3/31/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 31.03.2009

டோண்டு ராகவனுக்கு பச்சைமீன் வாசனை பிடிக்கும் என்பது அவனது நண்பர்கள் வட்டாரத்தில் பிரசித்தம். “அதெப்படிடா, மீன் சாப்பிடும் எங்களுக்கே அந்த வாசனை பிடிக்காது, நீ என்னமோ மூச்சு பயிற்சி செய்யறது போல அந்த வாசனை இருக்கிற இடத்தில் மூச்சை இழுத்து விடறே” என சில அசைவ நண்பர்கள் ஆச்சரியப்படுவதுண்டு.

மேலே போவதற்கு முன்னால் வேணுவனம் என்னும் வலைப்பூவில் நான் இட்ட இப்பின்னூட்டத்தை இங்கு நினைவுகூர்கிறேன்.

“எனக்கு பச்சைமீன் வாசனை பிடிக்கும். இப்போது அது ஏன் என நினைத்து பார்க்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்தது சென்னை, திருவல்லிக்கேணியில். கடற்கரை எங்கள் விளையாட்டு மைதானம். மீனவர்கள் மாலை மீன் கொண்டுவரும்போது வேடிக்கை பார்த்தவாறு நின்றிருப்போம்.

ஒரு கவலையும் இல்லாத ஆனந்தமயமான இளமைக் காலத்தை இப்போதுகூட எங்கிருந்தாவது மீன் வாசனை வந்தால் நினைவுகூர்வதாலேயே அந்த வாசனை பிடிக்கும் என நினைக்கிறேன்”.

அதே சமயம் அந்த வாசனையை நுகரும்போது உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும். முக்கியமாக தலைவலி ஏதும் ஏற்கனவேயே இருக்கக் கூடாது.

அவ்வாறு செய்யும்போது கடற்கரையில் நண்பர்களுடன் விளையாடியது, மெரீனா நீச்சல்முளம் அருகேயுள்ள மாவட்ட மைய நூலகக் கிளையில் அமர்ந்து புத்தகங்கள் படித்தது ஆகியவை நினைவுக்கு வரும். நான் இருந்த வெங்கடாசல செட்டித் தெரு ஒரு பக்கத்தில் பைக்ராஃப்ட்ஸ் சாலையில் சேர்கிறது. அங்கு சென்று கிழக்கே நடந்தால் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை இருக்கும் இடத்துக்கு போய் சேரலாம். சமீபத்தில் 1968-ல் உலகத் தமிழ் மகாநாடு நடந்த போது நிறுவப்பட்ட சிலை அது. பிற்பாடு அது ஜெயலலிதாவின் கண்களை உறுத்தி இரவோடிரவாக எடுக்கப்பட்டு, கலைஞர் ஆட்சிக்கு திரும்ப வந்ததும் முதல் காரியமாக அதே இடத்தில் நிறுவப்பட்டது.
========================================================

வக்கீல்கள் போலீசார் பிரச்சினை கவலை தரும் வகையில் ஒருதலைப்பட்சமாக, வக்கீல்களுக்கு ஆதரவாக ஹேண்டில் செய்யப்படுகிறது. இது பல தவறான சமிக்ஞைகள் தருகிறது. வக்கீல்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை தோன்றிவருவது விசனத்துக்குரியது. போலீசார் சிலரை சஸ்பெண்ட் செய்தது போலவே முட்டைவீசும் செயலை ஆரம்பித்து வைத்த வக்கீல்களுக்கும் தற்காலிகமாவது சன்னதை பிடுங்கிருக்க வேண்டும். அச்செயல் நீதிபதிகள் முன்னாலேயே நடந்ததாதலால் அவர்களை இனம் காணுவது எளிதுதான்.
======================================================

மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ் காமில் ஒரு சிறு சலசலப்பு. ஒரு மன்ற இடுகை தவறான மொழிபெயர்ப்பினால் வந்த அனர்த்தங்கள் பற்றியது. அதற்கான உதாரணங்கள் கேட்கப்பட்டிருந்தன. என் பங்குக்கு பைபிள் பழைய ஏற்பாட்டில் வந்த பிழையான மொழிபெயர்ப்பு பற்றி எழுதினேன். விஷயம் இதுதான்.

ஒரு முறை இசாக் அசிமோவ் ஸ்பெயினில் ஒரு மியூசியத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு இருண்டகாலம் என ஐரோப்பிய சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் அச்சிடப்பட்ட பைபிள் இருந்தது. அதை அச்சிட்டு வெளியிட்டவர்கள் அந்த நாட்டில் உள்ள யூதர்கள். இசாக் அசிமோவ் அந்த பைபிளை புரட்டிப் பார்த்திருக்கிறார். பழைய ஏற்பாட்டில் யூதர்களின் ரட்சகர் பற்றி ஒரு முன்னறிவிப்பு இருந்தது. “ஒரு அல்மாவுக்கு ரட்சகர் பிறப்பார்” என ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் ஹீப்ரூ மொழியாகும். இந்த வாக்கியத்தில் எல்லாமே ஸ்பானிய மொழியில் இருக்க அல்மா என்ற ஹீப்ரூ சொல் மட்டும் அப்படியே கையாளப்பட்டிருந்தது. அல்மா என்றால் கல்யாண பிராயத்தை ஆடைந்த இளம் பெண் என்று பொருள். ஆனால் சாதாரணமாக எல்லா மொழிகளீலும் இந்த இடத்தில் கன்னி என்றுதான் மொழிபெயர்ப்பார்கள். ஒரு நிமிடம் திகைத்த அசிமோவுக்கு திடீரென தெளிவு பிறந்தது. யாரோ ஒரு மொழிபெயர்ப்பாளர் கடந்த காலத்தில் இந்த ஹீப்ரூ சொல்லை கன்னி என மொழிபெயர்த்துள்ளார். பிறகு அதிலிருந்து மொழி பெயர்த்த பலர் அப்படியே கன்னி என குறிப்பிட்ட, கன்னி மேரி வழிப்பாடு எல்லாம் வந்து விட்டது. அதை ஒத்துக் கொள்ளாதவர்கள் கொலை முதலிய கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் குறிப்பிட்ட கன்னி(கழியாத பெண்ணை பெடூலா என ஹீப்ரூவில் குறிப்பிடுவார்கள்).

இந்த விஷயத்தை நான் ப்ரோஸின் அந்த இடுகையில் குறிப்பிட்டதுமே சீறிக் கொண்டு ஆக்ரோஷமான தாக்குதல்கள் என்னை நோக்கி வந்தன. “வெளியாட்கள் எல்லாம் எங்கள் கிறித்துவ வேதம் பற்றி பேசுவதா, அதுவும் இந்த இசாக் அசிமோவுக்கு என்ன தகுதி உண்டு என்றெல்லாம் பொருள்ப்ட வாசகங்கள் இருந்தன. நான் மட்டும் சும்மா இருந்தேனா, என்ன? பழைய ஏற்பாடு என்பது யூதர்களது புத்தகம். சொல்லப்போனால் கிறித்துவர்கள்தான் வெளி மனிதர்கள். இசாக் அசிமோவ் யூதர். மேலும் இரு பைபிள்களையும் ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். அவருக்கு தகுதி இல்லையென்றால் வேறு யாருக்கு தகுதி உண்டு என்றெல்லாம் நான் எழுத, ஒரே கலாட்டாதான் போங்கள். நேற்று அந்த இடுகையில் போய் பார்த்தால் எனது ஒரிஜினல் பதிவு, அதன் பதில்கள் ஆகியவை நீக்கப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக மேலும் பலர் எழுதி, எல்லாவற்றையும் எடுத்தது சரிதான், ஆனால் நரசிம்மனுடைய (டோண்டு ராகவன்) ஒரிஜினல் பதிவு கண்டிப்பாகவே ஏற்புடையதே என வாதாடினர். பிறகு என்ன நடந்தது? தலைவாசலின் அதிபர் ஹென்றியே வந்து அந்த திரியத்துக்கே ஒரு பெரிய பூட்டு போட்டுவிட்டு சென்றார். அவர் எழுதுகிறார்:
“ViktoriaG wrote this earlier in the thread, but even at that point, 16 posts (from 9 different posters) had already been removed for having strayed from the topic of translation. By now, a total of 28 posts from 13 posters has been removed. At least five moderators have been involved. A number of members, too, have tried to redirect discussion to the original topic. Thanks for your efforts, folks.

At this point, in the interest of keeping things orderly (so that our moderators can do their own work, too!), I am closing the thread”.

உண்மை என்னவென்றால் மொழிபெயர்ப்புடன் மிகவும் சம்பந்தம் உடையதுதான் நான் இட்ட இடுகை. இருப்பினும் பல மன அழுத்தங்களை அது உருவாக்கியதால் அதையும் அதன் எதிர்வினைகளையும் நீக்க வேண்டியிருந்தது என்பதே நிஜம். கடைசியில் சமாளிக்க முடியாமல், போகவே மொத்த டாபிக்கையே பூட்டு போட்டு விட்டனர்.
===================================================

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

Anonymous said...

//வக்கீல்கள் போலீசார் பிரச்சினை கவலை தரும் வகையில் ஒருதலைப்பட்சமாக, வக்கீல்களுக்கு ஆதரவாக ஹேண்டில் செய்யப்படுகிறது.//

We, the undersigned, through the forum of public opinion, demand that the Madras High Court act immediately to punish the lawyers guilty of violence, verbal abuse, unbecoming conduct, and violation of the law of this land. Failure to do so will send the signal that well-organized violence and sustained misconduct by any group always pays, and when the group is the lawyer fraternity, then the Judiciary itself will stoop to appeasement.
http://certifiedasshole.wordpress.com/

வால்பையன் said...

நல்ல விவாதம் போயிருந்துருக்கு!

எனகென்னவோ அதுல ஏற்ப்பட்ட கூத்து மாதிரி தான் எல்லா மதத்துலயும் ஏற்பட்டு மனிதர்கள் எல்லாம் கடவுளாக்கப்பட்டாங்கன்னு நினைக்கிறேன்!

திவாண்ணா said...

ப்ரோஸ் காமில் அந்த பக்கங்களை படிச்சேன். உங்க இழைக்கப்பட்டது அந்நியாயம்! பின்னால லபோ திபோ ன்னு மக்கள் கத்தினதை மட்டும் எடுக்காம உங்களோடதையும் தூக்கினது அவங்க பயாஸை நல்லா காட்டுது.

வாழவந்தான் said...

//
நான் மட்டும் சும்மா இருந்தேனா, என்ன?
//
அதானே நமக்குத்தான் சண்டைனா சக்கரை பொங்கலாச்சே!

உங்கள் 'எங்கே பிராமணன்' பதிவுகளுக்கு நன்றி. சோ அவர்களின் எழுத்துக்கள் பிட்டிக்கும், இருந்தும் ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போய் நாடகம் பார்க்க முடியாது, அந்த குறையை தீர்ப்பது உங்கள் பதிவுகளே

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது