குறித்த ஒரு பிம்பம் கிட்டுகிறது.
இந்த ஊழல்களை இந்தியாவின் தூண்களான பல பிரிவினரும் எதிர் கொண்ட விதத்தையும் பார்த்து விடலாம்.
மேலே தொடருங்கள்.
(தொடரும்)
மீண்டும் டோண்டு ராகவன்.
இந்தக் கட்டுரையை இங்கும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
2 comments:
அண்ணா நான் கோவைல இருக்கேன், நானும் பார்த்துட்டேன் நாம என்ன தான் கரடியாய் கத்தினாலும் ஒன்னும் பிரயோசனம் இல்லை, படிச்ச நாம எல்லாம் இப்படி இணையத்தில் ஹய்யோ ஹய்யோ கொள்ளை கொள்ளைனு கத்திகிட்டு இருப்போம் ஆனால் வாக்குஅளிக்க வேண்டும்னா மட்டும் பொத்திக்கிட்டு வீட்டுலே இருந்துக்கிறோம், மனசாட்சியை தொட்டு சொல்லுங்க படிச்சவன் எத்தினை பேரு வரிசைல நின்னு வாக்கு அளிக்கிறான், பார்ல போய் வரிசியில் நின்னு தண்ணி அடிச்சு குட்டிக கூட கும்மாளம் போடுறான் ஆனால் வாக்கு அளிக்க மட்டும் வரிசியில் நிக்க மாட்டானாம், ஆனால் நாடு முன்னேறாததுக்கு அரசியல்வாதியும், அதிகாரிகளும்னு சொல்லிக்கிட்டு திரியறோம்
சரி வாக்கு அளிக்க போறவன் யாரு ? விவசாயி, தின சம்பளத்துக்கு வேலைக்கு போற சாதாரண படிப்பறிவு இல்லாத மக்கள்தான், இதுல விவசாய மக்களை பத்தி சொல்ல ஒன்னும் இல்லை, தின சம்பளத்துக்கு போறவங்க ஒரு கோட்டர், ஒரு பிரியாணி பொட்டலம், 1000 ருபாய் பணம் இதுக்கு அவங்க வாக்கை வித்துடுறாங்க, உடனே நாம ( படிச்ச பய புள்ளைக) இவனுகனால்தான் மோசமான அரசியல்வாதிகள் வர்றாங்கனு குப்பாடு போடுறோம், ஒன்னு நாம வாக்கு அளிக்க போகணும் இல்லை இந்த மாதிரி ஆளுகள் கிட்ட இந்த மாதிரி உழல்ளால் என்ன நஷ்டம் ஏற்படுக்கிறது, என்ன பாதிப்புகள் வரும் என்று எடுத்து சொல்ல வேண்டும் ( இது எல்லாம் நாம எப்படி சொல்லுவோம் நாம தான் சுத்தமான சுயநலவாதிகள் ஆச்சே)
மன்னிச்சுக்குங்க என் மனசுல இருக்கற ஆதங்கத்தை சொல்லிட்டேன், நானும் என் நண்பனும் இந்த மாதிரி பிரச்சனைகளை பொது இடங்களில் நாலு பேர்கிட்ட சொல்றோம், தயவுசெய்து சாதாரண மக்கள்கிட்டயும் இதை போன்ற நல்ல செய்திகள் போய் சேரவேண்டும், இதை படிக்கும் என் தமிழ் சகோதர்கள் எல்லாம் பொது இடங்களில் இதை பற்றி பேசி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், சிறு சிறு துளிகள் சேர்ந்தால் பெரிய ஆற்று வெள்ளத்தை ஏற்படுத்த முடியும், நம்மால் என்ன செய்து விட முடியும் என்று எண்னாமல் நம்மாலும் ஏதாவது செய்ய முடியும் என்று எண்ணுங்கள்
மீண்டும் ஒரு வேண்டுகோள் சகோதர்களே நீங்கள் இணையத்தின் வழியாக பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் தமிழ்லில் இருக்கட்டும், தமிலுக்கு நாம் செய்யும் ஒரு சிறு தொண்டு, நான் இதை செய்துகொண்டு வருவதால் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் ( ஊருக்கு தான் உபதேசம் என்பது என்னிடம் கிடையாது )
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தலைநகர அரசியல் புரோக்கர் நிரா ராடியாவுக்கும் ஆண்டிமுத்து ராசா, கனிமொழி, பர்க்கா தத், வீர் சங்வி ஆகியோருக்கிடையே நடந்த டெலிபோன் உரையாடலை வெளியிட்டிருக்கிறார்கள். நம்மை ஆள்வது யார் என்று நாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் கபில் சிபல் என்றொரு மேதாவி எதிர் கேள்விகளைக் கேட்டுத் தனது மேதாவித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கெல்லாம் உண்மையில் மானம், ரோஷம், நன்னடத்தை இவை இருக்குமானால், தேசபக்தி என்பது ஒரு சதவீதமாவது இருக்குமானால், கோடானுகோடி அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொழுத்துப் போயிருக்கும் இவர்களை ஓடஓட விரட்டி அடிக்க வேண்டும். வாக்குக் கேட்டு வரும் இந்த பனாதைகளின் முகத்தில் கரியைப் பூசி அனுப்ப வேண்டும். இவர்களுக்குத்தான் மேற்சொன்னவைகள் இல்லை. நமக்குமா இல்லை? ஒரு முறை இவர்களை ஓடஓட விரட்டினால் ஊழல் ஒழிய வாய்ப்பு இருக்கிறது. நமது மக்கள்தான் ஓட்டுக்குப் பணம் வாங்கி, இலவசங்களை வாங்கி வீடு முழுவதும் நிரப்பிக் கொண்டு வெளியில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று லைசன்ஸ் கொடுத்து விட்டார்களே. இவர்களால் எப்படி துணிந்து செயல்படமுடியும்?
Post a Comment