கீழே உள்ள கட்டுரை தமிழ் ஹிந்துவில் வந்தத் தொடரின் மூன்றாம் பகுதி. பலர் இதைப் பார்க்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆகவே இங்கும் அதை போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி: TamilHindu.com
நண்பர் விஸ்வாமித்ரா அவர்களும் அனுமதி தந்து விட்டார். அவருக்கும் என் நன்றி.
இப்போது தொடருக்கு போவோம்.
நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 03
விஸ்வாமித்ரா
இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது.
பிரதமர், ஆளும் கட்சி மற்றும் மத்திய அரசாங்கம்:
ஒரு சில பத்திரிக்கைகள் சொல்லுவது உண்மையானால்:
இந்தியாவை ஆளும் மந்திரிசபையில் ஒரு முக்கியமான துறையின் ஒரு முக்கியமான மந்திரி இந்தியாவின் முக்கியமான வளங்களில் ஒன்றை தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தன் கட்சித் தலைவரின் குடும்பத்தாருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுகிறார். எதுவுமே நடவாதது மாதிரி நான் எல்லாமே பிரதமருக்குத் தெரிவித்தே நடந்து கொண்டேன் என்றும், தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்றும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும், பிரதமருக்குத் தெரியாமல் எதுவுமே நடந்து விடவில்லை என்றும் ஆணவத்துடனும், திமிருடனும், அலட்சியத்துடனும் யாரும் தன்னை அசைத்து விட முடியாது என்ற நம்பிக்கையுடனும் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிக்கும் ஊழல்களை இந்த மந்திரி இன்று வரை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்றே பத்திரிக்கை தகவல்களில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.
மந்திரிசபையில் உள்ள மந்திரிகளின் செயல்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பேற்று அவர்களை வழி நடத்த வேண்டிய பிரதமரோ இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருந்த பொழுதிலும், அன்றாடம் பத்திரிகைகளும், எதிர்கட்சியினரும் அவரிடம் மீண்டும் மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்டுக் கொண்ட போதும், அவற்றையெல்லாம் காணாதவர் போல கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டு செயல் படுகிறார் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.
தனக்குக் கீழே செயல் படும் மந்திரிகளின் ஊழல்களை கண் கொண்டு பார்க்க மாட்டேன், காது கொண்டு கேட்க்க மாட்டேன், வாய் கொண்டு பேச மாட்டேன் என்று காந்தியின் மூன்று குரங்குகள் போல அமைதி காக்கிறார் பிரதம மந்திரி. அதைவிடப் பெரிய தவறாக ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு இது: எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ஊழல் மந்திரி தவறு செய்யும் பொழுதெல்லாம் தனக்குக் கீழேயுள்ள புலனாய்வு அமைப்பு தன் கடமையைச் செய்ய விடாமலும் அதே பிரதமர் தடுத்து வருகிறார்.
பிரதம மந்திரியின் ஆளும் கட்சியோ தன் கட்சி உறுப்பினர்கள் தவறு செய்து மாட்டிக் கொள்ளும் பொழுது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதுமானது, கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுக்கு அது பொருந்தாது என்று நினைக்கிறது. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது ஒன்றே அதன் குறியாக இருக்கிறது. அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளது.
காங்கிரஸின் அதிகாரபூர்வ பேச்சாளர் சிங்வி, ராஜா மீது எவ்வித குற்றசாட்டுக்கும் ஆதாரமே இல்லையே, எதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழுப்பூசணிக்காயையும் கொஞ்சம் கூட மனசாட்சியும் நேர்மையும் இன்றி சோற்றில் மறைக்கிறார்.
நாடு முழுவதும் தீவீரவாதமும், நக்சல் பயங்கரமும் நடந்தாலும் அவற்றையெல்லாம் அடக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல், தீவீரவாதிகளிடமும், பயங்கரவாதிகளிடமும் மென்மையாக நடந்து கொள்வதன் மூலம் அடுத்த தேர்தலில் தன் ஓட்டு வங்கியைத் தக்க வைப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தன் ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக அதன் மந்திரிசபையின் முக்கிய மந்திரி ஒருவர் அடிக்கும் கொள்ளையையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.
ஆக பயங்கரவாதிகளிடம் மட்டும் இன்றி கொள்ளைக்காரர்களிடமும் காங்கிரஸ் கட்சி அனுசரணையாக இருக்கவே விரும்புகிறது. இப்படியாகப் பட்ட ஒரு கட்சியையும், பிரதமரையும் நம்பி ஓட்டுப் போடும் மக்களும் இருக்கும் வரை இந்த தேசத்திற்கு விமோசனமே கிடையாது.
அரசு இயந்திரங்கள்:
ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற ரீதியில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர் கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே அரசு இயந்திரத்தை இந்த காங்கிரஸ் அரசால் பயன் படுத்தி வருகிறது. ஆ.ராஜாவை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று தடுக்கும் அதே பிரதமரே, குஜராத்தில் மோடியின் அரசாங்கம் மீது அதே சிபிஐ அமைப்பை ஏவி விட்டுப் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.
தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள்: corruption2
ஊடகங்கள் சொல்லுவதைப் பார்த்தால், பொதுத்துறை நிறுவனங்களான டாடா போன்ற மக்கள் நம்பிக்கை பெற்ற பெரு நிறுவனங்கள் கூட நீரா ராடியா போன்ற இடைத்தரகர்களை வைத்துச் செயல் பட்டது அவர்கள் பெற்ற நன் மதிப்பை குலைத்து விட்டது என்று தெரிகிறது.
ஆளும் கட்சியிடம் தங்கள் நிறுவனங்களுக்கான சலுகைகளைப் பெற இடைத் தரகர்களைப் பயன் படுத்துவது சகஜமான ஒரு காரியம். என்றாலும் கூட பிரதமரின் உரிமையில் கூடத் தலையிடும் கீழ்த்தரமான வேலைகளை அத்தனை பெரு நிறுவனங்களும் செய்து வருகின்றன என்பது இந்த ஊழல் விசாரணை மூலமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
ராஜாவின் அராஜகங்களை எதிர்த்து எஸ்டெல் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கல் முறைகேடானது என்று வழக்குத் தொடர்ந்தது.
ஆனால் அந்த நிறுவனத்தையும் மிரட்டி வழக்கு வாபஸ் வாங்க வைக்கப் பட்டது. அந்த நிறுவனத்தின் பிற லைசென்சுகளை ரத்து செய்யப் போகிறோம் என்று ராஜா நோட்டீஸ் அனுப்பியதால் வேறு வழியின்றி அந்த நிறுவனமும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது. இருந்தாலும், ராஜா மிரட்டியதால் மட்டுமே வாபஸ் வாங்க நேர்ந்தது என்ற உண்மையை அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது.
எதிர்க்கட்சிகள்:
எதிர்க்கட்சிகளின் நிலையோ இன்னும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. 1 லட்சம் கோடி ரூபாய் என்பது பிரமாண்டமான ஒரு ஊழல். இந்த ஊழலை பிரதான எதிர்க்கட்சியான பாஜக எப்படி கையாண்டிருக்க வேண்டும்? அது நினைத்திருந்தால் பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்து இந்த 2ஜி ஏலமே நடக்க விடாமல் செய்திருக்கலாம். அத்வானி சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்திருக்கலாம். ஆனால் அதை எதையுமே செய்யாமல் சம்பிரதாயமான பலவீனமான ஒரு எதிர்ப்பையே இன்று வரை காட்டி வருகிறது.
60 கோடி ரூபாய் போஃபோர்ஸ் ஊழலின் பொழுது வானமே இடிந்து விழுந்து விட்டது போல ருத்ரதாண்டவம் ஆடிய இடதுகளும் இன்ன பிற கட்சிகளும் அதை விட ஆயிரம் மடங்குக்கும் மேலான இந்த ஊழலில் லேசாக முனகுவதும் அவ்வப்பொழுது பிரதமருக்கு லெட்டர் போடுவதும் மட்டுமே தங்கள் கடமை என்று ஒதுங்கிக் கொள்கின்றன.
நாடு தழுவிய போராட்டம் எல்லாம் கிடையாது. நாளைக்கு தமிழ் நாட்டில் பிச்சையாகக் கிடைக்கும் நான்கு எம் எல் ஏ சீட்டுக்களும் இரண்டும் எம் பி சீட்டுக்களும் பஞ்சம் வந்து விடுமோ என்ற அச்சம்தான் காரணம் என்று பொதுமக்கள் எண்ணுகிறார்கள்.
தமிழ் நாட்டில் திமுக வின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக மட்டுமே இந்த ஊழலை தன் வாழ்க்கைப் பிரச்சினையாகக் கருதி பாராளுமன்றத்திலும் வெளியிலும் போராடி வருகிறது. அதுவும் ஊழல் செய்தது திமுக என்பதினால் மட்டுமே இந்த எதிர்ப்பு.
இதே ஊழலை லல்லுவோ, முலாயமோ செய்திருந்தால் அதிமுக கவலைப் பட்டிருக்காது.
ஜெயலலிதா இந்த ஊழலை கடுமையாக எதிர்த்து வருகிறார். அறிக்கைப் போர் நடத்தி வருகிறார். இருந்தாலும் அவரது முந்தைய ஊழல்கள் காரணமாக அவர் மீது யாருக்கும் நம்பிக்கை வருவதில்லை. இவர் மட்டும் என்ன யோக்கியமா என்ற கேள்வி உடனே எழுந்து விடுகிறது. ஜெயலலிதா தனது கூடா நட்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாகச் செய்ய நேர்ந்த ஒரு சில ஊழல்கள் இந்த மாபெரும் ஊழலுடன் ஒப்பிடும் பொழுது வங்கிக் கொள்ளையின் முன்னால் ஒரு சிறிய பிக்பாக்கெட் திருட்டுப் போன்றது. ஆனால் அவரது பெயர் கெட்டதும், அவர் மீதான நம்பிக்கை போனதும் போனதுதான்.
அரசியலில் செய்யும் சிறு தவறுகள் கூட ஒருவரது அரசியல் எதிர்காலத்தையே அழித்து விடும் என்பதை ஜெயலலிதா இன்று வரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஊடகங்கள் தரும் இந்தச் செய்திகளின் காரணமாக கீழ்க்கண்ட கருத்து பொது மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது:
“சுயநல காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் அதே நேரத்தில் ஆட்சியில் இருக்கும் திமிர் காரணமாக தாங்கள் எந்த ஊழலையும் செய்யலாம், எந்தக் கொலை பாதகங்களையும் செய்யலாம், யாரும் இந்தியாவில் இவர்களைத் தட்டிக் கேட்க உரிமையில்லை என்ற ஆணவத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியும் அவரது கட்சியினரும் அவரது குடும்பத்தாரும் செயல் பட்டு வருகிறார்கள்.”
தனது கொள்ளையை மறைக்க, தன் குடும்பத்தைப் பாதுகாக்க எவ்வளவு கீழ்த்தரமாகவும் தான் நடந்து கொள்ளலாம் என்பதை மீண்டும் மீண்டும் கருணாநிதி நிரூபித்தே வருகிறார் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.
அவரிடமிருந்து நேர்மையையும், கண்ணியத்தையும், நாட்டுப் பற்றையும், உண்மையையும் இந்த வயதில் கூட எதிர்பார்க்க முடியவில்லை என்றால் இவை என்றுமே அவரிடம் இருந்ததில்லை என்பது மேலும் உறுதியாகிறது. இனிமேலும் இவற்றை நாம் இவரிடம் எதிர்பார்க்க முடியாது.
ஒரு காலத்தில் மாநில சுயாட்சி கேட்டுப் போராடிய அதே கருணாநிதி, ஒன்றிணைந்த இந்தியாவை எதிர்த்த அதே கருணாநிதி, இன்று அதே ஒருங்கிணைந்த இந்தியாவின் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்களைக் கொள்ளை அடிக்க முடிந்திருப்பது இந்திய தேசிய உணர்விற்குக் கிடைத்த மாபெரும் அடி. இந்தக் கொள்ளையின் முழுப் பயனும் இவரது குடும்பத்திற்கும் கட்சிக்குமே சென்றிருக்கிறது என்பது வெள்ளிடைமலை. ராஜா ஒரு கருவி மட்டுமே என்பதை விபரம் தெரிந்த அனைவரும் நன்கு அறிவர்.
கருணாநிதி ஊழல் செய்வது இது முதல் முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல. சர்க்காரியா விசாரணையின் பொழுது கருணாநிதி செய்த ஊழல்கள் எல்லாம் நிரூபிக்கப் பட்டன. பின்னர் இதே காங்கிரஸ் கூட்டணியால் அவை மன்னிக்கவும் பட்டன.
அப்பொழுது கருணாநிதி கேட்டார் “தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?” என்று. புறங்கையை நக்கி, முழங்கை வரை நக்கி, முழுக்கையையும் நக்கி இன்று ஒட்டு மொத்த தேனையும் குடித்து விட்டு வெறும் புறங்கையில் வழியும் தேனை மட்டும் மக்களுக்கு எச்சில் காசாக, பிச்சைக் காசாக, ஓட்டுப் போட லஞ்சப் பணமாக எறிந்து கொண்டிருக்கிறார். புறங்கையை நக்கியதெல்லாம் அந்தக் காலம்; இப்பொழுது முழுத் தேனையுமே கடத்தி விடுகிறார்கள்.
இப்படிக் கொள்ளையடிக்கப் பட்ட பணத்தைக் கொண்டுதான் கருணாநிதியால் தமிழ் நாட்டில் ஒரு நாலு கோடி வாக்காளர்களுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முடிகிறது. இந்த ஊழல் மூலம் கிட்டிய ஆயிரக்கணக்கான கோடிகளில் வெறும் ஒரு 4000 கோடி ரூபாய்களை மட்டுமே தமிழ் நாட்டு மக்களுக்கு வாக்கரிசியாக அளித்து அவர்களின் ஓட்டுக்களை இவர் எளிதாகப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட முடியும். மீண்டும்.
இந்த ஊழலில் கிடைத்த வருவாயில் இருந்து ஒரு சிறிய தொகையை எடுத்து மீண்டும் மக்களுக்குக் கொடுக்கும் லஞ்சமாக முதலீடு செய்து இதை விட பெரிய ஊழலில் இதை விட பெரிய தொகையை அறுவடை செய்து விடுவார்கள். இதை விட பெரிய ஊழலைச் செய்து இதை விட அதிகமாகக் கொள்ளையடிக்கலாம். இது ஒரு விபரீத சுழற்சி. இது போன்ற பெரும் ஊழல்கள் மாபெரும் ஜனநாயகப் படுகொலையில் முடிந்து தேர்தலைக் கேலிக் கூத்தாகச் செய்து விடும்.
இன்று இதை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சிக்கே இந்த ஊழல்கள் எமனாக முடியும்.
தலித்துகள்:
தங்களது சுயநலக் கொள்ளைகளுக்கு அரசியல்வாதிகள் தலித்துகளை கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். தங்களுக்குக் கிடைக்கும் தண்டனைகளையும், தாங்கள் பெற வேண்டிய தாக்குதல்களையும் இந்தக் கேடயங்கள் அனுபவிக்கும்படி செய்து விடுகின்றனர். கிள்ளுக் கீரை போல தலித்துகளை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம்.
அதனால்தான் இந்த ஊழலில் ராஜாவைக் காக்கும் பொருட்டு மிகக் கேவலமான, அசிங்கமான ஒரு காரியத்தையும் இந்தக் கருணாநிதி செய்துள்ளார். அதுதான் “தலித் என்பதினால் ஆதிக்கச் சக்திகள் ராஜாவை குற்றம் சாட்டுகிறார்கள்” என்று மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்வது.
கருணாநிதி சொல்வது உண்மையானால் ஏன் ஜெயலலிதாவின் மீது டான்சி முறைகேட்டில் வழக்குப் போட்டார்கள்? ஏன் நரசிம்ம ராவை குற்றம் சாட்டினார்கள்? எதனால் ராஜீவ் காந்தியை போபர்ஸ் ஊழலில் துரத்தித் துரத்தி அடித்தார்கள்? சசி தரூர் ஏன் பதவி விலகினார்? இவர்கள் எல்லாம் உயர் ஜாதி அரசியல்வாதிகள் அல்லவா? இவர்கள் எல்லோரும் தலித் அல்லவே? தலித் என்பதற்காக பாலகிருஷ்ணனுக்கு தலைமை நீதிபதி பதவி கிட்டாமல் போனதா? மீரா குமாருக்கு சபாநாயகர் பதவியை யாராவது எதிர்த்தார்களா?
கருணாநிதி பரப்பும் இந்த அவதூறை முதலில் தலித்துக்கள் எதிர்த்துப் போராட வேண்டும். அவர்களுக்கு இழைக்கப் பட்ட பெருத்த அவமானம் இந்தக் குற்றச்சாட்டு.
பத்திரிக்கைகள்/தொலைக்காட்சிகள்:
இந்த விஷயத்தில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நடந்து வரும் விதம் அரசியல்வாதிகளின் செயலை விடக் கேவலமாக இருக்கின்றது. முக்கியமாகத் தமிழகப் பத்திரிகைகள் இந்த ஊழலைக் கண்டு கொள்ளவேயில்லை. எந்த தினசரிகளிலும் இது குறித்த முழு விபரமோ செய்தியோ வெளியிடப் படுவதில்லை. censorship-791503
தமிழ் பத்திரிகைகளையும், டிவிக்களையுமே நம்பி தங்கள் பொதுப் புத்தியை வளர்த்துக் கொள்ளுபவர்களாகத்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். இவர்களை அறியாமையில் இருந்து மீட்க வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூணோ இந்தக் கொள்ளையை மூடி மறைப்பதன் மூலம் இந்தக் கொள்ளைக்குத் துணை போய்க் கொண்டிருக்கின்றது.
சென்னை விமான நிலையத்தில் ராஜாவைக் கேள்வி கேட்ட பெண் நிருபர்களை ராஜாவும் அவரது அடியாட்களும் பிடித்துத் தள்ளி தாக்கியிருக்கிறார்கள்.
இருந்தாலும், தமிழக அரசின் அச்சுறுத்தல்களுக்கும் அராஜகங்களும் பயந்து நடுங்கிக் கொண்டும், அரசு வீசும் எலும்புத் துண்டுகளான அரசு விளம்பரங்களுக்கும் ஆசைப் பட்டுக் கொண்டும் நம் பத்திரிகைகள் இந்த ஊழலை ஒட்டு மொத்தமாக மூடி மறைத்து விட்டன என்பதே உண்மை.
தமிழ் மக்களின் இதயத் துடிப்பு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் விகடன் குழுமத்தின் ஜீனியர் விகடன் பத்திரிகையில் இந்த ஒட்டு மொத்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் வெளியிடாமல் இதில் சம்பந்தப் பட்டுள்ள கனிமொழி, ராஜாத்தி அம்மையார் ஆகியோரின் பெயர்களை மறைத்து விட்டு மலிவான ஒரு கட்டுரையை மட்டும் வெளியிட்டு தன் தாழ்ந்த தரத்தை மேலும் தாழ்த்திக் கொண்டிருக்கிறது என்று மற்ற ஊடகங்களோடு ஒப்பிடுபவர்கள் எண்ணுகிறார்கள்.
ஒரு நரசிம்மராவுக்கு இரண்டு கோடி ரூபாய்கள் கொடுக்கப் பட்டது என்ற விவகாரத்திலும், ராஜீவ் காந்திக்கு 60 கோடி லஞ்சம் கொடுக்கப் பட்டது என்ற ஊழலிலும், ஜெயலலிதாவுக்கு நூறு செருப்புக்கள் இருந்தன என்பதைக் காட்டுவதிலும், நித்யானந்தாவின் அந்தரங்கங்களையும் காட்டுவதில் பேரார்வம் காட்டிய நம் தமிழகப் பத்திரிகைகள் ஊழல்களுக்கு எல்லாம் தாயான இந்த 1 லட்சம் கோடி ரூபாய் ஊழலைப் பொருத்தவரை தங்களது சகல அங்கங்கங்களையும் பொத்திக் கொண்டு இருக்கின்றன. இது இந்த ஊழலுக்கு நம் பத்திரிகைகளும் விலை போன கொடுமையைத்தான் காட்டுகின்றன.
இந்திய அளவில் இந்துத்துவ தீவீரவாதத்தை (?!) அழிக்க அவதாரம் எடுத்துள்ள செக்யூலரிஸ்டுகளான பரக்கா தத் என்ற டெலிவிஷன் பத்திரிகையாளரும், வீர் சங்வி என்ற பத்திரிகையாளரும் இந்த ஊழலில் ராஜாவை மந்திரியாக நியமிக்கும் பொருட்டு கனிமொழியின் சார்பாக தரகு வேலை செய்திருப்பதாக சிபிஐ விசாரணை உறுதிப் படுத்துகிறது. நரேந்திர மோடியைத் தூக்கில் போட வேண்டும் என்று டெலிவிஷனில் காட்டுக் கூச்சல் போடும் பரக்கா தத்தின் நேர்மை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
கேவலம் காசு வாங்கிக் கொண்டு தரகு வேலை செய்யும் ஒரு நான்காம் தர பெண்மணிதான் இவ்வளவு நாட்களும் செக்குலார் வேடம் போட்ட இந்த பரக்கா தத் என்பது இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. இருந்தாலும் எந்தவித வெட்கமோ அவமான உணர்வோ தார்மீகப் பொறுப்போ இல்லாமல் ஒரு கேவலமான ப்ரோக்கர்களாக, காசு வாங்கிக் கொண்டு ஆளை அமர்த்தித் தரும் தரகர்களான பரக்கா தத்துகளும், வீர் சங்விகளும் இன்னமும் தங்களை இந்து வெறியில் இருந்து பாரதத்தைக் காக்க வந்த பரமாத்மாக்களாகக் காட்டிக் கொண்டு டெலிவிஷனில் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதையும் இந்திய மக்கள் பார்த்து கை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இணைய ஊடகங்கள்:
தமிழ் நாட்டின் பத்திரிகைகளும், டிவிக்களும் தான் கடும் மொளன விரதம் அனுஷ்டிக்கின்றன என்றில்லை; தமிழ் மக்களின் அறிவு ஜீவிக் குரலாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் பெரும்பாலான வலைப்பதிவர்கள் கூட இந்த விஷயத்தைப் பற்றி வாய் திறப்பதில்லை.
நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டும் என்று கதறிய தமிழ் வலைப்பதிவர்கள், பார்வதியை சிகிச்சைக்கு அனுமதிக்காததற்குக் கூச்சல் போட்ட தமிழ் வலைப்பதிவர்கள், ஒரு சினிமா வெளிவந்தால் அடித்துப் பிடித்துக் கொண்டு விமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதையைப் போய் எழுதித் தொலையும் தமிழ் ப்ளாகர்கள், அறிவு ஜீவித் தனம் என்ற போர்வையில் இனவெறியைப் பரப்பும் வலைப் பதிவர்கள், தமிழ் நாட்டின் முதல்வரும் அவர் குடும்பமும் ஒரு தமிழ் நாட்டு மந்திரி மூலமாக 1 லட்சம் கோடி கொள்ளையடித்தது பற்றி வசதியாகக் கண்டு கொள்ளவேயில்லை.
இதை விடக் கொடுமை தமிழில் கொஞ்சம் சிந்தித்து எழுதக் கூடிய ஒன்றிரண்டு வலைப்பதிவர்கள்கூட இதில் ராஜா ஊழல் செய்திருக்க எந்த வித முகாந்திரமுமே இல்லை என்று ஊருக்கு முன்னால் ராஜாவுக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கி விட்டிருந்தார்கள்! இன்று இவ்வளவு விஷயங்கள் வெளி வந்த பின்னால் முகத்தை எங்கே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இட்லி வடை என்ற பதிவர் ஒருவர் மட்டும் செஸ் போட்டிகளுக்கு நடுவே இந்த ஊழல் சம்பந்தமான ஏதோ நாலு பத்திரிகைச் செய்திகளைப் போட்டு ஒப்பேத்தியிருக்கிறார். மற்றவர்களுக்கு எல்லாம் இப்படி ஒரு ஊழல் நாட்டில் நடக்கவேயில்லை.
தமிழ் ப்ளாகர்களுக்கு எல்லாம் இன்னும் நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டுமா அல்லது கழுவில் ஏற்ற வேண்டுமா என்றே இன்னும் தீர்மானம் செய்து முடியவில்லை! இதுவே ஒரு ஜெயலலிதா ஒரு லட்சம் வாங்கியிருந்தால் இன்று தமிழ் இணைய உலகமே பற்றி எரிந்திருக்கும்.
இந்திய பொது மக்கள்: 9973tressduncecap2
இறுதியாக இந்திய பொது மக்களையே நான் இந்த ஊழல்கள் அனைத்திற்கும் காரணமான குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டுவேன். கொள்ளை போவது தங்கள் சொத்து என்பதை அறியாமலேயே இந்தக் கயவர்களுக்குப் போய் மீண்டும் மீண்டும் தங்களது ஓட்டுக்களைப் போட்டு தங்களுக்குத் தாங்களே மக்களும் கொள்ளி வைத்துக் கொள்கிறார்கள். கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொள்கிறார்கள். ஜனநாயகம் என்னும் யானை தன் தலையில் தானே சகதியை அள்ளிக் கொட்டிக் கொள்கிறது.
ஆக மத்தியிலும் மாநிலத்திலும் தங்களை ஆளும் கட்சிகள் தங்களது பணத்தை, அதுவும் 1 லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்து விட்டு தங்களை வளப்படுத்திக் கொண்ட அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் மீண்டும் அதே கொள்ளைக்காரர்களிடம் காசு வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஓட்டுப் போடத் தயாராகி வருகிறார்கள். ஒரு ஓட்டுக்காகக் இவர்களுக்கு கொடுக்கப் படும் பிச்சைக்காசு இவர்களிடமிருந்தே திருடப் பட்ட பணம் என்பதே தெரியாமல் அற்பப் பணத்திற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும் தங்கள் எதிர்காலத்தையும் தன்மானத்தையும், பாதுகாப்பையுமே அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் ராஜா தன் சொந்த ஊரான பெரம்பலூருக்குச் சென்றிருந்த பொழுது கிராம மக்கள் எல்லாரும் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் நாள் முழுவதும் இல்லை என்று அவர் காரை மறித்துப் போராடியிருக்கிறார்கள். கோடிக் கோடியாகக் கொள்ளையடிப்பவரின் சொந்த மக்களுக்குக் குடிக்க நீரில்லை, மின்சாரம் இல்லை. கடும் கோடை வெப்பத்தில் நீரில்லாமல் மின்சாரம் இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜா தனது ஏ சி சொகுசுக் காரில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க, போராடிய மக்களை போலீசார் அடித்து விரட்டியிருக்கிறார்கள். தகுதியில்லாத கயவர்களுக்கு ஓட்டுப் போட்டால் இதுதான் நடக்கும் என்பதை மக்கள் இனியாவது உணர வேண்டும். இனியாவது மக்கள் திருந்த வேண்டும்.
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையே எந்தவித பொது அறிவும் இன்றி விழிப்புணர்வும் இன்றி, சமூக அக்கறையும் இன்றி, தங்கள் எதிர்காலம் குறித்த உணர்வு இன்றி, தங்கள் சந்ததியினர் குறித்த எதிர்கால பொறுப்பு இன்றி, தேசத்தின் மீது அக்கறையின்றி, சுயநலமும் அறிவின்மையும் மேலிட மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் இந்த போக்கு ஒன்றே இது போன்ற ஊழல்களின் ஊற்றுக் கண், அடிப்படை. அவர்கள் விழித்துக் கொள்ளாத வரை ராஜாக்கள் இந்தியாவைச் சுரண்டுவது நிற்கப் போவதில்லை.
பாராட்டுதலுக்கு உரிய சிலர்:
இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலாகவே மிகுந்த பொறுப்புணர்வுடனும், பத்திரிகையாளருக்குரிய கடமையுணர்வுடனும், தேசத்தின் மீது உண்மையான அக்கறையுடனும் இந்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் புலனாய்வு செய்து நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவித்த ஒரே பத்திரிகை கல்கத்தா மற்றும் டெல்லியில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான “தி டெய்லி பயனீர்” மட்டுமே.
அதன் புலனாய்வுப் பிரிவு பத்திரிகையாளரான கோபிகிருஷ்ணன் தான் இந்த ஊழலை உலகத்திற்கு அம்பலப் படுத்தியவர். இதுதான் உண்மையான புலனாய்வு முயற்சி.
பயனீர் பத்திரிகை உடனடியாக இந்த ஊழல் குறித்தான பதிவுகளை நீக்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நீரா ராடியாவின் வக்கீல் நோட்டீஸ் விட்டுள்ளார். பயனீர் ஆசிரியர், “நாங்கள் சொல்வது சத்தியம், கோர்ட்டில் சந்திக்கத் தயார், மிரட்டலுக்குப் பணிய முடியாது” என்று அறிவித்து விட்டார்.
ஆட்சி தந்த ஆணவமும், செல்வாக்கும், ரவுடிகளின் துணையும், அரசு இயந்திரங்களும், பணமும் கொண்ட மாபெரும் ஆதிக்க சக்தியான ஒரு ஆ.ராஜாவை ஒரு சிறிய பத்திரிகையாளரான கோபிகிருஷ்ணன் அச்சமின்றி துணிவுடன் இந்த அளவு எதிர்த்துப் போராடி உண்மையை வெளிக் கொணர்ந்தது இன்றைய சூழ்நிலையில் மாபெரும் ஒரு சாதனையே. பயனீர் நாளிதழ் வெகுவாகப் பாராட்டப் பட வேண்டிய சேவையை இந்தியாவுக்குச் செய்துள்ளார்கள். அவர்களது துணிவுக்கும், கடமையுணர்வுக்கும் ஒட்டு மொத்த தேசமும் கடன் பட்டுள்ளது. இவர்களைப் போன்றவர்கள் இருப்பதினால்தான் இந்திய ஜனநாயகத்தின் மீது நமக்கு இன்னமும் ஒரு நம்பிக்கை இழை மிச்சம் இருக்கின்றது. வாழ்க அவர்கள் பணி.
(இந்தக் கட்டுரையும்கூட பெரும்பாலும் பயனீர் பத்திரிகையின் கட்டுரைகளின் அடிப்படையிலேயே எழுதப் பட்டுள்ளது. பயனீர் பத்திரிகையைப் பாராட்டி உங்கள் கருத்துக்களை அனுப்பி அவர்களை இந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவரும் ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பயனீர் பத்திரிகையின் இணைய முகவரி: http://www.dailypioneer.com.
திரு. ஜே. கோபிகிருஷ்ணன் அவர்களின் வலைப் பக்கத்தில் இந்த ஊழல் சம்பந்தமான அனைத்து கட்டுரைகளையும் விரிவாகப் படித்தறியலாம். அவருடைய வலைப்பதிவு இங்கே. ராஜாவின் ஊழலைத் தவிர அன்புமணி ராமதாஸின் ஊழல், இந்திய ராணுவ ஊழல்கள் போன்ற பல்வேறு ஊழல்களை அம்பலப் படுத்திய அவரது புலனாய்வு கட்டுரைகள் பல அவரது வலைத் தளத்தில் படிக்கக் கிட்டுகின்றன.)
ஹெட்லைன்ஸ் டுடே டி வி, நாட்டை விலை பேசும் தரகியான நீரா ராடியாவோடு ராஜாவும் கனிமொழியும் தனித்தனியாக நடத்திய உரையாடல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பதிவு செய்தது மத்திய அரசின் பொருளாதார உளவுப் பிரிவு.
இவர்களது தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்த டேப்புக்களை இந்த டி வி எப்படியோ பெற்று வெளியிட்டு விட்டது. இந்த உரையாடல்களை வெளியிடக் கூடாது என்று நீரா ராடியா கோர்ட்டுக்குப் போய் அவரது மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. ராஜா அப்படிப் பேசவேயில்லை என்று மறுக்கிறார்; ஆனால் ராடியாவோ நாங்கள் பேசியதை எப்படி வெளியிடலாம் என்று கேட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்!
சுயநலக் காரணங்களுக்காகவே இருந்தாலும் கூட, அதிமுக மட்டும் எதிர்க்காமல் போயிருந்தால் இந்த ஊழல் நடந்தது கூட எவருக்கும் தெரியாமல் போயிருந்திருக்கும். அந்த வகையில், அதிமுகவின் எதிர்ப்பு செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.
இந்த ஊழலை எதிர்த்து நீதி மன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி. எதிர்க்கட்சியான பாஜக செய்ய வேண்டிய வேலையை தனி நபராக ஒரு சுவாமி செய்திருக்கிறார். அவரது கடந்த கால தவறுகளினால் அவர் மீதும் பலருக்கும் இன்று நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் கூட, அவரது போராட்டங்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
எனது நோக்கம் என்ன?
எனது இந்தக் கட்டுரையின் நோக்கமே இந்திய மக்களிடம் ஒரு சிறிய விழிப்புணர்வை ஒரு மிகச் சிறிய அளவில் ஒரு சிலரிடமாவது உருவாக்குவது மட்டுமே.
சங்கை ஊதிக் கொண்டேயிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் இவர்கள் காதும் கேட்காமலா போய் விடும் என்ற ஒரே நம்பிக்கையினால் மட்டுமே கோபிகிருஷ்ணன்களும், பயனீர்களும், தமிழ் ஹிந்துக்களும் இன்றும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
என்ன செய்யப் பட வேண்டும்?
மன்மோகன் சிங்கை பிரதமராகக் கொண்டு சோனியாவால் ஆட்டுவிக்கப் படும் இந்த ஆட்சி இருக்கும் வரை ராஜா தண்டிக்கப் படப் போவதில்லை. அவர் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மீட்கப் படப் போவதும் இல்லை.
barsஆனால் என்றாவது ஒரு நாள் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, இந்த தேசத்தின் மீது உண்மையான பற்று கொண்ட ஒரு அரசு வருமானால், இந்த ஊழலுக்கு முதல் காரணமான தரகர் நீரா ராடியா, ஆ.ராஜா, அவர் கொள்ளையடித்து கப்பம் கட்டிய அவரது கட்சித் தலைவர், அவரது துணைவி, மகள், பிற குடும்பத்தினர், ராஜாவுக்கு உதவிய மற்ற தரகர்கள், பத்திரிகையாளர்கள் பரக்காதத், சங்வி, ராஜாவுக்கு உதவிய அரசு அதிகாரிகள், இவர்கள் அனைவரையும் விட இந்த ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருந்த அரசியல்வாதிகள் அனைவரும் விசாரிக்கப் பட்டு அவர்களது உடந்தைகள், ஊழல்கள் இந்த நாட்டு மக்களுக்கு அறிவிக்கப் பட்டு, மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட வேண்டும்.
அமெரிக்கா போன்ற தேசங்களில் இவை போன்ற ஊழல்கள் வெளியில் வந்து விசாரிக்கப் பட்டு குற்றம் நிரூபிக்கப் படும் பொழுது சம்பந்தப் பட்ட குற்றவாளிகளுக்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான கடும் தண்டனை அளிக்கப் படுகிறது. அதே போன்ற தண்டனைகள் இந்தியாவிலும் நடைமுறைக்கு வரவேண்டும். அதற்கான அரசியல் மாற்றத்தை மக்கள் உருவாக்க வேண்டும். இந்தக் குற்றவாளிகளுக்கு மக்களின் சக்தியினால் மட்டுமே தண்டனை அளிக்க முடியும். அதைச் செய்வது மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது.
ஒரு வேளை எதிர்கட்சிகளின், கோர்ட்டின் வற்புறுத்தலுக்கு இணங்கி வேறு வழியின்றி ராஜா பதவியிறங்கினாலோ அல்லது வேறு துறைக்கு மாற்றப் பட்டாலோ கூட அடுத்த ஆட்சி இவரது குற்றத்தை நிரூபித்து இவருக்கும் கூட்டாளிகளுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும். இவர் கொள்ளையடித்த பணத்தை உலகின் எந்த மூலையில் ஒளித்து வைத்திருந்தாலும் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து இந்தியாவின் அடிப்படை வசதிகளை, கல்வியை, கட்டுமானங்களை வலுப்படுத்தப் பயன் படுத்த வேண்டும்.
இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நம் அனைவரிடமும் ஓட்டுரிமை என்னும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம் இருக்கிறது, அதைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளைக்காரர்களைப் பூண்டோடு ஒழிக்க உறுதி பூணுவோம். இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் அதற்கு ஒரு ஊக்கியாக விழிப்பூட்டும் நிகழ்வாக இருக்கட்டும். இந்தக் கெடுதியில் இருந்தும் கூட ஒரு நன்மை மலரட்டும்.
இன்று இந்தியாவுக்கு ஆண்டிமுத்து ராஜா ஏற்படுத்தியுள்ள இழப்பு 1 லட்சம் கோடி ரூபாய்கள். இந்தப் பணம் “நம் ஒவ்வொருவரது உழைப்பின் பயன்” என்பதை அறிவோம். நம் வீட்டுச் சொத்து கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது அவசியம். கொள்ளையர்களை இனம் கண்டு தண்டிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.
பாடுபட்டு வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இன்று கொள்ளையர்கள் கைகளில் சிக்கிச் சீரழிகின்றது. நம் தேசத்தின் வளங்கள் அனைத்தும் சூறையாடப்படுகின்றன. இயற்கை வளங்களிலும், பொருளாதாரத்திலும், தார்மீக கோட்பாடுகளிலும், நேர்மை நீதி நியாயங்களிலும், அறவுணர்வுகளிலும் திவாலாகிப் போன ஒரு தேசத்தையா உங்களது குழந்தைகளுக்கு விட்டு விட்டுப் போகப் போகிறீர்கள்?
சிந்தியுங்கள்.
(முற்றும்)
மீண்டும் டோண்டு ராகவன்.
இந்தக் கட்டுரையை இங்கும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஷார்ஜா புத்தகவிழாவில்…
-
ஷார்ஜா புத்தகவிழாவில் மலையாள- ஆங்கில எழுத்தாளராக டி.சி.புக்ஸ் (மலையாளம்)
சார்பில் கலந்துகொள்கிறேன். எட்டாம்தேதி காலையில் ஷார்ஜா. பத்தாம்தேதி
மாலையில் ஒரு ச...
6 hours ago
6 comments:
திரு. கோபிகிருஷ்ணாவின் வலைபக்க முகவரியை தந்தால் பல விஷயங்களை மேலும் அறிய வாய்ப்பு கிடைக்கும் .செய்வீர்களா?
@திரவிய நடராஜன்
பார்க்க: http://jgopikrishnan.blogspot.com/
ஆனால் அது இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://jgopikrishnan.blogspot.com/ இது தான் கோபிகிருஷ்னனின் பிளாக் முகவரி. கண்டுபிடித்துவிட்டேன்.
இந்த ஊழல் பற்றி தமிழில் மிகவும் விளக்கமாக தந்தவர் நீங்கள் ஒருவராகத்தான் இருக்கமுடியும். தமிழ் பத்திரிக்கை உலகமே வாயை மூடி இருக்க்கும் நேரத்தில் உங்கள் பதிவு அற்புதம். நீங்கள் தமிழ் நாட்டின் கோபிகிருஷ்ணன். வாழ்க வளமுடன்.
@அவர்கள் உண்மைகள்
கேலியாகச் சொன்னீர்களோ நிஜமாகச் சொன்னீர்களோ, அது எனக்குத் தெரியாது. ஆனால் அப்புகழ்ச்சிக்கு நான் அருகதையானவன் அல்ல.
வெறுமனே காப்பி பேஸ்ட் செய்த டோண்டு ராகவன் அப்புகழ்ச்சியை மறுக்கிறான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
நீங்கள் தமிழ் நாட்டின் கோபிகிருஷ்ணன். வாழ்க வளமுடன்.
//
தமிழ் இந்துவிலிருந்து காப்பிபேஸ்ட் செய்ததால் காப்பி கிருஷ்ணன் என்று வேண்டுமானால் சொல்லலாம். மலையாளத்தில் அது கோபிகிருஷ்னன் தான். :D
Post a Comment